Sunday, January 3, 2016

ஆதலால் தோழர்களே 3


1983.

விக்ரமசிங்கபுரத்தில் அதிமுக கட்சிக் கூட்டம். 'விவசாய அமைச்சர் டாக்டர் கா.காளிமுத்து பேசுகிறார்' என்கிற போஸ்டர்கள் ஊரெல்லாம் ஒட்டப்பட்டி ருந்தது. வழக்கமாக இந்த மாதிரி பொதுக்கூட்டங்களுக்கு முண்டியடித்துக் கொண்டு ஒரு கோஷ்டி அலையும். அதில் இளைஞனான பரமசிவனும் இருந் தான்.

ஒழக்கு, சாயங்காலமே ரெடியாகிவிட்டான். வெளுத்த வேட்டி வாசம் பறக்க, தேய்த்த சட்டை அணிந்து கொண்டு, பிள்ளையார் கோயிலுக்கு வந்தான் சைக்கி ளுடன். பரமசிவன் அவன் சைக்கிளில் ஏற வேண்டும். மேலத்தெருவில் இருந்து நான்கு சைக்கிளும் கீழத்தெருவில் இருந்து மூன்று சைக்கிள்களும் பிள்ளையார் கோயில் வந்திருந்தன. அனைவரும் சைக்கிளில் ஏறி அழுத்தினார்கள். இன்னும் சிறிது நேரத்தில் சிவந்திபுரத்துக்கு செல்லும் கடைசி பஸ்சில் ஒரு கோஷ்டி விக்ரமசிங்கபுரத்துக்கு வரும். அவர்கள் பேச்சைக் கேட்டுவிட்டு, நடந்தே ஊருக்கு வருகிறவர்கள்.

ஊர்த்தாண்டி, ரயில்வே கேட். அங்கிருந்து மேற்கே சென்றால் பூவன்குறிச்சி, கருத்தப்பிள்ளையூர் வரும். நேராக சென்றால் பாபநாசம். நேராகச் சென்றார்கள். அந்த சாலையில் அடுத்த ஊர் தாட்டாம்பட்டி. அங்கிருந்து நேராகச் செல்லாமல் இடப்பக்கம் திரும்பினால், பனங்காடு. உள்ளே வண்டித்தட பாதையில் சென் றால், கோட்டை விளைப்பட்டி. கள்ளுக்கு பேர் போன, மேடான ஊர். இங்கிருந்து கொஞ்சம் சென்றால், பாபி தியேட்டர் இருக்கிறது. டூரிங் தியேட்டர். இதுவரை மேடான பகுதி. தியேட்டரில் இருந்து இறக்கம். பாறை யை குடைந்து ஏற்படுத்தப்பட்ட பாதை மாதிரி, பாறைகள் வழுக்கும். உடைந் திருக்கும் பகுதி பார்த்து, சைக்கிளை ஓட்ட வேண்டும். அரை மைல் தூரம் குதித்து குதித்துதான் சைக்கிள் செல்லும். அதைத்தாண்டி விட்டால், சின்ன வாய்க்கால் பாலம். பாலத்துக்கு அந்தப் பக்கம், சிறு நகர வாடை அடிக்கும் விக்கிரமசிங்கபுரம் வந்து விடும். இது குறுக்கு வழி.
சைக்கிள் நேராக போய் நிற்கும் இடம், அருணா புரோட்டா கடையில். கடைக் காரர் பெரிய மீசை வைத்திருப்பார். நடுரோட்டில் ஒருவரைப் போட்டுத் தள்ளிவிட்டு ஜெயிலுக்கு போய் திரும்பியவர். அந்த பந்தா தெரிவதற்காகவே பெரும் மீசை. கடைக்கு உள்ளே பெரிய அரிவாள் ஒன்றைத் தொங்கவிட்டிருக் கிறார் என்றும் அவரது எதிரிகள் எப்போது வேண்டுமானா லும் அவரை போட்டுவிடுவார்கள் என்றும் அப்படி வந்தால் அவர்களைப் பதம் பார்க்கத் தான் அந்த அரிவாள் என்றும் பேச்சு உலாவிக் கொண்டிருந்தது.
ஆளுக்கு எட்டெட்டு புரோட்டா. நன்றாகப் பிய்த்துப்போட்டுவிட்டு சால்னா வில் முங்க வைத்தால், ருசியோடு ஜிவ்வென்று இறங்கும். கூடவே இருக்கிறது சுக்காவும் வறுவலும். இன்னொரு கோஷ்டி, இதற்குள் பிராந்தி பாட்டிலை காலி செய்துவிட்டு எங்காவது தலைகால் தெரியாமல் லம்பிக்கொண்டு நிற்கும்.

கருணாநிதிக்குப் பிறகு அதிகக் கூட்டம் காளிமுத்துவுக்காகத்தான் இருக்கும். அவ்வளவு கூட்டம். அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து ஏகப்பட்ட பேர் வந்திருப்பார்கள் போலிருக்கிறது. சாலைகளின் இரண்டு பக்கமும் டியூப் லைட் வெளிச்சம் பளிச்சென இருந்தது.

பொதுக்கூட்டம் நடக்கும் பண்ணையார் வீட்டுக்கு எதிர் தெருவில் பெரிய மேடை போடப்பட்டிருந்தது. எதிரில் வளர்ந்திருக்கிற பெரிய மரங்களின் மீது ஏறி அமர்ந்திருந்தார்கள் பலர். அவர்கள் மரத்தில் இருந்து பீடி குடிப்பதைப் பார்க்கும்போது மின் மினி பூச்சிகள் வானில் மின்னுவது போல தெரிந்தன.
 வட்டம், மாவட்டம், இளைஞரணி, மகளிரணி என்று நிறைய பேர் மேடையில் அமர்ந்திருந்தார்கள். மணி ஒன்பதரை. யாரோ ஒரு கட்சிக்காரர் பேசிக் கொண்டிருந்தார். கூட்டம் கேட்க வந்திருந்தவர்கள், முன் பக்கமாகத் தரையில் துண்டை விரித்து அமர்ந்திருந்தார்கள். எல்லாரும் அவர் பேச்சைக் கேட்பதாக நினைத்துகொண்டு அந்தக் கட்சிக்காரர் முக்கி முக்கிப் பேசிக் கொண்டிருந்தார். அடுத்து, மகளிரணி தலைவி பேசத் தொடங்கினார். அவர் பேசிக் கொண்டி ருக்கும் போதே, 'அமைச்சர் டாக்டர் கா.காளிமுத்து அவர்கள் வந்துவிட்டார்கள். இந்தக் கூட்டத் தை முடித்துக்கொண்டு, அவர் தென்காசியில் பேச வேண்டியிருப்பதால் இப்போதே தனது சிறப்புரையை அமைச்சர் தொடங்குவார் என்று மைக்கில் அறிவித்தார்கள். அமைச்சர் முன் தன் பேச்சாளுமையை காட்ட வேண்டும் என்று நினைத்த அந்தத் தலைவிக்கு அது முடியாமல் போன வருத்தம் முகத்தில் தெரிந்துகொண்டிருந்தது. அமைச்சருக்கு வணக்கம் சொல்லிவிட்டு போய் உட்கார்ந்தார்.

எங்கெங்கோ நின்றுகொண்டிருந்தவர்கள் எல்லோரும் மேடைக்கு அருகில் வர, நெருங்கம் அதிகமாகியது. எங்கெங்கும் மனிதத் தலைகளாகக் காட்சியளித்தன. கூட்டம் கேட்க வந்திருந்தவர்களில் கீழ்ப்பக்கம் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். சிலரின் பார்வைகள் அந்த பக்கம் மட்டுமே இருந்தது.
காளிமுத்து மைக்கைப் பிடித்தபோது, விசில் சத்தமும் வாழ்க கோஷமும் பறந் தன. மெதுவாகப் பேச்சை ஆரம்பிக்கவும், மொத்தக் கூட்டமும் அவரின் வார்த் தைக்குள் கட்டுண்டு கிடக்கத் தொடங்கியது. அவ்வப்போது விசில்களும் கைதட்டல்களும் பறந்து கொண்டிருந்தன.

பரமசிவனுக்கு அந்தப் பேச்சு ஏதோ செய்தது. காளிமுத்துவின் மேல் ஈர்ப்பு வந்தது. தானும் இதே போல பேசவேண்டும் என்று முடிவு செய்துகொண்டான். இவரைப் போல, இதே மாடுலேஷனில் பேச வேண்டும் என்று முடிவெடுத்த வன், இவரைப் போல, தான் எப்படி பேசுவது என்று மனதுக்குள் ஒத்திகைப் பார்த்துக்கொண்டான். இங்கிருந்துதான் பரமசிவனின் பேச்சுக்குள் இனிமை புகுந்தது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு திருச்செந்தூர் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று கொண்டிருக்கும்போது, திருநெல்வேலி சந்திப்பு பேரூந்து நிலைய தேனீர் கடையில், டேப் ரெக்கார்டரில் காளிமுத்துவின் இலக்கிய பேச்சு ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. தூண் ஓரமாக உட்கார்ந்தான் பரசிவன்.
'குறிஞ்சிப் பாட்டில் கபிலர் தொண்ணூற்று ஒன்பது பூக்களைக் குறிப்பிட் டிருக் கிறார்.  ஒன்றிரண்டல்ல. தொண்ணூற்று ஒன்பது. இத்தனைப் பூக்களை அறிந்தி ருக்கிறீர்களா?' என்று கேட்டுவிட்டு தொடர்கிறார் காளிமுத்து. எங்கோ அவர் பேசிய பேச்சின் ஒலிப்பதிவு அது.

'வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமா ரோடம், வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், தாழை, தளவம், முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்...' என்று மூச்சுவிடாமல் அவர் முடிக்க வும் கைத்தட்டலும் விசிலும் பறக்கிறது.

பரமசிவனுக்கு தான் படித்த இலக்கியங்கள் ஞாபகத்துக்கு வந்து போயின. இருந்தாலும் இவரைப் போல இப்படி அடுக்கி, நினைவில் வைத்துச் சொல்ல முடியுமா? என்ற சந்தேகம் அவனுக்குள் இருந்தது. காளிமுத்து மேலும் தொடர் ந்துகொண்டிருந்தார்.

'நிறைந்த சொல் வளம் மிகுந்தது தமிழ்மொழி. ஒரு கருத்தை, எண்ணத்தை, ஒரு தத்துவத்தைப் புலப்படுத்த வேண்டுமானால் எவ்வளவு நுட்பாகப் புலப்படுத்த வேண்டுமானாலும் புலப்படுத்துவதற்கு தமிழில் பல சொற்கள் இருக்கின்றன. சொல்லுதல் என்ற வார்த்தை இருக்கிறதென்றால் இதையே பொருள் மாறு பாட்டோடு சொல்வதற்கு பல சொற்கள் தமிழில் இருக்கின்றன. அசைத்தல், அறைதல், இசைத்தல், இயம்புதல், உரைத்தல், உணருதல், ஓதுதல்,  எண்ணுதல், கத்துதல், கரைதல், கழறுதல், கழற்றுதல், கிளத்தல், கிளற்றுதல், குயிலுதல், குளறுதல், கூறுதல், சாற்றுதல், செப்புதல், நவிழுதல், உதலுதல், முதலுதல், முடித்தல், பகர்தல், பறையுதல், பண் ணுதல், பணுவுதல், புகழுதல், புலம்புதல், பேசுதல், கூறுதல், மாறுதல், பலத்தல், விடுதல், விதத்தல், விள்ளுதல், விளத்துதல், விளம்பு என்று ஏராளமானச் சொற்கள் இருக்கின்றன... எந்தச் கருத் தையும் தமிழால் புலப்படுத்திக் காட்ட முடியும்...'
இளைஞனான பரமசிவன், காளிமுத்துவின் வார்த்தைக்குள் மொத்தமாகத் தொலைந்து போனான். இப்படி சில சங்கப் பாடல்களை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டால், இதே கைதட்டல்கள் நமக்கும் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டான். அதே நினைப்புடன் திருச்செந்தூருக்கு பஸ் ஏறினான்.

(தொடர்கிறேன்)

2 comments:

ஆரூர் பாஸ்கர் said...

நல்லா இருக்கு. மிகுந்த சிரதையுடன் எழுதுறீங்களே நாவலா ??

ஆடுமாடு said...

ஆமா பாஸ்கர்.