Monday, February 9, 2015

கொடை 18


மேலத்தெரு கல்யாணியின் ஆடுகளோடு மேய்ச்சலுக்குத் தங்கள் ஆடுக ளையும் சேர்த்து விட சென்றுகொண்டிருந்தான் முப்பிடாதி. தெருவில் வரிசை யாக வளர்ந்திருக்கிற வாதமடக்கி மரங்களின் நிழலில் அணில்கள் விளை யாடிக்கொண்டிருந்தன. ஆடுகளின் முனகல் சத்தம் கேட்டு அவை வேகமாக மரத்தில் ஏறி நின்று கீழேப் பார்த்தன. 

ராசுவின் வீட்டில் நின்றுகொண்டிருந்த வெள்ளாட்டுக்குட்டியை, அவரது அம்ம ணங்குண்டி பேரன் கழுத்தோடு சேர்த்து கட்டிக்கொண் டிருந்தான். அது முகத் தை அங்கும் இங்கும் திருப்பியது. அவன், அதன் முகத்தைத் தடவிய வாறு முப்பிடாதியைப் பார்த்தான். 

விளையாட்டாக நாக்கைத் துறுத்தினான் முப்பிடாதி. பதிலுக்கு அந்தச் சிறுவ னும் நாக்கைத் துறுத்திவிட்டு பக்கத்தில் கிடந்த பண்ணரி வாளை எடுத்துக் காண்பித்துச் சிரித்தான்.

முப்பிடாதி, 'இன்னா வாரென்' என்று பயங்காட்டினான். அவன் அசரவில்லை. பண்ணரிவாளை நீட்டி நீட்டி, 'அறுத்து' என்று சைகை செய்தான்.

'ஏல, யார்ட்ட அரிவாளத் தூக்கிக் காட்டுத' என்று வீட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தாள் அந்தச் சிறுவனின் அம்மா. அவள் மீனாட்சி. முப்பிடாதிக்கு ஒரு வகையில் முறைப்பெண். 

தெருவில் அவளுடன் சேர்ந்த தோழிகள் எல்லாருமே முப்பிடாதி யையும் அவனையும் இணைத்துப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் நிற்கும்போது அவன் அந்தப் பகுதியைக் கடந்தால், 'ஒங்கத்தாம் போறாம்டி' என்று இவன் காதுபட சத்தமாகச் சொல்வார்கள். இவனுக் கும் அவள் மேல் கொஞ்சம் காதல் இருந் தது. அது ஊர்க்காரர்களால், சொந்தக்காரர்களால் ஏற்படுத்தப்பட்ட காதல். அவன் மனதுள் ஆரம்பித் து மனதுக்குள் முடிந்த காதல் அது.

அவள்,  'ஏல சித்தப்பால்லா அது. அரிவாளயா காட்டுவாவோ' என்று மகனிடம் சொல்லிவிட்டு இவனைப் பார்த்தாள். அவள் கண்களில் இருந்த ஏக்கம், காதல் அவனுக்குப் புரிந்தது.

'எப்ப வந்த?' என்று தடுமாறிக் கேட்டான் முப்பிடாதி. 

'நேத்துதான்' என்றாள் அவள்.

'நல்லாருக்கியா? ஒம்மவன் சூட்டிப்பா இருக்காம்' என்று சொல்லிவிட்டு, வர் றேன் என்பது மாதிரி தலையை ஆட்டி நடந்தான். அவள் வாசல் வரை வந்து இவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள். அவன் ஆடுகளைப் பத்திக் கொண்டு போனான். எதிரில் வில்லுப்பாட்டுக்காரர்களும் மேளக்காரர்களும் ஆற்றில் குளித்துவிட்டு ஒன்றாக வந்து கொண்டிருந்தார்கள். இவனைப் பார்த் ததும் ஒரு சிரிப்பு. பிறகு சென்று விட்டார்கள்.

கல்யாணி, வீட்டில் இருந்தான். இவன் ஆடுகளை எதிர்பார்த்துக் காத்தி ருந் தான். தொட்டியில் இருந்த கழனித் தண்ணீரை பசுமாடு குடித்துக் கொண்டிருக் கும்போதே நேற்றைய புளிச்சச் சோற்றை கொண்டுவந்து தொட்டிக்குள் கொட்டினாள் அவனின் அம்மா. பிறகு பனமட்டை கொண்டு அதைக் கலக்கி னாள். குடித்துக் கொண்டிருந்த பசு, தலையை வெளியே எடுத்துப் பார்த்தது. நான்கைந்து சோற்றுப்ப ருக்கைகள் அதன் வாய்க்கு வெளியே இருந்தன. அதன் பார்வைக்குப் பயந்து ஆடுகள் கொஞ்சம் தள்ளிச் சென்றன. 

அவனின் பக்கத்துவீட்டில் இருக்கும் சொக்கலிங்கம், 'என்ன கொடை காரரு ஒரு கவனிப்பும் இல்ல' என்றான்.

'நாளைக்கு வந்திரும்யா வீட்டுக்கு' என்றான் முப்பிடாதி.

'கோயிலுக்கு கூப்பிடுவீருன்னு பாத்தா, வீட்டுக்கு கூப்பிடுதீரவே'

'கொடை, இன்னைக்கு ராத்திரி முடிஞ்சு போவும். காலைலதான் படப்பு'

'சரிதாம். என்னய சாப்பாட்டு ராமன்னு சொல்லுதேரு'

'கோயிலு சோறுன்னு சொன்னா, இப்டிங்கேரு'

'சும்மாதான்டே சொன்னேன். பூத்தார் சாப்பாடு கெடைக்கணுமெ?'

'ஒம்மகிட்ட பேச்ச கொடுத்துட்டு நவுர முடியாது, வரட்டுமா வேல கெட க்கு?' என்றான் முப்பிடாதி.

சாணத் தண்ணீர் தெளித்து தூத்து துப்புரவாக இருந்த விசாலமான அந்த இடத்தில் ம்மே என்று முனங்கிக்கொண்டு நின்றன ஆடுகள். மேல பத்து வயலைப் பார்த்துவிட்டு, புறங்கையை பின்னால் கட்டிய படி வரும் சுக்கு, முப்பிடாதியைப் பார்த்தார்.

'ஆடுவோள விட்டுட்டியா?'

'ஆமா'

'ராத்திரி, சத்தத்தைக் கேட்டியா?'

'கண்ணால பாத்தனெ?'

'லேசுபட்டவனுவோ கெடயாது, ஒங்க சொக்காரனுவோ. சாமியும் ஊரு மே வேண்டாம்னு சொல்லுதாம்னா, அவனுக்கு எவ்ளவு அவம்பாவம் இருக்கும்? சாமி உட்ருவாரா அப்டி?, அதான் அவயம் போட வச்சாரு' என்ற சுக்கு, வாயில் உதப்பிக் கொண்டிருந்த வெற்றிலையைத் துப்பி னார். பிறகு, 'கொடை முடியட்டும். பூதத்தாரே பாத்துக்கிடுவாரு அவனு வள' என்று சொல்லிவிட்டு முப்பிடாதியைப் பார்த்தார். 

'சாமி காரியத்தை என்னமோ வீம்புக்கு பண்ணுத மாரி பண்ணலாமா? ஒங்க குடும்பத்துக்குள்ள மூஞ்சையும் மோறயையும் தூக்குதியோன் னா அதோட விட்டுரணும். அதுக்கு சாமி என்ன செய்வாரு? அவரை வேண்டாம்னு சொல்லலாமா?'

'தனியா பூடம் கொடுக்க போறாவோளாம்லா?'

'குடுப்பாம் குடுப்பாம். என்னமோ தோப்புக்குள்ள வேனலுக்கு குச்சுலு போடுத மாரிலா சொல்லுதானுவோ, பூடம் கொடுக்கத? லேசுபட்ட காரியமா அது? ஒரு நா போல ஒரு நா இருக்குமா? நமக்கு கோவம் வந்தாலே அரிவாள தூக்கச் சொல்லுது. சாமியளுக்கு வந்தா என்னத் துக்காவும்? இப்டிதான் மந்தை தெருவுல மாசானம்னு ஒருத்தன் இருந் தாம். அவங்கதய கேட்ருப்பல்லா?'
'சொல்லிருக்காவோ, வெவரமா தெரியாது'

'ஆங். இப்டிதான். அவ்வோளுக்கு கருப்பசாமிதான் தெய்வம். அவன் ஊரு இலஞ்சி பக்கத்துல. கரீட்டா எந்த ஊருன்னு தெரியல. பொண் டாட்டிக் காரிக்குத்தாம் நம்ம ஊரு. மந்தைக்குப் பின்னால கொளம் இருக்குல்லா அதுக்கு முன்னாலதாம் வீடு. இப்பம் அதெ இடிச்சுட்டா வோ. நம்ம ஊரோடய அவெ வந்துட்டாம். அவ்வோ வயலு என் வயலு இருக்குல்லா, அதுக்கு நாலஞ்சு வயலு தள்ளி இருந்து. ஏழு மரக்கா வெதப்பாடு. வயல்ல, வாய்க்கா கரை ஓரமா இருக்குத இடத்துல கருப்பசாமிக்கு பூடம் கொடுத்தி ரணும்னு முடிவு பண்ணிட்டாம். 'ஒவ்வொரு கொடைக்கும் ஊர்க்கு போவ வேண்டி யிருக்கு. இங்கயே ஒரு பூடத்தை போட்டு நாமளே கும்புட்டுக்கிடுவம்'னான் எல்லார்ட்டயும். நல்ல கொணம். எப்பம் பாத்தாலும் பய சலம்பிட்டே இருப்பான். அதான் எரிச்சலா இருக்கும். மத்தபடி தங்க மானவன். இந்த வெஷயத்துல எடுத்தேன் கவுத்தம்னு இறங்கிட்டாம். அதும் அந்த வாய்க்காக் கரை உருப்புடுத இடமா? முன்னால ஒரு சாராய தகராறுல நாலு பேரை அங்ஙன போட்டுத்தான் வெட்டிக் கொன்னுருக்காவோ. பலி வாங்குன இடமாங்கும் அது. அங்க போயி சாமிக்குப் பூடம் கொடுக் கணும்னு நிய்க்காம். எங்கிட்ட சொன்னதும், 'யோசிச்சு பண்ணு, இந்த எடம் வேண்டாம், இப்டி சம்பவம் நடந்த எடம்'னு சொன்னேன். எறப்பாளி பய கேக்கலை. 'எல்லாத் தையும் சாமி பாத்துக்கிடுவாரு' ன்னு ஏற்பாடு பண்ணிட்டாம். காலைல சாமிக்கு உரு ஏத்தணும். அதுக்கு ஆளெல்லாம் சொல்லிட்டாம். ராத்திரி போயி படுத்தவம்தான். ஒரேடியா தூங்கிட்டாம். மூதி, எப்டி செத்தாம்னு இன்னைக்கு வரைக் கும் தெரியலயே. இதுக்கு என்ன சொல்லுத? இது கருப்பசாமி வேலயா, இல்லங்கியா? சாமி காரியம் பொல்லாதது பார்த்துக்கெ. கொஞ்சம் அசந்தா நம்மள போட்டுத்தாக்கிரும்'

'பூடத்த வைக்க எடத்தலாம் பாத்துட்டாவளாமே?'

'எங்க பாத்திருப்பாவோ? முருவன் வீட்டுக்குப் பின்னால கொஞ்சம் எடம் இருக்குல்லா. அங்ஙன பாத்திருப்பாம். பொம்பளைலும் சின்ன பிள்ளைலும் நடமாடுத இடத்துல, சாமியை கொண்டு வப்பாவுளா? என்னதாம் சொந்த சாமின்னாலும் சுத்த பத்தமா இருக்க வேண்டிய இடத்தை இப்டி வீட்டு பக்கத்துலயா வப்பாம்? அனுபவிப்பாம் பெறவு பொசக்கெட்ட பய'

முப்பிடாதி ஏதும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தான். யார் வீட்டில் இருந்தோ கருவாட்டுக் குழம்பு வாசம் வந்தது. இரண்டு மூன்று முறை வாசனையை இழுத்துப் பார்த்துவிட்டு, 'எவன் செவ்வாக்கிழமயும் அதுவுமா கருவாட்டை திங்காம்' என்று மெதுவாகக் கேட்டார் சுக்கு. பிறகு எந்த வீட்டில் இருந்து வாசம் வருகிற்து என்று வாசனைப் பிடித்துப் பார்த்தார். 'ஊர்ல பாதி பேரு முட்டாபயலாதான் இருக்காம்' என்று சொல்லிக்கொண்டே நடந்தார். கோயிலுக்குத் திரும்பும் தெரு வந்ததும், முப்பிடாதி கோயிலுக்குப் போறேன் என்றான்.

'செரி, நான் கொஞ்சம் நீத்தண்ணிய வாயில ஊத்திட்டு வாரென்' என் றார் சுக்கு.
கோயிலுக்கு வாங்கப்பட்ட சாமான்கள் வந்திருந்தது. இரண்டு பழத் தார்களை, சாமான்களுக்கான அறையில் வைத்துவிட்டு கீழே இறங் கினான் முப்பிடாதி. வாழைத்தாரில் இருந்து வண்டோ, எறும்போ வேட்டிக்குள் ஏறியிருக்க வேண்டும். கடித்தது. வேட்டியை அவிழ்த்து சுவரைப் பார்த்து நின்றுகொண்டு உதறினான். நான்கைந்து உதறலில் விழுந்தது சிறு வண்டு ஒன்று. அதை காலால் நசுக்கிவிட்டு திரும்பி வேட்டியை கட்டியபோது, 'கட்டமுண்டு' மைனி, அவள் வீட்டை அடுத் தப் பெண்கள் இருவருடனும் கோயிலுக்கு வந்தாள். இவனைப் பார்த்த தும் நின்றாள்.

எப்போதும் சிரிக்கும் அதே சிரிப்பை சிரித்துவிட்டு, 'கொழுந்த பிள்ள வேட்டிய உதறும்போது பாத்துட்டென்' என்று மெதுவாகச் சொன் னாள். அவளுடன் வந்தவர்கள் சிரித்தார்கள்.

'மைனிமாரு எத்தன தடவ வேணாலும் பாக்கலாம். அடுத்தாப்ல பாக்கணும் னா எங்கிட்டயே கேளுங்கெ'

'நல்லா பேச ஆரம்பிச்சுட்டடே. ஒங்க அம்மாட்ட சொல்லணும்'

'எதுக்கு?'

'சீக்கிரம் பொண்ணு பாக்கத்தாம்'

'அவ யாரையோ பாத்து வச்சிருக்காளாம'

'அப்ப சீக்கிரம் தாலிய கட்டிருடே'

'எனக்காவ நீங்க ரொம்ப கவல படுதேள மைனி'

'நீ எப்டி இன்னும் சும்மா கெடக்கேன்னு தெரியல. இல்லன்னா எவளயும் ஒதுக்குப்புறமா வச்சிருக்கியா?' என்று அவள் சொன்னபோது கோயிலுக்குள் கொட்டு அடிக்க ஆரம்பித்தார்கள். முப்பிடாதி அவளி டம், 'மொதல்ல சாமிய கும்புட்டுட்டு வாங்கெ. மத்தத பெறவு பேசிக்கி டுவம்' என்றான். அவன் பார்வை தடுமாறி அங்கங்கு சென்றதை மைனி கவனிக்காமலுமில்லை.

இவளைப் பார்க்கும்போது மட்டும் முப்பிடாதிக்கு உடலுக்குள் ஏதோ போல் ஆகிவிடுகிறது. அது ஏன் என்பது மட்டும் அவனுக்குப் புரியவே இல்லை. 

(தொடரும்)

2 comments:

Unknown said...

கதை மிகவும் நல்லா இருக்கிறது....பகிர்வுக்கு மிக்க நன்றி...

மலர்

துபாய் ராஜா said...

மைனி, கொழுந்தியாட்ட தானே எடக்கும், எக்காளமும் உரிமையா பண்ண முடியும்.போற போக்கைப் பாத்தா 'மா,பலா,வாழை மணமெலாம் வீசுது மைனி சேலை' ன்னு முப்புடாதி கவிதை எழுதி கவு(ந்)த்திடுவான் போல இருக்கே....