Thursday, May 26, 2016

ஆதலால் தோழர்களே 5

ஏழூட்டு வளவில் கீரைத்தோட்ட ஆச்சி கதை சொல்லிக் கொண்டிருந்தாள்.

'ஏழு மலை, ஏழு கடல் தாண்டி, ஆம்பளைலே இல்லாத ஒரு தீவுல, பூவரசின்னு ஒருத்தி இருந்தா. அழகின்னா அழகி, அப்படியொரு அழகி. வெண்ணெய்ல செஞ்சு வச்ச மாரி, வெள்ளை வெளேர்னு இருப்பான்னா பாரு. கடல்ல கொள்ளையடிக்க வாரவனுவோ மூலமா, அவா அழகு ஒலகத்துக்கு தெரிய வந்துச்சு. அவ அழகுக்கு முன்னால யாருமே நிய்க்க முடியாதுன்னு பேசிக்கிட் டாவோ.

ஒரு நாளு பெரிய படகுல கடலுக்குள்ள மீன் பிடிக்க போயிட்டிருந்தா பூவரசி. அவ கூட, ஏழெட்டு பிள்ளைலுவோ, தொணைக்கு இருக் காவோ. கடலு கொள்ளைக்காரனுவளுக்கு இவ்வோளப் பாத்ததும் ஏளனமா போச்சு. அடிச்சு பறிச்சு, பொம்பள பிள்ளைலுவோள தூக்கிட்டு போயிரலாம்னு நினைச்சு படகை மறிச்சானுவோ. படகுக்குள்ள வந்த வனுவள, வாள் சண்டைல குத்தி கிழிச்சுட்டாளுவோ, இவளுவோ. துண் டை காணும் துணிய காணும்னு  ரத்தக் காயத்தோட கடலுக்குள்ள குதிக்க நினைக்கும்போது பூவரசி வந்தா. அவளைப் பார்த்ததும் அவனு வோ, அப்படியே மெய்மறந்துட்டானுவோ. அவா அழகைப் பார்த்துட்டு, வச்ச கண்ண வாங்காம பார்த்துட்டிருக்கானுவோ. பெறவு, வாளை எடுத்ததும் எல்லாரும் அவ கால்ல விழுந்தானுவோ.

 'நாங்க பல நாடுகளுக்குப் போயி கொள்ளையடிச்சிருக்கோம். இன்னைக்குத் தான் மொத மொதலா தோத்துப் போயிருக்கோம். பொம்பளைலுவோதா னன் னு ஏளனமா சிரிச்சுட்டோம். எங்களை மன்னிச்சிருங்க. இனும இந்த பக்கம் வரவே மாட்டோம்'னு கும்பிட்டானுவோ. 'சரி உயிர் பிச்சை போடுதேன். ஓடிப் போயிருங்கன்னு பூவரசி சொன்னதும் அவனுவோ வந்த படகுக்கு போறானு வோ. அப்பம், 'ஒங்கள போல ஒரு அழகியை எந்த நாட்டுலயும் நாங்க பாத்த தில்லை'ன்னு சொல்லிட்டு போறானுவோ.

போனவனுவோ சும்மா இருப்பானுவளா? போற எடத்துலலாம் 'இப்படி யொரு அழகி, இப்படியொரு இடத்துல இருக்கா'ன்னு சொல்லிட்டே போறானுவோ. அந்தானி பூவரசி பத்தியும் அவ அழகு பத்தியும் ஏழேழு ஒலகமும் பேசுது. கேள்விபடுத அரசன், இளவரசனுவளுக் கெல்லாம் அவள கல்யாணம் முடி க்கணும்னு ஆசை வருது...' என்று கதையை நிறுத்தி வெற்றிலையை வாயில் திணித்தாள் ஆச்சி. கடித் துச் சாறை உள்ளுக்குள் இழுத்துவிட்டு, உதட்டின் மேல் இலேசாக வடிந்ததை சேலையால் துடைத்தாள்.

'நல்லா கத போயிட்டிருக்கும்போதுதான் வெத்தலய போடுவா, இவா?' என் றாள் பீடி சுற்றும் பிரேமா.

'தாத்தா போன பெறவு கெழவிக்கு இது இல்லாம முடியலயட்டி' என்று சுந்தரவடிவு சொல்ல, 'தாத்தாவுக்கு இது சமானமாவுமாட்டி?' என்றாள் செல்ல ம்மாள். ஆச்சிக்குக் கோபம்.

'ஏட்டி என்னயவா எடக்கு பண்ணுதியோ? ஒங்களுக்கு போயி கத சொன்னம் பாரு..' என்று அமைதியானாள்.

'ஒடனே பொசுக்குனு கோவம் வந்துரும் இவளுக்கு. சொல்லு கெழவி' என்று சிலர் தாஜா செய்த பிறகு மெதுவாக ஆரம்பித்தாள்.
'எதுல விட்டேன்'

'அதாம். எல்லா அரசனுவளுக்கும் அவள கல்யாணம் முடிக்க ஆசை வந்துட்டு'
'ஆங். அந்தானி பல நாட்டு இளவரசனுவோ, பொண்ணு கேட்டுப் போறா னுவோ. தங்களோட அருமை பெருமை, வீர தீரத் தையெ ல்லாம் சொல்லி, பொண்ணு கேக்கானுவோ. அவ்வோ எல்லாருட்ட யும் பூவரசி என்னா சொன் னான்னா, 'இங்க பாருங்க, எங்க பரம்பர, வாளு ஒண்ணு இருக்கு. கால ங்காலமா எங்களோட மூதாதையரு புழங்குன வாளு அது. அத தூக்கி எங்கூட சண்ட போடணும். அதுல ஜெயிச்சுட்டா, அந்த பெரிய சொவத்துல மாட்டி யிருக்க முத்து மாலையை எடுத்து எங்கழுத்துல போடலாம். போட்டா, நானும் இங்க இருக்கிற எல்லா பொம்பளைலும் ஒங்களுக்கு அடிமை'ன்னு சொல் லுதா.

இதை கேட்டுட்டு, 'இதுலாம் எம்மாத்திரம் எங்களுக்கு? நான் பல நாட் டை ஜெயிச்சவன். எனக்கு ஒங்கூட சண்டை போடுதது பெரிய வெஷய மேயில்ல. அதுவும் ஒரு பொம்பளைய ஜெயிக்குதது  பிரச் னையே இல்ல'ன்னு எக்காளத்தோட, வாளை எடுக்க வாரனுவோ. அந்த வாளு கடற்கரை மண்ணுல பாதி புதைஞ்ச நிலையில இருக்கு. வாளோட கைப்பிடியில ஏகப்பட்ட வேலைபாடு செஞ்சிருக்கு. அதை பார்த்து பல போர்களை கண்ட மன்னன்களுக்கு கூட ஆச்சரியமா போச்சு. பெறவு, வாளை புடிச்சு தூக்க பாக்காவோ, முடியல. இது என்னடா அதிசயமா இருக்குன்னு திரும்ப திரும்ப எடுக்க முயற்சி பண்ணுதாவோ, தூக்க முடியல. இது பல இளவரசங்களுக்கு அவமனமா போயிருது. 'என்னடா நாம எளக்காரமா நெனச்சோம். அதை அசைக்கக் கூட முடியலயே'ன்னு பாக்கானுவோ. ஒரு அழகான பொண்ணு முன்னால இப்படி நின்னா, அது அவமானம்தான. கோவம் கோவமா வருது. 'இதுல என்னமோ மந்திர சக்தி இருக்கு. அதாம் தூக்க முடியலை'ன்னு சொல் லுதானுவோ. அப்படிலாம் எந்த சக்தியும் இல்லை. இந்தா நான் தூக்குதம் பாருங்க'ன்னு பூவரசி, வாளை வணங்கிட்டு தூக்குதா. அவா கையில பூ மாதிரி வந்து நிய்க்கி. 'இது என்னடா ஆச்சரியம்னு நெனக்கானுவோ, மன்னன்மா ருவோ. பெறவு தோல்விய ஒத்துக்கிட்டு போயிருதானுவோ. இதே போல, பல மன்னன்மாருவோ, இளவரசனுவோ வந்து பாத்தும் முடியல.

'இந்த தேவதயை கெட்டத்துக்கு எந்த மவராசன், வரப்போறாம்னு தெரிய லயே'ன்னு அந்த நாட்டுல எல்லாரும் ஏங்கிட்டு கெடந்தாவோ. அப்படி வந்தா அவந்தான் இந்த நாட்டுல வாழப் போற மொத ஆம்பளன்னு நெனக்காவோ. இப்டியே நாளும் காலமும் போயிட்டிருக்கு. ஒரு நாளு கடற்கரையில ஒரு த்தன் மயங்கி கெடக்கத பாத் துட்டு, அங்கயிருந்த பொம்பளைலுவோ பூவர சிட்ட வந்து சொல் லுதா வோ. பூவரசி, பூவரசி, ஒருத்தன் யாரு எவம்னு தெரி யல. கரையில் மயங்கி கெடக்கான். ஆளு வேற வாட்டசாட்டமா இருக்காம்' னு சொன்னதும், எல்லாரையும் கூட்டிட்டு, பூவரசி கடற்கரைக்கு வாரா. வந்து பாத்தா, அதிர்ச்சி. மயங்கி கெடந்தவன், ஒரு மரத்தை வெட்டிட்டு இருந் தான். 

'இவம்தான் மயங்கி கெடந்தான் பூவரசி. எப்படி எந்திரிச்சாம்னு தெரிய லயே'ன்னு எல்லாரும் பாக்காவோ. இப்பதாம் பூவரசி கவனிக்கா, அவென் மரத்த வெட்டுதது, மண்ணுக்குள்ள பொதஞ்சு கெடந்த பரம்பர வாளாலன்னு. அவளுக்கு ஒரு பக்கம் சந்தோஷம். இப்ப எல்லா பொம் பளை பிள்ளை லுவோளுக்கும் அது புரிஞ்சு போச்சு. ஆத்தாடி வந்திருக் கவன், நம்ம பூவரசிக் கானவன்னு தெரிஞ்சு போனதும் வெக்கப் படுதா வோ. கம்பீரமா நின்ன பூவரசி தலைய கீழப்போட்டு மண்ணுல காலால கோலம்போடுதா. 

அவன் இவங்கள பாக்காம, கீழே  காய்ஞ்சு போய் கெடந்த மரத்தை வெட் டுனான். கிளைகளைலாம் செதுக்ககிட்டு, மரத்துண்டு மாதிரி செஞ்சான். இப்பம் அந்த பெரிய மரத்துண்டை மணல்லயே வச்சு தள்ளி, கடலுக்கு கொண் டு போறாம். அந்தானி, அவனுக்கு பின்னால, பொம் பளைலு சத்தம் கேக்கே ன்னுட்டு திரும்பிப் பாக்காம். அவ்வளவு பேரும் நிய்க்க, நடுவுல பேரழகி மாதிரி பூவரசி நிய்க்கதையும் பார்த் துட்டு, அவங்கக்கிட்ட வாராம்.

'நீங்கள்லாம் யாரு. இந்த தீவுல என்ன பண்றீங்க?'ன்னு கேக்காம். கேட்டுட்டு  பூவரசிய பாத்ததும் வச்ச கண்ண எடுக்காம பாத்துட்டே இருக்காம். அதுல ஒருத்தி, 'பொம்பளைல முன்ன பின்ன பாக்காத மாதிரி இப்படி வாய பொளந்து நிக்கேரே... எங்க தீவுக்கு வந்துட்டு எங்களயே வேற, யாருன்னு கேட்கேரு. நீரு யாரு, எந்த நாடு ஒமக்கு?'ன்னு கேக்கா.

'நா ஒரு அனாதை. எனக்கு தூராதேசம். நாடுவோள பூரா சுத்திட்டு வர ணும்னு ஆசை. அதனால ஒரு படகை செஞ்சு, நாலஞ்சு நாடுவோ வழியா வந்து ட்டிருக்கேன். நான் வந்த படகு உடைஞ்சு முங்கி போச்சு. ஒரு கட்டைய பிடிச்சு தப்பிச்சு வந்தேன். திடீர்னு மயங்கிட்டேன். இப்ப பாத்தா, இங்க வந்து கெடந் தென். அலயடிச்சு அடிச்சு என்னைய இங்க தள்ளி விட்டிருக்குன்னு நெனக் கேன். எந்திச்சி, திங்கதுக்கு எதுவும் கெடைக்குமான்னு பாத்தேன். சிக்கல. அதான், விழுந்து காய் ஞ்சு போய் கெடந்த மரத்தை வெட்டி அதுல மேல போயி, நாலஞ்சு மீனுவள பிடிச்சாவது சுட்டு திய்ங்கலாம்னு நினைச்சு போவப் போ னேன். சரியான பசி. உங்கள பாத்ததும் பசி அதிகமாயிட்டு'ன்னு சொல்லுதாம்.

செரின்னுட்டு அவனை கூட்டிட்டுப் போயி, அவங்க சாப்புடுத பழங் களை சாப்பிட கொடுக்காவோ. நல்லா தின்னுட்டு, 'ரொம்ப நன்றி. நான் கெள ம்புதம்'னு சொன்னதும் எல்லாரும் சிரிக்காவோ. ஏம் சிரிக்கியோ?ன்னு கேக் காம்.

'எய்யா, நீரு தூக்கி மரத்தை வெட்டுனீரே... அந்த வாளு சாதாரண வாளு இல்ல. பரம்பரை வாளு பத்தியும் பூவரசி பத்தியும் அதைத் தூக்க முடியாம, பல நாட்டு மன்னனுவோ ஏமாந்து திரும்பிப் போனது பத்தியும் வெவரமா சொல்லு தாவோ. இதைக் கேட்டதும் ஆச்சரியமா இருக்கு அவனுக்கு. 

'யாராலயும் தூக்க முடியாத வாள நீங்களும் பூவரசியும்தான் தூக்கி யிருக்கியோ,. அதனால நீரு எங்க மூதைதையரால அனுப்பப் பட்டிருக் கீங்க. இனும நீங்க இங்கதான் இருக்கணும்'னு கம்பு ஊனிட்டு நிக்குத ஒரு வயசான பொம்பள சொல்லுதா. அவனுக்கு குழப்பமா இருக்கு. அதுக்கு மேல அவனால பேச முடியல. அந்தானி அவன கூட்டிட்டுப் போயி, சொவத்துல மாட்டியிருக்க முத்துமாலைய எடுத்து அவ கழுத்துல போடச் சொல்லுதாவோ. இப்படிப்பட்ட பேரழகி கிடைக்கான்னா, எவன்தாம் மாட்டம்னு சொல்லுவாம். சரின்னு மாலைய எடுத்து போட்டுட்டாம். இதுதாம்ட்டி அனாத அரசனான கதை'- என்று சொல்லி விட்டு காலை மடக்கி உட்கார்ந்தாள் ஆச்சி.

'இதுலாம் நெசமா இருக்குமா கெழவி?'

'கதைன்னு வந்த பெறவு, ஆராயக் கூடாதுட்டி, கொழுப்பெடுத்தவளா?'

'பொய் பொய்யா சொல்லுவ, நாங்க நம்பனுமோ?'

'ஏ ஒன்னுமத்துப்போவா, எங்க ஆத்தாக்காரி ஆடு மேய்க்க என்னய கூட்டிட்டுப் போவும் போது சொன்ன கதை இது. இன்னும் மனசுக் குள்ளயே இருக்குன்னா பாரு'

'ம்ம். வேற நல்ல கதயா சொல்லுத்தா'

'புருஷனும் பொண்டாட்டியும் ஒண்ணா கெடந்த கதய சொன்னாதான் நீங் கலாம் உம்முனு சாமான பொத்திட்டு கேட்டுட்டு இருப்பியோ?'- என்றதும் சில பிள்ளைகள் சிரித்தார்கள்.

-இப்படி இவர்கள் கதைப் பேசிக்கொண்டிருக்கும்போதுதான், பேச்சாளர் பரம சிவத்துக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்த தகவலைச் சொன்னாள் மகராசி. 

'யார்ட்டி சொன்னா?

'இன்னா, கிட்னம்மா சொல்லிட்டு போறா?'

'கிட்னம்மா சொன்னாளா? இங்கதான் எல்லாரும் காலல இருந்து இருக்கோம். ஒரு நாதிக்கு தெரியல?' என்று கீரைத்தோட்ட ஆச்சி, பரமசிவம் வீட்டுக்கு நடந்தாள். நாங்களும் வாரோம் என்று பிரேமாவும் மற்ற வர்களும் சென் றார்கள். ஊரில் எல்லாருக்கும் பேர்காலம் பார்ப்பது கிட்னம்மாதான். அவள் படிக்காத மருத்துவச்சி.

வயிற்றைப் பார்த்தே, அது என்ன குழந்தை என்று கணித்து விடுபவளாகவும் வயிற்றுக்குள் கொடி சுற்றிக்கிடந்தால் அது பற்றிச் சொல்லி, பயங்காட்டாமல், குழந்தையைப் போராடி வயிற்றில் இருந்து எடுத்து விட்டு, கடவுள் புண்ணியம் என்று வேண்டுவது உள்ளிட்ட செயல்கள் கிட்னம்மாவுக்கானது. 

'எல்லாரும் ஆம்பள பிள்ள பொறக்கும்னாவோ. ரெண்டாவதும் பொட்டப் புள்ளயா வந்துட்டு' என்றாள் பிரேமா.

'எந்த பிள்ளையா இருந்தா என்னட்டி? எத்தன பேரு வயித்துல புழு பூச்சி இல்ல ன்னு அழுதுட்டிருக்கா?' என்ற ஆச்சியிடம், 'ஏன் எங்க ஆறுமும் அத்தை அழலி யா?' என்று சொல்லிக்கொண்டே நடந்தாள்.

பரமசிவம் வீட்டில் பெண்கள் கூட்டம் கூடியிருந்தது. எல்லாரும் வாசலில் தான் இருந்தார்கள். அவரின் முதல் மகள், அனச்சியின் மடியில் அமர்ந்து கொண்டு, என்ன பேசுகிறார்கள் என்பது புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த இடம் முழுவதும் வெயிலில் காய வைத்த மாங்கொட்டையின் வாசனை போல மணத்துக்கொண்டிருந்தது.

'ஏட்டி, ஒனக்கு தங்கிச்சிலா பொறந்திருக்கா...' என்று அவள் கன்னத்தில் கிள்ளியதும் சிரித்தாள் பெரியவள்.

'நேரத்தைக் குறிச்சியாட்டீ? கிட்னம்மாட்டனா கேட்டுக்கோ. பெறவு ஜாதகம் குறிக்கப் போவும்போது, சரியான நேரம் தானான்னு கொண் டை ஐயரு கொடஞ்சு கொடஞ்சு கேட்டுட்டே இருப்பாரு'. 

'அதெல்லாம் அவ்வோ அம்மா குறிச்சிட்டாளாம்'

அதற்குள்  நஞ்சுக்கொடியை  ஓலைப்பெட்டியில் சுற்றி, அதை நா கள் கவ்வி விடாதபடி வேலுக்கோனார் தோப்பில் உள்ள கள்ளிச் செடியின் மேலே கட்டி விட்டு வந்திருந்தார்கள்.

'வயிறு சின்னதாதாம்ட்டி இருக்கு. அப்படின்னா ஆம்பள பயதாம் பொறப்பான்' என்ற அக்கம் பக்கத்தாரின் கூற்றுகளைப் பொய்யாக்கி விட்டு அழகு தேவதை யாகப் பிறந்திருந்தாள், அந்தப் பெண் குழந்தை. 

'உள்ளே போய் பிள்ளையை கையால் தூக்கிய கீரைத்தோட்ட ஆச்சி, 'அப்பம் மூஞ்சி, அப்படியே இருக்கு, பாருட்டி' என்றதும் இடுப்புக்கிழே துணியால் மூடப்பட்டு படுத்துக்கிடந்த கிருஷ்ணவேணி, சிரிக்க முடி யாமல் சிரித்தாள்.
குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, 'நல்லா, டாக்டருக்கு படிட்டீ. ஒங் கப்பம் படிக்க வப்பாம்' என்று குழந்தையை வாழ்த்திய ஆச்சி, கிருஷ்ண வேணிக்கு மருந்துச்சாப்பாடு அதாவது பிள்ளைப் பெற்றப் பெண்களுக்குக் கொடுக்கப்படும் சாப்பாடு பற்றிச் சொல்லி விட்டுக் கிளம்பினாள். 

பரமசிவம் வெளியூர் சென்றிருக்கிறாராம். இரவோ, நாளையோ அவர் வரலாம் என்றார்கள்.

(தொடர்கிறேன்)

No comments: