Saturday, March 1, 2014

காதலில் சுருங்கும் சினிமா

தமிழ் சினிமாவின் பிரதான கருவாக, காதல் மட்டுமே காலம் கடந்தும் இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை அதுபோன்ற படங்கள் மட்டுமே இங்கு அதிகமாக எடுக்கப்பட்டும் வருகின்றன.

‘காதல் எல்லோருக்குமானது. அனைவருமே காதல் வயப்பட்டிருப்பார்கள். அதனால் கதையுடன் ரசிகர்கள் எளிதாக ஒன்ற முடியும். அப்படி ஒன்றிவிட்டால் படம் ஹிட்’ என்கிறார்கள் சிலர்.

‘இன்றைக்குத் தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் இளம் வயதினர்தான். அவர்களைக் கவர காதல் மட்டுமே சிறந்த வழி. அதனால்தான் காதல் படங்கள் அதிகம் வெளியாகிறது’ என்கிற பேச்சும், சேனல் விவாதங்களில் வந்து போகிறது.

இப்படிப் பேசுகிறவர்கள் காதலை எந்தெந்த கோணத்தில் புதிதாகச் சொல்லலாம் என்று ஊட்டி, கொடைக்கானல் அறைகளுக்குள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். காதல் படங்கள் மட்டுமே அதிகமாக ஹிட்டாகி இருக்கிறது என்கிற புள்ளி விவரங்களையும் அடுக்குகிறார்கள் கோடம்பாக்கப் புள்ளிகள்.

ஆனால், ‘காதல் மட்டும்தான் சினிமாவா?’ என்கிற கேள்வி அவ்வப்போது எழுந்து அடங்கிக்கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தமிழ் சினிமா மதிக்கின்ற இயக்குனர் மகேந்திரன் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.
‘ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரச்னை இருக்கு. உங்க நாட்டுல, ‘ஐ லவ் யூ’ சொல்றது மட்டும்தான் பிரச்னையான்னு கேலி பேசும் அளவில்தான் தமிழ் சினிமா இருக்கு’ என்ற அவரது கருத்து கவனிக்க வேண்டிய ஒன்று.

வாழ்க்கையில் தனியொரு மனிதன் சந்திக்கும் பிரச்னைகள் நிறைய. உங்களுக்கும் நமக்கும் அவர்களுக்கும் ஏராளம் இருக்கிறது சிக்கல்களும் அவஸ்தைகளும். இது ஏன் சினிமாவாக எடுக்கப்படுவதில்லை? காதல் இல்லாத கதைகளைக் கொண்ட கொரிய, ஈரானிய, ஆங்கிலப் படங்களைத் தழுவி, படம் எடுக்கும்போது கூட அதில் காதலைச் சொருகும் நிலையில்தான் இருக்கிறார்கள் நம் இயக்குனர்கள்.

‘காதல் இல்லாமல் வந்த ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் ஹிட்டானதா? அதனால்தான் மீண்டும் காதல் படங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்று சொல்பவர்களுக்கு ‘சூதுகவ்வும்’, ‘கோலிசோடா’ உள்ளிட்ட சில படங்களை முன் வைக்க முடியும்.

காதல் இல்லாத அல்லது காதல் மட்டுமே இல்லாத வித்தியாசமான கதைகளை வரவேற்க ரசிகன் எப்போதும் தயாராகவே இருக்கிறான். அப்படிப்பட்ட படங்கள் வந்தால்தான் தமிழ் சினிமா அடுத்தக் கட்டத்துக்குச் செல்லும். சாதரண ரசிகனின் ரசனையை மேம்படுத்தவும் முடியும். அந்தக் கடமை நம் இயக்குனர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.

தலையங்கம் தினகரன் 10.03.2014

1 comment:

.எஸ்காமராஜ் said...

அச்சு அசலான ஆதங்கம்.சினிமா கலை என்பதை தாண்டி இண்டஸ்ட்ரி என்று தமிழகத்தில் சொல்லப்படுவதுபோல வேறெங்கும் சொல்கிறார்களா ?