Monday, September 19, 2016

ஆதலால் தோழர்களே 12

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குப் போவதைக் குறைத்துக் கொண்டார் பரமசிவம். எப்போதும் அங்கேயே கிடந்து பேப்பர் வாசித்து, சுவரொட்டி ஒட்டி, அரசியல் பேசி, கதையளந்து, புத்தகம படித்து விவாதித்து, லேபிள் ஒட்டி, நண்பர்களைச் சந்தித்து, தூங்கி எழுந்து வந்த பரமசிவம் அங்கு போகாதது அவருக்கே ஒரு மாதி ரியாகத்தான் இருந்தது. காலை எழுந்ததும் கால்கள் அதுவாகவே கட்சி அலுவலகத்துக்குத்தான் போகும். இப்போது அந்தக் கால் களை மாற்றி நடக்கத் தொடங்கியிருந்தார் பரமசிவம். இது ஏதோ போலதான் இருந்தது. என்ன வைராக்கியம்? திரும்பவும் கட்சி ஆபிசுக்கு போனால்தான் என்ன? இதற்கும் கட்சி ஆபீசுக்கும் என்னதான் தொடர்பு என நினைத்தாலும் ஏதோ ஒன்று தடுத்தது. எதற்கு போக வேண்டும் என தோன்றியது.

சிரிச்சான் செருப்பால் அடித்த பிறகு தலைவர், 'இபடிலாம் நடந் துரக் கூடாது ன்னுதான் மொதல்லயே சொன்னேன். பொம்பள சவகாசம் எங்கெல்லாம் கொண்டு போயி விடும்னு தெரியாதா? இன்னா நடந்து போச்சுல்லா. ஒனக்கு இருந்த பேரு, புகழு போச்சுல் லாடா. இனும மதிப்பானா எவனாது? எதிர்ல வந்தா கைய தூக்கி கும்புடுதவன், இனும செய்வானா அப்படி?' என்று ஆரம் பித்து நீண்டதொரு அறிவுரையைச் சொன்னார் தலைவர். பரமசிவம் இதைக் கேட்கும் நிலையில் இல்லை என்றாலும் தலையை கவிழ்ந்து கொண்டு நின் றிருந்தார். மனம் முழுவதும் வேறு சிந்தனையில் இருந்தது.

பிறகு, 'இனும என்ன செய்யலாம்னு சொல்லுத?' என்று கேட்ட தற்கு, 'இல்ல ஒண்ணும் செய்யாண்டாம். நான் பாத்துக்கிடுதென்?' என்றார் பரமசிவம். 

'நான் பாத்துக்கிடுதம்னா, என்ன செய்ய போறே?' என்றார்.

'ஒண்ணும் செய்யல' என்று சொல்லிவிட்டு வந்ததுதான், கடைசியாகக் கட்சி அலுவலகத்தில் இருந்து. பிறகு அங்கு போகவில்லை. கல்யாணசுந்தரமும் பச்சைமுத்துவும் இதுபற்றி அங்கு அரசல் புரசலாகப் பேசிக் கொண்டிருந்தன ர். 

இந்தச் சம்பவத்துக்குப் பிறகான நான்கைந்து நாள் பரமசிவம், ஊரில் எங்கும் நடமாடவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார். வளர்ந்த தாடி, முகத் தை சோகம் அப்பி இருப்பதாகக் காட்டியது. எப்போதும் சிரித்துக் கொண் டிருக் கிற முகம் இப்போது, அதை இழந்திருந்தது. இந்த தாடி அந்த முகத்துக்கு எடு படவில்லை. பெரும் பீடை அப்பி இருப்பது மாதிரி, சூன்யத்தின் ஆன்மா குடி வந்த மாதிரி, அவமானத்தின் முகமாக மாறி இருந்தது. நான்கைந்து நாள் நோ யில் கிடந்து எழுந்து வந்தவனின் முகமாகவும் அது இருந்தது.

இது பெரிய விலைதான். சேகரித்து வைத்த புகழை, ஒரு செருப்படி ஒர நாளில் சிதைத்துவிட்டது என்கிற வருத்தம் அவருக்கு அதிகமாக இருந்தது. ஊருக்குள் எந்த திசையில் நடந்தாலும் யாரை சந்தித்தாலும் அது பற்றியே கேட்பார்கள் என நினைத்தார். அதனால் யாரையும் சந்திக்கவில்லை. சிரிச்சான் பொண்டாட் டிக்கும் பரமசிவத்துக்குமான உறவு, ஊர் முழுவதும் தெரிந்திருக்கும் என்கிற கவலையும் இருந்தது. இதன் காரணமாக ஆனந்தவள்ளி டீச்சரும் ஜெயாவும் தன்னை என்ன நினைப்பார்கள் என்கிற பதட்டமும் அவரிடம் அதிகமாக இருந் தது.

கிருஷ்ணவேணிதான் அடிக்கடி, கத்திக்கொண்டிருந்தாள். சிரிச்சான் பொண் டாட்டியை கண்ணில் கண்டால், வெட்டி விடுவதாகச் சொல்லிக் கொண்ட லைந்தாள். அவளின் பேச்சைப் பார்த்தால், சொன்னதை செய்து விடுபவளா கவே தெரிந்தாள். காதல் கணவன் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கை அப்படி.

பழனி, ஒரு மஞ்சள் பைக்குள் இரண்டு பாட்டில்களை மறைத்து வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான். பரமசிவத்துக்குப் புரிந்து விட்டது. ஏதும் பேச வில்லை. சமையல் கட்டில் இருந்த ஈராய்ங் கத்தில் சிலவற்றை இரண்டு பேரும் உரித்தார்கள். நான்கைந்து பச்சை மிளகாயையும் எடுத்துக் கொண் டார்கள். சிறு தோண்டித் தண்ணீரை தூக்கினார்கள். நார்த்தங்காய் ஊறுகயை ஒரு கிண்ணத்திலும் மூன்று சில்வர் கிளாஸ்களையும் எடுத்து பையில் வைத் துக்கொண்டு எதிரில் இருந்த செல்லையாவின் மாட்டுத் தொழுவுக்குச் சென் றார்கள். 

அப்பா, போவதைப் பார்த்து பெரிய மகள், நானும் வாரேன் என்று எழுந்தாள். 'இல்ல செல்லம், அப்பா, இப்ப வந்திருவேன்' என்று எழுந்த பரமசிவத்தை இதற்கு முன், சாராயம் குடித்துப் பார்த்த தில்லை கிருஷ்ணவேணி. அவன் அவளைப் பார்த்து, 'வந்திரு தேன்' என்று சொல்லிவிட்டு வாசலுக்குப் போனா ன். அவளது கண்களில் இருந்து லேசாகக் கண்ணீர் வடியத் தொடங்கியது. முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.

மாடுகள் மேய்ச்சலுக்குச் சென்றிருந்ததால் தொழுவைத் தூத்து துப்புரவாக்கி கோலம் போட்டிருந்தார்கள். இருந்தாலும் மூத்திர வாடையும் சாண வாடையும் வீசிக்கொண்டுதான் இருந்தது. அடுத்தப் பக்கம் இருந்த வைக் கோல்போரில் இருந்து கொஞ்சம் எடுத்து வந்து இரண்டு பேரும் உட்கார் வதற்காகப் போட்டான் பழனி. சாரத்தை மடித்துக்கட்டிக்கொண்டு, உட்கார் ந்தார்கள். கருவாட்டுத் துண்டு ஒன்றைக் கவ்விக்கொண்டு போகும், வெண் மையும் செந்நிறமும் கலந்த பூனை ஒன்று இவர்களைப் பார்த்து பயந்து ஓடி யது. 

பாட்டில்களை எடுத்தான் பழனி. வடிக்கும் இடத்தில் இருந்து வாங்கிவிட்டு வந்த சாராயம், இளஞ்சூட்டோடு இருந்தது.

ஈராய்ங்கம், நார்த்தங்காய் ஊறுகாய், மிளகாய் எல்லாவற்றையும் நடுவில் வைத்தான். தோண்டியில் இருந்து தண்ணீரைக் கலந்து குடித்தார்கள். முதல் கிளாசைக் குடித்து முடித்ததும் ஆறுமுகம் தொழுவுக்குள் வந்தார். அவருக் கான கிளாசை எடுத்து ஊற்றினார். வேட்டி மடிப்பில் வைத்திருந்த, முறுக்கு களை எடுத்து கீழே வைத்தார். 

சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார்கள். என்ன நினைத்தாளோ, கிருஷ் ணவேணி. சமையலுக்கு வாங்கி வைத்திருந்த மீன்களை மசாலா கலந்து பொரித்தாள். உரைப்பு அதிகமாகக் கொண் ட மசாலா அது. சிறிது நேரத்துக்குப் பிறகு தொழுவத்தின் வெளி யே நின்று, 'ஏல பழனி இங்க வா' என்றாள். வந்தவனிடம் சத்தமில்லாமல், பொரித்த மீன்களை கொடுத்துவிட்டு வந்தாள்.

பரமசிவம், இதை எதிர்பார்க்கவில்லை. இன்னொரு கிளாசை ஒரே இழுவில் குடித்துவிட்டு, மீனைக் கடித்தார். கூடவே ஊறுகாயை யும் நக்கிக்கொண்டார். பிறகு சிகரெட்டை பற்ற வைத்தார். 

பரமசிவம் அதிகமாகக் குடிப்பதில்லை. இதற்கு முன் எப்போதோ ஒரு மு றையோ, இரண்டு முறையோதான் குடித்திருக்கிறார். அது வும் தவிர்க்க மு டியாத நண்பனின் மரணத்துக்காக குடித்த குடி. அந்த சாராய கசப்பு பரம சிவத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. குடிப்பது, கொலையை விட பெருங் குற்றம் என சொந்த பந்தம் நினைக்கும் என்பதால் அதன் பக்கம் அவர் போவதி ல்லை.

'குடிகார பய, மூஞ்சில முழிக்காதல' என்று ஏசிவிடுவார்கள் என்ப தாலேயே அதிகமாகக் குடித்ததில்லை அவர். இன்று நிலமை வேறு மாதிரி ஆகிவிட்டது. மனம் முழுவதும், காய்ந்த கருவை முட்களாக நிறைந்திருக்கிறது. பாளம் பாளமாக வெடித்து பிளந் திருக்கும் அந்த மனதுக்குத் தண்ணீர் தேவை என நினைத்தான். அது போதை என்பதை பழனி முடிவு செய்தான். எப்போதும் மறுத் துவிடும் பரமசிவம், இப்போது மறுக்கவில்லை. தேவையாக இருந்தது. அடங் கி எழும் மனதை ஆற்றுப்படுத்தவோ, அல்லது இன் னும் கொதிக்க விடவோ, ஏதோ ஒரு போதை தேவைப்படுகிறது, இந்த சாராய போதை போல.

'செரிக்குள்ள சிரிச்சானை சொட்டைய உரிச்சிருக்கலாம். வேண்டான்னுட் டெ?' என்று பழனி ஆரம்பித்தான். 

'அதை பேசாண்டாம்ல. அடுத்தது என்ன செய்யலாம்னு யோசிப் பியா, அதை யே பேசிட்டிருக்கெ?' என்றார் ஆறுமுகம்.

'அடுத்த வாரம் கடையத்துல திமுக கூட்டம் இருக்கு. தமிழ்க்குடி மகன் வாராராம். அவர் முன்னிலையில சேர்ந்துரலாமா சொல்லு. நம்ம மாமாதான் ஒன்றிய செயலாளரு' என்றான் பழனி.

'கொஞ்ச நாள் பொறுடே. எடுத்தோம் கவுத்தோம்னு அவசரமா பண்ணிறக் கூடாது' என்றார் ஆறுமுகம்.

பரமசிவம், எதிரில் உடைந்திருக்கிற வீட்டின் ஜன்னல் கம்பிகளை யே பார்த் துக்கொண்டிருந்தான். அதற்கு வெளியே கீரைத்தோட்ட ஆச்சி, ஆடுகளைப் பத்திக்கொண்டிருந்தது. அவள் நெருங்கி நெரு ங்கி வர வர ஜன்னலின் வழியே யதேச்சையாக இவர்களைப் பார்த்துவிட்டாள். யார் யார் இருக்கிறார்கள் என்று நோட்டமிட்டாள். பிறகு ஆடுகளை மேயவிட்டுவிட்டு, இவர்கள் அருகில் வந் தாள்.

'ம் ஆரம்பிச்சாச்சா... நல்ல பழக்கம்தான். ஏ பழனி, நீதாம் இந்த வேலைய பண் ணுதியோல?'

அவளை அங்கு எதிர்பார்க்காத ஆறுமுகம், 'நீ எங்க வந்து என்ன பேசுத. போ, ஆடுவள பாரு' என்றான்.

'ஏம்ல ஒங்கள இப்டி பாத்திட்டம்னா, அவயம் போடுத?' என்றவள், பழனியை கையை காட்டி, 'பரம்சம் இந்த மூதி கூட சேராத, அவன் இப்படிதான் சாராய த்தைக் கொண்டு வருவாம்' என்று சொல்லிவிட்டு, அவர்கள் வைத்திருந்த ஈராய்ங்கத்தில் ஒன்றை எடுத்து வாயில் போட்டாள்.

'இங்க கெடக்க கெடயில, இவா வேற' என்ற பழனி, 'நீ போத்தா' என்று விர ட்டினான் அவளை.

'பரம்சம் ஒண்ணும் கவலப்படாதடா. எல்லாம் தி(ருஷ்)ட்டின்னு நெனச்சுக்கோ. ஊராங்கண்ணு கொள்ளிக் கண்ணு. அந்த கண்ணு பட்டதாலதான் இப்படி நடந்திருக்கு. பொறாமையில புழுங்குத பயலுவதாம் ஊர்க்காரனுவோ. அடுத் தவன் நல்ல சோறு திங்கக் கூடாது, நல்ல துணி மணி போடக்கூடாது, நிமிர் ந்து நிய்க்கக் கூடாதுன்னு தெனமும் வயிறு எரியுதவனுவதாம் இவனுவ. இந்த சம்பவத்தோட திட்டி கழிஞ்சுதுன்னு நெனச்சுக்கோ. மத்தப்படி எந்த நாயை பத்தியும் நெனக்காத. ஒன்னய பத்தி எங்களுக்குத் தெரியும்டே. தைரியமா இரு. நாங்க இருக்கோம்' என்று ஒரு பேரூரையை நிகழ்த்தினாள் ஆச்சி. ஒரு பேச் சாளரின் முன் இன்னொரு பேச்சாளரின் சிற்றுரை போல இருந்தது அது.

ஆச்சி, தன் மீது வைத்திருக்கிற நம்பிக்கையை மெச்சிக் கொண்டார் பரமசிவம். தான் தவறேதும் செய்ய மாட்டேன் என் கிற நம்பிக்கை அது. சிரிச்சான் பொண்டாட்டியை எல்லாம் ஏறெ டுத்து பார்க்கமாட்டேன் என்கிற அவளது நம்பிக்கை எங்கிருந்து தொடங்கியிருக்கும் என நினைத்தார்.

அதற்குள் ஆறுமுகம், 'இங்கரு ஒனக்கெல்லாம் வெவஸ்த கெடையாது போ லுக்கு. நாங்க என்ன செஞ்சிட்டிருக்கோம், நீ எங்க வந்து என்ன சொல்லிட் டிருக்கே. போ. போயித்தொல, சாவ மாட்டாம இங்க வந்துல கரைச் சல கொடுக்கா?'

'ஏல ஆறுமுவம், ஒன் துறுத்திய நிறுத்துல. நான் அவன்ட்ட சொல்லிட் டிருந்தா, ஒனக்கு என்னல செய்யுது' என்ற ஆச்சி, இன் னொரு ஈராய்ங்கத்தை எடுத்து வாயில் வைத்து அரைத்துக் கொண்டு நடந்தாள். போகும்போது இன்னுமொரு முறை சொல்லிவிட்டுப் போனாள்: 'பரம்சம் எதை பத்தியும் கவலப்படாதடா. எல்லாம் தி(ருஷ்)ட்டியாங்கும்' என்று.  

'அவா சொல்லுததுலயும் ஒரு இது இருக்கத்தாம் செய்யுது. எல் லா பயலு வளும் ஒன்னய பொறாமைலதாம் பாத்தானுவோ. ஏம், ஒங்கூட பேச வாரனு வளே பச்சைமுத்தும் கல்யாணியும். அவனுவ கூட பொறாமை புடிச்சவனு தாம்' என்ற பழனி, இன்னொரு கிளாசில் கொஞ்சம் ஊற்றினான்.

பரமசிவம், 'எனக்கு போதும்' என்றார். அவர் வாய் குழறத் தொடங்கியது. ஆறு முகமும், பழனியும் போதையாகிவிட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பேச்சு மாறியது. பழனி சிரிக்கத் தொடங் கியிருந்தான். அவன் அப்படித்தான் அதிக மாகக் குடித்தால் அழுவான். அதற்கு முன் சிரிப்பான். பெரும் சிரிப்பாணியாக இருந்தது அது. ஆறுமுகம் பாட்டிலில் மிச்சமிருந்ததை இரண்டு கிளாசில் ஊற் றினார்.

'இந்தா பரம்சம். இது நான் தாரது. நீ குடிச்சுதாம் ஆவணும். மறுக் கக் கூடாதுடா. இந்த கிளாஸ் எனக்கு, இது ஒனக்கு' என்று நீட்டி னார். பரமசிவம் அதை வாங்கி க்கொண்டார். ஒரே இழுப்பாக இழுத் தார். முகமெல்லாம் வியர்த்து வடிந்தது. மண்டைக்குள் யாரோ உட்கார்ந்துகொண்டு, தலையை அங்கும் இங்கும் ஆட் டுவது போல இருந்தது. சட்டையை கழற்றி தூரத்தில் வைத்தார். வியர்வை தலை, உடல் என வடியத் தொடங்கியது. காற்று சுத்தமாக வரவில்லை. சட்டை பையில் இருந்து சிகரெட்டை எடுக்கும் போது, தடுமாறியது பரமசிவத் துக்கு. சட்டை பையை விட்டுவிட்டு தரையில் சிகரெட்டை தேடத் தொடங் கினார். 

பழனி சிரித்துக்கொண்டே, சிகரெட்டை எடுத்து அவர் வாயில் வைத்தான். அவனும் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். போதையில் மிதக்கத் தொடங்கினார்கள். பழனியும், ஆறுமுகமும் ஓர் அளவுக்கு மேல் முடியாமல், அங்கேயே படுத்து விட்டனர். 

பரமசிவம் கண்ணில் இருந்து தண்ணீர் வடியத் தொடங்கியது.

 'மன்னிச்சிரும்மா. நீ எம்மேல வச்சிருக்கிற காதல் எவ்வளவு பெருசுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். ஒனக்காகத்தான் சிரிச்சானை விட்டேன். இல்ல ன்னு வையி, அன்னைக்கே அவனை அறுத்திருப்பேன்' என்று இரண்டு கைக ளையும் சேர்த்து அறுப்பதை போல செய்கை செய்துவிட்டு, பின் பக்கச் சுவரில் சாய்ந்தவாறு பரமசிவம் அழத் தொடங்கினார். 

கிருஷ்ணவேணி அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

(தொடர்கிறேன்)

No comments: