Sunday, March 15, 2015

கொடை 23


கல்லூரிக்குச் சீக்கிரமே வந்திருந்தான் முப்பிடாதி. காலை ஏழு மணி இருபது நிமிடங்களுக்கு கல்லூரிக்கு வந்தவன் அவனாகத்தான் இருக் கும். வெறிச்சோடி இருந்தது வளாகம். இன்னும் யாரும் வந்தது போல் தெரியவில்லை. ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்தோம் என்று அவனுக்கே புரியவில்லை. ஜெஸிலாவிடம் முதலிலேயே சொல்லியிருந்தால், அவ ளும் சீக்கிரமே வந்திருப்பாள். பேசிக்கொண்டிருந்திருக்கலாம். அல்லது இன்னும் வெளிப்படையாகச் சொல்லாத காதலை, முதல் முதலாகச் சொல்லியிருக் கலாம் என நினைத்தான். கல்லூரியின் வாசலில் நின்று கொண்டே பார்த்தேன். உள்ளே போக மனமில்லை. வாகைமரத்தின் அருகில் மேத்ஸ் மணிகண்டன் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். இன்று சீக்கிரம் வந்திருந்தான். இப்போது அவனைச் சந்திக்கும் மன நிலை இல்லை. வெளியே வந்தான்.

டீக்கடையில் பேரூந்து ஓட்டுனர்களும் நடத்துனர்களும் பேப்பர்களை விரித்து வைத்தபடி டீக்குடித்துக் கொண்டிருந்தனர். ஏழரை மணி மதுரை பஸ், டெப் போவில் இருந்து கிளம்பி, டீக்கடை அருகே நின்றது. வண்டியில் இருந்து கொண்டே டீ கேட்டார் ஓட்டுனர். கடைக்காரச் சிறுவன் கொடுத்து விட்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.

கடையில் ஸ்பீக்கர், 'அடி ஆத்தாடி இளமனசொன்னு றெக்கைக்கட்டிப் பறக்குது சரிதானா?' என்று பாடிக்கொண்டிருந்தது. முப்பிடாதிக்குப் பிடித்த பாடல்தான். வெளியே வைக்கப்பட்டிருக்கிற இரண்டு பெரிய ஸ்பீக்கரில் இருந்து ஜல் ஜல் சத்தம் மட்டும் தனியாகப் பிரிந்து ஒலித் தது இனிமையாக இருந்தது. டிப்டாப்பிடம் இந்த மாதிரி ஸ்பீக்கர் வாங்கி வைக்கச் சொல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டான்.

பஸ் டெப்போவுக்கு மேலே நடந்தான். சாலை முழுவதும் மரங்கள் நிழ லைப் பரப்பியிருந்தன. ஒன்றிரண்டு குரங்குகள், சாலையை வரிசை யாகக் கடந்தன. மேலே நடக்க நடக்க சுகமாக இருந்தது. காற்று இனி மையாக வீசிக்கொண்டிருந்தது.

இந்த இடம் காட்டின் நுனி. இங்கிருந்துதான் மேலே காடு ஆரம்பிக்கிறது. முண்டந்துறை புலிகள் சரணாலயம் என்கிற பச்சை நிற போர் டுக்கு எதிரே, திண்டு கட்டியிருந்தார்கள். இந்த இடத்தில்தான் பேரூந் துகள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் வளைந்து திரும்ப வேண்டும். கீழிருந்து மேலேறும் பேரூந்துகள் கியர் மாத்தி, மெதுவாக முக்கிக் கொண்டு ஏறும்.

அந்தத் திண்டில் உட்கார்ந்தான் முப்பிடாதி. அருகில் வளர்ந்து நிற்கிற புங்கை மரங்களும் வாகை மரங்களும் அந்த இடத்தை அமைதியாக்கிக் கொண் டிருந்தன. அகஸ்தியர் அருவியில் குளித்துவிட்டு வேட்டியைக் காயப் போட்டவாறே சிலர் இறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சில் மலையாள வாடை தெரிந்தது. இவர்கள் நேர் சாலையின் வழியே வருகிறார்கள். பெரும்பாலும் அகஸ்தியர் அருவிக்கு நடந்து செல்பவர்கள் இந்த வழியாக வருவதில்லை. அவர்கள் பாபநாசம் கோயிலுக்குப் பின்பக்கமாகக் காட்டுக்குள் நடந்து மலையில் ஏறிச் செல்வார்கள். ஒத்தையடிப் பாதை இருக்கிறது. அந்த வழியிலேயே இறங்கவும் செய்வார்கள்.

முப்பிடாதியின் மனம் முழுவதும் ஜெஸிலா மேரி நிறைந்திருந்தாள். அன்று கொடுத்த முத்தம் அவனை ஏதோ செய்துகொண்டிருந்தது. அவள், அவனைத் தள்ளிவிட்டு ஓடியது அவனுக்கு ஏதோவாகி இருந்தது. தவறாக ஏதும் செய்துவிட்டோமோ என்று நினைத்தான். முத்தம் தவறில்லை. அதுவும் கன்னத்தில் கொடுக்கப்படுகிற முத்தங்கள், குற்ற வரையறைக்குள் வராது. முத்தங்கள் குற்றமெனில் மொத்தமும் குற்றம்தான். ஆஹா, முப்பிடாதி என்னாச்சு உனக்கு? என்று அவனையே கேட்டுக்கொண்டான். முத்தம் கூட கொடுக்கவில்லை என்றால் பிறகு அது என்ன காதல் எனத் தோன்றியது. அவள் முகத்தை அடிக்கடிப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவள் அருகிலேயே இருந்து கொண்டு அல்லது மடியில் படுத்துக்கொண்டு எதையாவது பேசிக் கொண்டிருக்கலாம். எதையாவது என்றால் எதை? பேச அதிக விஷயம் இருப்பதாகவும் எப்போது பேசப்போகிறோம் எனவும் ஆவல் அலை கழிக்கிறது. ஆனால், அவள் அருகில் வந்து நின்ற பிறகு மொத்தமும் மறந்துவிடுகிறது சுத்தமாக. எப்படி? மனம் காதல் ஆசைகளில் மிதந்தது. கட்டுப்பாடற்ற ஆசை, கனவுகளை விரிக்கிறது. விரிந்து விரிந்து எங்கோ அலைத்துச் செல்கிறது.

காணிக்குடியிருப்பில் இருந்து கல்லூரிக்கு வரும் வனராஜன் புதிதாக வாங்கியிருக்கிற கவாசகி பைக்கில் கைக்காட்டிக்கொண்டே போனான். பைக்கில் போகும் ஆசை அவனுக்கும் இருந்தது. கண்ணாடி மாட்டிக் கொண்டு ஸ்டைலாக அமர்ந்து ஜெஸிலா மேரியின் பார்வையில் படும் படி ஓட்டிக் கொண்டு செல்ல அவனுக்கும் இருந்தது ஆசை. அது ஆசையாக மட்டுமே இருந்துவிட்டது.

திண்டில் இருந்து இறங்கினான். இதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்க வில்லை. கல்லூரிக்குப் போக முடிவு செய்து நடந்தான். அப்போதுதான் ஒரு பஸ், டெப்போவின் அருகே வந்து நின்றது. மாணவிகள் சிலர் கலர் கலர் தாவணிகளில் இறங்கினர். அவர்களை எதேச்சையாகப் பார்த்தான் முப்பிடாதி. அந்தப் பெண்களில் ஒருத்தியாக ஜெஸிலா மேரியும் இருந்தாள்.

இவனுக்கு உடல் சிலிர்த்தது. நினைத்ததும் வந்துவிட்டாள் எப்படி? இது தான் காதலின் சக்தி. சில விஷயங்கள் நம்மை மீறியும் நடக்கின்றன. நான் சீக்கிரம் வந்தது அவளின் அழ்மனதுக்குக் கேட்டிருக்கும். அது காதல் மனம். காதலனின் உள்ளுணர்வை காதலியும் காதலியின் அக உணர்வை காதலனும் தூர தூர இருந்தே கண்டு கொள்ளும் புது உணர் வு இது என்று நினைத்தான்.

அவள் இவனைப் பார்க்கவில்லை. தன் இருப்பை அவளிடம் காண்பிக்க வேண்டும் என்று வேகவேகமாக நடந்தான். அவள் முன்னே சென்று கொண்டிருந்தாள். கேட் வாசலில் தாண்டியதும் அவள் கண்டிப்பாகத் திரும்பிப் பார்ப்பாள் என அவனது உள்ளுணர்வு சொல்லியது. அவன் அவளின் அருகே வந்துவிடுவதற்காக வேக வேகமாக நடந்துகொண் டிருந்தான். அவளைப் பார்த்துக்கொண்டே வந்தான். அவள் கேட்டின் அருகே சென்றாள். கேட்டைத் தாண்டினாள். இப்போது திரும்பிப் பார்ப் பாள் என நினைத்தான். ஆச்சரியமாக இருந்தது. அவள் தனது ஒரு ஜடையைப் பின்பக்கம் போட்டவாறே திரும்பிப் பார்த்தாள். முப்பிடாதி சிரித்தான். அவள் புருவங்களை உயர்த்தி ஆச்சரியப் பட்டுச் சிரித்தாள்.  அந்தச் சிரிப்புக்கு, 'ஏன் இவ்வளவு சீக்கிரம்' என் பதாக இருந் தது.

இப்போது அவள் உடன் வந்தவர்களை முன்னுக்கு அனுப்பிவிட்டு செருப்பை சரிபார்ப்பது போல நின்றாள். இவன் அவளருகே போனான். எப்போதும் அவ ளிடம் இருந்து வருகிற மனதை மயக்கும் வாசனை இப்போதும் வந்து கொண் டிருந்தது. ரெட்டை ஜடைக்கு மேலே வைத் திருக்கிற மல்லிகைப் பூவின் வாசமும் கிறக்கம் தந்தது. அவன் அவ ளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

'என்ன இவ்ளவு சீக்கிரம்?'

சுற்றும் முற்றும் பார்த்தான் முப்பிடாதி. பின்னால் யாருமில்லை.

'மனசு கஷ்டமா இருந்தது. ஒங்கிட்ட சாரி கேக்கலாம்னு'

'எதுக்கு?'

'அன்னைக்கு சேர்வலாறுல...'

'அங்கெ என்ன?'

'கிஸ்...'

சிரித்தாள் அவள். பிறகு 'அதுக்குப் பேரு கிஸ்சா?' என்று கேட்டாள்.

'ம்ம்'

'லூசு, இது ஒரு வெஷயம்னு சாரி கேக்க வந்தீங்களாங்கும்?'

'இல்ல... அது' என்று முப்பிடாதி சொல்லவும், 'போதும் போதும் இதே ரொம்ப ஓவரா இருக்கு. போய் வேலைய பாருங்க. எனக்கு பிராக் டிக்கல் இருக்கு' என்று சொல்லிவிட்டுப் போனாள் ஜெஸிலா மேரி. அவன் அவளைப் பார்த்துக்கொண்டே பின் தொடர்ந்தான். அவளின் வகுப்புக்குத் திரும்பும்போது, இவனைப் பார்த்துச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு இன்னும் தேவையாக இருந்தது.

வகுப்பில் யாருமில்லை. பெஞ்சில் நோட்டை வைத்துவிட்டு வெளியே வந்தான். லைப்ரரி கூட இன்னும் திறக்கவில்லை. வேப்பரமரத்தில் இருந்து வேப்பம் பழங்கள் விழுந்துகிடந்தன. உச்சி, நான்கைந்து  பழங்களை எடுத்து கையில் வைத்துக்கொண்டு ருசி பார்த்தான். சுவை யாக இருந்ததை அடுத்து மற்றவற்றை உதப்பி கொட்டையைத் துப்பி னான். பிறகு இப்படித் தின்பதை யாரும் பார்க்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்துக்கொண்டான். யாருமில்லை என்பதால் இன்னும் இரண்டு பழங்களை எடுத்துத் தின்றான். பிறகு ஜெஸிலாவின் வகுப்புக்கு கீழே போய் நின்றான். அவள் ஜன்னலோரம் அவளது தோழி களுடன் இருந்தவாறு ஏதோ நோட்டைக் காண்பித்துப் பேசிக் கொண் டிருந்தாள். இவன் அவள் பார்க்கிறாளா என்று கண்டும் காணாதது போல நின்றுகொண்டிருந்தான்.

ஜெஸிலாவின் வகுப்புத் தோழி ஒருத்தி, அவனைக் கை காட்டி ஏதோ சொன்னாள். எல்லாரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். அவனுக்கு ஏதோ போல் தோன்ற, கிளம்பி வகுப்புக்கு வந்தான்.

மூன்றாவது வகுப்பு நடந்து கொண்டிருந்தது. மனம் அதில் ஈடுபடவில் லை. அருகில், எதிரில், தூரத்தில், போர்டில் என எங்கெங்கும் ஜெஸிலா மேரி நின்று சிரித்துக் கொண்டிருந்தாள். கண்களைத் திறந்து பேராசி ரியர் சொல்வதைக் கேட்பது போல் கனவுலகில் சஞ்சரித்துக் கொண் டிருந்தான் அவன். நிலைகொள்ளாமல் ஏதோ தடுமாறிக் கொண் டிருப் பதை பேராசிரியர் கவனித்துக்கொண்டுதான் இருந்தார். சிறிது நேரத் துக்குப் பிறகு, 'என்ன முப்பிடாதி. ஒடம்புக்கு ஏதும் சொவமில்லை யோ?' என்று கேட்டார்.

'இல்ல சார்'

'பாத்தா ஒரு மாதிரி தெரியுதே'

'நல்லாதான் இருக்கென் சார்'

'செரி செரி, கவனத்தை இங்க வையு' என்று சொல்லிவிட்டு பாடத் துக்குள் போனார். அவன் கனவுக்குள் போனான்.

அங்கு ஜெஸிலா மேரி, தேவதைகளின் உடை அணிந்து அந்தரத்தில் அமர்ந்திருந்தாள். தேவதைகளை காதலிப்பவர்களுக்கான ஆடை என்ன என்பது தெரியவில்லை. தெரிந்திருந்தால் முப்பிடாதி அந்த ஆடையை அணிந்திருப்பான். அங்கு காதலர்களுக்கான கருத்தரங்கம். அந்தக் கூட்டத்துக்கு வெளியே, 'தேவதைகளுக்கு மட்டுமே அழகு அர்ப்பணிக் கப்படுகிறது. அவர்கள் மட்டும் காதலிக்கப்படுகிறார்கள். இது கடவுளின் சேட்டை. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்' என்கிற போர்டுடன் நான்கைந்து பெண்கள் கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடவுளைக் கண்டிக்கிற அந்தப் பெண்களிடம் பேசுகிறான் முப்பிடாதி. எல்லாருமே அழகானவர்கள்தான். யாராவது ஒருத்தரின் பார்வையில் யாராவது ஒருத்தர் அழகாகவே பார்க்கப்படுகிறார்கள். அதைத்தாண்டி காதலுக்கும் அழக்குக்கும் சம்பந்தமில்லை, காதலுக்கும் கடவுளுக்கும் சமபந்தமில்லை என்கிற முப்பிடாதி, தான் எப்படி இப்படி பேச ஆரம்பித்தேன் என்று தன்னையே கேட்டுக் கொள்கிறான்.

பேராசிரியர் முப்பிடாதியின் முதுகை தட்டாதிருந்தால் அந்த்க் கனவு இன்னும் விரிந்திருக்கும். ஒரு காதல் உலகில் பிரமாதமான பேச் சாளராக மாறியிருப்பான் முப்பிடாதி.

'என்னய்யா பகல் தூக்கமா. போய் மூஞ்சை கழுவிட்டு வா. இல்லனா டீக் குடிச்சுட்டு வா' என்றார் பேராசிரியர். அவர் கறாரானவர். 'வெளியே போ' என்பதை நாகரீகமாகச் சொல்கிறார் எனப் புரிந்து கொண்டான் முப்பிடாதி. அவன் வெளியே வரவும் குத்தாலம், 'எனக்கும் டீ வேணும் சார்' என்று சொல்லிவிட்டு வந்தான்.

இரண்டு பேரும் ஹாஸ்டலுக்குப் போனார்கள். மூன்றாமாண்டு மாணவர்கள் சிலர், அறையில் இருப்பது தெரிந்தது. ஒருவனின் அறைக்குச் சென்று, இரண்டு துண்டுகளை வாங்கிக்கொண்டு வந்தான் குத்தாலம். பாபநாசம் கோயில் வாசல் முன் கூட்டம் அதிகமாக இருந்தது. வேன் களில் இருந்து வந்து குளித்துக்கொண்டிருந்தார்கள். கூட்டம் கடந்து கோயிலின் தென்பக்கம் நடந்தார்கள். துணிகளை மூட்டைக் கட்டி வந்து பெண்கள் துவைத்துக் கொண் டிருந்தார்கள். தெற்கே, உள்ளே போகப் போக கூட்டம் அதிகமில்லை. தண்ணீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந் தது. பேண்ட் சட்டையை அவிழ்த்து விட்டு ஜட் டியுடன் தண்ணீருக்குள் விழுந்தார்கள் இரண்டு பேரும். கண்கள் சிவக்கக் குளித்தார்கள். கால்களைக் கடிக்கும் மீன்களைப் பிடித்து விளையாடினார்கள்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அங்கு குளிக்க வந்த இரண்டு பேசிக் கொண் டதைப் பார்த்து திடுக்கிட்டார்கள்.

'ச்சே, ஏண்டா பாத்தம்னு இருக்கு'

'இன்னும் கண்ணுக்குள்ளே நிய்க்குடே'

'இன்னைக்குத் தூங்க முடியாது பாத்துக்கெ'

'அழகா இருந்துச்சு'

-குத்தாலம்தான் கேட்டான்.

'என்ன நடந்தது அண்ணாச்சி?"

'காலேஜ் கேட் வாசல்ல ஆக்சிடென்ட்'

'பஸ் மோதி ரெண்டு பிள்ளேலுக்கு சரியான அடி. ரோடு பூரா ரெத்தம்'

'ஆளுவோ அவுட்டா?'

'தெரியல. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயிருக்காவோ'

அவசரம் அவசரமாக எழுந்து தலைத்துவட்டிவிட்டு வேகமாக வந் தார்கள் கல்லூரிக்கு. முப்பிடாதி நினைத்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. அதில் ஜெஸிலா மேரி இல்லை என்பது அவனுக்கு ஆசுவாசத்தைத் தந்தது.

8 comments:

Purushothaman said...

Read your kodai all episodes in one day and eagerly waiting for further ones.

Really liked it and enjoying the native language of them.

Browsed all the posts in your blog. Regd Kaadu, i could not find all episodes of it . Did you stop it, since it was a book ?

Thanks for sharing.

Unknown said...

கதை எடுத்து சொன்ன விதம் மிக அருமை...உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி...

மலர்
https://play.google.com/store/apps/details?id=com.aotsinc.app.android.wayofcross

துபாய் ராஜா said...

ஆத்து தண்ணி இழுக்குதாப்புல அழகா போன கதையில கடைசியா கெதக்குன்னு ஆக்கிப்புட்டியளே... நல்லவேளை ஜெஸிலா மேரியை கொல்லாம வுட்டியளே... அதுவரை சந்தோசம்...

பாபநாசம் கோயில்,ஆறு, காலேஜ்,
பஸ் டெப்போ, அகஸ்தியர் ஃபால்ஸ் போற ரோடுன்னு பைசா செலவில்லாம நம்ம ஏரியா முழுக்க சுத்திக் காட்டினதுக்கு ரொம்ப நன்றி அண்ணாச்சி...

நேராக பார்க்கிற மாதிரியே வார்த்தைகளின் வர்ணனையில் காட்சிகள் கண்முன்...

வாழ்த்துக்கள்.

ஆடுமாடு said...

புருஷோத்தமன் சார் நன்றி.

'காடு' முழுவதுமாக இங்கு எழுதவில்லை. அதுதான் 'கெடை காடு' நாவலாக வந்திருக்கிறது. 'கொடை'யையும் இத்தோடு முடிக்க இருக்கிறேன். கிளைமாக்ஸை புத்தகத்தில் எக்ஸ்குளூசிவாக வைக்க இருக்கிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஆடுமாடு said...

/ஆத்து தண்ணி இழுக்குதாப்புல அழகா போன கதையில கடைசியா கெதக்குன்னு ஆக்கிப்புட்டியளே... நல்லவேளை ஜெஸிலா மேரியை கொல்லாம வுட்டியளே... அதுவரை சந்தோசம்...//

ராசா சார், பாவம் அந்தப் புள்ளைய போட்டு ஏம் கொல்லுவானேன். அதாம் விட்டாச்சு. நன்றி

ஆடுமாடு said...

/ஆத்து தண்ணி இழுக்குதாப்புல அழகா போன கதையில கடைசியா கெதக்குன்னு ஆக்கிப்புட்டியளே... நல்லவேளை ஜெஸிலா மேரியை கொல்லாம வுட்டியளே... அதுவரை சந்தோசம்...//

ராசா சார், பாவம் அந்தப் புள்ளைய போட்டு ஏம் கொல்லுவானேன். அதாம் விட்டாச்சு. நன்றி

Anonymous said...

It is really nice to read all of your posts. I have lots of memories of Dana and papanasam as i used to spend all of my summer there. My family are all teachers and in st marrys school in v.k puram

How can i contact you. Do u have an email or phone number to reach you. I now live in Michigan in the states

Augustine

ஆடுமாடு said...

Augustine sir this s my mail Id . egjira@gmail.com. mail me