சாமக்கொடையில் வழக்கத்துக்கு மாறாக நிறைய கூட்டம். விருந்தா ளிகளைத் தாண்டி வேறு தெருக்காரர்களும் கூடியிருந்தார்கள். அவர்களின் பேச்சும் சத்தமும் கோயிலில் அடிக்கப்படும் கொட்டுச் சத்தத்துக்குள் முங்கிப் போயிருந்தன. இளம் பெண்கள் பூக்களாலும் பவுடர் பூச்சுகளாலும் தங்களை இன்னும் அழகாக்கி வந்திருந்தனர். அவர்களின் பக்கமிருந்து ஈர்க்கும் வா சனை வந்துகொண்டிருந்தது. சுக்குவின் பொண்டாட்டி, கேரளாவில் வேலை பார்க்கும் அவர் மகனுக்கு, கூட்டத்தில் சிவப்புத் தோளாகத் தெரிந்த ஒருத்தி யை பேசிவிடலாமென நினைத்து விசாரித்துக் கொண்டிருந்தாள்.
'சாமியாம் சாமி' என்று கேலி பேசி அலையும் டிப்டாப், கோயிலின் உள்ளே பெண்கள் நிற்கும் இடத்துக்கு அருகில் ஒரு ஓரத்தில் நின்றிருந்தான். அவன் காரணமில்லாமல் இங்கு வரமாட்டான் என்று நினைத்தான் முப்பிடாதி. அவனுடன் பக்கத்து வீட்டுக்காரச் சிறுவனும் நின்றிருந்தான். அவர்கள் அந்தப் பெண்களில் யாரையோ நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர்.
பூதத்தார், ஒரு போர் வீரனைப் போல அலங்கரிக்கப்பட்டிருந்தார். ஜிகினா தாள்கள் ஒட்டப்பட்ட பந்தல் அலங்காரத்தில் சீரியல் பல்புகள் மின்ன, உள்ளே வீரத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தார் அவர். எதிரில் நின்று பார்த்தால் பூதத்தார், சப்பரத்துக்குள் இருப்பது மாதிரி தெரிந்தார். அவரது மீசையும் வீச்ச ரிவாளும் பயங்கரமாக இருந்தது. யாரையோ பலிவாங்கிவிடத் துடிக்கும் ஆவேசத்துடன் அந்தப் பார்வை இருந்தது. அவரைப் போலவே மற்ற சாமிக ளும் அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள்.
பேருந்து நிறுத்தத்துக்கு கீழ்ப்பக்கம் இருக்கும் சுடலைமாடன் கோயிலில், சாமக்கொடை என்றால் இப்படி இருக்காது. அது பயங்கரத்தின் உச்சமாக இருக்கும். பசுங்கிளி அண்ணனின் அப்பா கோபால் தேவர்தான் சுடலைக்கு ஆடுவார். சுடலைக்காக அவர் அணியும், சிறு சிறு கண்ணாடிகள் பதிக்கப்பட்ட அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய டவுசரும் தொப்பியுமே அச்சம் தரு வதாக இருக்கும். அரிவாளைக் கையில் வைத்துக்கொண்டு நாக்கைத் துறுத் தியபடி அவர் ஆவேசமாக ஆடும்போது யாரும் அருகே போக மாட்டார்கள். மொத்தக் கூட்டமும் சத்தமின்றி நிற்கும். கோயிலில் அவர் போடும் சத்தமும் ஆட்டமும் மேலத் தெரு வரை கேட்கும்.
சாமக்கொடை அன்று ஒற்றைக்கொட்டு முழங்க, சுடுகாட்டுக்கு வேட் டைக்குச் செல்வார். ஆற்றின் ஓரமாக இருக்கிறது சுடுகாடு. ஒத்தக் கொட்டுக் காரன் சாலையில் இருந்து சுடுகாட்டுக்கு இறங்கும் மண் சாலையில் நின்று கொள்வான். அங்கிருந்து சுடுகாட்டுக்குச் செல்லும் அவர், பிணமே எரியா விட்டாலும் எலும்புத் துண்டைக் கடித்துக் கொண்டு வருவார். அவர் சாலைக்கு வந்ததும் ஒத்தக் கொட்டு மீண்டும் முழங்கும். கொட்டுச் சத்தம் ஆற்றின் கரையில் கேட்காமல் இருந்து திரும்பவும் கேட்கும்போதே கோயிலில் பரபரப் பாகி விடுவார்கள். 'சாமி கெளம்பியாச்சி' என்று தகவல்கள் பறக்கும். அவர் வரும் வழியில் யாரும் குறுக்கே போய் விடக் கூடாது என்று ஓடி ஓடிப் போய் பார்த்து வருவார்கள். யாராவது வந்தால் அவர்களை விலக்க, கோயிலுக்கு வெளியே இரண்டு பேர் ஓரமாக நின்றுகொள்வார்கள்.
கோயிலுக்கு வந்ததும் கொட்டுக்காரர்கள் நான்கைந்து பேர் மேளத்தை ஆரம் பிப்பார்கள். சாமி, சுடலை சிலையைப் பார்த்து திரும்பவும் ஆடுவார். சிலையைப் பார்த்து சிரிப்பார். பேசுவார்.
முடிந்ததும் அங்கு கட்டி வைக்கப்பட்டிருக்கும் பரணைப் பார்ப்பார். அதில் வெள்ளாடு ஒன்றை மல்லாக்கக் கட்டி வைத்திருப்பார்கள். கோபால் தேவர், சாமி சிலையைப் பார்த்துப் பேசிவிட்டு பரணில் ஏறுவார். அவர் கையில், கொடைக்காகத் தீட்டப்பட்டிருக்கிற கத்தி இருக்கும். ஏறி நின்று சிலையைப் பார்ப்பார். பிறகு ஆட்டின் வயிறைக் கத்தியால் ஒரே இழு. வயிற்றில் பொங் கும் ரத்தத்துக்குள் கதலிப்பழங்களைப் போடுவார். அப்படியே பிசைந்து ரத்தத் தோடு தின்பார் அவர். இவர் வாயில் இருந்தும் கையில் இருந்தும் வடியும் ரத்தத்தோடு அவரைப் பார்க்கும்போது ஈரக்குலை நடுங்கும். கோயிலில் ஒரு ஈ, காக்கா சத்தம் இருக்காது.
அப்போது, சின்னப்பிள்ளைகளை அவரைப் பார்க்கவிடாமல் பெரியவர்கள் செய்வார்கள். சிறுவர்களின் கண்களைப் பொத்திவிடுவார்கள். வேட்டை முடிந் ததும் கைகளைக் கழுவுவார். பின் பக்தர்களுக்குத் திருநீறு பூசிவிடுவார். அப்போது சிலருக்கு அவர் குறியும் சொல்லுவார். அந்த குறி சொல் பலிக்கும் என்பதால் நிறைய பேர் அவர் முன் நிற்பார்கள்.
பூதத்தார் கோயிலில் அப்படி பரண் ஏதுமில்லை. கெடா வெட்டு மட்டும், பூதத் தாருக்கு இல்லை என்றாலும் மற்ற சாமிகளுக்காக நடக்கிறது.
ஆறுமுகமத்தையின் குலக்கோயில் சாலை ஓரத்தில் இருக்கிறது. அது இசக்கி அம்மன் என்று அத்தை சொல்லியிருக்கிறாள்.ஊரில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் இருக்கிறது காக்கநல்லூர் விலக்கு. அதற்கு முன் இடதுபக்கம் கருவை முள்ளின் கீழே ஒரு கல். எண்ணெய்ப் பூசப்பட்ட அந்தக் கல்லில் சிவப்பு பட்டுத் துணி கட்டப்பட்டிருக்கும். அதற்கு அடுத்து தோப்பு வேலி. சாலையில் பேரூந்து சென்று வந்துகொண்டிருக்கும்.
ஆறுமுகம் அத்தையும் சொந்தக்காரர்களும் அங்கு கொடை கொடுப்பார்கள். சின்னதாகப் பந்தல். ஒரு வண்டி ஆற்று மணல் அடிப்பார்கள். ஆட்கள் உட்காருவதற்கு நிழல் மூடியிருக்கும். போதும். அங்கு சாமக் கொடை என்று ஏதுமில்லை. கொடை நாளான செவ்வாய்க்கிழமை இரவு அத்தைக்கு சாமி வரும். அந்த பெரிய உடலை வைத்துக்கொண்டு அவளால் ஆட முடியாது. அவள் சாமி பூடத்துக்கு முன் உட்கார்ந்து கொண்டு தலையை விரித்துப் போட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஆட்டுவாள். அப்போது கண்ணைப் பொத் திக் கொள்வாள். அதோடு முடிந்துவிடும் ஆட்டம். காலையிலேயே பொங்கல் வைத்து சாப்பிட்டிருப்போம். இங்கு கெடாவோ, ஆடோ வெட்டப்படுவதில் லை. ஆனால் அழகத்தையின் ஊரில் இசக்கி அம்மனுக்கு அவர்கள் குடும்பத் தில் கெடா வெட்டுவார்கள். அந்தக் கோயில் களக்காடு போகும் வழியில் இருக் கிறது. ஒரே இசக்கி, எப்படி சைவமாகவும் அசைவமாகவும் இருக்கிறாள் என்பது தெரியவில்லை.
ஊரில் இருக்கிற முத்தாரம்மன் கோவிலிலும் வடக்குவா செல்வி அம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை இரவு கெடா வெட்டு உண்டு. இந்தக் கெடா வெட்டுகள் சத்தமின்று பொட்டென்று முடிந்துவிடும். அதிகப்பட்சம் நான்கைந் து ஆடுகள்தான்.
பூதத்தார் கோயிலில் அப்படி இல்லை. அதிகப்பட்சம் பன்னிரெண்டு, பதிநான்கு என்று போகும். ஒற்றைப்படை எண்ணில் வெட்டக்கூடாது என்று இரண்டைப் படையில் வெட்டுவார்கள். ராத்திரி வெட்டிக் கறி அறுத்து அதைப் பங்கு வைத்து நண்பர்கள், மற்ற பட்றை ஆட்களின் வீடுகளுக்கு கறி அன்பளிப்புப் பார்சலில் போகும். அவர்களின் கோயில் கொடைக்கு இவர்களுக்கு கொடுத் திருப்பதால் பதில் கணக்கு இது. அதாவது முறை கறி.
செவ்வாய்க்கிழமை சாமைக்கொடை முடிந்த புதன்கிழமை தெருப் பூராவும் கறி வாசனைத் தூக்கும். கறி வாசனைக்கு தெருவெங்கும் சண்டையிட்டபடி நாக்கைத் தொங்கப் போட்டு அலையும் நாய்கள் வழக்கத்துக்கு அதிகமாக இருக்கும். மத்தியானச் சாப்பாட்டின்போது, தெருவில் யாராவது கண்ணில் பட் டால், 'ஏண்ண இங்க வா, ரெண்டு வாய் தின்னுட்டு போ' என்று ஆளாளுக்கு இழுப்பார்கள். அந்த நேரத்தில் எங்கிருந்துதான் உறவு முறை பாசம் பொங்குமோ தெரியாது. அப்படியொரு பாசத்தை அள்ளித் தெளிப்பார்கள். மற்ற சாதிக்காரர்களிடமும் உறவு முறை சொல்லி கழுத்தைக் கட்டிக் கொள்வார் கள். கிட்டத்தட்ட எல்லா வீடுகளில் கொடைச் சோறுதான். இதையடுத்து இருக் கிறது படைப்புச் சோறு.
விக்கிரமசிங்கப்புரத்தில் இருந்து கறிச்சோறுக்கு இதமாக, மத்தியானமே பிராந்தி வாங்கி வந்திருப்பார்கள் பாட்டில் பாட்டிலாக. ஏதாவது ஒரு வைக்கப் படைப்பு அல்லது தொழுவு ஓரத்தில் கூடி அமர்ந்து கொள்வார்கள் குடிக்க. பக்கத்துத் தெரு, மேலத் தெரு, கீழத்தெரு நண்பர்கள், மச்சினன்மார்கள், உடன் வேலைப் பார்ப்பவர்கள் என எல்லாரும் குடியில் மகிழ்வார்கள். குடிக்குத் தொட்டுக்கொள்ள ஆட்டுப் புடுக்கும், அதிக ஈராய்ங்கம் போட்டு வதக்கிய ஆட்டுக் குடலும் வந்திருக்கும். ஒரு கிளாஸ் குடி குடித்துவிட்டு அதிக காரம் கொண்ட குடல்கறியை அள்ளி வாயில் திணித்தால் எரிப்பும் போதையும் ஜிவ்வென்று மூளைக்குள் ஏறி வியர்க்கும். அப்படியே முந்தைய கொடையில் நடந்ததையோ அல்லது வேறு ஊரில் சொந்தக்காரர்கள் நடத்திய கொடையில் நடந்த விஷயங்களையோ பேசிக்கொண்டிருப்பார்கள். இந்த குடி விவகாரம் சத்தமில்லாமல் பத்து இருபது நிமிடத்தில் முடிந்து விடும். மெதுவாகக் குடிப்பதெல்லாம் இல்லை. ஒவ்வொரு கிளாசையும் ஜிவ்வென்று இழுத்தால் போதை குப்பென உடனே ஏறும். அப்படியே போய் இலையில் உட்கார்ந்தால் கொதிக்க கொதிக்க சோறும் குழம்பும் கறியும் அள்ள அள்ள இறங்கும். எவ்வள வு சாப்பிட்டோம், என்ன சாப்பிடோம் என்பது போதையில் தெரியாது. பிறகு தெருவில் போய், பழைய பகைக்கு எவனிடமாவது வம்பு இழுப்பது அல்லது ஆலமரத்திண்டில் போய் அப்படியே மல்லாந்து கிடப்பது என நடக்கும்.
சாமக்கொடை முடிந்ததும் கொட்டுக்காரர்கள், தாங்கள் தங்கி இருக்கும் இடத் துக்குத் திரும்பினார்கள். நேர்ந்து விட்டப்பட்டிருக்கிற ஆடுகள் வெட்டுவதற்கு கோயில் ஓரத்தில் கட்டப்பட்டிருந்தன. இன்னும் சிறிது நேரத்தில் உயிர் விடப் போகிற, பூமாலை சுற்றப்பட்ட கழுத்துகளுடன் அழகு காட்டும் ஆடுகள் குலை களைத் தின்று கொண்டிருந்தன. முப்பிடாதி வீட்டு ஆடும் அதில் ஒன்று.
கெடா வெட்ட மூன்று பேர் ரெடியாக இருந்தார்கள். வெட்டப்படும் இடத்துக்கு கொஞ்சம் தள்ளி பெண்கள் நின்றுகொண்டார்கள். எந்த சாமிக்கு வேண்டுத லோ அந்த சாமி பூடத்தின் முன் கெடா வெட்டப் பட்டது. முப்பிடாதியின் வெட்டப்பட்ட ஆட்டை அவனது கணேச மாமா வாங்கிக் கொண்டார்.
கெடா வெட்டு முடிந்ததும் படைப்புச் சோறுக்கான வேலையை ஆரம்பிக்க வேண்டும். பெண்கள் நிற்கும் பகுதிதான் படைப்புச் சோறு ஆக்குவதற்கான இடம். கெடா வெட்டு நடக்கும்போதே சாமிக் கொண்டாடியிடம் திருநீறு பூசிவிட்டு கொஞ்சம் கொஞ்சபேராக வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். பெண்கள் நின்ற இடத்தில் ஓரமாகக் கிடந்த அடுப்புக்கற்களை எடுத்து வைத் தார்கள்.
டிப்டாப் முகம் உம்மென்று இருந்தது. எப்போதும் ஜாலியாக இருக்கும் அவன் சில நாட்களாக வேறு மாதிரி இருக்கிறான். ஏதோ கவலைக்குள் விழுந்து விட்டவன் போல மாறியிருந்தான். எப்போதும் அவனிடம் இருக்கும் கிண்டல் இப்போது இல்லை. முத்தையா அடித்ததில் இருந்துதான் இப்படி ஆகிவிட்டான் என சிலர் பேசிக் கொண்டார்கள். அதற்காக அவரை இவன் ஏதும் செய்துவிடு வான் என்றும் சொல்லிக் கொண்டார்கள்.
கோயிலின் ஓரத்தில் எதையா பறிகொடுத்தவனைப் போல நின்ற டிட்பாப்பின் முன் முப்பிடாதி போய் நின்றான். இவனைப் பார்த்ததும் சிரித்தான் டிப்டாப்.
'ஏம் உம்முனு இருக்கெ?'
'சும்மாதான்'
'ஒருநாளும் இல்லாத திருநாளா கோயிலுக்குள்ள வந்திருக்கெ?'
'வரக்கூடாதாடெ'
'யார் வேண்டாம்னா? நீ என்னக்கு வந்திருக்கெ. அதாம் கேட்டென்'
'மனசே சரியில்ல பாத்துக்க'
'அதாம் மூஞ்ச பாத்தாலே தெரியுத'
'ரூவா வெவாரம் இவ்ளவு சிக்கல்ல கொண்டு வரும்னு நினைக்கல'
'முத்தையா அடிச்சத சொல்லுதியோ?'
'அது ஒரு விஷயம் இல்லடெ. அவரை திருப்பி மிதிச்சா யாருக்கு எழப்பு?'
'பெறவு?'
'தேவையில்லாம ஒருத்தருக்கு அவரசத்துக்கு வாங்கி கொடுத்த ரூவா. திருப்தித் தரல. நா சிக்கிக்கிட்டென்'
'எவ்வளவு?'
'அறுவதாயிரம்'
'ஏ..யம்மா, இவ்வளவு ரூவாய யாருக்கு வாங்கிக்கொடுத்தெ?'
முப்பிடாதி இப்படி கேட்டதும் சுதாரித்துக்கொண்டான் டிப்டாப். அவசரப்பட்டு வாயை விட்டுவிடக்கூடாது என நினைத்தான்.
'அதெ விடு'
'என்ன மயித்த விடணும். நீ எவளுக்கு வாங்கிக்கொடுத்தன்னு தெரியும். காலெல அவா வீட்டுக்கு போயிருமா?
'ச்சீ. ஒங்கிட்டதான் உண்மைய சொல்லுதென். நீ காட்டிக் கொடுத்திராதடே எல்லார்ட்டயும்'
'இல்லனாலும் தெரியாதுலா, யாருக்கும்?'
'என்ன தெரியுங்கெ?'
'முத்தையா ஒன்ன அடிச்ச அன்னைக்கே கோயில்ல, நீ எவளுக்கோதான் வாங்கிக்கொடுத்திருப்பென்னு பேசிக்கிட்டாவோ. அப்பவே விஷயம் தெரிஞ்சு போச்சு'
'யாருன்னு சொல்லுதாவோ?'
'கட்டமுண்டு மைனிக்குத்தானெ'
'....'
(தொடரும்)
4 comments:
பூதத்தார் சைவம் என்கிறீர்கள்..ஆனால் மலை நம்பி கோவில் சங்கிலி பூதத்தார் சன்னதியில் சனிக்கு அடுத்த ஞாயிறன்று கிடா வெட்டுகிறார்களே.... சாஸ்தா மாதிரி அவரும் சைவம் என்பது ஒரு புது தகவல்...
சுடல மாடன் படப்பு சோறு பற்றி நீங்க எழுதனும்..
அது வீட்டில் வைக்கிற மாதிரி கறி குழம்பு கிடையாது.. ஸ்பெசலா செய்வார்கள்...
ஐயா அனானி நீங்க உங்க பேரை சொல்லலாமே?
பூதத்தார், சொரிமுத்தைய்யனார் கோயிலில் இருந்து வந்த வகையறா என்றால் சைவம். அங்கிருந்து வராத சாமி என்றால் அசைவம்.மேலதிக தகவல்களைக் கேட்டுச் சொல்கிறேன்.
சுடலை மாடன் படப்புச் சோறு பற்றி அடுத்த வாய்ப்பில் எழுதுகிறேன்.
நன்றி அண்ணாச்சி.
அந்த ஸ்பெசலை அடுத்த பதிவில் சொல்லுங்க...
மலர்
Post a Comment