Monday, November 16, 2015

யானை பிழைத்த வேல்- ஆங்காரம் பற்றி நாஞ்சில் நாடன்

ஏக்நாத் எனும் இளைய நண்பனை ஒரு கவிதைத் தொகுப்பு மூலம் அறிவேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த கவிதைகளுக்குப் பொழிப்புரை எழுதினாற்போன்ற சிறுகதைத் தொகுதி ஒன்றும் வாசித்தேன். மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு 'கெடை காடு' என்ற அவர் நாவல், எம் புருவத்தை மேலேற்றியது. வாசிப்பு சுவார சியத்துடனும் நாட்டு மருந்து மணத்துடனும் மக்கள் மொழியின் நுட்பங்களுடனும் காட்டின் ஈரத்துடனும் இருட்டுடனும் இருந்தது அந்த நாவல்.


'ஆங்காரம்' எனும் அவர் எழுதிய புதிய நாவல் கைக்குக் கிடைத்து நான்கு கிழமைகள் ஆகிவிட்ட பிறகு, தீபாவளி தினங்களில் கிடைத்த ஓய்வின் போது வாசித்து முடித்தேன். நாவல் என்பது கைலாய மலையையும் பேசலாம், ஊரை அடுத்து ஆடு மேய்க்கும் சிறு குன்றையும் பேசலாம். ஆனால் பாடுபொருள் எத்தனை நேர்மை யுடன் ஆளப்பட்டிருக்கிறது என்பது முக்கியம். ஏதானாலும் அடிப் படையாக அறிக ஒன்று, அது வாசிப்பு ஈர்ப்பு.

இதுவரை நான் வாசித்த ஏக்நாத்தின் எல்லா புத்தகங்களிலும் நானு ணர்ந்த ஒன்று, வாசிப்பு சுகம்.  பேசும் பிரதேசம் சார்ந்த மக்களின் மொழி, அதி நுட்பத்துடன் கூடி வருகிறது அவருக்கு. பொத்தாம் பொதுவாக்க, கருப்பாக இருப்பதெல்லாம் காரக்குழம்பு என்பது போல, திருநெல்வேலி வட்டார மொழி என அவர் மொழியைக் கடந்து போக இயலாது. 'தொங்குகிற புடுக்குக்குத் துணைப்புடுக்கு' என எளிமையான இளக்கார பிரயோகங்கள் கூட இயல்பாகக் கையா ளப்பட்டுள்ளன. புடுக்கு எனும் சொல் பற்றி இரண்டு பத்திகள் ஆராய எனக்கு விருப்பம் இல்லை.

எழுத்து நடையில் எந்தப் பாசாங்கும் இன்றி, தனது மண்ணில் கால் பதிய நின்று தன்னம்பிக்கையுடன் எழுதிச் செல்கிறார். எங்கிருந்தும்  எதையும் இரவல் பெற வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு இல்லை. கையணியை வளையல் என்றால் என்ன, வளை என்றால் என்ன, வளவி எனால் என்ன, காப்பு என்றால் என்ன, கடயம் என்றால் என்ன, கடகம் என்றால் என்ன, கங்கணம் என்றால் என்ன? இல்லை ஆண்டாள் பேசும் காசு, பிறப்பு, என்றால்தான் என்ன?

அவற்றுள் எது வட்டாரச் சொல், எது இலக்கணச் சொல் என்று தீர்மானிப்பவர் எவர்? மக்கள் புழங்கும் சொல் தானே பிறிதோர் சந்தர்ப்பத்தில் இலக்கண அங்கீகாரம் பெற்று அகராதிச் சொல் லாகவும் ஆகிறது?

இந்த அங்கீகாரம் வழங்குகிறவர், எந்த அமிலத்தில், எந்த காரத்தில் கழுவிச் சுத்தம் செய்கிறார் சொல்லை? உண்மையில், சொல்லின் வட்டாரத் தன்மை என்று அவர் கருதும் அழுக்கை நீக்குகிறாரா அல்லது சொல்லின் இயல்பான நிறத்தை, வாசத்தைக் கழுவி எடுக்கிறாரா? ஈதென்ன கைக்கிடையில் டியோடரண்ட் தெளிக்கும் காரியமா? வெங்காயத்தில் இருந்து முள்ளங்கியில் இருந்து அவற்றின் காரத்தை, வாசத்தை நீக்குதல் நியாயமா? நூறு குப்பி வாசனைப் பன்னீர் ஊற்றி வளர்த்தாலும் பூண்டின் வாசனையை அகற்ற இயலுமா?


'ஆங்காரம்' நாவல் நடக்கும் காலம் 25 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அவரது முன்னுரையில் இருந்து கணிக்கலாம். அந்தச் சூழல், மரபு, ஆசாபாசங்கள் இன்று ஓரளவு காணாமலும் போயி ருக்கலாம். காலம் எதையும் புதுக்கி எடுக்கிறது, பழக்கியும் தள்ளி விடுகிறது!

சின்னஞ்சிறு கிராமம் ஒன்றின் ஒரு சிறு குழுவின் மாந்தரை உயிர் பெய்து கண்முன் காட்டுகிறார் ஏக்நாத். அந்த மனிதர்கள் வித்தகர்கள் இல்லை. கிராமத்தில் பிறந்து வளர்ந்த எவருக்கும், வேற்று மனிதரும் இல்லை. அவர்கள் படைக்கப்பட்டவர்களா, வாழ்ந்து மறைந்த வர்களின் சுவடுகளா எனும் மயக்கமும் நமக்கு உண்டு. ஆனால், பாம்பை அஞ்சுவதற்குக்கூட பாம்பை அறிந்திருக்க வேண்டும். ஊர்ந்து போகும் எதற்கும் அஞ்சும் நகரத்து மனிதன், பாம்பை அறிய மாட்டான். அறியாதவனுக்கு அதன் அழகும் தெரியாது, அபாயமும் பயங்கரமானது.

காமத்தை கூறுகட்டி நடை பாதையில் விற்றுக்கொண்டிருக்கும் காலத்தில், ஏக்நாத் உணர்த்தும் காமம், கிராமத்தின் எழிலுடனும் இயல்புடனும் ஏக்கத்துடனும் காட்சிப்படுகிறது. இன்று சில பதிப் பாளர்கள், அச்சுக்குத் தரப்படும் சிறுகதையில், நாவலில் காமத்தை இன்னும் செறிவாக்கச் சொல்கிறார்கள் என்றும் அறிகிறோம். அஃதோர் வணிக உத்தி. வணிக உத்தி கையாள்பவர்களே மானுட வாழ்வின் அறம் பற்றியும் பேசுகிறார்கள் என்பதோர் இலக்கிய சோகம். காட்சிப்படுகிறது என்று சொன்னேன். 'கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப்பழகிக் கிடப்பேனை' என்பாள் ஆண்டாள். காட்சிப் பழகிக் கிடப்பது என்பது சிறப்பான சொல்லாட்சி. ஏக்நாத்தின் இந்நாவலில் நாம் பல காட்சிகளைப் பழகிக் கிடக்கிறோம்.

மொழி என்றும் உத்தி என்றும் பின்னை அதி தீவிர நவீனத்துவம் என்றும் வாசகனை வெருட்டி அலைக்கழிக்கும் காலகட்டத்தில் 'ஆங்காரம்' எளிமையானதோர் மொழிதல். அந்தப் பாணி செத்துவிட்டது, இந்தப் பாணி ஈரேழு கால் கொண்ட புரவியாய் பாய் கிறது என்றெல்லாம் சொன்னார்கள் பேராசிரியர் திறனாய்வு அறி ஞர்கள். படைப்பு என்பது எந்த அறிஞரின் கட்கத்துக் கைப்பை யினுள் கிடக்கும் குறிப்புகளுக்குள் அடங்கி ஒடுங்குவதல்ல. கோட் பாடுகளுக்குள் அடங்க மறுக்கும் படைப்பு, இந்த நாவல்.

ஒரு சிறு கிராமத்தில் மூன்றாண்டுகள் வாழ்ந்து திரும்பிய அனுபவம், இந்த நாவலை வாசிக்கும்போது மீக்குறுகிறது. இதுபோன்ற நாவல் முயற்சிகள், வாசிப்பைத் தொலைத்துவிட்டு நிற்கும் இளைய சமுதா யத்தைத் திரும்ப வாசிப்பிற்குள் கொண்ர்ந்து சேர்க்கும் எனும் நம்பிக் கை வருகிறது.
ஏக்நாத்துக்கு அனுபவம் இருக்கிறது, வயது இருக்கிறது இன்னும், ஆற்றல் இருக்கிறது, கதை சொல்லும் நேர்த்தி இருக்கிறது, ஆடம் பரம், இல்லாத எளிமையானதோர் மொழி கைவசம் பெற்றிருக்கிறார். தொடர்ந்து தீவிரமான முயற்சிகளை எதிர்பார்க்கிறோம்.

திருக்குறள் ஒன்று சொல்கிறது, கானகத்தின் முயலைக் குறிபார்த்து எய்து வீழ்த்திய கணையை விடவும், யானையை எறியக் குறிபார்த்து, குறி பிழைத்துப் போன வேல் மிகவும் சிறப்பானது என்று. மேலும் சொல்கிறது, 'கை வேல் களிற்றொடு போக்கி வருபவன், மெய் வேல் பறியா நகும்' என்றும்.
ஏக்நாத்திடம் காலம் மேலும் எதிர்பார்த்துக் காத்து நிற்கிறது.

நாஞ்சில் நாடன்.
16/11/15

1 comment:

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி...