எப்போதும் போலத்தான், அந்த தெருவுக்குள் சிறுநீர்கழித்துக் கொண் டிருந்தேன் அன்று. யாருமற்ற இடம் என்பதால் சிறு நீர்கழிக்க வசதியாக இருந்தது. அப்போது அங்கு வந்த, எப்போதும் விளையாட்டாகப் பேசுகிற, அத்தான் முறை கொண்ட அவர், அன்று கோபமாகச் சொன்னார். 'ஏ கூறுகெட்ட நாயி. எங்க வந்து ஒண்ணுக்கிருக்க. வேற எடம் கெடக்கலயோ?' என்று. நாயி என்கிற வார்த்தையை அவர் வாயில் இருந்து எதிர்பார்க்க வில்லை. எப்போதும் நாகரீகமாகப் பேசுகிற அவரிடம், சற்றுக்கோபத்துடன், 'ஏன், என்னாச்சு இப்பம்?' என்றேன்.
'ஒங்க கோயிலுக்குள்ள போயி இப்படி செய்வியோல, வெறுவா கெட் டவனே' என்றதும் எனக்கும் கோபம் வந்தது. நானும் அவரைத் திட்ட ஒரு சிறு சண்டை, கைகலப்பாகும் நேரத்தில் மற்றவர்களால் விலக்கி விடப்பட்டது. அப் போதுதான் தெரிந்துகொண்டேன், அது அவர்க ளுக்கான கோயில் என்று. கோயில் இருப்பதற்கான அல்லது இருந்த தற்கான எந்த தடயமும் அங்கு இல்லை. செம்மண் தரை கொண்ட அந்த இடமெங்கும் எருமை சாணிகள் காய்ந்து கிடந்தன. எருக்கலைச் செடிகளும் கண்டங்கத்திரி செடிகளும் வாடா மல்லிகளும், ஊமத்தங் காய் செடிகளும் வளர்ந்து புதராகக் கிடக்கிற அந்த இடத்தை அதற்குப் பிறகுதான் நிதானமாக உள்ளே சென்று நோட்டமிட்டேன்.
எருக்கலைச் செடிகளுக்கு அடியில் கொஞ்சம் உயரமான பீ(பூ)டம் கொடுக்கப் பட்டிருப்பதற்கான ஆதார இடமாக அது தெரிந்து கொண் டிருந்தது. உடைந்த செங்கல்கள் அதில் தென்னிக் கொண்டிருந்தன. நான்கு திசைகளிலும் சில பூடங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் தெரிந்தன. மழையில் கரைந்து கரைந்து அந்த அடையாளம் முற்றிலும் மறைந்து விடா மல் இருந்தன பூடங்கள். எனக்கு ஆச்சரியம்.
ஒரு வரலாறு, ஒரு கதை, ஒரு போராட்டம், ஒரு வாழ்க்கை என் கண் முன்னே சிதைந்து கிடப்பதாக எனக்குத் தோன்றியது. சிதைந்து கிடக்கிற பூடங்களின் வழியே சாமிகளும் கொட்டுச்சத்தமும் அவர்களின் ஆங்கார ஆட்டமும் என் கண்முன் வந்து நின்றன.
பிறகு மற்றொரு நாள் ஆற்றுக்கு குளிக்கப் போகும்போது, அந்த அத்தானிடம் மன்னிப்புக் கேட்டு பேசத் தொடங்கினேன். அவர் அந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினார். ஊரில் இருக்கிற மந்திரமூர்த்திக் கோயிலுக்குப் போட்டியாக, ஊரை எதிர்த்து தனியாக அவரது அப்பா பூடம் கொடுத்ததாகவும் இரண்டு மூன்று கொடைகள் மட்டுமே அவர் கொடுத்ததாகவும் திடீரென்று அவர் இறந்து விட்டபிறகு கோயிலை கைவிட்டுவிட்டதாகவும் ஆவணி மூன்றாம் செவ்வாய் அன்று, கொடைக்குப் பதிலாக, தான் மட்டுமே அந்தக் கோயிலுக்கு சிறிய அளவில் பூசை செய்து கும்பிடுவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குப் பின்னணியில் இருந்த கதை சுவாரஸ்யமாக இருந்தது. கதையோடு, மந்திரமூர்த்தி சாமி ஒருவரல்ல. ஐவர். மந்திரத்துக்குள் அடைபட்டதால் மந்திர மூர்த்தி ஆன கதை, அந்தக் கோயிலுக்கே உரித்தான தனித்துவக் கதையாகத் தெரிந்தது. அது எனக்குள் பெரும் மயக்கத்தைத் தந்தது. ஒரு சாதரண மனி தனைப் பழி வாங்க பின் தொடர்ந்து வந்த சாமிகளின் கதை எனக்கு மாய ஆனந்தத்தைத் தந்தது.
அத்தான் சொன்ன ஆட்கள் எல்லோரும் அப்போது உயிரோடு இருந் தார்கள். அது என் கல்லூரி காலம். தொண்ணூறுகளின் தொடக்கம். அப்போதே இதை கதையாக எழுதலாம் என நினைத்துக் கொண்டிருந் தேன். அது சிறு டப்பிக்குள் ஓர் ஆற்றை அடக்குவது போல. பிறகு அவ்வப்போது எழுதி சரியாக வராமல் விட்டுவிட்டு மறந்து விட் டேன். ஒவ்வொரு முறை கோயில் கொடைக்கு ஊருக்குப் போகும் போதும் ஆவணி மூன்றாம் செவ்வாய், கொடை என்று கேள்விப்படுகிற போதும் இந்தக் கதை ஞாபகம் வந்து போகும். எழுத வேண்டும் என்று நினைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி ஆங்காங்கே கிடப்பில் கிடந்தவற்றை எடுத்து ஒரு நாள் ஒன்றாகச் சேகரித்து வைத்தேன்.
எனது 'கெடை காடு' நாவல் வந்த பிறகு அடுத்த நாவலாக இதை எழுத முடிவு செய்தேன். அந்த நாவலுக்கு கிடைத்த வரவேற்பு, இந்நாவலை விரைவாக எழுதி முடிக்கக் காரணமாக அமைந்தது. தினமும் இரவு ஒரு மணி நேரம், சில சுவாரஸ்யமான நேரங்களில் இரண்டு மணி நேரம் என்று கணக்கு வைத்துக் கொண்டே எழுதி னேன். திடீரென்று ஒரு நாள் கதை தானாக நின்றுகொண்டது. தானாக என்றால், அதற்கு மேல் என்னால் எழுத முடியவில்லை. போதும் என்ற முடிவை என் உள் மனம் எட்டி விட்டதாகவே நினை த்தேன்.
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான புனைவு இது. ஆனால் உண்மை அல்ல. இதில் நானோ, நீங்களோ எனக்கும் உங்களுக்கும் தெரியா மல் நடமாடிக் கொண்டிருக்கலாம்.
- விரைவில் வர இருக்கிற எனது 'ஆவணி/மூன்றாம் செவ்வாய்' நாவலுக்கான என்னுரை.
2 comments:
ஆடி ஏற்கனவே பிறந்தாச்சு.அப்போ அடுத்த மாசம் மூணாம் செவ்வாய்க்குள்ளே புது நாவலை எதிர்பார்க்கலாமா அண்ணாச்சி....
எதிர்பார்ப்புகளோடு வாழ்த்துக்களும்.....
மண்ணும் மண் உயிர்களும் கோயில்கள்தான். நல்ல பதிவு. நாவல் எங்கே கிடைக்கும் ஏக்நாத்?
கோ.புண்ணியவான்.
Post a Comment