டிப்டாப்புக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்தப் பண விவகாரத்துக்குள் எப்படி, கட்டமுண்டு வந்தாள் என யோசித்துக் கொண்டிருந்தான். அவ ளுக்கு பணம் கொடுக்க ஆயிரம் பேர் இருக்கும் போது நான் ஏன் வாங்கிக்கொடுக்க வேண் டும் என நினைத்தான் டிப்டாப். எதையாவது சொல்லி எதிலாவது இழுத்து விட்டு குளிர் காய்வது சிலருக்கு வாடிக்கை ஆகிவிட்டது. எரிச்சலாக வந்த து அவனுக்கு.
.
'இத எந்த நாயி சொல்லுச்சு?'
'எவனோ சொன்னாம். நீ கொஞ்ச நாளா அவ பின்னால போறதயும் கீழ பொத்தையில ரெண்டுபேரும் ஒதுங்குனதையும் யாரோ பாத்திருக்காவோ...'
'ஏல ச்சீ. என்ன பேச்சு பேசுதெ. எவனும் மொழங்காலுக்கும் மொட்டத் தலக்கும் முடிச்சு போட்டாம்னா, அத ஏன்ட்ட கேப்பியோல"
'பின்னெ, நீ அந்தளவுக்கு யோக்கியனா?'
'எந்த மடப்பய சொன்னாம் அப்டி, சொல்லு. கொதவாலய அறுக்கென். நான் எங்கல அவா கூட ஒதுங்குனேன்?'
'கண்ணால பாத்த மாரிலா சொன்னானுவோ?'
'ஊர்ல ஒரு நாதிக்கு நல்ல வெஷயமா பேச தெரியாது பாத்துக்கெ. ஒருத்தன கேவலப்படுத்தணும்னா, எப்டிலாம் கதெய சொல்லுதானு வோ பாரென்'
'அப்டியா சொல்லுதெ'
'பெறவு? நீயும்லா நம்பிக்கிட்டு வந்து கேக்கெ?'
'வேற என்ன செய்ய சொல்லுதெ. சீக்கிரம் கல்யாணத்தை பண்ணித் தொலன்னா அதையும் செய்ய மாட்டேங்க. பின்ன எல்லா நாயும் பேசிட்டுதாம் இருப்பானுவோ'
'அந்த நாயிவோளுக்காவ நா கல்யாணம் முடிக்கணுமோடெ?'
தேவையில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறோமோ என தோன்றியது இரு வருக்கும். சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். பக்கத்தில் படைப்புச் சோறுக்கு காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தார்கள். மாங்காய் துண்டை நறுக்கி மெதுவாகக் கடித்தான் கருப்ப நம்பி. சாமிக்கு படைக்கும்வரை எச்சில் படக் கூடாது என பயபக்தியாய் படைப்பு வைத்த காலமெல்லாம் போய் விட்டது. இப்போது ஆக்கும்போதே ருசி பார்த்துவிடுகிறார்கள். எச்சில் பண்ணி விடுகி றார்கள். சாமியும் போனால் போவுது என்று விட்டுவிடுகிறார்.
கீழ்பக்கம் ஆட்டை உரித்துக்கொண்டிருந்தான் பரமசிவம். சிலுப்பியை (குடல்) தனியாக எடுத்து அதன் கழிவை உட்கார்ந்து கழுவிக் கொண்டிருந்தான் ராம சாமி. சருவச்சட்டி ஒன்றில் இருந்த தண்ணீருக்குள் முக்கி எடுத்து கையால் நசுக்கி இழுத்தான் குடலை. ஆட்டின் கழிவுகள் கரும் பச்சை நிறத்தில் வெளி யே வந்தன. குடலை சுத்தமாக கழுவது தான் கஷ்டம். மீண்டும் மீண்டும் அப்ப டியே இழுத்துக்கொண்டிருந்தான் ராமசாமி.
சாமிகொண்டாடிகள் பூடத்தின் முன் இருந்த பலகையில் இருந்து எழுந்து வீட்டில் இருந்து வந்திருந்த பானகாரத்தைக் குடித்தார்கள். அவர்கள் அணிந் திருந்த வேட்டிகளில், சந்தனமும் சாமிக்கு பூசிய மஞ் சனமும் சேர்ந்து இளஞ் சிவப்பு நிற கறைகள் தெரிந்து கொண்டிருந்தன. தளவாய் மாடசாமிக்கு ஆடிய குட்டை, எழுந்து கோயிலுக்கு வெளியே ஒண்ணுக்கு இருக்கப் போனார். வழியில் முப்பிடாதியையும் டிப்டாப்பையும் பார்த்து, 'என்னடெ இங்க நின்னுட் டியோ' என்று கேட்டுவிட்டு உடலை நெளித்துக்கொடுத்தார். அவருக்குத் தொண்டை கட்டியிருந்தது. கொடையில் கத்தி கத்தி சாமியாடியதின் விளை வு. ஒவ்வொரு கொடையின்போதும் சாமிகொண்டாடிகளுக்குத் தொண்டை கட்டிவிடும்.
'சும்மா பேசிட்டிருக்கோம்' என்ற டிப்டாப்பிடம், 'கடன் பிரச்ன முடிஞ்சுதாடா?' என்றார் அவர்.
'முடிஞ்சா இவருக்கென்ன, முடியலன்னா இவருக்கென்ன' என்று மனதில் நினைத்துக்கொண்ட டிப்டாப், 'ஆமா அது நேத்தே முடிஞ்சுட்டுலா' என்றான்.
'தெரியாமதான் கேக்கென். ஒனக்கு என்ன பொண்டாட்டியா, பிள்ளை யால. கடன் வாங்குத அளவுக்கு பெரிய மனுசனாயிட்டியோ' என்று குரலை உயர்த் தினார். இது இவருக்குத் தேவையில்லாதது. கடன் வாங்க பெரிய மனுஷன் என்ன, சின்ன மனுஷன் என்ன என நினைத்த முப்பிடாதி, 'மாமா அதெ பெறவு பேசிக்கிடுவம். மத்த வேலயள பார்ப்போம்' என்றான்.
'என்னமோ போங்கெ' என்று சொல்லிவிட்டு அக்கம் பக்கம் யாரும் பொம்பளைகள் வருகிறார்களா என்று நோட்டமிட்டுவிட்டு வேட்டியைத் தூக்கிக்கொண்டு சுவர் ஓரமாக உட்கார்ந்தார் ஒண்ணுக்கடிக்க.
பின்னாலே இன்னும் சில சாமிகொண்டாடிகள் டிப்டாப்பைப் பார்த்து வந்துகொண்டிருந்தார்கள். அருகே வந்தால் எல்லாரும் கடனைப் பற்றி யே கேட்பார்கள். என்ன பதில் சொன்னாலும் அவர்களிடம் முடியாது. ஏசுவார்கள். புத்திமதி சொல்கிறேன் என்று பொரிந்து தள்ளுவார்கள் என நினைத்தான் அவன்.
'முப்பிடாதி. எல்லாரும் வாரவோ. என்னய உண்டு இல்லன்னு பண்ணிரு வாவோ. மத்தியானத்துக்கு மேல கடைக்கு வா. பேசிக்கிடுவம், னா. நான் போறேன்டே' என்று கிளம்பினான். அவன் போவதைப் பார்த்த கசமுத்து, 'ஏல நின்னு' என்று கத்தினார். அவன் கேட்காத மாதிரி ட்யூப் லைட் வெளிச்சம் தாண்டி இருட்டுக்குள் போய்க்கொண்டிருந்தான்.
'என்ன சொல்லுதாம், மூதி' என்றார் கசமுத்து.
'நான் கேட்டுக்கிடல. நமக்கெதுக்கு அவென் வெவாரம்?' என்றான் முப் பிடாதி. பிறகு குட்டை இருந்த இடத்துக்கு அருகில் இவரும் ஒண்ணுக்கிருக்கப் போ னார்.
0
கொடை முடிந்து, எட்டாம் பூசை நடந்துகொண்டிருந்தது.எல்லாரும் கூடியிருந் தார்கள் கோயிலில். கொடையை சிறப்பாக நடத்தியதற்காக இளைஞர் அணி யை எல்லாரும் பாராட்டினார்கள். போன கொடையை விட அனாவசிய செல வுகளைக் குறைத்ததில், வருங்காலத்தில் கொடையை இன்னும் சிறப்பாகச் செய்வார்கள் என்று பேசிக் கொண்டார்கள்.
சாமிக்கு பூஜை பண்ணி கும்பிட்டு முடித்த பிறகு பல்லி முருகன் பற்றி பேச ஆரம்பித்தார்கள். கொடை அன்று அவனுக்கு அருள் வந்து கோ யில் நோக்கி வந்ததையும் பிறகு திரும்பிச் சென்றதையும் சொன்னார்கள் முப்பிடாதியும் ராமசாமியும். தாங்களும் பார்த்ததாக ராசுவும் பரமசிவமும் சொன்னார்கள்.
'இப்ப என்ன செய்யலாம்' என்று ஆரம்பித்தார்கள்.
'அவென் வேண்டாங்காம். கடைசியா என்ன சொல்லுதாம்னு கேப்போம்'
'என்ன சொல்லுவாம். அன்னைக்கு சொன்னததான் சொல்லுவாம்'
'அப்டின்னா விட்டுருவோம். வேண்டாங்குதவன்ட்ட போயி ஏன் தொங்கிட்டுக் கெடக்கணும்?'
'அவெ அறிவுக்கெட்டத்தனமா சொன்னா, நம்மளும் அப்டியேவா இருக் கணும்?'
'இவெங் யார்ல. அவனுவட்ட பேச முடியுதால. சொன்னதையேதாம் சொல்லு தானுவோ கூறுகெட்ட நாயிவோ. தாம்பாளத்துல வச்சி தாங்க சொல்லுதே ளோ'
கோயிலுக்கு வெளியில் இருக்கும் வீட்டுத் திண்ணையில், பாக்கைத் தட்டிக் கொண்டிருந்த உமையாள் பாட்டி, 'ஏல வேண்டாம்னா போட் டும்ல. அவனுவெ இருக்கதும் ஒண்ணுதாம். இல்லங்கதும் ஒண்ணுதாம். மழை தண்ணி வராம போயிருமா? இல்ல காத்தடிக்கது நின்னு போயிருமா, சண்டாளனுவோ போ னா போயிட்டுப் போறாம்னு விடுவேளா, அதையே பேசிக்கிட்டு?' என்றாள் காதில் பாம்படம் ஆட.
உமையாள் பாட்டிக்கு வயது எண்பத்தெட்டு. மூன்று பெண், ஐந்து ஆண் என எட்டுப் பிள்ளைகளைப் பெற்றவள். இன்னும் திடகாத்திரமாக வாய்க்காலில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறவள்.
ராசுவும் கசமுத்துவும் அவளைப் பார்த்தார்கள். பிறகு கசமுத்து, 'நீ சும்மா கெடத்தா. நாங்க பேசுதம்லா' என்றார்.
'ஆமா. சொல்லுதாம் சோத்துக்கு உப்பில்லன்னு. ஏம்ல வழ வழன்னு பேசிட்டி ருக்கியோ. இதா, அதான்னு ஒரேயடியா முடிவெடுப்பேலா, அத விட்டுட்டு கொம்பன் ஆட்டை அறுத்த கதையாலா பேசிட்டிருக்கியோ?' என்றாள்.
கொம்பன் ஆட்டை அறுத்த கதை என்று ஊரில் ஒரு கதை சொல்லப் பட்டு வந்தது. சம்சாரிகளுக்கு அந்தக் கதை அத்துப்படி.
'கொம்பம் கொம்பம்னு ஒருத்தம் இருந்தாம். கொஞ்சம் புத்தி பேதலிச்ச பய. எல்லா வேலயும் செய்வாம். ஆளு நடிகரு மாதிரி செவப்பா இருப் பாம் பாத்துக் கெ. அவ்வோ அம்மக்காரி கேரளா. அப்பக்காரனுக்கு கெழக்க முக்கூடலு. அவ் வோ ஊருல என்னமோ பிரச்னைன்னு இங்க வச்சு காலஞ் கழிச்சிட் டிருந்தாம். அவ்வோளுக்கு இவன் ஒரே பய. எப்பம் பாரு சிரிச்சுட் டேதாம் இருப்பாம். நம்ம தெப்பக்குள அரசமரம் இருக்குல்லா, பாதி நேரம் அங்கதான் கெடப்பாம். யாராது ஆடு பத்திட்டுப் போனா, கூட கூட்டிட்டுப் போவாவோ. வேலை இல்ல னா போவாம். அவங்கூட இருந்தா நேரம் போவ தே தெரியாது பாத்துக்கெ.
'ஏல, சக்கர எதுக்கு இருக்கு?'
'ஒண்ணுக்கிருக்க'
'அதுக்கு மட்டுமால?'
'பெறவு எதுக்கு?'
'பிள்ள பெக்கதுக்குலா?'
'அது வயித்துலலாவே பெறக்கும்'
'யாரு சொன்னா கூறுகெட்டவனெ. ஒங்க, மேல வீட்டுல கமலம் இருக் கால்லா...'
'ஆமா'
'அவாட்ட போயி, இத காமிச்சு, இத வச்சு எப்டி பிள்ள பெறக்கும்னு கேளுல'
'ச்சீ அவாட்ட கேக்க மாட்டென். சும்மாவே அவா, எங்கிட்ட அதெ புடுச்சு புடுச்சு விளாடுவா. அவாட்ட போயி கேக்க சொல்லுத?'
'புடுச்சு புடுச்சு விளாடுதாலா'
'பெறவு? எங்க வீட்டு முடுக்கு இருக்குலா. கருக்கல்ல அங்க நின் னுட்டிருந்தா, 'என்னடெ செய்யுத'ன்னு கிட்டத்துல வந்து நின்னுக் கிடுவா. நேரா வாராவ சாரத்து மேலோடி அதெ புடிச்சு புடிச்சு இழுப்பா. நாம்லா அவா கைய தட்டி விட் டுட்டு ஓடுவென்'
-எல்லாரும் சிரிப்பாவோ. அவங்கிட்ட விளாடுதாவோன்னு பயலுக்குத் தெரியாது, அவனும் நெசம்னு நெனைச்சு பேசுவான்.
'ஏலெ பெயலுக்கு வெவரம் தெரியாதுங்காவோ. கமலமே கூட்டிட்டு போயி காரியத்த முடிச்சுருவா போலருக்கெ?' ம்பாவோ.
பெறவு, 'நீ நல்ல பயல்லா. அதனால நீ அவாட்டா கேளுடெ, கரீட்டா சொல்லு வா,ன்னா?' ன்னு சொன்னதும் உண்மன்னு நம்பிருவான்.
மறுநாளு இல்லனா என்னைக்கோ கண்ணுல தட்டுபட்டா, கல்லைக் கொண்டு சும்மா எறிஞ்சுட்டு கோவமா இருக்கது மாதிரி காட்டிக்கிடு வாம்.
'கமலம் ஏசிட்டா, தெரியும்லா'
'ஏம்ல'
'நா, நீங்கெ கேக்க சொன்னேன்னு கேட்டேன். அவனுவ கூடலாம் ஏன் சேருத, இனும சேராதன்னுட்டு அதை புடிச்சுக்கிட்டா'
'பெறவு என்ன செஞ்சா'
'போ, ஒங்கிட்டலாம் சொல்லக் கூடாதுன்னிருக்கா'ன்னுட்டு ஓடிருவாம். இப்படி பட்ட பய அவெ. ஒரு நாளு ஊருக்கு சினிமா போட வந்த பீடிக் கம்பெனி, காரு பின்னால திரும்பிருக்கு. நம்ம சம்முவம் மூப்பனாரு வெள் ளாடு உள்ள மாட்டி செத்துப் போச்சு. பெறவு டிரைவருட்ட சண்டைலாம் நடந்துது. அதெ விடு. அந்தானிக்கி, அந்த ஆட்டைத் தூக்கிட்டு மூப்பனாரு வீட்டுக்கு வந்துட்டாரு. வழக்கமா ஆட்டை அறுக்குத கோவாலு பயல காணலெ. இவெ எனக்கு ஆடு அறுக்கத் தெரியும். கோவாலு கூட நானும் போயி ஆட்டை அறுத்திருக்கென்னு சொல் லிருக்காம். 'செரி, அறு'ன்னுட்டு அவரு வீட்டுக்கு பின்னால நிலைக் கதவை எடுத்து மல்லாக்கப் போட்டுட் டாரு. இந்தப் பக்கம் சுவத்துக்கும் அந்தப் பக்கம் சுவத்துக்கும் ஒரு கயிறை கட்டி நடுவுல ஒரு கொக்கி யை மாட்டிட்டாரு. கதவை கழுவி கொடுத்துட்டு, 'ஏல அறுத்து வையி. கறிக்கு சாமாம்லாம் வாங்கிட்டு வாரம்'னு போயிட்டாரு மூப்பனாரு.
கறிச்சோறு சும்மா இறங்காதுன்னு பொட்டலுபுதூர்ல போயி சாமாம் லாம் வாங்கிட்டு, எங்கயோ போயி ஒரு பாட்டிலு சாராயத்தையும் வாங்கிட்டு ரெண் டு மணி நேரம் கழிச்சு வீட்டுக்கு வந்தா, ஆடு அப்டியே கெடக்கு. இவெங் அது பக்கத்துல கத்திய வச்சுட்டு ஒக்காந்திருக்காம். மூப்பனாருக்கு கோவம் னா கோவம், அப்படியொரு கோவம்.
'ஏல, ஏம் அறுக்கல?'
'எனக்கு பாவமா இருக்கு. நம்ம கூட சுத்துன குட்டியெ போயி எப்டி அறுக்கன்னு மனசே வரலை. அதாம் அதை பாத்துட்டிருக்கென்'னு சொல்லிருக்காம். அவ ருக்கு பொத்துட்டு வருது கோவம். அடக்கிகிட்டாரு.
'இப்பம் என்ன செய்யலாங்கெ?'
'அப்டியே பொதைச்சுருவோம், ஒம்ம பிள்ள மாதிரிலா'ன்ட்ருக்காம்.
'அப்டியாப்பா. செரி, நீ சொன்ன மாரியே நா பொதைச்சிருதேன். நீ வீட்டுக்குப் போ'ன்னு அனுப்பி வச்சிருக்காரு. பெறவு கோவால புடிச்சுட்டு வந்து அறுத் திருக்காவோ. இதாம் கொம்பம் ஆட்டை அறுத்த கதை. அவென அவ்வோ ஆத்தாக்காரி அவ்வோ ஊருக்கு, அதாம் கேரா ளாவுக்கே கூட்டிட்டுப் போயிட்டா. அங்க போயி வைத்தியம் கித்தியம் பாத்து சரி பண்ணன்னு போனா. அந்தப் பெய இப்பம் எங்க இருக்கானோ? என்று சுப்பையா தாத்தா சொல்லியிருக்கிறார்.
பிறகு ராசு, சுக்கு, இளைஞர் அணியின் ராமசாமி, வன்னிய நம்பி ஆகி யோர் சென்று பல்லிமுருகன் வகையறாவிடம் பேசுவது என்று முடிவு செய்யப் பட்டது. இதில் சுக்கு, 'நா அவனுவ மூஞ்சியில முழிக்க மாட் டேன்' என்று சொல்லிவிட்டார். அவருக்கு பதிலாக இன்னொருவரை சேர்க்க முயன்றார் கள்.
'மூணா பேரா போயி பேசுறது நல்லாவா இருக்கு? இன்னொருத்தர் வேணும்?'
'ஆமா. கல்யாணத்துக்கு நாள் குறிக்கவாவே போறியோ, மூணு பேரு நாலு பேருன்னுட்டு. சும்மா போங்கெ' என்று கசமுத்து சொன்னதும் சரி என்று அவர்கள் கிளம்பினார்கள். இவர்கள் வருவது அவர்களுக்கு முதலிலேயே தெரிந்திருந்தது.
ராசுவை 'வாரும்' என்றான் பல்லி முருகன். 'கொடைய முடிச்சாச்சா?' என்ற வன், பிறகு 'சொல்லுங்க' என்றான்.
'என்னத்த சொல்ல, ஒங்க முடிவு என்ன?'
'யப்பா, நா சொன்னது சொன்னதுதாம். எனக்கு அவ்வோளோட ஒட்டிக் கிட்டு சாமி கும்பிட முடியாது. பூதத்தாரை நாங்க தனியா பூடம் போட்டுக்கிட போறோம். இதனால ஊரை விட்டு ஒதுக்கி வச்சாலும் பரவாயில்லை. இது தாம் முடிவு'
'செரி. ஒங்க இஷ்டம். வாரோம்' என்று வேறு எதுவும் பேசாமல் திரும் பினார் கள். போனவர்கள் இவ்வளவு வேகமாக, திரும்புவார்கள் என யாரும் நினைக்க வில்லை. டீ சொல்லப்பட்டது.
பல்லிமுருகன், சொம்பு தங்கம் வகையறாக்களின் முடிவை பேசினா ர்கள். ஊரை விட்டு ஒதுக்க முடிவு செய்தார்கள்.
'அதெல்லாம் வேண்டாம். அவனுவ சும்மாவே எல்லார்ட்டயும் க்ளுக்குன்னு பேசிருவானுவோ. நம்ம கோயிலுக்கும் அவனுவளுக்கும் சம்மந்தமில்லைன் னு வச்சுக்கிடுவம். ஆனா, இதுபத்தி எழுதி வாங்கிக்கிரணும். பின் காலத்துல கோயில் சொத்துல பங்கு கொடுன்னு கேட்டா, வில்லங்கமாயி போவும்' என்றார் கசமுத்து. அது சரியெனப்பட்டது. ஆனால் பல்லிமுருகன் வகைய றாக்கள் எழுதி கொடுக்க மறுத்தார்கள். பிறகு ஊர் பஞ்சாயத்து தலை வர் முன்னிலையில் விவகாரம் பேசப் பட்டது.
'கோயில் வேண்டாம்னு சொல்லுதவன் அதை எழுதி கொடுக்கதுல என் னடெ தப்பு? வேற ஏதும் நோக்கம் இருக்கா ஒங்களுக்கு?' என்று தலை வர் கேட்டார்.
'எங்களுக்கு ஒரு நோக்கமும் இல்ல. பத்திரத்தக் கொடுங்க. கையெ ழுத்து போட்டுருதம்'என்று தலைவர் முன்னிலையில் சொன்னதையடுத்து பத்திரங் கள் விற்கும் விநாயகத்திடம் கொடுத்து எழுதி வாங்கப்பட்டது. அதில் கசமுத்து வும் பல்லி முருகனும் கையெழுத்துப் போட்டார்கள். ராசுவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
(தொடரும்)
1 comment:
கதை ரொம்ப பெரிசா இருக்கே!
மலர்
Post a Comment