Sunday, November 16, 2014

கொடை 8


கல்லூரியில் இப்போது நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். குளிர் காற்றும் பசுமை பகுதியுமான கல்லூரி வளாகம் அவனுக்கு சுக மான உணர்வைக் கொடுத்தது. தினம் எதையாவது பேசவும் காரணமே இல்லாமல் சிரிக்கவும் எதிரில் போகும் அல்லது வரும், வாசம் மணக்கும் தேவதைகளைப் பற்றி கிசுகிசுக்கள் கிளப்புவதும் அல்லது ஏதாவது காதல் கதைகளைப் பேசுவதும் கிளுகிளுப்பாக இருந்தது அவர்களுக்கு. அவர்களில் ஒருத்தி எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தால் கூட, அவள் தன்னைத்தான் பார்ப்பதாக எல்லோரும் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்கள்.

முப்பிடாதியின் நடை, உடை, பாவனைகளில் மாற்றம் இருந்தது. தனக்குள் ஒரு கதாநாயகத்தன்மை வந்துகொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். எல்லோரும் தன்னையே கவனிப்பதாக முடிவு செய்துகொண்டான். மாணவிகளின் முன் சைக்கிளில் செல்லும் போதும் அவர்கள் எதிரில் நின்று சக நண்பர்களிடம் பேசும் போது ம் எல்லோரும் தன்னையே பார்ப்பதாகவும் தன்னைப் பற்றியே பேசுவதாகவும் அவனுக்குள் தோன்றியது. அப்படியொரு நினைவு, அவனுக்குள் எப்படி நுழைந்தது எனத் தெரியவில்லை.

கல்லூரிக்கு வெளியே, மேல்நோக்கி ஏற்றம் கொண்ட ரோடு. அங்குதான் பஸ் பனிமனை இருந்தது. அதன் கீழ்ப்பக்கம் அதிக வாழை மற்றும் செடிகொடிகளைக் கொண்ட டீக்கடை என்கிற ஓட்டல் இருக்கிறது. ஆசிரியர்களில் இருந்து மாணவர்கள் வரை டீக்குடித்து விடடு புகைப்பிடிக்கும் இடம் இது. கடைகார நாயர் மகன்கள் எல்லோருக்கும் நண்பர்களாகவும் மகள்கள் மாணவிகளின் தோழிகளுமாக இருந்தார்கள். கடையில் எதிரில் கொஞ்சம் மேற்குபக்கம் பிரின்சிபல் வீடு இருந்தது. அதைப் பற்றி யெல்லாம் கவலைக்கொள்ளாமல் அவர் வீட்டின் வாசலில் நின்றே மூன்றாம் ஆண்டு மாணவர்கள் புகைப்படிப்பதை பெருமையாக நினைத்துக்கொள்வார்கள்.

 இந்த கடையில் வைத்துதான் சக்திவேல் வாத்தியார், 'ஏய், நாம பிரண்ட்லியா இருக்கோம். அதுக்காவ, பையங்களும் பிள்ளைலும் நிக்கும்போது எங்கூட சீரெட் குடிக்காத,ன்னா' என்று சொன்னதாக மூன்றாம் ஆண்டு படிக்கும் கணேசன் சொல்லியிருக்கிறான்.

சக மாணவர்களுடன் இங்கு முப்பிடாதியும் வரத் தொடங்கினான். எப்போதும் பேரூந்தின் இரைச்சலும் வாகன் ஒலிகளுமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் இந்த இடத்தில் இருந்துதான் மாண விகள் பஸ்களில் ஏறுவார்கள். அவர்களைப் பார்ப்பதற்காகவே ஏகப்பட்ட மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுடன் டிரைவர், கண்டர்களும் இருப்பார்கள். அவர்களுடன் ஒருவனாக, முப்பிடாதி நின்றபோதுதான் ஒரு படி உயர்ந்துவிட்டதாக, தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டதாக, இந்த சமூகத்தில், தான் ஒரு முக்கிய மானவனாகத் தன்னைத்தானே நினைத்துக் கொண்டான்.

வீட்டில் இருந்து இப்போதெல்லாம் சீக்கிரமே கிளம்பினான். ராஜாவும் வேறு வழியின்றி இவனுக்காகச் சீக்கிரம் வரவேண்டி யிருந்தது. கல்லூரிக்கு, மூன்று ஏ என்கிற எண் கொண்ட பேரூந்தில் ஒரு நண்பர் கூட்டம் வந்து கொண்டிருந்தது. அதில்தான் கடையம், பொட்டல்புதூர், ஆழ்வார்க்குறிச்சியைச் சேர்ந்த மாணவிகள் அரட்டையடித்தபடி வருகிறார்கள். அவர்கள் பேரூந்தில் ஒன்றாக வருபவர்கள் என்கிற நட்பில், அதிக உரிமை எடுத்துக் கொண்டி ருந்தார்கள். மத்தியான சாப்பாட்டு வேளைகளில் மாணவிகளின் டிபன்பாக்ஸ்களை மாற்றிக் கொள்வது, அல்லது பையன்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே சிறப்பு உணவு அல்லது இனிப்பு வகைகளைத் தயாரித்து கொண்டு வருவது உள்ளிட்ட சேவைகளை செய்து, நட்பு வளர்த்தார்கள்.

அந்தக் கூட்டத்தில் ரமாவும் கிருத்திகாவும் அழகானவர்கள். ரோஜாப்பூக்களை ஒத்த ரோஸ் நிறத்தைக் கொண்டவர்கள். அவர் களிடம் ஆழ்வை குத்தாலமும் வெய்க்காலிப்பட்டி சேவியர் என்கிற துரையும் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டு வருவதைப் பார்க்க எரிச்சலாக இருக்கும் முப்பிடாதிக்கு. தனக்கும் அப்படி பேசும், பழகும் வாய்ப்புக் கிடைக்காதா என ஏங்கினான். இதுபற்றி வகுப் புத் தோழன் குத்தாலத்திடம் சொல்லியிருக்கிறான். சுபலட்சுமி இங்கு படித்திருந்தால் தனக்கும் அவளுடன் பேச, பழக இன்னும் அதிக வாய்ப்பு கிடைத்திருக்கும் என நினைத்தான்.

ராஜா, தனது வகுப்பில் படிக்கும் எஸ்.பாக்கியத்தை, ஒரு தலையாகக் காதலித்து வந்தான். இதை அவனே சொன்னான். தனது சாதியை சேர்ந்தவள்தான் என்றும் தனக்கு தூரத்து உறவென்றும் அதனால் கண்டதும் காதல் வந்து தொலைத்து விட்டதாகவும் அவன் சொன்னான். 'அப்பன்னா காதல சொல்லிர வேண்டியதான' என்று முப்பிடாதி சொன்னான்.

அவன் சொல்லும் காதல் கதைகளைக் கேட்க, கேட்க முப்பிடாதிக்கு சலிப்பு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இருந்தாலும் டீச்சர் மகன் என்ற காரணத்தால் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டி யிருந்தது.

அன்று புதன்கிழமை. வகுப்புக்குச் செல்லாமல் காரையாறு செல்ல முடிவெடுத்திருந்தார்கள் ராஜாவும் அவன் நண்பர்களும். ராஜாவுடன் படிக்கும் சுசீந்திரனின் தங்கைக்கு அன்று சடங்கு. அவனை ராஜாவுடன் பார்த்திருக்கிறான் முப்பிடாதி. அதிகப் பழக்கமில்லை.  'நீயும் வா' என்றான் ராஜா. தயக்கமாக இருந்தது அவனுக்கு. பிறகு சரி என்று கிளம்பினான்.

காட்டுக்குள் வளைந்து நெளிந்து சென்றுகொண்டிருந்தது பஸ். மலைகளும் மரங்களுமான காட்டின் காற்று குளிராக இருந்தது. மேலே போகப் போக இன்னும் கொஞ்சம் குளிராக இருந்தது. காரையாறில் போய் இறங்கியதும் பஸ் திருப்பத்துக்குப் பக்கத்திலேயே இருந்தது சுசீந்திரனின் வீடு. எதிரில் அணையில் இருந்து திறக்கப்பட்டிருக்கும் தண்ணீர், ஒரே சீறாகப் பாறையில் படுத்துச் செல்வது போல பயணித்துக் கொண்டிருந்தது. மேடும் பள்ளமுமாக ஏறியும் இறங்கியும் வளைந்தும் செல்லும் அந்த தண்ணீரின் சத்தம் அழகாகக் கேட்டுக்கொண்டிருந்தது. நான்கைந்து பறவைகள் அவற்றின் நடுவில் கிடந்த பெரிய கற்களில் அமர்ந்துகொண்டு சிறகை விரித்து மூடிக்கொண்டிருந்தன.

ஒரு நாளைக்கு இரண்டு முறையோ மூன்று முறையோதான் பஸ் வரும் எனபதால், இறங்கியதுமே சுசீந்திரன் வந்து அழைத்தான். இறங்கியவர்கள் பெரும்பாலும் அவன் வீட்டுக்கு வந்தவர்களாகவே இருந்தார்கள். பெரும் மரங்கள் அடர்ந்திருக்கிற அந்த வனாந்தரம் முப்பிடாதிக்கு ஆனந்தமாக இருந்தது. நடந்து அவன் வீட்டுக்குச் செல்லும்போது சரளைக் கற்கள் அழகான சத்தம் எழுப்பின.

வீட்டைச் சுற்றி கம்பி வேலி கட்டி, அதற்குள் அமைதியாக, பறவைகளின் ஒலிகளைக் கேட்டபடி இருந்தது சுசீந்தரனின் வீடு. வீட்டின் பின்பக்கம் வாழை, நெல்லிக்காய், கொய்யாய், இரண்டு தென்னைமரங்கள் இருந்தன. கண்டங்கத்திரி கொடிகள் ஓரமாகப் படர்ந்துகிடந்தன. வீட்டின் வெளியில் இருந்து பார்க்கும்போதே அவை தெளிவாகத் தெரிந்தன. வீட்டின் முன்னால் பந்தல் போடப்பட்டிருந்தது.

பந்தலுக்குள் உட்கார்வதற்காக சில பிளாஸ்டிக் சேர்களையும் கட்டம் போட்ட போர்வை விரிக்கப்பட்ட கட்டில்களும் போடப்பட்டிருந்தன. அதில் எல்லாவற்றிலும் ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள். சடங்கு, பெண்கள் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் வீட்டுக்குள் பெண்கள் கூட்டம் இருந்தது.

சுசீ, உட்காரச் சொல்லிவிட்டு, எல்லாருக்கும் காபி கொடுக்கச் சொல்வதற்காக வீட்டுக்குள் போனான். வேண்டாம் என்றார்கள் இவர்கள். அவன் அதை மறுத்து, குடிக்கணும் என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டிவிட்டு உள்ளுக்குள் ஓடினான். ராஜாவுடன் வந்திருந்தவர்களில் மூன்று பேர் ஓரமாகப் போய் சிகரெட் குடித்து விட்டு வருவதாகச் சொன்னார்கள். அவர்களுடன் எல்லாரும் கிளம்பினார்கள். பறவைகளின் ஒலியை தவிர, அந்த இடம் அமைதியாக இருந்தது.

முப்பிடாதி அவர்களுடன் செல்லாமல் சேரில் அமர்ந்தபடி, ஓடும் தண்ணீரைப் பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென்று ஒரு கொஞ்சல் சத்தம் வீட்டுக்குள் ளிருந்து வந்தது. திரும்பிப்பார்த்தான். ஜெஸிலா மேரி, ஒரு குழந்தையை கையில் வைத்துக்கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்தாள். வகுப்புத் தோழி. எல்லா பாடத்திலும் அதிக அறிவைக்கொண்டிருக்கிறவள். எல்லோரிடமும் சகஜமாகப் பேசுகிறவள். முப்பிடாதிக்கு மனதுள் மின்னல் வெட்டிப்போக, அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் வெளியே வந்ததும், ஆச்சரியப்பட்டவளாக, 'நீங்க எப்ப வந்தீங்க?' என்றாள். அந்த விசாரிப்பு நெருங்கிய உணர்வை அவனுக்குத் தந்தது. அவன் சொன்னான்.

சுசீந்திரன் தங்கையும் அவளது தங்கையும் ஒன்றாகப் படிக்கிறார்கள் என்பதாகவும் அதன்பொருட்டு தன் தங்கையுடன் இந்த விழாவுக்கு வந்ததாகவும் சொன்னவள், தங்கையை அறிமுகம் செய்தாள். அவர்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது காரையாறு அணையில் இருந்து இறங்கும் சாலையில் ஒரு ஜீப் வந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்தான் முப்பிடாதி. ஜீப் போன பிறகு அங்கு ஓர் ஆணும் பெண்ணும் தனியாக இறங்கி வந்து கொண்டிருந்ததைப் பார்த்தான். அந்தக் கொலுசு சத்தமும் கணீர் என்று சிரிக்கிற் ஆணின் சத்தமும் அவனுக்கு பழக்கப்பட்டவையாக இருந்தன. நெருங்கி அருகே வர வர, அது டிப்டாப் என்பதும் அவள் மகேஸ்வரி என்பதும அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

( தொடரும்)

No comments: