Saturday, January 16, 2010

ட்வின் டவர் பாண்டேவும் கென்டிங் பாண்டியும்- 2

குபுக்கென வியர்த்து, கூடத்தை விட்டு வெளியே வந்தோம். அடுத்து கோலாலம்பூருக்கு ஏன் இந்த பெயர் வந்தது என்றதை விவரித்தார் டிரைவர். அவர் சொல்ல சொல்ல, போர் நினைவு சின்னம் வந்தது. இறங்கி எல்லாரும் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். பாண்டேவும் அவரது மனைவியும் வெளியே ஐஸ் வாங்கி சாப்பிடுவதில் குஷியாக இருந்தார்கள்.

அடுத்து மன்னர் அரண்மனை. உள்ளே செல்ல அனுமதி இல்லை. வாசலில் நின்று பார்த்து ஏங்கி பெருமூச்சு விட்டுவிட்டு, சிகரெட்டை பற்ற வைத்தோம். மன்னர் உள்ளே இருந்தால், வாசல் அருகே உள்ள குளத்தில் ஒரு கலரில் தண்ணீரும் இல்லையென்றால் வேறு நிறத்தில் தண்ணீரும் இருக்கும் என்றார்கள்.




'ம்' என்று கேட்டுவிட்டு எல்லாரும் வேனில் ஏறினால், பாண்டேவையும் அவரது மனைவியையும் காணவில்லை. எங்கடா என்று தேடினோம். அரண்மனையை தாண்டி ரோட்டில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

இங்கிருந்து கையசைத்து, வந்து சேர்ந்து புறப்பட்டோம். பிறகு ஆசியாவிலே பெரிய மசூதி. உள்ளே போகவில்லை. எங்களை தவிர, வேனில் இருந்த மற்றவர்கள் எதிலும் விருப்பம் இல்லாதது போலவே இருந்ததால், டிரைவரும் ஆர்வம் காட்டவில்லை.

அடுத்து கோக்கெய் சாக்லெட் கடை. சுத்தி சுத்தி பார்த்து அவர்கள் கொடுத்த ஒவ்வொரு விதமான சாக்லெட்டின் சாம்பிளை ருசித்து, யாரும் வாங்காமல் போனால் எப்படி?

யாராவது வாங்குகிறார்களா என்று பார்த்தோம். ம்ஹும்.. இங்கலாம் ஏன் கூட்டிட்டு வர்றீங்க என்பது போல கூட வந்தவர்கள் சரட்டென்று வெளியே போய் விட்டார்கள்.
நண்பன், ரெண்டு பாக்கெட் வாங்கினான்.

பாண்டே, 'நம்ம ஏர்போர்ட்லயே சீப்பா கிடைக்குமே" என்றார்.
நல்ல யோசனைதான் என்று சொல்லிவிட்டு வேனில் ஏறினோம்.

பின்னால் இருந்துகொண்டே, அது இது என்று பேசிக்கொண்டு வந்தவர், 'நாங்க ஈவினிங் லங்காவி போறோம். நீங்க வர்றீங்கல்ல' என்றார்.

'இல்ல, நாங்க, காலையில கெண்டிங் போறோம்"

'இது என் விசிட்டிங் கார்ட். எப்ப வேணாலும் பேசுங்க. நான் சென்னை வரும் போது சந்திக்கிறேன்'.

பதிலுக்கு நண்பனும் கார்ட்டை கொடுத்தான்.

வேன், சுற்றி சுற்றி வந்து ஹோட்டலில் நின்றது. வண்டியில் இருந்தவர்களில் எங்களுக்கு மட்டும்தான் இந்த ஹோட்டல். மற்றவர்கள் வெவ்வேறு ஹோட்டல்கள் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். பாண்டேவுக்கும் அவ்பர் மனைவிக்கு ஒரு டாடாவை போட்டுவிட்டு, லிஃப்டில் ஏறும்போது மிச்ச பெக்கார்ட்டியை தேடியது மனது. நண்பனுக்கு ஹோட்டலில் இருந்து பீர்.

முதல் இரண்டு மூன்று ரவுண்ட்களை முடித்துவிட்டு வெளியே செல்லலாம் என்பது எங்களது திட்டம். மணி இப்போது 6 மணி. மலேசியாவுக்கு ஏற்கனவே போய்விட்டு வந்த நண்பர்கள், அப்படி இப்படி என்று விட்ட புருடாவுக்கு ஆவலாய் பறந்துகொண்டிருந்தான் நண்பன்.
டிரெஸ் மாற்றிவிட்டு, சுற்ற கிளம்பும் போது நண்பன் கேட்டான்.

'ஏல செல்போனு"

'நீதாண்டே வச்சிருந்தே'

நண்பன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து தடவி தடவி பார்த்துவிட்டு கேட்டான்.

'ஏல மூதேவி, அந்த பாண்டேகிட்டயிருந்து போனை வாங்கினியா?'

'ஆமா, உங்கிட்டதான் கொடுத்தேன்"

'தரலையே'

பிறகு ரூமில் உட்கார்ந்து யோசித்ததில் பாண்டேவிடமிருந்து போனை வாங்கவில்லை என்று தெரிந்தது. ரிசப்ஷன் வந்து, நம்பருக்கு போட்டால், ஸ்விட்சுடு ஆஃப் தகவல்.

'நீ அந்த பாண்டே நம்பருக்கு போடு"

கார்டை எடுத்து, நம்பரை பார்த்தால், மூன்று நம்பர். இதுல எதை போடறது?'.

'ஒண்ணொன்னா எல்லாத்தையும் போடு. எதை எடுக்காம்னு பார்ப்போம்"

முதல் நம்பர், நாட் ரீச்சபிள்

அடுத்த நம்பர், நாட் இன் யூஸ்.

அடுத்த நம்பரை போட்டால்... யெஸ். ரிங் போகுதுடா!

'சார் திஸ் இஸ் முனுசாமி சுடலைமுத்து"

'யெஸ்...டெல் மி"

'மாப்பிளை டெல் மீங்கறான்"

நீ கொண்டா என்று போனை வாங்கி, கூட ரவுண்ட் அடிச்ச விஷயத்தை சொன்னதும், 'எங்கிட்ட இல்லையே... கொடுத்துட்டேனே' என்றார் பாண்டே.

போனை கட் பண்ணிவிட்டு, 'எங்கடா போயிருக்கும்' என்ற கண்ணீர் வராத குறையாக, ரிசப்ஷன் பக்கத்திலேயே நின்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ரிசப்ஷனில் இருந்து அழைப்பு.

'பாண்டே"

'அவங்கிட்டதான் போன் இருக்காம். அவன் மனைவி தெரியாம, அவங்க போனுன்னு நினைச்சு பேக்ல போட்டுட்டாளாம். இப்ப, அவன் லங்காவி கிளம்பிட்டு இருக்கான். இந்தியா வந்துட்டு அனுப்பி வைக்கவான்னு கேக்குறான்.

எதையாவது பண்ணித்தொலை. பாண்டேவிடம் அட்ரஸ் கொடுத்துவிட்டு, நண்பனை பார்த்தால், குடிச்ச மூன்று பீரும் இறங்கியிருப்பது போல் தெரிந்தான்.

'விடுடா...அதான் அனுப்புறன்னு சொல்றான்ல" என்று சொல்லிக்கொண்டே ரோட்டில் நடந்தோம். மாடி ரயில் ஏறி, ஏதாவது ஒரு ஊர் என்று சொல்லலாம் என்று நினைத்தால், அங்கே அடுத்த ஸ்டாப்லிருந்து அந்த ரூட்டையே எழுதியிருந்தார்கள். பார்த்துவிட்டு, 'சுல்தான் இஸ்மாயில் டூ'.

அது எந்த ஏரியா என்று கூட தெரியாது. உட்கார்ந்தோம். ரயிலில் கூட்டம் அதிகமில்லை. அடுத்த ஸ்டேஷனில் இறங்கி, நடந்தால் 'மஜீத் இந்தியா" என்றார்கள். எல்லாம் நம்மூர் பார்ட்டிகள். ஹனிபாவில் ஏறி இறங்கி, நாலு பாக்கெட் சிகரெட், சாக்லெட் அயிட்டங்களை நண்பன் வாங்கினான்.

கடையில் இருந்து இறங்கிகொண்டிருந்தபோது, ஒருவர் உற்று உற்றுப்பார்த்துவிட்டு, 'நீங்க முனுசாமி அண்ணன்தானே" என்று கேட்டார்.

நாளைக்கு சொல்றேன்.

No comments: