Tuesday, October 15, 2024

சாத்தா - கவனிக்கப்பட வேண்டிய நாவல்

 


குலதெய்வ வழிபாடு தமிழர்களின் வாழ்வியலில் முக்கியமான ஓர் அங்கம். குறிப்பாக, தமிழக தென்மாவட்ட மக்களின் `சாத்தா’ (சாஸ்தா) வழிபாடு மிகவும் தொன்மையானது. அதை மையமாக வைத்துக்கொண்டு விரிகிறது நாவல். குலதெய்வக் கோயிலுக்கே அதுவரை சென்றிருக்காத முத்துசாமி சந்திக்கும் எளிய மனிதர்கள்தான் கதை மாந்தர்கள். அதிகம் அறியப்படாத சாத்தா வழிபாடு, அதன் மூலம், நாட்டின் எந்தெந்த மூலையிலிருந்தோ ஆண்டுக்கொரு முறை குலதெய்வத்தைக் கும்பிட வரும் மக்கள் என வித்தியாசமான ஒரு களத்தை இந்நாவலில் முன்வைக்கிறார் எழுத்தாளர் ஏக்நாத்.

ஒரு நாவலுக்கு, கதைக்களனும் கதாபாத்திரங்களும் முக்கியமானவை. இந்நூலில் அவற்றைத் தெளிவாகக் கையாண்டிருக்கிறார் எழுத்தாளர் ஏக்நாத். தெக்கத்தி மக்களின் வட்டார வழக்கு உரையாடலும், கதை விவரிப்பும் நம் மனதில் காட்சிகளாகப் பதிந்துவிடுகின்றன. எளிதாக கதைக்குள் ஆழ்ந்துபோகச் செய்துவிடுகின்றன. சாமிகளுக்கு எப்படி நம் மொழி தெரிகிறது, சாமியாடிகள் வழியாக அவை எப்படி நம்முடன் உரையாடுகின்றன, மக்களின் கோரிக்கைகளை சாமியாடிகள் வழியாக அவை எப்படித் தீர்க்கின்றன என்பதையெல்லாம் குறிப்பிடுகிறது நாவல். அதேநேரத்தில் யதார்த்தத்தையும், அநியாயம் செய்பவர்களை சாமிகள் ஒன்றும் செய்வதில்லை என்கிற உண்மையையும் போட்டுடைக்கிறது.

சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கும் முத்துசாமி ஒரு ஜோசியக்காரர் சொன்னதற்காகவும், அம்மாவின் வற்புறுத்தலின் பேரிலும் குலதெய்வத்தைத் தேடிப் போகிறான். அவனுடைய குலதெய்வம் பேச்சியம்மன், இணை தெய்வங்களான தளவாய் மாடசாமி, சுடலை ஆகியோரை காட்டுக்குள் பார்த்துவிட்டு வரும்போது நிகழும் சம்பவங்களின் கோர்வைதான் கதை.  முத்துசாமியின் பழைய காதல், சாமி கும்பிடப்போன இடத்தில் பார்த்த நாகர்கோவில் பெண் அழகு மேல் ஏற்படும் ஈர்ப்பு, சென்னை வாழ்க்கை, டிராக்டரிலும் லாரியிலும் ஒற்றுமையாகக் கிளம்பிப்போன மனிதர்கள் கோயிலில் மோதிக்கொள்வது என எதையெதையோ தொட்டு கதை நகர்கிறது. அதேநேரத்தில், இந்தச் சம்பவங்கள் மையப்புள்ளியைவிட்டு விலகாமல் நகர்கின்றன.

மருத்துவமனையில் படுத்திருக்கிறார் ஆச்சி. அவர் கையைத் தொட்டுப் பார்க்கும் டாக்டருக்கு, சட்டென சுருக்குப்பையிலிருந்து திருநீறை எடுத்துப் பூசிவிடுகிறார். இது எங்காவது நடக்குமா... நடக்கும். வெள்ளந்தி மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்பதைப் போகிற போக்கில் உணர்த்திவிடுகிற சம்பவம் அது.

எங்கோ மலை உச்சியிலிருக்கும் சாமி, மனிதர்களின் கோரிக்கையை ஏற்று அடிவாரத்துக்கு வர சம்மதிக்கிறது. அடிவாரத்தில் சாமி அறிகுறி காட்டிய இடத்தில், குலதெய்வத்தை வைத்து வழிபட முடிகிறதா... சாமி சம்மதித்தாலும், அதற்குக் குறுக்கே நிற்கும் மனிதர்களை என்ன செய்வது? இந்தப் பெரும் கேள்வியை தனக்கே உரிய பாணியில் முன்வைக்கிறார் ஏக்நாத். சாமானியர்களின் வாழ்க்கையில் இன்னமும் மீதமிருக்கும் பழைய நம்பிக்கைகளையும், இன்றைய யதார்த்தத்தையும் எடுத்துவைக்கும் 'சாத்தா’கவனிக்கப்படவேண்டிய நாவல்.

நன்றி: பாலு சத்யா

விகடன் படிப்பறை 




சாத்தா

ஆசிரியர்: ஏக்நாத்

வெளியீடு: நெடில் வெளியீடு

விற்பனை உரிமை: ஸ்நேகா, 8, ரமணி நகர் மெயின் ரோடு, மேற்கு தாம்பரம், சென்னை - 600 045.

தொடர்புக்கு: 7550098666

பக்கங்கள்: 152

விலை: ரூ. 220


Monday, September 23, 2024

கேட்டு வருவதா வலி?





சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய கவிதை ஒன்றை வாசித்துவிட்டு நண்பரும் மருத்துவருமான வஸந்த் செந்தில்,  ‘இந்தக் கவிதைக்குள் அழகான கதை இருக்கிறது, அதை எழுதலாம்ல’ என்றார். அவர் சொல்லி ஒரு வருடத்துக்குப் பிறகு கதையாக்கினேன். 2019-ல் ஆனந்த விகடனில் வெளியானது, அக்கதை. புதிதாகப் பதிப்பகம் தொடங்க இருந்த நண்பர் ஒருவர்,  "அந்தக் கதையை குறுநாவலா எழுதித் தாங்களேன்” என்றார். அவர் சொன்ன பிறகுதான் அதற்கான  'ஸ்கோப்' அதில் இருப்பது தெரிந்தது. எழுதினேன். ஆக, ‘அந்த சிறுகதையின் நீள்வடிவம்தான் இந்த ‘வேத’!  'இந்தக் கதைய எங்கயோ படிச்ச மாரி இருக்கே?' என்கிற ஆவலாதி வந்துவிடக்கூடாது என்பதற்காக இவ்விளக்கம். 

ஒரு கவிதை, சிறுகதையாகி, நாவலாக உருமாறியது கூட சுவாரஸ்ய கதையாகத்தான் இருக்கிறது. இது காதலின் வலியை, அவஸ்தையைப் பேசுகிற நாவல். வலியை, ‘வேத’ என்று சொல்வது நெல்லை, தென்காசி மாவட்டங் களில்  வழக்கம். "என்னா வேதங்கெ? மூதி, உள்ளகெடந்து விண்ணு விண்ணுன்னுலா தெறிக்கி..., முடியலடெ?” என்பார்கள், பெருவலிகாரர்கள். அப்படியொரு வேத யாருக்கும் தேவையில்லைதான். ஆனாலும், கேட்டு வருவதா வலி? அதுவும் காதலின் வலி? 

'வேத' என்பதைத் தலைப்பாக வைக்கலாமா? என்று ஊரையும் ஊர் வார்த்தை களையும்  ரசிக்கிற எழுத்தாளர் சுகா சாரிடம் கேட்டேன். 'தாராளமா வையுங்க, ஊர்ச்சொல்லையும் வேர்ச்சொல்லையும் விட்டுரக்கூடாதுல்லா' என்றார். இப்படியாக இதன் தலைப்பு 'வேத' ஆனது.

நாவலை வெளியிடுகிற நெடில், விநியோகிக்கிற ஸ்நேகா, எப்போதும் என் நூல்களுக்கு முகப்பு அட்டையை வடிவமைத்துக்கொடுக்கிற பி.ஆர்.ராஜன், பின் அட்டைக்கான புகைப்படம்  எடுத்து தந்த புதுவை இளவேனில் ஆகியோருக்கு நன்றி.

பக்கம் 100.

விலை ரூ.150/

புத்தகம் பெற:

சினேகா வெளியீடு

9600398660/ 7550098666


#வேத, வேத நாவல், ஏக்நாத்


Tuesday, April 19, 2022

’அவயம்’ நாவலில் புரட்சியும் அதிர்ச்சியும்

 என் ’அவயம்’நாவல் வெளிவந்து விட்டது. சில வருடங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய நாவல். இப்போதுதான் வாய்த்திருக்கிறது. அரசியல் கட்சியின் பேச்சாளன் ஒருவன், தன் பலவீனங்களால் வாழ்வில் சந்திக்கிற அவமானங்களும் இழப்புகளும் போராட்டங்களும்தான் இந்நாவல். 


அவன் நடக்கிற பாதையில், கிடக்கிறக் குளங்களில் நிலவுகள் அவனோடு நீந்திக் கொண்டே இருக்கின்றன. அவன் ரசிக்கிறான். உரையாடுகிறான். மயங்குகிறான். இரு கை கொண்டு அதை ரகசியமாகத் தூக்கி ஓட நினைக்கும்போது சறுக்குகிறான். மீள்கிற அவன் என்ன செய்கிறான் என்பதை, நான் நினைக்கிறபடி இந்த நாவல் பேசலாம். அல்லது நீங்கள் நினைக்கும்படியும் பேசலாம். வேறொன்றாகவும் இருக்கலாம். 



என் முந்தைய நாவல்களைப் போலவே சிறு கிராம பின்னணியில் எழுதப்பட்டதுதான் இதுவும். சில அரசியல் நிகழ்வுகளும் இருக்கின்றன. எந்த அரசியல் கட்சிகளும் தங்கள் கொளைகளைப் பேசுகிற பேச்சாளனை கொண்டாடியதில்லை என்பதை இதில் சொல்லி இருக்கிறேன். அதைத் தாண்டி திடீர் புரட்சியும் அதிர்ச்சியும் இருக்கலாம். 


அவயம், நாவல்

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்

கே.கே.நகர் மேற்கு, சென்னை 78.

288 பக்கங்கள். விலை: ரூ.320. 

தொலைபேசி: 9940446650

Tuesday, October 8, 2019

பெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்

பெருங்கற்கள் சுமக்கும் குளம்

’வேசடை’ எனது புதிய சிறிய நாவல். ஒரு பட்டாவுக்காக அல்லாடிக் கொண்டிருக்கும் எளிய வயதான மனிதனின் கதை. அதில் வந்துள்ள என்னுரை.



இன்னும் வற்றாமல் இருக்கிறது என் குளம். அலையில் ஆடி ஆடி, தளும்பி நிற்கிற குளம் அது. நினைத்தால் முங்கலாம், நீந்தலாம். கரையில் அமர்ந்து ரசிக்கலாம். இல்லையெனில் குளிக்காமலும் நடக்கலாம். குளத்துக்குக் கோபமில்லை. இந்தக் குளத்தில் பெருங்கல் எறிந்தவர்கள் பலர். அந்தக் கற்கள் நிரம்பி நிரம்பி மேலே எவ்வி நிற்கிறது நீர். அந்த நீரில் இருந்துதான் என் வயல்கள் விளைகின்றன. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகை பயிர். கெடைகாடும் ஆங்காரமும் மேப்படியான் புழங்கும் சாலையும் குச்சூட்டானும் ஆடுமாடு மற்றும் மனிதர்களும் பூடமும் அவயமும் இங்கிருந்துதான் விளைந்தன. இப்போது, வேசடையாகி நிற்கிற பனஞ்சாடியும் இங்கிருந்து விளைந்தவர்தான்.

வாழ்க்கையின் பேரனுபவங்களைச் சுமந்து நிற்கிற ஆடு மேய்த்த பெரியவர், தான் உருண்டு புரண்ட மந்தையில் வீடொன்றைக் கட்டிக்கொண்டு, பட்டாவுக்கு அலைகிற ’வேசடை’தான் இந்நாவல். புறம்போக்கு நிலமான பொத்தை, வீடுகள் நிறைந்தத் தெருவான பிறகு அந்தப் பெரியவரின் அனுபவமும் அவஸ்தையும் கதையாகி இருக்கிறது. ஊரின் அனுபவங்களைச் சுமந்து வைத்துக்கொண்டு அலைகிற இதுபோன்ற பனஞ்சாடியை எந்த ஊரிலும் காண முடியும். இங்கு பனஞ்சாடியாக இருக்கிறவர், உங்கள் ஊரில் சுடலையாகவோ, சுப்பையாவாகவோ, பரமசிவமாகவோ ஏதாவது ஒரு பெயரில் தள்ளாடி நடந்தபடி இருக்கலாம்.


வேசடை என்கிற வார்த்தை எரிச்சல், தொல்லை என்கிற பொருள்பட, நெல்லை மாவட்டத்தில் புழங்கப்பட்டு வருகிறது. '’இந்த சனியனால ஒரே வேசடையா இருக்கு பாத்துக்கோ’’ என்றோ, ’’ரொம்ப வேசடையா இருக்குடே’’ என்றோ பேசப்பட்டு வருகிறது. பனஞ்சாடியின் எரிச்சலை, தொந்தரவை, அவஸ்தையை சொல்லும் நாவல் என்பதால் இதைத் தலைப்பாக வைத்திருக்கிறேன்.

இந்நாவலை வெளியிடும் நண்பர் தமிழ்வெளி கலாபனுக்கு நன்றி.

ஏக்நாத்
egnathr@gmail.com

புத்தகங்கள் பெற: 
வேசடை. விலை 100/-

தமிழ்வெளி
9094005600

தாவூத் என்கிற ராக்கெட்டு!

காரல் மார்க்ஸை யாரென்று தெரியாது. அவரது சிறுகதைகளை, சில இதழ்களில் முன்பு வாசித்து வியந்திருக்கிறேன். சில எழுத்தாளர்களின் கதைகள் நம்மை அறியாமலேயே மனசுக்கு நெருக்கமாக வந்து அமர்ந்துகொள்வது இயல்பு. அப்படி, சத்தம் போடாமல் வந்து அமர்ந்து கொண்டது, சமீபத்தில் வாசித்த அவரது 'ராக்கெட் தாதா' தொகுப்பு.

அவர் கதைகளின் பலங்களில் ஒன்றாக, நான் நினைப்பது மொழி. சொற்சிக்கனத்தோடும், அவ்வளவு அடர்த்தியாகவும் நேர்த்தியாகவும் எழுத முடிவது, ஒரு வகையில் அவரது அதிர்ஷ்டம். அந்த அதிர்ஷ்டம், பயிற்சி!

ஒவ்வொரு கதையும் ஆர்ப்பாட்டமில்லாத யதார்த்தத்தோடும் அழகியலோடும் நம்மை, அழகாக இழுத்துச் செல்கிறது காதலியைப் போல. அவரது சுமித்ராவும் 'கற்படிகளி'ன் ராமமூர்த்தியும் 'ராக்கெட்டு' தாவூத் இப்ராஹிமும் வாசித்து முடித்த பின்னும் ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் அவர்கள் வேலையும் கூட.
சில கதைகளில் வருகிற 'கொண்டி' உள்ளிட்ட வழக்குகளைக் கண்டு தெக்கத்திக்காரராக இருக்கலாம் என நினைத்தேன். இல்லை.

வாழ்த்துகள் மார்க்ஸ்! உங்களின் மற்றத் தொகுப்புகளையும் வாசிக்க வேண்டும்.

Tuesday, April 2, 2019

கிண்டிலில் என் படைப்புகள்



நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நானும் கிண்டிலுக்கு வந்துவிட்டேன். எனது படைப்புகள் அமேசான் கிண்டிலில் கிடைக்கும். தகவலுக்காக.

https://www.amazon.in/s?k=%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&i=stripbooks&ref=nb_sb_noss

Saturday, October 27, 2018

செவலைகள் தொலைந்த நிலம்

மூன்று நாள்களாக செவலைப் பசுவைக் காணவில்லை. தேடித் தேடிக் களைத்துப் போய்விட்டார், புனமாலை. `பய மாடு எங்கு போயிருக்கும்?’ பெருங்கவலை தேடி வந்து உட்கார்ந்துகொண்டது அவர் முகத்தில். சோறு தண்ணீர் சரியாக இறங்கவில்லை. எதையோ பறிகொடுத்தவர்போல அல்லாடுகிறார், அங்கும் இங்கும். மனம் ஒரு நிலையில் இல்லை. இப்போதுகூட பாப்பான்குளத்தில் தேடிவிட்டு வந்துகொண்டிருக்கிறார். களைப்போடு கவலையும் சேர்ந்துகொள்ள அவருக்கு அசதியாக இருக்கிறது. செவலையை உடனடியாகப் பார்க்க வேண்டும் என்று துடிதுடிக்கிறது மனசு. `எங்க கெடந்து என்ன பாடுபடுதுன்னு தெரியலயே’ என்று நினைத்துக் கொண்டார். தூரத்தில் யார் வீட்டு மாடோ போனால்கூட, செவலையாக இருக்குமோ என்று ஏங்கித் தவிக்கிறார்.

எதிரில், யார் கண்ணில் பட்டாலும், ‘ஐயா, ஒத்த செத்தயில பசுமாடு போனதை எங்கயாது பாத்தேளாய்யா, ஒரு செவலை?’ என்று கேட்டுவிடுகிறார். அவரைப் பரிதாபமாகப் பார்த்தபடி, ‘இல்லையே’ என்று சொல்கிறார்கள் அவர்களும்.

ஊருக்கு வரும் வழியில், ரெண்டாத்து முக்கின் ஓரத்தில், புன்னை மரத்தின் அடியில் சைக்கிளை ஸ்டாண்டு போட்டார். கடனாநதியும் ராமநதியும் சேரும் இடமான இங்கு, ஓர் ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் மட்டும், கால் நனைய ஓடுகிறது. மற்றோர் ஆறான ராமநதி வறண்டு கிடக்கிறது. நடந்து போய், முகத்தைக் கழுவினார். தண்ணீர் பளிங்கு மாதிரி தெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. கைகளால் அள்ளிக்குடித்தார். இன்னும் குடிக்க வேண்டும் போல் இருந்தது. நான்கைந்து முறை அள்ளியள்ளிக் குடித்தார். தாகம் தீர்ந்து வயிறு முட்டியது.

 சைக்கிளை நிறுத்திய புன்னைமரத்தின் அடியில் உட்கார்ந்தார். மரங்களின் நிழல், இருள்போலப் படர்ந்து கிடந்தது. இதன் அருகில் ஆலமரம் ஒன்று பெரிதாகக் கிளைபரப்பி நின்றிருந்தது. கடந்த பேய்மழைப் புயலில் அடியோடு சாய்ந்துவிட்டது. அந்த மரமும் நின்றிருந்தால் நிழல் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.  இந்த மத்தியான நேரத்திலும் காற்று இதமாக வீசிக்கொண்டிருக்கிறது. வெயில் இன்று அதிகம்தான். அப்படியே படுக்கலாம்போல் தோன்றியது அவருக்கு. கண்கள் இழுத்தது. படுத்தால் எப்போது எழுந்துகொள்வார் என்று அவருக்கே தெரியாது. உடலில் அவ்வளவு அசதி. இடுப்பில் இருந்த வெற்றிலைப் பொட்டலத்தை எடுத்தார். பச்சைப் பாக்கை ஏற்கெனவே சிறுதுண்டுகளாக வெட்டி வைத்திருந்தார். இரண்டு இளம் வெற்றிலைகளில் லேசாகச் சுண்ணாம்பைத் தடவி வாய்க்குள்  திணித்தார். அவருக்கு, அப்பாடா என்றிருந்தது.

 ஆற்றின் கரைக்குக் கீழ்ப்பக்கத் தோப்பிலும் மேல்பக்க வயக்காட்டிலும் வேலி அமைத்திருக்கிறார்கள். வேலிக்குள் ஆட்கள் வேலை செய்யும் சத்தம் கேட்கிறது. அவர்களிடம் `இப்படியொரு மாட்டைப் பாத்தேளா?’ என்று போகும்போது விசாரிக்க வேண்டும்.

செவலையை அவர் நான்கு வருடத்துக்கு முன் கன்றுக்குட்டியாகத்தான் வாங்கிவந்தார், கீழக் கடையத்திலிருந்து. மூக்கும் முழியுமாக அழகாக இருந்தது செவலை. அப்போது அதற்குப் பெரிய கொம்பு இல்லை. உடலெல்லாம் செந்நிறத்தில் இருக்க, முகத்தில் மட்டும் சுண்ணாம்பை இழுவிய மாதிரி பழுப்பு வெள்ளை. அதைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது, புனமாலைக்கு.

வளர்ந்த வீட்டிலிருந்து வர மறுத்துவிட்டது, முதலில். அதைப் பிடித்து இழுத்துக்கொண்டே, முதலியார்பட்டி, திருமலையப்பபுரம், பொட்டல் புதூர், ஆழ்வார்குறிச்சி வழியாக நடத்திக் கொண்டு வருவதற்குள் பாடாய்ப் படுத்திவிட்டது. முதலியார்பட்டி வரை, பசுவுக்குச் சொந்தக்காரி கூடவே வந்தாள். அங்கு நின்று, `என் செல்லத்தைப் பத்திரமா கூட்டிட்டுப் போங்கய்யா?’ என்று சொல்லிவிட்டு அவள் திரும்பியதும், கயிற்றை இழுத்துக்கொண்டு அவள் பின்னாலேயே கிறுக்குப் பிடித்த மாதிரி ஓடியது செவலை. கயிற்றை இழுத்த இழுப்பில், கீழே விழந்துவிட்டார் புனமாலை. இந்தச் சின்னக் கன்னுக்குட்டிக்கு இவ்வளவு பலமா? என்கிற வியப்பு அவருக்கு. ஆனால், அது பாச ஓட்டம். ஓடிப்போய் அவளின் முன்னும் பின்னும் துள்ளித் துள்ளி நின்று, தலையை அங்கும் இங்கும் ஆட்டியதை இன்னும் மறக்க முடியாது புனமாலையால். பிறகு அவள் கண்கலங்கிவிட்டு, ‘உன்னைய வித்துட்டேன். இனும எங்கூட வரக்கூடாது, போம்மா, ஐயாவோட’ என்று கன்றிடம் பேசினாள். அதற்கு என்ன புரிந்ததோ? பிறகு புனமாலை இழுத்ததும் அலட்டாமல் வந்துவிட்டது. 



தொழுவில் அவருடைய மற்ற மாடுகளைவிட அதிக செல்லம், இதற்குத்தான். செவலை வந்த பிறகுதான் அவர் பெரியவாய்க்கால் பாசானத்தில் வயல் ஒன்றை வாங்கினார். அந்தப் பகுதியில் வயல் வாங்க வேண்டும் என்பது பல வருட ஆசை. அதை நிறைவேற்றியது செவலை என்று நம்பினார் முழுமையாக. அது வீட்டுக்கு வந்த ராசி என்றும் நினைத்துக்கொண்டார்.

 அதன் காரணமாக லட்சுமண நம்பியார் கடையில் அதிகம் கனிந்த வாழைப் பழங்களை வாங்கிவிட்டு வந்து ஒவ்வொன்றாக ஊட்டுவார் அதற்கு. சின்னப் பிள்ளைபோல நன்றாக முழுங்கும். தின்று முடித்துவிட்டு இன்னும் இல்லையா என்பதுபோல அவர் கையை நக்கிக்கொண்டு, மூஞ்சைப் பார்க்கும். `எவ்வளவு பழம் தின்னாலும் உனக்கு இன்னும் கேக்கும். கள்ளாலிப் பய பசு?’ என்பார், அதன் முகத்தைச் செல்லமாகக் கிள்ளியபடி.

 அவர் மனைவி இருளாச்சியும் இதற்கு மட்டும் சிறப்புக் கவனிப்பைக் கொடுத்தாள். மாடுகளுக்கு எப்போதும் வைக்கோல்களை மட்டுமே பிடுங்கி வைக்கிற அவள், செவலைக்காகப் புல்லறுக்கச் சென்றாள் வயக்காட்டுக்கு. மற்ற மாடுகளுக்குப் பெயருக்கு வைத்துவிட்டு இதற்கு மட்டும் அதிகமாக வைப்பாள்.

செவலை ஈன்ற பிறகு, பால் துட்டுப் புழக்கம் பஞ்சமில்லாமல் இருந்தது. ஏற்கெனவே இரண்டு எருமைகளின் மூலம் பால் வருமானம் கிடைத்தாலும் செவலையின் பாலுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது. இதன் காரணமாகச் செவலைக்குச் செல்லம் இன்னும் அதிகமானது.

 புனமாலையின் பிராயத்தில், அவர் வீட்டுத்தொழுவு நிறைந்திருந்தது ஆடுகளும் மாடுகளும். வீட்டுக்குப் பின்பக்கம் மாடுகளுக்கும் எதிரில் ஆடுகளுக்கும் தொழுவு. சாணம் மற்றும் மூத்திர வாசனையில் வாழப் பழகிக்கொண்ட அவர் அம்மாவுக்கும் மனைவிக்கும் பிட்டி நவுண்டு போகும் வேலை பார்த்து. தொழுவைத் தூத்து, சாணம் அள்ளி, புண்ணாக்கு வைத்து, தண்ணீர் காட்டி, பால் கறந்து... போதும் போதும் என்றிருக்கும். ஆனாலும் அதைக் கடமையாகவே செய்துவந்தார்கள். அப்பா, அண்ணன் தம்பிகளோடு மேய்ச்சலுக்குச் செல்வதுதான் புனமாலைக்கு வேலை.

 காலம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. ஊரில் யாரிடமும் அதிக மாடுகள் இல்லை. ஊர் மாடுகள் திரண்டு மேலத் தெருவின் வழியே பெருங்கூட்டமாக மேய்ச்சலுக்குப் போகும் காட்சி, புனமாலையின் கண்க ளுக்குள் இன்னும் அப்படியே இருக்கிறது. புழுதிப் பறக்கத் தெருவில் நடக்கும் மாடுகள் நடந்து செல்லும் காட்சியை இப்போது பார்க்க முடியவில்லை.  பிள்ளைகள் வளர வளர மாடுகளை விற்றுவிட்டார்கள், தெருக் காரர்கள். படித்துவிட்டுப் பிழைப்புக்குப் பெருநகரம் செல்வது வாடிக் கையாகிவிட்டது.  அப்படியே மாடுகள் வைத்திருந்தாலும் இப்போதெல்லாம் எங்கு போய் மேய்க்க? மேய்ச்சல் நிலங்கள் மனைகளாகி, நாள்களாகிவிட்டன.


விரிந்து கிடந்த புறம்போக்கு இடங்களில் மாடுகள் மேய்ந்த இடங்கள் வேலிகளுக்குள் இருக்கின்றன, இப்போது. யாரோ வெளியூர்க்காரர் அங்கு தோட்டம் அமைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் புறம்போக்கு இடங்கள் எப்படி விற்கப்பட்டன என்கிற ஆச்சர்யம் புனமாலைக்கு இப்போதும் இருக்கிறது. சாலையில் வந்து மோதும் தண்ணீரைக் கொண்ட குளத்துக்கரைகள் எல்லாம் சுருங்கிவிட்டன.


புனமாலைக்கு இரண்டு மகன்கள். ஒருவன் ஓசுரில் ஏதோ வேலை பார்க்கிறான். இரண்டாவது மகன், திருநெல்வேலியில் படித்துவிட்டு சென்னைக்கு வேலைக்குச் செல்லக் காத்திருக்கிறான். அவர்களுக்கு மாடுகள் மேய்ப்பது கேவலமாக இருக்கிறது. கூடப் படித்தவர்கள் வீட்டுக்கு வரும்போது மூக்கைப் பிடித்துக்கொண்டு நிற்பது அவமானமாக இருக்கிறது.

 ‘இந்த மாடுகளை கெட்டிட்டு அழுததை என்னைக்குத்தாம் விடப் போறேளோ?’ என்றான்  பெரிய மகன்.

 ‘ஏம்டே. அதுவோ உன்னைய என்ன பண்ணுச்சு?’

`எனக்கு கேவலமா இருக்கு? இதுக்காவவே நான் வெளியூரு போறேன், பாத்துக்கிடுங்க?’ என்றான் ஒரு நாள். புனமாலைக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை. இந்த மாடுகள்தான் சோறு போட்டிருக்கிறது, பால் மாடுகளின் காசுகளில்தான் அவன் படித்தான் என்பதையெல்லாம் இப்போது அறிய மாட்டான் என்று நினைத்துக்கொண்டார். சின்ன மகனும் ஒரு நாள் அதையே சொன்னான். சிரித்துக்கொண்டார் அவர். `உங்களுக்கெல்லாம் என்னடா தெரியும், அதுவொள பத்தி. மாடு வளக்கது கேவலமா இருக்காம்? என்னத்த உருப்படப்போறானுவோ?’ என்று நினைத்துக் கொள்வார்.

 ‘என்ன அண்ணாச்சோ, உட்கார்ந்தாச்சு?’ என்ற சத்தம் கேட்டு நிமிர்ந்தார் புனமாலை. உள்ளூர்ப் பள்ளிக்கூட சார்வாள். தோப்புக்குச் சென்றுவிட்டு வருகிறார்  போலிருக்கிறது. அவரைப் பார்த்துச் சிரித்தார்.

 ‘மாட்டைக் காங்கலைன்னு கேள்விப்பட்டேன். கிடைச்சுட்டா?’ என்று கேட்டார் .

‘இல்ல. எங்க போச்சுன்னு தெரியல?’ என்ற புனமாலை, கவலையில் மூழ்கினார். அவரிடம் இருந்து இரண்டு வெற்றிலையை வாங்கிக்கொண்ட சார்வாள், ‘கேள்விப்பட்டதுல இருந்து நானும் இங்ஙன எல்லாப் பக்கமும் கண்ணுல ஏதும் படுதான்னு பாத்துட்டுதாம் இருக்கேன்…’ என்றார்.

‘ஆங்… மிஞ்சிப் போனா, சுப்பையா தோப்புக்குள்ளதாம் நிய்க்கும். என்னைக்காது சாயந்தரத்துல வரலைன்னு வையுங்களேன், தேடிப் போனா, அவரு தோப்புக்குள்ள இருந்துதாம் வரும்… அங்க எல்லாப் பக்கமும் பாத்தாச்சு. காங்கலை…’

‘மாட்டைப் புடிச்சு, எவ்வளவு வருஷமாச்சு?’

 ‘ஒரு நாலு வருஷம் இருக்கும்?’

 ‘புடிச்சுட்டு வந்த வீட்டுல, விசாரிச்சுப் பாத்தேளா?’

 `ச்சே… இவ்வளவு வருஷத்துக்குப் பெறவா, அந்த வீட்டைத் தேடிப் போவப் போது?’

‘அப்படியில்லலா. நம்ம பிச்சாண்டி பய, கப்பை கொம்பு எருமை, அஞ்சு வருஷத்துக்குப் பெறவு, கன்னுக்குட்டியா கெடந்த வீட்டைத் தேடிப் போயிருக்குன்னா பாருமே?’

‘இது என்ன புதுக்கதையா இருக்கு?’

 `பெறவு, நான் என்ன சொல்லுதேன்? ஆய்க்குடியில இருந்து வாங்கிட்டு வந்தாம் அதை. இங்கயிருந்து இருவது இருவத்தஞ்சு மைலு இருக்குமா? ஒத்தையில தேடிப் போயிருக்குன்னா, பாருமே. அதனால பழைய வீட்டைத் தேடிப் போவுமா, போவாதாங்கது நமக்கெப்படித் தெரியும்? ஒரு எட்டு, எட்டிப் பாத்துட்டு வந்துரும்யா. இதுல என்ன கொறச்சலு ஒமக்கு?’ என்றார் சார்வாள்.

‘சரிதாம். போயிட்டு வந்துர வேண்டியதாம்’

’பால் மாடா?’

‘ஆமா. காலைல மட்டும் ரெண்டரை, மூணு லிட்டரு கறக்கும். புல்லு அதிகமா போட்டா, நிறைய கறக்கும். அக்ரஹாரத்துல எல்லா வீட்டுக்கும் நம்ம பாலுதான். மூணு நாளா பசும்பாலை, வேற ஆளுட்ட வாங்கிக் கொடுத்து சமாளிக்கேன். அதுக்குள்ள, ஏன் புனமாலை, பாலு தண்ணியா இருக்குன்னு ஆவலாதி வந்தாச்சு…’

`அது வந்திரும்லா. நீரு வேண்டிய ஆளுன்னு தண்ணிய கொஞ்சமா சேப்பேரு. மத்தவோ அப்படி இருப்பாகளா?’

 ‘ரொம்ப வேசடையா இருக்கு, பாத்துக்கிடுங்க. என்ன பண்ணன்னு தெரியல. பாசமா வேற வளத்துட்டனா? அதாம் ஒண்ணும் ஓட மாட்டேங்கு. எனக்கு மட்டும் ஏம் இப்படி நடக்குன்னு தெரியல’ என்ற புனமலை, துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டார்.

 ‘ஒண்ணும் கவலைப்படாதேரும், கிடைச்சுரும்’ என்ற சார்வாள், `இதுக்கு முன்னால இப்படி ஏதும் காணாமப்போயிருக்கா?’ என்று கேட்டார், வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு.

 ‘ரெண்டு வருஷத்துக்கு முன்னால, வழக்கமா மேய்க்கப் போற இடத்தை விட்டுட்டு, ரயிலு பாலத்துக்குக் கீழே மேய்ச்சிட்டு நின்னேன். சாயங்காலம் போல, கெளம்புவோம்னு மாடுவொள பத்தினேன். கீழ்ப்பக்கத் தென்னந்தோப்புல ரெண்டு, மூணு தேங்காய் நெத்து, தன்னால விழுந்த சத்தம் கேட்டது. தோப்புக்குள்ள ஆளு வேற இல்லையா? சும்மா விட்டுட்டுப் போவ மனசு வரலை. வேலிக்குள்ள ஏறி, உள்ள போயிட்டேன். நாலஞ்சு காயிவோ கெடந்தது. கொஞ்சம் காய்ஞ்ச தென்னமட்டை, சில்லாட்டையும் கிடந்தது. தேங்காயை உள்ளவச்சு தென்னமட்டைகளை விறகு மாதிரி கெட்டிட்டு வெளிய வந்து பாக்கேன், ஒரு மாடுவளையும் காங்கலை. `அதுக்குள்ள எங்க போயி தொலைஞ்சுதுவோன்னு தேடுனா, கிழக்க வீட்டைப் பாத்து வரவேண்டிய மாடுக எல்லாம், லெக்கு தெரியாம, மேற்கப் பாத்து போயிட்டிருக்குவோ. பெறவு அதுகளைப் புடிச்சு, கிழக்க திருப்பிட்டு வந்துட்டேன். வீட்டுக்கு வந்த பிறகு பாத்தா, செவலை மட்டும் இல்லை. தேடு தேடுனு தேடுனோம். மறுநாளு காலையில, ரயிலு பாலத்துக்கிட்ட தேடிட்டு விசாரிச்சேன். `மேக்க பறம்பு இருக்குல்லா, அங்க ஒரு தூர்ந்துபோன கெணத்துல, மாடு ஒண்ணு விழுந்து கெடக்கு. ஊரே கூடி நின்னு அதைத் தூக்கிட்டு இருக்காவோ. அது உங்க மாடான்னு வேணா பாரும்’ன்னு ஒருத்தன் சொன்னான். நான் வேர்த்து, விறுவிறுத்துப் போய் நிய்க்கேன், கூட்டத்துக்குள்ள. `ரெண்டு இளந்தாரி பயலுவோ தைரியமா கெணத்துக்குள்ள இறங்கி, மாட்டோட வயித்துக்கு முன்னால ஒரு கயிற்றையும் பின்கால்கள் கிட்ட ஒரு கயிற்றையும் போட்டுக் கெட்டிட்டானுவோ. பெறவு ஆளுவோ பூரா சேர்ந்து கயிற்றை இழுத்து மேல கொண்டு வாந்தாச்சு, மாட்டை. இழுக்கும்போது கெணத்துல இருந்த கல்லுல அங்க இங்கன்னு முட்டி, உடம்புல ரத்தக் காயம். அந்த ஊரு பெரிய மனுஷன் டேனியலு நமக்குத் தெரிஞ்சவரு தான். அது எம்மாடுதாம்யான்னு சொன்னேன். சொல்லிட்டு, பேசிட்டுதாம் இருக்கேன், பாத்துக்கிடும். இந்தச் செவலை எப்படித்தாம் என்னைய பார்த்ததுன்னு தெரியல, அங்கயிருந்து வேகமா வந்தது. பின்னால இருந்து ஒரு கணைப்பு கணைச்சுட்டு வந்து முகத்தை என் இடுப்புல தேய்ச்சுது. பெறவு, என் மூஞ்சை ஏக்கமா பார்த்தது பாரும், பொல பொலன்னு கண்ணீரு வந்துட்டு எனக்கு. இப்பம்கூட பாருமே, சொல்லும்போதே புல்லரிக்கு. அப்பம்தான் ஒரு தடவை காணாமப்போயி மீட்டுட்டு வந்தேன். இப்பமும் அப்படி எங்கயாது போயி விழுந்திருக்குமோன்னு நினைச்சுதான் தேடிட்டு இருக்கேன். நம்ம பட்றையன் சாமிதான் கருணை காட்ட ணும்’ என்று சொல்லிவிட்டுக் கண்ணைத் துடைத்தார் புனமாலை.


 ‘ச்சே என்ன நீரு, சின்னப்புள்ள மாதிரி கண்ணைக் கசக்கிக்கிட்டு… இங்க எங்கயோதாம் நிய்க்கும். எங்க போயிரப் போவுது? கிடைச்சுரும், கவலைப்படாதீரும்’ என்று நம்பிக்கையளித்தார் வாத்தியார்.

 `கெழக்க மன்னார்கோயிலு, காக்கநல்லூருன்னு போயி தேடியாச்சு. அங்குள்ள ஆளுவோட்ட எல்லாம் சொல்லிட்டு வந்திருக்கேன். நேத்து மேக்க, கருத்தப்பிள்ளையூர், சிவசைலம்னு அலைஞ்சாச்சு. இன்னைக்குப் பாப்பான்குளத்துக்குப் போயிட்டு வந்தாச்சு. சாய்ந்தரம் நீங்க சொன்ன மாதிரி மாட்டைப் புடிச்சுட்டு வந்த வீட்டுல போயி கேக்கணும்.’

 ‘ஏம் அலையுதேரு, போனைப் போட்டுக் கேளும்.’

 ‘இந்த மாதிரி வெவாரத்தை போன்ல சொன்னா நல்லாருக்குமா? நேர்ல போயி விளக்குனாதான் சரியாயிருக்கும். அதுக்குத்தான் அலையுதேன்.’

‘சரி வீட்டுக்குத்தான போறேரு, வாரும் பேசிட்டே நடப்போம்’ என்றார், சார்வாள்.

புனமாலையின் முகத்தைப் பார்த்தே மாடு பற்றித் துப்புக் கிடைக்கவில்லை என்பதைக் கணித்துவிட்டாள், அவர் மனைவி இருளாச்சி. துண்டால் தட்டி, திண்ணையைத் துடைத்துவிட்டு சோர்ந்து உட்கார்ந்திருந்தார் அவர். இவரைக் கண்டதும் வீட்டிலிருந்து வெளியே போனான் மகன். மாடு தொலைந்தது பற்றியோ, அதைத் தேடுவது பற்றியோ அவனுக்கு எந்த அக்கறையும் இல்லை. நண்பனின் அழைப்புக்காகக் காத்திருப்பவன் அவன். என்றைக்கு அழைப்பு வருகிறதோ, அன்று சென்னைக்கு பஸ் ஏறிவிடுவான். அதனால் மாடுமாச்சு, அவர்களுமாச்சு என்று அலைந்து கொண்டிருக்கிறான். மூன்று நாள்களாக மேய்ச்சலுக்கும் செல்லவில்லை. மேலத்தெரு மணியின் மாடுகளோடு இவர் மாடுகளையும் சேர்த்து அனுப்பிவிட்டிருக்கிறார். தொழுவு அமைதியாக இருந்தது.

இருளாச்சி, ஒரு சட்டியில் கஞ்சித் தண்ணியை வைத்து, இன்னொரு சிறு தட்டில், காணத்துவையலையும் நான்கைந்து ஈராய்ங்கத்தை உரித்தும் கொண்டு வந்து அவர் முன் வைத்தாள். இருவரும் பேசிக்கொள்ளவில்லை. பசிக்கவில்லை அவருக்கு. இருந்தாலும் அனிச்சையாகச் சட்டியைத் தூக்கிக் குடித்தார். கொஞ்சம் மிச்சமிருந்தது. துவையலைக் கையோடு அள்ளி நாக்கில் வைத்துவிட்டுக் கையைக் கழுவினார்.

மாடுகளுக்கான தண்ணீர்த் தொட்டியில் கழனித் தண்ணீர் நிரம்பி, புளிச்ச வாடை வீசிக்கொண்டிருந்தது. மிச்சமிருந்த கஞ்சித்தண்ணியை அதில் ஊற்றிய புனமாலை, ‘ஊருல எத்தனை பய மாடுவொள தேடிக் கண்டு பிடிச்சுக் கொடுத்திருப்பேன். எம்மாட்டைக் கண்டுபிடிச்சுக் கொடுக்க ஒரு நாதியில்லையே’ என்று சொல்லிக்கொண்டு, திண்ணைக்கு வந்தார். இருளாச்சியால் அவர் முகத்தை இப்படிப் பார்க்க முடியவில்லை. வீட்டுக்குள் போனாள். ‘பயமாடு தொலைஞ்சு நம்மளையும் இந்தா பாடுபடுத்துதே’ என்று நினைத்துக்கொண்டாள்.

 ‘சின்னவன் எங்க போறாம்?’

‘தெரியல?’ என்றாள் அவள்.

‘தாட்டாம்பட்டி, கோட்டாளப்பட்டின்னு இந்த மாட்டைத் தேடச் சொல்லலாம்லா?’

‘நீங்க சொல்லியே கேக்க மாட்டான். நான் சொன்னா கேட்டுருவானா?’

வெயில் கொதித்துக்கொண்டிருந்தது. ‘மாடு எங்க போயிருக்கும்?’ என்ற சிந்தனை அவரை மொத்தமாக அலைக்கழித்துக்கொண்டிருந்தது. செவலையின் கன்னுக்குட்டி தொழுவில் இருந்து மெதுவாகக் கத்தியது. அதன் அம்மாவைப் போலவே தோற்றம் கொண்ட கன்றுக்குட்டி. அதைப்போலவே இதற்கும் முகத்தில் செந்நிறத்தில் சுண்ணாம்பை இழுவிய மாதிரி, பழுப்பு வெள்ளை. இதுவும் செவலையைப் போலவே ராசியான கன்னுக்குட்டி என்று நம்பினார், புனமாலை. இந்தக் கன்று பிறந்ததும்தான் பெரியவனுக்கு ஓசூரில் வேலை கிடைத்தது என்பது அவர் எண்ணம்.

‘இந்தா அதுக்குத் தண்ணி காட்டு’ என்று மனைவியிடம் சொல்லிவிட்டுச் சாய்ந்து உட்கார்ந்தார்.

 `எவன் பயித்துலயும் விழுந்து, புடிச்சு கெட்டிப் போட்டுருப்பானுவளான்னு தெரியலயே?’ என்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்படியிருக்க வாய்ப்பும் இல்லை. ஊரில் தோப்பும் வயக்காடும் வைத்திருப்பவர்கள் தெரிந்தவர்கள்தான். அப்படியே வயலில் மாடு, வாயை வைத்தாலும் வந்து ஏசிவிட்டுதான் போவார்கள்.

ஒரே ஒரு முறை அப்படியொரு சம்பவமும் நடந்திருக்கிறது. முகத்துக்கு, முன்னோக்கி நீட்டியபடி இருக்கும் கொம்புகளைக் கொண்ட, நீட்டிக் கொம்பு எருமை செய்த காரியம் அது. பெரிய வாய்க்கால் விதைப்பாட்டில் குத்தா லிங்கத்தின் உளுந்து வயலில் பயிரைத் தின்று நாசம் பண்ணிவிட்டது. நிலையாக நின்றான் குத்தாலிங்கம். வீட்டு வாசலில் நின்று மானங்கெட்ட கேள்வி கேட்டான்.

‘ரெண்டு பயித்துல, மாடு வாயை வச்சுட்டுன்னாடே இப்படி ஏசுத?’


`ரெண்டு பயிரா? நீ மொதல்ல வயலை வந்து பாரு, பாதி வயலை நாசம் பண்ணியிருக்கு, உம்மாடு?’

 `மாடுவோ வாயை வச்சா, விளைச்சலு நல்லாதான்டே இருக்கும். அதுக்குப் போயி இப்படி ஏசுத?’

 ‘இந்தக் கதையெல்லாம் இங்க சொல்லாத. போன பூவு, ஒரு விளைச்சலு இல்ல. தண்ணியில்லாம எல்லாம் மண்ணாப்போச்சு. மாசானத்துக்கிட்ட வட்டிக்கு வாங்கியாங்கும் இப்பம் உளுந்து போட்டிருக்கேன். இதும் போச்சுன்னா, நானும் என் பொண்டாட்டி புள்ளேலும் ரோட்டுலதாம் நிய்க்கணும்’

- அக்கம் பக்கத்து வயல்காரர்களும் ஊர்க்காரர்களும் வந்து சொன்ன பிறகு மறுக்கமுடியவில்லை, புனமாலையால். ஒரு தொகையைத் தெண்டமாக கொடுக்கச் சொன்னார்கள். வேறு வழியில்லாமல் கொடுத்துவிட்டு வந்தார்.  மாடு வயலில் விழுந்ததற்காக, அவர் தெண்டம் கட்டியது அதுதான் முதன் முறை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு வயற்காட்டுப் பக்கம் அதிகமாக மாடுகளை மேய்ப்பதில்லை. வாய்க்கால் மற்றும் ஆற்றங்கரைகளில் மேய்ப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டார்.

 வீட்டில் இருக்க முடியவில்லை அவருக்கு. தாட்டம்பட்டி வாக்கில் போய்த் தேடிவிட்டு தெரிந்தவர்களிடம் சொல்லிவிட்டு வரலாம் என எழுந்து சைக்கிளை எடுத்தார். சின்ன மகனின் பைக், அவர் முன் வந்து நின்றது. அவரைக் கவனிக்காத மாதிரி இறங்கி வீட்டுக்குள் போனான், தலையில் கொண்டை வைத்திருக்கிற அவன். ‘எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்குவோ?’ என்று நினைத்துக்கொண்டு சைக்கிளை அழுத்தினார் புனமாலை.


பஞ்சாயத்து போர்டு அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாட்டுக்கு லாடம் அடிக்கும் சுப்பையா, பார்த்துவிட்டார். இருவரும் நலம் விசாரித்துக்கொண்டார்கள்.

‘மாடு கிடைச்சுட்டா..?’

 ‘தேடிட்டிருக்கேன்’

 ‘எத்தனை நாளாச்சு?’

‘மூணு.’

‘மேயப்போன இடத்துல இருந்தா காணாமப்போச்சு?’

 ‘ஆத்து மண்டபத்துக்கு மேல, முதல் விதைப்பாடு இருக்குல்லா…’

  ‘வரப்புல பலா மரம் நிய்க்குமே?’

 ‘ஆமா’

‘அது பல்லு நீண்டவன் வயல்லா… சரி’

 `அங்க வரப்புல நின்னு மேச்சுட்டு இருந்தேன். அங்கயிருந்து அவயம் போட்டுட்டே வந்தான், பல்லு நீண்டவன். `யோவ் மாடு உள்ள இறங்குச்சுன்னா, காலை வெட்டிருவம்னு சொன்னான். எனக்கு கோவம் வந்துட்டு. ’வயல்ல விழுந்தா வெட்டிருவியோல?’ன்னு கேட்டேன். `ஆமா’ன்னு சொன்னான், திமிரா. `வெட்டுல பாப்போம்’னு சொன்னேன். பெறவு, வார்த்தைத தடிச்சுப் போச்சு ரெண்டு பேருக்கும். கொஞ்ச நேரத்துல, அவன் போயிட்டாம். நான் மாடுவள பத்திட்டு வந்துட்டேன், வீட்டுக்கு. வழக்கமா, சாயந்தரம் பால் கறக்கணும்லா, கன்னுக்குட்டி தேடுமேன்னு, அந்த நேரத்துக்குச் சரியா அதுவாவே வீட்டுக்குப் போயிரும் செவலை. நானும் அப்படித்தாம் வீட்டுக்குப் போயிருக்கும்னு நினைச்சுட்டு இருந்தேன். வந்து பாத்தா, மாடு வரலைங்கா, வீட்டுக்காரி. அப்ப போனதுதாம்… எங்க போச்சுன்னு தெரியாம, தேடிட்டிருக்கேன்.’

 ‘சரியாப்போச்சு, போ. நீ அந்த சண்டாளன்ட போயா, வாயைக் கொடுப்பே? இப்பம்லா ஞாவத்துக்கு வருது. இது அவன் வேலையாதாம் இருக்கும். பேதில போவாம், திருட்டு மாட்டை அடிமாட்டுக்கு விய்க்குத பயல்லா…’

 `என்னடே சொல்லுத?’

 ‘பெறவு. ஒனக்கு அவனைத் தெரியாம எப்படி இருக்கும்?’

 ‘நான் கேள்விப்பட்டதுகூட இல்லையே?’

‘அவன் ஆக்கங்கெட்டவம்லா. பேரு நரைச்சாம். எந்தூர்ல இருந்தோ ஆழ்வாரிச்சுக்கு வந்திருக்காம்னு சொல்லுதாவோ. கடையம் சந்தையில வித்தா தெரிஞ்சிரும்னு நயினாரம் சந்தையில போயில்லா, கள்ள மாடுவள விய்க்காம், கேரளாக்காரனுவளுக்கு. எல்லாம் அடி மாட்டுக்குப் போவுது. நீ ஒண்ணு செய்யி. நேரா அவன் வீட்டுக்குப் போயி, தொழுவுல நோட்டம் போடு. வீடு எங்கன்னு சொல்லுதேன். அங்ஙனதாம் நிய்க்கும் மாடு. அதைத் தெரிஞ்சுகிட்டு, வீட்டுக்குள்ள போ. அவன்ட்ட நயஞ்சு பேசு. இல்லனா கால்ல, கையில விழுந்தாது மாட்டைப் புடிச்சுட்டு வந்துரு. கண்டிப்பா இது, அவன் வேலைதாம் பாத்துக்க. நல்லவேளை எங்கிட்ட சொன்ன, இல்லைன்னா ஊர் ஊரா தேடிட்டுதாம் இருக்கணும். உடனே கெளம்பு. நாளைக்கு, நயினாரம் சந்தை. அவன் இன்னைக்கு ராத்திரி மாடுவள பத்திட்டுப் போனாலும் போவாம்...’

புனமாலைக்கு ஆச்சர்யமாக இருந்தது. இப்படியெல்லாம் பண்ணுவார்களா என்று.

‘மாட்டைக் களவாண்டிருக்கது அந்தப் பய. ஏன் அவன்ட்ட நயஞ்சு பேசணும். நாலு மிதி மிதிச்சாதான மனசு நிம்மதியா இருக்கும். பெறவு போலீஸுக்குப் போய்க்கிடுவோம்’

 `இங்கரு, நீ நினைக்கது சரிதாம். ஆனா, அவன் ஆளு, வேற மாதிரி. தப்பே பண்ணியிருந்தாலும் அவனுக்கு ஏண்டுகிட்டுப் பேசத்தான் ஆளுவோ இருக்கு, அவன் ஊர்ல. அதுக்கு ஏத்தாப்ல பேசுவான். விவாரத்தை உம்மேலயே திருப்புனாலும் திருப்பிருவாம். கூட கரிவேலையும் (மந்திர, தந்திரம்)பாப்பானாம். அதனால அவனை எதுரா யாரும் பேசமாட்டாவோ.. காரியம் ஆவணும்னா டொப்புன்னு கால்லயும் விழுந்துரு வாம். இன்னொரு விஷயம் கேளு, அடிமாட்டுக்கு விய்க்கப் போறவன் தொழுவுல எந்த மாடு காலு வைக்கோ, அந்த மாடு விளங்காதுன்னும் சொல்வாவோ. ஊரு அப்படித்தாம் நம்புது. அங்கருந்து பத்திட்டு வந்தா, ஒண்ணு நோயில சாவும். இல்லன்னா, வீட்டு ஆளுவொள கொணக்கிரும். இதை நான் சொல்லலை. அக்கம் பக்கத்து ஊருல சொல்லிக் கேள்விப்பட்டது, கேட்டியா? நம்ம சிவசைலத்துலயும் கருத்தப்பிள்ளையூர்ல அப்படி சம்பவம் நடந்திருக்கு. மாட்டுக்கு லாடம் அடிக்க வாரவங்க பேசிக்கிட்டது, இது. நீ உடனே போயி மாட்டைப் பாரு. அவன் தொழுவுலதாம் கண்டிப்பா நிய்க்கும். வெளிய கொண்டாந்து, வித்திரு’ என்றார் சுப்பையா.

 புனமாலை, முதலில் மாடு தேவை என்று நினைத்துக்கொண்டார். பிறகு, ‘நீயும் வாயன்டே’ என்றார்,  சுப்பையாவிடம்.

‘நானுமா? அப்பம் என் வண்டியில போயிரும்.’ டிவிஎஸ் 50-ல் இருவரும் கிளம்பிச் சென்றார்கள், ஆழ்வார்குறிச்சிக்கு. போகும் வழியெங்கும் செவலை பற்றிய நினைவுதான் அவருக்கு.

சுப்பையா சொன்னதுபோலவே அவன் தொழுவில்தான் நின்றது செவலை.

நரைச்சான் சொன்னான், ‘இது ஒம்ம மாடுன்னு சத்தியமா எனக்குத் தெரியாது. என் வீட்டுக்குப் பின்னால வந்து நின்னுகிட்டு, அரை நாளா மாடு அவயம் போட்டுது. யாரு மாடுன்னு தெரியலை. பசிக்கு அவயம் போடுதுன்னு நினைச்சு, தொழுவுக்கு இழுத்துட்டு வந்து வைக்கோலைப் புடுங்கிப் போட்டேன். தின்னுட்டு இங்கயே நின்னுகிட்டு. விரட்டுனாலும் போவலைன்னா பாருமே. எங்கூரு ஆளுவோ, பூரா பேர்ட்டயும் சொன்னேன் பார்த்துக்குங்க. `இப்படியொரு செவலை, என் வீட்டுல வந்து நிய்க்கு. யாரும் விசாரிச்சு வந்தா சொல்லுங்க’ன்னு. ஒரு துப்பும் கெடைக்கலை. வாயில்லா ஜீவனை அப்படி ரோட்டுல விட்டுர முடியுமா? எவனும் சந்தைக்குக் கொண்டு போயி வித்தாலும் வித்துப் போடுவாம். அதாம் யாரும் விசாரிச்சு வந்தா கொடுப்போம்னு தொழுவுல கெட்டிப் போட் டேன். இப்பம்தான் என் வீட்டுக்காரி, மாடுவளுக்குத் தண்ணிகாட்டிட்டு நிய்க்கா. இன்னா, நீங்க வந்திருக்கியோ? தெரிஞ்ச ஆளுவோ வேற. நான் கட்டிப் போட்டது நல்லதாப்போச்சுல்லா. அன்னைக்கு வேற நாம சண்டை போட்டிருக்கோம். அதுக்காவ மாட்டைப் புடிச்சுட்டு வந்து கெட்டிப் போட்டிருக்கேன்னு நினைச்சுராதீரும். அது கோவத்துல பேசிக்கிட்டது. அதை மனசுல வச்சிக்கிடாதீங்க’ என்ற நரைச்சான், தான் அகப்பட்டுக்கொண்டோம் என்பதைப் புரிந்துகொண்டு அதிலிருந்து தப்பிக்க நிறைய பேசினான்.

 புனமாலைக்கு மாடு கிடைத்ததில் சந்தோஷம். கண்டதுமே முகத்தை அவர் மேல் இழுவிக் கொண்டு, கைகளை நக்கியது செவலை. அதன் கண்களிலிருந்து கீழ்நோக்கி நீர்க் கோடுகள் தெரிந்தன. மூன்று நாள்களாகப் பட்டினி போட்டிருப்பான் போலிருக்கிறது. பசிச்சோர்வு முகத்தில் தெரிந்தது. உடல் வற்றிப்போயிருந்தது. முதுகெலும்புகள் லேசாகத் தெரியத் தொடங்கின. அதன் தோற்றம் பரிதாபமாக இருந்தது. புனமாலைக்குக் கோபம். அவரை அடக்கினார் சுப்பையா.

செவலையின் முகத்தைத் தடவிக் கொடுத்தார். அது செல்லமாகக் கத்தியது. அந்தக் கத்தலில் தெரிந்த பாசத்தை, ஏக்கத்தை, வலியை அவர் உணர்ந்தார். அவர் அதன் முகத்தை மீண்டும் தடவினார். இருவரும் ஏதோ பேசிக்கொள்வது போல, இருவருக்குமான மௌன உரையாடல் போல, அது இருந்தது. திடீரென அழுதுவிடுபவர் போல ஆனார். சுப்பையா, அமைதி என்கிற விதமாக அவர் தொடையைத் தட்டினார். சுதாரித்துக்கொண்டார் புனமாலை. அவனது தொழுவில் இன்னும் சில மாடுகள்  எலும்பும் தோலுமாக இருந்தன. யார் மாடுகளோ?

 சுப்பையா வண்டியை மெதுவாக ஓட்டிக்கொண்டு போக, மாட்டைப் பத்திக்கொண்டு வந்தார் புனமாலை. ஆழ்வார்குறிச்சிக் குளத்தில் தண்ணீர் குட்டை போலத்தான் இருந்தது. செவலை, அதைக் கண்டதும் வேகமாகப் போய்க் குடித்தது. நீண்ட நேரமாக நின்று குடித்துக்கொண்டே இருந்தது.

 ‘பேதில போவாம். மூணு நாளா தண்ணிகூட வைக்காம இருந்திருக்கானே, இவம்லாம் உருப்புடுவானா? வாயில்லா ஜீவனை இப்படி போட்டு வச்சிருக்கானே, நல்லாருப்பானாடே?’ என்று சொல்லிவிட்டு, `அந்தப் பயலை இறுக்கிட்டு வந்திரட்டா?’ என்று திரும்பினார் கோபமாக.

‘கோவத்தைக் குறையும். அதாம்  சொன்ன மாதிரி மாடு கிடைச்சுட்டுல்லா’ என்ற சுப்பையா, ‘உடனடியா மாட்டை யார்ட்டயாது தள்ளி விட்டிரும், கேட்டேரா? இல்லனா சிக்கலுதாம். ஏம்னா, அந்த ஆக்கங்கெட்டவன் தொழுவு லெட்சணம் அப்படி! என்னதாம் ஒமக்கு ராசியான மாடா இருந்தாலும் ஆளுவோ உடம்புக்கு ஒண்ணுன்னா, யாரு பார்க்கது?’ என்று சொல்லிவிட்டுப் புனமாலையைப் பார்த்தார் சுப்பையா.

 அவருக்கு பயம் தொற்றிக்கொண்டது. வெற்றிலையை எடுத்து சுப்பையாவிடம் இரண்டைக் கொடுத்துவிட்டு, தானும் போட்டுக் கொண்டார். செவலை இன்னும் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. ’நீ சொல்லுததும் சரிதாம் சுப்பையா. திடுதிப்புன்னு கெடையில கெடந்துட்டோம்னு வையேன், பெத்த பிள்ளையோகூடப் பாக்காது’ என்றார் புனமாலை.

செவலை, தண்ணீரைக் குடித்துவிட்டு வந்து, அவர் வலது கையின் அருகில் நின்றது. அதன் முதுகில் மெதுவாகத் தட்டிக் கொடுத்தபடி வீட்டுக்குப் பத்திக்கொண்டு வந்தார். வந்ததுமே தரகரிடம் சொல்லிவிட்டார்.

 தரகரும் அதையே சொன்னார். `அடிமாட்டுக்கு விய்க்கவன் தொழுவுக்கு மாடு போய்ச்சுன்னா, அது சுணங்கும். இல்லன்னா, ஆளுவொள கொணக்கிரும். அதனால அதை விய்க்கதுதாம் சரி’ என்றார். இரண்டே நாள்களில், கிடைத்த தொகைக்கு விற்றுவிட்டார், செவலையை.

செவலை இல்லாத தொழுவு அவருக்கு வெறுமையாக இருந்தது. திடீரென்று தூக்கத்தில் எழுந்து, `செவலை கத்துன மாதிரி இருந்துச்சுல்லா?’ என்று கேட்கிறார் மனைவியிடம். திடீரென ஏதோ ஞாபகம் வந்தவராக, ‘செவலைக்குப் புல்லைப் போட்டியா?’ என்கிறார். அவருக்குள் பெருங்கவலை வந்து குடிகொண்டது. ‘ச்சே பாசமா வளர்த்த மாட்டை, இப்படி வித்துத் தொலைச்சுட்டேனே?’ என்று எதையோ இழந்த மாதிரி அலைந்துகொண்டிருந்தார். எப்போதும் செவலை பற்றிய சிந்தனை. முன்பெல்லாம் எடுத்தெறிந்து பேசாதவர், இப்போது எதற்கெடுத்தாலும் எரிந்து விழத் தொடங்கினார்.

 மாட்டை விற்ற நான்கு நாள்களுக்குப் பின், ஒரு காலையில் அவர் சின்ன மகன், பெரிய மகனுக்கு போன் பண்ணிச் சொன்னான். ‘ஏல, நீ சீக்கிரம் கெளம்பி வா. அப்பாவுக்கு ஒரு கையும் காலும் இழுத்துக்கிட்டு’ என்று.

நன்றி: ஆனந்த விகடன்.

Sunday, September 9, 2018

மேப்படியான் புழங்கும் சாலை

ம்பிக்கூண்டு இருக்கும் லாரி, தெருவுக்குள் இருந்து ஆடி ஆடி வந்து  ஆழ்வார்க்குறிச்சி செல்லும் சாலையில் வளைந்து நின்றது. லாரியின் பின்னால் வந்த வன அதிகாரியின் ஜீப், இப்போது ஓரமாக ஏறி முன்பக்கம் வந்து நின்றது. ஜீப்பில் இருந்த பெண் அதிகாரி இறங்கி, லாரியைச் சுற்றிப் பார்த்தார். டிரைவரிடம், ``எல்லாம் சரியா இருக்குல்லா?’’ என்று கேட்டார். அவன் தலையை ஆட்டினான். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில், முன்னால் நின்ற தொரட்டுவிடம் கையைக் காட்டிவிட்டு ஜீப்பில் ஏறிக் கொண்டார். 
ஊர்க்காரர்கள், எக்கி எக்கி லாரிக்குள் இருக்கும் கூண்டைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது தெரியவில்லை. ஏதோ ரகசியம் பேசுவதுபோல மெதுவாகப் பேசிக்கொண்டார்கள். பக்கத்தில் இருக்கிற தட்டடி வீடுகளிலிரு ந்து பெண்கள் எட்டிப்  பார்த்தபடி ஆச்சர்யத்தோடு நின்றார்கள். அதில் சில பிள்ளைகள் கைகளைக் காண்பித்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தனர். லாரியின் பின்பக்கம் ஓரமாக நின்ற இரண்டு டி.வி.எஸ் 50-களில் ஏறிக் கொண்ட நான்கு வன அலுவலர்கள், லாரியைப் பின்தொடர்ந்தார்கள்.
8, 8:30 மணிதான் ஆகியிருக்கும். வெயில் வந்துவிட்டாலும் காற்றின் குளிர் இன்னும் மறையவில்லை.
``லாரி எங்க போது தெரியுமில்லா?’’ என்று கேட்டார் தொரட்டு.
``களக்காடு மலைக்குன்னு சொன்னாவோ’’ என்றான் பால்கார இசக்கி.
``ஆமா.’’
``அப்பம், இனும இது இங்க எட்டிப்பார்க்காது, ன்னா?’’
``அதெப்படி சொல்ல முடியும்?’’ என்று பேசிக்கொண்டிருக்கும்போதுதான், 7 மணி பஸ் தாமதமாக வந்து சேர்ந்தது. அது தென்காசியிலிருந்து வரும் பஸ். டிரைவர் இறங்கி, தொரட்டுக் கடையைப் பார்த்தார். கண்டக்டரிடம் ``இங்கயே சாப்ட்ருமா?’’ என்று கேட்டுவிட்டு உள்ளே போனார்கள். தொரட்டு, அவர்களைப் பார்த்தார். அந்தப் பார்வைக்கு `பஸ்ஸு ஏம் லேட்டு?’ என்பதாக அர்த்தம். ``மத்தளம்பாறை பக்கத்துல வீல் பஞ்சராயிட்டு. சரி பண்ணிட்டு வராண்டாமா? அதாம் நேரமாயிட்டு’’ என்று தானாகவே சொல்லிவிட்டுப் போனார் டிரைவர். 
தொரட்டுக் கடையின் முன்தான், வழக்கம்போல பஸ் நிற்கும். அதிலிருந்து இறங்கி வந்த சுப்பையா, கடையின் முன் நின்று சோம்பல் முறித்தபடி கொட்டாவி விட்டார். கையில் சிவப்பு நிற டிராவல் பை இருந்தது. அவரை இப்போதுதான் ஊர்க்காரர்கள் பார்த்தார்கள்.
``ஏண்ணே... எங்க போயி தொலைஞ்செ?’’ என்று கேட்டார் பால்சாமி. 
``கேரளாக்குலா. இப்பதாம் வாரென்.’’
``நீரு வாரதுக்குள்ள ஊரே அமளி துமளியாயிட்டே!’’
``என்னடே?’’
``ஒரு லாரி, ஜீப்பு, நாலஞ்சு போலீஸு, ஃபாரஸ்ட் ஆபீஸரு, பக்கத்து ஊர்ல இருந்துலாம் ஆளுவோ. ஊரே ஜேஜேன்னுல்லா இருந்துச்சு செத்த நேரத்துக்கு முன்ன. எதுத்தால பார்த்திருப்பியே?’’
``தூங்கிட்டுலா வந்தேன், பஸ்ஸுல.’’
``நல்லா தூங்குன போ, பத்து, பதினைஞ்சு நிமிஷம் இருக்குமா போயி?’’
``ச்சே… இப்பம்தான் போவுதுங்கென். இன்னா, தொரட்டுட்ட கேளும்…’’ - தொரட்டு டீக்கடையின் முன் உள்ள பெஞ்சில் உட்கார்ந்திருந்தார். அது, டீக்கடை என்று அழைக்கப்பட்டாலும் இட்லி, தோசை, பூரி உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் சிறு ஹோட்டலாகவும் இருக்கிறது. தொரட்டு மனைவியின் கைப்பக்குவத்தில் உருவாகும் சாம்பார் மற்றும் பூரிக்கிழங்குக்கு ஒரு கூட்டமே கிறங்கிக் கிடந்தது ஊரில். ``என் வீட்டுக் காரியும்தான் சாம்பாரு வைக்கா, நாக்குல வைக்க முடியுதா? உங்கையில என்னமோ இருக்கத்தான் செய்யுது?’’ என்கிற பாராட்டுகளை வஞ்சகமில் லாமல் உள்ளூர்க்காரர்கள் வழங்கியதன் பொருட்டு, தொரட்டு மனைவி கொஞ்சம் தலைக்கனத்தோடு அலைபவளாக இருக்கிறாள்.
டீயை நன்றாக ஆற்றிய பிறகு ஒவ்வொருவரையாகக் கூப்பிட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தான் தொரட்டு. 
``ஏ... கூறுகெட்டவனே, சீனிய கொறச்சு போட்டிருக்கலாம்லா’’ என்ற சுப்பையா, கடையின் எதிரில் இருந்த கட்டமண் சுவரில், உட்கார்ந்துகொண்டார். அவரைச் சுற்றி நான்கைந்து பேர் தோளில் துண்டு போட்டபடி நின்று டீ குடித்துக்கொண்டிருந்தார்கள்.
கீழ்ப்பக்கம் வெள்ளாட்டுக்கு ட்டிகள் இரண்டு, யாரோ பறித்துப் போட்டிருக்கும் கருவைக் காய்களைக் கடித்து அரைத்துக் கொண்ருடிந்தன. அருகில்தான் கடனாநதி அணை என்பதால், காற்று குளிர்ந்து வீசிக்கொ ண்டிரு ந்தது. அணையில் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருக்கிறது. வற்றாத ஜீவநதி, இந்தக் கோடையில் வற்றிவிடும் என்பது ஊர்க்காரர்களின் கவலை. 
வயலுக்குச் செல்பவர்கள், நான்கைந்து பேராகச் சேர்ந்து போய்க்கொண்டிருந்தார்கள். கையில் அரிவாளோ, குத்தீட்டியோ, பெரும் கம்போ இருக்கிறது. சமீபகாலமாக அவர்களின் நடமாட்டம் இப்படித்தான். 
இந்தக் காலை நேரத்தில் புளிய மற்றும் வேப்பமரங்கள் மூடியிருக்கிற தொரட்டுக் கடையின் முன் இப்படி நின்று, உட்கார்ந்து பேசியபடி டீ குடிப்பது சுகமாகத்தான் இருக்கிறது. 
முழுவதும் வெள்ளையாகிப் போன தலைமுடியைக் கட்டையாக வெட்டியும் மீசையைத் திருக்கியும் விட்டிருந்தார் சுப்பையா. ``இவ்வளவு வயசாயியும் இவருக்கு முடிய பார்த்தியா, எவ்வளவு அடர்த்தின்னு. ஒத்தமுடி கொட்டல!’’ என்று அவரைப் பார்த்தால் குறைபட்டுக்கொள்வார் கள், தலையின் முன்பக்கம் முடி இழந்த இளசுகள். 
அவரிடம் மேப்படியான் வந்த விஷயத்தைச் சொன்னதும், ``ச்சே, நான் பார்க்க முடியாமபோச்சே!’’ என்று வருத்தப்பட்டார். மேனி தழுவும் காற்று, திடீரென சத்தம் கொடுத்தபடி செல்கிறது. நீண்ட மேற்குத் தொடர்ச்சி மலையில், இந்த இடத்தில் மட்டும் சிறு இடைவெளி. இதனால் எந்தத் தடையுமின்றி வரும் மேக்காத்து, இங்கு மட்டும் கொஞ்சம் வேகமாக வீசுவதுபோல் தோன்றும். அவரின் முன் நின்றுகொண்டிருந்த பால்சாமி, குளிருக்கு லேசாக உடலை ஒடுக்கி, கைகளைக் கட்டிக்கொண்டு சொன்னார். 

``ஆத்தாடி, என்னம்மா மொறைக்கிங்க. கண்ணுமுழியை கிட்ட நின்னு பார்த்தன்னு வையி, கொலை நடுங்கிபோவும் நடுங்கி. பல்லு ஒவ்வொண்ணும் குத்தீட்டி மாரிலாடா இருக்கு. கடிச்சு ஒரு இழு இழுத்துச் சுன்னா, ஒன்றரை கிலோ கறி வாயிக்குள்ள அல்வா மாதிரி போயிரும்னா பாரு! என்னா நீட்டம். ஆளுவோள கண்டுதுன்னா, உர்ருன்னு ஒரு சத்தம்… கொஞ்சம் பயந்தவம்னா, பேதில போயிருவாம்.’’
``சரிதாம்’’ என்றார் சுப்பையா.
அவர்களுடன் டீ குடித்துக்கொண்டிருந்த பால்கார இசக்கி, அங்கும் இங்கும் பார்த்துவிட்டு மெதுவாக, ``கோபத்தைப் பார்த்தியோ அதுக்கு. அவ்ளவுலா வருது. நம்ம சிலுப்பி மவம் அதைப் பார்த்ததுமே மோண்டுட்டாம்லா’’ என்று சொன்னான் சிரித்தபடி.
பால்சாமி, அவன் முதுகைத் தட்டி, ``உடனே அளக்காதல கதைய. மோண்டானாம், இவம் பார்த்தாம்லா? நானும்தான் கூட நின்னன்’’ என்றார்.
சம்முவம், டீ கிளாஸை வைத்துவிட்டு, ``ச்சே, நீரு என்னய்யா, இப்படி புளுவுதேரு. சிலுப்பி மவம் என்ன பச்சப்புள்ளயா, அதைப் பார்த்து மோளதுக்கு?’’ என்றபடி அவர்களுடன் சேர்ந்துகொண்டான். 
``நான் பார்த்தேன். காலுக்கு கீழே ஒரே தண்ணீ, சளசளன்னு. நீங்க இல்லைன்னு சாதிக்கேளே... அப்பம் அவனே வந்து சொன்னாதாம் நம்புவி யோபோலுக்கு’’ என்ற பால்கார இசக்கி, ``அப்படி பொய்யச் சொல்லி எனக்கு என்னவே ஆவப்போவுது?’’ என்று எதிர் கேள்விக் கேட்டான்.
``இல்லாததைச் சொல்லிச் சிரிக்கப்பிடாதுலா?’’
``நல்லா போச்சுப் போ! இதை, சிரிக்கதுக்கா சொன்னேன். கண்ணால பார்த்தேன்ங்க. நம்ப மாட்டங்கேளே?’’
கடைக்குள் இருந்தபடி தொரட்டு இவர்களின் அவயத்தைக் கேட்டு, ``சுப்பையா மாமா... என்னவே, காலைலயே வந்ததும் வராததுமா ஆளுவோள கூட்டிட்டேரு’’ என்றான் சத்தமாக.
``எல்லாம், நம்ம மேப்படியான் வெவாரம்தாம்’’ என்ற சுப்பையா ஒரு பீடியைப் பற்றவைத்து க்கொண்டார். `மேப்படியான்’ என்று சுப்பையா சொன்னது, சிறுத்தையை. 
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கிறது, குருவபத்து. சுமார் நூறு, நூற்றைம்பது வீடுகளைக்கொண்ட கிராமம். வயலும் காடும் என இருக்கிற இவர்களின் சமீபத்திய பயம், சிறுத்தை. முதலில் வயக்காடுகளுக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்யத் தொடங்கியது, காட்டுப்பன்றிகள்தான். கிழங்கு வகைகள் என்றால், பன்றிகளுக்குக் கொண்டாட்டம். பயிர் முடிந்து அறுவடை நேரத்தில் அழித்து அழிச்சாட்டியம் செய்துகொண்டிருந்த பன்றிகளை, வேட்டுப் போட்டு மிரட்டி க்கொண்டிருந் தார்கள். கருத்தப் பிள்ளையூர் நடேசனிடம் சொன்னால், துப்பாக்கி வேட்டை யும் நடக்கும் திருட்டுத்தனமாக. இந்த வேட்டை கறிக்காக. எப்படியோ பன்றி கள், தன் வருகையைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டன. அவற்றுக்கு வேறு எங்கோ வசமாக இரை கிடைத்துவிடுகிறதுபோல.
பிறகு கரடிகள். இவை வயல்களையும் தோப்புகளையும்தான் கபளீகரம் செய்துவந்தன. இருந்தாலும் பன்றிகளாலோ, கரடிகளாலோ உயிர் பயம் அதிகமில்லை. அப்படியே மோதவேண்டி வந்தால்கூட, சிறு சிறு காயங்க ளுடன் தப்பிவிட முடியும். ஊரில் அப்படி காட்டுப்பன்றி முட்டி, தொரட்டு மருமகனின் பின்பக்கம் காயமாகி, அவன்பட்ட அவஸ்தை ஊர் அறிந்ததுதான்.  கடந்த சில வருடங்களாக சிறுத்தைகள், ஊருக்குள் விருந்தா ளிகள்போல அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருக்கின்றன. இதுதான் இப்போது பீதியைக் கிளப்பியிருக்கிறது.

சம்முவம் வீட்டுத் தொழுவில்தான் நடந்தது, அந்தச் சம்பவம். அதிகாலை 3:30, 4 மணி இருக்கும். வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தது குடும்பம். வெளியே நாய் குரைக்கும் சத்தம். தெருவில் சைக்கிள் அங்கோ, இங்கோ போனால்கூட, நாய் குரைக்கும் என விட்டுவிட்டார் சம்முவம். ஆனால், விடாமல் குரைத்தது நாய். சந்தேகப்பட்டு வெளியில் வந்தவர், லைட்டைப் போட்டார். கையில் டார்ச் லைட். முருங்கைமரத்தின் அருகில் இருந்து, வெருவு ஒன்று விருட்டென பாய்ந்தது. ``இது இங்க என்ன பண்ணுது?’’ என்ற சம்முவம், சுற்றும் முற்றும் பார்த்தார். வெளிச்சம் கண்டதும் ஆட்டுக்குட்டிகள் கத்தத் தொடங்கின. 
வீட்டுத் தோட்டத்தைத் தாண்டிப் போய் குரைத்துக்கொண்டிருந்தது நாய். ``இது எதுக்கு அங்க போயி கொலய்க்கு?’’ என்று சத்தம் கொடுத்துக்கொண்டு பின்னாலேயே போனார். 
``ஏம் கனைக்கெ நாயே?’’ என்று அதட்டலைப் போட்டுவிட்டு, நாய் நின்ற இடத்திலிருந்து தூரத்தில் டார்ச்சை அடித்தார். செடி செத்தைகள் அசைந்துகொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. சம்முவத்தின் சத்தம் கேட்டதும் கீழ் வீட்டிலிருந்து அருணாசலம், ``என்னடே?’’ என்று வெளியே வந்தார்.
``நாயி கொலக்கேய்ன்னு வந்தேன்’’ என்ற சம்முவம் டார்ச்சைத் தூர தூரமாக அங்கும் இங்கும் அடித்துப் பார்த்தார். வெளிச்சம் தூர தூரப் போய் விழுந்தாலும் வேறு ஒன்றும் தெரியவில்லை. அதற்குள் அருணாசலமும் வந்துவிட்டார்.
போன இடத்திலிருந்து ``வா நாயே, ஏம் தொண்டயபோடுதெ?’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பினார். முகத்தில் எரிச்சல். ஏதோ நடந்திருக்கிறது என்பது அவருக்குப்  புரிந்தது. இல்லை என்றால் நாய், அவ்வளவு தூரம் போய் குரைக்காது. ``ஆடு களவாங்க எவனும் வந்திருப்பானுவளோ?`` என நினைத்தபடியே தொழுவத்தின் அருகில் வந்தார். 
இதற்கு முன் ஆடு திருட வந்தவர்களை இதே நாய் காட்டிக்கொடுத்தி ருக்கிறது. ஆடுகளை விட்டுவிட்டு இரண்டு பேர் தப்பிவிட்டார்கள். ஆனால், அதில் ஒருவனின் பின் தொடையை நாய் கவ்வியதைப் பார்த்தான் சம்முவம். அந்தக் கடியோடு அவன் ஓடி பைக்கில் பறந்துவிட்டான். விரட்டிப் போயும் ஆள் இன்னாரென்று பிடிபடவில்லை. ஆனால், கீழ ஊரில் இரண்டு பேர் மீது சந்தேகம் இருக்கிறது அவருக்கு.
அசைபோட்டபடி படுத்துக்கிடந்த எருமைகளில் இரண்டு, வெளிச்சம் கண்டதும் எழுந்து நின்று மிரட்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தன. இதற்கு கொஞ்சம் கீழ்ப்பக்கம்தான் ஆட்டுக்கிடை. வட்டவடிவ வேலி மாதிரி பட்டி கட்டி, பத்து, பதினைந்து குட்டிகளை உள்ளே விட்டிருந்தார். போன மாசம்தான் ஏழெட்டுக் குட்டிகளைப் பொட்டல்புதூர் கந்திரிக்காக விற்றிருந்தார். இல்லையென்றால், பட்டிக்குள் ஆட்டுச்சத்தம் அதிகமாகக் கேட்டிருக்கும். அவற்றில் சில கத்திக்கொண்டிருந்தன. ஆட்டுப்புழுக்கை வாசம் கப்பென முகத்தில் வந்து அடித்தது.
அருணாசலம், ``ராத்திரிபோல நாயி அவயம் போடுதுன்னா… காரணமில்லாம இருக்குமா?’’ என்றார் சம்முவத்திடம்.
``அதாம் என்னன்னு பார்க்கேன்’’ என்ற சம்முவம் டார்ச்சை அடித்தபடியே தொழுவைச் சுற்றிப் பார்த்தார். அவருக்கு ஒன்றும் பிடிபடவில்லை. என்னமோ நடந்திருக்கிறது, என்ன வென்றுதான் தெரியவில்லை. குழப்பத்துடன், கோழிக்கூட்டுக்கு மேலே டார்ச்சை அடித்தவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதில் ரத்தக்கறைகள். ஏழெட்டுப் புள்ளிகளாக சிறிய குன்னிமுத்து மாதிரி சொட்டுச் சொட்டாகக் கிடந்தன. இன்னும் சரியாகக்கூட காயவில்லை. இப்போதுதான் நடந்திருக்கும். `என்னவாக இருக்கும்?’ என யோசிக்கும்போதே, ஆட்டுக்குட்டிகளை எண்ணினார். அடிவயிற்றில் வெள்ளை விழுந்திருக்கும் குட்டியைக் காணவில்லை. 
அருணாசலம் டார்ச்சை வாங்கித் தரையில் அடித்தார். கொஞ்ச தூரம் நூல் கோடுபோன்று சிதறியிருந்தது ரத்தம். சம்முவத்துக்குப் பயமாகிவிட்டது.
``யாரு வேலையா இருக்கும்?’’ எனக் கேட்டான். பிறகு மாடுகளின் மூத்திரம் நனைத்திருந்த மண்ணில் பதிந்திருந்த தடங்களை லைட்டை அடித்துப் பார்த்தார். புரிந்தது. `இது, அதன் வேலையாகத்தான் இருக்கும்’ என நினைத்தார்.
``நெனச்சேன். இன்னா, வந்து வேலைய காட்டிட்டெ.’’
``என்ன சொல்லுத?’’
``நாலு நாளைக்கு முன்னாலதான் தோப்புக்குள்ள, மேப்படியான் நடமாட்டத்தைப் பார்த்திருக்காம் நம்ம முத்து. இன்னிக்கு ஊருக்குள்ள வந்துட்டே?’’ என்றார் அருணாசலம். 
``இத, சிறுத்தைன்னு எப்படிச் சொல்லுதெ?’’
``அதாம் ஊருக்குள்ள நடமாடிருக்குல்லா, அதவெச்சுதாம்!’’
``ச்சே… நல்ல குட்டில்லா? வம்பாபோச்சே… எங்கெ தூக்கிட்டுப் போயிருக்கும்னு தெரியலயே?’’
``இன்னுமா உயிரோட வெச்சிருக்கும்?’’
``மலையைவிட்டு இவ்வளவு தூரம் வந்து குட்டியத் தூக்கிட்டுப் போவுதுன்னா, முன்னபின்ன வந்து நோட்டம் போட்டிருக்குமோ?’’ கேட்டான் சம்முவம்.
``ஒரு எழவும் தெரியலயே!’’
``ச்சே.. நேத்துதாம் என் சின்ன மவன், `இந்தக் குட்டி எனக்கு’ன்னு சொல்லி விளையாடிட்டிருந்தாம். இப்படியாவிபோச்சே?’’
``ம்ம்…’’
``நேத்து எம்முதுவுக்குப் பின்னால நின்னு, ம்மேன்னு போட்ட சத்தம்கூட காதுக்குள்ள இன்னும் கேக்கு.’’
``ஆளுவோ ஒத்த செத்தையில நின்னா என்னத்துக்காவும்?’’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள். 
கிழக்கே இருந்து ``என்னடே சத்தம்?’’ என்று அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்தார்கள். விடியும் முன்பே பரபரப்பாகிவிட்டது ஊர். 
சம்முவமும் அருணாசலமும் ரத்தக்கறை சிந்திய வழித்தடம் பார்த்து அது போயிருக்கும் பாதையைக் கண்டுபிடிக்க முயன்றனர். அந்தப் பாதை, தொரட்டுக் கடையைத் தாண்டி கேரளாக்காரன் தோட்டத்து வழியாக மலைபாதை நோக்கிச் சென்றது. 
அருணாசலம் சொன்னார், ``பார்த்தா, தொரட்டுக் கடைக்கு மேக்கத்தான் மேப்படியான் நடமாட்டம் அதிகமா இருக்குபோலுக்கு. `அவங்கிட்ட ஜாக்கிரதையா இரு’ன்னு சொல்லிவைக்கணும்.’’

காலை 10 மணி வாக்கில் மலையடிவாரத்தில் இருந்த கேரளாக்காரன் தோட்டத்துக்கு அருகில், வயிற்றுப்பகுதி சிதைந்த வெள்ளாட்டுக்குட்டி ஒன்று செத்துக் கிடப்பதாகத் தகவல் வந்தது. அது சம்முவம் ஆடு என்பதும், அதைத் தூக்கிச் சென்றது சிறுத்தைதான் என்பதும் உறுதியானது. ஏனென்றால், சிறுத்தை மட்டும்தான் குடல், குந்தாணியைத் தவிர வேறு எதையும் தொடாது.
பிறகு ஊரே கூடி சிவசைலம் வன அலுவலகத்தில் போய் நின்றார்கள். ``புள்ளைக்குட்டியோ அலையுத இடம். நாலஞ்சு நாளுக்கு முன்னால அதுவோ நடமாட்டம் தோப்புக்காட்டுக்குள்ள தெரிஞ்சுது. இப்பம், ஊருக்குள்ளயே வந்துட்டு. என்ன செய்யன்னு தெரியல. ஒரே பயம். சின்னபிள்ளைல வெச்சுட்டு எப்படிப் புழங்கன்னு தெரியல. ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆச்சுன்னா, யாரு என்ன பண்ண முடியும்? ஏதாவது செய்யுங்க’’ என்றதும் கூண்டு வைத்தார்கள். மூன்று நாள்களாக, கறுப்பில் வெள்ளைப் புள்ளிகொண்ட தெருநாயுடன் சம்முவம் வீட்டுத்தொழுவில் காத்திருந்தது, கொப்பும் குலைகளையும் போட்டு மூடியிருந்த பெரிய இரும்புக்கூண்டு. நாய் தினமும் உள்ளே கிடந்து கத்திக்கொண்டிருந்தது. சிறுத்தை கூண்டுக்குள் நுழைந்தால், நாய்க்கான கதவு தன்னால் வந்து மூடிக்கொள்ளுமாறு அமைக்கப்பட்ட கூண்டு அது.
அருகில் இருக்கிற பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு, பங்களா குடியிருப்பு, கிராமத்து ஆள்கள் எல்லாம் தினமும் காலையில் வந்து கூண்டை எட்டிப்பார்த்துவிட்டு, ``இன்னைக்குச் சிக்கலயோ?’’ என விசாரித்துவிட்டுப் போனார்கள். கூண்டு வைக்கப்பட்ட மூன்றாவது நாள் சிக்கியது அந்த வழுவழுப்பான மஞ்சள் நிறத்தில் கருநிறப் புள்ளிகளைக்கொண்ட ஆக்ரோஷச் சிறுத்தை. 
முதலில் சம்முவம்தான், சத்தம் கேட்டு வந்து லைட்டைப் போட்டுப் பார்த்தான். கூண்டுக்குள் நின்றுகொண்டு உர்ரென முறைத்தது. அருணாசலமும் வந்துவிட்டார். இருவரும் சேர்ந்து வன அதிகாரிக்குக் காலையிலேயே போனைப் போட்டார்கள். அதற்குள் விஷயம் ஊருக்குள் பரவி, எல்லோரும் சம்முவம் வீட்டின் முன் கூடிவிட்டார்கள். வேடிக்கை பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு பயல், கருவைக் கம்பைக் கூண்டுக்குள் விட்டு சிறுத்தையின் முதுகில் குத்தப்போனான். திரும்பிப் பார்த்து உர்ரென பாய்ந்து முன் கால்களைக் கம்பிக்கு வெளியே நீட்டியது. அதன் ஆக்ரோஷத்தைப் பார்த்ததுமே ஓடிவிட்டார்கள், அந்த இளவட்டப் பயல்கள்.
கீழத்தெரு மாரிமுத்து, ``எடுல அந்த அருவாள, அறுத்துருவோம்’’ என்றான்  வீறாப்பாக.
``அறுக்கப் போற மூஞ்சை காமி. அந்தானி கிழிச்சிருவல நீ? கேரளாக்காரன் தோட்டத்து நாயிக்கே ஒனக்குப் பதிலு சொல்ல முடியாது. இதை என்ன பண்ணிருவெ?’’
``அதுக்கு, இப்படியா வந்து பண்ணும்?’’
``வாயிலயே, அருவாளைப் போடணும்.’’
``நீங்க எல்லாரும் சூரப்புலி யோதாம். அது கொஞ்சம் உர்ருன்னு தொண்டைய போட்டா, ஏழு கிலோமீட்டருக்கு ஓடிருத பயலுவோதானல நீங்க… பெருசா வீறாப்புப் பேச வந்துட்டியோ?’’
``இது அந்தானி, வாரதை இனும நிறுத்திரும்னு நெனக்கியோ?’’
``பெறவு?’’
``கிழிச்சுது. இனும பாரு என்னென்ன நடக்குன்னு?’’
``ஏல, வாயெ பொத்துங்கல. அஞ்சாறு தெரிஞ்ச மாரிதான் ஆளாளுக்குப் பேசுதானுவோ?’’ என்றார் தொரட்டு.
பிறகு காலையில் 7, 7:30 மணிவாக்கில் வனத்துறையினர் அதைப் பத்திரமாகக் கூண்டோடு லாரியில் கொண்டுபோனார்கள். களக்காடுக் காட்டுக்குள் விட்ட தாகச் சொன்னார்கள். களக்காடுக்கும் இதற்கும் பல மைல் தூரம். அங்கிருந்து அந்தச் சிறுத்தை இனி, இங்கு இறங்க வாய்ப்பில்லை என நம்பிக்கையோடு இருந்தார்கள் ஊர்க்காரர்கள். இருந்தாலும் ஓரத்தில் பயம் நடமாடி க்கொண்டுதான் இருந்தது.
அப்போது சுப்பையா ஊரில் இல்லை. மச்சினன் ஊரான வள்ளியூர் சிறுமளஞ்சியில் சுடலைமாடன் கொடை பார்க்கச் சென்றிருந்தார். ஊர்க்காரர்கள், தாங்கள் கண்ட சிறுத்தையின் அருமை பெருமைகளை அப்படி இப்படி என்று வர்ணிக்கும்போது புகைப்படங்களிலும் திரைப்ப டங்களிலும் மட்டுமே பார்த்திருக்கிற அதை, தன்னால் நேரில் பார்க்க முடியவில்லையே என்கிற வருத்தம் அவருக்கு ஏற்பட்டது. 
``ஏம்யா கவலைப்படுதீரு. போருமே காட்டுக்குள்ள. மேக்கப் பார்த்து நடந்தீர்னா, சிறுத்தை என்ன, சிங்கம், புலி, யானைன்னு எல்லாத்தையும் பார்த்து நலம் விசாரிச்சுட்டு வரலாம். ஏம்... குடித்தனம்கூட பண்ணும்’’ என்று அவர் மனைவிதான் எக்காளம் பண்ணிக்கொண்டிருந்தாள்.
``ஏ கோட்டிக்காரி, ஒனக்கென்ன தெரியும் அதெல்லாம்? வாயைப் பொத்துடி’’ என்று அடக்கினார் மனைவியை.
இந்தச் சம்பவம் நடந்த மூன்றாவது மாதம், செல்லையா தோட்டத்தில்  அவர் வீட்டு வேட்டைநாயைக் குதறிப்போட்டுச் சென்றிருந்தது சிறுத்தை. 
ராத்திரி திடீரென வேகமாக நாய் குரைத்ததைக் கண்டு விழித்தார் செல்லையா. `ஏம் அவயம் போடுது?’ என்று கதவுக்குப் பின்னால் தொங்கப் போட்டிருக்கும் குடைக்கம்புபோல் இருக்கும் வாளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார். அதற்குள் நாயின் `லொள்’ என்கிற சத்தத்தின் அளவு குறைந்து நின்றது, அவருக்குக் கேட்டது. அது, நாயின் கடைசி அவயம் என்பது அவருக்குத் தெரியவில்லை. அவர் வெளியில் வந்து பார்த்தபோது அமைதியாக இருந்தது. லைட்டைப் போட்டார். ``நாய்ச் சத்தத்தைக் காணலையே…’’ என்று வீட்டின் பின்பக்கம் பார்த்தார். வெளிச்சத்தில், புதிதாக வெள்ளையடி க்கப்பட்டிருந்த காம்பவுண்ட் சுவரில், அந்தக் காலடித்தடங்கள் இருந்ததைக் கண்டார். 
பிறகும் இதேபோல ஊர் கூடி, வன அலுவலகத்தில் போய் நின்றது. ஓர் ஆட்டுக்குட்டியைப் போட்டு கூண்டு வைத்தார்கள். கத்திக்கொண்டிருந்தது குட்டி. நான்காவது நாள் வந்து சிக்கிக்கொண்டது சிறுத்தை. மூன்று மாதத்துக்கு முன் வந்த அதே சிறுத்தைதான் அது என்று அடித்துச்சொன்னான் டீக்கடை தொரட்டு.
``ச்சே… அந்தக் கண்ணைப் பார்த்ததுமே தெரிஞ்சுபோச்சே. அதாம்னு.’’ என்றான்.
``எல்லா சிறுத்தைக்கும் கண்ணு அப்படிதாம்ல இருக்கும்.’’ 
``இங்கரு, நாம்லாம் ஒரு தடவை பார்த்தம்னா, அப்டியே பதிஞ்சிரும் பார்த்துக்கெ. எனக்குத் தெரியாதோல… இது அந்தச் சிறுத்தைதாம்’’ என்றான் தொரட்டு.
``காட்டுல வேற சிறுத்தையே இல்லைன்னு நெனக்கியோ?’’
``அது தெரியுண்டே. ஆனா, சிக்கினது பழசுதான்.’’
``எப்படிச் சொல்லுத?’’
``இதை எப்படிச் சொல்லுவாவோ? பழைய ருசி… அதாம் தேடி வந்திருக்கு.’’
``ச்சீ, மொதல்ல வந்த சிறுத்தைக்குக் கண்ணுக்கு மேல கீறலா கெடந்துச்சு. இதுக்கு அப்படிலாம் இல்லையே’’ என்றான் பால்கார இசக்கி.
``அப்பம் அதும் இதும் வேறயா?’’
``பெறவு? அதுக்கு கடுவா பல்லும் சரியான நீட்டமாங்கும்’’ என்று  சொன்னான் இசக்கி.
``போங்கல பொசக்கெட்டவனுவளா, நான் சொல்லுதத கேளுங்க. இது பழைய மேப்படியாம்தான்’’ என்று கோபமாகச் சொன்னார். 
இதற்குமேல் பேசினால் அவர் கடையில் இருக்க முடியாது என்பதால், அமைதியானான் இசக்கி.
சம்முவம் விடவில்லை.
``தொரட்டு... சொன்னதையே சொல்லிட்டு இருக்காதீரும். ஒரு மட்டம் கூண்டுல சிக்குன்னா, இன்னொரு மட்டம் வருமாவே?’’ என்றார்.
``ஏம் வராது?’’
``இன்னொரு மட்டம் இந்த எடவாடுக்கே வராது அது’’ என்று அழுத்தமாகச் சொன்னார் பீடியை இழுத்துவிட்டு.
``ஆமா, இவரு கண்டாருல்லா? நான் சொல்லுதேன், அதை இல்ல, இல்லன்னு சொல்லிட்டிருக்கேளே?’’ என்ற தொரட்டுக்கு, கோபம் ஏறியது.
பிறகு,  ``அண்ணாச்சி சொன்னா சரியாதாம்ல இருக்கும்’’ என்றார்கள். தொடர்ந்து சிலபல வாக்குவாதங்களுக்குப் பிறகு, வந்தது பழைய சிறுத்தைதான் என்பதை ஏற்றுக்கொண்டார்கள், சம்முவத்தைத் தவிர. 
முன்புபோல சிறுத்தையைப் பார்க்க இப்போதும் ஏகப்பட்ட கூட்டம். பெருங்கூட்டத்தோடு வழியனுப்பிவைத்தார்கள் அந்த ஆவேச சிறுத்தையை. 
அப்போதும் ஊரில் இல்லை சுப்பையா. மகனுக்கு ஆய்க்குடியில் குழந்தை பிறந்த செய்தி கேட்டுப் பேரனைப் பார்க்கப் போய்விட்டார். நான்கைந்து நாள் டேரா போட்டுவிட்டு ஊருக்கு வரும் நாளில் தற்செயலாக பேப்பரைப் பார்த்தார். ஊரில், மேப்படியான் பிடிபட்ட செய்தி புகைப்படத்துடன் வந்திருந்தது. அந்தப் புகைப்படத்தில், கூண்டுக்குள் வாயைக் காட்டி உறுமியபடி நின்றிருந்தது சிறுத்தை. சுப்பையா, ஊருக்கு வந்ததும் கேட்டார்.
``அதென்னல எனக்கு மட்டும் வாய்க்காமபோவுது?’’
``இங்கரு எல்லாம் நல்லதுக்குன்னு நெனச்சுக்கிடும். நம்ம நீலு வாத்தியாரு இருக்கா ருல்லா. அவரு வீட்டையும் தோட்டத்தையும் சுத்திச் சுத்தி ஏகப்பட்ட பாம்புவோ நடமாடுது. நான், எப்பம்லாம் அந்தப் பக்கம் போறனோ, அப்பம்லாம் ஒண்ணு ரெண்டு பாம்புவோல பார்த்திருந்தேன். ஆனா, அவருட்ட கேளும், `இத்தனை வருஷத்துல ஒரு பாம்பைக் கண்டதில்ல’ம்பாரு’’ என்றார் சம்முவம்.
``அப்டியா?’’
``செல பேருக்கு அப்படியொரு ராசியாங்கும்.’’
``இதென்ன அதிசயமா இருக்கு. காட்டுக்குள்ள இருந்துக்கிட்டு பாம்பு, பல்லிய கண்ணுல காணாம இருக்க முடியுமா?’’
``நான் என்ன சும்மாவா சொல்லுதம், நீரு வேணா வாத்தியார்கிட்ட கேளும்?’’
``இப்படியெல்லாமா இருக்கும்?’’
``அதெல்லாம் கொடுப்பினை பார்த்துக்கிடும். அதுபோலதாம் ஒமக்கும். சிறுத்தைக்கும் ஒமக்கும் அப்படியொரு ராசி.’’
``இருக்குமோ அப்படி?’’
``இல்லாம எப்படி?’’
நம்பினார் சுப்பையா. 
மேற்கண்ட இரண்டு சம்பவங்களை அடுத்து, இது மூன்றாவது.
ஊரில் இதற்கு முன்னால் எந்தெந்த விலங்குகள் வந்து மிரட்டிவிட்டுச் சென்றன என்ற கதைகளை ஆளாளுக்குச் சொன்னார்கள். ஒரு கோடையில் யானைகள் மொத்தமாக இறங்கி, தோப்புகளில் இருந்த தென்னை மரங்களைச் சின்னா பின்னமாக்கி விட்டுப் போன கதையை விளக்கி க்கொண்டிரு ந்தான் இசக்கி. சுப்பையா, தான் சிறுவயதில் கண்ட கதையைச் சொன்னார். அவர் வீட்டுக்கு மேல்பக்கத்தில் வசித்துவந்த, குழந்தைகளுக்குத் தொக்கம் எடுக்கும் ரஹீம் பாயை, சிறுத்தை ஒன்று கொன்றுவிட்டு போன கதையைச் சொல்லத் தொடங்கினார்.
``அப்பம் நான் சின்னப் பையன். ஜில்லா பூராவும் இதைத்தாம் பேசிட்டிருந்தாவோ. பாயி, ஆளும் சும்மா திண்ணுன்னு இருப்பாரு. அப்பம்லாம் அணை கட்டலை. மொட்டை மலை இருக்கு பாரு, அதுக்குக் கீழ, ஓடை ஓரத்துல ரத்த வெள்ளத்துல கெடந்தாரு பாயி. ஒடம்புல பாதிய காணலை. ஊரே போயி வேடிக்கை பார்த்தது. என்னைய மாதிரி சின்னப் பயலுவோளலாம் அந்தப் பக்கம் விடலை. துணியைப் போட்டு மூடி, தூக்கிட்டு வந்தாவோ. எப்பவும் தனியா ஒத்த செத்தயில காட்டுப்பக்கம் போவாத பாயி, அன்னிக்கு தொணைக்கு ஆள் இல்லாம போயிருக்காரு, கோங்கு கம்பு வெட்ட. அப்பம்தான் பதுங்கியிருந்த சிறுத்தை அவரைச் சிதைச்சுட்டு போயிட்டு. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பாயோட, அண்ணன் தம்பியோ எல்லாரும், இந்த ஊர்ல இனும இருக்க மாட்டம்னு, கல்யாணிபுரத்துக்குப் போயிட்டாவோ. அங்க மருந்துக்கடை வெச்சிருக்காருல்லா, அது யாருங்கெ? செத்துபோன பாயிக்கு அண்ணன் மவனாங்கும். அதுக்குப் பிறகு ஊருக்குள்ள எனக்கு வெவரம் தெரிஞ்சு, சிறுத்தை இறங்குனதாக் கேள்விப்படலை. இப்பம்தான் படுதேன்`` என்றார் சுப்பையா.
பிறகு, ``மருமவனே, சீனியக் கொறச்சு இன்னொரு டீய போடும்’’ என்று தொரட்டுவிடம் சொல்லிவிட்டு, பால்கார இசக்கியிடம் கேட்டார். ``இந்தச் சிறுத்தையையும் களக்காடுக் காட்டுலதான் கொண்டுபோயி விட்ருக்காவோ?’’
``பதுவா அங்கதான விடுதாவோ!’’
``அப்பம்... இன்னும் பத்து பதினஞ்சு நாள்ல வந்துரும்னு சொல்லு.’’
``ஏம், பத்து பதினைஞ்சு நாளு? நாளைக்கேகூட வரலாம். ரெண்டு மாசம் கழிச்சு வரலாம், வராமக்கூட போலாம்’’ என்றான்.
``வராமப்போயிருமோ?’’
``அதுக்கு வாய்ப்பில்லதாம். ருசி கண்டது சும்மாயிருக்குமா?’’ என்றான் பால்கார இசக்கி.
``அப்பம்னா சரிதாம்’’ என்ற சுப்பையா, சீனி குறைவாகப் போடப்பட்ட டீயை வாங்கினார். ``இனும சிறுத்தைய கண்ணுல காணாம ஊரைவிட்டுப் போவ மாட்டேன்’’ என்று முடிவுசெய்துகொண்டு வீட்டுக்கு நடந்தார். 
சிறுத்தை பற்றிய பயமும் பேச்சும் மறந்து ஊர் பழையபடி இயங்கத் தொடங்கியிருந்தது. கடந்த சில மாதங்களாக எந்த விலங்கும் ஊருக்குள் இறங்கவில்லை. விவசாய வேலைகள் ஆரம்பித்திருந்தன. சாரலும் காற்றும் என ஊர் ரம்மியமாக இருந்தது. அதிகமானவர்கள், வாழை போட்டிருந்தார்கள். காலையில் வழக்கம்போல வயலுக்குப் போனவர்களில் பால்கார இசக்கிதான், பதற்றத்தோடு ஓடிவந்து தொரட்டுக் கடையில் விஷயத்தைச் சொன்னான்.
கடையில் இருந்த ஏழெட்டு பேர், கேரளாக்காரன் தோட்டத்துக்கு ஓடினார்கள். அதற்குள் ஊர் பூராவும் செய்தி பரவிவிட்டது. அந்தத் தோட்டத்துக் காவலாளியைக் கொன்று சிதைத்திருந்தது சிறுத்தை. காவலாளி, சுப்பையாவின் தாய்மாமா.
பொண்டாட்டி இறந்ததிலிருந்து வீட்டில் மகன்களுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று காவலாளியாக பெயருக்கு வேலை பார்த்தவர். வயது அதிகம் என்றாலும் திடகாத்திரமான உடல் கட்டு அவருக்கு. தோட்டத்தின் வாயிலுக்குக் கீழ்ப்பக்கம் கட்டப்பட்டிருந்த, சிறு அறை ஒன்றில்தான் படுத்திருப்பார். சமீபகாலமாக கல்யாணிபுரம் டாஸ்மாக்கில் இருந்து சரக்கு வாங்கி குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.
``ராத்திரி அடிக்க குளிருக்கு அது இல்லாம முடியல பாத்துக்கெ’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் தொரட்டுக் கடையில். அவரைத்தான் சிறுத்தை கொன்றுவிட்டுச் சென்றிருக்கிறது. 
போலீஸ் வந்தது. விசாரணை நடத்தியது. கொன்றது மேப்படியான்தான் என்று உறுதியானதை அடுத்து, அவருக்கு இறுதிச்சடங்கு நடத்திவிட்டு வந்தார்கள்.
அவரது இறப்பை யாராலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ``ச்சே... எப்பவும் சிரிச்சுட்டே இருப்பாரே!’’ என்று தொடங்கி அவரது பெருமைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். 
தொரட்டுக் கடைக்கு சும்மா ரவுண்ட்ஸ் வரும் வன அலுவலர்கள், ``ஒத்த செத்தயில காடு கரையில அலையாதீங்க’’ என்று அறிவுரை கூறிவிட்டுச் சென்றார்கள். ஆத்திர அவசரத்துக் கெல்லாம் ஆள்களைக் கூட்டிக்கொண்டு நடக்க முடியுமா?
இதற்குப் பிறகு ஊருக்குள் திடீர் பயம் தொற்றிக்கொண்டது. சும்மா கொப்பு குலை அசைந்தால்கூட பயம். ``ஆடு, மாடுவளை அடிச்சுது பரவாயில்லன்னு இருந்தாச்சு. மனுஷனுவளையும் ருசி பார்க்க ஆரம்பிச்சுட்டே’’ என்று தொரட்டுக் கடை முன்பு கவலையோடு பேசிக்கொண்டார்கள். 
ஊர், சாயங்காலமே முடங்கிவிடத் தொடங்கியது. ராத்திரி நேரத்தில் வழக்கமாகக் கல்யாணிபுரம் டாஸ்மாக்கில் கூடிக் குடித்துவிட்டு வருபவர்கள், இப்போது அந்த முக்கிய வேலையை மாலையே முடித்துக் கொள்கிறார்கள்.  தவிர்க்கவே முடியாத வேலை என்றால் மட்டுமே இரவுகளில் ஆள்கள் நடமாட்டம். ஊரில் அப்படியோர் அமைதி. இப்படியொரு திடீர் மாற்றத்தை ஊர்க்காரர்கள் ஏற்கத் தொடங்கியிருந்தார்கள். 
இப்போதும் கூண்டு வைத்தார்கள். பத்து பதினைந்து நாள்களாக சிறுத்தை வரவில்லை. தினமும் ராத்திரி ஓர் ஆட்டுக்குட்டியைக் கூண்டுக்குள் வைப்பதும் காலையில் அதை அவிழ்த்துக்கொண்டு வருவதையும் வழக்கமாகச் செய்தவந்தார் சம்முவம்.
`இனும வராதுபோலுக்கு’ என்று நினைத்துக்கொண்டார்கள். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக மேப்படியான் பற்றிய நினைவை மறந்த ஒரு காலை நேரத்தில் கூண்டில் சிக்கியது சிறுத்தை.
அது, சுப்பையாவின் தாய்மாமாவைக் கொன்ற சிறுத்தைதான் என்று அடித்துச் சொன்னான் தொரட்டு. அவனுடன் வாக்குவாதம் செய்ய யாரும் முன்வரவில்லை. பிறகு, வன அலுவலகத்துக்கு போன் போட்டார்கள். லாரியோடு வந்தார்கள் அவர்கள். கூண்டை ஏற்றினார்கள். வன அலுவலர்கள், அதிகாரிகளின் ஜீப், கார், போலீஸ் வாகனம் என ஊர் பரபரப்பாக இருந்தது. 
ஏதோ அதிசயத்தைப் பார்ப்பதுபோல, இந்த முறை இன்னும் இரண்டு மூன்று ஊர்களில் இருந்தெல்லாம் ஆள்கள் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்தார்கள். குழந்தைகளைத் தூக்கிவைத்துக்கொண்ட சில அப்பாக்கள், ``லியோபர்டு பாரு, புக்குல போட்டிருந்தாம்லா... இதுதாம் அது’’ என்று எதையோ சாதித்ததைப்போல காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.
சப்பரத்தில் இருக்கும் சாமி மாதிரி, ஊர்வலக் கொண்டாட்டத்தோடு ஊரே கூடி களக்காடு மலைக்கு அனுப்பிவைத்தது, அந்தக் கொலைகாரச் சிறுத்தையை.
``துடியா துடிச்சேளே, நீங்க போயி பார்க்கலையா?’’ என்றாள் சுப்பையாவின் மனைவி. 
ஒன்றும் சொல்லவில்லை அவர்.

நன்றி: ஆனந்த விகடன். ஓவியம்: ஸ்யாம்