Monday, May 12, 2014

ஜெமோ: கதைக்குள் வாழும் கலை


எழுத்து பொதுவானது. அது தூரத்தில் கிடக்கும் ஒரு குச்சியைப் போன்றது. அல்லது ஒரு கல்லைப் போன்றது. அதை யாரும் எடுக்கலாம். எடுக்கமாலும் போகலாம். அதை சகதி என்று எடுத்துக்கொண்டால் அதைக் குழைத்து வண்ணமாக்குவதும் பொதுவானதுதான். அது யாராலும் முடியக்கூடியதுதான். ஆனால் அந்த வண்ணங்களின் வழி விரிகிற ஓவியங்களில், உயிரைக் காணுதல் சாத்தியமல்ல. வண்ணங்களும் தூரிகையும் ஒன்றென்றாலும் எல்லா கைகளும் அப்படியொரு ஓவியத்தை வரைந்து விடமுடியாது. அது ஆழ்ந்த கலையின் உச்சம். அப்ப டியொரு உச்சத்தை இயல்பாகக் கொண்டிருக்கிறது, ஜெயமோகனின் எழுத்து. அவரது நாவல்களும் கதைகளும் கண்மூடித்தனமாகக் கட்டிப்போடுகிறது மனதை. எங்கும் திசை திரும்பிவிடாதபடி ஒவ்வொரு எழுத்தும் அதன் ஆழத்துக்குள் அப்படியே இழுத்துச் செல்கிறது.

இப்படியொரு கதையை எழுதிவிட மாட்டோமா என்று ஏங்க வைக்கிற மனநிலையை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது அவரின் மாய எழுத்து. அதில் எப்போது விழுந்தேன் என்று தெரியவில்லை. ஆனால் அதைப் பற்றி எழுத வேண்டும் என்கிற ஆவல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.

அவரது அறம் கதைகள், உயிரை நிறுத்தி மீண்டும் உயிர்க்கச் செய்யும் அசாத்திய துணிச்சல் கொண்டவை. சாதாரண அனுபவத்தைத் தாண்டி அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் நம்மோடு ரகசியமாகப் பேசுபவை, நாளையும் நாளை மறுநாளுமாகப் பேசிக்கொண்டே இருப்பவை. தூக்கமற்ற இரவுகளின் தனிமையில் இவர் கதைகளின் கதாபாத்திரங்கள் காற்றின் வழி வந்து பேசிப்போகிறார்கள். ‘அறம்’ கதையில் பெரியவர் எம்.வி.வெங்கட்ராமும் சாமிநாதுவும் என்னருகில் உட்கார்ந்து வெற்றிலைப் போட்டுக் கொண்டோ, அல்லது தொடையில் அடித்துச் சிரித்துக் கொண்டோதான் இருக்கிறார்கள். சில இடங்களில் நினைத்து அழவும் அழுது நினைக்க வைத்தவர்களும் அவர்கள்தான்.

சோற்றுக் கணக்கு எனக்கு நெருக்கமான கதையாக இருக்கிறது. கொஞ்சம் என் வாழ்க்கையைக் கிளறி சென்றதாகவும் இருக்கிறது. மும்பையின் செம்பூர் பகுதியில் சுற்றித் திரிந்த காலங்களில் சோறுபோட்ட உறவினர் கண்முன் வந்து போனார். அந்த கணக்குக்கு இன்று வரை கைமாறு செய்யவில்லை என்றாலும் இப்போது செய்யத் தூண்டிய கதை அது. கூடவே, கெத்தேல் சாகிப் போன்று எனக்கு ஒருவர் அங்கு கிடைத்திருந்தால் என் வாழ்க்கை வேறு மாதிரியாகச் சென்றிருக்கும் என்கிற நினைப்பும் அவ்வப்போது அலைகழித்துக் கொண்டிருக்கிறது. சென்னை மான்சன் வாழ்க்கையில் ஒரு டீ கிடைக்கும் என்பதன் பொருட்டு, இரவு 12 மணிக்கு வரும் நண்பருக்காக நானும் நடிகர் கருணாஸும் கோசலும் காத்திருந்த பட்டினி காலங்களை கிளறி கண்ணீர் வரவைத்த கணக்கு அது.

யானை டாக்டரை இன்னொரு தாயாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. பாபநாசம் திருவள்ளூவர் கல்லூரியில் இளங்கலைப் படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரியை கட்டடித்துவிட்டு அல்லது வகுப்பு இல்லாத நாட்களில் சேர்வலாறிலும் காரையாறு காட்டிலும் நண்பர்களுடன் அலைந்த நாட்கள் ஞாபகத்து வந்து போயின. நாங்கள் குடித்துப் போட்ட அந்த பீர் பாட்டில்கள் குத்தி ஏதாவது யானை செத்திருக்குமோ என்கிற பட படப்பை, பதைபதைப்பை, பெரும் குற்ற உணர்ச்சியை இன்றுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறது இந்தக் கதை. அன்று செய்த அறியா, தவறுக்காக மானசீகமாக யானைகளிட மும் டாக்டர் கே யிடமும் இப்போது மன்னிப்புக் கேட்டுக் கொண் டேன்.

‘எழுதுதான் எழுதாங்காம். என்ன எழவை எழுதாம்னே தெரியலை. கோட்டிக்காரப் பய’ என்கிற வார்த்தைகளை என் காதுபடவே ஊரில் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தக் ‘கோட்டி’ என்கிற வார்த்தையை எனக்கான அங்கீகாரமாகவே எடுத்துக்கொண்டேன். பூமேடையை  நான் அப்படிப் பார்க்க முடியாது. அவரைப் பற்றி மீனாட்சிபுரம் மாமா வாயிலாக சிறு வயதிலேயே கேள்விபட்டிருக்கிறேன். அவர் தியாகி. காந்திதொப்பியும் கதர் சட்டையுமாக அலைகிற அவர் கதையை படித்து முடித்தபோது அவர் மேலான மரியாதை இன்னும் பத்து மடங்கு அதிகமானது.

ஜெமோவின் எல்லா கதைகளும் தொடர்ந்து நெஞ்சோடு சாய்த்து தாலாட்டும் அல்லது தாக்கும் வேலையை செய்துகொண்டே இருக்கிறது.

ஜெயமோகனுக்கு காடு மிகவும் பிடிக்கும் போல. மனதில் ஆழத்தில் எங்கோ உறைந்து கிடக்கிற ஒன்று நம்மை அறியாமலேயே வெளிப்பட்டுக் கொண்டிருப்பது போல, ஜெயமோகனின் கதைகளில் காடு அதிகமாகவே வெளிப்படுகிறது.

‘காடு’ நாவல், யானை டாக்டரின் காடு, ஊமைச் செந்நாயின் காடு, கன்னிநிலத்தின் காடு என காடு விரிந்து கிடக்கிறது ஜெமோவின் மனமெங்கும். இன்னும் சில விடுபட்டிருக்கலாம். நான் கண்ட காட்டுக்கும் ஜெமோவின் காட்டுக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. அவரது காட்டில்தான் மரத்தின் மீது வசிக்கிற அழகிய மலைஜாதிப் பெண் இருக் கிறாள். என காட்டில் நான் மரங்களையும் மலைகளையும் மட்டுமே பார்க்கிறேன். மரத்தின் மீதிருக்கும் தேன்கூடுகளைப் பார்க்கிறேன். அவர் அதைத்தாண்டிச் செல்கிறார். அதைத் தாண்டிப் பார்க்கிறார்.

‘காடு ஒரு குறிப்பேடு. அதன் தாள்களில் அங்கு நடந்தவை அனைத்துமே எழுதப்பட்டுள்ளன. அந்த எழுத்துக்களை கவனிக்கும் கூர்மை நமக்கு வேண்டும். அந்த மொழி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்’ என்கிற அவரின் கன்னி நில காடு விசாலமானது. அப்படி மொழியை அறிந்துவிடத்தான் போராடிக்கொண்டிருக்கிறேன். அந்த நாவலில் அவர் சொல்லியிருக்கும் செடிகளும் பூக்களும் கண்முன் மலர்ந்து மணம் வீசிக் கொண்டே இருக்கின் றன. என் உடலும் உருவமும் அந்த ராணுவ உடைக்குப் பொருந்தாது என்றாலும் நாவலில் வருகிற நெல்லையப்பனாக என்னை மாற்றிப் பார்த்து ரசித்திருக்கிறேன்.

இந்த நாவலும் ‘உலோகமும்’ அப்படியே சினிமாவுக்காக எழுதப்பட்டது போலவே இருக்கிறது. உலோகத்தில் வரும் இயக்கத்தின் ஆட்களும் ராவின் அமைப்பும் நடுக்கடல் திருட்டும் தொடர் ட்விஸ்டும் நாளிதழ் செய்திகளை விட பரபரப்பானவை. ஒரு பெரிய ஹீரோவுக்கான கதையாக இதை பார்க்கிறேன். ஆனால் இயக்குனர் சுப்பிரமணிய சிவா இதை படமாக்கி இருப்பதாக பின்னர் அறிந்தேன்.

இரண்டு நாவலுமே வாசிப்பில் ஒரு திரைப்படத்தின் காட்சியை கண்முன் நிறுத்தியது என்பது அதிகப்படியான வார்த்தையல்ல. இவ்வளவு வேகமாவும் சுவாரஸ்யமாகவும் செல்கிற நாவல்களை சமீபத்தில் வாசித்ததில்லை.


இலக்கியம் வாழ்க்கையைப் பேசுகிறது. அந்த வாழ்க்கையின் வழி தன்னைத் தேடும் அல்லது தன்னைப் பார்த்துக்கொள்ளும் கலையை, செய்வதாகவே நினைக்கிறேன். அப்படியொரு கலை எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில் லை. ஜெமோ கதைகளுக்குள் வாழும் கலையை இயல்பாகவே பெற்றிருக் கிறார். 

No comments: