Friday, October 31, 2014

கொடை 4

4.
கணேச மாமா சொன்னது போல்தான் நடந்தது. பிள்ளையார் கோயில் எதிரில் இருக்கிற அரசமரத்தின் முன் இருந்த கற்தூணில் கட்டிவைக்கப்பட்டிருந்தான் அந்த இளைஞன். வ்யது முப்பதுக்குள்ளிருக்கும். பாவூர்ச்சத்திரம் பக்கம் இருக்கும் திப்பனம்பட்டியைச் சேர்ந்தவனாம். ரயில்வே ஸ்டேஷன் சிமென்ட் பெஞ்சுக்கு கீழே இரண்டு சாக்கு மூட்டைகளை வைத்துவிட்டு, கொஞ்சம் தூரத்தில் நின்று பீடிக் குடித்துக் கொண்டிருக்கிறான். மாமாவின் பேச்சுப்படி, கீழப்பக்க முள் காட்டு வழியாக இரண்டு பேரும், முதன்மை வாயில் வழியாக இரண்டு பேரு மாகச் செல்வது, ஓடினால் பிடித்துக்கொள்ள வெளியில் ஒருவர் என திட்டம் போட்டு நின்றிருக்கிறார்கள். முதலில் அந்த மூட்டையைதான் பார்த்திருக்கிறார்கள். அது திருட்டுப் பொருள்தான் எனபதைத் தென்னி நிற்கும் விளக்கின் முன் பகுதி காட்டிக்கொடுத்துவிட, அப்படியே அவனின் பின்பக்கமாக கழுத்தைப் பிடித்து இழுத்திருக்கிறார்கள். அவனிடம் வேறு எந்த திமிறலும் இல்லை. ஓடுவதற்கான சிறு முயற்சி கூட இல்லை. ஓடினாலும் அந்த பனங்காட்டுக்குள் வேறு எங்கும் சென்று விட முடியாது. சைக்கிள் கடை தாசுதான் முதலில் அவன் குறுக்கில் ஓங்கி மிதித்தான். அப்படியே படுத்துவிட்டான். திருநெல்வேலியைச் சேர்ந்த டேவிட்சன் தான் அங்கு ஸ்டேஷன் மாஸ் டர். வெள்ளை உடை அணிந்த அவர் தனது மூக்குக் கண்ணாடியை தூக்கிவிட்டுக்கொண்டு வந்தார்.

'ஏசப்பா, ஏம்யா அவனெ அடிக்கியெ?' என்று மாமாவைப் பார்த்துக் கேட்டார்.
'பாத்தேளா, சாக்குல. காலயிலயே களவான்டுட்டு வந்திருக்காம், செரிக்குள்ள' என்று சொல்லிவிட்டு அவன் கன்னத்தில் அறைந்தார்.

'செரி. போலீஸ் ஸ்டேஷனுக்கு சொல்லுங்க. அடிக்காதீங்க' என்ற அவர் அவனைப் பாவமாகப் பார்த்தார்.

அங்கேயே போட்டு ஆளாளுக்கு அடித்துவிட்டு, இழுத்து வந்துவிட் டார்கள் தெருவுக்கு.

எல்லோரிடமும் அடி வாங்கி கன்னம் வீங்கியிருந்தது. உதடு கிழிந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. இடுப்பு சாரம் தரையில் கிடக்க, பழுப்பு நிற நைந்த ஜட்டியோடும் கிழிந்த மேலுடம்பு பனியனோடும் பரிதா பமாக நின்றான் அவன். தெருவில் போகிற வருகிறவர்கள் எல் லோ ருமே தன் வீரம் காட்ட ஒருவன் கிடைத்திருக்கிறான் என்கிற தோர ணையில் அவனை அடித்துக்கொண்டிருந்தார்கள்.

'என்னைய விட்டிருங்கெ. தெரியாம பண்ணிட்டேன்' என்று கூப்பாடு போடுகிற அவனது கண்ணீரை யாரும் கண்டுகொள்ளவில்லை.

அவன் கட்டப்பட்டிருக்கிற கல்தூணுக்கு வடக்குப்பக்க வீட்டில் இருக் கிற மரகத ஆச்சி, 'ஏலெ அடிச்சது போதும்ல. கொன்னு போட்டு ராதி யெ' என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் பேச்சை யாரும் கேட்ப தாகத் தெரியவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவள், வீட்டுக் குள் எண்ணெய் தேய்த்துக்குளித்துக் கொண்டிருந்த வீட்டுக்காரரை வேகமாக வெளிவரச் சொல்லி, அடிப்பதை நிறுத்தச் சொன்னாள்.

ராசா ஐயர் வீட்டில் இருந்த போனில் இருந்து அம்பாசமுத்திரம் போலீ சுக்குத் தகவல் போய்விட்டது. 'தெரியாம பண்ணிட்டென். மன்னிச் சிருங்கெ' என்று அவன் முனகிக்கொண்டிருந்தான்.

வாய்க்காலுக்குப் போய்விட்டுத் திரும்பிய டிப்டாப், 'ஏலெ தூரப் போங்கெ. ஏங்கூட்டம்?' என்று அவசரம் அவசரமாக சைக்கிளில் இருந் து இறங்கினான்.
'ஐயையோ. கெடுத்துப்போட்டேளே, யாரு இப்டி போட்டு அடிச்சது?' என்றவன் கூட்டத்தை ஒதுக்கிவிட்டு அவனருகில் வந்தான். 'அப்பதத் தாட்ட சொல்லி ஒரு சொம்புல தண்ணி வாங்கிட்டு வாங்கல' என்று தன் சிஷ்யன் ஒருவனை அனுப்பினான். பிறகு அவன் கைகளை அவிழ்த்துவிட்டு அரசமரத்திண்டில் உட்கார வைத்தான்.

'திருட்டு பயட்ட போயி கொஞ்சிட்டிருக்கெ. ஒனக்கென்ன கோட்டியா வே புடிச்சிருக்கு' என்ற செண்பகத்தை, 'தெரியுன்டே போதும்' என்றான் டிப்டாப்.
பிறகு சிஷ்யன் கொண்டு வந்த தண்ணீரைக் கொடுத்து குடிக்கச் சொன்னான். வாயில் ரத்தத்துடன் எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது. கன்னம் நன்றாக வீங்கிவிட்டது. கல்தூணில் பின்பக்கமாகக் கட்டப் பட்ட கைகளில் சிராய்ப்பு. ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

தண்ணீரைக் குடித்துவிட்டு அப்படியே திண்டில் சாய்ந்தான் அவன். தன்னை இப்ப வாவது வந்து ஒருத்தன் காப்பாற்றினானே என்கிற ஆறுதல் அவன் கண்களில் தெரிந்தது. கண்ணீர், ரத்தம் கன்னி வீங்கிய அவனது இரண்டு கன்னங்களிலும் வடிந்துகொண்டிருந்தது. உடல் சோர்ந்து போய் கண்கள் ஏறி இறங்க, அப்படியே தூங்கினான்.

'இப்டி ஒருத்தனெ கொன்னுப் போட பார்த்தேளே?' என்ற டிப்டாப்பிடம், 'அவன் கள்ளச்சாடம் போட்டுட்டிருக்காம். நீ களவாணி பயலுக்கு காலு புடிச்சிட்டிருக்கெ?' என்று சிலர் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தது போலீஸ்.

தூங்கியவனை உசுப்பியதுமே, அதிக தொப்பையையும் நீண்ட மீசை யையும் கொண்ட அந்த போலீஸ்காரர் அவனை அடையாளம் கண்டு கொண்டார்.
'ஏல நீயா... எந்தி எந்தி, நீ என்னைக்கு வெளங்க போற?' என்றார் அவனை.
டிப்டாப், அந்த போலீஸ்காரரிடம் அவன் பற்றிய விவரத்தைக் கேட் டார்.
'இவம் கொட்டாரத்துக்காரம்லா. போன வாரம்தான் வெளியில வந்தான். அதுக்குள்ள இங்க வந்து கைய வச்சிட்டாம்'

'செரிக்குள்ள திப்பனம்பட்டின்னு சொன்னாம்' என்றார் கணேச மாமா. ஓர் அரசு அதிகாரியின் முன் நின்று,  'செரிக்குள்ள' என்ற கெட்ட வார்த்தையை எப்படி பிரயோகிக்கலாம் என்று அந்த போலீஸ்காரர், மாமாவை ஒரு மாதிரியாக முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டார்.

திண்டில் படுத்துக்கிடந்தவன் எழுந்து, தொப்பை போலீஸ்காரரின் காலுக்கு கீழே கைகளைக் கட்டியபடி 'ஐயா ஐயா' என்று உட்கார்ந் தான்.
'யாருய்யா இப்படி அடிச்சது. பாதி உசுரு போன மாரிலா இருக்காம். நீங்க எப்டிய்யா அடிக்கலாம். யாருவே அடிச்சது? பதிலு சொல்லுங்க. பெரிய ஐயா வந்தார்னா நீங்க எல்லாரும் உள்ள போவணும் தெரியும்லா' என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, டீ வந்தது. கவனிப்பு போதாது என அவர் நினைத்திருக்கலாம். தொப்பைப் போலீ சுடன் வந்திருந்த நறுக்கு மீசைப் போலீஸ்காரர், மரகத ஆச்சிக்குத் தூரத்துச் சொந்தக்காரர்.

வடக்குப் பக்க வீட்டின் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு வெற்றி லைப் போட்டுக்கொண்டிருந்த மரகத ஆச்சியைப் பார்த்த அந்த போலீ ஸ்காரர், அவள் அருகில் போனார். காக்கி உடுப்புடன் வருபவரைப் பார்த்ததும் ஆச்சிக்கு சின்ன கலக்கம். நேராக ஆச்சியின் முன் நின்று, 'என்னய தெரியுதா?' என்றார் அந்த நறுக் மீசை போலீஸ்.

'தெரியலயே' என்ற ஆச்சி, மரியாதையின் பொருட்டு உட்கார்ந்த இடத் தில் இருந்து எழுந்து அவரை பார்த்தாள்.

'செங்கோட்டையா பேரன்'

'எய்யா. அப்டியா. ஒங்கல்யாணத்துல பார்த்தது. ஆளே தெரியலயே'
'தென்காசியில வேலை பாத்தேன். அம்பாசமுத்திரத்துக்கு வந்து பத்து நாளாவுது'

உடன் இருக்கிற ஒரு போலீஸ்காரர், அக்யூஸ்ட் கட்டப்பட்டிருந்த தூணிற்கு அருகில் இருக்கிற வீட்டில் போய் இப்படிப் பேசிக் கொண்டி ருப்பதைத் தொப்பைக்காரர் விரும்பவில்லை. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. பிறகு கணேச மாமாவை தள்ளிக் கொண்டுப் போனார் தொப்பைப் போலீஸ். வேப்பமரத்தின் அடியில் நின்று கொண்டு மெதுவான குரலில் இருவரும் பேசிக்கொண்டிருந் தார்கள். மாமா, பதில் ஏதும் சொல்லவில்லை. போலீஸ்காரர் சொல் வதற்குத் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தார்.

அவர்கள் அப்படி என்ன ரகசியம் பேசுகிறார்கள் என்பதைக் கேட்க டிப்டாப் செல்வமும் போனான். அதற்குள் அவர்கள் பேசி முடித்திருந் தார்கள். மாமா, சைக்கிள் கடை தாசுவிடம் போய் ஏதோ பேசிவிட்டு வந்தார். சைக்கிளில் வேறு எங்கோ போய்விட்டு வந்து அந்த போலீ ஸ்காரரிடம் தனியாகப் பேசினார். அரைமணி நேரத்துக்குப் பிறகு அக்யூஸ்ட்டை அழைத்துக்கொண்டு பஸ்சில் ஏறினார்கள். அவனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கோயில் விளக்கும் சருவசட்டியும் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments: