1989. நவம்பர் 27.
பிள்ளையார் கோயிலின் வலதுபக்கம் வளர்ந்திருக்கிற வேப்பமரத்தில் ஒலி பெருக்கிக் குழாய்களைக் கட்டிக் கொண்டிருந்தான் செல்வி சவுண்ட் சர்வீஸ் ஓனரான முத்து. அதில் வடக்கும் தெற்குமாக இரண்டு குழாய்களையும் எதிரில் இருக்கிற அரசமரத்தின் உச்சியில் கிழக்கும் மேற்குமாக இரண்டு குழாய்களும் கட்ட வேண்டும். எந்த கட்சிக் கூட்டம் என்றாலும் நான்கு குழாய் கள்தான். இதே இடத்தில்தான் கட்டுவார்கள்.
சிவந்திபுரம் செல்லும் 3 ஏ என்ற எண் கொண்ட ஒன்பது மணி, அரசுப் பேரூந்து பிள்ளையார் கோயில் நிறுத்தத்தை மதிக்காமல் வேகமாகச் சென்றது. அந்த பஸ்சுக்காகப் பிள்ளையார் கோயிலுக்குள் காத்திருந்த தயிர்க்காரப் பொம்ப ளைகள், 'பேதில போவாம். இப்டி நிய்க்காம போறானே?' என்று திட்டிக் கொண் டே சாலைக்கு வந்தார்கள்.
'ஆமா. நீங்க ரோட்டுல நிப்பேளா? கோயிலுக்குள்ள போயி உக்காந்திருப்பே ளா? ரோட்டுல நின்னாதான ஆளுவோ நிக்கின்னு வண்டிய நிறுத்துவாம்?' என்ற சைக்கிள் கடை தாஸ், பஞ்சர் ஒட்ட ஆயத்தமானார்.
'அதுக்கு, பதுவா போற ஆளுவோ தெரியாதா அவனுக்கு?. இந்த பொட்டலு புதூ ருக்கார டிரைவரு வந்தாம்னா இப்டிதாம் பண்ணுவாம், எடுபட்ட பய. அவன் முண்டை கண்ணைத் தோண்டுனாதான் சரிபடு வான், வெளங்காம போறவன்' என்றபடி மீண்டும் கோயிலுக்குள் போய் நின்றுகொண்டார்கள்.
காலையிலேயே வெயில் கொதிக்கத் தொடங்கியிருந்தது.
இன்று மாலை இங்கு பொதுக்கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. எல்லா கட்சி களும் இதே இடத்தில் கூட்டம் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எப்போதோ யாரோ ஆரம்பித்த வழக்கத்தை இப்போதும் தொடர்ந்து கொண்டி ருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் பிள்ளையார் கோயில்தான் மையமாக இருக் கிறது. மார்கழி மாத காலை நேர பஜனை, பிள்ளையார் கோயிலில் இருந்து தான் தொடங்கும். கிழக்கே இருக்கிற அம்மன் கோயில் கொடைக்கும், இங்கு தான் விடிய விடிய கரகாட்டம் நடக்கும். 'சாயந்தரம் பிள்ளையார் கோயில் பக்கத்துலதாம் நிப்பேன். வந்துருடே' என்கிற, சந்திப்பு பகுதியாகவும் கோயில் இருக்கிறது. இதெல்லாம் இங்கு நடக்கிறதே தவிர, இதற்கும் பிள்ளையாருக் கும் சம்மந்தமில்லை.
பாபநாசம் செல்லும் சாலையின் வடப்பக்கம் இருக்கிறது பிள்ளையார் கோயில். அதன் எதிரில் இருக்கிற நீண்ட தெருவும் பக்கத்தில் இருக்கிற ஆல மரத்திண்டும் கூட்டத்தைக் கேட்க வருகிறவர்கள் அமர்ந்துகொள்ள போது மான இடம். இதைக் கருத்தில் கொண்டே இந்த இடத்தை தேர்ந் தெடுத்தி ருந்தார்கள். கூட்டம் நடக்கும்போது சாலையிலும் துண்டை விரித்து அமர்ந்து விடுவார்கள். அவ்வப்போது பேரூந்து, அல்லது சிற்றுந்துகள் வந்தால் எழுந்து ஒதுங்கிக்கொள்வார்கள். அது போனபின் மீண்டும் உட்கார்வார்கள். இதன் கார ணமாகப் பொதுக்கூட்டம் மட்டுமின்றி, அரசு விழாக்கள், செய்யது பீடி, சொக் கலால் பீடி கம்பெனிகள் போடும் சினிமாக்களுக்கான தற்காலிக தியேட்டராக வும் இந்த இடம் இருக்கிறது.
இன்று எந்தக் கட்சியின் கூட்டம் என்பது தெரியவில்லை. திமுக, கம்யூனிஸ் ட், அதிமுக கட்சிகளின் பொதுக்கூட்டம் என்றால் இதற்குள் நாலஞ்சு பேர் வெள்ளையும் சுள்ளையுமாக, இந்த இடத்துக்கு வந்திருப்பார்கள். எந்தக் கட்சிக் கூட்டம் என்பதை அவர்கள் காட்டிக் கொடுத்து விடுவார்கள். அல்லது கட்சிக்கொடிகளைக் கட்டத் தொடங்கியிருப்பார்கள்.
மரத்தில் இருந்து இறங்கிய முத்து, மேல கட்டப்பட்ட குழாய்களைக் கீழிருந்து பார்த்தான். சரியாகத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்கிற திருப்தியுடன், அரச மரத்துக்கு மற்ற இரண்டு குழாய்களைத் தூக்கிக் கொண்டு நடந்தான்.
'ஏ முத்து, எந்தக் கட்சிக் கூட்டம்டே?' என்று, சோடா பாட்டில்களை கடைக்குப் போடச் செல்லும் இசக்கி கேட்டான்.
'சாயந்தரம் வந்து பாரு'.
'ஏம் சொல்ல மாட்டியோல?'
'எந்தக் கட்சிக்கூட்டம்னாலும் வீட்டை விட்டு வெளிய வரமாட்டே. நீயெல்லாம் கேட்டு என்ன பண்ணப் போற?'
'ஏல, சொல்லு. வேலை கெடக்கு'
'நீ வேலைய பாரு. நானா வேண்டாங்கென்?'
'சொல்லுதியா இல்லயால'
'எனக்குத் தெரியலடே. சைலண்ணன் கட்டச் சொன்னான். கெட்டிட்டு இருக் கேன். யாரு பேசப்போறா? என்ன கட்சின்னெல்லாம் எனக்குத் தெரியாது. நானும் கேட்டுக்கிடல' என்றான் முத்து.
'உனக்கு துட்டு வந்தா போதும்' என்று முணங்கிக்கொண்டே வேண்டா வெறுப் பாக, சைக்கிளை மிதித்தான் இசக்கி.
ஊரில், மெஜாரிட்டி கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. அவர்களை அடுத்து திமுக. அதிமுகவில் கொஞ்சம் பேர் சேர்ந்திருக்கிறார்கள். ஒரு கட்சிக் காரர்கள் சார்பில் இந்த வாரம் பொதுக்கூட்டம் நடந்தால் இதற்கு பதில் சொல் லும் விதமாக அடுத்த வாரம் இன்னொரு கட்சியின் கூட்டம் நடக்கும். இந்த வழக்கத்தை மாற்றி நடந்த அந்தச் சம்பவம் இன்னும் ஊரில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பேரூந்து நிலையத்தில் அதிமுக கொடி கம்பத்தை திறந்து வைத்துவிட்டு திருநெல்வேலியில் இருந்து வந்திருந்த பேச்சாளர், நெல்லை சும்மாஞ்சி, கம்யூனிஸ்ட் கட்சியையும் திமுகவையும் மேலோட்டமாகத் திட்டிவிட்டு, இரட்டை அர்த்தம் கொண்ட பேச்சுகளை கூச்ச நாச்சமின்றி பேசிவிட்டுப் போன, அடுத்த நாளே போடப்பட்டது கம்யூனிஸ்ட் கட்சியின் திடீர்ப் பொதுக் கூட்டம்.
எந்தக் கூட்டத்திலும் மேடையே ஏறாத அகத்திய தேவர், அன்று மேடை ஏறியதுதான் ஆச்சரியம். இதுவரை எதுவுமே பேசியிராத அவர், அன்று பேசிய தில் எல்லாருமே ஆடிவிட்டார்கள்.
'இதுதான் கடைசி தடவையா இருக்கணும். இது எச்சரிக்கை. அரசியல் நாகரிக ம்னு கூட வச்சுக்கோ. இன்னொரு தடவை, கண்ட நாய்வோள ஊருக்குள்ள கூட்டிட்டு வந்து இப்படி பேசினாம்னு வையி, மேடையில வச்சே துண்டு துண்டா வெட்டுவேன். ஊருல அவ்வளவு குடும்பம் இருக்கு. பிள்ளை குட்டி யோ இருக்கு. இப்படியா அசிங்க அசிங்கமா பேசுவான் பரதேசி பய. அவனை இங்க கூட்டிட்டு வந்து பேச வச்சவனுவோ பாரு, அவனுவ கொதவலைய அறுக்கனா இல்லையான்னு மட்டும் பாரு. உங்களுக்கெல்லாம் அறிவு இல் லையால' என்று வீராவேசமாகப் பேசிவிட்டு உட்கார்ந்துவிட்டார்.
இது நடந்ததற்கு பிறகான நான்கைந்து நாட்கள் அதிமுகவினரை ஊரில் காணமுடியவில்லை. அதற்கு பிறகு மேடையில் ஆபாசமாகப் பேசுபவர்களை எவரும் அழைத்துவரவில்லை. அப்படியே அழைத்து வந்தாலும், 'மோசமான ஊருய்யா. பேச்சை அடக்கிப் பேசும்' என்று முதலிலே பேச்சாளர்களுக்கு எச்சரிக்கைச் செய்யப்பட்டிருந்தது.
குழாய்களைக் கட்டிவிட்டு வந்து, மின்கம்பியில் கொக்கிப்போட்டு எடுத்த மின்சாரத்தில் பாடல் ஆரம்பித்தது. முதலில், மூன்று பக்தி பாடல்களைப் போட்டான் முத்து. அது முடிந்ததும், 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்' என்ற பாடல் ஒலிக்க, இது அதிமுக பொதுக் கூட்டமாக இருக்கு மோ என்கிற சந்தேகம் எழுந்தது. பாடல்களைக் கேட்டு சின்னப் பயல்கள் மைக் செட் வைக்கப்பட்டிருக்கும் இடத்தருகே கூடி அமர்ந்திருந்தார்கள்.
பந்தல்கார சைலண்ணன், நான்கைந்து கம்புகளையும் கடப்பாரையையும் கொண்டு வந்து வைத்துவிட்டு பீடியை பற்ற வைத்தான். எப்போதும் குழி தோண்டும் இடத்தைத் தேடி, தோண்டினான். கம்புகளை நடத் தொடங்கினான்.
'இப்பவே பந்தலை போடுத?' என்றான் முத்து.
'பெறவு என்ன செய்ய சொல்லுத?'
'சாயங்காலமா போட்டா என்னா?'
'ஒரு வேலை முடிஞ்சுரும்லா. சாயங்காலமா, வீ.கே.புரம் வேற போவ வேண்டியிருக்கு'
'சின்னப் பயலுவோ, பந்தலை கிழிச்சுர போறானுவோ'
'அதுக்கு நீ இருக்கல்லா, பாத்துக்கோடே' என்ற சைலண்ணன், வேலு டிக்கடை யில் ரெண்டு டீ என்று கை காண்பித்தான்.
'மூணா சொல்லுடே' என்ற குரல் வந்த திசையைப் பார்த்தான் அவன். பரம சிவம் அருகில் வந்துகொண்டிருந்தார்.
எப்போதும் அவர் முகத்தில் இருக்கும் தாடி இன்று இல்லை. பட்டு வேட்டி சட்டையில், கழுத்தில் கருப்பு நிற துண்டை வல்லாட்டாகப் போட்டுக் கொண் டு சைலண்ணனின் முன் நின்றார்.
'என்ன தோழரே, சிவப்பு கலர் துண்டுலா போடுவீரு. திடீர்னு கருப்பா மாறியிருக்கு' என்று கேட்டான் சைலண்ணன். முத்துவும் அவரைப் பார்த்தான்.
'அது கட்சி, இது உணர்வு' என்று சொல்லிவிட்டு சிசர் சிகரெட்டின் ஒரு பகுதி யை உள்ளங்கையில் வைத்து தட்டிக்கொண்டே பற்ற வைத்தார். புகை பரவ ஆரம்பித்தது.
அந்த மேடையில் அவர்தான் பேசப்போகிறார் என்பது முத்துவுக்கு அப்போ துதான் தெரிந்தது.
-தொடரும்
4 comments:
Thanks for your new post. as usual awesome writing...
Augustine
மீண்டும் எழுத வந்ததற்கு முதலில் வணக்கங்களும், வரபேற்புகளும்.
பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாண்டில் பேருந்துக்கு காத்திருப்பவர்களைப் போல் நண்பர்கள் நாங்கள் உங்கள் பதிவுகளுக்கு காத்திருக்கிறோம்.
தொடர் கதை முழு நாவலாக வாழ்த்துக்கள்.
"ஆதலால் தோழர்களே..." - அட்டகாசமான தலைப்பு.
தலைப்பே ஆயிரம் கதை சொல்லுது அண்ணாச்சி.
அட்டகாசமான துவக்கம்!அப்படியே ஓர் தெற்கத்திய கிராமத்தினை கண்முன் நிறுத்திவிட்டீர்கள்!
Post a Comment