Sunday, March 8, 2015

கொடை 22


முப்பிடாதி பெயருக்கு கொஞ்சம் சாப்பிட்டான். புளித்தண்ணியும் காணத் துவையலும். அவனுக்குப் பிடித்தவை என்றாலும் இப்போது முழுதாகச் சாப் பிட முடியாது, கூடாது என நினைத்தான். ஒரு கையால் சிம்னி விளக்கில் த்ரி யை கொஞ்சம் ஏற்றி வைத்தான். பளீச் சென வெளிச்சம் வந்தது. சாப்பிட்டுக் கொண்டே ஆண்டாளிடம், ராத்திரி சங்காபீசில் படுத்துக்கொள்வதாகச் சொன் னான். 

'ஏம். சங்காபீஸ்ல, ராத்திரி என்னடெ?"

'ஒண்ணுமில்ல, டிப்டாப்பு, ராத்திரி பூரா வேலை இருக்குன்னாம்.  தொணைக்கு இருந்துட்டு சங்காபீஸ்ல படுத்துக்கிடுதம்'

'அவென் காரியத்துக்கு முழிக்காம். நீ எதுக்குல? தூங்குன புடுக்குக்கு தொண புடுக்கா?'

'நீ சும்மாரிழா'

பஸ்-ஸ்டான்ட் அருகே யாரோ குடித்துவிட்டு கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருந்தார்கள். சத்தம் கேட்டு வெளியே வந்து கிழக்கே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தாள் ஆண்டாள். எதிர்வீட்டு ராணியும் ஆவுடையும் சத்தம் கேட்டு வந்தார்கள்.

'செவனு பாண்டி மவம் சத்தம் மாரில கேக்கு'

'அவெந்தாம்'

'அந்தப் பயலா?'

'ஆமா, மூதி'

'யாரை ஏசுதாம்?'

'முளைக்குதுக்கு முன்னாலயே குடிக்க பழவிருதுவோல்லா'

'யாரை தாயீ, இப்டி ஏசுதாம்?'

'குடிச்சிருக்கது ஊருக்குத் தெரியணும்லா, அதான் இந்தா வரத்து வருது'

'அவன் ஆத்தா உடமாட்டாளே? செவுட்டுலயே போட்டு இழுத்திட்டு போயி ருவாள?'

'தென்காசியில, துட்டி வீடுன்னு போயிருக்கா. அதுக்குள்ள சண்டியரு எங்கெ யோ போயி குடிச்சுட்டு வந்துட்டாரு'

'நல்லா பேசுதாம், எங்கயிருந்துதான் படிக்காணுவளோ இந்த வார்த் தையள' என்று சொல்லிவிட்டு ஆண்டாள் வீட்டுக்குள் வந்தாள்.

டிப்டாப், கடையின் வெளியில் வெளிச்சம் தந்துகொண்டிருந்த குண்டு பல்பை அணைத்துவிட்டு முப்பிடாதிக்காகக் காத்திருந்தான். ராமசாமி சைக்கிளில் வந்து இறங்கினான். சைக்கிளில் தொங்கிய பைக்குள், மட்டன் சுக்காவும் அவிழ்த்த மொச்சைக் கடலையும். பரோட்டா வாங்கி வருவதாகச் சொல்லி யிருந்த முப்பிடாதியும் வந்து சேர்ந்த போது நன்றாக இருட்டியிருந்தது. அக்கம் பக்கத்து வீடுகளில் அரவம் கேட்கவில்லை. தூங்கி இருப்பார்கள். யாரோ ஒருவரின் வீட்டில் இருந்து ரேடியோவில் 'எங்கே நிம்மதி' என்ற பாடல் கேட்டுக் கொண் டிருந்தது. அது கட்டமுண்டு வீடாகவும் இருக்கலாம். கடைக்குள் பாயை விரித்தான் டிப்டாப். அம்பாசமுத்திரத்தில் இருந்து வாங்கி வந் திருந்த் பிராந்தி பாட்டிலை நடுவில் வைத்தான்.

கடையின் கதவை முழுவதும் மூடாமல் கொஞ்சம் திறந்திருப்பது போல வைத்துக்கொண்டான். முழுவதும் அடைத்தால் காற்று வராது. அதுமட்டு மல்லாமல் திடீரென்று டிப்டாப்பின் அம்மா ஏதாவது புலம்பிக் கொண்டு கடையை வந்துப் பார்ப்பாள். குடிப்பது தெரிந்தால் ஊருக்கே கேட்பது போல ஏசுவாள்.

மூன்று கிளாசில் பிராந்தியை ஊற்றித், தண்ணீர் சேர்த்தான் டிப்டாப். குடிப்பதற்கு முன் கேட்டான் முப்பிடாதி. 'செரி என்னமோ வெஷய ம்னியே, அத சொல்லு?' என்று. 'மொதல்ல குடிங்க. பெறவு சொல்லுதென்' என்ற டிப்டாப், வாயில் வைத்து ஒரே இழு இழுத்தான். பிறகு தலையை உதறிவிட்டு மொச்சையை அள்ளி வாயில் போட்டான். அப்படியே ராமசாமியும் இழுக்க, முப்பிடாதிக்கு ஒரே மூச்சில் குடிக்க முடியவில்லை. பாதியைக் குடித்துவிட்டு பாதியை வைத்தான். நாக்கு கசந்து கிடந்தது. பரோட்டாவை பிய்த்துப் போட்டு விட்டு சால்னாவை ஊற்றிக் குழைத்தான். பிறகு ஒழுகும் சால்னா வோடு வாயில் போட்டான். கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. 

வியர்த்து வடிந்தது டிப்டாப்புக்கு. கிளாசில் திரும்பவும் ஊற்றி மடக் கென குடித்தான். இப்போது மட்டன் சுக்காவை எடுத்து நாக்கில் வைத் தான். காரம் அதிகமாகவே இருந்தது. ராமசாமி, அடுத்த கிளாசுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டும் என்றான். முப்பிடாதி முதல் கிளாசையே முடிக்கவில்லை.
சிறிது நேரத்துக்குப் பிறகு டிப்டாப்புக்கு கொஞ்சம் போதை ஏறியது. சுவரில் தலையைச் சாய்த்துக்கொண்டான்.

'தேவடியாவுள்ள ஏமாத்திட்டு போயிட்டாலெ'

'கட்டமுண்டா?'

'ச்சீ, கோம்பை. கட்டமுண்டு எப்டில இதுக்குள்ள வந்தா? எனக்கு ஒரு எழவும் தெரியமாட்டேங்கு?'

'பின்ன, யாரு?'

'எனக்கு இதெ சொல்லு? யாரு, கட்டமுண்ட இதுல இழுத்துவிட்டா?'

'சொடலைதாம்னு நெனக்கென்?'

'செரிக்குள்ள அவங் கொதவளைய கடிக்கணும்'

'செரி விடு, எவான்னு சொல்லு? 

'மகேஸு'

'நெனச்சேன், நெனச்சேன். செவத்த தோலா இருக்குன்னு நாக்கைத் தொங்க போட்டுட்டு அவா குண்டிக்கு பின்னால போனல்லா, அப்பவே தெரியும்?'

'என்ன மயித்த தெரியும்?'

'ஒங்கிட்ட ஆட்டைய போட்டுருவான்னு'

'மயித்த கண்ட?' என்ற டிப்டாப், சால்னாவில் நனைந்த பரோட்டாவை அள்ளி தின்றான். பிறகு இன்னொரு கிளாஸ் சரக்கை ஊற்றி வேக மாகக் குடித்தான். அப்படியே சுவரில் தலையை சாய்த்து கண்களை மூடினான்.

முப்பிடாதி, பண விஷயத்தில் மகேஸ்வரியை எதிர்பார்க்கவில்லை. எப்போ தும் ஒன்றாகச் சிரித்துப் பேசிக்கொண்டு அவர்கள் இருப்பதும் கடையில் அவள் உட்கார்ந்திருக்க, ரேடியோவில் போடும் பாடலைக் கேட்டு விட்டு அதற்கு அவள் ஒரு விளக்கம் சொல்ல, இவன் ஒரு விளக்கம் சொல்வதுமாக இருந்த காட்சிகள் கண்முன் வந்து போயின. அவள் ஊருக்கு வந்த புதிதில் ஒரு கூட்டம் அவளைப் பார்க்க வென்றே அலையும். தெருவுக்குள் எப்போதும், அழகாகச் சுத்தம் செய்யப்பட்ட ரப்பர் செருப்பை அணிந்து வருபவள், அவள் மட்டும் தான். அந்தச் செருப்பு சத்தமே அவள் வருகையைத் தெரியபடுத்தும். விக்கிரமசிங்கபுரம் மில்லில் வேலைபார்க்கும் புல்லட் மணிதான் அவள் மேல் ஒரு தலையாகக் காதல் கொண்டு அலைந்தான். அவள் எங்கெங்கு சென் றாலும் அவன் பின் தொடர்ந்தான். ஒரு நாள் பெரிய வாய்க்கால் பாலத்தில் அவளை மறித்து அவன் ஏதோ சொல்ல, அவள் ஏதோ திட்டியதாகச் சொல் வார்கள். பிறகுதான் புல்லட் மணி அவளை பின்தொடர்வதில்லையாம்.

ஒரு லீவு நாளில் சுப்பையா தோப்பில் மாங்காய் பறித்துவிட்டு வந்த போது வயல் வரப்பில் எதிரில் வந்தார்கள் டிப்டாப்பும் மகேஸும். நடு மத்தியான குளியலுக்கு ஆற்றுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். மாங் காய் சாக்கை இறக்கி வைத்துவிட்டு முப்பிடாதி கேட்டான், 'பேய்வோ குளிக்குத நேரத்துல ரெண்டு பேரும் குளிக்கப் போறேளே, எவனாது பாத்தாம்னா என்ன நெனப் பாம்? புதுசா கல்யாணம் ஆன புருஷம் பொண்டாட்டி மாதிரி... என்னத்த சொல் லன்னு தெரியல?'.

'தம்பி போதும்பா. ரொம்ப கவலப்படாத?' என்றாள் மகேஸ். டிப்டாப், 'எங்கள பத்தி நீங்க ஏம்ல கவலப்படுதியோ' என்று சொல்லிவிட்டு மாங்காய் கேட்டான். ஒரு மாங்காயைக் கொடுத்தான் முப்பிடாதி. அவள் ஒரு கடியும் அவன் ஒரு கடியுமாக அவர்கள் கடித்துக்கொண்டு சென்றது நினைவுக்கு வந்தது. 

தனக்கு கூட அவள் மேல் சந்தேகம் வராதது ஆச்சரியம்தான் என்று நினைத் தான் முப்பிடாதி. லேசாக போதை ஏறுவது போல தெரிந்தது ராமசாமிக்கு. அப்படியே டிப்டாப்பின் மூஞ்சைப் பார்த்து உட்கார்ந்தான்.

'மொதல்ல பிரண்ட்ஷிப்புன்னுதாம்ல நெனச்சேன். கேரளாவுல இருந்து இந்த ஊருக்கு வந்திருக்கா. பம்பாய்லலாம் இப்டி ஆம்பளயும் பொம் பளயும் நட்பா இருப்பாவோ, பாத்துக்கோ. அதே மாதிரிதான் பழகுதா ன்னு நெனச்சேன். அவ்வோ குடும்பமே நல்ல பழவிட்டு இருந்துச்சு' என்று சொல்லிவிட்டு இன்னும் கொஞ்சம் மொச்சையை எடுத்து வாயில் போட்டான்.

'ஒரு நாளு கூட, எம்மனசுல அவா மேல தப்பான என்னமே வரலைன் னா பாரேன். நா அப்டி இருந்தேன் மாப்ள. அவளும் அப்டிதான் இருந் திருப்பா. திடீர்னு ஒரு நாளு, 'தாய்மாமா ரொம்ப சீரியசா இருக்காரு. கேரளாவுல ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கு. அவங்க ரொம்ப கஷ்டம். நாங்கதான் பாக்கணும். அவசரம். ரெண்டு மாசத்துல திரும்பித் தந்திட றேன்னு நாப்ப தாயிரம் ரூவா கேட்டா. அவ்வளவு ரூவா எங்கிட்ட இல்லையேன்னு சொன் னேன். 'நா கேட்டா இந்த ஊர்ல தரமாட்டாங்க, நீ யார்ட்டயாது வாங்கிக் கொடு'ன்னா. அவா சொல்லுதது சரிதாம்னு நெனச்சு மொதல்ல முத்தையாட்ட நாப்பதாயிரம் வாங்கி கொடுத் தேன். பெறவு, வேறொரு ஆள்ட்ட இருவதா யிரம் இருவதாயிரமா ரெண்டு தரம் வாங்கிக் கொடுத்தேன். ரெண்டு மாசம் தாண்டுனதும் கடன்காரனுவோ நெருக்க ஆரம்பிச்சுடானுவோ. இவாட்ட கேட் டேன். 'ஐயையோ மறந்தே போயிட்டேன். பத்து நாள்ல தாரேன்னு சொன்னா. சரின்னு விட்டுட்டேன். பெறவு, நாலு ஜாக்கெட்டு தச்சுதான்னு சொன்னா. கொடுத்தேன். தையக்கூலி கொடுத்தா. வேண்டாம்னுட்டேன். சரி ன்னு பார்த்தா, அன்னைக்கு மறுநாள்ல இருந்தே ஆளைக் காணலை. வீடு பூட்டிக் கெடக்கு. அக்கம் பக்கத்துல யாருக்கும் தெரியல. ஒரு நா ரெண்டு நான்னா, வெளியூருக்கு போயிருக்காவோ, திரும்பி வந்துருவாவோன்னு நினைக் கலாம். போயி, பத்து நாளைக்கு மேல ஆச்சு' என்று சொல்லிவிட்டு சுவரில் சாய்ந்தான் டிப்டாப்.

'ச்சீ . எவள நம்பனும் எவள நம்பக்கூடாதுன்னு தெரியலயே?'

'நீ கொடுத்த தொகைக்கு, கீழபத்துல பிச்சையா பிள்ளை தோப்பையும் அந்த நாலு மரக்கா வெதப்பாடையும் வாங்கிருக்கலாம்'

'இதுக்கு, கரையாரு கீரையாறுன்னு அவள கூட்டுட்டு போனவன் அங்க வச்சு கதையவாவது முடிச்சியா? இல்ல பொத்துனாப்ல அனுப் பிட்டியா?'

'கதையன்னா?'

'சோலி பாத்திருக்கலாம். கொஞ்சம் மனசாது ஆறும்லா'

'எங்கூட்டாளியா இருந்தம்னா, மொதல்ல சோலிய முடிச்சுட்டுதாம் மத்தது' என்றான் ராமசாமி. அவனுக்கு இரண்டாவது கிளாசிலேயே போதை ஏறிவிட்டது.

'இப்டி பண்ணுவான்னு தெரியாம போயிட்டே' என்று திருப்பித் திருப்பி சொல்லிக்கொண்டிருந்தான் டிப்டாப். 

'தேவடியா முண்ட இனும எங்ஙன என் கண்ணுல பட்டாலும் அங்ஙனயே சேலைய உருவுதனா, இல்லையான்னு பாரு'

'இந்த மாதிரி பொம்பளைலுவோலுக்குலாம் சேலய உருவுதது ஒரு வெஷய மா? நீ கூப்டிருந்தா கூட படுக்க வந்திருப்பா' என்று சொல்லி விட்டு ராமசாமி சிரித்தான்.

''ஒன்னய, நெனச்சா ஒரு பக்கம் சிரிப்பாணியா வருது. இன்னொரு பக்கம் கோவமா வருது' என்ற முப்பிடாதி, இப்போதுதான் இரண்டாம் கிளாசுக்கு வந் தான். மொச்சைக்கொட்டையும் பரோட்டாவும் பாதி காலியாகி இருந்தது. 
'என்ன சிரிப்பாணில?'

'பெறவு, அவா மேல கைக்கூட படாம யோக்கியமா இருந்திருக்கெ. அவா என்ன நெனச்சிருப்பான்னா, 'மூதி, அநியாயத்துக்கு நல்லவனா இருக்காம். சேதாரம் இல்லாம ஆட்டைய போட்டுரலாம்'னு. சேதாரம் ஆனாலும் அவளுக் கு எந்திரிச்சு கழுவிட்டு போற வெஷயம்தானெ. ஆனா, நீ அதை கூட பண் ணல?'

'லேய். மனசு நொந்து போய் கெடக்கென். ஏதாது ஆறுதல் சொல்லு வியோ ன்னு கூட்டிட்டு வந்து தண்ணியடிச்சா, என் பிராந்தியவே குடிச்சுட்டு என்னை யவே ஏசுவேலோல?'

'செரி, இப்பம் அவெள எங்க புடிக்கலாம்?'

'அதுக்குத்தாம்ல கூட்டிட்டு வந்திருக்கென், ஒங்கள. ஏதாது சொல் லுங்க?'
'நாங்க என்ன சொல்ல? 

;செரி, அவளுக்கு கேரளால ஊரு எங்கன்னாது விசாரிச்சு வச்சிருக்கியா?
'பொனலூர் பக்கம்னா?

'பொனலூர்ல நம்ம பூக்காரரு மவன் வேலை பாக்காம். அவெங்கிட்ட கேட் டாலும் அவென் எங்கன்னு போயி அவெள தேடுவாம்?'

'ச்சே. அவென்ட்டலாம் வெஷயம் போச்சுன்னா, ஊருக்கே தெரிஞ்சு போயிரும் பாத்துக்கெ. பெறவு என்னையதாம் காறிட்டுத் துப்புவானுவோ?'

'இதெ எத்தன நாளைக்குப் பொத்தி வைக்க முடியும்? இன்னைக்கு இல்லன் னாலும் கண்டிப்பா வெவாரம் வெளிய தெரியாம இருக்காது பாத்துக்கெ'

'எங்க ஆச்சிக்குள்ள சங்கிலி நாலஞ்சு, அரங்கூட்டுல இருக்கு. இதுக்கு மேல கெழவிக்கு அது எதுக்கு, சாவப்போற வயசுல? அதும் சும்மாதாம் கெடக்கு. எடுத்திரலாம்னு பார்க்கென். வேற வழியில்ல. அத வச்சுதான் கடன அடைக் கணும்' என்ற டிப்டாப் இன்னும் குடித்தான். அவன் வாய் உளறத் தொடங்கியது. வெளியில் நாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன. சுக்கு வீட்டு தொழுவத்தில் மாடுகள் சண்டையிடும் சத்தம் கேட்டது.

ஒரு திருட்டுக்கு உடந்தையாகப் போகிறோமே என்கிற வருத்தம் முப்பிடா திக்கு இருந்தாலும் அதற்கு மேல் அவனுக்கு என்ன சொல்லவென்று தெரிய வில்லை.

'தேவுடியாவுள்ள அவளெ...' என்று நாக்கைத் துறுத்தி எதிரில் இருந்த ஸ்டூலை மிதித்தான் டிப்டாப். அது பொத்தென்று விழுந்து சத்தம் எழுப்பியது. அவன் கத்தத் தொடங்கினான்.

'அவள... பாருலெ' என்று இன்னுமொரு முறை கத்தும் முன் அவன் வாயைப் பொத்தினான் ராமசாமி.

'சும்மாரு மயிரு. சுக்கு வீட்டுல யாரும் தூங்குன மாதிரி தெரியல. சிம்னி வெளக்கு எரியுது பாரு, ஜன்னல்ல. நீ வேற அவயம் போட்டா, ஆளுவோ இங்க வந்திரும். எங்ஙள கேவலப்படுத்திராத, ஆமா?' என்றான் முப்பிடாதி. சரி என்றான் டிப்டாப். 

அவனால் அதற்கு மேல் முடியவில்லை. இப்போது அழத் தொடங் கினான். ஏங்கி ஏங்கி அழத்தொடங்கினான்.

'கண்டாரவோளி இப்டி பண்ணிட்டாளே...மாப்ள' என்று கண்ணீர் பொங்க அழுதான். அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு மேல் அவன் அழுதால் சிக்கல் வர வாய்ப்பிருக்கிறது என நினைத்த முப்பிடாதி, ஒரு கிளா சில் இன்னும் கொஞ்சம் பிராந்தியை ஊற்றி டிப்டாப் பைக் குடிக்கச் சொன் னான். மடக் மடக் என குடித்தான் அவன். போதை அளவுக்கு அதிகமாகிவிட் டது. இனி அவனால் சத்தம் போட முடியாது. கழுத்துத் தொங்கியது. தரையைப் பார்த்து ஏதோ உளறி னான். பிறகு அப்படியே படுத்தான்.

ராமசாமியும் முப்பிடாதியும் இருந்த கொஞ்ச சரக்கைக் குடித்து விட்டு பேசிக்கொண்டிருந்தார்கள்.

'ஏல, இவனும் வேலண்ணன மாரி லூசா ஆயிட்டாம்னா சிக்கலுதாம். அவென் எதுக்கு லூசானாம்னு தெரியுமில்லா?'

'ரூவாய ஏமாத்துனதாலதாம். இருந்தாலும் அவனுக்கு வித்துக் கொடுக் க ஒண்ணுங்கெடயாது. பயத்துலயும் ஏக்கத்துலயும் அப்டியானாம். இவனுக்குத் தாம் வெதப்பாடு இருக்கு. எடங்க கெடக்கு. தோப்பு இருக்கு. அதுவள வித் தாலே உக்காந்து திங்கலாமே?' என்றான் முப்பிடாதி.

வேலண்ணன் லூசான கதை பரிதாபத்துக்குரியது. 

வடக்குத்தெரு முத்துமாரியம்மாள் பூச்சீட்டு நடந்திக்கொண்டிருந்தாள். ஒவ் வொரு பூவுக்கும் (அறுவடைக்கும்) ரெண்டு கோட்டை நெல். ஒரு வருடத்துக் கு ரெண்டு பூ. மொத்தம் 20 பேர். ஒவ்வொரு சீட்டுக்கும் 20 கோட்டை நெல். ஏலம் போக, மத்த கோட்டை நெற்கள் கேட்டவர்களுக்கு. ஒரு பிரச்னையும் இல்லாமல் தான் நடத்தி வந்தாள் முத்துமாரியம்மாள்.

பல வருடமாக இப்பூச்சீட்டை நடத்திவரும் முத்துமாரியம்மாள், காசு பண விவகாரத்தில் கறார்காரியாகச் சொல்லப்படுபவள். ஆள் பார்த்து தான் வரவு செலவு வைத்திருப்பாள். அவளிடம் வேலண்ணனும் பூச்சீட்டுப் போட்டிருந் தான். மகள் கல்யாணத்துக்கு நகை வாங்க வேண்டும் என்பதற்காக சீட்டை கடைசியாக எடுக்க நினைத்திருந்தான். இதுபற்றி முத்துமாரியம்மாளிடமும் சொல்லியிருந்தான். கடைசி சீட்டு என்பதால் கழிவு குறையும் என்பதும் அவன் எண்ணம். கடைசி சீட்டு ஏலம் முடிந்த பிறகு, 'ஏக்கா, நெல்லை வித்துட்டு ரூவாயா தந்தன்னா நல்லாருக்கும்' என்றான் வேலண்ணன். 'ஏம் அதை நீயே விய்க்க வேண்டியதானெ?' என்றாள் அவள். 'அவ்வளவு நெல் மூட்டையையும் கொண்டு போய் வைக்க வீட்டுல இடம் இல்ல. நீயே வித்து தந்திரென்' என்றான். சரி என்றாள் அவள். விற்று அவனிடம் கொடுக்க ரூபாயை வைத் திருந்த நாளில்தான் அந்த சம்பவம் நடந்தது. முந்தின நாள் நடந்த அவர்கள் வீட்டுக் குடும்ப சண்டையில் அவள் வீட்டுக்குத் தீ வைத்துவிட்டார்கள். மொத்த வீடும் வைக்கோற்படப்பும் கொழுந்துவிட்டு எரிந்ததை மொத்த ஊரும் வேடிக்கைப் பார்த்தது.

அம்பாசமுத்திரத்தில் இருந்து வந்த தீயணைப்பு வண்டி சம்பலான வைக்கோற் படைப்பையும் வீட்டையும் நனைத்துவிட்டு போனது.  கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் முத்துமாரியம்மாள். பார்க்க பாவமாக இருந்தது. சேர்த்து வைத்திருந்த அவளது சொந்த ரூபாயும் சீட்டு ரூவாயும் மொத்தமாக எரிந்து சாம்பலானதில் சின்னா பின்ன மாகிவிட்டாள் முத்துமாரியம்மாள். 

சீட்டுப்பணம் கேட்கப்போனவனிடம் கைவிரித்து விட்டாள் அவள். அடுத்த மாசம் தாரேன், அடுத்த மாசம் தாரேன் என்று முத்துமாரி இழுத்ததில் உடல் இளைத்துவிட்டான் வேலண்ணன். மொத்தக் கனவும் சிதைந்து போனதில் நடைபிணமானான். 'மவா கல்யாணத் துக்கு சேர்த்த பணம் இப்டி போச்சே. ஒண்ணுமில்லாம இருக்கேனே' என்று வீட்டில் அவன் தினமும் அழுது புலம்ப, இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவனின் மகள் அரளி விதையை அரைத்துத் தின்று உயிரை மாய்த்துவிட்டாள் ஒரு நாள். அரை உசிராக அலைந்து வந்த வேலண்ணன் ஒரே மகளின் இறப்புக்குப் பிறகு, கால் உசிரானான். 

திடீரென ஒரு நாள் எதையோ உளறிக்கொண்டு, கோவணத்தோடு தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தான். அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்கள், அவன் பொண்டாட்டியிடம் 'ஒம் புருஷனுக்கு என்னமோ ஆச்சுட்டீ' என்று சொல்ல, அவள் போய் இழுத்துவந்தாள் அவனை. பிறகு யாரிடமும் பேசுவதை நிறுத்திவிட்டான். விட்டை விட்டு வெளி யில் வருவதில்லை. பெரும் தாடி மீசையுடன் ஆளே மாறி விட்டி ருந்தான். பார்க்க நோயாளி போலக் காணப்பட்டான். எலும்பும் தோலு மாக மாறிய அவன் உடல்நிலையைப் பார்த்து சொந்தக்காரர்கள் முத்துமாரியிடம் பேசினார்கள். அவள், தன்னால் முடிந்தது என்று ஒரு சிறு தொகையைக் கொடுத்தாள். 

ஒரு திங்கள்கிழமை அதிகாலையில் வடக்குத் தெரு வழியாக பள்ளிக் கூடத்துக்கு வைத்தி சார்வாள் சென்றுகொண்டிருந்தார். அவர் முன் நங்கென்று வந்து விழுந்தது ஓர் கல். அவர் என்ன ஏதென்று திரும்பிப் பார்த்தார். யாருமில்லை. பிறகு இன்னொரு கல், அவர் முன் விழுந் தது. நின்றுவிட்டார். எங்கிருந்து கல் வருகிறது அவர் பார்வையைத் திருப்ப, வலப்பக்கம் வீட்டின் மச்சியில் இருந்து கல் எறிந்து கொண் டிருந்தது வேலண்ணன்.

'டேய் வேலு, நசமா போறவனே, ஏன்டா கல்லை எறியுத?' என்று வடக்குத் தெருவில் இருந்து வாத்தியார் கத்த, அதற்குப் பிறகுதான் தெருவில் எல்லா ருக்கும் விஷயம் தெரிந்தது. 

'ஏல வாத்தியாரே. ஒன்னைய கொல்லாம உடமாட்டேன். ஓடிப்போல' என்று இன்னொரு கல்லை விட்டான். ஆடிப்போய்விட்டார் சார்வாள். அடுத்து, வயலுக்கு மாடுகள் பத்திக்கொண்டிருந்த பொன்னையாவைப் பார்த்து எறிந் தான். குறி தவறியதால் தப்பித்தார். இல்லை என்றால் அங்கேயே காலி யாகியிருப்பார்.

'ஏல வேலு என்னாச்சுல, கோட்டியால புடிச்சிருக்கு?' என்ற கேட்ட போதுதான் தெருவில் அவனுக்குக் கோட்டிப் பிடித்துவிட்டது என்பதை உணர்ந்தார்கள்.

வேலுவின் பொண்டாட்டி வீட்டுக்குள் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். மச்சிக்கு ஏறும் ஏணி கதவை அடைத்து விட்டிருந்தான் வேலு. அதனால் அவளால் அங்கு ஏற முடியவில்லை. அதிகாலையிலே கற்களை எடுத்துவந்து மச்சியில் குவித்து வைத்திருக்கிறான் வேலு. அந்தக் கற்கள் காலியாகும் வரை ஒவ்வொருவரையாகக் குறிபார்த்து எறிந்து கொண்டிருந்தான். யாருக் கும் காயமில்லை என்றாலும் காய மேற்பட வாய்ப்பிருக்கிறது என்பதால் ஊர் பூராவும் விஷயம் பரவி விட்டது. தொடர்ந்து நான்கு நாட்கள் இப்படி அதிகா லையிலேயே கற்களை எடுத்து மச்சியில் சேமித்து வைத்து எறிந்து கொண் டிருந்தான் வேலு. 

பிறகுதான் சங்கத்தில் இருந்து ஆட்கள் கூடினார். இதை இப்படியே விட்டால் எல்லாருக்கும் சிக்கல் என்றும் அவனைப் பிடித்து நாட்டு வைத்தியரிடம் காட்டுவது என்றும் முடிவு செய்தார்கள். விக்கிரம சிங்கபுரம் நாட்டு வைத் தியரை மறுநாள் ஊருக்கு வரச் சொல்லி விட்டார்கள். தினமும் எருமைப்பால் குடிக்கும் குண்டு பாலு, கணேச மாமா, சைக்கிள் கடை தாசு, சுக்கு எல்லாரும் ஒரு ஐடியா போட்டார் கள். அவன் வீட்டுக்குப் பின்பக்கம் இருக்கும் வாகை மரத்தில் ஏறி மச்சியின் மறுபக்கத்துக்கு இரண்டு பேர் வந்துவிடுவது, அந்தக் கதவை, வேலுவின் பொண்டாட்டி முந்தின நாள் சாயந்திரமே திறந்து வைத்து விடுவது என்றும் முன்பக்கமாக ஏணி மூலம் மச்சிக்கு இரண்டு பேர் ஏறுவது என்றும் ஒரே நேரத்தில் ஏறி அவனை அமுக்குவது என்று முடிவு செய்திரு ந்தார்கள். 

காலையில் வழக்கம் போல, குறிபார்த்து வடக்குத்தெருவுக்கு கல்விட்டுக் கொண்டிருந்தான். அவர்கள் வந்தார்கள். மெதுவாக ஏறினார்கள். முன்பக்க மாக ஏறிய குண்டு பாலுவும் கணேச மாமாவும், வேலண்ணனின் கைகளை இழுத்து பின்பக்கமாகப் பிடித்தார்கள். 'விடுங்கல, செரிக்குள்ளேலா, விடுங்கல' என்று திமிறிக் கொண்டிருந்தான் அவன். அந்த ஒல்லி உடலுக்குள் எப்படி இத் தனை பலம் என அவர்கள் ஆச்சரியப்படும்படி இருந்தது அவனது திமிறல். அதற்குள் அவர்களும் வந்துவிட, கீழே இழுத்துச்சென்றார்கள். மச்சியில் குவித் துவைக்கப்பட்டிருந்த கற்களை  பார்த்த குண்டு பாலு, 'இவ்ளவு கல்லை எப்படி எடுத்துட்டு வந்தாம்?' என்று யோசித்தான்.

கீழே நாட்டு வைத்தியர் வந்திருந்தார். கையைப் பிடித்துப்பார்த்தார். அவரை அடிக்கப் பாய்ந்தான். நான்கு நாட்கள் நன்றாகத் தூங்கட்டும் என்று அதற்காக மருந்தைக் கொடுத்தார் அவர்.

நான்கைந்து மாதம் அவனுக்கு அவர்தான் சிகிச்சை அளித்தார். அதற் குப் பிறகு தெளிவான வேலண்ணன், இப்போது பால் பண்ணையில் வேலை பார்க்கி றான். ஆனால் முத்துமாரி இன்னும் அவனுக்கு பணத்தைக் கொடுக்கவில் லை. வேலண்ணனும் கேட்கவில்லை.


2 comments:

Unknown said...

எப்போது கொடுப்பார்????

மலர்

துபாய் ராஜா said...

பொம்பளை சிரிச்சாப் போச்சு. பொகையிலை விரிச்சாப் போச்சுன்னு சும்மாவா சொல்லியிருக்காவோ... சிரிச்சு, சிரிச்சே மகேஸூ டிப்டாப் சோலிய முடிச்சுப்பிட்டாளே... வேலண்ணன் கதையாவது விபத்தாலே நடந்தது. இவன் கதை விபரீதமால்லா இருக்கு... இப்படியா ஏமாறுவான்....குடிச்சு மனசை தேத்துவான்னு பார்த்தா அவளை புடிச்சு கொண்டு வராம பயபுள்ள ஓயமாட்டான் போலிருக்கே...