Monday, July 26, 2010

காடு-15

இருட்டு நெருங்கும் நேரம் என்பதால் வருபவர்களை அடையாளம் காண முடியவில்லை. காற்றும் குளிரும் இன்னும் அதிகமாகிக் கொண்டிருந்தது. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி கூடு திரும்பி கொண்டிருந்தன பறவைகள். அவற்றின் சட சட ஒலி வனாந்தரத்தை இசையாக்கிவிட்டு சென்றது.


மாடுகள் படுக்கும் இடத்துக்கு 20 அடி தள்ளி வேலி போன்றதொரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. மாடுகள் இன்னும் அசைப்போட்டுக்கொண்டிருந்தன. முகத்தை சிலுப்பிக்கொண்டு அலையும் கப்பை கொம்பு மாடு மட்டும் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு நின்றது. அதன் பார்வையில் காடு வேறொரு ரசனையை தந்துக்கொண்டிருக்க முடியும். பச்சையாக தெரியும் எதிலும் வாயை வைத்துவிடக்கூடிய இந்த மாடுகளுக்கு, இங்கு பசி பஞ்சம் வர வாய்ப்பில்லை என்பதை கூட கப்பை கொம்பு கணித்துக்கொண்டிருக்கலாம். அதனதன் கணிப்புக்கு ஆட்பட்டதே வாழ்க்கை.

உ.மகாளி எதிரில் வருபவர்களை பார்த்துவிட்டு, 'முத்தையாண்ணே யாரோ வாராவோ' என்றான். குடிசை அமைக்கும் பணியிலிருந்த கேசரியும் முத்தையாவும் வேலையை போட்டுவிட்டு அவர்களைப் பார்த்தார்கள். நொடிஞ்சானும் கேசரியும் ஒரே குரலில், 'யாரு' என்று கத்தினார்கள். தவிட்டானும் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தான்.

'நம்ம ஊரு ஆளுவோதான். இன்னைக்குதான் வந்தேலா?'

மூவரில் ஒருவன் நெருக்கமாக வந்து சொன்னான். நீண்ட நாள் பழக்கப்பட்ட குரல் போல் இருந்தது அது. ஆனாலும் பழக்கமில்லாதவர்கள். இளம் வயதுடைய ஒருவனும் இரண்டு பெரியவர்களுமாக அவர்கள் தெரிந்தார்கள். பெரியவர்கள் இருவரும் வேட்டியை உடல் முழுவதும் மூடிக்கொண்டு நின்றிருந்தார்கள். கருத்தப்பிள்ளையூர்க்காரர்க்கள் என்றும் தேன் எடுக்க வந்ததாகவும் இருட்டி விட்டதால் உங்கள் சத்தம் கேட்டு வந்ததாகவும் சொன்னார்கள். இதை தாண்டிய அவர்களின் நோக்கம், 'பீடி இருந்தா கொடுங்களேன்' என்பதாக இருந்தது.

விலங்குகள் மட்டுமே அலையும் காட்டுக்குள் இப்படியானதொரு மனிதர்களையும் பீடியையும் காண்கிற மகிழ்ச்சி அலாதியானது. கேசரி பல முறை பீடிக்கான அவஸ்தையை அனுபவத்திருக்கிறான். மேல பத்தில் (வயலில்) அதிகாலை உழுதுகொண்டிருந்த போது, தீப்பெட்டி தண்ணீருக்குள் விழுந்தததை அவன் கவனிக்கவில்லை. ஆயாசமாக வந்த தருணத்தில், மாட்டை அவிழ்த்து தோப்பில் விட்டுவிட்டு, பீடி குடிக்க நினைத்தான். பீடி இருந்த இடமான இடுப்பு முடிச்சில் தீப்பெட்டி இல்லை. தேடினால், உழுத மண்ணோடு குச்சி சிதைந்து கிடந்தது தீபெட்டி. விதையாக சிதைந்திருந்தால் முளைத்திருக்கும். தீப்பெட்டிகள் முளைக்க வாய்ப்பில்லை. சுற்றும் முற்றும் தேடியும் ஒரு குஞ்சானையும் காண முடியவில்லை. பக்கத்து வயல்காரரான செவத்த கண்ணுவுக்கு பீடி குடிக்கும் பழக்கமில்லாததால் அவரிடம் தீப்பெட்டி இருக்க இயலாது. கேசரி அப்போது தவித்த தவிப்பு அவனுக்கு மட்டுமேயானது.

கொஞ்ச நேரம் பேசிவிட்டு, அவர்களுடனேயே தங்குவதென்று முடிவு செய்த வந்தவர்கள், இவர்களுடன் ஒத்தாசையில் இறங்கினார்கள். வட்டவடிவமாக வேலி மாதிரி அமைக்கப்பட்ட செத்தைகளில் ஒருவன் தீ வைத்தான். குப்பென்று கொஞ்சம் கொஞ்சமாக தீப்பற்றி செந்நிற வட்டமாகியது தீ. குளிரின் இறுக்கத்திலிருந்து மாடுகள் தகதகப்பை உணர்ந்தன.

அடுத்து குடில் ரெடியானது. கீழிருந்து மேல் செல்ல ஏணியும் அமைக்கப்பட்டது. வந்திருப்பவர்களில் ஒருவன் நன்றாக சமைப்பான் என்பதால் அவனிடம் சமையல் ஒப்படைக்கப்பட்டது. குடிலின் கீழிருந்து ஆரம்பித்தான். தினமும் அசைவம் தேடும் தவிட்டானுக்கு இன்று மட்டும் சைவம்.
காட்டின் சமையலுக்கு ருசி ஜாஸ்தி. விதவிதமாக சமைக்கப்படா விட்டாலும் வெறும் சோறும், துவையலோ அல்லது ஊறுகாயா இருந்தால் கூட கொண்டா கொண்டா என்று இழுக்கும் ருசி. வழக்கமாக வீட்டில் சாப்பிடுவதை விட இங்கு சோறு அதிகம் இழுக்கும். அது காட்டின் ராசியோ என்னவோ?

இருட்டி விட்டது. இரண்டு மூன்று தீப்பந்தங்கை உருவாக்கி குடிலின் கிழ் மேல் பக்கங்களில் சொருவியிருந்தார்கள். வேலியில் எரியும் தீயின் வெளிச்சமே போதுமென்றாலும் இன்னும் சிறுது நேரத்தில் வேலி தீ கனலாகிவிடும் என்பதால் இந்த ஏற்பாட்டை செய்திருந்தார்கள். குடிலின் மேலிருந்து பார்க்கும் போது தகதகக்கும் சிகப்பு நிற நிலா மாதிரி தோன்றியது வேலி.
உ.மகாளி, கந்தையாண்ணன் மற்றும் கேசரியுடன் வேலி தீயில் குளிர்காய்ந்துகொண்டிருந்தான். தூரத்தில் கேட்கும் சில மிருகங்களின் சத்தங்களை,' இது காண்டா மிருகத்தோட சத்தம் மாதிரிலா இருக்கு", 'அது கரடி சத்தமால்லா இருக்கு" என்று அளந்துகொண்டிருந்தான் கேசரி. விலங்குகளோடு வாழ்வதாக நினைத்துக்கொண்டான் உ.மகாளி. உலகம் காடென்றால் நம் வாழ்க்கையும் அப்படித்தான். விலங்களோடுதான் வாழ்க்கை. நல்ல, கெட்ட என்பதை சேர்த்துகொள்வதை பொறுத்தது அது.

'ஏல, அண்ணாச்சி சோறு பொங்கிட்டாவோ. சாப்டுவோம்'

கூவெலயில் சுட சுடச் சோறு பரிமாறப்பட்டது. வழக்கமாக சமைப்பது என்பது தண்ணீர் வடிக்காமல்தான். ஆனால், புதிதாக வந்த மூன்று பேருக்காக, குழம்பு, பொரியல் என்று மாறியது இன்றைய சாப்பாடு.

'அண்ணாச்சி, நல்லா சமச்சிருக்கேளே... எங்கயும் வேலை பார்த்தேலோ?'

'நான் எங்க வேல பாத்தேன். ஜமீன் வீட்டுல எடுபிடி சமையக்காரன். ராசாவுக்கு பெறவு அங்க இல்லை. வீட்டுக்கு வந்துட்டேன். கொஞ்சமா,ஊர்ல நெலம் கொடுத்திருந்தாவோ. அதை வச்சு வெவசாயம் நடக்கு. எப்பவாவது தோணுச்சுன்னா, 'தேன் எடுக்க வருவோம். அம்பாசமுத்ரத்துல ஒரு நாட்டு வைத்தியரு இருக்காரு. அவரு வாங்கிக்கிடுவாரு. இப்படி போது பொழப்பு.'

முருங்கைக்காயை உறிந்து இழுத்துவிட்டு, கேட்டான் உ.மகாளி:

'தேன் எடுக்க வந்திருக்கேங்கியோ, கையில ஒண்ணுமில்ல. கூட வந்திருக்க பையன் உம்முனு இருக்காம். எனக்கென்னமோ சரியா படலையே'

அவர்கள் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை.


படம்: courtesy: www.paintingofrussia.com/demo.php?num=20704

தொடர்கிறேன்.

10 comments:

vasu balaji said...

ம்ம். என்னமா எழுதுறீங்க. வார்த்தை வசப்படுது. வசப்படுத்துதும் கூட.:). தொடருங்கோ.

Chitra said...

லீவ்ல போயிருந்தப்போ சில இடுகை வாசிக்க மிஸ் பண்ணிட்டேன்.... இப்போ படிக்கிற வரை, நல்லா இருக்குது. :-)

Mahi_Granny said...

அந்தக் காலத்து ஆ.வி. யில் வரும் தொடர் கதைக்குக் காத்திருப்பது போல் இருக்கிறது. சொல்லும் முறை நன்றாக இருப்பதால் ஒ.கே. எழுதுங்கள் தம்பி

ராசராசசோழன் said...

இந்த கதை நான் என் நண்பர்களுடன் கொடைகானல் போகும் வழியில் இருக்கும் ஒரு அருவியின் உச்சியில் தங்கி இருந்த நாட்களை நினைவுக்கு கொண்டு வருகிறது....நன்றி நண்பரே...

ஆடுமாடு said...

நன்றி வானம்பாடிகள் ஐயா,

சித்ராக்கா நன்றி.

ஆடுமாடு said...

//எழுதுங்கள் தம்பி//

கண்டிப்பாங்க.

ஆடுமாடு said...

//ஒரு அருவியின் உச்சியில் தங்கி இருந்த நாட்களை நினைவுக்கு கொண்டு வருகிறது//

அப்படியா? நன்றி நண்பரே.

Sweatha Sanjana said...

பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!

மாதேவி said...

காட்டுக் கதை அருமையாகச் செல்கிறது.

SiSulthan said...

ஏலேய், நடுகாட்டுல, அதுவும் இருட்டுல, வில்லங்கமாக தெரியுற புதுமனுசனுங்ககூட சின்னபயலுவள விட்டுட்டுபோய் எத்தனை மாசம்ல ஆவுது? மழை சீசன்வேற தொடங்கியாச்சு. சீக்கிரமா கதைக்கு வந்து ஒரு வழிய காட்டு.