Monday, December 31, 2012

சைக்கிள்கள் அடையும் கூடு

வேப்ப மரத்தின் கிளையில் தொங்கும் கிழிந்த டயர்களும் டியூப்களும்தான், மந்திரதாஸ் சைக்கிள் கடையின் பிரதான அடையாளம். ஊரில் இருக்கிற ஒரே சைக்கிள் கடை என்பதால், அடையாளம் தேவையில்லை என்றாலும் கேட்கிறார்களா என்ன? ‘வெளியூர்க்காரென் வாராம்னு வையி. அவனுக்கு சைக்கிளு கடெ எங்கெயிருக்குன்னு தெரியாண்டாமா? இதுவோளப் பாத்தாம்னா, நின்னு பஞ்சரு கிஞ்சரு ஒட்டுவாம்லா?' என்று சொல்லப்பட்ட ஆலோசனையின் பேரில் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன அந்த டயர்களும் டியூப்களும்.

மரத்தை அடுத்து கட்டப்பட்டிருந்தது கடை. பஸ்கள், கடை முன்தான் நிற்கும் என்பதால் எப்போதும் வெள்ளையும் சுள்ளையுமாக நான்கைந்துபேர் நின்றுகொண்டிருப்பார்கள். அவர்களுக்காக, மரத்தின் அருகே சுவரோடு ஒட்டி திண்ணை போன்று சிமென்ட் தளம் அமைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் அந்த இடத்தை பஸ்சுக்கு செல்லாதவர்களே ஆக்கிரமித்துக் கதைப் பேசிக்கொண்டிருப்பார்கள்.

முன்பக்கம் தென்னங்கூரை வேயப்பட்டக் கடையினுள் நேரெதிரே, கருப்பு வெள்ளையில் பெரியார், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் படங்கள் மாட்டப்பட்டிருக்கும். பத்தையூரில் இருந்து ஊருக்கு துஷ்டி சொல்ல வந்த இசக்கி, போட்டோவை பார்த்துவிட்டு, ‘‘இதுல ஒங்கப்பா யாரு மாமா. நடுவுல உள்ளவரா, மொதல்ல உள்ளவரா?' என்று கேட்டதில் நொந்து போனார் மந்திர தாஸ். இதே போல தோப்புக்கு போக சைக்கிள் கேட்ட பேச்சி தாத்தாவும், ‘ஒங்கப்பனெ மொத படத்துல வச்சிருக்கெ சரி. பக்கத்துல இருக்கவோளாம் யாருடெ?'' என்று கேட்டதற்குப் பிறகுதான் பிரச்னைக்கு முடிவு கட்ட நினைத்தார். அதாவது அவரது அப்பா போட்டோவை தேடி கொண்டு வந்து கிழக்கு நோக்கி மாட்டி, பொட்டு வைத்து, மாலை அணிவித்ததை அடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

போட்டோக்களுக்கு கீழே, எங்கெங்கு காணினும் ஏதாவது ஒரு பொருள், இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இடப்பக்கம் அழுக்கடைந்த நான்கைந்து பழைய சைக்கிள்கள் சரிந்து கிடக்க, முன் மற்றும் பின்பக்க டயர்கள் இல்லாத சைக்கிள்கள் அரைகுறையாக அனாதையாகத் தூங்கிக்கொண்டிருக்கும். அவற்றின் மேல், உடைந்த நாற்காலிகள். வாசலில் இருந்து பார்க்கும்போது சைக்கிள்கள் அடைந்திருக்கும் கூடெனத் தோன்றும். இவற்றை ஒதுக்கி, கடைக்குள்ளே மந்திரதாஸ் செல்வதென்பது அவ்வளவு லேசுபட்டதல்ல. ஆனால் தடைகளை தகர்த்து தினமும் உள்ளே சென்று வந்துகொண்டுதான் இருக்கிறார். கடையை திறந்ததும், ‘இதுவோளெ ஒரு நாளு கிளீனு பண்ணணும்' என்று தினமும் நினைத்தாலும் ஒரு நாளும் அதை செய்யத் தோன்றாது அவருக்கு.

முன் கூரையின் கீழே, பஞ்சர் பார்ப்பதற்கான டேப்புக்கட்டை (உப்புத்தாள்), சொல்யூஷன், வெட்டப்பட்ட சைக்கிள் டியூப்புகள், உட்கார்ந்து கொள்வதற்கான சிறு பலகை, டியூப்பை டெஸ்ட் பண்ணுவதற்காக, ஈயச் சட்டியில் அழுக்கு தண்ணீர். அந்தரத்தில் தலைகீழாகத் தொங்கும் டயர்கள் கழற்றப்பட்ட சைக்கிள்கள், கீழே நெளிந்து கிடக்கும் ரிம், வால் டியூப்புகள், நட்டுகள், பீடிகட்டு போட்டு வைக்கப்பட்டிருக்கும் சிறு டப்பா. விற்பனைக்காக ஓரத்தில் தொங்கும் சீட் கவர், கைப்பிடி கவர், பார் கவர், பூட்டு, பெடல் கவர்... இவற்றுக்கு மத்தியில் உட்காருவது என்பது மந்திர தாஸால் மட்டுமே சாத்தியமான ஒன்று.

கடை முழுவதும் ஆக்கிரமித்திருக்கும் சொல்யூஷன் வாசனையை நுகர்ந்துகொண்டே, சாரத்தை டவுசர் தெரிவதுபோல் கட்டியவாறு பலகையில் உட்கார்வார். அதற்கு முன் கர் புர்ரென இழுத்து நெளித்து சத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் பஞ்சாயத்து ரேடியோவின் சவுண்டை குறைத்துவிட்டும், அதனருகில் பாதி வளர்ந்திருக்கும் பூவரசம் செடிக்கு வாளியில் தண்ணீர் ஊற்றிவிட்டும் வருவார். அவருக்கு இடது கண்ணில் கொஞ்சம் பிரச்னை. அதில் பார்வை பளிச்சென்று தெரியாது. அதனால் வலது கண்ணைத் தூக்கி, திருப்பிதான் ஒவ்வொன்றையும் பார்ப்பார்.

கடையில் இருந்து காற்றடிக்கப்பட்ட சைக்கிள் டியூப்பை தண்ணீருக்குள் அமுக்கி பஞ்சரான இடத்தை அவர் தேடிக் கொண்டிருக்கும்போதோ, அல்லது உட்கார்ந்திருக்கும்போதோ எட்டு மணி, தேவி பஸ் வரும். ஒருவரோ, இருவரோ இறங்கி, ‘நான் ஊருக்கு வந்துட்டென்' என்பது மாதிரி, மந்திர தாஸைப் பார்த்து புன்னகைப்பார்கள். அந்த புன்னகைக்கு, ‘எங்கடெ போயிட்டாரெ' என்று அவர் கேட்க வேண்டுமென்பது அர்த்தம். அவர் கேட்காவிட்டாலும், ‘புலியூருக்கு சித்தி வீட்டுக்குப் போயிட்டாரன். அங்கெல்லாம் என்னா மழைங்கெ' என்று ஆரம்பிப்பார்கள். அதை நிறுத்துவது மாதிரி, ‘நீ மொதல்ல வீட்டுக்குப் போடெ. இன்னும் வரலையென்னு தேடப் போறாவோ' என்பார் அவர்.

எட்டு எட்டரை ஆனதும் செல்லையா கடையில் இருந்து, டீ வரும். குடித்துவிட்டு முதல் பீடியை பற்ற வைத்து உட்காரவும் செய்தித்தாளோடு மீசையை தடவிக்கொண்டே வந்து சேர்வார், கந்தசாமி. அவரது கூட்டாளி. பேப்பரை வாசித்துவிட்டு இருவரும் அரசியல் பேச ஆரம்பித்தால், சண்டை நடப்பது போல்தான் இருக்கும். எதிரெதிர் கட்சித் தலைவர்களை இவர்களாகவே பாவித்துக்கொண்டு நடக்கும் பேச்சில் காட்டம் அதிகமாகவே இருக்கும். கடைக்கு பக்கத்து வீட்டுக்காரியான ராசம்மா, ‘அவயத்தை கொறெக்கெளா? மாடுவோ களெயுது' என்று முணங்கிக் கொண்டு போவாள்.

‘நீ போ தாயீ' என்கிற கந்தசாமி, ‘இப்டி ஒண்ணுந் தெரியாததுவோட்ட உக்காந்துகிட்டு என்னத்தெ அரசியல் பேசங்கெ?' என்று அலுத்துக் கொள்வார். பிறகு மெதுவாகப் பேசுவார்கள். ஆனால், திடீரென்று சத்தம் எகிறும். புதிதாக வருபவர்கள் அந்தப் பகுதியை கடக்கும்போது, நின்று வேடிக்கைப் பார்த்துவிட்டுதான் போவார்கள். சிறிது நேரத்தில் பால் வினியோகம் பண்ணும் சிசெர் ராமசாமியும் குட்டிக் கண்ணணும் வந்துவிடுவார்கள். ‘ஒங்களுக்கு இதெ வேலெயா போச்சு' என்று கடையில் இருக்கும் டப்பாவில் இருந்து ஒரு பீடியை எடுத்து இழுப்பான் சிசெர். இருவரும் கடையில் உட்கார்ந்துகொண்டு மந்திர தாஸுக்கு ஸ்பேனர்களை எடுத்துப் போடுவது, சாப்பிட வீட்டுக்குப் போனால் கடையை பார்த்துக் கொள்வது என எடுபிடி வேலை செய்துகொண்டிருப்பார்கள்.

அதற்குள் குட்டை சைக்கிள் எடுக்க, இரண்டு மூன்று பொடிசுகள் வரும். ‘குட்டெ சைக்கிளா? மெதுவா ஓட்டிட்டு வரணும். கீழ போட்டியோன்னா, பெறவு சைக்கிள் தர மாட்டென்' என்று அட்வைஸ் பண்ணிட்டு, ‘மணியை பாத்துக்கிடுங்கலெ. எட்டே முக்காலு. ஒன்பதெ முக்காலுக்கு வந்தெர்ணும்' என்று கொடுப்பார். இதற்கிடையில் இன்னும் இரண்டு மூன்று பொடிசுகள் அதே சைக்கிளை கேட்டு வரும். ‘ஒரு மணி நேரம் கழிச்சு வாங்கென்னா?' என்று அனுப்பிவிட்டு பேச்சைத் தொடர்வார். அந்த ஒரு மணி நேரமும் கடைக்கு அடுத்து இருக்கிற ஆலமர மூட்டில் சைக்கிளை ஆவலோடு எதிர்பார்த்து அமர்ந்திருப்பார்கள் பொடிசுகள். திண்டில் உட்கார்ந்திருக்கும் குட்டிக்கண்ணன், ‘ஏண்ணே ஒரு பிய்ஞ்ச டயரு இருந்தா தா. அண்ணன் மவென் வட்டு ஓட்டணுன்னு அழுதுட்டிருக்காம்' என்பான். கடைக்குள்ளெ ஓட்டை விழுந்து கிடக்கும் டயர்களில் ஒன்றை எடுத்துக் கொள்ள சொல்வார் அவர்.

இதைத் தாண்டி பக்கத்து ஊர்களான பூவன்குறிச்சி, தாட்டாம்பட்டி, கோட்டைவிளை பட்டி, கருத்தப்பிள்ளையூர், கல்யாணிபுரம், ஆழ்வார்க்குறிச்சி, பாப்பான்குளம் ஆகியவற்றுக்கு செல்ல சைக்கிள் கேட்டு வருபவர்களும் உண்டு. சிறு நோட்டு ஒன்றில் பெயர், நேரம் மற்றும் வண்டி எண்ணை எழுதி வைத்துக் கொண்டு கொடுப்பார். மாலை ஆறு மணிக்கு மேல் சினிமா பார்க்க சைக்கிள் கேட்பவர்களுக்கு ஆள் பார்த்துதான் தருவார் தாஸ். ஏனென்றால் வக்கெட்டெயும் கப்பக்காலனும் செய்த வேலை.

புதிதாக நான்கு சைக்கிள்களை இறக்குமதி செய்திருந்தார் தாஸ். அதில் ஒன்றை சினிமாவுக்கு போவதற்காக இவர்களுக்கு கொடுத்தார். சைக்கிளை வாங்கிய இருவரும் கோட்டைவிளைப்பட்டியில் ஓவராகப் பயினி குடித்துவிட்டு போதையில் மல்லாந்துவிட்டார்கள். தெளிந்து எழுந்தபோது கை, கால்களில் சிராய்ப்பு. முகத்தில் வீக்கம். சைக்கிளை காணவில்லை. வி.கே.புரம் போலீஸில் புகார். பிறகு தேடிப் பார்த்ததில் கிணறு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது வளைந்து நெளிந்த சைக்கிள். அது கிடைத்துவிட்டாலும், ‘குடிக்க போறதுக்கு நீதாம் ஒவ்வொருத்தனுக்கும் சைக்கிள் கொடுக்கியோ? இன்னொரு தெடவை இப்டின்னா, ஒன்னியெ தூக்கி உள்ளெ வச்சிருவென்' என்று புதிதாக வந்த எஸ்.ஐ., மந்திர தாஸை போட்டு தாக்கியதில் நடுங்கி போனார்.

‘‘தப்பு பண்ணுனது அவனுவோ. என்னெய போட்டு தாளிக்கானுவோ பாரென்' என்று நொந்து போனவர், பிறகு சினிமாவுக்கு சைக்கிள் கொடுப்பதில்லை. இருந்தாலும், பொய் சொல்லி சைக்கிள் வாங்கிக்கொண்டு பயினி குடிப்பதும் சினிமா பார்க்கச் செல்வதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

மந்திரதாஸ் சைக்கிள் கடைபற்றி இன்னொரு புகாரும் சொல்லப்பட்டு வந்தது. அதை மறுத்துவந்தார் அவர்.

‘‘அதெப்படிண்ணெ, கரீட்டா, ஒங் கடெகிட்டெ வந்ததும் சைக்கிளு பஞ்சராவுது? ஆணி கீணி போட்டு வச்சிருக்கியா?'' என்று சிரித்துக் கொண்டே கிண்டலாகக் கேட்டான் அம்மாசி.

‘‘இந்தெ எடக்குலாம் இங்கெ வேண்டாம். அப்டி சோறு திய்ங்கெணுன்னு அவுசியம் இல்லெ எனக்கு'' என்பார் தாஸ். பிறகு ஜிவ்வென்று கோபம் ஏறும். மண்டை உஷ்ணமாகிவிட்டால் கட்டுப்படுத்துவது கஷ்டம். சத்தம் கேட்டு கந்தசாமி, வருவார்.

‘‘சும்மா எடக்குக்கு சொன்னதுக்கு இவ்ளவு கோவப்படுதாவோ?'' என்பான் அம்மாசி.

‘‘ச்சும்மா எப்டிலெ இந்த வார்த்தெய சொல்லுவெ. கஞ்சிக்கு வழியத்தவன்னு நெனச்சியா என்னெய. கடுவா பல்லு அந்து போவும், ஆமா''- சத்தம் எகிறும்.

‘‘சரி, சரி வுடுடா. சின்னப் பயெ தெரியாம சொல்லிட்டான். அதுக்குப் போயி, தொண்டயெ போடுதெ?'' என்று சாந்தாப் படுத்திவிட்டு, வந்தவனை தள்ளிக்கொண்டு போவார் கந்தசாமி. ‘‘அவனுக்கு ம்முன்னாலே மூக்கு செவந்து போவும். அவங்கிட்டெ போயி இப்டியா கேப்பெ. மேக்க போயி, டீயெ கீயெ குடிச்சுட்டு வா. சரிகட்டி வைக்கென்'' என்று சொல்லிவிட்டு வருவார்.

கொடூரமாக நடந்திருக்கிற எல்லாவற்றுக்கும் கோபம்தான் பிரதானம். அது உள்ளுக்குள் தீமூட்டிக் கொண்டே இருக்கிறது. ஒரு போரில், கலவரத்தில், சண்டையில், கொலையில், தற்கொலையில் எல்லாவற்றிலும் ஆணிவேராய் இருக்கிறது கோபம். மனைவியுடன் வந்த சண்டையில் அப்படியானதொரு பெருங்கோபம் அவரைப் பதம்பார்க்க, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார் மந்திர தாஸ். கம்யூனிசம், புரட்சி, பகுத்தறிவு என்று பேசி வந்த தாஸ் இப்படியொரு முடிவை எடுப்பார் என்று யாரும் நினைக்கவில்லை. நம்பமுடியாத அவரது அகால மரணம் அதிகம் தாக்கியது கந்தசாமியைதான்.

தாஸுக்குப் பிறகு சைக்கிள் கடை காணாமல் போய்விட்டது. அவர் வைத்த பூவரசம் செடி மரமாகி, மஞ்சள் பூக்களை பூத்து வைத்திருக்கிறது பேரழகோடு. அதன் அருகில், இப்போது மெக்கானிக் ஷாப் வைத்திருக்கிறான் மோகன். அங்கு பழுதாகி நிற்கிற பைக்குகளைப் பார்க்கும் போதெல்லாம், தாஸ் கடை சைக்கிள்களாகவே தெரிகிறது.

2 comments:

இராஜராஜேஸ்வரி said...



"சைக்கிள்கள் அடையும் கூடு"
பூவரசம் செடி மரமாகி, மஞ்சள் பூக்களை பூத்து வைத்திருக்கிறது பேரழகோடு.
தாஸின் முடிவு சோகம் ..


இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

P.PAUL VANNAN said...

‘‘ச்சும்மா எப்டிலெ இந்த வார்த்தெய சொல்லுவெ. கஞ்சிக்கு வழியத்தவன்னு நெனச்சியா என்னெய. கடுவா பல்லு அந்து போவும், ஆமா''- சத்தம் எகிறும்.
intha EGO or Self respect feelings than ,avarai antha tharkulai mudivukku thallieduchu .....

oorroda cycle kadaiya kann munaadi konduvanthidiye , vazhalthukkal.