Saturday, August 29, 2015

செவ்விளநீர் காய்க்கும் மரம்



ஓடையில் இருந்த கல்லை அகற்றி வயலுக்குத் தண்ணீரைத் திறந்து விட்டு விட்டு வரப்பில் ஏறினாள் அம்மா. கைகளில் அப்பியிருந்த சகதியை, வரப்பில் உட்கார்ந்தவாறே ஓடையில் கழுவிவிட்டு எழுந்தாள். பளிங்கு மாதிரி சென்று கொண்டிருக்கிற ஓடைத்தண்ணீர் அம்மாவால் கொஞ்சம் கலங்கி, பிறகு மீண்டும் பளிங்குக்கு மாறின. பெரிய வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர் இது. ஓடை இந்த இடத்தில் மட்டும் கொஞ்சம் பெரியதாக இருக்கும். பக்கத்து வயல்களைத் தாண்டினால் இதே ஓடை, குறுகிக் குறுகி இரண்டு அடி அளவில் சுருங்கி, வளைந்து நெளிந்து செல்லும். வயல்காரர்கள் வரப்பைச் சுரண்டி சுரண்டி வயலைப் பெரிதாக்கியதால் வந்த வினை இது. பெரியாச்சியின் காலத் தில் வாய்க்கால் அளவுக்கு ஓடை இருந்ததாகச் சொல்வாள். இப்போதும் அவள் வயலுக்கு வந்தால் இந்த இடத்தில்தான் குளிக்கிறாள்.

கணபதியா பிள்ளைத் தோப்பில் இருந்த மரங்களில் இருந்து விழும் நிழலும் காற்றும் இந்த இடத்தை மேலும் சுகமாக்கும். பத்து பதினைந்து அடி எடுத்து வைத்தால், வயலைத் தாண்டி ஓடுகிறது கடனாநதி ஆறு. பெரியாச்சி அங்கு குளித்து நான் பார்த்ததில்லை. இரண்டு காதுகளிலும் பாம்படம் ஆட, சேலை யை மாராப்பாகக் கட்டிக்கொண்டு உட்கார்ந்து கொள்வாள் ஓடைக்குள். காலை நீட்டி முங்கிக்குளிப்பாள். உடனே மேலுக்கு தேய்த்து முடித்துவிட்டு எழுந்து கொள்வதில்லை அவள். குறைந்தது பதினைந்து நிமிடம் தண்ணீருக்குள் முங்கி கிடக்க வேண்டும். ‘என்னா சூடுங்க. அதுக்கு இங்ஙன செத்த நேரம் கெடந் தாதான் சரிபடும், பாத்துக்க’ என்பாள் கேட்காவிட்டாலும். அம்மாவும் சில நேரங்களில் இங்கு குளிப்பாள். எனக்கு ஆற்றுக்குளியல்தான் வசதி யானது, சுகமானது.

வரப்புகளில் நடந்து வயலுக்குள் இறங்கி தண்ணீர் பாய்வதைப் பார்த்தாள் அம்மா. தண்ணீர் குப்புக்கென பாயும் இடத்துக்கு அருகில், பாதி முங்கிய நிலையில் ஐம்பது பைசா ஒன்று கிடந்தது. இப்போது சொன்னால் அம்மா எடுத்துக்கொள்வாள். வீட்டுக்குத் திரும்பும்போது அம்மாவுக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். வயலின் ஓரமாக நடந்து தோப் புக்குச் சென்றுகொண்டிருந்தாள் அம்மா. 

காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. ஆற்றின் எதிர்கரையில் மாடுகளை மேய்க்கும் இரண்டு பேரில் ஒருவன் பாடும் பாடல் காதில் விழுகிறது. ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான் அழகி என்பேன், நல்ல அழகி என்பேன்’ என்று அவன் இஷ்டத்துக்கு வளைத்து இழுத்துப் பாடிக்கொண்டிருந்தான். அம்மாவுக்கும் பாடல்கள் பிடிக்கும். ராத்திரி நான் தூங்கும் நேரத்தில், சிம்னி விளக்கின் அடியில் அமர்ந்திருக்கும் அம்மா, பீடித் தட்டை மடியில் வைத்துக் கொண்டு பாடும் பாடல்கள் தாலாட்டுபவை. அந்தப் பாடல்களைக் கேட்டே பல நாள் தூங்கியிருக்கிறேன். அவள் பாடும் பாடல்கள் பெரும்பாலும் பெண் குரல் பாடல்கள்தான். ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே’ என்று அவள் ஆரம்பிக்கும்போது, எனக்கு சுகமாக இருக்கும். அவள் பாடுவதில் பிடித்தப்பாடல், ‘பூப்பூவாய் பறந்து போகும் பட்டுப் பூச்சி அக்கா, நீ பள பளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா’. இந்தப் பாடலைப் பாடும்போது அம்மாவின் முகத்தில் தெரியும் பிரகாசமும் புன்னகையும் பாட லோடு அத்தனை இனிமையாக இருக்கும். 

மாடுகள் மேய்ப்பவன் இப்போது பாட்டை நிறுத்திவிட்டு எவனையோ சத்தமாகக் கூப்பிட்டுக் கொண்டிருந்தான். அம்மா வயலைத் தாண்டித் தோப் புக்கு நடந்துகொண்டிருந்தாள். கீழ் தோப்பு மரங்களின் நிழல்கள், வயலை முழுவதுவமாக மூடியிருந்தன. ஒற்றைத் தென்னம்பிள்ளை அருகே செடி செத்தைகளின் மேல், யாரோ சேலையையும் வேட்டி ஒன்றையும் காயப் போட் டிருந்தார்கள். அது காற்றில் படபடக்கும் சத்தம் இங்கு கேட்டுக் கொண்டி ருந்தது.

பெரிய வாய்க்கால் பாலத்தில் இருந்து நடந்தால் அரை கிலோ மீட்டரில் இருக்கிறது கடனாநதி ஆறு. பாலத்தில் இருந்து வயல்களின் வரப்பின் வழி வந்தால் ஆற்றின் கரையில் இருக்கிற ரெட்டைத் தென்னம்பிள்ளையை அடை யலாம். அங்கு மேலத் தெருக்காரர்கள் துணி துவைத்துக் குளிப்பார்கள். கிழக்கே படித்துறை இருக்கிறது. அங்கு இடுப்பு வரை ஆழம் உண்டு. துவைத்து முங்கிக் குளிக்கச் சுகமான இடம் என்பதால் அது பெண்களுக்கானது. அதற்கு கிழக்கே, சின்ன பாலம் இருக்கிறது. இங்கு பெரும்பாலும் ஆண்கள் குளிப் பார்கள். இதற்கு கீழே சலவைக்காரர்களின் பகுதி. அவர்கள் சிறு பொத்தை மாதிரி இருக்கிற பெரிய கருங்கற்களை எங்கிருந்து கொண்டு வந்து போட்டார் களோ தெரியாது. அவ்வளவு பெரிய கற்கள். அதில் துணி துவைப்பார்கள். இதற்கு கீழ்ப்பக்கம் சுடுகாடு இருக்கிறது. 

மற்ற இடங்களை விட்டுவிட்டு ரெட்டைத் தென்னம்பிள்ளைக்கு குளிக்க வருபவர்கள் பெரும்பாலும் வயல்களை அல்லது தோப்புகளைப் பார்வை யிட்டுவிட்டு குளித்துச் செல்பவர்களாக இருந்தார்கள். அந்த தென்னம்பிள் ளையில் இருந்து இரண்டு வயல்களைத் தாண்டி வந்தால் இருக்கிறது எங்கள் வயலும் சிறுதோப்பும். தாழைகள் அடர்ந்து சப்பும் சவறுமாகக் கிடக்கிற இடத்தில்தான் செவ்விளநீர் காய்க்கும் தென்னம்பிள்ளை ஒன்று வளர்ந்திருக் கிறது. அதன் வேர்கள் தண்ணீருக்குள் முங்கி, பாதி அரித்துக் கிடக்கிறது. 

தாழைகளில் இருந்து வரும் தாழம்பூக்களின் வாசனை மதி மயக்கிச் செல்லும். தாழம்பூ வாசனை வந்தால் அங்கு விஷம் கொண்ட பாம்புகள் நடமாட்டம் இருக்கும் என்பதாகப் பக்கத்து வயல்காரரான பக்காவின் மகன் சொல்லியி ருக்கிறான். இந்த இடத்தில் அவனே பல முறை பாம்புகளின் நடமாட்டத்தைப் பார்த்திருக்கிறானாம். பெரும்பாலும் இங்கேயே இருக்கிற அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்பதால் நான் தாழைக்குள் எப்போதும் இறங்குவதி ல்லை. செவ்விள நீர் தென்னைக்கு இடபக்கம் நான்கு தென்னம் பிள்ளைகளும் வட பக்கம் மூன்றும் நின்று காய்த்திருந்தன. இதில் இடது ஓரத்தில் இருப்பது சிறு மரம். எனக்கான மரம். எனக்காக மட்டுமே இந்த மரம் இன்னும் வளராமல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். ஏனென்றால் என்னால் இதில் மட்டும்தான் ஏற முடியும். 

தோப்பு முழுவதும் மணல் பரவியிருக்கும். தூரத்தில் இருந்து பார்த்தால் தரைக்கு சுண்ணாம்பு அடித்த மாதிரி மணல் தெரியும். காலை வைத்தால் பொதுக்கென்று உள்ளே போகும் அளவுக்கு இலேசாக இருக்கும். வயலுக்கு வருகிற நேரங்களில் பக்கா மகன் தூக்குச் சட்டியோடு சாப்பிட இங்குதான் வருவான். சாப்பிடும் முன், மரங்களின் நிழலில் நானும் அவனும் விளை யாடுவோம். அவன் உருளுவான். மணலில் உருள்வது அவனுக்குப் பிடிக்கும். நான் கொஞ்சம் எச்சரிக்கையுடனே உருள்வேன். ஏனென்றால் அவன் சொல்லி யிருக்கிற விஷப்பாம்புகளின் பயத்துக்குள் நான் இருந்தேன். மணலில் சட்டை யைக் கழற்றிவிட்டு விழுந்து உருளும்போது கிடைக்கிற குளிர்ச்சியை நான் விரும்புவேன். சில வேளைகளில் கீழ வயல்காரர் மகள் லட்சுமியும் எங்களுடன் சேர்ந்து கொள்வாள். 

  அம்மா, தோப்புக்கு வந்ததும் அதிர்ச்சியாகி நின்றுவிட்டாள். தோப்பின் நடுவில், இளநீர்களைப் பறித்துத் தின்றுவிட்டு அதன் கூந்தல்களை அப்படியே போட்டுவிட்டு யாரோ சென்றிருந்தார்கள். ஏழெட்டு காய்கள் பறிக்கப்பட்டு கிடந்தன. இரண்டு கூந்தல்கள் மட்டும் தாழைகளின் அருகே கிடந்தன. கூந்தல்களின் மேலே கருவண்டுகள் ஏறி இறங்கிக் கொண்டிருக்க, கட்டெ றும்புகள் அதை மொய்த்துக் கொண்டிருந்தன. காய்ந்த தென்னமட்டைகள் சிலவும் விழுந்து கிடந்தன. அம்மாவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறு வதை என்னால் உணர முடிந்தது. அவளுக்குக் கோபம் வந்தால் முதலில் முகம்தான் கொடூரமாக மாறும். கண்கள் வழக்கத்தை விட வேறு மாதிரியாக இருக்கும். இப்போது அம்மா திட்டுவாள். கெட்ட வார்த்தைகளாகத் திட்டுவாள். நான் அம்மாவின் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அம்மா வரப்பில் இருந்து தோப்புக்குள் இறங்கி, சேலை முந்தானையை இடுப்பில் சொருகிவிட்டு கூந்தல்களை எடுத்துத் தாழைக்குள் போட்டாள். அவள் முகம் இப்போது கொடூரமாக மாறிவிட்டது. கெட்ட வார்த்தைகளால் திட்டத் தொடங்கினாள். அமைதியான பறவைகள் பேசிக்கொண்டிருக்கிற காற்றைக் கிழித்து, அம்மாவின் கெட்டவார்த்தைகள் பறந்து சென்று கொண்டி ருந்தன. தோப்பில் இதே போல பலமுறை நடந்திருக்கிறது, திருட்டு. பெரும் பாலும் தெரிந்தவர்களே இந்தத் திருட்டில் ஈடுபடுகிறார்கள். மற்ற தோப் புகளில் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதால் அங்கு யாரும் திருடுவதில்லை. அதுமட்டுமல்லாமல் இதில் திருடினால் கேட்பதற்கு யார் இருக்கிறார்கள் என்கிற தைரியம்தான். 

அம்மா சத்தமாகக் கெட்ட வார்த்தைகளால் திட்டத் தொடங்கினாள். கீழ தோப் பில் பின்னக் காய்களைப் பறித்துக் கொண்டிருந்த பக்கா, அம்மாவை நோக்கி வந்தார். அவரைப் பார்த்தாலும் அம்மா திட்டுவதை விடவில்லை. அவரைக் கவனிக்காத மாதிரி மேற்கு நோக்கிப் பார்த்துக்கொண்டு அவள் இன்னும் வேகமாக அசிங்கமாக, அருவறுப்பாகத் திட்டிக் கொண்டிருந்தாள். ஏனென்றால் யார் வந்து திருடியிருப்பார்கள் என்பது அவருக்குத் தெரியும். எப்போதும் இங்கேயே இருக்கிற அவருக்குத் தெரியாமல் சுற்றுபட்டுத் தோப்புகளில் எதுவும் நடக்காது. சில நேரங்களில் அவரே கூட திருட்டைச் செய்யலாம். இங்கு யாரும் யோக்கியர்கள் இல்லை.

இதற்கு முன்பு நடந்த திருட்டில் அம்மா அழுத அழுகைக்கு அளவே இல்லை. அவள் விட்ட கண்ணீரில் தோப்பின் மணல்கள் உப்புத்தண்ணீரால் நிரம்பி யிருக்க வேண்டும். பெருமாள் கோவில் திருவிழாவில் விற்பதற்காக, செவ் விளநீர் காய்க்கும் தென்னம்பிள்ளையில் தேங்காய்களைப் பறிக்காமல் விட்டு வைத்திருந்தாள். ஒரு குலையில் குறைந்தது பத்து காய்களாக நான்கு குலைகள். கிட்டதட்ட நற்பது காய்கள் இருக்கும். கீழிருந்து பார்க்கும்போதே அதன் வழுவழு வடிவமும் இளஞ்சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறமும், ‘என்னைக் குடித்துத் தொலை’ என்று சொல்வது போல தோன்றும். இந்த மரத்து காய்களை யாரும் திருட்டுத்தனமாகப் பறித்துவிடக்கூடாது என்பதற் காக, கீழத் தெரு மாயாண்டி அண்ணனைக் கூப்பிட்டு மரத்தில் பிளேடு அடித்திருந்தாள். அதை யும் தாண்டி நடந்திருந்தது திருட்டு. ஒருவேளை மாயாண்டியே திருடியிருப் பானோ என்கிற சந்தேகமும் அம்மாவுக்கு உண்டு. 
அன்று அவளின் அழுகையில் நான் உடைந்து போனேன். அந்தத் தேங்காய் களை விற்றிருந்தால் அம்மாவுக்குக் கொஞ்சம் காசு கிடைத்திருக்கும். ஐந்தா வது மாதமாக இருக்கும் அக்காவுக்கு ஏதோ வாங்கிக் கொடுக்க அப்போது திட்ட மிட்டிருந்தாள். அந்தத் திட்டம் தவிடு பொடியானதில், திருவிழாவுக்குத் தயாராகியிருந்த பெருமாளையும் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனைச் செய் தாள் அம்மா. தெய்வங்கள் கூட கஷ்டப்படுபவர்களுக்கு உதவாது என்று அப்போது தெரிந்துகொண்டேன். அது நடந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இப்போது, அடுத்தத் திருட்டு.

நான் ஆற்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பக்கா மகன் சொன்னது போல ஒரு பாம்பு தாழைக்குள்ளிருந்து தண்ணீருக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. சாம்பலும் கருப்பும் கலந்த வண்ணத்தில் இருந்த அந்த வழு வழு பாம்பு தண்ணீருக்குள் விழுந்து தலையை மட்டும் தூக்கிக் கொண்டு வேகமாகச் சென்றது. அதன் உடல் பகுதிகள் தண்ணீரில் அளைந்து செல்வது, பின்பக்கத்தை மட்டும் ஆட்டிச் செல்லும் வாத்து போல தெரிந்தது. அது நல்ல பாம்பாக இருக்குமா, தண்ணீர் பாம்பா? என்ற யோசனை யில் மூழ்கியபோது பக்கா வந்து விட்டார்.

'சும்மா ஏசாத பார்வதி. ஒங்கொழுந்தன்தான் நாலஞ்சு பேரோட வந்தான்’ என்று சொல்லிவிட்டு அம்மாவைப் பார்த்தார். பிறகு, ‘என்னைய பார்த்ததும் எளநீ குடிக்க வந்தோம்னான். நான் ஏதும் சொல்ல முடியுமா? அவனுவ பாட்டுக்கு ஏறுனானுவோ, குடிச்சுட்டு போயிட்டானுவோ. ‘உங்க மைனி தோப்புன் னாலும் அவ இல்லாத நேரத்துல இப்படி செய்யலாமாடே?’ன்னு கேட்டேன். நாலு எளநீ பறிச்சதுல என்னாயிர போவுதுவேன்னுட்டு போறாம். நான் என்ன செய்ய முடியுங்கெ?' என்று அவர் சொன்னதும் அம்மாவுக்கு கோபம் இன்னும் கூடியது.
'கண்ட நாய்வோ இங்க வந்து நக்கிட்டு போவவா, நான் இதை வாங்கி வச்சி ருக்கேன்?' என்று ஆரம்பித்து ஏசிக்கொண்டே இருந்தாள். விழுந்து கிடந்த தென்ன மட்டைகளை, வைத்திருந்த அரிவாளால் சின்னத் துண்டாக வெட்டிக் கட்டினாள். அதை நார்ப்பெட்டியில் போட்டாள். ஏற்கனவே காய்ந்து ஓரமாக கிடந்த நான்கைந்து தென்னங்கூந்தல்களை எடுத்து விறகுக்காகப் பெட்டியில் போட்டுவிட்டு, ‘வால’ என்று என்னிடம் சொல்லிவிட்டு நடந்தாள். நான் அவள் பின்னே சென்றுகொண்டிருந்தேன். 

வரப்புகள் முழுவதும் ஏசிக்கொண்டே வந்தாள். அது, கிழக்கே வயல்களில் வேலை பார்க்கிற, பெரிய வாய்க்காலில் துணி துவைக்கிற பெண்களின் காது களுக்குச் சென்றிருக்கும். அக்கம் பக்கத்து வயல்களில் நின்றிருந்தவர்கள் அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டு ஏறிட்டுப் பார்த்தார்கள். கெட்ட வார்த் தைகளால் திட்டுவதில் அம்மாவுக்கும் மேலத் தெருவில் இருக்கிற ஈர்க்குச்சி கிழவிக்கும் போட்டி வைக்கலாம். எங்கிருந்துதான் இத்தனை வார்த்தைகளைப் பிடிக்கிறார்களோ என்று மாடசாமி வாத்தியார் கேட்கும் அளவுக்குத் திட்டு வார்கள் இருவரும்.

அம்மன் கோயில் தாண்டியதும், மாடு குளிப்பாட்ட வந்துகொண்டிருந்த சடச்சாச்சி, 'ஏம்ட்டி ஏசிட்டு போற?' என்று கேட்டாள். விஷயத்தைச் சொல்லி விட்டு பேச்சைக் குறைக்காமல் ஏசிக்கொண்டே போனாள் அம்மா. கெட்ட வார்த்தைகள் இன்னும் அதிகமாக வந்து விழுந்தன. வேகவேகமாக நடந்து போனாள் அம்மா. அவளின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நான் கொஞ்சம் ஓடுவதும் பிறகு நடப்பதுமாகச் சென்றுகொண்டிருந்தேன்.

இன்றைக்கு ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பது எனக்குப் புரிந்தது. அம்மாவின் கோபம் எதுவரை போகும் என்பது தெரியும். பெரிய சண்டை ஒன்று தெருவில் நடக்கலாம். வாய்ப்பேச்சு முற்றி ஊர்த்தலைவர் வரை விஷ யம் செல்லலாம் என நினைத்துக் கொண்டேன். எனக்கு கொஞ்சம் பயமும் இருந்தது. இப்போது அம்மாவிடம் ஏதும் பேசினால், என்னையும் திட்டுவாள். இல்லையென்றால் அடிக்கவும் வாய்ப் பிருக்கிறது என நினைத்து அமைதியாக அவள் பின்னால் சென்றேன்.

இந்த வயல், அப்பா இறந்த பிறகு அரசுக் கொடுத்த தொகையை கொண்டு வாங்கியது. அதனால் இந்த தோப்புக்கும் அம்மாவுக்கான நெருக்கம், பெரும் பாசப் பிணைப்பு கொண்டது. இன்று அம்மாவின் பாசத்துக்குரியதாக இருக்கிற இந்த வயல், அம்மா வாங்கும் முன், வேறு யாருடைய பாசத்துக்குள்ளும் இருந்திருக்கும். இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை. 

பக்கா சொன்ன கொழுந்தன், கிட்னம்மா சித்தியின் கணவர். கட்சி கூட்டத் துக்காக அலைந்துகொண்டிருப்பவர். எப்போதும் அவருடன் நான்கைந்து பைய ன்கள்  பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படி என்னதான் பேசுவார்க ளோ என்று கேட்கிற அளவுக்கு பேச்சாகவே இருக்கும்.  

அம்மாவின் தங்கையான கிட்னம்மா சித்தியும் அவரும் காதலித்துக் கொண் டிருந்தார்கள். முதலில் இத்தகவல் மேலத்தெருவில் பரவியிருந்தது. உள்ளூரில் நடந்த கட்சிக் கூட்டத்தில் அவர் பேசிவிட்டு வரும்போது இருவரையும் சிலர் நேரில் பார்த்ததாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். விஷயம் அம்மாவின் காதுக்கு வந்ததும் கேட்டாள், 'இது என்னட்டி?' என்று.
'அவரைத்தான் கல்யாணம் பண்ணுவேன். நீதான் ஏற்பாடு பண்ணணும்' என்று அம்மாவின் காலில் விழுந்தாள் சித்தி.

'இப்டியொரு காரியத்தைப் பண்ணிட்டு வந்து கால்ல விழு' என்று வீட்டுக்கு வெளியே திண்ணையில் வந்து உட்கார்ந்தாள் அம்மா. அம்மாவின் அக்காவான பிரமு பெரியம்மாள், கன்னியாகுமரி அருகில் இருக்கிற வடக்கு தாமரைக் குளத்தில் கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தாள். அவ்வளவு தூரத்தில் இருந்து அடிக்கடி அவளால் ஊருக்கு வர முடியாது. இதன் காரணமாக குடும்ப பிரச்னைகளுக்குத் தலைமை தாங்குபவளாக அம்மா இருந்தாள். 

கிட்னம்மா சித்தி, அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லிய பதினெட்டாவது நாள், திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. ராமர் கோயிலில் திருமணத்தை நடத்திவிடலாம் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. அவர் சம்மதிக் காததால் எங்கள் வீட்டில், இரண்டு குடும்பத்தார் மட்டும் கலந்து கொண்ட திருமணம் ஆடம்பரம் ஏதுமின்றி அமைதியாக நடந்தது. வீட்டின் நடுவில் மேல்சுவர் அருகில் இருக்கும் விளக்கை எரியவிட்டு அதற்கு முன், கொஞ்சம் எலிக்கடித்திருந்த பழைய ஜமுக்காளம் விரிக்கப் பட்டது. அது எனக்கானது. குளிர்காலத்தில் நான் போர்த்திக்கொண்டு படுக்கும் ஜமுக்காளாம். அதில் சித்தியும் அவரும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். மணக்கும் பூக்கள் அதிகம் கொண்ட மலர்மாலை வாங்கப்பட்டு இருவரும் மாற்றிக் கொண்டார்கள். பின் அவரின் அக்கா தாலி எடுத்து கொடுக்க, ஒரே நிமிடத்துக்குள் நடந்து முடிந்து விட்டது கிட்னம்மா சித்தியின் திருமணம். அவளுக்குச் சிரிப்பாணியாக இருந்தது. 

தனது திருமணத்தைப் பெரிதாக நடத்த வேண்டும் என்று அவர் ஆசைப் பட்டிருந்தார். குறைந்தபட்சம் கட்சிக்காரர்களையாவது அழைக்க நினைத் திருந்தார். இன்னும் ஒரு வாரத்தில் அந்தக் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஊரில் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அப்போது கட்சிக் காரர்கள் பங்கேற்கும் வரவேற்பை நடத்த முடிவு செய்திருந்தார். 
சித்தியும் சித்தப்பா எனப்படும் அவரும் பெரியாச்சியின் காலில் விழுந்துவிட்டு பிறகு அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். அம்மா விலகிப்போனாள். 
'என்ன காரியம் பண்ணுதியோ ரெண்டு பேரும்' என்று அம்மா வீட்டுக்குள் ஓடினாள். சித்தப்பாவின் உறவினர்கள், 'இதுல என்ன இருக்கு' என்றார்கள். வீட்டுக்குள் சாமி படத்துக்கு முன் நின்று கண்கலங்கினாள் அம்மா. 'தாலியறுத்தவா கால்ல புதுசா கல்யாணம் ஆனவோ விழலாமா?' என்று கூட அம்மா நினைத்திருக்கலாம்.

'ஏல, எனக்கு கொஞ்சம் கல்யாண சோறு போடுவேன்னு பாத்தேன். இப்டி பண்ணிட்டியே?' என்று அழைக்கப்படாதவர்கள் மாப்பிள்ளையிடம் கேட் டார்கள். அவர் சிரிப்பை மட்டுமே பதிலாக்கி அலைவார்.

எளிமையாக நடந்துவிட்ட திருமணத்தை அறிந்த தோழர்கள், செல்ல கோபம் கொண்டார்கள். பிறகு மாவட்ட செயற்குழுக் கூட்டத்துக்கு முந்தைய நாள், கட்சியின் சார்பில் கட்சி அலுவலகத்தில் திருமண வரவேற்பு நடத்தப்பட்டது. போண்டா, வடை, காபியை செட்டியார் கடையில் சொல்லியிருந்தார்கள். அக்கம் பக்கத்து ஊரைச் சேர்ந்த கட்சிக்காரர்களும் வந்திருந்ததால் வரவேற்பு, கட்சி மாநாடு போல நடந்தது. இதற்கு முன் கட்சி சார்பில் எந்த தனிப்பட்ட விழாவும் நடந்ததில்லை என்பதால் இரண்டு வாரத் துக்கு அந்த விஷயத்தை ஊரில் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

சித்திக்கு இப்போது இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அம்மாவுக்கும் அவர்கள் வீட்டுக்கும் பேச்சுவார்த்தையில்லை. கட்சிக் கூட்டம் என்று அவர் அலைவதால் வீட்டுச் செலவுக்கு அம்மாவிடம் கேட்கத் தொடங்கினாள் சித்தி. 
'நானே பீடி சுத்திப் பிழைக்கேன். நீயும் ஏதாவது வேல பார்ப்பியா? எங்கிட்ட வந்து துட்டு கேட்டுட்டு இருக்கெ? ஒரு நா, ரெண்டு நான்னா பரவாயில்ல. தெனமும் கொடுக்க இங்க மொளைக்கவாட்டி செய்யுது? வானத்துல இருந்து கொட்டும்னு பாத்துட்டிருக்காம எதையாவது வேலைய பாரு' என்று அம்மா சொன்ன பிறகு குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டு பேச்சுவார்த்தை நின்று விட்டது. இந்த நிலையில் தான், இப்படியொரு காரியம் நடந்திருக்கிறது. 

அம்மா வேகவேகமாக நடந்தாள். பெருமாள் கோயில் தாண்டி தெருவுக்குள் நுழையும்போது அம்மாவின் கெட்டவார்த்தைகளில், ஏச்சில் ஆக்ரோஷம் அதிகமாக இருந்தன. எதிரில் போகிறவர்கள் அம்மாவை அதிசயமாகப் பார்த்துவிட்டுப் போனார்கள். கீரை விற்கும் சொர்ணத்தம்மாள், அம்மாவின் பேச்சையும் வேகத்தையும் பார்த்துவிட்டு ஓரமாக நின்று வழி விட்டாள். கணபதி மூப்பனார் பலசரக்கு கடை அருகே வந்ததும், இடப்பக்க இடுப்பில் வைத்திருந்த நார்ப்பெட்டியை வலப்பக்கத்துக்கு மாற்றினாள். கடையில் நின்றிருந்த காசி சார்வாள், மூக்கில் கொஞ்சம் பொடியைத் திணித்துவிட்டு, 'என்ன பார்வதி, யாரை திட்டிண்டு போற, வேக வேகமா?' என்றார் அம்மா விடம். நான் அவர் மாணவன். வகுப்பில் சும்மாவே மண்டையில் நச்சென்று கொட்டுவார். இந்த திட்டுக்களுக்காகவும் நான் குட்டு வாங்கலாம்.

'நான் பொண்ணா பொறந்தத நெனச்சு ஏசிட்டுப் போறென்' என்ற அம்மா, அவரைப் பார்க்காமல் நடந்தாள். 

கடையில் இருந்து கீழ்ப்பக்கம் திரும்பும் முடுக்கில் முதல் வீடு சித்தியுடையது. அவள் வீட்டைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். எனக்கு நெஞ்சுக்குள் படக் படக் என அடித்துக்கொண்டது. பயம் அதிகரித்துக் கொண் டே இருந்தது. இப்போது பிரச்னை எழும். பதிலுக்கு சித்தியும் திட்டி னால், நான் என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அம்மா ஓடிப் போய் அவளை அடிக்கவும் செய்யலாம். அவளும் அடிக்க ஆரம்பித்தால் முடுக்குக் குள் இரண்டு பேரும் குடுமிபிடி சண்டைப் போட்டுக் கொண்டிருப்பார்கள். எனக்கு வியர்த்தது. 

செக்கடிப் பள்ளிக்கூடத்துக்கு அருகில் இருக்கிற தெருவில் நடந்த அக்கா, தங்கை சண்டை, கொலையில் முடிந்த விஷயம் ஞாபகத்துக்கு வந்து போன தில் பயம் அதிகரித்திருந்தது.

இந்தச் சண்டையை எப்படி தடுப்பது என்று யோசித்துக்கொண்டே அம்மாவின் பின்னே மெதுவாக நடந்தேன். 

சித்தியின் வீட்டருகே சென்றதும் உள்ளே எட்டிப் பார்த்தேன். வீட்டுக்குள், வளர்ந்திருக்கிற கருவைக் காய்களை இரண்டு வெள்ளாடுகள் தின்று கொண்டிருந்தன. அதைத்தாண்டி படிக்கட்டின் மேல அவரும் கீழே சித்தியும் உட்கார்ந்துகொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அம்மா, இப்போது நின்று, கேவலமாகத் திட்டப்போகிறாள் என்று கண்களை மூடி, காதுகளைப் பொத்தினேன்.  அம்மா அங்கு நிற்கவே இல்லை. அவளின் கெட்டவார்த்தைப் பேச்சு நின்றிருந்தது. சைக்கிளில் சீனிக்கிழங்கு விற்றுக்கொண்டு போகும் வியாபாரியிடம், ‘என்னய்யா விலை?’ என்று கேட்டுக்கொண்டே நடந்து கொண்டிருந்தாள் அம்மா. 

-நன்றி: கதைசொல்லி.

1 comment:

துபாய் ராஜா said...

எந்த மரத்து காய் இனிக்கும். எந்த மரத்து காய் துவர்க்கும்ன்னு ஒரு தடவை இளநீ குடிச்ச அனுபவத்திலே சொல்லிடலாம். ஆனா இந்த மனுச பிறவியோட மனசு மட்டும் எப்போ என்ன நினைக்கும். எப்போ என்ன ஏச்சும், பேச்சும் நடத்தும்ன்னே கணிக்க முடியாது அண்ணாச்சி.