Monday, January 14, 2013

போதையின் நிழல்

திருக்கிய மீசையும் சிவந்த கண்களுமாக அலையும் மாசியின் நடைதான் அவனது போதை அளவை தீர்மானிப்பதாக இருக்கும். போதையின் நடைகளை அதாவது போதையில் தள்ளாடுகிறவனின் கால் அசைவுகளை கணக்கிட்டால் அதுவும் குத்துமதிப்பாக ஏதாவதொரு நடன வகைக்கு ஒப்பானதுதான். சுமாரான போதை என்றால் கால்கள் அதிகம் அலைவதில்லை. அதிகப் போதைக்கு தாவி தாவி நடக்கும். இன்னும் அதிகமெனில் விழுந்து எழும் நடைதான். மாசி, சுமார் அல்லது அதிகம் அல்லது குறைவான போதையில் எப்போதும் இருப்பவன்.


இந்தப் போதையின் காரணமாக, உப்புச் சப்பில்லாத காரணத்திற்கெல்லாம் அரிவாளோடு வந்து அரற்றிவிட்டுப் போவது அவனது அனாவசிய நடவடிக்கைகளில் ஒன்று. இதற்காகப் பாப்பான்குளத்தில் இருந்து வாங்கிவரப்பட்ட அரிவாளைப் பயன்படுத்தி வந்தான். மாசியின் கணக்கில், இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் நான்கு பெட்டிகேஸுகளும் இருந்தன. இதற்கு முந்தைய வழக்கு ஒன்றில் நான்கு மாதம் சிறைக்குச் சென்று வந்திருந்தான் என்பதால், ‘அவங்கிட்டெ சொரணாவக் கூடாதுல. பட்டுன்னு கத்திய நீட்டிருவான்' என்கிற எச்சரிக்கை உணர்வு எல்லாருக்கும் இருந்தது.

அவனது பெயரைச் சொல்லிதான் குழந்தைகளுக்குச் சோறூட்டுவார்கள் பெண்கள். 'ஒழுங்கா திய்ங்கணும். இல்லன்னா, குடிகார மாசிட்டெ புடிச்சிக்குடுத்திருவென்' என்கிற மிரட்டலில் குழந்தைகள் உணவு உண்டு வந்தனர். தெருவில் அவன் நடந்து சென்றால் வீட்டின் வெளிக்கதவை அடைத்துவிட்டு பெண்கள் உள்ளுக்குள் ஓடிவிடுவார்கள். இந்த ஓடலுக்கு, ‘ஓத்த செத்தெயில பொம்பளயோ நின்னா, பட்டுனு கைய புடிச்சு இழுத்துருவானாம்லா' என்கிற காரணம் சொல்லப்பட்டு வந்தது. இதற்காகவே ஆற்றோர வயல் மற்றும் தோப்புகளுக்கு செல்கிற பெண்கள் இரண்டு மூன்று பேர்களாகவோ, அல்லது யாரையாவது துணைக்கு அழைத்துக்கொண்டோ சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

மாசியின் பிரதான தொழிலாகச் சாராயம் வடிப்பது இருந்தது. உப தொழில் விவசாயம். வடிப்பதன் பொருட்டு குடிப்பதும் உண்டென்பதால் சண்டை சச்சரவுகள் அவனுக்கு விருப்ப விஷயமானது. இதன் பொருட்டு மாசிக்கு ‘மரியாதை' தானாக ஒட்டிக்கொண்டது. உள்ளூரை விட வெளியூர்காரர்களே மாசிக்கு வாடிக்கையாளர்களாக இருந்தனர். ஊரில் மொத்தமே மூன்று நான்கு பேர்தான் குடிகாரர்கள். அவர்களும் மாசியிடம் சரக்கு வாங்கிக் குடித்துவிட்டு அரவம் இல்லாமல் வருபவர்களாகவே இருந்தனர். பக்கத்து ஊர் வாடிக்கையாளர்களான ஆழ்வார்க்குறிச்சியைச் சேர்ந்த துபாய் ஸ்டீபனும் பூவன்குறிச்சியை சேர்ந்த பாம்பே சுடலையும், சிகரெட் அட்டை சிட்டாவில் கணக்கெழுதி குடித்தும் வந்தனர். இந்த எளிய குடிகாரர்களால் ஊரில் எப் பிரச்னையும் இல்லை. இவர்கள் தினமும் குடிப்பவர்களாகவும் இருந்ததில்லை. ஆனால், இதில் மாசி விதிவிலக்கு. குடித்துவிட்டானென்றால், அரிவாளால் மிரட்டுவது, யார் வீட்டிலாவது கல்கொண்டு எறிவது என ஏதாவதொன்று நடக்கும். இதனால் ஊரில், ‘பெரும் குடிகாரன்' என்கிற தகுதியை பெற்றவனாக அவன் மட்டுமே இருந்தான்.
வழக்கமாக, அவன் சாராயம் வடிக்கும் கடனாநதி ஆற்றின், ஒற்றைத் தென்னம் பிள்ளை வேலியில் இருந்து, நடந்து சிவன் கோயில் வழியாக, ஊருக்குள் நுழைந்து விட்டால் கண்டிப்பாகச் சலம்பல் தொடங்கும். இவன்தான் சாராயம் காய்ச்சுபவன் என்றாலும் அதை வடிப்பது, அவனது சின்னக்கா மகன் உலுக்கையும் பெரியக்கா மகன் பூனைக் கண்ணனும்தான். இவர்கள் பெயருக்கு கூட குடிக்கக் கூடாது என்பது மாசி போட்டிருக்கிற கட்டளை. அதைத் தாண்டி அவர்கள் எப்போதாவது ருசி பார்த்துக் கொள்வார்கள். மாசிக்கு, உள்ளே போயிருக்கிற இளஞ்சூட்டு சாராயம் போகப் போகத்தான் ஆளைத் தூக்கும். கோயில் வந்ததும், திண்டில் படுத்திருப்பவர்களிடம், ‘‘இங்கெ யாம்லெ படுத்திருக்கியோ. வீட்டுல போயி தூங்குங்கெல'' என்று தள்ளாடியபடி விரட்டுவான். ‘‘யாரை வந்து வெரட்டுதெ. நீ ஒழுங்கா போலெ'' என்று யாராவது குரல் கொடுப்பார்கள். பிரச்னைதான். மாசி அரிவாளை தூக்க, அவர்கள் கல்லை எடுக்க ரணகளம் ஆரம்பமாகும். இது அப்படியே தொடர்ந்து, செக்கடித் தெருவில் வந்து நிற்கும் பிரச்னை.

அங்கு பலசரக்கு கடை வைத்திருக்கும் குட்டியிடம், ‘‘செயிது பீடி ஒரு கெட்டு'' என்று கேட்பான். இந்த நேரத்தில் துட்டு கேட்டால் தகராறு வரும் என்பதால், பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று விட்டுவிடுவான் குட்டி. கடையில் உட்கார்ந்து கதைப் பேசிக்கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் தள்ளி நின்றுகொள்வார்கள். அவன் இவர்களைப் பார்க்க ஆரம்பித்தால் உடனே இடத்தை காலிபண்ணிவிட வேண்டும் என்கிற ரீதியில் அவர்கள் பயத்துடன் தயாராகவே இருப்பார்கள். பீடியை பற்ற வைத்துவிட்டு அரிவாளை தூக்கியபடி, கெட்டவார்த்தைகளில் பேசத் தொடங்குவான் மாசி. அதற்குள் நான்கைந்து தெரு தள்ளி இருக்கிற அவனது வீட்டுக்குத் தகவல் போகும்.

அவன் பொண்டாட்டிக்காரி, ‘‘இதெ வேலயா போச்சு. எங்கெயும் விழுந்து கெடந்துட்டு வரட்டும். நான் அங்கெ போவ மாட்டென். எனக்குலா வேசடையா இருக்கு. ஊரு ஒலகத்துலயெல்லாம் ஆம்பளெ இல்லையா? இப்டியா இருக்காவோ எல்லாரும்? இங்கெ கெடந்து கேவலப்படணும்னு எந்தலையில எழுதிருக்காம், அந்த சொல்லமாடன்'' என்று புலம்பியவாறு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வாய்க்காலுக்கு குளிக்கக் கிளம்பி விடுவாள். ஒரு நாள் என்றால் பரவாயில்லை. தினந்தோறும் என்றால் எரிச்சல் வராதா என்ன? அவன் அம்மா அனச்சிதான் இப்போதும் போவாள்.

‘‘இவன் சாவவும் மாட்டாம்போலுக்கு. எங்கெ கொதவாளயெ அறுக்கென்னெ வந்திருக்காம், சனியம் புடிச்சவன்'' என்று திட்டிக்கொண்டே வருவாள். அம்மாவைப் பார்த்ததும் மாசி சத்தத்தை இன்னும் அதிகமாக்குவான்.

வாதமடக்கி மரத்தை தவிர எதிரில் யாருமற்ற தெருவில் நின்றுகொண்டு, ‘‘எவனா இருந்தாலும் வாங்கெல. இங்ஙெனயே நிய்க்கென் வாங்கெல'' என்று சாரத்தை நெஞ்சுவரைக் கட்டிக்கொண்டு சத்தம் போடுவான். நாக்கைத் தொங்கப் போட்டவாறு ஓடிவரும் டிரைவர் வீட்டு நாய், அவனை பரிதாபமாகப் பார்த்தபடி வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும். ‘‘ஏம்முன்னாலயே நின்னு வாலெ ஆட்டுதியா?'' என்று அரிவாளை ஓங்குவான். அதற்குள் நாய் ஓடியிருக்கும். ஓங்கிய அவனது கையை பிடித்துக் கொண்டு அம்மா வரச்சொல்லுவாள்.

‘‘ஏழா, நீ போழா. அவனெ வெட்டாம வரமாட்டென்'' என்று இல்லாத எதிரியை திட்டியபடி திமிறுவான். விஷயம் அவன் நண்பன் உச்சிமகாளிக்குப் போவும். யார் சொல்லியும் கேட்காத மாசி, உச்சிமகாளி சொன்னால் எதையும் கேட்பவனாக இருந்தான். ஆனால், மாசிக்கு நேரெதிரானவன் உச்சி. குடி இவனுக்கு ஆகவே ஆகாது. இவர்களின் நட்பை ஊரில் அதிசயமாகவே பார்த்து வந்தார்கள்.

‘‘ஏலெ கோட்டிக்காரப் பெயல. ரோட்டுல நின்னா சலம்புவெ. கூறுகெட்டவனெ, வா'' என்று உச்சி சொன்னதும் பெட்டிப் பாம்பாக நடப்பான். வீட்டுக்குப் போனாலும் தொடர்ந்து சத்தம் வந்துகொண்டே இருக்கும். அருகில் குடியிருக்கிற கோட்டி மணிக்குத்தான் எரிச்சல். இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்த்துவிட்டான். நான்கைந்து முறை சண்டையும் போட்டுவிட்டான். இப்போது பழகிவிட்டதால் கண்டுகொள்வதில்லை.

உள்ளூர் கடைகளில் மிரட்டியும் மிரட்டாமலும் மாசி, ஓசிக்கு சாமான்கள் வாங்கிப் போய்க் கொண்டிருந்ததை அடுத்து அவனுக்கு எதிராகக் கடைகாரர்கள் திடீர் கூட்டம் போட வேண்டியதாகிவிட்டது. உள்ளூர் பிரதான கடைகளைத் தாண்டி அக்கம் பக்கத்து ஊர்களிலும் காசில்லாமல் மிரட்டி சாமான்கள் வாங்கியதாக மாசி மீது குற்றச்சாட்டு. அவன் அம்மாவிடம் கேட்டால், ‘‘எனக்கு தெரியாது. ஏங்கிட்டெ கேட்டா கொடுத்தியோ. அவன் பாடு, ஒங்க பாடு. நா என்ன செய்ய முடியும்?'' என்று கையை விரித்துவிட்டாள். இப்படியே விட்டால் வியாபாரம் செய்ய முடியாது என்பதால் திடீர் கூட்டம். கூட்டத்தில் மாசி மீது போலீஸில் புகார் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மறுநாள் அம்பாசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துவிட்டு, தெரிந்த போலீஸ்காரர் ஒருவரை பார்த்துப் பேசிவிட்டும் வந்தார்கள்.

அவர்கள் வந்த மறுநாள், ‘‘எவம்லெ போலீசுக்குப் போவாம். பாத்துக்கிடுதென். கையெ காலெ ஒடிச்சிரமாட்டென்?'' என்று செக்கடி தெருவில் நின்று மாசி கத்தியபடி குத்துக்கல்லில் உட்கார்ந்திருக்கும் போது, போலீஸ் ஏட்டு அவன் பொடதியில் அறைந்தார். மூஞ்சி குப்புற விழப்போனவனை, இன்னொரு போலீஸ்காரர் பிடித்துக்கொண்டார். ‘‘எழுந்திர்ல'' என்று பஸ்&ஸ்டாண்டுக்கு அழைத்துப் போனார்கள். இதுவரை கத்தியபடி இருந்தவன், அவர்களின் முன்னால் வாயை பொத்தி நடந்துகொண்டிருந்தான். பஸ்&ஸ்டாண்டில் கடை வைத்திருக்கும் தங்கராசுவும் குட்டி மணியும் போலீஸ்காரர்களுக்கு கலர் பாட்டில்களை கொண்டு வந்து கொடுத்தார்கள்.

மாசிக்கு இது ஒன்றும் புதிதில்லை. அடிக்கடி போய் வருகிற ஸ்டேஷன்தான். எல்லா போலீஸ்காரர்களுமே இவனை அடித்தவர்கள்தான். ஸ்டேஷனில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கிற யாராவது வந்து அவனை மீண்டும் அடிப்பார்கள். வலி தாங்காமல் கத்துவான். பிறகு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு உள்ளூர் சிறையில் ரிமான்ட். பதினைந்து நாள் கழித்து வெளியில் வருவான். வந்து இரண்டு மூன்று நாட்கள் சும்மா இருப்பவன் மீண்டும் தொடங்கிவிடுவான்.

இப்படி ஏதாவதொரு வழக்கிலோ, போலீசுக்கு பயந்தோ அல்லது, ‘உள்ளே' சென்றுவந்தால் கூட, ‘‘கேரளாவுக்கு வேலைக்குலா போயிருந்தென்'' என்று சொல்வது அவனுக்கு வழக்கம். ஆனால், ஊர்க்காரர்களுக்கு ஏதாவதொரு கதை கிடைத்துவிடும். ‘‘மூதி, பாளயங்கோட்டெ ஜெயில்ல குப்புற கெடந்துட்டு நம்மட்ட பிராடு உடுததெ பாரென்?'' என்பார்கள். இம்மாதிரி மாசி, எஸ்கேப் ஆகும் விஷயம் பற்றி அவனது அம்மாவுக்கும் மனைவிக்கும் தெரிந்திருக்கும். இருந்தும் குடும்ப கவுரவம் காக்கும் பொருட்டு யாரிடமும் வாய் தவறிக் கூட சொல்லிவிட மாட்டார்கள்.

காலம் வேகமாக ஓடுகிறது. குடிகார மாசி, குடும்பத்தின் பொருட்டு திருப்பூருக்கு இடம்பெயர்ந்தான். கோயில் கொடையோ, தீபாவளி, பொங்கல் விழாக்களிலோ மட்டும் தலைகாட்டிவிட்டு போகும் மாசியை, பிறகு சில வருடங்களாகக் காணவில்லை. போதையின் அடையாளம் கொண்ட அவனது வீடு, மண் சுவர் கரைந்து, ஓடுகள் விழுந்து கருவை முட்களுடன் சிதிலமாகி கிடக்கிறது. மாசி என்கிற ஒரே ஒரு குடிகாரன் மட்டுமே இருந்த ஊரில், டாஸ்மாக் தயவில் ஏராள இளங்குடிகாரர்கள், ‘பெருமையாக' உருவாகி இருக்கிறார்கள். குடியை வெறுக்கும் மாசியின் நண்பன் உச்சி, ‘‘மருமவனெ, ஒரு கோட்டரு வாங்கி தாரும்வே?'' என்று கேட்டபோதுதான் நொறுங்கி போனேன் நான்.

5 comments:

கோவி said...

இன்றே தங்கள் தளம் கண்டேன் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஹுஸைனம்மா said...

//மாசி என்கிற ஒரே ஒரு குடிகாரன் மட்டுமே இருந்த ஊரில், டாஸ்மாக் தயவில் ஏராள இளங்குடிகாரர்கள், ‘பெருமையாக' உருவாகி இருக்கிறார்கள்.//

ம்.. குடிகாரனை அதிசயமாக நின்று வேடிக்கை பார்த்த காலம் எனது சிறுவயதில்.

P.PAUL VANNAN said...

Desiya avamanam ippaluthu kudikkamal irunthal.Near future law will be IMPLEMENTED for non alcoholic consumers to pay 45 % of their income to Tamil Nadu govt as running charge for govt .NON DRINKERS ARE CRIMINALS AND THEY WILL BE PUNISHED BY GOVT.

till my age of 22 , I saw liquor in cinema and NOW MY CHILDREN ARE NAMING THE BRANDS ( DUE TO TV ADVERTISEMENT AND 3 OR 4 NOS. OF TASMAC IN EVERY VILLAGE)SHAME FOR US AND TAMIL NADU GOVT.NEXT GENERATION'S STYLE OF LIFE IS A BIG QUESTION MARK ? THOUGH IT IS LATE , IT IS THE PEAK TIME TO CLOSE ALL BAR AND TASMAC TO GIVE BETTER FUTURE FOR NEXT GENERATION.
குடியை வெறுக்கும் மாசியின் நண்பன் உச்சி, ‘‘மருமவனெ, ஒரு கோட்டரு வாங்கி தாரும்வே?'' என்று கேட்டபோதுதான் நொறுங்கி போனேன் நான்.
MORE PATHETIC AND IT IS THE REAL STATUS.

ஆடுமாடு said...

கோவி, ஹுசைனம்மா நன்றி.

ஆடுமாடு said...

//NEXT GENERATION'S STYLE OF LIFE IS A BIG QUESTION MARK ? THOUGH IT IS LATE , IT IS THE PEAK TIME TO CLOSE ALL BAR AND TASMAC TO GIVE BETTER FUTURE FOR NEXT GENERATION//

சார், உண்மைதான். 'மதுபானக்கடை' படத்துல ஒரு டயலாக் வரும். 'நாம தள்ளாடுனாதாண்டா, கவர்ன்மெண்ட் தள்ளாடாம நிற்கும்' என்று. அது உண்மைதான். இதன் காரணமாக இவர்கள் இனி டாஸ்மாக்கை ஜென்மத்துக்கும் மூட மாட்டார்கள். இவர்கள் அறிவிக்கிற இலவசத்துக்கு 'தண்ணீர்' காசுதான் கைகொடுக்கிறதாம். தமிழகத்தில் சமீபத்திய சரக்கு விற்பனை பற்றிய சின்ன ரிப்போர்ட்:
புத்தாண்டு விற்பனை: 170 கோடி ரூபாய்.
போகிக்கான விற்பனை: 85 கோடி ரூபாய்
பொங்கல் பண்டிகை விற்பனை: 95 கோடி ரூபாய்.
காணும் பொங்கல் விற்பனை: 120 கோடி ரூபாய்.

உருப்டாப்லதான்.

நன்றி பால்வண்ணன் சார்.