Saturday, August 12, 2017

ஆதலால் தோழர்களே 18

மத்தியானம் பொத்தையொன்றின் கீழே வெண்மணற்பரப்பில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தவர்களிடம் கொடுக்காப்புலி, சாப் பாட்டுச் சட்டிகளைக் கொடுத்தான். கணேசனும் பழனியும் வாங்கிக் கொண்டார்கள். இரண்டு பெரிய தூக்குச் சட்டிகளில் சோறும் ஒரு சட்டியில் கருவாட்டுக் குழம்பும் இருந்தன. இன்னும் சூடு குறையாமல் இருந்தது. வெயில் சூடாகவும் இருக்கலாம்.
அவன் தம்பி, 'பேப்பர் கொண்டாந்தேன். எங்க போட்டம்னு தெரிய லயே' என்று அங்கேயே தேடிப் பார்த்தான்.

'ஏல நல்லா பாருல. எங்ஙன போட்டெ?' என்று கேட்டான் பரமசிவம்.

'இப்பம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் பாத்தேன். சைக்கிள் சீட்டுக்கு கீழே சொருவி வச்சிருந்தேன். அப்பம் இங்ஙனதான் எங்கயோ விழுந்திருக்கும்' என்று சைக்கிளைத் திருப்பித் தேடப் போனான்.

அவன் வர தாமதமானதால், சாப்பிட தயாரானார்கள். தேக்கிலை விரிப்பில் கருவாட்டுக் குழம்புடன் சோறு பரிமாறப்பட்டது.

கிருஷ்ணவேணிதான் சமைத்து அனுப்ப நினைத்தாள். அதற்காக, காலையில் விறகை ஒடித்துக் கொண்டிருந்தாள்.  ஆனால், முந்திக் கொண்டாள் கணேசனின் அம்மா.

பெரிய வாய்க்காலில் குளித்துவிட்டு இடுப்பில் குடத்தோடு வந்த அவனின் அம்மா, வழியில் பரமசிவத்தின் வீட்டுக்கு வெளியில் இருந்து எட்டிப்பார்த்தபோது, அடுக்கி வைக்கப்பட்டிருந்த கருவைக் கம்புகளை எடுத்து வெட்டிக்கொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி.

ஊர் முழுவதும் ராஜீவ்காந்தி படுகொலைதான் பேச்சாகி இருந்தது. ஏதோ ஒரு அமைதி மொத்தமாக ஊரைச் சூழ்ந்திருந்தது. பேரூந்து நிறுத்தம் அருகில் வரிசையாக நிற்கும் கட்சிக்கொடி கம்பங்கள் அனைத்தும் நள்ளிரவில் வெட்டிச் சாய்க்கப்பட்டிருந்தன. நடு ரோட்டில் நின்றுகொண்டு சாய்க்கப்பட்ட அந்தக் கம்பங்களை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் பட்டன். பிறகு வழக்கம்போல மேலே பார்த்தான். கைகளால் ஏதோ செய்கை செய்துக் காற்றோடு பேசி கொண்டிருந்தான்.

சூரியன் உதிக்கும் முன், துரையப்பா டீ கடையில் கூடும் பெரியவர்களுடன் அதிகமானவர்கள் இருந்தனர். ஒவ்வொரு தெரு முக்கிலும் நான்கைந்து பேர் குத்த வைத்துக்கொண்டு இதையே பேசிக் கொண்டிருந்தனர். இன்னும் விஷயம் தெரியாமல், விழுந்து கிடக்கும் கட்சிக் கொடிக் கம்பங்களைப் பார்த்துவிட்டு, 'யார்டே இப்படி பண்ணிருக்கா?' என அப்பாவியாகக் கேட்டவர்களை, 'ஆங். ஈரமண்ணு, மொதல்ல இங்க வா' என்று அழைத்து துரையப்பா, சம்பவத்தை நேரில் பார்த்தது போல விளக்கிக் கொண்டிருந்தார்.

நாளிதழ்களின் வருகைக்காகக் காத்திருக்கும் ஏஜென்ட், பேப்பர் ராம சாமியைச் சுற்றி ஏழெட்டு பேர் கூடி மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். இரண்டு போலீஸ் வேன்கள் தென்காசி நோக்கி, வேகமாகச் சென்றன. இவர்களைப் பார்த்ததும், கொஞ்சம் தூரம் சென்று வண்டி நின்றது. அதற்குள் பேப்பர் ராமசாமியைச் சுற்றி நின்றவர்கள், மெதுவாகக் கீழ்ப்பக்கம் இருக்கும் பனங்காட்டுக்கு நடக்கத் தொடங்கினர்.

'கூட்டம் போடாதே. நீ எதுக்கு நிக்கே?' -போலீஸ்காரர் ஒருவர் கேட்டார்.

'பேப்பர்'

'செரி' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

அம்மன் கோயில் வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்த, கல்கத்தா ஐயரும், அவர் மாமனாரும் ராஜீவ் படுகொலைச் சம்பவத்தை இன்னும் அதிர்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துதான் வயலுக்குச் சென்று கொண்டிருந்தவர்களுக்கு விஷயம் தெரிந்தது.

'அப்டியா சாமி?'

'ஆமாமா. குண்டு போட்டு கொன்னுருக்கா, படுபாவிகள்' என்று விளக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்பே, நேற்று நள்ளிரவே தனக்குச் செய்தி தெரிந்துவிட்டது என்ற பெருமையோடு குளித்துவிட்டு, வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாள் கணேசனின் அம்மா. வழியில்தான் பரமசிவத்தின் வீட்டை எட்டிப்பார்த்தாள்.

'ஏட்டி கிட்டு. என்ன செய்யுத?'- சத்தம் கேட்டுத் திரும்பிய கிருஷ்ணவேணி வெளியே வந்து, 'எல்லாத்துக்கும் சோறு பொங்க போறேன்' என்று மெதுவாக அவளிடம் சொன்னாள்.

'நான்  பொங்கிருதேன் எல்லாத்துக்கும். நீ ஒங்களுக்கு மட்டும் பாத்துக்கோ' என்றாள்.

'ஏம், பெரிம்ம?'

'ஏம்னா. இந்தப் பய கருவாடு வேணும் வேணும்னு துடிச்சுட்டு இருந்தாம். வாங்கிட்டு வந்து மூணு நாளாச்சு. இன்னைக்கு வச்சுக் கொடுக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இப்டியாயி போச்சு. செரி, எல்லாத்துக்கும் சேத்து வச்சிருதேன்' என்றாள் மெதுவாகச் சிரித்துக் கொண்டே.

'யாருக்கு கிடைக்கணும்னு இருக்கோ. அவங்களுக்குத்தாம் கெடைக்கும்'

'ஆமாட்டி. இதுயென்ன, வைரமும் வைடூரியமும்லா?'

'எதா இருந்தாயென்ன?

'செரிட்டீ. கொடுக்காப்புலிபய வந்தாம்னா வரச்சொல்லு' என்று கூறி விட்டு, சென்றவள், பிறகு சமைத்து அனுப்பி வைத்தாள்.

 சிதறடிக்கப்பட்ட வெளிச்சம் காட்டில் பரவிக்கிடந்தது. வெயில் கடினமாக இருந்தாலும் வெக்கைத் தெரியவில்லை.

'பழைய சோறா இருந்தா கருவாட்டுக்குத் தீயா இருக்கும்' என்றான் பழனி.

'காலைலயே எந்திரிச்சு இப்படியொருத்தி பண்ணிக் கொடுத்திருக்காளேன்னு சந்தோஷப்படுவியா, அது இதுன்னு புலம்புத' என்றார் ஆறுமுகம்.

'நா என்ன கொறயாவாடே சொன்னேன்?'

'காட்டுக்குள்ள வெறும் கஞ்சி தண்ணியக் குடிச்சாக்கூட ருசிதாம்ல' என்றான் கணேசன்.

'அப்பன்னா, போ. எறங்கி ஆத்துக்குள்ள பச்சைத் தண்ணிய குடிச்சுட்டு வாயேன்' என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது சைக்கிளில் திரும்பினான் கொடுக்காப்புலி தம்பி.

'நம்மட்ட தப்புமா? இங்ஙனதான் கெடந்தது' என்று நாளிதழைக் கொடுத்தான்.
அதை அப்படியே ஒரு கையால் வாங்கி முதல் பக்கத்தைத் தரையில் விரித்தான் பரமசிவம்.

உடல்சிதறி கிடந்த ராஜீவ் காந்தியின் புகைப்படத்தைப் பார்த்து எல் லோருக்கும் பரிதாபம் ஏற்பட்டது.

'ச்சே' என்றான் பரமசிவம்.

சாப்பிட்டு முடித்துவிட்டு எல்லோரும் கொலைச் சம்பவம் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்.

- தொடர்கிறேன்.

No comments: