Tuesday, February 24, 2015

கொடை 21


சேர்வலாறுக்குப் போயிருந்தார்கள் முப்பிடாதியும் குத்தாலமும். கல்லூரி யில் தலையை காட்டிவிட்டு பதினோரு மணிக்கு மேல் பஸ் பிடித்தார்கள். ஜெஸிலா மேரி உள்ளிட்ட பலர் அதாவது பிலோமினாவின் தோழிகள், வகுப் புத்தோழர்கள் சிலரும் ஏற்கனவே அங்கு லீவு எடுத்துவிட்டு வநதிருந்தார்கள். பிலோமினாவின் அண்ணன் மகனுக்கு முதல் பிறந்த நாள் விழா என்பதால் இந்த வருகை.

சேர்வலாறில் அவள் வீடு இருந்த இடம் அமைதியாக இருந்தது. அவள் வீட் டைப் போலவே பக்கத்தில் பத்து, பதினைந்து வீடுகள் ஒரே மாதிரியாக இருந் தன. அது என்ஜினீயர்களுக்கான குவார்ட்டர்ஸ் என்றார்கள். இது பிலோமி னாவின் அண்ணன் வீடு. அவளின் வீடு வேறொரு பக்கம் இருப்பதாகப் பின் னர் தெரிந்தது.

வீட்டைச் சுற்றி எங்கெங்கும் பச்சையாகக் காட்சியளித்தன. தூரத்தில் இரண்டு புள்ளிமான்கள் அங்கிருந்தே இவர்களைப் பார்த்தபடி சென்றன.

உடல் வருடும் தனிமை, பேசச் சொல்லும் அமைதி, இயற்கையின் ஒளி, பறவைகளின் இசை இனிமை, வண்டுகளின் ராகம், விலங்குகளின் குரல், பூக் களின் வாசம், புற்களின் ஈரம் என இப்படியொரு இடத்தில் வீடு கட்டி வாழ எல்லாருக்கும் ஆசை இருக்கும் என நினைத்தான் முப்பிடாதி. 

அவள் வீடு இருக்கும் பகுதியில் மட்டும் தார் ரோடு போட்டிருந்தார்கள். அதில் இனிமையான மணம் எழுப்புகிற வெண்பூக்களும் இலைகளும் விழுந்து கிடந்தன. அந்தப் பூவிற்கு என்ன பெயர் என தெரியவில்லை. ஏதாவதொரு பெயர் இருக்கும். எப்போதோ வைக்கப்பட்ட பெயர். பெயரின்றி இங்கு என்ன இருக்கிறது? அல்லது பெயரில்தான் என்ன இருக்கிறது? பெயரென்று ஒன்று இருப்பதாலும் இல்லாததாலும் தீங்கென்றும் நன்மை என்றும் இல்லை.

அப்போதுதான் விழுந்திருக்கிற, ஒரு பூவை மட்டும் கையில் எடுத்தான் முப் பிடாதி. அவன் எடுப்பதைப் பார்த்து குத்தாலமும் எடுத்தான். தன்னை நோக்கி சிரிக்கின்ற ஒரு குழந்தையின் முகம் அதில் தெரிந்தது. குழந்தையின் கன்னத் தில் முத்தமிடுவதைப் போல முப்பிடாதி அதன் இதழ்களை உதட்டருகில் வைத்தான். சந்தன வாடையை லேசாக ஒத்திருந்தது மிருதுவான அப்பூ. சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். சட்டை மணக்கும் என நம்பிக் கை.

அவள் வீட்டு வாசலில் சில கார்களும் நான்கைந்து ஸ்கூட்டர்களும் நின்றி ருந்தன. கார்களின் முன் அந்த அரசியல் கட்சியின் கொடி கட்டப்பட்டிருந்தது. வெள்ளை வேட்டி, சட்டையில் சிலர் அங்கு வெளியே நின்று பேசிக் கொண் டிருந்தார்கள். சிலர் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் வரும் போது சிகரெட் புகை மூக்கில் வந்து அடித்தது. அவர்கள் கட்சிக்காரர்கள்.

காம்பவுன்ட் சுவரைப் பிடித்தபடி சந்தனக்கலரில் சட்டையும் கருப்பு பேண்டும் அணிந்திருக்கிறவரும் இன்னொரு பெண்ணும் பேசிக் கொண்டிருந்தனர். அவர் பிலோமினாவின் அண்ணனாக இருக்கும். பிலோமியின் முகச்சாடையும் இவ ரின் முகச்சாடையும் ஒன்றாக இருந்தது. வாசல்படி ஏறியதும் பல நாள் பழகி யது மாதிரி அவர்தான் வரவேற்றார். உள்ளே போகச் சொன்னார். பிலோமினா, முதல் மாடி யில் ஏதோ வேலையில் இருக்கிறாளாம். 

வீட்டுக்குள் இருந்த ஷோபாவில் பெரிய மீசை வைத்தபடி கழுத்தில் தொங்கும் தண்டியான தங்கச்சங்கிலி அசைய, சட்டையை அவிழ்த்து விட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தவர், பிலோமினாவின் அப்பா. போஸ்டர்களில் பார்த்த முகம் அது. அவர் இவர்களைக் கண்டு கொள்ளவில்லை. அங்கிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். குழந்தை தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில் தூங் கிக் கொண்டிருந்தது. வீடு அழகான அலங்கார வேலைபாடுகளுடன் இருந்தது. இவ்வளவு பெரிய வீட்டுக்குள் போகத் தயக்கமாக இருந்தது முப்பிடாதிக்கு. ஆடம்பரமான அந்த வீட்டுக்கு வந்திருப்பவர்களும் பெரிய மனிதர்களாக, வசதி படைத்தவர்களாக இருந்தார்கள். அங்கு வித்தியாசமான வாசம் வந்து கொண் டிருந்தது. அது காட்டின் வாடையாகக் கூட இருக்கலாம்.

தான் அணிந்திருக்கிற உடையும், வியர்வை நாற்றம் வீசும் உடலும் அவர் களின் தகுதிக்கு ஒப்பானதாக இருக்குமா என நினைத்தான். அப்படியே வெளி யே போய்விடலாம் எனத் தோன்றியது. வெளியில் நின்று, வெளியில் பேசி வெளியோடு வெளியாகப் போய்விடலாம் என நினைத்தான். செருப்புகள் கிடக் கும் இடத்துக்கு அருகே அவனும் குத் தாலமும் நின்றிருந்தார்கள்.

யாரோ ஒரு சிறுமி, 'அந்தக்கா ஒங்களை கூப்பிடறாங்க' என்று சொல் லிச் சென்றது. அவள் சொன்ன அக்கா, ஜெஸிலா. வீட்டுக்கு வெளியே வலது பக்கத் தில் போடப்பட்டிருக்கிற பெஞ்சில் இருந்தாள். கிளி பச்சை நிற பட்டுச்சேலை அணிந்திருந்தாள். குளித்து முடித்துவிட்டு அப்போது தான் தலையை உலர்த்தி வந்தவள் போல இருந்தாள் அவள். தனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிவிடுகிறது? என நொந்து கொண்டு கர்சிப் எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டான். குத்தாலத்திடம் சீப்பு வாங்கி தலையைச் சீவிகொண்டான். இருந்தாலும் தான் நன்றாக இல்லை என்பது போலவே அவனுக்குத் தோன்றியது. அவளுடன் கல்லூரி நண்பர்கள் பலரும் இருந்தார்கள். மாடிப்படியில் இருந்து இறங்கிய பிலோமினா, இவர்களைப் பார்த்து விட்டு, 'வாங் கடே. ஏம் லேட்டு?' என்றாள்.

'ஒங்க ஊருக்கு என்ன, நிமிசத்துக்கு ஒரு பஸ்சா இருக்கு?'

'செரி செரி, வா டேவிட்டைப் பாப்போம்' என்று அழைத்தாள். டேவிட்தான் பர்த் டே பேபி. தூங்கிக்கொண்டிருந்தான். அழகாக இருந்தான். அந்த சின்னக் கழுத் தில் இரண்டு புது தங்க சங்கிலிகள் மின்னின. கைவிரல்களில் மோதிரங்கள். பிறந்தநாள் பரிசாக வந்தவையாக இருக்கலாம். குத்தாலம் வாங்கி வந்த கிலு கிலுப்பையை அவளிடம் கொடுத்தார்கள் இரண்டு பேரும்.

'சும்மாதானெ வரச்சொன்னேன்' என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டு வாங்கிக்கொண்டாள்.

'நாங்க இங்கெ நிய்க்கோம். நீங்க வேலய பாருங்கெ' என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தார்கள். மத்தியான சாப்பாடு வீட்டுக்குப் பின்னால் ரெடியாகிக் கொண்டிருந்தது.

ஜெஸிலா, முப்பிடாதியை, 'அணைக்குப் போயிட்டு வருமா' என்று கூப்பிட் டாள். குத்தாலத்தையும் கூப்பிட்டான் முப்பிடாதி. அவன் வெளியே வந்து சொன்னான், 'நீங்க ரெண்டு பேரும் போலாம், நான் எதுக்கு நந்தி மாதிரி?' என்று. ஜெஸிலா, 'நாங்க என்ன ரகசியமா பேசப்போறோம், வாங்கெ' என்றாள் குத்தாலத்திடம்.

போனார்கள். சேர்வலாறு அணையின் முன், சிறு பூங்கா அமைத்திருந்தார்கள். அதில், சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் இருந் தன. மான், குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் சிமென்ட் சிற்பங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த பெஞ்சில் அமர்ந்தார்கள். மரங்களின் நிழல் சுகமாக இருந்தது. காற்றடிக்கும் போது லே சாக குளிர் வந்து போனது.

தூரத்தில் தெரிந்த அணையைப் பார்த்தான் முப்பிடாதி. தண்ணீர் முட்டி அலைந்துகொண்டிருந்தது. ஷட்டரின் வழியே தண்னீர் வெளியேறி ஆறு மாதி ரி சென்று கொண்டிருந்தது. அணையில் இருந்து கீழே தள்ளி ஒரு செம்மரமும் புங்கை மரங்களும் இருக்கிறதா எனப் பார்த்தான். நிறைய கிளைகளைக் கொண்ட நான்கைந்து பேர் சேர்ந்து கட்டிப் பிடித்தால் கூட முடியாத சுற்ற ளவைக் கொண்ட அந்த புங்கை மரங்கள்தானா அவை என்று பார்த்தான். அவைதான். இக்கரையில் இருந்து அக்கரைக்கு விழுந்து கிடக்கும் அதன் பெரு ம் கிளையின் மேல் தண்ணீர் பாய்ந்தோடுவது தெரிந்தது. முப்பிடாதி அவர்க ளிடம் சொன்னான்.'சேர்வலாறு அணை கட்டும்போது நா வேலைக்கு வந்திருக்கேன்' என்று. 

'வேலைக்கா, நெசமாவா? இதை கட்டும்போது நீ சின்னப்பிள்ளயால்லா இருந் திருப்பே? கதை விடாதலெ' என்றான் குத்தாலம்.

ஜெஸிலா, அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். 

'நெசமாத்தாம். அப்பம் நா சின்ன பையன்' என்று சொல்லிவிட்டு கீழே அந்த புங்கை மரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது பள்ளி விடுமுறை. கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. ஊரில் அம்மன் கோவில் தெருவில் இருந்த ராஜன் மாமாவை எல்லாரும் மேஸ்திரி என்றார்கள். அவர், தினமும் ஊரில் இருந்து நான்கு லாரி ஆட்களை சேர்வலாறு அணை கட்ட அழைத்துச் சென்றார். ஒவ்வொரு லாரியிலும் மணல் இருக்கும். காலையில் ஏழு மணிவாக்கில் எங்கிருந்தோ மணல் அள் ளிக்கொண்டு வரும் லாரி, பிள்ளையார் கோயில் முன்பு நின்று ஹாரன் அடிக் கும். அந்த சத்தம் கேட்டு அங்கு கூடிவிடுவார்கள் எல்லாரும். 

வேலு டீக்கடையில் லாரி ஓட்டுனரும் அவருடன் இருப்பவர்களும் டீக் குடிப் பார்கள். அவர்கள் குடித்து முடிப்பதற்குள் கையில் சோத்துச் சட்டியுடன் லாரி யில் ஏறி அமர்ந்துகொள்ள வேண்டும். நான் நீ என்று போட்டிப் போட் டுக் கொண்டு வேலைக்குச் சென்றார்கள். சின்னப்பிள்ளைகள்தான் அதிகம் வேண் டும் என்றார்கள். லீவு என்பதால் அவர்களும் அதிகமாகவே ஏறிக் கொண் டார்கள். ஆண்டாள், வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் அடம்பிடித்துச் சென்றான் முப்பிடாதி. மற்றவர்களுக்குச் சம்பளத்துக்காக செல்கிறார்கள் என்றாலும் அவனும் மேல வீட்டு முத்துசாமியும் காடு பார்க்கும் ஆவலில் போனார்கள். விலங்குகளையும் பார்க்கலாம் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது. கூடவே ராசம்மா சித்தி, அவள் மகள் பிரே மா, செல்லம்மக்கா, வசதி தாத்தா, அவர் பொண்டாட்டி, கல்றகுறிச்சா பாட்டி, ரங்கம்மாத்தை, தென்னரசு, செல் லையா மாமா என இருந்ததால் பயமில் லாமல அனுப்பினாள் ஆண்டாள். 

லாரி ஊரில் இருந்து கிளம்பி, டாணா, பாபநாசம் தாண்டி மலைக்கு மேலே ஏறும்போதுதான் பயமாக இருக்கும். வளைவுகளில் திரும்பும் போது விழுந்து விடுவது போல கெதக்கென தோன்றும். பிறகு பக்கத்தில் யாரையாவது பிடித் துக்கொண்டால் பயம் தெரியாது. லாரி மெதுவாகத்தான் செல்லும். 

காட்டுக்குள் போகும்போது மான்களை அதிகமாகப் பார்க்க முடியும். எப் போதாவது யானைகள் தென்படும். சாலையைக் கடக்கும் குரங்குகளும் மிளாக்களும் அதிகம்.

அங்கு ஏகப்பட்ட பேர் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.விக்ரமசிங்க புரம், அம்பாசமுத்திரம், பொதிகையடி, டாணா, சிவந்திபுரம், மணிமுத்தாறு என அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து நிறைய பேர் வந்திருந்தார்கள். இவர்கள் போகும்போது அணையை பாதி கட்டியிருந்தார்கள். அணைக்கு கீழே நான் கைந்து பிரிவாக வேலை நடந்து கொண்டிருந்தது. 

ஒரு பகுதியில் சிமெண்ட் கலவை வேலை. சின்ன சின்ன சட்டிகளில் அதை சுமந்து கொண்டு ஒரு இடத்தில் கொட்ட வேண்டும். ஒவ்வொரு சட்டியையும் தூக்கிக்கொண்டு போகும்போதும், வைத்திருக்கும் சிகரெட் அட்டையை அங்கு பேனா வைத்திருக்கும் ஒருவனிடம் காட்டவேண்டும். ஒவ்வொரு சட்டிக்கும் ஒரு கோடு இழுப்பான். யார் அதிக கோடுகள் வாங்க வேண்டும் என்பதிலும் போட்டி நடக்கும். ஒரு கோடுக்கு 20 பைசா. முதல் இரண்டு மூன்று நாட்கள் வேலை பரபரப்பாக இருந்தது. நான்காவது நாள் அங்கு வெள்ளையாக இருந்த இரண்டு அதிகாரிகள், 'என்னடா படிக்கிறீங்க?' என்று கேட்டார். பிறகு முப் பிடாதி, முத்துசாமி, பிரேமா, கல்றகுறிச்சா பாட்டி உள்ளிட்ட சிலரை 'ஒன்னும் அவசரமில்லடா, மெதுவா சட்டிய தூக்கிட்டு வாங்கெ' என்று சொல்லி விட் டார். இதனால் திடீரென்று சட்டியைத் தூக்குவார்கள். வெயில் கொளுத்த ஆரம் பித்தால் புங்கை மரத்துக்கு வந்துவிடுவார்கள். முத்துசாமி நன்றாக மரமேறு வான். முப்பிடாதியால் ஒரு அளவுக்கு மேல் ஏறமுடியாது. பயம் வந்துவிடும். பிறகு இறங்குவார்கள்.

கீழே பெரிய பெரிய கற்களால் அந்தக் கரைக்கும் இந்த கரைக்கும் தரைப்பாலம் போல போட்டிருந்தார்கள். அதில் ஆறு மெதுவாக  சத்தம் கொடுத்தபடி ஓடிக் கொண்டிருக்கும். உள்ளே பளிங்கு கற்கள் தெரியும். அந்தத் தண்ணீரைப் பார்த் தாலே குளிக்கத் தோன்றும். அதன் மீதும் கரையிலும் புங்கை மரப் பூக்கள் விழு ந்து சிதறிகிடக்கும். புங்கை பூக்கள் அழகானவை. விரியாத இதழ்களுடன் அந்தப் பூவைப் பார்த்தால் சிவலிங்கத்தின் ஒரு வடிவம் போலத் தோன்றும். கீழே காப்பிகலர் காம்பும் அதன் மேல பாதி தீப்பெட்டிக் கலரிலும் பாதி வெண் மையாகவும் அந்தப் பூ இருக்கும்.

நினைத்த நேரத்தில் சாப்பிட அவர்களுக்கு அனுமதி உண்டு. ஒரு மாதம் மட்டு மே அவர்கள் வந்தார்கள். பிறகு நின்றுவிட்டார்கள். 

முப்பிடாதிக்கு பழைய நினைவுகள் வந்து போயின. அதற்குள் கல்லூரி நண்பர் கள் இவர்களைத் தேடி பூங்காவுக்கு வந்தார்கள். 

'வாங்க சாப்பாடு ரெடியாயிட்டாம்'

'கொஞ்ச நேரம் சுத்திப்பாத்துட்டு போவும்'

'ச்சே. இப்ப சாப்புட்டா, இன்னும் அரை மணி நேரத்துல பஸ்சு இருக்கு. போயிரலாம்' என்றார்கள்.

சரி என்று பிலோமினா வீட்டுக்கு கிளம்பினார்கள். சாப்பிட்டு முடிந்ததும் முப் பிடாதியை தனியாக வெளியே வருமாறு அழைத்தாள் ஜெஸிலா. கொஞ்சம் பதட்டத்துடன் போனான். ஒரு மரத்தின் மறைவில் நின்றுகொண்டு சிறிய டப்பாவை பிரித்தாள் அவள். ஒரு சங்கிலியை எடுத்து அவன் கையில் கட்டி விட்டாள். வெள்ளி பிரேஸ்லெட். அதில் ஐ லவ் யூ என்ற வாசகம் பொறிக் கப்பட்டிருந்தது. அவன் வியந்து நிற்பதற்குள் இன்னொரு சிறிய கவரில் டப்பா ஒன்றை கொடுத்தாள். அதனுள் ரேபான் கூலிங்கிளாஸ் இருந்தது. 'இது எதுக்கு நமக்கு?' வேண்டாம் என்று சொன்னால் ஏதும் நினைத்துவிடுவாளோ என்று குழம்பினான்.

'மாமா, மஸ்கட்ல இருந்து கொண்டு வந்தது. ஒங்களுக்கு நல்லாருக்குமேன் னு எடுத்துட்டு வந்தேன்' என்றாள். அவனுக்கு என்ன செய்வதென்று தெரிய வில்லை. அருகில் யாருமில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். அவள் அதை எதிர்பார்த்தவள் போல அவ னை செல்லமாகத் தள்ளிவிட்டுவிட்டு பிலோமினாவின் வீட்டுக்குள் ஓடி னாள்.

(தொடரும்)

2 comments:

துபாய் ராஜா said...

முப்பிடாதி கொடுத்த முத்தம்
மூட்டி விட்டதே காதல் யுத்தம்...

காட்டின் வர்ணனையோடு வாசனை தருகிறது காதலர்களின் வருகையும்....

சேர்வலாறின் பசுமை... இயல்பான எழுத்துக்களில் ஏற்படுகிறது படிக்கும் நெஞ்சில் குளுமை...

அடிபொழி அண்ணாச்சி....

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கிறது...பகிர்வுக்கு நன்றி...

மலர்