இரண்டு குதிரைகளை வளர்த்து வந்த மேலத்தெரு சுப்பு தாத்தாவை குதிரைக்காரர் என்று யாரும் அழைத்ததில்லை. மாறாக அவருக்கு சொங்கன் என்ற பட்டப்பெயர் இருந்தது. சொங்கனுக்கு என்ன அர்த்தம் என்பது அப்போது எனக்குத் தெரியாது. இப்போதும்தான். சொங்கி, சோம்பேறி என்ற பொருள்பட அவரை அப்படி அழைத்திருக்கலாம் என நினைக்கிறேன். அதை விட்டுவிடுங்கள். இந்த கதைக்கு அது தேவையில்லாதது. அவரைப் போல குதிரைகள் ஏதும் வளர்க்காத, சொங்கன் என்ற பட்டப்பெயரும் இல்லாத இந்த மனிதரை குதிரைக்காரர் என்றே அழைக்கிறார்கள். அதற்கான காரணம் அவர் குதிரைகளை மட்டுமே வரைபவர் என்பதுதான். அதன் பாய்ச்சலை, வெறியை, அடங்கா திமிர் கொண்ட ஆணவத்தை, தினவெடுத்த தொடைகளைத் தனித்தனியாக வரைபவர்.
அந்த குதிரைக்காரர் வடக்கு அக்ரஹாரத்தில், மும்பையில் செட்டிலாகிவிட்ட குட்டி சங்கரின் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தார். வெளீர்நிற குர்தாவுடன் யாருடனும் அதிகம் பேசாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருக்கிற அவரது பெயர், நாராயண் கங்குலி கங்கோபத்யாய். சிலருக்கு மட்டுமே குர்தா பொருந்துகிறது. அதற்கான உடல்வாகு வேண்டும். அது இவருக்கு இருந்தது. வரைந்து வைத்தது போன்ற சிறிய தாடி மீசையுடன் தடிமனாகவும் ஒல்லியாகவும் இல்லாத தேகம் கொண்ட இந்த கங்கோபத்யாயின் பெயரை சரியாக உச்சரிக்க, பல மாதங்கள் எடுத்துக்கொண்டேன். இருந்தாலும் குதிரைக்காரர் என்றொரு எளிமையான பெயர் இருக்கும்போது இந்த பத்யாய் எதற்கு? பெயர் என்பது என்ன? அடையாளம். ‘ஏய் இங்க வா’ என்று அழைப்பதற்கு பதில், ‘ஏல சுப்புரமணி, ஏல வன்னிய நம்பி’ என்று ஏதோ ஒன்றை சொல்லி அழைப்பதற்கானது. ஒரு எண்ணை (நம்பரை) பெயராக வைத்திருந்தால் கூட சரிதான். அழைப்பதற்கு எதுவாக இருந்தால் என்ன?
ஊர்க்காரர்களாலும் குதிரைக்காரர் என்றே அழைக்கப்படுகிற அவர் தனிக்கட்டையாக இங்கு வசித்து வந்தார். வயதான பின் தனிக்கட்டையாக வாழ்தல் என்பது எளிமை அல்ல. தான் மகிழ்வாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் குதிரைக்காரர் படும் சிரமம் அறிந்ததுதான். தானே சமைத்து சாப்பிடும் கொடுமையை என்னவென்று சொல்வது? இன்னொருவர் சமைக்கும்போது இருக்கிற ருசி, தானே சமைக்கும்போது இருப்பதில்லை. காய்கறி வாங்க, கடைக்கு சாமான்கள் வாங்க, சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள, அல்லது துக்கத்தைச் சொல்லி வருந்த, ஏன் கோபம் வந்தால் எரிந்து விழ கூட அவருக்கு அங்கு யாரும் இல்லை. பக்கத்து வீட்டில் வசிக்கிற, ஆழ்வார்க்குறிச்சி வங்கியில் பணிபுரியும் ரெங்கம்மாள் என்கிற ரெங்கா மாமி மட்டும் சாயங்கால வேளைகளில் அவருடன் பேசிக்கொண்டிருப்பாள். குதிரைக்காரர் தெளிவாகத் தமிழ் பேசினாலும் கூட, அவருடன் ஆங்கிலத்தில் சத்தமாகப் பேசி தெருவில் தன் புலமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் ரெங்கா மாமி. இருந்தாலும் மாமியிடம் சுக துக்கங்களை அப்படியே கொட்டி விட முடியாதுதான்.
கொண்டை ஐயர் சொன்னதன் பேரில் குதிரைக்காரருக்கு எடுபிடி வேலை செய்துகொண்டிருந்த கணேச மாமாவின் மூலம்தான் எனக்கு அவர் அறிமுகம். ‘எம் மருமவென். ஆழ்வார்ச்சி ஸ்கூல்ல பிளஸ் டூ படிக்கான்’ என்று மாமா சொன்னதும் அவர் முகத்தில் புன்னகை. எப்போதும் ஒரு சுகமான, மனதை அமைதி கொள்ள வைக்கிற நறுமணம் வருகிற அவர் வீட்டின் வாசலைத் தாண்டி, உள்ளே அதிகம் சென்றதில்லை. ஆனாலும் உள்ளே வருமாறு அந்த வாசனை இழுத்துக்கொண்டிருக்கும். கண்களை மூடி அந்த வாசனையை உணர்கிற நொடியில் ஏதோ ஓர் அமைதி மண்டபத்தில் அமர்ந்திருக்கும் நினைவு வரும்.
அப்படியே கண்ணைத் திறந்து, வாசலில் கிடக்கும் நாற்காலிகளில் அமர்ந்து வடபக்கச் சுவரைப் பார்த்தால் அழகான குதிரை ஓவியம். கண்ணாடி சட்டத்துக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற அந்த ஓவியம், வேகமாக ஓடும் ஒரு குதிரை அப்படியே முகத்தை மட்டும் திருப்பி நம்மை பார்ப்பது போல தத்ருபமாக இருந்தது. அந்த ஓவியத்தின் கீழே என்.ஜி.என்று பெரிதாக எழுதி, அருகில் கோடு போல ஒரு கையெழுத்து. அதை முடித்துவிட்டு எதிரில் பார்த்தால் இன்னொரு குதிரை. இந்த ஓவியத்தில், முன் கால்களை வளைத்து தூக்கிக்கொண்டு பாய்ந்து வருகிற குதிரையின் வேக முகம் இருந்தது. அந்த முகம் மகிழ்ச்சியையோ, சோகத்தையோ வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால், அது என்ன மாதிரியான உணர்ச்சி என்பதை என்னால் சொல்ல இயலவில்லை. அதைப் பார்ப்பவர்கள் சிறிது நேரம் அந்த ஓவியத்துக்குள் தங்களை இணைத்துக்கொள்ளும் ஈர்ப்பை அது பெற்றிருந்தது. இடப்பக்கம் குதிரையின் கால்கள் மட்டுமேயான ஓவியம், கண்ணாடி சட்டத்துக்குள் அடைக்கப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தை பார்த்த பிறகுதான், கால் மூட்டுக்கு கீழ் இன்னொரு மூட்டு குதிரைகளுக்கு இருப்பதை கவனித்தேன். இதற்கு முன் வரை அது என் நினைவுக்குள் உட்கார்ந்திருக்கவில்லை.
ஓவியங்கள் மீது எனக்கு பெரிய ஈடுபாடு ஏதும் கிடையாது. அவரது குதிரை ஓவியங்களைப் பார்க்கத் தொடங்கிய பின்னர், எனக்கு ஓவியங்கள் பிடித்தது. அதற்கு காரணம் ஏதும் இல்லை. ஓவியரை பிடிக்கத் தொடங்கியதால் ஓவியங்களைப் பிடிக்கிறதோ என்னவோ? காதலன் குற்றவாளியாக இருந்தாலும் பிடித்துவிட்டால் காதலிக்கும் சினிமா கதாநாயகிகளைப் போல.
வீட்டின் பின்பக்கம் இருந்துதான் குதிரைக்காரர் ஓவியங்கள் வரைவார். அவர் வரையும் இடத்தில் நார்த்தங்காய் மரமும் வேப்ப மரமும் அருகருகே இருக்கிறது. அந்த மரங்களுக்கு கீழே நிழல் படர்ந்து கிடைக்கிற இடத்தில், பெரிய சைஸ் கோழி கூடு மாதிரி சிறு அறை இருக்கிறது. அங்குதான் ஓவியத்துக்கான பொருட்கள் இருக்கும். அதன் வெளியே ஒரு ஸ்டூலில் உட்கார்ந்துகொண்டு அவர் தூரிகை பிடிக்கும் அழகே சுகமானதாக இருக்கும். இடக்கை பழக்கமுடைய குதிரைக்காரர் அந்த கையால் எப்படி வரைகிறார் என்று நானும் இடக்கையால் நோட்டில் எழுதி பார்த்திருக்கிறேன். ம்ஹூம் ஒழுங்காக வரவில்லை. சித்திரமும் கைப்பழக்கம் என்பது இடதுகை பழக்கமல்ல என்று நினைத்துக்கொண்டேன்.
அவர் வரையும்போது அவரருகில் யாரும் நிற்கக் கூடாது. அவர் தனியாக இருக்க வேண்டும். அங்கு அமைதி வேண்டும். பேசிக்கொண்டோ, ரேடியோவில் பாட்டுக் கேட்டுக்கொண்டோ யாராவது இருந்தால், ‘வெளியே போங்க’ என்று கதவை ஓங்கி அடைத்துவிட்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன். பக்கத்து தெருக்களில் கல்யாணம், சடங்கு, காதுகுத்து விழாவுக்கெல்லாம் வைக்கப்படுகிற ரேடியோ குழாய்களில் இருந்து பாடல்களின் சத்தம் அவர் வரையும்போது இம்சை பண்ணும். அந்த மாதிரியான நேரங்களில் அவர் வரைவதை நிறுத்திவிட்டு வாசலுக்கு வந்துவிடுவார். அதற்காக அவர் பாடல்களை ரசிக்காதவர் அல்ல. அவர் வீட்டில் பெங்காலி பாடல்களின் இசை தட்டுகள் இருக்கின்றன. இரவு நேரங்களில் அவர் அதை கேட்கிறவர்தான்.
இந்த கிராமத்தில் ஓவியங்களை ரசிக்கிறவர்கள் என்று தேடிப்பார்த்தாலும் யாரும் இல்லை. பிள்ளையார் கோவில் தெருவில் இருக்கிற கணக்குப் பிள்ளைக்கு ஓவியங்கள் பிடிக்கும். பிடிக்கும் என்பதற்கும் ரசனைக்கும் வித்தியாசம் இருக்கிறது. ரசனை என்பது சிலாகிப்பது. ஆனால் அவருக்கு தெய்வங்களின் ஓவியங்கள் மட்டுமே பிடிக்கும். விதவிதமாக வரையப்பட்ட வினாயகர் ஓவியங்கள் அவர் வீட்டில் அதிகம் இருக்கிறது. அதே போல சரஸ்வதி ஓவியங்களும். மற்றபடி ஓவியங்களை ரசிக்கிறவர் என்று யோசித்தால்... யாருமில்லை.
‘அந்த இந்திக்காரன், படம் வரைதவனாம். திடீர்னு சிரிக்காம். திடீர்னு உம்முனு போறாம். லூசு பெய போலுக்கு. என்னத்த வரைஞ்சு என்ன எழவெ செஞ்சானோ?’ &குதிரைக்காரர் பற்றி இந்த பேச்சுதான் காபி கடைகளில், செய்தித்தாள் வாசிப்புக்கு இடையில் இருக்கும். அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. மழை வருமா, வராதா என்று வானம் பார்த்துகிடக்கிற வயல்வேலைக்காரர்கள் ஓவியத்தைக் கண்டார்களா? ஓவியனை கண்டார்களா?
இருந்தாலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கங்கோபத்யாய், இங்கு எதற்கு வந்தார், ஏன் வந்தார் என்ற கேள்வி தினமும் எனக்குள் வந்துகொண்டே இருந்தது. இன்னொருவரின் ரகசியம் அறியும் ஆவல் மனித மனத்துக்கு இயல்பானது. ‘அவரு இப்படியாம்லா, அப்படியாம்லா’ என்று தான் கேட்டதை அல்லது அறிந்ததை மற்றவரிடம் தெரிவிக்கவேண்டும் என்கிற கேடுகெட்ட குணம் எல்லோருக்குமானது. அப்படியொரு குணத்தின் காரணமாகவே நானும் அவர் பற்றி அறியும் ஆவலில் இருக்கிறேன்.
கணேச மாமாவிடம் கேட்டபோது, ‘கேட்டு என்னல செய்ய போற?’ என்பதாக இருந்தது பதில். அவருக்கு மூட் சரியில்லை. நானே கேட்டுவிடலாம்தான். அப்படி கேட்கும் அளவுக்கு அவரிடம் இன்னும் பழகவில்லை. பழகினால் போச்சு என்று தினமும் அதிகாலையில் ஆற்றுக்கு குளிக்கச் செல்லும் குதிரைக்காரருடன் நானும் தானாகச் சேர்ந்துகொண்டேன். ‘சன் ரெய்ஸ் ஆகறதுக்கு முன்னால குளிச்சிடணும்’ என்பார் அவர். அவருக்காக அதிகாலையில் எழுந்துகொள்ள கொஞ்சம் சிரமத்தையும் சந்திக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் அதிகாலை ஆற்றுக்குளியல் சுகம்தான்.
குளித்துவிட்டு அவர் கீழ் திசை பார்த்து ஏதோ மந்திரம் சொல்லி மூன்றுமுறை நின்றவாறே சுற்றுவார். நமக்கு கருப்பசாமியும் மந்திரமூர்த்தி சாமியும்தான். எப்போதாவது இசக்கி அம்மன் இருக்கிறாள். இந்த சாமிகளை கோயில் கொடைகளின்போது மட்டும் கும்பிட்டுக்கொண்டால் போதுமானதுதான். சாமிகளும் அதை குறையாக எடுத்துக்கொள்ளாது.
இப்படி குளித்துவிட்டு வரும்போது சில நேரம் அவர் பேசாமல் உம்மென்று வருவார். ஏதோ முனகிக்கொண்டு தலையை மட்டும் அங்கும் இங்கும் ஆட்டுவார். மனதுக்குள் யாருடனோ பேசிக்கொண்டு வருவார். திடீரென பல்லைக் கடிக்கும் சத்தம் கேட்கும். அதுபோன்ற நேரங்களில் நான் அவரை கவனிக்காதது போல மவுனமாக இருந்துவிடுவேன். ஒருமுறை குளித்துவிட்டு வரும்போதுதான் சொன்னார். ‘நாளைல இருந்து ஒரு மாசம் இங்க இருக்க மாட்டேன். வீட்டை நீங்கதான் பார்த்துக்கணும்’.
அவர் அடிக்கடி வெளிநாடு சென்று வருபவர் என்பதை மாமா ஏற்கனவே சொல்லியிருக்கிறார். எதற்காக வெளிநாடு போகிறார் என்கிற விவரங்கள் அவருக்குத் தெரியவில்லை. அதில் அவருக்கு ஆர்வம் இல்லை என்றும் கொள்ளலாம். ஆனால் ஒரு மாதத்துக்குள் திரும்பிவிடுவார். வரும்போது அழகழகான எழுத்துக்களையும் வண்ணங்களையும் கொண்ட பனியன்களையும் சென்ட் பாட்டில்களையும் மாமாவுக்கு வாங்கி வருவார். இந்த முறை அவர் செல்வது லண்டன். ஐம்பது கிலோமீட்டரில் இருக்கிற திருநெல்வேலியையே பெரும் நகராக பார்க்கிற, வேறு எந்த பெருநகருக்கும் சென்றிராத எனக்கு லண்டன் என்ற பெயர்ச்சொல் பெரும் ஆச்சரியத்தை தந்தது. சில ஆங்கில படங்களில் பார்த்திருக்கிற தெருக்களும் குளிருக்காக உடல் முழுவதும் கோட் அணிந்துகொண்டு அங்குள்ளவர்கள் போவதும் வருவதும் நினைவில் மின்னிப் போனது.
மறுநாள் காலை ஏழு மணிக்கு திருநெல்வேலி செல்லும் கொல்லம் மெயிலில் ஏறி அவருடன் உட்கார்ந்து கொண்டேன். மாமா, ரயில்வே ஸ்டேஷன்வரை வந்து அவருடைய நான்கு பெட்டிகளையும் பேக்கையும் வைத்துவிட்டு போய்விட்டார். திருநெல்வேலி வரை நான் அவருடன் செல்ல வேண்டும். அங்கிருந்து மாலையில் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் சென்னை சென்று, லண்டன் செல்வார் என்பது அவரால் சொல்லப்பட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பயணிகள் அதிகம் இல்லை. நாங்கள் இருந்த கம்பார்ட்மென்ட்டில் யாரோ ஒரு பாட்டி தனது பேரன்களுடன் பேசிக்கொண்டிருந்தது கேட்டது.
நான்தான் ஆரம்பித்தேன். ‘சார்வாள். கேக்கம்னு தப்பா நெனக்காதிய. லண்டனுக்கு என்ன சோலியா போறியோ?’ என்று கேட்டுவிட்டு அவரைப் பார்த்தேன்.
ஜன்னல் வழியே வயல்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அவர், என் பக்கம் திரும்பி, ‘எக்ஸ்பிஷன். அந்த பெட்டிகள்ல நான் வரைஞ்ச பெயின்டிங்ஸ் இருக்கு’ என்று சொல்லிவிட்டு புன்னகைத்தார். எனக்கு எக்ஸ்பிஷன் என்றால் என்ன என்று கேட்கத் தோன்றியது. அவர் ஏதும் நினைத்து விடுவாரோ என்று, ‘அப்டியா?’ என்று சிரித்து வைத்தேன்.
‘நீங்க ஏன் சார்வாள், குதிரையை மட்டும் வரையுதியோ? ஊர்ல ஆடு, மாடு, குரங்கு, யானைன்னு எக்கச்சக்கமா வெலங்குவோ இருக்கு. அதெல்லாம் விட்டுட்டு இத ஏன் வரையுதியோ?’’
‘சின்ன வயசுல இருந்தே குதிரை மட்டும்தான் பிடிக்கும்’ என்று சொல்லிவிட்டு மீண்டும் புன்னகைத்தார்.
இதற்கு மேலும் அவரிடம் கேள்வி கேட்கலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. குடும்பம் பற்றி கேட்க ஆசைதான். எதற்கு என்று விட்டுவிட்டேன். இவ்வளவு பெரிய மனிதனுக்கு குடும்பம் என்ற ஒன்று இருக்காதா என்ன? இருக்கத்தான் செய்யும். ஏன் இவர் செல்லும் லண்டனில் கூட மகனோ, மகளோ இருக்கலாம். அண்ணன், தங்கை... இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். பிறகு ஏன் குடும்பத்தை விட்டு பிரிந்து இங்கு வசிக்கிறார்?
ரயில், அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் தடதடத்துக் கொண்டிருந்தது. வெயில் இப்போதுதான் மேலேறி வருகிறது. இன்னும் சிறிது நேரத்தில் சுள்ளென்று அடிக்கும். ரயிலின் வேகத்தில் காற்று, குளிர் தந்து போனது.
அதற்கு மேல் ஏதும் கேட்கவேண்டாம் என்று விட்டுவிட்டேன். மாமா சொன்னது போல இன்னொருவரின் வாழ்க்கையை தெரிந்து என்ன செய்ய போகிறோம்?
குதிரைக்காரரை வழியனுப்பிவிட்டு வந்தாகிவிட்டது. மாமாவுக்கும் வெறுப்பாக இருந்தது. தெப்பக்குள திண்டில் அமர்ந்து பொறி அரிசி தின்றுகொண்டிருந்தோம். மாமாவின் மூட் இப்போது நன்றாக இருக்கிறது என்று கேட்டேன்.
‘குதிரைக்காரருக்கு குடும்பம் குட்டி கெடையாதா மாமா?’
‘ஏங் கெடையாது? கல்கத்தாகாரங்க அவங்க. மெட்ராஸ்லதான் இருந்தவளாம். பொண்டாட்டிக்காரி இருக்கா. மவென் வெளிநாட்டுல இருக்காம். சரியான துட்டு பார்த்துக்க. பொண்டாட்டிக்கும் இவருக்கும் சண்டையாம். பொண்டாட்டி வேண்டாம்னுட்டு தனியா வீடெடுத்து இருந்திருக்காரு. அந்தானி, நம்ம கல்ரகுறிச்சி ஐயரு இருக்கார்லா, அவருக்கு இவரு பிரண்டாம். ஒரு தடவை நம்ம சாமி அழைப்பு விழாவுக்கு அவரை இங்க கூட்டிட்டு வந்திருக்காரு. ஊரை பாத்துட்டு இங்கயே வாடகை வீடெடுத்து தங்கிக்கிடுதம்னு சொன்னாராம் குதிரைக்காரரு. சரின்னுட்டு அந்த ஐயரு ஏற்பாட்டுலதான் இப்பம் இருக்காரு’ என்றார் மாமா.
மேற்கு வங்கத்தில் பிறந்து சென்னையில் வசித்த ஒருவருக்கு பிடிக்க, இந்த கிராமத்தில் என்ன இருக்கிறது? குதிரைக்காரரிடம் கேட்டால், வயல்வெளி, தோப்புகள். ஊரைச் சுற்றி வாய்க்கால், குளம், ஆறு, அருமையான காற்று என்று சொல்லலாம். ஆனால் வருமானத்துக்கு இங்கு என்ன இருக்கிறது? ஊரில் இருந்த பெரும்பாலானவர்கள் வெளியூர்களுக்கு பிழைப்புத்தேடி சென்றுவிட்ட நிலையில், கரையான் அரித்த வீடுகளும் பட்டுப்போன மரங்களையும் கொண்டதாகவே இருக்கிறது ஊர். இங்கு அவருக்கு எது பிடித்திருக்கும். ஏதோ இருக்கிறது. நமக்குத் தெரியாத அது அவருக்குத் தெரிந்திருக்கிறது என நினைத்துக்கொண்டேன்.
குதிரைக்காரர் இல்லாமல் தெருவே வெறிச்சோடி கிடப்பது போல இருந்தது. வெளிநாடு சென்றால் எப்போதும் ஒரு மாதத்துக்குள் திரும்பி விடுகிற அவர், இரண்டு மாதங்கள் ஆகியும் வரவில்லை. அவரில்லையென்றால் அந்த தெருவில் எனக்கென்ன வேலை? அவரிடம் பேசிக்கொண்டிருக்கிற பக்கத்து வீட்டு ரெங்கா மாமி, இப்போது பேச ஆளின்றி திண்ணையில் புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறாள். பின் கால்கள் கட்டப்பட்டிருக்கிற கழுதை ஒன்று குதிரைக்காரர் வீட்டருகே செல்கிறது. குதிரைக்காரர் இருந்தால் அந்தக் கழுதையை கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார். அதன் பின்பக்கம், முன்பக்கம் என அவரது பார்வை உன்னிப்பாக இருக்கும். குதிரைக்கும் கழுதைக்குமான வித்தியாசத்தை பார்ப்பாரோ என்னவோ? அது ஓவியனுக்கான கவனிப்பு.
அவர் வீட்டிலிருந்து வரும் வாசனையும் வாசலில் தொங்கும் குதிரைப்படங்களும் எனக்குள் வந்துகொண்டே இருந்தன. அவர் வீட்டுச் சாவி மாமாவிடம்தான் இருக்கிறது. வாங்கிக்கொண்டு வந்தேன். வீட்டுக்குள் ஊஞ்சல் ஒன்று இருக்கிறது. கண்களை மூடி எப்போதாவது அந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பார் குதிரைக்காரர். ஆடி திரும்பும்போது வருகிற கிரீச் கிரீச் ஒலி தெருவில் நான்கைந்து வீடு தள்ளிவரை கேட்கும். தூசி படர்ந்து கிடக்கும் அந்த ஊஞ்சலில் ஏறி உட்கார்ந்து அதை ஆட்டினேன். கண்கள் சொக்கி, தூக்கம் வந்தது. எழுந்து வீட்டுக்குள் சென்றேன். எப்போதும் என்னை மயக்குகிற, உள்ளே இழுக்கிற அந்த வாசனை இப்போது இல்லை. குறைந்தபட்சம் வண்ணக் கலவைகளின் வாசனை கூட அங்கு இல்லை.
அலங்கோலமாக குப்பையும் தூசியுமாக கிடந்தது அவரது ஓவிய அறை. என் காலடி சத்தம் கேட்டு சண்டைப்போட்டுக் கொண்டிருக்கிற இரண்டு அணில்கள் வேகமாக மரத்தில் ஏறுகின்றன. குதிரைக்காரர் மறந்து விட்டுவிட்ட நான்கைந்து தூரிகைகளும் வண்ணக் குடுவைகளும் தனியாக வேப்பமரத்தின் கீழே இருக்கிறது. அவரது ஓவிய சாமான்கள் இருக்கும் அறையின் மேல கருப்பு வெள்ளைப் புகைப்படம் ஒன்று இருந்தது. எடுக்கிறேன். அதில் குர்தாவுடன் இளம் வயது குதிரைக்காரர், அவர் மனைவி, ஓர் இளைஞன். அவர்களுக்கு இடது ஓரத்தில் சேரில் ஒரு குதிரை பொம்மை. அந்த இளைஞன், மகனாக இருக்கலாம். அழகாகத்தான் இருக்கிறார்கள். புகைப்படத்தை கையால் துடைத்துவிட்டு அங்கேயே வைத்துவிட்டு பார்த்தேன். இந்த குடும்பத்துக்குள் என்ன பிரச்னை வந்திருக்கும்?
இங்கு எல்லோருக்கும் பிரச்னை இருக்கிறது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி அடிதடியே நடக்கிறது. அவர்கள் கோபம் அதிகபட்சம் ஒருவாரம் கூட நீடிப்பதில்லை. பிறகு ராசியாகிவிடுகிறார்கள். பக்கத்து வீட்டு சுப்பையா அத்தானுக்கும் அவர் மனைவிக்குமான சண்டை தினமுமானது. பகலில் நடக்கும் சண்டை இரவில் சுமூகமாகிவிடுகிறது. ராமர் கோயில்தெரு குட்டையனுக்கும் அவன் மனைவிக்குமான சண்டைதான் அதிகபட்சமாக ஒரு மாதம் வரை நடந்தது. அவன் மனைவி சண்டை போட்டுவிட்டு அவளது ஊருக்குச் சென்றுவிட்டாள். பிறகு சொந்தக்காரர்கள் முன்னிலையில் அவர்கள் சேர்த்து வைக்கப்பட்டார்கள். கணவன்& மனைவி சண்டைகள் ஊரில் விவாகரத்து வரை சென்றதெல்லாம் இல்லை.
இங்குள்ள பிரச்னைகள் எல்லாம் இப்படியாக முடிந்துவிட, குதிரைக்காரருக்கும் அவர் மனைவிக்குமான சண்டை என்னவாக இருக்கும்? இந்த முறை குதிரைக்காரர் வந்ததும் கேட்கக்கூடாது என்று நினைத்திருந்த இந்த கேள்வியை கேட்டுவிட முடிவு செய்தேன். எப்படி கேட்க வேண்டும் என்ற ஒத்திகையும் மனதுள்.
‘சார்வாள். கேக்கம்னு தப்பா நெனக்காதிய. ஒங்களுக்கும் ஒங்க வீட்டுகாரம்மாவுக்கும் என்னதான் பிரச்னை சார்வாள்?’
‘அவளுக்கும் என் நண்பனுக்கும் பழக்கம்’
நான் யோசித்தது கேள்வியை. பதில் எப்படி வந்தது. எங்கிருந்து வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன். அது எனக்குள்ளிருந்துதான் வந்திருக்கிறது. ஆச்சரியமாக இருந்தது. இது என்ன தேவையில்லாத பிரச்னை. பிறகு அதை மறக்க நினைத்தேன். முடியவில்லை. ‘அவளுக்கும் என் நண்பனுக்கும் பழக்கம்’ என்ற வார்த்தை என்னுள் சுழன்றுகொண்டே இருந்தது.
‘அது என்ன பழக்கம்?’
‘அத பத்தி பேச விரும்பல. அவளுக்கு என்னை பிடிக்கலை. வந்துட்டேன்’ என்று தூரிகையை எடுக்கிறார் குதிரைக்காரர். வேகமாக எதையோ வரைகிறார். அவர் முகத்தில் கோபம் தெரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மூக்கும் கன்னமும் இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறுகின்றன. சில நேரம் பல்லைக் கடித்துக்கொண்டு வரைகிறார். அவர் நினைவில் ஏதோ ஒன்று தங்கிருப்பதாக மட்டும் புரிகிறது. தூரிகை வேகமெடுக்கிறது. வண்ணங்களைத் தொட்டு தொட்டு வரைகிறார். வேகமாக ஓடும் குதிரையை ஒருவன் அடக்கும் படம். அது தறிகெட்டு ஓடுவது போல இருக்கிறது. விடாமல் அடக்கத்துடிக்கும் அந்த ஒருவனின் முகம் தெரியவே இல்லை. அவன் கைகள் பலமாக லாடத்தை இழுக்கும் வேகம் தெரிகிறது.
திடீரென எழுகிறார் குதிரைக்காரர். கைகளை கழுவிவிட்டு ஊஞ்சலுக்குச் செல்கிறார். கிரீச் கிரீச் ஒலி கேட்கிறது.
ச்சே இது என்ன? ஏதோ ஒரு நினைவு வந்து என் பிடறியை ஆட்டுகிறது. தலையை இரண்டு முறை ஆட்டிவிட்டு, ஓவியம் வரைகிறபோது அவர் உட்காரும் சேரில் உட்கார்ந்தேன். எனக்கும் வரையும் எண்ணம் வந்தது. அவர் வந்து பார்த்துவிட்டு, இதை யார் வரைந்தது என்று கேட்க வேண்டும், ஆச்சரியப்பட வேண்டும் என்று நினைத்தேன். அந்தளவுக்கு என்னால் வரைய முடியுமா? என்றும் கேள்வி எழுந்தது. எதிர் சுவர் வெண்மையாக இருந்தது. என்னை அறியமலேயே தூரிகையையும் வண்ணக் குடுவைகளையும் எடுத்தேன். தண்ணீர் விட்டு கலக்கினேன். இப்போது என்னை குதிரைக்காரராகப் பாவித்துக்கொண்டு சுவரில் படம் வரைய ஆயத்தமானேன். அதற்கு முன் சாக்பீஸ் துண்டால் சுவரில் குதிரையின் முகத்தை வரைந்தேன். சரியாக வரவில்லை. இரண்டு மூன்று முறை மாற்றி மாற்றி வரைந்தேன். திருப்தியாக இல்லை. சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்துவிட்டு கண்முன் குதிரையின் முகத்தைக் கொண்டு வந்து வரைந்தேன். கழுதையாகக் கூட அது தெரியவில்லை. இருந்தாலும் வண்ணத்தில் தூரிகையை நனைத்து சுவரில் வைத்தேன். திடீரென குதிரையின் காலடி சத்தம் என் காதில் பலமாகக் கேட்கத் தொடங்கியது. பிறகு தூரிகை அதுவாகவே என் கைகளை அங்கும் இங்கும் இழுத்து படத்தை வரைகிறது. அந்த மாயத்தை வியக்கிறவனாக பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
நன்றி: தினகரன் தீபாவளி மலர்

3 comments:
//அதிகாலை ஆற்றுக்குளியல் சுகம்தான்//
இதற்கு குதிரைக்காரரின் மனம் கட்டுப்பட்டு ஆழ்வார்குரிச்சியிலேயே தங்க வைத்து விட்டதோ என்னவோ.
அருமையான படைப்பு! பகிர்வுக்கு நன்றி!
எழுத்துக்குத்தான் எத்தனை பலம்,எத்தனை வசீகரம்.காங்கோபாத்யாய எங்கள் தெருவுக்குள்ளும் அலைகிறார் .அழகு
Post a Comment