காதல் என்றும் பெயர்
இன்னும் முழுவதுமாக விடியவில்லை. கொக்குகள் வானில் வளைந்து, வரிசையாக கிழக்கு நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. கரன்ட் ஒயர்களில் அமர்ந்துகொண்டு குருவிகள் எழுப்பும் ஒலி, இசை போல வந்து கொண்டிருக்கிறது. ஆற்றுக்கு மண் அள்ளப் போகும் இரண்டு மாட்டு வண்டிகள் ரோட்டில் சென்றுகொண்டி ருந்தன. மாடுகளின் மணி சத்தம் காலையின் அமைதியை உடைப்பது போல ணங் ணங் என்று ஒலிக்கிறது. பதநீர் இறக்கச் செல்லும் மலையன் பானையை பின்பக்கம் வைத்தவாறு சைக் கிளில் சென்றுகொண்டிருக்கிறான். வேறு யாரும் ரோட்டில் இல்லை. அமைதியாக இருந்தது, மஞ்சப்புளித் தெரு போகும்சாலை.
கீழ பத்து வயலில் இருந்து நான்கைந்து வாழை இலைகளைப் பறித்துவிட்டு சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பும்போதுதான், சாஸ்தா கோயில் அருகே சின்னையன் அதைச் சொன்னான். முதலில் நம்ப முடியாததாக இருந்தது. ஒரு விஷயத்தை நம்ப முடியாமல் இருப்பதற்கு நாம் அதன் மீது அல்லது அவர்கள் மீது வைத் திருக்கும் நம்பிக்கை காரணமாக இருக்கிறது. ஆனால், காலம் இன்று எல்லாவற்றையும் மாற்றியிருக்கிறது. எதெல்லாம் நடக்காது என்று நினைக்கிறோமோ அதெல்லாம் நடக்கிறது. எதுவும் எப்படியுமாகவும் நடக்கிறது.
‘என்ன இப்படி சொல்லுத? ஏங்ட்ட சொன்ன மாதிரி வேற யார்ட்டயும் சொல்லிராத. வில்லங்கமாயிரும்டெ’ என்றேன்.
‘என்னய என்ன கோட்டிக்காரம்னு நெனச்சியா? ராத்திரியில இருந்து ஊரே இதைதான் பேசுது. நீ பெரிய இவன் மாதிரி சொல்லுத?’ என்று ஆணித்தரமாகச் சின்னையன் சொன்ன பிறகுதான் கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினேன்.
சைக்கிளை விட்டு இறங்கி, அவனிடம் ஒரு பீடியை வாங்கிப் பற்ற வைத்தேன். இடப்பக்கப் பொத்தையில் இருந்து, செத்து போய் அழுகி மக்கிக்கிடந்த எருமை மாட்டின் நாற்றம், காற்று வேகமாக வீசும்போது முகத்தில் அடித்துவிட்டுப் போனது. வலது பக்கம் இருந்த கல்யாணி ஐயர் வீட்டுத் தோப்பின் வேலியில் தெண்டல் ஒன்று எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தது.
‘இன்னும் நம்ப முடியலய’ என்றேன்.
‘எனக்கு மட்டும் என்னங்கெ?’
‘செரி, தண்ணி தெறக்கத்தானெ போற. தெறந்துட்டு மேக்க வரு வல்லா’
‘டீக்கடைக்கு வருவேன்’
‘சீக்கிரம் வா’
சரளைக்கற்கள் பெயர்ந்திருக்கிற சாலையில் இருந்து சைக்கிளை உருட்டத் தொடங்கினேன். சின்னையன் வயலுக்குச் சென்று கொண்டிருந்தான்.
எனக்கு இன்னும் நம்ப முடியவில்லை. சின்ன வாய்க்கால் பாலம் தாண்டி செல்லும்போது, பால்கார கணேசண்ணன் வந்தான். அவனிடம் கேட்டால் சரியாக இருக்கும் என்று நினைத்து, ‘என்ன வண்டி வேகமால்லா போவுது’ என்றேன்.
‘பால் கொடுக்காண்டாமா?’ என்றான்.
‘செரி நில்லு. விஷயம் கேள்விபட்டியா?’
‘சுப்பையா பிள்ளை விஷயம்தான?’
‘ஆமா’
‘நேத்தே அவ்வோ தெருவுல பெரிய பிரச்னை நடந்து முடிச்சிரு க்கு. இன்னைக்குச் சாயந்திரம் வெவாரம் இருக்கும்னு நினைக்கேன்’ என்றவன் வேகமாகச் சென்றான். ஊரெல்லாம் தெரிந்த விஷ யம் நமக்குத் தெரியாமல் போனது ஏன் என்று யோசித்துக் கொண்டே நடந்தேன்.
தூக்குவாளிகளில் அழுக்குத் துணிகளை வைத்துக்கொண்டு ஆற் றுக்கு குளிக்கச் சென்றுகொண்டிருந்தார்கள் கீழத்தெருக்காரப் பெ ண்கள். பின்னால் துணி வெளுக்கச் செல்லும் இசக்கி, கழுதை களைப் பற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தான்.
‘காலையிலயே இலையெல்லாம் போவுது, ஏதும் விசேஷமா?’ என்று பேச்சுக்கு கேட்டான் இசக்கி.
‘விருந்தாளு வந்திருக்கு’ என்றதும் அவன் கண்டுகொள்ளாமல் சென்றான். எனக்கு சின்னையன் சொன்ன விஷயம் மண்டைக்குள் உட்கார்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தது.
சுப்பையா பிள்ளைக்கு இப்போது சுமாராக ஐம்பது வயதுக்கு மேல் இருக்கலாம். கன்னியமான முகம் அவருக்கு. பார்த்தால் வணங்கத் தோன்றும் அமைதி அவர் முகத்தில். திடமான உடல் வாகு. அடர்த்தியற்ற மீசையும் அதிக மயிர்கள் வளராத நாடியை யும் கொண்டவர். எப்போதும் நெற்றியில் திருநீற்றுப்பட்டை இருக் கும். பியூசி படித்தவர். மேலத்தெருவில் எழுத்துக்காரியங்க ளுக் கு அவரைத்தான் கேட்பார்கள். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தபால் கள் ஏதும் வந்திருந்தால் அவர்தான் வாசித்துச் சொல்ல வேண்டும். பதில்கள் போட வேண்டும் என்றாலும் அவர் உதவிதான். வெளுத்த வெள்ளைச் சட்டை, அதன் பாக்கெட்டில் மை பேனா என அலைபவர்.
விவசாயம்தான் தொழில் என்றாலும் அது தொடர்பாக வேலை களற்ற நாட்களில் ஆழ்வார்க்குறிச்சி லைப்ரரியில் புத்தகங்கள் வாசிப்பதும் மாலையில், கேரளாவில் இருந்து அக்ரகாரத்துக்குப் புதிதாக வந்திருக்கிற கிருஷ்ணனுடன் அலைவதுமாக இருப்பவர். இரண்டு பேரும் அப்படி என்னதான் பேசுவார்களோ? என்று தண் ணீர் எடுக்கப் போகும் பெண்கள் கேட்குமளவுக்கு எப்போதும் பேசிக்கொண்டே இருப்பவர்கள். பேச்சு, சுவாரஸ்யம் கொண்டது. சுகமான அல்லது ஒத்த கருத்தொற்றுமை கொண்ட பேச்சுகளில் பேரானந்தம் இருக்கிறது. அந்தப் பேச்சு சில புதிர்களைப் போட லாம். சில புதிர்களை விடுவிக்கலாம்.
இப்போது நடந்திருக்கும் சம்பவம் கூட அவர் மனதின் புதிர், விடுபட்டதன் விளைவாகக்கூட இருக்கலாம்.
கடந்த ஆறு மாதத்துக்கு முன்புதான் சுப்பையா பிள்ளையின் மனைவி நோய்வாய்பட்டு இறந்து போனாள். அந்த அகால மரணத்தை ஊரே பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மூத்த மகனுக்கு கல்யாணம் முடிந்துவிட்டதால் அது குறையாகத் தெரியவில்லை.
மகன் திருப்பூரில் வேலைக்குச் சென்று மனைவியுடன் தங்கி விட் டதால் ஒத்தக் கட்டையாக வீட்டில் இருந்தார் சுப்பையா பிள் ளை. பக்கத்தில் இருக்கிற அவர் தம்பி வீட்டில் இருந்து சாப்பாடு வந்துவிடுகிறது. அமைதியாக, அவருண்டு அவர் வேலையுண்டு என்றிருக்கிற சுப்பையா, நேற்று இப்படியொரு காரியத்தை செய்திருக்கிறார் என்பதுதான் நம்ப முடியாததாக இருக்கிறது.
வீட்டில் இலைகளைக் கொடுத்தேன். சந்தவிளை மாமா அதைப் பார்த்துவிட்டு, ‘பெரிசா இருக்கே. பச்சைப்பழமா, ரஸ்தாலி போட்டிருக்கேளா?’ என்றார்.
‘பச்சைதான்’ என்றதும் இலைகளை ஆராயத் தொடங்கினார் அவர். அம்மா காபி கொண்டு வந்தாள். ‘நீ மாமாவுக்கு கொடுழா. நான் இன்னா வாரென்’ என்று கிளம்பினேன். வீட்டு காபியை விட, கடை காபி நன்றாக இருக்கிறது. அதற்காக அம்மாவுக்கு காபி போட தெரியாது என்று அர்த்தம் இல்லை. நண்பர்களோடு பேசிக்கொண்டோ, பேப்பர் பார்த்துக்கொண்டோ, ஊர்க்கதைப் பேசிக்கொண்டோ கடையில் குடிப்பது பிடித்திருக்கிறது.
டீக்கடைக்கு இன்னும் பேப்பர் வரவில்லை. பொழுது வேகமாக விடிந்துகொண்டிருந்தது. ஆறு மணி சிவந்திபுரம் பஸ் ஆட்கள் இல்லாமல் சென்றுகொண்டிருந்தது. கோழி பண்ணை ஜீப்பில் இருந்து இறங்கிய மலையாளத்துக்காரர்கள் பிளாஷ்க்கை கடை யில் நீட்டினார்கள். சைலு சுடும் வடையின் வாசம் அந்த ஏரியாவில் படர்ந்திருந்தது.
சின்னையன் தூரத்தில் வருவது தெரிந்தது. கடையின் அடுத்து இருக்கும் பந்தல்காரரின் வீட்டு திண்ணையில் உட்கார்ந்தேன். சுப்பையா பிள்ளைத் தெருவைச் சேர்ந்த மாசியும் சுடலையும் ரகசியம் போல மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். சின்னை யன் வந்ததும், ‘சைலு ரெண்டு டீ’ என்று சொல்லிவிட்டு மாசி யை அழைத்தான்.
‘என்னடே ஒங்க சங்கத்துல என்ன பேசியிருக்கியோ?’என்று கேட்டதும் மாசி, திண்ணையில் உட்கார்ந்தான்.
‘இது ஒரு மானங்கெட்ட வேலை. இதுக்கு நாங்க என்ன பேச முடியும்? அந்த பொம்பளைக்கு வேண்டியவங்க வந்து சாயந்தரம் பேசப்போறாங்களாம்’ என்றான்.
‘அமைதியா இருக்கவன நம்பக் கூடாதுன்னு சொல்வாவோ, கேட் டியா. அது சர்தாம் போலுக்கு’ என்றான் சின்னையன்.
‘இவன் இப்படி பண்ணுவாம்னு யாராவது கண்டாவுளா?’
‘செரி, அந்த பொம்பளைக்கு பிள்ளைலு ஏதும் இருக்கா? புருஷன் இருக்கானா?’
‘அதெல்லாம் இல்லைனாதான் பிரச்னை இல்லையே’
‘எத்தனை பிள்ளைலு?’
‘ஒரே பையன். கல்யாணமாவி ஆலங்குளத்துல இருக்கானாம். புருஷக்காரன் பாத்திர யாவாரம் பண்ணுவாம் போலுக்கு’
‘எப்படி ரெண்டு பேருக்கும் பழக்கமாம்?’
‘இவன் ஆழ்வாறிச்சுக்கு லைப்ரரிக்குலா போறாம்னு நினைச்சோம். இப்பம்லா தெரியுது. ரெண்டு பேரும் ஒண்ணா ஸ்கூல்ல படிச்சிருக்காவோ. அப்பவே பழக்கமாம். பிறகு அப்பம் இப்பம்னு அவா புருஷனுக்குத் தெரியாம போய்ட்டும் வந்துட்டும் இருந்திருக்காம். பொண்டாட்டிக்காரி மண்டைய போட்ட பிறகு தனியா கிடக்க முடியலை. கூட்டிட்டு வந்துட்டாம்’
‘ச்சே. அவர்ட்ட பேசினேளா?’
‘ஆமா. சினிமா வசனம் மாதிரிலா பேசுதாம். ‘இது முப்பது வருஷ காதலு’ங்காம் எங்ககிட்ட. அவ்வோ தாய்மாமா, அண்ணன் தம்பியோ கேட்டா, ‘தனியா எத்தனை நாளுதான் இவ்வளவு பெரிய வீட்டுல துங்க சொல்லுத? பேச்சுத்துணைக்காது ஆளு வேண்டாமா? அதான்’ம்னு சொல்லியிருக்காம். கேட்டேளா, பேச்சு த்துணைக்காம். பச்சப்புள்ளலா இவன்? இத ஊரு நம்புமாய்யா? தெருவே சிரிப்பா சிரிக்கி பாத்துக்கெ?’
‘அவரு மவனுக்கு சொல்லியாச்சா?‘
‘அவன் சித்தப்பன் நேத்தே போனை போட்டுட்டான்’
‘வாரானா?’
‘நாளைக்கு வருவானாம்’
‘இதெல்லாம் எந்த ஊர்லயும் இல்லாத விஷயமாலா இருக்கு’
மாசியின் சத்தம் கொஞ்சம் அதிகரித்ததும், ‘அவயத்தை கொ றைல’ என்று சைகை செய்தான் சின்னையன். டீ வந்தது. குடித் தார்கள். இவர்கள் பேசுவதை கடை வாசலில் இருந்து இன்னும் இரண்டு மூன்று பேர் கேட்டுக்கொண்டிருந்தார்கள். கருப்பு வெள்ளை நாய் ஒன்று கடையின் எச்சில் இலை போடும் இடத்தை நோண்டி கொண்டிருந்தது. அதை ச்சீ என்று சைலு விரட்டினான்.
வேகமாக வந்து பேப்பரை கடையில் போட்டுவிட்டு சைக்கிளில் நின்றவாறே டீ கேட்ட ராமசாமி, சின்னையனைப் பார்த்ததும் சிரித்தான். ‘என்ன தனியா ஒக்காந்தாச்சு?’ என்றவன், ‘அம்பது வயசுக்கு மேலயும் காதலு வரும்வே. இப்பவாவது சொன்னா நம்புங்க?’ என்றான் பொதுவாக. கடையின் பெஞ்சில் இருந்தவர் கள் சிரித்தார்கள். ஒல்லியான தேகம் கொண்ட முருகதாத்தா மட் டும், ‘ஏம்ல வரக்கூடாதுங்கெ?’ என்றார் பேப்பர்க்காரனிடம்.
‘நான் எங்க வரக்கூடாதுங்கெம். வரும்னுதான் சொல்லுதென். எனக்கு ஒம்ம மேல கூட சந்தேகம் இருக்கு?’ என்றதும் பெஞ்சில் இருந்தவர்கள், ‘சர்தாம்’ என்று சிரித்தார்கள். டீயை உறிஞ்சி முடித்த கருப்ப நம்பி, ‘எனக்கு கூட அவரு மேல சந்தேகந்தான். கருக்கலானா, ஆளு கண்ணுல பட மாட்டேங்காரு பாத்துக்க, அப்படியே ரைஸ்மில் பக்கமா ஒதுங்குதாரு’ என்றதும் முருக தாத்தா, ‘ஏல ஒங்களுக்கு கொஞ்ச இடம் கொடுத்தா ஏறி உக்காந்துருவேல. ஒங்க கொட்டைய நசுக்குனாதான் சரிபடுவியோ?’ என்றார்.
‘மொதல்ல ஒமக்குத்தான் நசுக்கணும்வே. எவளையும் கூட்டிட்டு வந்துராதீரும். பெறவு ஒம்ம பேரனே நசுக்கிப் போடுவாம், நசுக் கி’ என்ற ராமசாமி, டீயை குடித்துவிட்டுச் சென்றான்.
அதிகாலையிலேயே ஊர் பரபரப்பாகிவிடுவதற்கு ஏதாவது ஒரு விஷயம் நடந்துவிடுகிறது. காதல், மோதல், விபத்து, சண்டை, சாவு, வெட்டுக் குத்து என இந்த ஏதும் இல்லை என்றால் அது ஊராக இருக்காது போல.
ஊரில் பல காதல் கதைகள் நடந்திருக்கிறது. வில்லங்கமான காதல் என்றால், நடுத்தெரு சூரி, அவனது அத்தையைக் கூட்டிக் கொண்டு ஓடியதுதான்.
‘கலிகாலம்டா. பாத்தேளா. ஒறவு மொறைன்னு ஒரு மயிரும் இல்லாம போச்சு. இன்னும் கொஞ்ச காலத்துல அக்கா, தங்கச் சியலையே கட்டிக்குவா போலிருக்கு. கூறுகெட்ட நாய்கள்’ என்று சைலு டீக்கடையின் முன் நின்று, சுந்தரம் ஐயர் சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. பிறகு அதே அத்தையுடன் ஒரு வருட காலம் எந்த ஊரிலோ குடும்பம் நடத்திவிட்டு ஊருக்கு அழைத்துவந்துவிட்டான் சூரி. இன்னும் அவளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
இதற்கு பிறகு பிரச்னையான காதல் என்றால் அது, உமைய ரண்ணனுடையது. அவன் சென்னையில் வேலை பார்த்துக்கொண் டிருந்தான். அவன் காதல் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஜாதி பிரச்னை தாண்டி அவன் காதலுக்கு ஊரில் கொஞ்சம் ஆதர வு இருந்தது. இருவரும் சரியான ஜோடி என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அவளின் அப்பாவுக்கு இந்தக் காதலில் விருப்பம் இல்லை. அவனுக்குத் தெரியாமல் அவளுக்குத் தென்காசியில் மணமுடிக்கப் பேசி முடித்தாகிவிட்டது. கல்யாண நாள் அன்று, நான்கு பேருடன் வீட்டுக்குள் புகுந்த உமையரண்ணன், காரில் சென்னைக்கு அழைத்துச் சென்றுவிட்டான் அவளை. அந்தப் பெண் ணின் அப்பா கல்யாண வீட்டிலேயே தூக்கில் தொங்கப் போனார். உறவினர்கள் அவரைக் காப்பாற்றினார்கள். பின்னர் போலீஸ் புகார், பஞ்சாயத்து என்று பல பிரச்னைக்குப் பிறகு அவர்கள் இப்போது சென்னையில் வாழ்கிறார்கள்.
பிறகு, காதலர்களின் உதாரணப் பொருள் ஆகிவிட்டான் உமை யரண்ணன். ‘லவ்வு பண்ணுனா அவன மாதிரி இருக்கணும்ல. அந்த துணிச்சல் மயிறு இல்லைனா எதுக்கு அதைப் பண்ணணும்?’ என்று ஊரில் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
இதுமட்டுமின்றி இன்னும் பல காதல்கள் சத்தமின்றி நடந்திருக் கிறது. ஆனால் அது எல்லாவற்றையும் விட இந்தக் காதல் புது மையானது. இதுவரை ஊர் கேள்விபடாதது.
இந்தப் பேச்சுவார்த்தையைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சுப்பையா பிள்ளையின் வீடிருக்கும் தங்கம்மன் கோயில் தெரு வில் கூட்டம் கூடியிருந்தது. சுப்பையாவின் தாய்மாமா, மற்றும் சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் அங்கு கூடியிருந்தனர். சுப்பையாவின் காதலி சார்பாக ஏழெட்டு பேர் வந்திருந்தார்கள். கழுத்தில் தொங்கும் தங்க சங்கிலி தெரியும்படி சட்டையின் முன் பட்டன்க ளை அவிழ்த்துவிட்டிருந்த அந்த பெரிய மீசைக்காரர்தான் அவளின் சித்தப்பா என்று சொல்லப்பட்டது. அவருடன் வந்திருந்த இன்னும் சிலர் உறவினர்கள். வந்திருப்பவர்கள் எல்லோருக்கும் கா பி கொடுக்கப்பட, அதை மறுத்தார்கள் அவளின் உறவினர்கள்.
‘நாங்க என்ன கல்யாண வீட்டுக்கா வந்திருக்கோம். உட்கார்ந்து சோத்த தின்னுட்டு போவ?’ என்று முறுக்கிக்கொண்டார்கள். பிறகு அவர் வீட்டுக்குள் இருக்கும் திண்ணையில் அமர்ந்தார்க ள்.
‘இங்கருங்க. அனாவசியமா எந்த பேச்சும் இல்லை. அவளை வரச் சொல்லுங்க. ரெண்டே கேள்விதான் கேட்டுட்டு போயிருதோம்’
அந்தப் பெண் அழைத்துவரப்பட்டாள். இன்னும் இளமை கலையாதவளாகவே இருந்தாள். சிகப்பும் அல்லாத கருப்பும் அல்லாத நிறம். அதாவது மாநிறமாக இருந்தாள். பச்சைக்கலரில் புள்ளிப் போட்ட சேலை கட்டியிருந்தாள். நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு குங்குமப் பொட்டு. வலதுபக்க மூக்கில் மூக்குத்தி குத்தியிருந்தாள்.
வீட்டுக்கு வெளியில் இருந்தும் கூட்டமாகப் பலர் பார்த்துக்கொண் டிருந்தார்கள். பக்கத்து வீட்டு தட்டடியில் இருந்தும் கீழே கவனி க்கத் தெளிவாகத் தெரிந்தது விவகாரம்.
எல்லோர் முன்பும் குனிந்து நின்றாள் அவள். இந்த ஒரு நொடி அவள் மனதில் என்னவெல்லாம் வந்து போயிருக்கும்? திருமணமான மகன், இத்தனை வருடம் குடித்தனம் நடத்திய கணவன், அவன் உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், மகனின் திருமணத்துக்குப் பிறகு கிடைத்த பெண் வீட்டுச் சொந்தங்கள், இவர்கள் எல்லோரும் இதைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் அவளுக்கு வந்து போயிருக்கலாம். வராமலும் போயி ருக்கலாம். அவர்களின் வாயில் இருந்து வந்து விழும் ஏச்சுகள், எக்காள பேச்சுகள் இவள் காதில் அம்புகளாக விழுவதாகக் கற் பனைப் பண்ணி பார்த்திருக்கலாம். அது இல்லாமலும் இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் கடந்துதான் அவள் வந்திருக்கிறாள். சுப்பையாவுடன் வரும்போது இதையெல்லாம் அவள் சிந்தித் திருக்க மாட்டாளா என்ன? காதல் வலியது.
‘இங்க பாரும்மா. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போவல. உன் புருஷன் கூட வாழணும்னா, எங்க கூட இப்பமே வா. அவன் ஏத்துக்கிடுதம்னு சொல்லிட்டாம். இல்ல, இந்த ஊர்லதான் இருப் பம்னா உனக்கும் எங்களுக்கும் இனி ஒட்டுமில்ல ஒறவுமில்ல. ஒரு நல்லது பொல்லதுக்கும் எங்க மூஞ்சியில முழிச்சிராத. இது தான் கடைசியா இருக்கணும். இதுக்கு மேல ஒரு பேச்சு இல்ல’ என்றார் அவளது சித்தப்பா எனப்படுபவர்.
அவள், தலையை மேலே தூக்கவில்லை. அப்படியே நின்றவாறு சொன்னாள். அவளுக்குள் பல விஷயங்கள் ஓடியிருக்கலாம். அதி ல் விவாதங்கள் நடந்திருக்கலாம். சிறிது நேரத்துக்குப் பிறகு வெ ட்கம் விட்டு நிமிர்ந்து, ‘இனி அவரோட வாழ முடியாது. எனக்கு என்ன நடந்தாலும் இவரோடயே இருக்கட்டும்’ என்று சொல்லி விட்டு எல்லோரையும் பார்த்தாள்.
‘இதான் உம் முடிவா?’
‘ஆமா’
‘செரி கிளம்புவோம்பா’
&வந்திருந்தவர்கள் ஏதும் பேசாமல் எழுந்தார்கள். சுப்பையா பிள் ளையின் மாமா, ‘இருங்க. நடந்தது நடந்துபோச்சு. காபி குடிச் சுட்டாது போங்க’ என்றார். அவர்கள் கையெடுத்து கும்பிட்டார் கள். வேறு ஏதும் பேசவில்லை. வாசலை விட்டு விறுவிறு என்று வெளியே வந்து பஸ்&ஸ்டாண்டை நோக்கி நடந்தார்கள். அதுவரை அவர்கள் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.
சிறிது நேரத்தில் அவர் வீட்டில் கூடியிருந்த கூட்டம் வாய்க்கால் பாலத்துக்கு கொஞ்சம், டீக்கடைக்கு கொஞ்சம் என்று கலைந்து சென்றது.
சின்னையன் மற்றும் சிலருடன் நான் வாய்க்கால் பாலத்துக்கு வந்தேன். உடன் வந்தவர்கள் எல்லோரும் அவர்களுக்குத் தோன்றிய கதைகளை, யாரென்றே அறியாத அந்தப் பெண் பற்றிய கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதில் உண்மை என்பது இருக்குமா தெரியவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை.
இன்னொரு சம்பவம் நடக்கும் வரை, சுப்பையா பிள்ளையின் காதல் ஊரின் சந்துபொந்துகளில், கோயில் வாசல்களில், டீக்கடை பெஞ்ச்களில், வயக்காடுகளில், தோப்புகளில் பேச்சாகிக் கொண்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டே வீட்டுக்கு நடக்கத் தொடங்கினேன். அந்தப் பெண் கண் முன் வந்துகொண்டிருந்தாள்.

No comments:
Post a Comment