Thursday, October 9, 2014

அம்மா இல்லாத ஊர்

ஊரைப் பற்றி எழுதும்போதும் ஊருக்குப் போகும்போதும் அப்படியொரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும் எப்போதும்.  பிழைப்புக்காக பெருநகரம் வந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும்  நினைப்பதும் நிற்பதும் ஊராகவே இருக்கிறது நெஞ்சில்.

ஒவ்வொரு முறை ஊரில் இறங்கி வீட்டுக்குள் கால் வைக்கும்போதும், வாசல் திண்ணையில் காத்திருந்து, 'ஏல, ஏம் இப்டி கரைஞ்சு போயிருக்கெ. ஒழுங்கா திங்க மாட்டியோ' என்று அன்போடு விசாரிக்கிற அம்மாவின் வார்த்தைகளில்- அது பொய் என்றாலும்- இருக்கிற உயிர், பெருநகரம் திரும்பிய போதும் மனதோடு அலைபாய்ந்துகொண்டிருக்கும் அடுத்த சந்திப்பு வரை.

எனக்குப் பிடிக்கும் என்பதற்காக, தேடி பிடித்து சிறுகிழங்கு வாங்கி குழம்பு வைப்பதிலும் சீசன் இல்லையென்றாலும் பலாக்காயை அலைந்து வாங்கி பொரியல் வைப்பதிலும் அம்மாவுக்கு அவ்வளவு ஆனந்தம்!

'பொட்டலுபுதூர் வரை போயிட்டேன், பலாக்காயும் கெடைக்கல. சிறு கிழங்கும் கெடைக்கல. வேற என்னத்த வைக்க?' என்று தொலைபேசியில் ஒரு முறை கேட்க, 'நீ என்னத்த வச்சாலும் நல்லாதாம்லா இருக்கும்' என்று சொல்லி ப்பார்த்தும், விடாமல், யாரிடமோ சொல்லி எங்கோ ஒரு சந்தையில் இருந்து பலாக்காய் வாங்கிவந்து சமையல் செய்த அம்மாவின் அன்புக்கு ஏதும் செய்ததில்லை நான்.

சிறு வயதில், வீட்டின் வாசலில் வளர்ந்திருக்கும் முருங்கை மரம் எனக்கும் அக்காவுக்கும் தோழனாகவே இருந்திருக்கிறது. எப்போதோ மட்டும் பூக்கிற வெண்ணிற முருங்கைப்பூக்களுக்காக என் மனம் எப்போதும் அடித்து க்கொள்ளும். அந்தப் பூக்களில் செய்கிற பொரியல் எனக்குப் பிடித்தமானது. அதற்காகவே என்னைப் போலவே ஏக்கங்கொண்டு, 'சீக்கிரம் பூவை பூத்து வை முருங்கெ. உன்னைய அதுக்குத்தாம் வீட்டு வாசல்ல வச்சிருக்கென். கேட்டுக்கோ' என்று மரத்தோடு பேசுகிற அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு மரத்தின் உச்சியை பார்த்துக்கொண்டிருப்பேன். ஓரு காலையில் வாசல் தெளிக்க எழுந்த அம்மா, விழுந்துகிடந்த முருங்கைப்பூக்களை அள்ளி,  சட்டியில் வைத்ததும் ஏதோ ஞாபகம் வந்தவனாய் நானும் எழுந்து அப்பூக்க ளை அள்ளியதும் அவை பொரியல் ஆகும்வரை அம்மாவின் பின்னாலேயே அலைந்ததும் மனதுள் சம்மணமிட்டிருக்கிறது. அந்த முருங்கை மரம் வெட்டுண்டு வீழ்ந்தபோது அம்மாவுக்கு வந்த சோகம் நான் மட்டுமே அறிந்தது. முருங்கையற்ற வீடாக மாறிப்போனதில் இருந்து, முகமற்றவளாகவே உணர்ந்தாள் அம்மா.

முன்பெல்லாம், நினைத்தால் ஊருக்கு ஓடிவிடுகிற மனம் திருமணத்துக்குப் பிறகு மாறிவிட்டது. உறவினர்கள் வீட்டு விசேஷம், கோயில் கொடை என சுருங்கிவிட்டது ஊர் விசிட். இருந்தாலும் அம்மாவிடம் பேசிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். ஊர் விஷயங்கள் பற்றி. பக்கத்து வீட்டு கல்யாணம் பற்றி, இறந்து போனவர்கள் பற்றி, காதல் திருமணம் செய்துகொண்ட நண்பர்கள் பற்றி, தோழிகள், தோழர்கள் வீட்டு சிறப்புகள் பற்றி, நடக்கும் சண்டை சச்சரவு பற்றி, வெட்டுக் குத்து கொலைபற்றி... இப்படி ஏதாவது ஒன்று பேசுவதற்கு கிடைத்துவிடும்.

சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் இப்படிக் கேட்டாள்:

 'ஏல, நீ இன்னுமா பீடி குடிச்சிட்டிருக்கே?'

'ச்சீ. அதெ எவன் குடிப்பாம்' என்று பொய் சொன்னேன்.

'மேலத் தெருவுல நம்ம வன்னியநம்பி மவனுக்கு,  பீடி ஓயாம குடிச்சு குடிச்சு நெஞ்சுவலி வந்துட்டு. திருவனந்தபுரத்துக்கு கூட்டுட்டு போயி ஆபரேசன் பண்ணியிருக்காவுளாம். ரெண்டு, மூணு லெச்சம் செலவாம். நமக்கு ஒண்ணுன்னா, அவ்வளவு ரூவாய்க்கு எங்க போவ? ஒடம்பு முக்கியம்யா. சனியன விட்டுரு'

'நான் பீடி குடிக்கமாட்டனெ'

-பிளஸ் டூ படிக்கும்போது இலக்கியம் பேசும் கம்யூனிஸ்ட் சித்தப்பாவின் ஆளுமைக்குள் இழுக்கப்பட்டு அவரைப் போலவே சிகரெட் பிடிக்க ஆயத்தமானேன். ஆற்றுக்குப் போகும் வழியில் இருக்கிற கணபதி மூப்பனார் கடையில், சிசர்ஸ் சிகரெட் வாங்கி,  தீப்பற்ற வைக்கும்போது, வயலில் இருந்து வந்த அம்மா பார்த்துவிட்டாள்.

'ஏ பேதில போவாம். இத்தாந்தண்டி சீரெட்டை கொண்டி வாயில வைக்கியே. நீ உருப்புடுவியால' என்று கன்னத்தில் அறைந்த அறையில் ஓடிவிட்டேன் நான். சில நாட்கள் என்னுடன் அவள் பேசவில்லை.

பிறகு, சித்திரை விசு அன்று நண்பர்களுடன் ஆழ்வார்க்குறிச்சிக்குத் தேர் பார்க்கக் கிளம்பிக்கொண்டிருந்தேன். நண்பன் முத்துசாமியிடம், 'எய்யா. பெரிய பெரிய சீரெட்டாம் குடிக்காம்யா அவென். நீயாவது சொல்லு, இங்க பாரு நா சுத்துன பீடி இதுவோ. காய்ஞ்சு போனது. இதெ குடிக்கச் சொல்லு. அதை விட்ற சொல்லுய்யா' என்று கெஞ்சிய போதெல்லாம் அவளின் அக்கறை பற்றி தெரியவில்லை.

 நன்கு விடிந்திராத ஒரு மார்கழி மாத காலையில், திண்ணையில் படுத்திருந்த என் அருகில் அமர்ந்துகொண்டு, 'ஆத்தா, போயிரு ஆத்தா' என்று அம்மா மெதுவாகக் கெஞ்சிக் கொண்டிருந்ததைக் கேட்டு கண் விழித்தேன். போர்வை யால் தலை முதல் கால்வரை  மூடியிருந்தேன். சுவரோடு சாய்ந்திருந்த என் இடது பக்க உடல் பகுதியில் மட்டும் திடீர் குளிர்ச்சி. எனக்குத் அதிர்ச்சியாக இருந்தது. குளிராக ஏதோ ஊர்ந்துகொண்டிருப்பதை அறிந்தும் அம்மா சொல்வதையும் ஒப்பிட்டு மனம் பயத்தில் அடித்துக்கொண்டது. விருட்டென எழுந்து அதைத் தூக்கி வீசிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில் அது என் மீதிருந்து நகன்று தரைநோக்கி சென்றுகொண்டிருந்தது. அன்றிலிருந்து எப்போதும் திண்ணையில் படுக்க அனுமதித்ததில்லை அவள்.

'ஒனக்கு ஏதோ கண்டம் இருந்திருக்கு. அதான் ஆத்தா வந்து சரிபண்னிட்டு போயிருக்கா' என்று விளக்கம் சொன்னாள் அவள். மந்திரமூர்த்தி கோயிலில் பிரம்மராட்சதை சாமிக்கு ஆடுகிறவள் அம்மா. அவளின் சாமிக்கும் எனக்கும் அடிக்கடிச் சண்டை வந்திருக்கிறது.

'சாமியெ எடுத்தெறிஞ்சு பேசாதல' என்பாள் அம்மா.

'சாமிய எங்கெ பேசுதென். ஒன்னயதானெ பேசுதேன். நீ என்ன சாமியா?'
என்பேன். அவள் என்ன பதில் சொல்வதென்று குழம்புவாள். அம்மாவாக மட்டுமே பார்த்த அவளை, இப்போது சாமியாக பார்க்கிறார்கள் என் மகன்கள்.

கை, கால் வலிக்காக நெல்லையில் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டி ருந்தாள் அவள். பிறகு திங்கள் சந்தை அருகே உள்ள மருத்துமனையில் சேர்ந்திருந்தாள். அவர்கள் கொடுத்த பிசியோதரபி மற்றும் சில எக்ஸர்சைஸ் களால் உடல் தேறியிருந்தாள்.

'எனக்கு இப்பம் ஒண்ணுமில்ல. நல்லா நடக்கேன். வா வீட்டுக்குப் போயிட்டு வருவோம்' என்றாள். அக்காவுடன் அழைத்துச் சென்றேன். வீட் டில் இருந்த பணத்தை எடுத்து கொடுத்து, 'செலவுக்கு வச்சுக்கோ' என்றாள். 'வேண்டாம்' என்றேன்.

'ஒனக்குத்தாண்டே இதை வச்சிருக்கேன்' என்றவள், 'நம்ம குல தெய்வ கோயிலுக்கு போயிட்டு வருவம்' என்றதும் மறுப்பேதும் சொல்லவில்லை.

குல தெய்வ கோயில் என்பதை அன்றுதான் நானே பார்க்கப் போகிறேன். அப்படியொரு கோயில் எங்கிருக்கிறது என்பதை யாரும் சொன்னதில்லை. அவளே காபி போட்டுக் கொடுத்தாள். குடித்துவிட்டு சேரன்மகாதேவி வரை ரயில் பயணம். அங்கிருந்து ஆட்டோவில் களக்காடு போகும் வழியில் இருக்கிற பிளவுக்கல் இசக்கியம்மன் கோயில். உள்ளே சென்று சாமிக்கும்பிட்டாள். அங்கேயே சாப்பிட்டுவிட்டு திரும்பினோம்.

'எனக்கு நல்லாயிட்டுல. கை காலு நல்லாதாம் இருக்கு. நீ ஆபிஸூ போணும் லா, போ. அக்கா பாத்துக்கிடுவா, கேட்டியா, ஒண்ணுங்கவலப்படாதல' என்று சொல்லிவிட்டு திருநீறு பூசிவிட்டாள். பெருநகரம் வந்த மறுநாள் அக்காவின் தொலைபேசி அந்தத் தகவலை பெரும் வலியோடு சொல்லிற்று.

ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. கடந்த வாரம் ஊருக்குச் சென்றிருந்தேன். அம்மா இல்லாத ஊர். அம்மா வசித்த வீடு அவளின்றி இருக்கிறது. வழக்கமாக வந்தமரும் குதூகலமும் உற்சாகமும் இப்போது இல்லை. வாசல் திண்ணையில் காத்திருந்து, 'ஏல, ஏம் இப்டி கரைஞ்சு போயிருக்கெ. ஒழுங்கா திங்க மாட்டியோ' என்று அன்போடு விசாரிக்கிற அவளின் வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தேன். இரண்டு காக்கைகள் வீட்டின் வெளியே இருக்கிற மின் கம்பியில் வந்தமர்ந்து கரைகின்றன. வீட்டுக்குள் நுழைகிறேன். அவளின் புகைப்படம் சிரித்தபடி வரவேற்கிறது. என்னால் மட்டும் சிரிக்கவே முடியவி ல்லை.

அம்மாவாக இருப்பதும் அம்மாவாக வாழ்வதும் அம்மாக்களால் மட்டுமே முடியும்.

5 comments:

sathishsangkavi.blogspot.com said...

அம்மா இந்த வார்த்தைக்கு ஈடு இனை எதுவுமே இல்லை

Anonymous said...

சோகம் ..வலி ..
வாழ்வை பற்றி நினைக்க ஏன் இந்த உலகில் வந்து பிறந்தோம் என்று இருக்கிறது ..
அதிலும் தாய்க்கு செய்ய வேண்டிய பல உதவிகளை செய்ய முடியாவிட்டால் மனதின் வேதனை ...

thamirabarani said...

ஆத்தா உன் சேல அந்த ஆகாயத்தை போல தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட பார்த்தாலே சேர்த்தணைக்க தோணும் நான் செத்தாலும் என்ன பொத்த வேணும்.....”
என்ற ஏகாதசியின் ஈரமான வரிகள் மனதில் எதிரொலித்துகிடந்தது அண்ணாச்சி...வெது வெதுப்பான கண்ணீர் துளிகளை ஸ்பரிச்சிக்க செய்த உணர்வு...வாசிக்கும்போது...

துபாய் ராஜா said...

"அம்மாவாக இருப்பதும் அம்மாவாக வாழ்வதும் அம்மாக்களால் மட்டுமே முடியும்".

ram said...

வணக்கம் அண்ணன் திரு எக்னாத் ராஜ் அவர்களுக்கு..
நான் ஏற்கனவே உங்களது கிடைகாடு நாவலை படித்திருக்கிறேன் நன்றாக இருந்தது. அப்போதே அதுப்பற்றி எழுதலாம் என்று நினைத்தேன் முடியவில்லை. இப்போது யாதர்த்தமாக உங்களது வலைப்பதிவை பார்த்தேன். உங்களது இந்த பதிவும் நன்றாக இருக்கிறது....