Sunday, April 13, 2014

அம்வி எனும் பெண் தெய்வம்


அந்தக் குதிரை ஜடை பின்னலைக்கொண்ட வெளுத்த குஜராத்திக்காரி இன் னும் வரவில்லை. வரும் நேரம்தான். பஞ்சாபி பெண்களுக்கும் குஜராத்திப் பெண்களுக்கும் கலரில் போட்டி வைக்கலாம். பஞ்சாபி பெண்கள் அதிகமாகக் கோதுமை வண்ணத்தில் இருப்பதாகவும் குஜராத்திப் பெண்கள் சிவப்பும் மஞ்சளும் கலந்த வண்ணத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் சொல்வாள் பிலோமினா. வண்ணங்களின் வித்தியாசங்களை அதிகமாகவே ஆராயும் தமிழச்சி அவள். நான் வேலை பார்க்கும் கடைக்கு மேலே இருக்கிற பெண்களுக்கான சலூனில் வேலைப் பார்ப்பவள். அவள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன்.

மும்பை செம்பூருக்கு வேலைக்கு வந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. திலக் நகரில் இருக்கிற இந்த சேட்டின் பலசரக்குக் கடை கொஞ்சம் பெரியது. மொத்தம் பன்னிரெண்டு பேர் வேலை பார்க்கிறோம். அதில் நான்கு பேர் தமிழர்கள். மேலே இருக்கிற பெண்களுக்கான சலூனும் சேட்டுக்குத்தான். அதில் பிலோமினா மட்டும் நாகர்கோயில்காரி. மற்ற நான்கு பேரும் கேர ளாவைச் சேர்ந்தவர்கள். அதில் அதிகத் தலைமுடி கொண்ட ஒருத்தியை சேட் வைத்திருக்கிறான் என்று அரசல் புரசலாகப் பேசிக் கொள்வார்கள்.

கடையில் வியாபாரம் அதிகம். மதியம் ஒரு மணியில் இருந்து நான்கு மணி வரை கொஞ்சம் ஓய்வுக் கிடைக்கும். மற்ற நேரங்களில் கசக்கிப் பிழியும் வேலை. இரவு பதினோரு மணி வரை வேலை இருக்கும். சாமான்களின் லிஸ்ட்டையும் முகவரியையும் போனில் சொல்லிவிட்டால் டூவீலரில் கொண்டு போய் சம்மந்தப்பட்ட வீடுகளில் கொடுத்துவிட்டு வரவேண்டிய வேலை எங்களுக்கு.

செம்பூர் பாலத்துக்கு கீழே இருக்கிற பாஜி மார்க்கெட்டில், தேங்காய் கடை வைத்திருக்கிற பெருமாள், 'மும்பைக்கு வால. வாழ்க்கையே வேற, தெரியும்லா?' என்று ஆரம்பித்து கதை கதையாய் சொல்ல, அதெல்லாம் கனவுகளாக விரிந்ததை அடுத்து, அம்மா தடுத்தும் மும்பை வந்துவிட்டேன். அவன் கடையில் ஒரு மாதம் சும்மா இருந்து, மும்பையைப் பார்த்த பிறகு பெருமாளுக்கு நண்பனான சேட், என்னை வேலையில் சேர்த்துக் கொண் டான். வேலை கஷ்டமாகத் தெரியவில்லை. ஜாலி அரட்டை, கிண்டல், ஊர்ச் சுற் றல், சினிமா என கழிந்துகொண்டிருக்கிறது.

சாமான்கள் கொடுக்கச் செல்லும் வீடுகளில் பெரும்பாலும் தமிழ்க் குடும்பங் கள் இருப்பதால் அந்நிய உணர்வு ஏதும் வரவில்லை. அதுவும் திருச்செம்பூர் முருகன் கோயில் அருகே எனது பள்ளித்தோழன் ராமகிருஷ்ணனின் அக்கா வீட்டைக் கண்ட பிறகும் தூரத்து உறவினர் பி.கே.சாமி மாமாவின் வீட்டுக்குச் சென்று வந்த பிறகும் வெளிமாநிலத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வு முற்றிலும் அறுந்துவிட்டது. முதல் மூன்று மாதம் மொழி ஒரு பிரச்னையாக இருந்தாலும் இப்போது இல்லை. இந்தியுடன் மராட்டி, கொஞ்சம்  குஜராத் தியும் கூட பேச முடிகிறது.

புதிய மனிதர்கள், புதிய இடம், புதிய மொழி என எல்லாமே முதலில் வித்தி யாசமாக இருந்தது. இப்போது ஊரைத்தேட ஆரம்பித்துவிட்டது. அம்மா வைப் பார்க்கும் ஆவல் அதிகரித்து விட்டது. தெருவில் காதலிகளாக இருந்த இளம் பெண்கள் இப்போது அங்கு இருப்பார்களா? திருமணம் ஆகிச் சென்றி ருப்பார்களா? என்ற ஏக்கம் மனதுள் எழுகிறது. கால்கள் தேய நடந்த கரு வேலப்பிறைத் தெருவும் பெருமாள் கோயிலும் வடக்குவா செல்வி அம்மனும் அதிகமாகத் தேடத் தொடங்கிவிட் டது.

சைக்கிள் மணி சத்தம் கேட்டதும் திரும்பினேன். வந்து விட்டாள், அந்த குஜராத்திக்காரி. சைக்கிளை ஸ்டான்ட் போட்டுவிட்டு, 'கியா சல்ரே, இஸ்க் கி' என்றாள். இசக்கி என்கிற என் பெயரை அவள் 'இஸ்க்கி' என்று உச்சரிப் பது பிடித்திருக்கிறது. அவளைப் பார்த்தாலே ஏதோ ஒரு சந்தோஷம் வந்து விடுகிறது. தரை தெரிய தண்ணீர் ஓடுகிற ஆற்றில் குளிக்கும்போது, பளிங்கு கற்களில் உடல்பட்டு சிலிர்க்கிற சுக உணர்வை, அவளைப் பார்க்கும் போது பெறுகிறேன். அவள் கண்களின் சின்னதாக மின்னுகிற அந்த உற்சாகம் எனக் குப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையையும் பேசிவிட்டு இமைகளை மேலும் கீழும் அசைக்கிற அவளது மேனரிசம் அதிகமாகப் பிடிக்கிறது.

சில வேளைகளில் அவளை மனதுள் நினைத்தாலே வந்து விடுகிறாள். 'நேரம் ஆச்சே. இன்னும் காணும்' என்று ஏறிட்டுப் பார்த்தால் அந்தத் தேவதை சைக் கிளை ஓரமாக நிறுத்தி இருப்பாள். அது அதிசயம்தான். நினைத்ததும் வந்து விடுவதற்கு அதிசயம் என்று தானே அர்த்தம். எப்போதும் இதே நேரம், இதே நொடி மிகவும் சரியாக அவளை இங்குப் பார்க்கலாம். இவ்வளவுத் துல்லிய மாக ஒரே நேரத்தில் கடைக்கு வருகிற அவளிடம் ஒரு முறை கேட்டேன்.
'அதெப்படி ஒரே நேரத்தை கரெக்டா மெயின்டெயின் பண்றீங்க?' என்று. அவள் கலகலவென்று சிரித்தாள். சிரித்தால் இன்னும் அழகாகத் தெரிகிற அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

'மே பஜ்பன்ஸே ஹாஸ்டல் மே த்தா. உதர் பங்சுவாலிட்டி சிக்காயாஹே' என்றாள் அதே சிரிப்போடு.

ஹாஸ்டலில் ஏன் படித்தாள் என்று கேட்கத் தோன்றியது. அது அவளது கதையை கேட்பது போலாகிவிடும். சில நேரம் அவள் சொல்லலாம். சில வேளை முகத்தைத் திருப்பலாம். இந்த எதுவும் தேவையில்லை என்று கேட்க வில்லை.

சாலை வெறிச்சோடிக் கிடக்கிறது. சாப்பிட சென்றிருக்கிற சேட் இன்னும் கடைக்குத் திரும்பவில்லை. அவனில்லை என்றால் அவன் தம்பி கல்லாவில் இருப்பான். இன்று அவனும் இல்லை. தம்பிக்கு கல்யாண நாள் என்று காலையில் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்தார்கள். ஸ்வீட்டுக்குப் பதிலாக, ஒரு நாள் சம்பளத்தைக் கொடுத்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்போம்.

குஜராத்திக்காரியிடம் பேசலாம் என்று சென்றேன். மேல்பக்கம் பிரித்து நட்டு வைத்தது மாதிரி அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற அரிசி மூட்டைகளில் சாய்ந்து கொண்டு, இரண்டு அரிசியை எடுத்து வாயில் போட்டாள். பிறகு, 'கடையில் யாருமில்லை?' என்று கேட்டாள். எப்போதும் அவள் இந்த இடத்தில்தான் நின்று கொள்வாள். அரிசிகளை எடுத்து வாயில் போடாவிட்டால் அவளால் நிற்க முடியாது. சேட் இருந்தால், 'தினமும் இப்படி அரிசியை தின்னா, மாசத் துல ஒரு கிலோ எனக்கு நஷ்டம்' என்பான்.

'அதான் எங்ககிட்ட ஒவ்வொரு பொருளுக்கும் கொள்ளை அடிக்கிற இல்ல'
'கொள்ளையா?'

'ம். ஒரு சோப்பு 12 ரூபாய்ன்னு வை. அது மேக்சிமம் ரீட்டைல் பிரைஸ்தான். ஆனா, நீ அந்த மேக்சிமத்தையும் வாங்கிடறே. அது கொள் ளைத்தானே?' என்பாள்.

சேட் அவளை, வாயை மூடு என்று சொல்லிவிட்டு கவனிக்காமல் இருந்து விடுவான். என்னைப் பார்த்துச் சிரிப்பாள் அவள். நானும் சிரித்துவிட்டு வெளியே கவனிப்பது போல நின்றுகொள்வேன். சேட்டுக்கு இருக்கும் நான்கு நண்பர்களில் புல்லட் வைத்திருக்கிற லம்புவின் தங்கச்சி இவள். அதனால் இவளுக்கு இங்கு செல்லம் அதிகம்.

நான் அவளின் எதிரில் இருந்த பெரிய எடை தட்டில் அமர்ந்தேன். வலது காலை பருப்பு மூட்டையில் வைத்துக்கொண்டு அவளைப் பார்த்தேன். குஜ ராத்திக்காரியின் சத்தம் கேட்டு மேலிருந்து கீழிறங்கிய பிலோமினா, 'கேம் ஜு' என்றாள் அவளிடம்.

'நாலு குஜராத்தி வார்த்தையை தெரிஞ்சு வச்சுக்கிட்டு தினமும் அதையே கேட்பியா?' என்றாள் குஜராத்திக்காரி. 'தேவையா?' என்பது போல நான் பிலோமியைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்த்து, 'உன் ஆளு வந்ததும் மூஞ்செல்லாம் பல்லா இருக்கு' என்றாள். அந்த குஜராத்திக்காரி, 'என்ன சொல்றேன்னு தெரியும். சுப் பைட். இந்தி மே போல்' என்றாள். நிஜமாகவே சொன்னதைப் புரிந்துகொண்டாளா என்று பதட்டமடைந்த பிலோமி, 'சும்மா' என்று சொல்லிவிட்டு அவள் தலைமுடியில் கை வைத்தாள்.

அவளுக்கு  வருகிற போகிற பெண்களின் தலைமுடியையும் முகத்தையும் ஆராய்கிற வேலைதான் எப்போதும்.

'உன் ஹேர்ஸ்டைலை வேற மாதிரி மாத்தினா அழகா இருப்பே. இந்த இரண்டு பக்கமும் கிளிப் போட்டு வளைச்சா தேவதை மாதிரி தெரிவே. சலூனுக்கு வர்றியா?' என்கிற பிலோமியிடம், 'ஒங்க சேட்டுக்கு சம்பாதிச்சு கொடுக்க இப்படி அலையறீங்களே?' என்றாள் அவளை செல்லமாகப் பார்த்துவிட்டு.
அவள் சொன்ன பிறகுதான் அப்படியொரு விஷயமே அவளுக்குப் புரிந்தது.
'இல்லை, நான் அப்படி சொல்லலை. என் நோக்கம் உன்னை அழகாக் கணும்னுதான்'.

'நான் ஏற்கனவே அழகாத்தானே இருக்கேன். இஸ்க்கி, சொல்லு இவளுக்கு' என்றாள். பிலோமி என்னைப் பார்த்து கண்ணடித்துவிட்டு உதட்டைப் பிரிக்காமல் சொன்னாள், 'என்ன செவப்பியை கவுத்துட்டியா?' என்று. நான் பேசினால் குஜராத்திக்காரி ஏதும் நினைப்பாள் என்று அருகில் விழுந்துகிடந்த புளித்துண்டை எடுத்து வாயில் போட்டுவிட்டு உட்கார்ந்தேன்.

கடைக்கு வெளியே நடந்து செல்லும் ஒரு பெண்ணை சைக்கிளில் சென்று கொண்டே ஒருவன் துரத்திக் கொண்டிருந்தான். அவளருகே அவன் செல்வதும் அந்தப் பெண் பயந்து ஒதுங்குவதும் தொடர்ந்துகொண்டிருந்தது.  நான்கைந்து முறை அவன் சைக்கிளை அவளருகில் வந்து திருப்பி, ஏதோ பாடல் ஒன்றை பாடியபடி சென்றுக் கொண்டிருந்தான். நாங்கள் எல்லோரும் அதைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

தற்செயலாக அந்தப் பெண் கடையைப் பார்க்க, குஜராத்திக்காரி, அவளை  கையால் சைகை செய்து இங்கு அழைத்தாள்.

கொஞ்சம் பதட்டமாகி இருந்த அந்த பெண், இந்த அழைப்பை ஆறுதலாக ஏற்றுகொண்டு வந்தாள். அவளுக்கு இந்தி தெரியவில்லை. மங்களூரில் இருந்து வந்து அண்ணன் வீட்டில் தங்கி படிப்பதாவும் கல்லூரிக்குச் செல்லும் போது தினமும் இவன் டார்ச்சர் செய்வதாகவும் ஆங்கிலத்தில் சொன்னாள் அவள். அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. முகத்தில் வியர்வை படர்ந்திருந்தது. இன்னும் கொஞ்சம் பேசினால் அழுதுவிடுவாள் போல் தெரிந்தது.

கடையின் வாசலுக்குச் சென்று அந்த சைக்கிள்காரனைப் பார்த்தாள் குஜராத்திக் காரி. 'யே' என்று அழைத்தாள். சத்தம் கேட்டு இங்கே பார்த்த அவன், இவளைக் கண்டதும் சைக்கிளை வேகமாக அழுத்தி முன்னேறிச் சென்றான்.  இவள் இன்னொரு முறை, 'யே. ருக்...' என்றாள். அவன் சைக்கிளை இன்னும் வேகமாக அழுத்திச் சென்றான். 'குஜராத்திக்காரிக்கு இவ்வளவு பயமா?' என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

பிறகு அந்தப் பெண்ணிடம், 'எங்க இருக்கீங்க?' என்று கேட்டாள்.

'பில்டிங் நம்பர் 25-ல'

'நான் உங்க பில்டிங் பின்னாலதான் இருக்கேன்' என்றவள் எங்களைப் பார்த்து, 'ஓகே இஸ்க்கி, பிலோமி, நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. மதியம் எங்க வீட்டுலதான் சாப்பாடு. வந்திரணும்?' என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு அவளுடன் பேசிக்கொண்டே சென்றாள்.

கடையின் வலப்பக்கத்தில் இருக்கிற மைதானத்துள் கிரிக்கெட் விளையாட சில பையன்கள் வந்துகொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் ஊரில் செல்லாங்குச்சி விளையாடியது ஞாபகத்துக்கு வந்தது. இங்கு அந்த விளையாட்டை எங்கும் பார்க்க முடிவதில்லை. எங்கெங்கும் காணினும் கிரிக்கெட்டாகவே இருக்கிறது.

மைதானத்தின் கேட்டுக்கு வெளியே, வடா பாவு வண்டிக்காரன் அடுப்பைப் பற்ற வைத்துக்கொண்டு இங்கு பார்த்தான். 'கியா இஸ்க்கி' என்று சிரித்துவிட்டு, 'சேட்ஜி வரலையா?' என்றான். 'வர்ற நேரம்தான்' என்றேன்.

அவன், வடா பாவு கடைக்கு மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம் வருகிறது என்று தெரியவில்லை. அதிக ருசியும் இல்லை. அவன் தருகிற இரண்டு வித சட்னி மட்டும்தான் நன்றாக இருக்கிறது. சட்னிக்காகவா இவ்வளவு கூட்டம் கூடும்? மாலை நான்கு மணிவாக்கில் கடையை ஆரம்பித்தால் பத்து மணி வரை கூட்டம் அலைமோதும். அவ்வளவு பிசியாகிவிடுவான், வடாபாவு டக்ளையா.

எங்கள் கடைக்கு மேல் பக்கம் இருக்கிற சிறு அறையில் தமிழ் ஆட்கள் மட்டும் தங்கி இருந்தோம். பிலோமி உள்ளிட்டவர்களுக்கு பின்பக்கம் சிறு ரூம். பொதுவாக நாங்கள் கடை வாசலில்தான் தூக்குவோம். சில நேரங்களில் பத்து பனிரெண்டு மணி வரை ஜாலியாக இருக்கும். தண்ணியடித்துவிட்டு பாடல் பாடிச் செல்கிற மனிதர்களைப் பார்ப்பதும் திடீரென்று நடக்கும் வாய்ச் சண்டைகளைப் பார்க்கவும் சுவாரஸ்யமாக இருக்கும். சில நேரங்களில் தமிழ்ப் பாடல்களும் கேட்கும். நள்ளிரவில் நடக்கும் கணவன் மனைவி சண்டைகள் கூட பக்கத்து பில்டிங்களில் இருந்து இங்கு கேட்கும்.

பகலை விட மும்பையின் இரவு வித்தியாசமாக இருக்கிறது. இந்த ஏரியாவில் தான் பிரபல தாதா சோட்டா ராஜன் இருந்தான். அவன் குடும்பம் இன்றும் இங்கேதான் இருக்கிறது. இப்போது புதிதாக மன்னு பாய் வந்திருக்கிறான். மன்னு பாய் கொடூரமானவன். அவனைப் பற்றி அதிக கதை சொல்லி இருக்கிறார்கள். தனது காதலிக்கு லவ் டார்ச்சர் கொடுத்த  இளைஞன் ஒருவனை, நடுரோட்டில் வைத்து பாய் வெட்டியதாகச் சொல்லப்பட்ட கதை கள் திக் என்றிருக்கும். நள்ளிரவில்தான் அவர்கள் நடமாட்டம். கடந்த சில நாட்களுக்கு முன் ரெண்டு ஆட்டோக்களில் வந்தவர்கள் கடைக்கு வெளியே நின்றார்கள். நாங்கள் எழுந்து என்னவென்று பார்க்கையில், 'இதர் மத் தேக். சோ ஜாவ்' என்று ஓர் அதிகாரக் குரல் வந்தது. அந்த கொடுங்குரலில் நடுங்கி விட்டேன். இரவு நேரங்களில் கொலைகள் நடப்பது இங்கு சகஜம் என்று வாசித்திருக்கிறேன். இப்போது அந்த அதிகாரக்குரல் என் தூக்கத்தைக் கலைத்து பயத்தைத் தந்திருந்தது. வந்திருப்பது மன்னுபாய் என்றார்கள். கழுத்தில் நிறைய நகைகளோடு நெடு நெடு வென வளர்ந்த அந்த உருவம் ஆட்டோவுக்குள் அமர்ந்திருந்தது.

சிறிது நேரத்தில் வேறொரு ஆட்டோ வந்தது. எதையோ மாற்றிக்கொண் டார்கள். பிறகு சென்றுவிட்டார்கள். மறுநாள் காலையில் சேட்டிடம் விஷயத் தை சொன்னதும் அவர், 'மன்னுபாய் நம்ம பிரண்ட்தான். எதுக்கு எல்லாத்துக் கும் பயப்படறே' என்றார். அன்று காலை பத்து மணி வாக்கில், செம்பூர் ரயில் வே ஸ்டேஷன் அருகே இரண்டு பேர் நள்ளிரவில் சுட்டுக்கொல்லப் பட்ட தாகப் பேசிக்கொண்டார்கள்.

 காலையில் குஜராத்திக்காரி வீட்டுக்குப் போகவேண்டும் என்பதில் எனக்கு அதிக உற்சாகம் இருந்தது. அவள் கண்களும் சிரிப்பும் எனக்குள் வந்து வந்து அலை மோதின. அவள் அணியும் உடைகள் மட்டும் எப்படி அப்படி பளிச்சென இருக்கிறது என்றும் வியந்துகொண்டேன். எப்போதும் பிரெஷ்சாக இருக்கிற அவளுக்கு மேல் உதட்டில் மச்சம் ஒன்று இருக்கிறது. சிறு தடிப்பு போல இருக்கிற அந்த மச்சம் அவள் முகத்துக்கு இன்னும் அழகு சேர்க்கிறது. அவளைப் பற்றிய நினைப்பில் நாளை அணிய போகும் உடையை மறந்தே விட்டேன்.

எந்த சட்டை பேன்டை போடுவது என குழம்பம். போன மாதம் எடுத்த புது பேன்டும் சட்டையும் அழுக்காக இருக்கிறது. எழுந்து போய் சோப்பு போட்டு காய வைத்தேன். காலைக்குள் காய்ந்துவிடும். மதியம் தானே செல்ல வேண் டும். அதற்குள் கீழ் பக்கம் கடை போட்டிருக்கிற அயர்ன்காரனிடம் அர்ஜென் ட் எனச் சொல்லி தேய்த்து வாங்கிக்கொள்ளலாம் என நினைத்தவாறே தூங்கிப் போனேன். காலையில் என்னுடன் வேலைப் பார்ப்பவர்கள், ஏற்கனவே போட்ட திட்டத்தின்படி, நரிமன் பாயின்டுக்கு ஊர்ச் சுற்றக் கிளம்பினார்கள். நான் வரவில்லை என்றேன். குஜராத்திக்காரி வீட்டுக்குச் நான் செல்வதைக் கிண்டலடித்தார்கள். 'பாத்துக்கப்பா. அவளுக்கு மேக்கப் சாதனமும் டிரெஸ் சும் வாங்கிப்போட்டே முடியாது' என்றான் செல்வகுமார். நான் சிரித்துக் கொண்டேன். அவர்கள் சென்ற சில நிமிடங்களில் வந்த பிலோமினா, 'பன்னி ரன்டரை மணிக்குப் போவோம்' என்று ஞாபகப்படுத்திவிட்டுப் போனாள். அவள் சொன்ன நேரத்துக்கு கிளம்பி இருந்தேன். அவள் வந்ததும் நடந்தோம்.
பெண்கள் ஹாஸ்டல் தாண்டி சென்றதும், 'எதுக்குத் திடீர்னு கூப்பிட்ருக்கா?' என்று கேட்டேன்.

 'பெறந்த நாளா இருக்குமோ?' என்று என்னையே திரும்பிக்கேட்டாள் பிலோ மி. இதற்கு முன் அவள் வீட்டுக்கு சென்றதில்லை. பிலோமி அடிக்கடி சென்று வருபவள். அவளது மூத்த அண்ணிக்கு வீட்டில் போய் சிகை அலங்காரமும் ஃபேசியலும் செய்துவிட்டு வருவாள் பிலோமி.

29-ம் பில்டிங்கின் உள்ளே நுழைந்ததும் நான்காவது மாடியில் நின்று கை காண்பித்தாள் குஜராத்திக்காரி. கீழே நான்கைந்து ஆட்டோக்கள் வரிசையாக நின்றிருந்தன. ஒரு ஆட்டோ கவிழ்ந்திருந்தது. ஒருவர் அதற்கு சிகிச்சை அளித் துக்கொண்டிருந்தார். சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தனர்.  சில வீடுகளில் இருந்து டி.வியில் ஓடும் சீரியல் சத்தம் அதிகமாக வந்து கொண் டிருந்தது. படிகளில் ஏறி வீட்டுக்குச் சென்றதும் பிலோமியை கட்டிப் பிடித்தாள். பிறகு என் கையைக் குலுக்கினாள் அவள். வீட்டின் வலது ஓரத்தில் டிவி இருந்தது. இடது பக்கம் பெட். அதைத்தாண்டி சிறு அறை. அதில் பீரோவும் கொடியில் தொங்கும் துணிகளும் தெரிந்ததன. அதற்கு அடுத்து கிச்சன். பீரோ இருக்கும் அறைக்கு எதிர் அறை கொஞ்சம் விஸ்தாரமாக இருந்தது. எங்களை அழைத்துச்சென்று அங்கு உட்கார வைத்தாள். அங்கும் ஒரு பெட். நாங்கள் பெட்டில் இருந்தோம். அவள் சேர் ஒன்றில் உட்கார்ந்திருந்தாள்.

'வீட்டுல யாருமில்லை?' என்றாள் பிலோமி.

'பெரிய அண்ணனும் அண்ணியும் வெளியில போயிருக்காங்க. சின்ன அண்ணன் எப்ப வருவான் போவான்னு தெரியாது. அம்மா பக்கத்து வீட்டுல கதைப் பேசிட்டு இருப்பா' என்றவள் எங்கள் முன் சிறு டேபிளை போட்டாள். பிறகு நான்கைந்து ஹாட் பாக்சை எடுத்து வைத்து பரிமாறத் தொடங்கினாள்.
நான் வீட்டை நோட்டம் விட்டேன். அறையின் மேலே குடும்ப போட்டோ இருந்தது. அப்பா எனப்படும் யாரும் அதில் இல்லை. சிறு வயதிலேயே இறந்துவிட்டாரோ என்னவோ? இவளின் முகம் அப்போதும் இப்படியேதான் இருந்திருக்கிறது. பிரிட்ஜின் மீது வைக்கப்பட்டிருக்கிற லேமினேட் செய்யப்பட்ட இவளது, சிறுவயது போட்டோவில் அம்வி என்று எழுதப்பட்டிருந்தது. அதுதான் இவள் பெயர்.

 'அம்வின்னா?'

'பெண் தெய்வம்'

சொல்லிவிட்டு சிரித்தாள். இப்போது இன்னும் அழகாகத் தெரிந்தாள். மூன்று சப்பாத்தியை சாப்பிட்டுவிட்டு சப்ஜி சூப்பர் என்று சொன்னேன். அடுத்து சோறு. அவர்களைப் போல கொஞ்சமாகச் சாப்பிட முடியாது. நானே தட்டில் சோறைத் தட்டும்போது, ஹாலிங் பெல் அடித்தது.

எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்த குஜராத்திக்காரி, 'சாப்பிடுங்க' என்று சைகை காட்டிவிட்டு கதவைத் திறக்கச் சென்றாள். பிறகு வந்து வழக்கம் போல பரிமாறத் தொடங்கினாள். அவளின் பின்னே அந்த உருவம் நின்றிருந் தது. ஆட்டோவில் பார்த்த அதே உருவம். கழுத்தில் அதிக நகைகளோடும், நெடு நெடுவென உயர்ந்த அதே மன்னுபாய். சிவப்பு நிறத்தில் கொதிக்கும் அவனது கண்களைப் பார்த்ததும் எனக்கும் பிலோமிக்கும் கைகள் ஆடத் தொடங்கின.

பிறகு, 'காவோ' காவோ' எனச் சொல்லிவிட்டு எதிர் அறைக் குச் சென்றார் மன்னு பாய். 'ஏன் பயப்படறீங்க. சும்மா சாப்பிடுங்க' என்று கண்ணடித்தாள் குஜராத்திக்காரி.

அதற்கு மேல் எதுவும் இறங்கவில்லை. 

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான கதை! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!