Friday, January 30, 2015

கொடை 16

பந்தல்காரர்தான் டிப்டாப்பை அமைதிப்படுத்திக்கொண்டிருந்தார்.

'சரிடே. விடு. வேற எவனுமா மேல கைய வச்சுட்டான்? ஒனக்கு ஒரு வகையில சித்தப்பன் மொறதானெ, முத்தையா' என்றார் அவர்.

கோயிலின் சுற்றுச்சுவரில் உட்கார்ந்து தரையைப் பார்த்துக்கொண்டு வெறுப்பில் இருந்தான் டிப்டாப். அவனுக்கு கோபம் தலைக்கேறிக் கொண்டிருந்தது. கணேசனும் கசமுத்துவும் அவனுக்கு ஆறுதல் சொல் வது போல பேசிக்கொண்டிருந்தனர்.

'நீ, ஒரு பெரிய மனுஷன அடிக்கப் போற மாதிரி, கைய ஓங்குவியோ டெ? பின்ன, அடிக்காம என்ன செய்வாம்? சும்மாவே மூதிக்கு மூக்கு மேல கோவம் வரும்?' என்றார் கசமுத்து.

முத்தையா, ஏற்கனவே இரண்டு கத்தி குத்துகளுக்காகச் சிறை சென்று வந்தவர். இரண்டுமே வட்டித் தகராறில் செய்யப்பட்டவை. காசு விஷய த்தில் அப்படி இருந்தால்தான் முடியும் என்பதற்காகவும் தன் மீது பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் அப்படி செய்தார். அந்தக் கத்திக்குத் துகள் பெரும்பாலும் உயிரை பாதிக்காத அளவுதான் இருக்கும். கைக ளை இலேசாக கிழிப்பது, முதுகில் ஒரு இழு இழுப்பது என இப்படியான குத்துகள்தான் இவருடையது.

இப்படி குத்திட்டானெ. படக்கூடாத இடத்துல பட்டுச்சுன்னு வையென். பேதில போவான். அவ ரூவாயா வந்து காப்பாத்தும்?' என்கிற பயத்தில்தான் ராசுவிடம் வட்டிக்கு வாங்க ஆரம்பித்தார்கள். இவரை விட கொஞ்சம் இளகிய மனம் கொண்ட அவருக்கும் அப்படி ஒரு கொடூர முகம் தேவைப்பட்டதில் இருந்து கத்தியையோ, அரிவாளை யோ தூக்கிக்காட்டும் செயலை அவரும் செய்ய ஆரம்பித்தார்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளென அறியபட்டதில் இருந்து இரண்டு பேரையுமே தூரத்தில் வைத்துப் பார்த்தது ஊர்.

இங்கு இவர்கள் பேசிக்கொண்டிருக்க, முப்பிடாதி உட்கார்ந்த இடத்தில் இருந்து தற்செயலாக மேற்கே பார்த்தான். 'கட்டமுண்டு' மைனி, மச் சியில் நின்று உடலை நெளித்துக் கொடுத்துக்கொண்டிருப்பது சாமி பூடத்தின் மறை வில் வழி தெரிந்தது. அப்படி அவள் நெளிக்கும் போது மடங்கி விரியும் அங்கத் தின் சில ஏற்ற இறங்கங்களை வாய்ப் பிளந் துப் பார்த்துக் கொண்டிருந் தான் முப்பிடாதி. அங்கிருந்து அவள் வடக் குப் பக்கம் வைக்கோற் படப்பைப் பார்த் துக் கொண்டிருந்தாள். அங்கு ஏதோ மாடுகள் வைக்கோலை தின்பதையோ அல்லது யாரும் வைக் கோலை திருடுவதையோ கண்காணிப்பதாக அவளது பார்வை இருந்து. அவள் இப்போது, முன்னால் இருக்கிற சுவரின் திண்டைப் பிடித்துக் கொண்டு அதில் தனது முன்பக்கத்தைச் சாய்த்து கீழே பார்த் துக் கொண்டிருந்தாள். முப்பிடாதிக்கு அவள் தெளிவாகத் தெரிந்தாள். வழுவழுப் பான இடுப்பு பகுதியும் அவன் கண்ணுக்குத் தெரிந்தது.

ஒரு பெரும் ஏக்கம் நெஞ்சுக்குள் தீ மூட்டி கழன்றுக் கொண்டிருந்தது. அத்தீயி ன் கனலில் அவன் தன்னை எரித்துக் கொண்டிருந்தான். அத்தீ தேக மெங்கும் பரவி, எரிமலைக் குழம்பென கொதித்துக் கொண்டிருந்தது. அந்தக் கொதிப்பை, எரியும் அனல் குழம்பின் அவஸ்த்தையை, அறியாதவள ல்ல 'கட்டமுண்டு' மைனி. அவன், அவளை வைத்தக் கண்ணை எடுக்காமல் பார்த்தான்.

கோயிலில் ஆட்கள் இல்லையென்றால் எழுந்து நின்று அவளைப் பார்த்துப் புன்னகைக்கலாம். அந்தப் புன்னகைக்கான பிரதிபலன் என்றாவது கிடைக் கலாம் என நினைத்தான். ஆனால் இவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தன் மேல் வைத்திருக்கிற யோக்கிய பிம்பம் சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக இங்கும் அங்குமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

டிப்டாப்புக்காகச் சொல்லப்பட்ட டீ, பிறகு எல்லோருக்குமாக விரிவு படுத்தப் பட்டது. அப்போதுதான் கம்பர் வந்தார். சிமென்ட்டால் பூசப்பட்டப் பூடங்கள் காய்ந்துவிட்டதா என்பதைப் பார்த்தார். பூடங்கள் காய்ந்தால்தான் அதன் மீது அச்சுகொண்டு சாமியின் வடிவங்களை வரைய முடியும். பார்த்துவிட்டு காலைக்குள் காய்ந்துவிடும் என்று அவராகவே சொல்லிக்கொண்டார். சாமி அலங்காரங்களுக்கான சாமான்களை நாளை எடுத்துவருவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போதுதான், 'என்ன டிப் டாப்' என்ற சத்தம் கேட்டது. பெண்குரல்.

எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். மகேஸ்வரி நின்றுகொண்டிருந்தாள்.  நடந்த சம்பவத்தை அவளுக்கு யாராவது சொல்லியிருப்பார்களோ  என் று நினைத்த டிப்டாப் அங்கிருந்து எழுந்தான்.

'என்ன இங்க ஒங்காந்துட்டெ? நா ஒங்கடைக்காக்கும் போயிட்டு வர்றேன்' என்ற மகேஸ்வரி, பிறகு செருப்பை கழற்றிப் போட்டுவிட்டு  கோயிலுக்குள் வந்தாள். சாமி கும்பிடவில்லை அவள். சும்மா சுற்றிப் பார்த்துவிட்டு எல்லா ருக்கும் பொதுவாக ஒரு புன்னகையை உதிர்த்தாள்.

ராமசாமி, 'இவ ஏம் இங்க வந்தா' என்று மெதுவாகச் சொன்னான் முப் பிடாதியிடம்.

'ல்வ்வரைத் தேடி வந்திருக்காடே' என்றான் வன்னிய நம்பி.

'டிப்டாப்பு, இவளாலதான் லோல்படப் போறாம்னு நெனக்கேன்' என்ற ராமசாமியிடம், தனது உதட்டில் கையை வைத்து மெதுவாகப் பேசு என்று சைகை செய்தான் முப்பிடாதி.

ஒரு வயசுப் பெண், டிப்டாப்பிடம் இப்படி வெளிப்படையாகப் பழகுவதையோ, அவனைத் தேடி வருவதையோ, கசமுத்துவின் பழம் மனதால் தாங்க முடிய வில்லை.

'தேடி வர்ற அளவுக்கு இருக்குன்னா, அப்பம் வில்லங்கத்துலதான் முடியும்?' என்று நினைத்துக்கொண்டார். இதைப் புரிந்துகொண்டவனாக டிப்டாப் அங்கிருந்து கிளம்பினான். 'வாங்க போவும்' என்று அவளிடம் சொல்லிவிட்டு அவன் சைக்கிளை உருட்டிக்கொண்டு செல்ல, அவன் கையை உரசியபடி சென்றுகொண்டிருந்தாள் மகேஸ்வரி.

அவர்களைப் பார்த்துவிட்டு கணேசன் பக்கம் திரும்பிய கசமுத்து, 'இதெல்லாம் வெளங்குமால' என்றார் பொதுவாக.

'அதெல்லாம் வெளங்கும். நீரு ஒம்ம சோலிய பாரும்' என்ற வன்னிய நம்பி, 'இது என்ன இன்னைக்கு நேத்தா நடக்கு' என்று சொல்லிவிட்டு வரி நோட்டுக் குள் புகுந்தான்.

0

கோயிலில் வேலைகள் முடிந்துவிட்டன. நள்ளிரவில் கொடை தொடங்கிவி டும். வெட்டவெளியாக இருந்த கோயில், பந்தலுக்குள் நிழலாகத் தெரியும் காட்சிப் புதிதாக இருந்தது. பந்தல் அலங்காரத்துக்குள் எரியும் ட்யூப் லைட் களின் வெளிச்சத்தில் சாமி பூடங்கள் ஆக்ரோஷம் காட்டின. ஓர் ஆங்கார சக்தி பூடத்தில் இருப்பதாகத் தெரிந்தது. பூதத்தார் நேரடியாக வந்து பூடத்துக்குள் புகுந்துகொண்டது போல தெரிந்தது அவரின் பூடம்.

கக்கத்தில் பேக்கை வைத்துக்கொண்டு முப்பிடாதியும் வன்னிய நம்பி யும் ராமசாமியும் பரபரத்துக்கொண்டிருந்தார்கள். அங்கும் இங்குமென அலைச்சல் வேலை, அவர்களுக்கு. 'அதை கவனிக்கலயா, இது என்னாச்சு' என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வேலை. 'வீட்டைக்கட்டிப் பார், கல்யாணத் தை நடத்திப்பார்' என்பதற்கு ஒப்பான வேலைதான், கொடை விழா நடத்துவது ம். என்னதான் சரியாகச் செய் திருந்தாலும் ஏதோ ஒரு குறை துறுத்திக் கொண் டு நிற்கும். அது பற்றி ஆளாளுக்குப் பேச ஏதாவது ஒரு காரணமும் கிடைக்கும். அதற்காகவே இளவட்டங்களான இவர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந் தார்கள். கொட்டுக்காரர்களும் வில்லு அண்ணாவியும் வெற்றிலையை உதப்பிக் கொண்டே வந்து சேர்ந்துவிட்டார்கள்.

கோயில் மணலில் சின்னப்பிள்ளைகள் விளையாட ஆரம்பித்துவிட்டன. அங்குமிங்குமாக அவர்களின் ஓட்டமும் ஆட்டமும் சந்தோஷக் கூட்டமாக இருந்தது. விருந்தாளிகளின் வருகையில் நலம் விசாரிப்புகள் நடந்து கொண் டிருந்தன. 'நல்லாருக்கியா?, பிள்ளைலுவோ நல்லாருக்கா?' என்கிற கேள்வி களில் நல்லா இல்லாவிட்டாலும் 'நல்லாருக்கோம்' என்று சொல்கிற பதிலில், கேட்கிறவர்களுக்கு கிடைத்துவிடுகிறது ஏதோ ஒரு மகிழ்ச்சி. அப்படியொரு ஒரு வார்த்தையை கேட்கா விட்டாலும் கூட வந்துவிடும் சண்டை.

'எதுத்தாப்ல போறேன். என்னைய 'வா, எப்டியிருக்க'ன்னு ஒரு வார்த்த கேட்டானா அவென்?' என்கிற ஆவலாதிகளுக்காகவும் இப்படி கேட்பது உண்டு. ஆள் தெரியவில்லை என்றாலும் கூட, 'நீ...' என்று இழுத்து அவரே அவரை யாரென்று சொன்னதும், 'அவரு மவனாடே. அதான பாத்தேன். மொகச்சாடை தெரியுதுல்லா' என்கிற விசாரிப்புகளும் உண் டு.

மைக் செட்காரன் முருகன், பக்தி பாடலை ஓட விட்டுக் கொண்டிருந் தான். இந்தக் கோயிலில் சினிமா பாடல்கள் போடுவது கிடையாது. கரகாட்டமோ, கனியன் கூத்தோ மற்ற ஏதுமோ கிடையாது. வில்லுப் பாட்டுதான் பிரதான மானது. முதல் நாள் இரவில் கொடைக்குப் பின் ஆரம்பிக்கும் வில்லு ப்பாட்டில் பூதத்தாரின்  கதை சொல்லப்படும். அது மறுநாளும் தொடரு ம். பிறகு மற்ற சாமிகளுக்கான கதைகளும் பாடப் படும். இதற்கு மைக் முக்கியம் என்பதால் மைக்செட் வைக்கப் பட்டிருக் கும் பெஞ்சில் உட்கார்ந் துகொண்டு வேலை ஏதுமின்றி, கொடை பார்க்க அல்லது வில்லுப்பாட்டுக் கேட்க வரும் பெண்களின் அழகை ரசிப்பது தான் முருகனுக் கான வேலை.

இப்படியான ரசித்தலினால்தான் இப்போது மூன்று பொண்டாட்டிகளுக் கு அவன் கணவனாக இருந்தான். முதல் மனைவி, அத்தை மகள். அது சொந்தம் கூடி செய்து வைத்த முதல் திருமணம். இரண்டாமவள் ஊரி ல் இருந்து சடங்கு வீட்டுக்கு வந்திருந்த உறவினர் பெண். அடிக்கடி வந்துபோனவளின் மீது அவனுக்கு அளவற்ற காதல் ஏற்பட்டது. ஒரு நாள், அவளது ஊரிலேயே வீட்டுக்குப் பின் பக்கம் ஒன்றாக இருக்கும் போது ஊர்க்காரர்களால் பிடிக்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப் பட்டவள். மூன்றாமவள்தான் வேறொரு இனத்தைச் சேர்ந்தவள். பக்கத் தூரில் சடங்கு வீட்டுக்கு மைக் செட் கட்டுவதற்குப் போன முருகன், அங்கு துண்டு சீட்டில் தான் விரும்பும் பாடலை எழுதி கேட்டுக் கொண்டிருந்த இளம்பெண் மீது காதல் வயப்பட்டு அவளைக் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டான். பிறகு பேசிய பஞ்சாயத்துக்குப் பிறகு அவள், அவனுக்கு மனைவியானாள். இதுதவிர இரண்டு வைப்பாட்டிகளும் முருகனுக்கு இருப்பதாக அவனது உதவியாளர்கள் பேசிக்கொள்வார்கள்.

'ஏல, ஒன்னை வச்சுகிட்டே ஒண்ணுஞ் செய்ய முடியலயடெ. இந்த மூதி  எப்படில இவ்ளத்தயும் மேய்க்காம்?' என்று அவன் காதுபட யாராவது பேசுவதை சுகமாக ரசிப்பான் முருகன்.

இரவாகிவிட்டது. ஒன்பது மணி வாக்கில் வில்லு மற்றும் கொட்டுக் காரர்கள் சாப்பிட்டுவிட்டு வந்தார்கள். சரியாக பத்துமணிக்கு கொட்டு கோயிலுக்குள் வந்துவிடவேண்டும் என்று  சொல்லப்பட்டிருந்தது.

சாமி பூடங்களின் முன் வாழை இலைகள் விரிக்கப்பட்டிருந்தன. ஒவ் வொரு பூடத்துக்கு முன்பும், வெட்டி வைக்கப்பட்ட ஓர் இளநீர், வெற் றிலை பாக்குகள், இன்னும் பழுக்காத பச்சை நிறத்துடன் இருக்கிற வாழைப்பழங்களை கொண்ட வாழைத்தார், சூடன் தட்டு, தீபாராதனைத் தட்டு, திருநீறு, குங்கும டப்பாக்கள், தேங்காய், பன்னீர், வெற்றிலைப் பாக்குகள், குத்தீட்டி, கம்புகள் வைக்கப் பட்டிருந்தன.

அம்மன் மற்றும் நாராயண சாமி பூடங்களுக்கு முன் பிரம்பு கம்புகள் வைக்கப் பட்டன. நாராயண சாமிக்கு ஆடுகிற திருநெல்வேலி நாராயணன், கையில் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு ஆடுவார். அந்த பொம்மையை கோயில் சாமான்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத் தில் இருந்து எடுத்துவரச் சொல்லி வைத்தார்கள்.

பூதத்தார் பூடத்துக்கு முன் பெரிய வாழை இலை போடப்பட்டிருந்தது. கம்பர் ஒவ்வொரு சாமி பூடத்திலும் மாலைகளைக் கட்டிக் கொண்டிருந்தார். கோயி லுக்குள் புதுவிதமான வாசனை வந்துவிட்டிருந்தது. மற்ற பட்றை ஆட்களும் உள்ளே வந்து சாமி கும்பிட்டு திருநீறு பூசிய பின், ஓரமாக உட்காரத் தொடங் கினார்கள். பெண்களுக்கான இடமாக பூதத்தார் பூடத்தின் இடப்பக்கம் ஒதுக்கப் பட்டிருந்தது.

கூட்டம் உள்ளே ஏற ஏற கொட்டுக்காரர்கள் உள்ளே வந்தார்கள். அவர்கள் இரண்டு பக்கும் மூன்று மூன்று பேராக நின்றுகொண்டார்கள். நடுவில் சாமிக் கொண்டாடிகள் நின்றிருந்தனர். பூதத்தாருக்கும் ஆடும் சாமி, சூடத்தைக் கொழுத்தி தட்டை ஏந்தும்போது, 'ஏய்' என்று ஓர் ஆங்கார சத்தம் போட்டார். அதுவரை பேசிக்கொண்டிருந்தவர்கள் அமை தியாகி விட, கப்சிபென்றிருந்தது இடம். அவர் பூடத்தில் நின்று திரும்பிப் பார்க்க, கொட்டுக்காரர்கள் அடிக்க ஆரம்பித்தார்கள். திடீரென்று புறப்பட்ட நாதஸ்வரம் மற்றும் கொட்டுகளின் இசையில் சாமியா டிகள் ஆடத் தொடங்கினார்கள். கொட்டுக்காரர்கள் வியர் க்க, விறுவிறுக்க அடிக்க, கோயில் கோலகலமாகிக் கொண்டிருந்தது. முப் பிடாதியும் தன் பங்குக்கு திருநீறு பூசிவிட்டு கூட்டத்தின் ஓரத்தில் நின்று கொண்டான். ஆனால் அவனுக்கு சாமி இறங்கவில்லை. அவன் ஆட நினைத் தும் கூட முடியவில்லை. அவர்களுடன் சேர்ந்து சும்மா ஆடுவதற்கு அவனால் இயலவில்லை.

ஒரு முறை சுப்பையா தாத்தா, சொல்லியிருக்கிறார். அவர் பட்றையன் சாமிக்கு முன்பு ஆடியவர்.

'எல்லாரையும் போலதான் கோயில்ல நின்னுட்டிருந்தேன் பாத்துக்க. கொட்டு அடிக்கவும் திடீர்னு நெஞ்சுல என்னமோ ஒண்ணு அழுக்குத மாதிரி இருந்தது. பெறவு என்ன நடந்ததுன்னே தெரியல, பாத்துக்கெ. கொஞ்ச நேரம் கழிச்சு மொகமெல்லாம் வேத்து ஓரமா உக்கார வச்சிருக்காவோ என்ன. நா, தங் தங்குன்னு சாமியாடியிருக்கேன்னு மத்தவோ சொல்லிதான் தெரியும். பெறவு ஒவ்வொரு கொடைக்கும் மொத நாளு அப்படியொரு இது வரும். பெறவு வரா து பாத்துக்கெ' என்று சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது போல முப்பிடா திக்கு அந்த இது ஏதும் வரவில்லை.

கோயிலுக்குள் கூட்டம் கூடி நிற்க, கொட்டு சத்தம் காதைப் பிளந்து கொண்டி ருந்தபோது, வன்னிய நம்பியும் ராமசாமியும் முப்பிடாதியை அழைத் தார்கள் வெளியே.

கோயிலைத் தாண்டி, எரிந்துகொண்டிருக்கும் தெருவிளக்கு அருகில் வந்த போதுதான் அந்த சத்தம் கேட்டது. உள்ளே கோயிலில் கொட்டு சத்ததில் ஏதும் கேட்கவில்லை.

'கேட்டியா? இப்பம் என்ன செய்யலாம்?' என்றான் ராமசாமி.

அது பல்லி முருகனின் சத்தம்தான். கொட்டு சத்தம் கேட்டதும் சாமி வந்து ஆடுகிறான். அவன் வீட்டு வாசலில் நின்று ஆடுகிறான். தாம் தூம் என்று சத்தம் கேட்கிறது. 'ஏய் ஏய் நா இல்லாம எப்டிடா?' என்ற வெறி கொண்ட சத்தத்துடன் பல்லிமுருகன் அரிவாளை தூக்கிப் பிடித்தபடி, நாக்கைத் துறுத்துக்கொண்டு கோயிலை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் அவனைப் பிடிப்பதுப் போல சொம்பு தங்கமும் அவன் குடும்பமும் ஓடி வந்துகொண்டிருப்பதை பார்த்துகொண்டிருந்தார்கள் இவர்கள்.


(தொடரும்)

1 comment:

துபாய் ராஜா said...

கொடை சூடு பிடிச்சிட்டேய்...

அத்துதாம் கழுதை.. புடிச்சிதாம் ஓட்டம்...னுலா ஆளை இழுத்துட்டு
போகுது...ச்