Monday, June 27, 2016

ஆதலால் தோழர்களே 9

டாணா கூட்டத்துக்குப் போய் விட்டு வந்த இரவில் இருந்து பரமசி வத்துக்கு, வயித்தாலச்சல். எப்போதும் தெப்பக்குளமே கதி என்று கிடக்க வேண்டியதாயிற்று. ஓரமாக ஒதுங்கிவிட்டு குளத்தில் கால் கழுவிய பின் மேட்டுக்கு ஏறினால், மீண்டும் வயிறு பிடித்து இழுக்கு ம். திரும்பவும் உட்கார்ந்து எழுந்து, எழுந்து உட்கார்ந்து என்று ஆன தில் பாதி உயிர் போயிருந்தது. உடல் ஒடுங்கிவிட்டது.

அங்குள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டதுதான் காரணமாக இருக்குமோ என்னவோ? சால்னா நன்றாக இருக்கிறது என்று மேலும் நான்கைந்து பரோட்டாவை வாங்கி அதில் முக்கித் தின்றதுதான் காரணமாக இருக்க லாம் என நினைத்தார் பரமசிவம்.

தெப்பக்குளத்துக்கு நான்காவது முறையாகப் போய்விட்டு வீட்டு வாச லில் கால் வைத்ததும் மீண்டும் வயிறு வலித்தது. இனி தெப்பக் குளத்துக்கு... அவ்வளவு தூரம் போக முடியாது என்று வீட்டைத் தாண்டி கொஞ்ச தூரத்தில் இருக்கிற கருவை முட்களின் பின்னே உட்கார்ந்து விடுவது என்று முடிவு செய்தார்.

கிருஷ்ணவேணி பழையச் சோற்றை மோரில் கரைத்து வைத்திருந் தாள். குடித்தால் மேலும் ஓட வேண்டி வரும் என்பதால் வேண்டாம் என்றார் பரமசிவம்.

'ஒண்ணுமே திய்ங்காம கெடந்தா என்னத்துக்காவும் ஒடம்பு?' என்றாள அவள். பேசக்கூட முடியவில்லை அவருக்கு. தலையை மட்டும் ஆட்டி விட்டு வீட்டில் படுத்தார்.

'பாய் டாக்டரை கூட்டியாரட்டா?'

'வேண்டாம்' என்றார் பரமசிவம்.

விஷயம் கேள்விபட்டு பரமசிவத்தின் அம்மா அனச்சி, வேகவேகமாக வந்தாள். படுத்திருந்த கோலத்தைப் பார்த்து, 'என்னல ஆச்சு?' என்றாள் அருகில் உட்கார்ந்து. கழுத்திலும் நெற்றியிலும் கை வைத்துப் பார்த்தாள். இலேசாகக் கொதித்துக் கிடந்தது.

பரமசிவம் ஒன்றும் பேசவில்லை. அம்மாவைப் பார்த்துவிட்டு, வயிறு வலிப்பதாகச் சைகை செய்தார். அவரின் பெரிய மகள் ஓடிப்போய், 'அனச் சாய்ச்சி துட்டுத்தா, எனக்கு' என்றது அவளது முந்தானையைப் பிடித்துக் கொண்டு.

'ஆமா. ஒனக்கு எப்பவும் துட்டுத்தாம்ட்டி வேணும். ஒங்கப்பனாட்டி கொடுத்து வச்சிருக்காம்' என்று செல்லமாக அவளது கன்னத்தைக் கிள்ளிவிட்டு பத்து பைசாவை எடுத்துக்கொடுத்தாள்.

'இப்படி துட்டு கொடுத்து பழக்காதீங்க, சின்ன பிள்ளைட்ட' என்ற கிரு ஷ்ணவேணியை பார்த்தாள் அனச்சி, 'ஆமா பத்து பைசாவுல எல்லாம் முடிச்சு போயிரும். கூறுகெட்டவளே... அவனுக்கு என்னாச்சுன்னு சொல்லு?' என்றாள்.
'வயித்தாலச்சல்' என்றாள் கிருஷ்ணவேணி.

'ஊர் ஊரா அலைஞ்சா வராம என்ன செய்யும்?' என்று தனக்குள் சொல்லிக்கொண்ட அனச்சி, 'சரி, ஒரு வெள்ளத்துணியை கொஞ்சம் கிழிச்சு கொண்டா. கொதி புடிச்சாதான் சரியாவும்' என்றாள் மருமகளிடம்.

'இது எல்லாம், கண்ணுலா. எல்லா பயலுக்கும் கொள்ளி கண்ணுலா இருக்கு ஊர்ல. அவனுவ கண்ணுல மொளத்தல அள்ளிக் கொட்ட.  எம் புள்ள நல்லா பேசுதாம்னு வயிறுலா எரிஞ்சுட்டு இருக்கானுவோ. அதுக்கு மருத்து மாத்திரை சரிபட்டு வருமா? முந்தா நாளு ஆத்துல துணி தொவச்சுட்டு இருக்கேன். நாலஞ்சு பயலுவோ, இவன பத்தி தான் பேசிட்டு போறானுவோ. கூட்டத்துல பேசுனா, பரம்சம் மாரிலா பேசணும்னு... ஊரு பூரா கண்ணு. அந்த கண்ணுல வெளக்கு மாத்தக் கொண்டுதான் அடிக்கணும். பொறாமைல பொசுக்குத கண்ணு சும்மா விட்டுருமா? அது ஆளைத்தான் சாய்க்கும்...' என்று தன்னாலயே பேசிக் கொண்டு, தனது தளர்ந்த ஒல்லித் தேகத்தைக் கொண்டு, மட மடவென வேலையில் இறங்கினாள்.

வீட்டில் இருந்த தாம்பாளத்தில் தண்ணீரை ஊற்றினாள். அதை விளக் குக்கு அருகில் கொண்டு வைத்தாள். பித்தளைச் சொம்பு ஒன்றை எடுத்துக் கொண்டாள். கிருஷ்ணவேணி கொடுத்த சிறு வெள்ளைத் துணியைச் சுருட்டி வைத்துக்கொண்டு, படுத்திருந்த பரமசிவத்தை உட் கார வைத்தாள். அவர், வேண்டா வெறுப்பாக எழுந்து உட்கார்ந்தார். பிறகு அந்தத் துணியால அவரை முன்பக்கமாகமும் பின் பக்கமு மாகவும் தடவினாள். பிறகு அந்த வெள்ளைத் துணியில் துப்பச் சொன்னாள். பின் துணியில் தீ வைத்து சொம்புக்குள் போட்டாள். சொம்பைத் தண்ணீர் இருக்கும் தாம்பாளத்துக்குள் அப்படியே கவிழ்த்தாள். மொத்த தண்ணீரும் சொம்புக்குள் சுரீரென்று இழுத்துக் கொண்டது. இப்போது கிருஷ்ணவேணியைப் பார்த்தாள்.

'பாத்தியா, அவ்வளவும் கண்ணு. சனியம் புடிச்சவனுவோ கண்ணு. இது அப்படியே இருக்கட்டும். காலைல எடுத்து வீட்டு மேல எறி தண்ணிய, என்னா?' என்று சொல்லிவிட்டு இடுப்பில் சொருகி வைத்திருக்கிற திருநீற்றுப் பையில் இருந்து, திருநீறள்ளி பரமசிவத்தின் நெற்றியில் பூசினாள். திருநீறு சிதறி அவரின் கண்கள் மற்றும் மூக்கில் தெறித்தது.

அனச்சி வெளியே கிளம்பிய சிறிது நேரத்திலேயே வீட்டினுள் எட்டிப் பார்த்தாள், சிரிச்சான் பொண்டாட்டி. கிருஷ்ணவேணி சோறு பொங்கு வதற்கான வேலையில் இறங்கினாள். வெளியே கிடந்த கருவை கம்பு களை நொடித்துக்கொண்டிருந்தவள், தற்செயலாக வெளியே பார்த்த வள், சிரிச்சான் பொண்டாட்டி நிற்பதைக் கண்டதும் ஆச்சரியப்பட்டாள்.

'என்னக்கா, வா'

'ஆமா. எப்படி இருக்க, கிட்டு?'

'நல்லாருக்கேன். தூரமா வந்தியோ'

'பீடி கடைக்கு வந்தேன். ஒங்க வீட்டுக்காரருக்கு ஒடம்புக்கு சரியில் லன்னு ஒங்க மாமியா பேசிட்டே போனா. அதாம் எட்டிப் பாத்துட்டு போலாம்னு பாத்தேன்'

'உள்ள வாயேன்... ஒங்க வீட்டுக்காரரு எப்டியிருக்காரு'

'அவருக்கென்ன கொறச்சலு'

'சும்மா இருந்தா இவ்வோட்டதான் பேசிட்டிருப்பாரு. கொஞ்ச நாளா  ஆளக் காணுமே'

'வயல்ல வேல நடக்கு பாத்துக்கெ, அதாம் வர முடியல' என்றாள் சிரிச் சான் பொண்டாட்டி.

பரமசிவத்துக்கு அவளது சத்தம் கேட்டதும் உடலில் தெம்பு வந்து விட்டது. சிரிச்சான் பொண்டாட்டி தன்னை எவ்வளவு நேசிக்கிறாள் என்பதற்கு இந்த வருகை சாட்சி. இந்தக் காதலின் அதாவது கள்ளக் காதலி ன் ஆழத்தை நினைத்து சிலிர்த்துக்கொண்டார் அவர்.

பேசிக்கொண்டே, வீட்டுக்குள் வந்தாள் அவள். ஸ்டுலை எடுத்துப் போட்டபடி, 'உக்காருக்கா இதுல. காபி போட்டுட்டு வாரேன்' என்ற கிருஷ்ணவேணியை, வேண்டாம் என்று தடுத்தாள்.

'டாணாவுல பேசப்போனாவோ. அங்க என்னத்த தின்னுட்டு வந்தாவ ளோ தெரியல. வந்ததுல இருந்தே போயிட்டுதான் இருக்கு' என்றாள் கிருஷ்ண வேணி.

பரமசிவம் திரும்பிப் படுத்தார். இப்போதுதான் அவள் வந்தது தெரியும் என்ற பாவனையில், 'வாம்மா... எப்ப வந்தே?' என்று சொல்லிவிட்டு எழுந்து உட்கார்ந்தாள். 'பீடி கடைக்கு வந்தேன். ஒங்கம்மா ஒங்களுக்கு உடம்பு சரியில்லைன்னுட்டு யாரையோ ஏசிட்டு போறாவோ. அதான் எட்டிப் பாத்துட்டு போலாம்னு வந்தேன். நீங்க படுத்துக்கிங்கெ. எந்திக் காண்டாம்' என்றாள் சிரிச்சான் பொண்டாட்டி.

பிறகு இருவரும் கண்களால் பேசிக்கொண்டார்கள். கிருஷ்ணவேணி கொடுத்த காபியை குடித்துக்கொண்டிருந்தபோது, 'பரம்சண்ணே' என்று வெளியில் இருந்து சத்தம் கேட்டது.

'யாரு' என்று வெளியே போனாள் கிருஷ்ணவேணி. சைக்கிளில் உட்கார்ந்துகொண்டே வீட்டு வாசலில் காலை ஊன்றி, 'நாந்தான். தலைவரு கூட்டிட்டு வரச்சொன்னாரு' என்றான் செல்லையா.

'அவ்வோளுக்கு வயித்தாலச்சல்லா. எந்திக்க முடியாம கெடக்காவோ' என்று கிருஷ்ணவேணி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பரமசிவம் எழுந்து, மெதுவாக நடந்தபடி, 'என்ன செல்லையா. எதுக்காம்' என்று வெளியே வந்தார்.
'தெரியல. வீட்டுல இருந்தா கூட்டிட்டு வரச்சொன்னாரு' என்றவ னிடம், 'செரி நில்லு. மூஞ்ச கழுவிட்டு வாரேன்' என்று வீட்டுக்குள் வந்தார். சிரிச்சான் பொண்டாட்டி, 'சரி நான் வாரேன். வீட்டுல தேடுவாவோ' என்று சொல்லிவிட்டு வெளியே போனாள். செல்லையா சைக்கிளை ஒதுக்கியபடி, 'நீ எங்க தாயி உள்ள இருந்து வாரே?' என் றான் ஆச்சரியமாக.

'பீடி கடைக்கு வந்தேன். அப்டியே சும்மா பாத்துட்டு போறேன்' என்றாள் அவள். அவளை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு சைக்கிளை விட்டு இறங்கி திருப்பினான். பரமசிவம் வெளியே வந்ததும் ஏற்றிக்கொண் டான்.
தலைவர், மச்சியில் பேப்பர் வாசித்துக் கொண்டிருந்தார். அவருக்கு எதிரில் சுவரில் சாய்ந்துகொண்டு கல்யாண சுந்தரமும் பிச்சைமுத்துவும் ஆளுக் கொரு பேப்பரை வாசித்துக்கொண்டிருந்தனர்.

பரமசிவம், உள்ளே வந்ததும், 'வா பரம்சம்' என்ற தலைவர் பேப்பரை ஓரமாக வைத்தார். பிறகு எதிரில் இருந்தவர்களைப் பார்த்தார். இரண்டு பேரும் எழுந்து, 'பேசிட்டிருங்க, வாரோம்' என்று கீழே இறங்கினார்கள். கீழே செல்லையா உட்கார்ந்திருந்தான். பரமசிவம் வீட்டில், சிரிச்சான் பொண்டாட்டியைப் பார்த்த கதையை அவர்களிடம் விவரிக்கத் தொடங்கினான்.

கட்சி ஆபிசின் எதிரில் யாரோ ஒருவன் சுவரில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தான். ஆழ்வார்க்குறிச்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம். அது திருமண விழாவுக்கு வருகை தரும் எம்.எல்.ஏவை வரவேற்கும் சுவரொட்டி. அதில் தொகுதி எம்.எல்.ஏ பாலசுப்பிரமணியத்தின் புகைப் படம் இடம்பெற்றிருந்தது.

சுவரொட்டியை ஒட்டுபவன், கட்சி அலுவலக சுவரிலும் ஒட்டுவதற்கு வந்தான். 'எய்யா எதிர்ல ஒட்டியிருக்கலா போதும் போ. இன்னும் எத்தனை இடத்துல ஓடுவ?' என்று சத்தம் கொடுத்தார் கல்யாண சுந்தரம். சிரித்துக்கொண்டே பசையையும் போஸ்டரையும் கொண்ட சைக்கிளைத் திருப்பினான் அவன்.

பரமசிவம் மேலிருந்து கீழே இறங்கியபோது முகம் வெளிறிப் போய் இருந்தது. தலைவர் என்ன சொல்லியிருப்பார் என்பது இவர்களுக்குத் தெரிந்ததுதான்.
'பெரிய பேச்சு பேசுத மேடையில. பேசுனா மட்டும் போதுமா? ஒழுக்கம் வேண்டாம். அப்புறம் என்ன மயித்த படிச்செ வெளியூர்ல போயி? நாலு பேருக்கு வெவாரம் தெரியதுக்குள்ள விட்டுரு பாத்துக்கெ. பெறவு நாறிப் போச்சுன்னா, அடிதடி வெட்டுக்குத்து, போலீஸ் ஸ்டேஷன்னுதான் அலையணும். தேவையில்லாம சாதி சண்டையும் வந்து சேரும். நீ கெடக்க கெடயில இதெல்லாம் தேவையா சொல்லு. ஒம் பொண்டாட்டிக்காரிக்கு தெரிஞ்சா என்னாவும்? அப்படி கேக்கோ அடுத்தவன் பொண்டாட்டி? அதுக்கு சொவத்துல வச்சு சாமான தேய்ச்சுட்டு போ. ஒன்னய, நம்பிதானல வீட்டுக்குள்ள விடுதாம். அதுக்கு இதுதானா கைமாறு? வெவாரம்னு வந்துட்டா ஒரு பய ஒங்கூட நிய்க்கமாட்டாம் பாத்துக்கெ? பொம்பள வெவராம் எங்க போயி முடியும் னு ஒனக்கு தெரியாதா? போ. இனும அது இதுன்னு பேச்சு வந்துச்சுன்னா, கட்சிலருந்து நீக்கிருவோம். அடிதடி வம்பு தும்புன்னா நீ தனியா போலீஸ் ஸ்டேஷனு போயிதான் பாத்துக்கிட ணும். அதுக்கு மேல எம்மேல வருத்தப்படாத கேட்டியா? நா சொல்ல வேண்டியத சொல்லியாச்சு' என்று சொல்லியிருப்பார் தலைவர்.

பரமசிவம், கொட்டகையைத்தாண்டி புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கழிவறைக்குச் சென்றுவிட்டு வந்தார்.

'நீ பேசாம இங்கயே படுத்துக்கிடேன் பரம்சம். வயித்தாலச்ச முடியுத வர' என்றார் கல்யாண சுந்தரம்.

மெதுவாக நடந்து வந்த பரமசிவம் சுவரில் துண்டை அண்டக்கொடுத்து சாய்ந்து கொண்டார். செல்லையா, 'டீ சொல்லட்டா' என்றான். முதலில் வேண்டாம் என தலையாட்டியவர், பிறகு என்ன நினைத்தாரோ, 'சொல்லு' என்றார். பரமசிவத்துக்கு ஏதேதோ சிந்தனை. பெருங் குற்றம் செய்துவிட்டோம் என்பது போல வருத்தமாகவும் இருந்தது. இருந்தாலும் அவளை மறந்துவிட முடியுமா என்பதும் தெரியவில்லை. வீடு தேடி வேறு வந்திருக்கிறாள். சிரிச்சானுக்கு விஷயம் தெரிந்து ஏதாவது பிரச்னை செய்தால், அல்லது மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டால்... ச்சே நினைக்கவே கஷ்டமாக இருந்தது. இனி அவளுடன் பேசக்கூடாது, அவர்கள் வீட்டுக் குப் போகக் கூடாது என முடிவு செய்துகொண்டார் பரமசிவம்.

(தொடர்கிறேன்)