Saturday, January 10, 2015

கொடை 13


கோயிலில் பூச்சு வேலை நடக்கத் தொடங்கியது. பூனா சிவனும், கானா நம்பியும் தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு கோயிலில் சுற்றுச்சுவர் போலிருக்கும் மண் சுவரின் ஓட்டை, உடைசல்களைப் பூசத் தொடங்கினார் கள். பிறகு உடைந்த அல்லது சிதைந்த பூடங்களை செங்கல் வைத்து கட்டி, சிமென்ட் பூச வேண்டும். காய்ந்த பின் வெள்ளை அடிக்க வேண்டும். அடுத்து பக்கத்து வீடடு ஓடுகளைத் தட்டிக் கொண்டிருந்த, கோயில் வேப்பமரத்தின் கிளைகள் வெட்டப்பட்டன. முறிந்துத் தொங்கிக் கொண்டிருந்த பூவரசமரத்தின் ஒரு கிளையையும் வெட்டினார்கள். பூதத்தார் பூடத்தின் பின்பக்கச்சுவரில் உண்டியல் வைக் கலாம் என்று முடிவெடுத்திருந்தார்கள். அதற்கான வேலை யும் நடந்து கொண்டிருந்தது.

கல்யாண களை மாதிரி கொடை களை கோயில் வளாகத்தில் தெரிந்து கொண்டிருந்தது. அது சந்தோஷக் களை. திடீரென்று கோயிலில் மட்டும் சூரியன் வந்து ஒளி தந்து போவதாக இருந்தது அந்த இடம். முன் னொரு காலத் தில் கொடை என்றால் வரிக்காரார்கள் எல்லாரும் மொத்தமாக வந்து கோயில் வேலைப் பார்ப்பார்களாம். கோயிலில் உள்பக்கத் திண்டில் உட்கார்ந்து கொண்டு கையில் கம்பை வைத்தபடி நடந்துவரும் சுப்பையா தாத்தா சொல் லிக் கொண்டிருந்தார்.

'ஊர்க்கூட்டத்துல பேசிட்டோம்னா, அவ்ளவுதான். ஒருத்தன் கேள்வி கேக்க முடியாது. என்ன வேலை கெடந்தாலும் கோயிலுக்கு வந்திரணும் ஒரு வாரத்துக்கு முன்னாலயே. இன்னைக்குலா சம்பளம் கொடுக்க வேண்டி யிருக்கு. ஒரு தடவை, பூத்தாருக்கு பூடம் இருக்கு பாரு, அந்த இடத்துக்குப் பின்னால சரியான ஆலமரம் பாத்துக்கெ. இருக்கட்டும்னு விட்டுட்டோம். விட்டா அதுபாட்டுக்கு வளந்து வளந்து பூடத்துக்கு அடியில வேரு போயி, சாமியை ஒருப்பக்கமா தூக்கிட்டு. பார்த்தா ஒரு பக்கம் சரிஞ்சும் ஒரு பக்கம் வளைஞ்சும்னு சாமி செல நின்னுச்சு. சாமிய அப்டி வய்க்கலாமான்னுட்டு மரத்த வெட்ட முடிவு பண்ணியாச்சு. நம்ம செவனு இருக்காம்லா அவன் அப்பா கண்ணுக் கோனாரும், விரிச்சான் பாலு  அப்பன் காளித்தேவனும் இந்தப் பக்கம் அந்தப் பக்கமுமா நின்னு ரம்பத்தை போடுதாவோ. பாதி மரம் வரை அறுத்திருப்பாவோ. ரெண்டு பேருக்கும் மயக்கம் வந்து விழுந் துட்டாவோ. சுத்தி பாத்துட்டிருந்தவ்வோளுக்கு கெதக்குன்னு ஆயிப்போச்சு. என்ன இப்டி விழுந்துட்டாவளேன்னு தண்ணியை மூஞ்சில அடிச்சு எழுப்புனா முடியல. பெறவு சத்தம் கொடுத்து அக்கம் பக்கத்துல இருந்து ஆளுவல வரவழைச்சு, தூக்கி செவத்துல சாச்சி வச்சாவோ. வச்சாலும் சரியுதானுவோ. ரெண்டு பேரு நின்னு புடிச்சுக்கிட்ட பெறவு,  மேட்டுத்தெருவுல அப்பம் ஒரு பாய் இருந்தாரு பாத்துக்கெ. நாட்டு வைத்தியம் பாப்பாரு. அவரைக் கூட்டியாந்தாச்சு. அவரு, ரெண்டுபேரு கையையும் பார்த்துட்டு ஒரு பிரச்னையுமில்ல, கொஞ்சம் சுக்காப்பி கொண்டாந்து வாயில ஊத்துங்கன்னுட்டாரு. ஊத்துன பெறவுதான் ரெண்டு பேருக்கும் பேச்சு வந்தது. 'என்னாச்சுன்னே தெரியல. திடீர்னு நெஞ்சை பிடிச்சுட்டு ஒரு மாதிரி வந்துட்டுடா'ங்காவோ ரெண்டு பேரும். 

கெழக்க அம்மன் கோயில்ல அப்பம் சாமியாடுன அவத்திய தேவருதான், 'ஏல, ஏதாவது சாமி குத்தம் இருக்கும். ஒரு சேவல பலி கொடுத்துட்டு மரத்தை வெட்டுங்க'ன்னாரு. அதே மாதிரி ஒரு வெள்ளிக் கிழமை ஒரு சேவலை வெட்டிப் பூசை பண்ணிட்டு பெறவு மரத்தை வெட்டுனாவோ. சட்டுன்னு சாய்ஞ்சுட்டு மரம். வேரை, அறுக்க முடிஞ்ச வரை அறுத்துட்டு, பெறவு கடப்பாரைய வச்சு தோண்டி எடுத்தாவோ. அன்னைக்கு செவ்வாய்க் கிழமை. சாயந்தரமாயிப் போச்சு. கடைசி வேரை வெட்டி இழுக்கும் போது உள்ளயிருந் து வந்தது பாரு, ஒரு கருநாகம். துண்ட காணும் துணிய காணும்னு எல்லாரும் ஓடிட் டாவோ. தள்ளி நின்னு பாத்தா பூதத்தாரு செல மேல ஏறி படத்தை காட்டிட்டு நிக்கி அந்த பாம்பு. ஒரு நாதிக்கு உசுரு இல்ல பாத்துக்கெ. பெறவு செத்த நேரம் கழிச்சு அதுவா இறங்கி போச்சு. தெருவுக்குள்ள எங்கயும் போச் சுன்னா சிக்கலாச்சேன்னு அது எங்க போதுன்னு பார்த்துட்டெ இருந்தோம். 

சின்ன பிள்ளைலுவோ அங்க இங்கன்னு விளாடுத இடத்துல இது அலைஞ்சா நல்லாவா இருக்கும்னுட்டு அது பின் னாலயே போனா, அந்தானி நேரா போச்சு பார்த்துக்கெ. பஜன மடத்து தெருவோரமா சுவத்தைப் பிடிச்சாப்லா போயிட் டிருக்கு. எதுர்ல ஆளு வந்தா, இங்க நின்னே சைகைல ஒதுங்கிப் போவ சொன் னோம். அந்தானி, பெருமா கோயில் தெருவைத்தாண்டுனதும் அப்பம் முள்ளுக் காடு பாத்துக்க. அதுக்குள்ள சருட்டு போயிட்டு. பெறவு எங்க போச்சுன்னு தெரியல. அதுக்குப் பெறவு ஒரு ஈ காக்கா கண்ணுல அதுல மாட்டலன்னா பாரேன். இதுக்குப் பேரு சாமிம்பியா? இல்லைம்பியா? பூதத்தாரு இருக் காருன்னுதானல அர்த்தம்?' என்று மீசையை தடவியபடி சுப்பையா தாத்தா கேட்டுக் கொண்டிருந்தார். 

டிப்டாப் செல்வம் இங்கிருந்திருந்தால், 'யோவ் பாட்டையா, பாம்புக்கும் பூதத் தாருக்கும் என்னவே சம்பந்தம்?' என்று கேட்டிருப்பான். எக்காளக் கேள்வி. எடக்காக இன்னும் நிறைய கேட்டிருப்பான். அதற்கும் ஒரு கதை வைத்திருப் பார் தாத்தா.

பூடங்களுக்குச் சாந்து பூசிக்கொண்டிருந்த பூனா சிவன், 'இந்த எடத் துலயா அந்த பாம்பு வந்துச்சு?' என்று பூதத்தார் பூடத்தின் முன் நின் றபடி கேட்டான்.
'ம்ஹூம். அங்ஙன இல்லல. அந்த கதய ஏம் கேக்கெ? அத சொன்னா இன்னும் ஒரு நாளு வேணுமே?' என்று சொல்லிவிட்டு அமைதியா னார்.
'சொல்லும்யா கேப்பம். வேல நடக்கணும்லா'

'செரி நம்ம பூதத்தான் கடயில யாராது வெத்தல பாக்கு வேங்கியாங்கெ. துட்டு நா தாரென்'

பூனா சிவன், அங்கு விளையாடிக்கொண்டிருந்த பத்தையூரா பேரனை அழைத்து, வாங்கிவரச் சொன்னான். அவன், இடுப்பில் இருந்து விழுந் துவிடுமோ என்று பயங்கொள்ள வைக்கிற டவுசரை மேலே இழுத்து விட்டபடி, ட்ட்ரூர் ட்ட்ரூர் என வாயால் சத்தம் கொடுத்தான். கைகளால் காற்றில் வட்டைத் நொடித்தான். வண்டி வேகமாகப் பறந்தது.

தாத்தா கதையை சுருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார். பழங்கதைகள் சுவாரஸ் யமானவை. அப்படியா என ஆச்சரியம் கொள்ள செய்பவை. அல்லது 'இங்க பார்றா' என நகைச்சுவை தருபவை. 

'நம்ம கசமுத்து மாமனாரு இருக்கார்லாடா, அவருதான் முன்னால பட்ற தலைவரு. ஒரு கோயில் கொடைக்கு வெள்ளாங்குழியில இருந்து அவருக்கு சொந்தக்காரவோலாம் வந்திருந்தாவோ. அதுல ஒருத்தம் சாமியாராம். இங்க கொடை நடந்திட்டிருக்கும்போது, கசமுத்து மாம னார் வீட்டுல தூங்கிட்டு இருந்தவருக்கு அருளு வந்திருக்கு. அப்டி யே எந்திரிச்சு தோள்ல துண்டு கூட இல்லாம, 'ஏய், ஏய்'னு சத்தம் போட் டுட்டே கோயிலுக்கு வந்துட்டாரு.  கொட்டு அடிச்சிட்டிருந்தவனுவள நிறுத்தச் சொன்னாரு. 

ஆடிட்டிருந்தவ்வோள அப்டியே நிக்க சொன் னாரு. அந்தானி எல்லாரும் என்ன ஏதுன்னு இவரயே பாக்க அரம்பிச் சாட்டாவோ. இவரு சாமிய பாத்து பேச ஆரம்பிச்சுட்டாரு. என்னமோ பாஷை பாத்துக்க. ஒரு எழவும் புரியல. கீக்கீ பீப்பீன்னு பேசுதாரு, பதிலு சொல்லுதாரு. கொஞ்ச நேரமா இது நடந்திட்டிருக்கு. பெறவு, 'சாமி பூடத்தை நவுட்டி வைங்க. வச்சிருக்குத எடம் சரியில்ல, கேட்டேளா, வரும் செவ்வாய்க்கிழமை எட்டாம் பூச நடந்ததுக்குப் பெறவு பூடம் வடக்குல இருந்து தெக்க தள்ளி போயிரணும்னு சொல்லிட்டு போயிட் டாரு. அதுக்குப் பெறவு, அதை மாத்திலா இப்பம் இருக்குத இடத்துல பூடத்தை வச்சிருக்கு' என்றார் அவர்.

'கெழவரை புடிச்சா நெறய கதை கெடைக்கும்லா?'

'அதுல உண்மைன்னு எவ்வளவுன்னு யாருல கண்டா?

'ஏல, சாம்பாரு, என்னயலா பொய் சொல்லுதாம்னு சொல்லுத? கொட் டைய கசக்கிப்போடப் போறென்?'

'ஆமா. கசக்குவாரு? சும்மா எடக்குக்கு சொன்னா பொசுக்குன்னுலா பாட் டையாவுக்கு கோவம் வருது'

'நல்லாருக்குல. சும்மாகெடந்தவன் வாயை புடுங்கிட்டு பொய்யுன்னு சொல்லிட்டேளே? ஒங்க சாமான்ல ஈயத்த காய்ச்சு ஊத்துனாதாம்ல சரிபட்டு வருவியோ'

'இதுவேறயா. அதுல ஈயத்த ஊத்துனா என்னாவும்?'

'அதுக்கொரு கதை இருக்கு கேக்காலால'

'மாட்டம்னா சொல்ல போறோம்'

‘'த்தூ' என்ற அவரிடம் வெற்றிலை பாக்கைக் கொடுத்தான் பத்தையூரா பேரன்.

'இந்தாடா ஆரஞ்சு வில்லெ வாங்க இந்த துட்டை வச்சுக்கோ' என்று அவர் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு காரைத் திருப் பினான் அவன்.

'நம்ம செக்கடி பக்கத்துல பன்னி வளக்கம் பாரு பெரமன். அவனுக்கு ஒரு மாமென் உண்டு பார்த்துக்கோ. சட்டிப்பானையளுக்கு ஈயம் பூசுவான். மூஞ்செல்லாம் அருவா வச்சு கொத்துன மாதிரி புள்ளி புள்ளியா இருக்கும் அவனுக்கு. அவன் பொண்டாட்டி, கலருன்னா கலரு அப்படியொரு கலரு. சுண்டுனா ரெத்தம் வந்திரும்னா பாரென். தென் காசி பக்கத்துல உள்ள ஊர்க்காரி போலுக்கு. அவா தெருவுல நடந்தான் னா எங்கூட்டாளியோலாம் வச்ச கண்ண எடுக்காம பாத்துட்டிருப் பானுவன்னா பாரேன். அவெளுக்கும் அவா சொந்தக்காரன் ஒருத்தனுக் கும் அப்படியும் இப்டியுமா இருந்திருக்கு. ரொம்ப நாளா நடந்திட்டிருக்கு இந்தக் கள்ளத்தனம். ஒரு நாளு இங்க வந்திருக்காம். வீட்டுல அவ புருஷன் இல்லன்னதும் இவனுக்கு சும்மாருக்க முடியல. அவளுக்கும் அப்ப்டித்தான் போலுக்கு. வந்த இடத்துல அப்படி இப்டினு இருந்துட் டாம். அந்த நேரம் பாத்து புருஷன்காரன் வந்துட்டான். அந்த மூதியலா வது கதவை ஒழுங்கா சாத்திட்டு உள்ள கெடந்திருக்கலாம்லா. கத ஒழுங்கா சாத்தாம கெடந்திருக்காவோ. 

இவனுக்கு வீட்டுக்குள்ள யாரோ இருக்காவோன்னு புரிஞ்சுட்டு. ஏற்கனவே அவனுக்கு இவ்வோ சங்கதி அரசல்புரசலா தெரிஞ்சிருக்கு. பூப் போல நடந்து கதவு ஓரமா பார்த்திருக்காம். நல்லா தெரிஞ்சிருக்கு. கொஞ்சி குலாவிட்டு இருந்திருக்காவோ. பொண்டாட்டி, இன்னொரு த்தன் கூட படுத்திருக்கத பார்த்தா எவந்தாம் பொருப்பாம் சொல்லு?. ரத்தம் கொதிச்சிருக்கு. அருவாள தேடியிருக்காம். இல்ல போல இருக்கு. காலம் பூரா நெனச்சுட்டே இருக்குத மாதிரி எதாவது பண்ண ணுமேன்னு யோசிச்சிருக்காம். வட பக்கத்துல நம்ம முத்தையாவோட சின்னையா கடை வச்சிருந்தாரு அப்பம். மத்தியான நேரத்துலயே வடை போட ஆரம்பிச்சிருவாரு. ஆம வட போட்டார்னா ஊருக்கே மணக்கும் பாத்துக்கெ".

'வெஷயத்துக்கு வாரும்யா. அவரு ஆம வடை போட்டா என்ன? ஆமைய போட்டா என்ன?' என்றான் பூனா.

'ஊரு கதை கேக்கதுல மூதிக்கு வேகத்த பாரென்'

'யோவ் சொல்லும்யா பாட்டயா?' என்று பக்கத்தில் இருந்து சத்தம். தொடர்ந்தார் தாத்தா.

'இவென் வீட்டுல இருந்து பாத்தாம். கடை தெரிஞ்சுதா. வடயள போட்டுட்டு எண்ணெய் சட்டியை இறக்கி வைக்கதை பாத்துட்டாம் இவன். அப்பதான் எறக்கியிருக்கார்னா என்னா சூடு இருக்கும் பாத்துக்கு. அந்தானி அரவமில்லாம போயி சட்டுனு எண்ணெய் சட்டிய தூக்கிட்டு வந்துட்டாம். வீட்டுக்கு வந்து கதவு ஓரமா பார்த்திருக்காம். அந்தப் பய வேலைய முடிச்சுட்டு அப்பம்தான் மல்லாந்து கிடந்திருக்காம், அம்மணங்குண்டியோட. கதவை டமார்னு தெறந்துட்டு ஊத்துனாம் பாரு எண்ணெய. ஐயோ, அம்மான்னு அவயம். இவென் வேற அதுலயே ஊத்திட்டாம்னா பாரென்"

'எய்யா என்னத்துக்காவும் அது?'

'என்னத்துககவுமா? ஒரே அலறலுலா. வெந்து போச்சு வெந்து. பொண்டாடிக்காரிக்கும் அங்ஙன இங்ஙனன்னு தெறிச்சிருக்கு. சத்தம் கேட்டு ஒடியாந்தவோள்லா ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனாவோ ரெண்டு பேரையும்...'

'செரி அவனுக்கு இப்பம் அது வேல செய்யுமா? வெந்து போயிருக்குமா?'
'அத அவென்ட்டலால கேக்கணும்'

'இப்பம் எங்க இருக்காம்னே தெரியலயே?'

சிறிது நேரம் எல்லாரும் சிரித்துவிட்டு வேலையை ஆரம்பித்தார்கள்.

(தொடரும்)


4 comments:

துபாய் ராஜா said...

// டிப்டாப் செல்வம் இங்கிருந்திருந்தால், 'யோவ் பாட்டையா, பாம்புக்கும் பூதத் தாருக்கும் என்னவே சம்பந்தம்?' என்று கேட்டிருப்பான். எக்காளக் கேள்வி. எடக்காக இன்னும் நிறைய கேட்டிருப்பான். அதற்கும் ஒரு கதை வைத்திருப் பார் தாத்தா.//

அண்ணாச்சி, அந்த கதையை நான் சொல்லுதேன்.நம்ம சங்கிலி பூதத்தார் சாமி இருக்காரே... அவர்தான் கைலாயத்துல இருக்கிற சிவனோட பூதகணங்களுக்கு எல்லாம் பொறுப்பு.. அதான் 'பூதராஜா'ன்னு சொல்லுவோம்.நம்மூர்ல அதான் நிறைய பேருக்கு 'பூதராசு'ன்னு பேரு வச்சுருக்கு.சரி கதைக்கு வருவோம்.

ஒருதடவை சிவபெருமான் சங்கிலி பூதத்தார் கிட்டே கைலாய பொறுப்பை கொடுத்துட்டு பூலோகத்துக்கு போயிட்டு வரேன்னு வந்துட்டார்.அப்படி போன சிவன் திரும்பி வரவேயில்லை. ரொம்ப காலமா பொறுத்துப் பார்த்த பார்வதியம்மா, பூதத்தாரைக் கூப்பிட்டு,'என்னப்பா, பூமிக்கு போன உங்கப்பாவை காணோமே'ன்னு விசாரிக்க, 'இன்னும் கொஞ்ச நாள்ல வந்துருவாருன்னு' பூதத்தார் பதில் சொல்லியிருக்கார். இப்படி பலநாள் ஓடிடுச்சு. கேட்கும் போதெல்லாம் பூதத்தார் இதே பதிலை சொல்ல பார்வதி அம்மா ஒருநாள் கோபப்பட்டு, 'என்ன செய்வியோ, ஏது செய்வியோ, நீயே நேரா பூலோகம் போயி உங்கப்பாவை கையோட கூட்டிட்டு வா'ன்னு உத்திரவு போட, மீறமுடியாத நம்ம பூதத்தாரும் பூமிக்கு கெளம்பிட்டாரு. அப்படி அவர் தேடி வரும்போது தூரத்துல சிவனும் கைலாயத்துக்கு திரும்பி வர்றதை பூதத்தார் பார்த்துட்டார். ஆனா பூதத்தார் வர்றதை சிவபெருமான் கவனிக்கலை. 'ஆகா,அப்பா பார்த்தா கொடுத்த கைலாயப் பொறுப்பை கவனிக்காம, ஊர் சுத்தறதா தப்பா நினைச்சு சத்தம் போடுவாரே, சாபம் வாங்கக்கூடாதேன்னு நினைச்ச பூதத்தார், பாதை ஒரத்துல கிடந்த பாம்புச்சட்டைல புகுந்து சிவபெருமான் கண்ணுல படாம மறைஞ்சுகிட்டார். இதனால்தான் சங்கிலி பூதத்தாருக்கு 'சட்டநாதன்'ன்னு (சட்டைநாதன்) இன்னொரு பேரும் இருக்கு.
அதான் சங்கிலி பூதத்தார் சாமி இருக்கிற இடத்துல பாம்பு இருக்கும். சாமிதான் பாம்பா கண்ணுல படுவாரு. கும்பிடுதவங்க கனவுலயும் பாம்பா தான் வருவார்.ஆபத்து நேரத்துல ‘ சட்டநாதா, சங்கிலிபூதம்’ ன்னு சத்தம் கொடுத்தா சரசரன்னு வந்து உதவுவாரு.

ஆடுமாடு said...


சட்டநாதன் சங்கிலிபூதம் கதையை நல்லாவே சொல்லுதேளே அண்ணாச்சி. உங்ககிட்டயே நிறைய கதை கேட்கலாம் போல இருக்கு.

நன்றி.

துபாய் ராஜா said...

//சட்டநாதன் சங்கிலிபூதம் கதையை நல்லாவே சொல்லுதேளே அண்ணாச்சி. உங்ககிட்டயே நிறைய கதை கேட்கலாம் போல இருக்கு.

நன்றி//

அண்ணாச்சி,எல்லாம் நம்ம கல்லிடைக்குறிச்சி பத்மநாபன் வில்லுப்பாட்டுல கேட்டதும், மேலும் எங்க அப்பா சொன்ன விபரங்களும்தான்….நமக்கு தெரிஞ்சது நாலு பேருக்கு தெரியட்டும்ன்னுதான்..

சங்கிலி பூதத்தார் யாருன்னும் எல்லாருக்கும் தெரியணும்லா... அதையும் சொல்லிபுடுதேன்... தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமுதத்திற்காக திருப்பாற்கடலை கடையும்போது ஆலகால விஷத்தோடு மேலும் பல அதிசயங்களும்,அற்புதங்களும் வெளியே வந்தது.
அதெல்லாம் என்னன்னு வில்லுப்பாட்டுல ரொம்ப அழகா, விபரமா சொல்லுவாங்க. பூதகணங்களும், பூதகணங்களுக்கெல்லாம் ராஜாவான சங்கிலி பூதத்தாரும் ஆக்ரோஷத்தோடும், ஆரவாரத்தோடும் வெளியே வரும்போது எல்லோரும் அஞ்சி நடுங்கி ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர். ஆலகாலவிஷத்தை முழுங்கி எல்லோரையும் காப்பாத்துன சிவபெருமான் தான் பூதகணங்களையும், பூதகணங்களுக்கெல்லாம் ராஜாவான சங்கிலி பூதத்தாரையும் தன்னோட பொறுப்புல ஏத்துகிட்டு கைலாயத்துல வச்சுகிட்டாரு…..

திருச்செந்தூர் போனா மறக்காம பாருங்க…. மூடியிருக்கிற ராஜகோபுரத்து இடது பக்கத்துல சங்கிலி பூதத்தாருக்கு துடியான நிலையம் (பெரிய சிலை கொண்ட சிறிய கோயில்) இருக்கும். வள்ளியூர் முருகன் கோவில், களக்காடு மலைநம்பி கோயில் மேலும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட பல கோயில்களில் பூதத்தார் இருக்கார். எல்லா இடத்துக்கும் எப்படி போனாரு, கடைசியா சொரிமுத்தையனார் கோயிலுக்கு எப்படி வந்தாருங்கிறது எல்லாம் பெரிய கதை.. அம்புட்டுக்கும் ஆதாரமும் இருக்கு….

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலைச் சுற்றி பூதத்தாருக்கு தனித்தனியா 21 நிலையம் இருக்கு… தெரியுமா… அந்த கதையையும் இப்போ சொல்லிடுதேன்….

நெல்லையப்பர் கோயில் கொடிமரத்திற்காக மரம் வெட்ட பொதிகை மலைக்கு போனவங்க விபரம் தெரியாம, சங்கிலி பூதத்தார் இருந்த பிரம்மாண்ட மரத்தை வெட்டி சாய்ச்சுட்டாங்க…. அந்த காலத்துல என்ன இப்போ மாதிரி லாரி,டிரெயிலரா உண்டு….. வெட்டின மரத்துல நெல்லையப்பர் கோயில் கொடிமரம்ன்னு குறிப்பு எழுதி ஆத்துல தள்ளிவிட்டுட்டு எல்லோரும் திரும்பி வந்துட்டாங்க… மழை பெஞ்சு தாமிரபரணிஆத்து வெள்ளத்துல மிதந்து வந்த மரம் திருநெல்வேலி சேந்திமங்கலம் (மணிமூர்த்திஸ்வரம் ) பக்கத்துல கரை ஒதுங்கிட்டு. குறிப்பு பார்த்த ஊர்மக்கள் கோயிலுக்கு தகவல் சொல்லி விட கோயில்ல இருந்து 50.60 மாடு கட்டுன பெரிய வண்டியோட வந்து மரத்தை ஏத்தி கொண்டு போனாங்க….

டவுண் நெல்லையப்பர் கோயில் தெப்பக்குளம் வரை போன வண்டி அதுக்கு மேல நவுர மாட்டேன்கிது… 100 குதிரையை கட்டி இழுங்காங்க… 50 யானையை கொண்டு இழுக்காங்க… வண்டி அசையக்கூட இல்லை…. இது என்னடா சோதனைன்னு எல்லாரும் முழிச்சுகிட்டு இருக்கும் போது ஒரு வயசான ஆளு மேல சங்கிலி பூதத்தார் சாமி வந்து ‘ நான் இருந்த மரத்தை வெட்டி கொண்டு வந்துட்டியளேடா’ ன்னு குதிச்சு, குதிச்சு ஆடுதாரு. ‘ சரி.. நடந்தது நடந்து போச்சு..என்ன பரிகாரம் பண்ணனும்’ன்னு கோயில் நிர்வாகத்தார் கேட்க, ‘கோயிலைச் சுத்தி 21 நிலையம் வச்சு வருஷம் தவறாம கொடையும் விட்டு கொடுக்கணும்’ன்னு சத்தியம் வாங்கின பிறகுதான் வண்டி நவுண்டுச்சாம்…கொடி மரமும் கோயில் போய் சேர்ந்துச்சாம்…
திருநெல்வேலி டவுணுக்கு எப்போ போனாலும் பாருங்க… தெப்பக்குளம் கரையில முத்து மண்டபம்ன்னு பூதத்தாருக்கு முதல் கோயிலும், அப்படியே நெல்லையப்பர் கோயில் எல்லா ரத வீதியிலயும் கோட்டைச்சுவரை சுற்றி மத்த கோயில்களும் இருக்கு… வருஷாவருஷம் கொடையும், பூக்குழி இறங்குறதும் ரொம்ப விஷேசமா நடந்துகிட்டு இருக்கு…

எல்லாம் அய்யன் அருள்……

நன்றி. வணக்கம்.

K.P.SAIKRISHIKAA said...

Raja Sir,Sri Sangili Boothathar full story publish pannungal.
S PItchumani
Tirunelveli