Saturday, November 5, 2016

ஆதலால் தோழர்களே 14



செருப்படி விவகாரத்தில் உறைந்து கிடந்த மனதை கொஞ்சம் கொஞ் சமாக வெளியில் கொண்டு வந்திருந்தார் பரமசிவம். இன்னும் எத்த னை நாள்தான் அதையே நினைத்து உழன்றுகொண்டிருப்பது. நடந்தது நடந்து போச்சு என்று மூக்காண்டியை அழைத்து, தாடியை சிரைத்தார். மீசையை கொஞ்சம் மேல் நோக்கி இருப்பது போல, திருக்கிவிட்டு மாற்றினார்.

'மீசைய திருக்குனா, சொள்ளமாடம் சாமி மாரிலாய்யா இருக்கு' என்றார் மூக்காண்டி.

'அப்படியாடே இருக்கு'

'ஆமா. திருக்குன மீசை எல்லாருக்கும் அமையுமா? ஒங்களுக்கு நல்ல அமைஞ்சிட்டே' என்றான்.

'அப்படியே சொல்லுத. யாராது ஏதாது சொன்னா, நீதான் வெட்டணும்'
'அதெல்லாம் யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டோவோ. நல்லாருக்கு ன்னுதான் சொல்லுவாவோ' என்ற மூக்காண்டி, வீட்டில் காபியை குடித்து விட்டு, 'வாரம்யா' என்று நடந்தான்.

கொஞ்ச நேரம் மீசையைத் திருக்கியபடி கண்ணாடியையே பார்த்துக் கொண்டி ருந்தார் பரமசிவம். குடத்தில் தண்ணீர் சுமந்து வந்த கிருஷ் ணவேணி, 'ரவுடி மாரிலா இருக்கு' என்றாள்.

'இருந்துட்டு போட்டும்' என்ற பரமசிவம் மீசையை இன்னும் திருக்கிக் கொண்டிருந்தார். 

 ஊர், பழையபடி பழங்கதை மறந்து அதன் இயக்கத்தைத் தொடங்கியி ருந்தது. பரமசிவம் இப்போதெல்லாம் கட்சி அபீசுக்கும் போவதில்லை. காலையில் எழுந்ததும் சுடலை கடையில் டீ குடித்துவிட்டு அங்கேயே பேப்பர் வாசித்து, சிகரெட்டை பற்ற வைத்து ஆற்றுக்கு சைக்கிளில் ஓர் அழுத்து. நிம்மதியான குளியல். பிறகு வீடு. இருப்பதைத் தின்றுவிட்டு தெப்பக்குளத் திண்டில் உட்கார்ந்து, அங்கு வருபவர்களுடன் அரசியல் விவாதம். இல்லையென்றால் இலக்கிய பேச்சு. ஒரு பயனுமில்லாத அரட்டை. இதுதான் இப்போது வழக்க மாகி இருக்கிறது. கூடவே கணே சன், பழனி. ஒழக்கு.. இவர்கள் இல்லை யென்றால் யாரேனும் ஒருவன் துணைக்கு வந்து விடுகிறான்.

கடன் கேட்க கூச்சப்பட்ட மனசு, இப்போது அதற்கு பழகிவிட்டிருந்தது. யாரிடமும் எதற்காகவும் கை நீட்டுவது வழக்கமாகிவிட்டது. வாழ்க்கையும் சூழலும் எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்து விடுகிறது. லட்சுமண நம்பியார் கடையில் சிட்டை போட்டு கடன் வைக்கும் வழக்கத்துக்கு வந்தாகிவிட்டது. கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டால், 'என்ன பரம்சம், அந்த பாக்கி என் னாச்சுடே?' என்று சத்தமாக, ரோட்டில் போகும் பரமசிவத்திடம் கேட்கத் தொடங்கியிருக்கிறார் லட்சுமண நம்பி யார்.  முதலில் அவமானமாக, கூச்ச மாக இருந்ததெல்லாம் இப்போது பழகிவிட்டிருந்தது. 'அடுத்த வாரம் தந்தி ருதேன்' என்று சொல்லலானார் இவரும். 

அடிக்கடிக் கோபம் கொண்டு சிவந்த கிருஷ்ணவேணி, இப்போது அப் படியே தலைகீழாக மாறிப்போனாள். மனம் மொத்தமாக அமைதியா கிவிட்டது. எதற்கும் கோபப்படுவதில்லை. அதிர்ந்து பேசுவது கூட இல்லை. 'என்னாச்சு இவளுக்கு உடம்பு சரியில்லாம இருக்குமோ' என்று அக்கம் பக்கத்துப் பெண்கள் மூக்கில் விரல் வைத்தார்கள். எப்போதும் எதற்கெடுத்தாலும் மல்லுக்கு நிற்கும் கிருஷ்ணவேணி, இப்போது மொத்தமாக முடங்கினால் ஆச்சரியம் இருக்காதா என்ன?

பெரிய மகள் ஜான்சி, உள்ளூர் பள்ளிக்கூடத்தில் முதலாம் வகுப்பு சேர்ந் திருக்கிறாள். புத்தகத்தைத் தரையில் விரித்து அவள் படம் பார்த்து, பேசும் அழகை பரமசிவமும் கிருஷ்ணவேணியின் ரசித்துக் கொண்டிருந்தார்கள். 

ஏழூட்டு வளவில் இவளும் ஒரு பீடி தட்டுடன் உட்கார்ந்தாள். பரமசி வத்தை நம்பி இனி பயனில்லை என முழுவதுமாக பீடி, இலை, தூளுடன் வாழத் தொடங்கிவிட்டாள்.

'என்னட்டி கிட்டு, என்னத்த பொங்குன காலைல' என்று கேட்டபடி வந்த கீரைத்தோட்ட ஆச்சியைச் சூழ்ந்துகொண்டார்கள் பீடி சுற்றும் பிள்ளை கள்.
'ஏ கெழவி, கதை சொல்லி எவ்வளவு நாளாச்சு? இன்னைக்கு நல்ல கதையா சொல்லு' என்று ஆரம்பித்தார்கள்.

'சொல்லுவோம் மொதல்ல பொறுங்கட்டியளா' என்ற ஆச்சி, திண்டில் காலை நீட்டி உட்கார்ந்தாள். இடுப்பு மடிப்பில் வைத்திருந்த சிறிய தட்டு அளவில் இருந்த இரண்டு அரிசி முறுக்குகளில் ஒன்றை எடுத்தாள்.

'இந்தாங்கட்டி எல்லாரும் பிச்சிக்கிடுங்க' என்று சொல்லிவிட்டு மற்ற முறுக்கை, 'இந்தா கிட்டு, பிள்ளைலுவோட்ட கொடு' என்று நீட்டினாள்.
'ஏது இது. ருசியா இருக்கே'

'நம்ம புளியமரத்து ஐயரு பொண்டாட்டி, திடீர்னு வீட்டுக்கு கூப்ட்டா. என்ன நெனச்சாளோ. இதை கொடுத்தா'

'அதான பாத்தேன்' என்று கடிக்கத் தொடங்கினார்கள். சிறுது நேரம் ஊர் வம்பு நடந்தது. பிறகு கதைச் சொல்லத் தொடங்கினாள் ஆச்சி.

'சுந்தரி சுந்தரின்னு ஒருத்தி. அவளுக்கு எதுத்த வீட்டுல பேசியம்மான்னு ஒருத்தி. ரெண்டு பேரும் சேக்காளியோ. எங்க போனாலும் ஒண்ணாத்தான் போவாவோ. ஒண்ணுக்கு போனாலும் ஒண்ணாத்தான் போவாவோன்னா பாரேன். அப்படியொரு இது. ஊர்ல வம்பு கதை பேசுததுல இருந்து அரை குறையா எவனும் வேட்டிக்கட்டுட்டு போனாம்னா, கேலி பேசுதது வரை எல்லா எக்காளத்தையும் செய்வாவோ.

'அப்படி என்னதாம்டி பேசுவியோ, ரெண்டு பேரும். எப்பம் பாரு  பேசிட் டும் சிரிச்சுட்டும் இருக்கேளே'ன்னு பேச்சியோட மைனிகாரி கேப்பா. ஏம்னா, வீட்டுல ஏகப்பட்ட வேலை கெடக்கும் போது, இவா சுந்தரி கூட பல்லைக் காட்டிட்டு இருந்தா பொறுக்குமா? அதனால ரெண்டு பேரையும் எப்படியாது பிரிக்கணும்னு நினைககா, மைனிக் காரி. அதுக்காவ பல வேலையளை செய்தா. ஒண்ணும் நடக்கல. இவள பத்தி அவாட்டயும் அவளப் பத்தி இவாட்டயும் கோள் சொல்லிப் பார்க்கா. வேலைக்காவல. பெறவு ஊருக்குள்ள  இவளுவள பத்தி இல்லாததையும் பொல்லாததை யும் சொ ல்லுதா. அதுல ஒண்ணு, 'வீட்டுக்குத் தீட்டு கூட ரெண்டு பேருக்கும் ஒரே நாள்லதாம் வருதாம்'னு சொல்லுதா. அதுக்கும் ஒண்ணும் நடக்கல.

கெழவியல்லாம், 'ஏட்டி ஒங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாப்பிள்ளைய பாத்து கெட்டி வச்சாதாம் நீங்க சும்மாயிருப்பியோ'ன்னு எடக்கு பண் ணுதாவோ. இவளுவோ சும்மாயிருப்பாவளோ, 'செரி கெழவி இருந்துட்டு போட்டும். அவனும் சந்தோஷப்படுவாம்'னு சொல்லுவாவோ. ரெண்டு பேரும் எதை பத்தியும் கவலப் படல. 

காலையில எந்திரிச்சதும் சுந்தரி வாசல் தெளிக்கும் போது பேச்சியும் வந்துருவா. சாணித் தெளிச்சு, தூத்து கோலம்போட்டுட்ட்டு ஆத்துக்கு குளிக்கp போவாவோ. பக்கத்துல வாய்க்கா இருந்தாலும் தூரத்துல இருக்க ஆத்துல போயிதாம் ரெண்டு பேரும் முங்குவாவோ கூறுகெட்ட செரிக்கியோ. சூரியன் உதிக்கதுக்கு முன்னால ஆத்துக்குப் போயி, நீச்சலடிச்சு குளிச்சாதான் மூதியளுக்கு நிம்மதி. சமஞ்ச பிள்ளைலு எல்லாரும் அப்படித்தாம்னு வையி.
ஆத்துல படித்துறைக்கு பக்கத்துல ஆழம் நெறய. ஓடுத தண்ணியில எதிர் நீச்சலடிக்கது கஷ்டம். அங்க தண்ணி கண்டமேனிக்கு இழுக்கும். படித்து றையில மேல இருநது நாலாது படியில மஞ்சள் இருக்கும். யார் மஞ்ச கொண்டு வந்தாலும் அங்ஙன வச்சுட்டுப் போயிருவாவோ. யாரு வேணாலும் எடுத்துக்கிடலாம். அப்படி இழுவி இழுவி அந்த நாலுவது படி மட்டும் மஞ்ச மஞ்சேன்னு இருக்கும். குளிச்சு முழிவிட்டு ரெண்டு பேரும் ஒரு கொடம் தண்ணியோட வீட்டுக்கு போவாவோ.

ஒரு செவ்வாய்க்கெழமை அன்னைக்கு சுந்தரி புள்ள நல்லா தூங்கிட்டு இருந் திருக்கு. பேச்சி போய், 'ஏட்டி இன்னுமா தூங்கிட்டிருக்கே. எந்திரிட்டீ'ன்னு சத்தம் கொடுத்திருக்கா.

'இன்னை எப்டி இவ்வளவு நேரம் தூங்கிட்டம்னு தெரியலயே'ன்னு அடிச்சுப் புடிச்சு எழுந்திரிச்சு, கொடத்தை தூக்கிட்டு வந்துட்டா. ரெண்டு பேரும் வழக்கம் போல சிரிச்சுப் பேசிக்கிட்டு ஆத்துக்குப் போறாவோ. ஆனா வழியெல்லாம் மையிருட்டா இருக்கு.

'ஏட்டி சீக்கிரம் வந்துட்டமா'ன்னு சந்தேகத்துல சுந்தரி கேக்கா. 

'இல்லட்டி இருட்டா இருக்கதால அப்படி தெரியுது. வழக்கமா நாம வார நேரம்தா'ன்னு பேச்சி சொல்லுதா.

ஆத்துக்கு வந்ததும் சேலையை அவிழ்த்துட்டு, பாவாடையால மாராப்பை கட்டுதாவோ. சுத்தி இருட்டு. தூரத்துல ஒரு டார்ச் லைட்டு வெளிச்சம் தெரியுது. காத்து வேற வேகமா வீசுது. குளிரு கடுமையா இருக்கு.

'என்ன சுந்தரி இன்னைக்கு இப்டி குளிருது'ன்னு கேட்டுட்டே தண்ணிக்குள்ள இறங்குதா சுந்தரி.

பேச்சி படித்துறையில சேலையை மூட்டிட்டு உக்கார்ந்திருக்கா.

'என்னட்டி உக்காந்துட்டெ. ஆத்துக்குள்ள எறங்கு'ங்கா சுந்தரி. பெறவு, 'மொத முங்க போட்டாதான் குளுரு தெரியாது'ன்னு சொல்லிட்டே முங்குதா. எழுந்திரிச்சு மூஞ்சியில விழுந்த தலைமுடியை பின்னால தள்ளிவிட்டுட்டு, 'ஏட்டி நீயும் தண்ணிக்குள்ள இறங்கு'ன்னு சொல்லுதா. அவாகிட்ட இருந்து சத்தம் வரலை. என்னன்னு திரும்பிப்பாத்தா, பேச்சிய காணல.

'ஏட்டி பேச்சி, எங்க போயி தொலைஞ்ச'ன்னு கேக்கா. ஆளையும் காணல. பதிலும் வரலை. திடீர்னு சிரிப்பு சத்தம் மட்டும் வருது. சத்தம் கேட்டு கெதி கலங்கி போவுது அவளுக்கு. ஏம்னா, இப்பதாம் சுந்தரி பிள் ளைக்கு ஞாபக த்துக்கு வருது. பாளையங்கோட்டையில அவ்வோ சித்தப்பா மவன் கல்யாண த்துக்கு அவா நேத்தே போயிட்டாங்கது.

'அப்பம் நம்ம கூட வந்தது யாரு?'ன்னு நினைக்கவும் அவளுக்கு மூச்சு பேச்சு இல்லாம போச்சு. பெறவு எப்படி அவா வீட்டுக்கு வந்தான்னு தெரியல. நாலு மாசமா படுக்கையிலதாம் கெடந்து, கேரள மந்திரவாதி வந்து மீட்டானாம் பிள்ளைய'' என்று ஆச்சி கதையை முடிக்கவும் பிரேமா, 'ஆமா. பேய்க் கதைய சொல்லிட்டியா? இனும நாங்க ஆத்துக்கு குளிக்க போனாப்லதான்' என்றாள்.
'ஏய் கெழவி, பேய் அப்படிலாம் கூட்டிட்டு போவுமா?'

'போவாது. ஒங்கிட்ட கொஞ்சி குளாவி, நக்கிட்டுப் போவும், கேக்கா பாரேன் கேள்வி'

'எப்படின்னு சொல்லு கெழவி, தெரியாமத்தான கேக்கோம்'

'நம்ம கண்ணுத்தேவரு மவன் எப்படிச் செத்தாம்ங்கெ?' 

'தெரியலயே'

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது வந்தன் ஒழக்கு.

'ஏ கெழவி, இங்க ஒங்காந்து சவுரியமா கதையளந்துட்டிருக்கியாங்கும். ஒம் ஆடுவோ பூரா, கல்யாணி ஐயன் தோட்டத்துல விழுந்துட்டுவோ. அவரு வெரட்டி வெரட்டி கல்ல கொண்டி எறிஞ்சிட்டிருக்காரு. சீக்கிரம் போயி மறி. இல்லனா,எறிஞ்சே கொன்னு போட போறாவோ' என்றான் கோவமாக.

'ஐயையோ, எந்த எழவுவோ, அவரு தோட்டத்துக்கு ஏம் போச்சு' என்று பதறி யடித்து ஓடினாள் ஆச்சி.

(தொடர்கிறேன்)



1 comment:

சேக்காளி said...

//ரெண்டு பேரும் சேக்காளியோ//
அட நம்ம குரூப்பூ