Sunday, October 26, 2014

கொடை 2

2.

தொழுவில் கிடக்கும் பசுவிற்காக, கீழபத்தில் புல்லறுக்கச் சென்றிருந்தாள் ஆண்டாள். முப்பிடாதியின் அம்மா.

நான்கு நாள் பேதியில் படுக்கையில் கிடந்து, ஐந்தாவது நாள் அம்பாசமுத்திரம் தர்மாஸ்பத்திரியில் அவள் கணவனான கண்ணன், கண்ணை மூடிய பிறகு தனி மனுஷியாக முப்பிடாதியை வளர்த்து வருபவள். ஆற்றுபக்கம் அலைந்துகொண்டிருக்கிற வண்ணாத்திப் பேய் தான் அவரைக் கொன்றுவிட்டதாக, ஆண்டாள் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறாள். 'சனியம் புடிச்ச பேயி, நீ நாசமா போயிருவே. எங்கண்ணு கலங்குன மாதிரி நீயும் போயிருவே' என்று கணவனைக் கொன்ற பேய்க்கு இன்னும் சாபம் விட்டுக் கொண்டிருக்கிறவளும் அவள்தான். கோபம், விரக்தி அதிகமாகும் பட்சத்தில் மண்ணை அள்ளி, கிழக்கு பார்த்து வீசி திட்டுபவளுமாக அவள் இருந்தாள். நடு மத்தியானத்தில், இருட்டில் ஒத்த செத்தையில் ஆற்றுபக்கம் நடமாடுகிறவர்களை அந்த பேய்தான் பிடித்துவருகிறது என்பது ஆண்டாளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

சம்முகம் ஆசாரியின் வில் பார்ட்டியில் குடம் அடிக்கும் பூல் தேவரைப் பிடித்திருந்ததும் இந்த பேய் தான். கருப்பசாமி கோயில் பூசாரி, அவருக்கு திருநீறு போட்டு வண்ணாத்தியை ஒட ஓட விரட்டினார்.

எதிர்வீட்டு இசக்கியம்மாளையும் அவள்தான் பிடித்தாள். ராத்திரி நேர ங்களில் அவள் போடும் கூப்பாடில் ஊரே பயந்திருந்தது. அவளுக்குப் பயந்து நாராயணசாமி கோயில் முத்திரியை முடிந்து கொண்டே அங் கிருந்தவர்கள் அலைய ஆரம்பித்தார்கள். ஆண்டாள், சிறு காலண்டர் தாளில் முத்திரியைப் பொதிந்து முப்பிடாதியின் சட்டைப் பாக்கெட்டில் அவனுக்குத் தெரியாமலேயே வைத்திருப்பாள். அவன் பார்த்தால் தூக்கி வெளியே எறிந்துவிடுவான். பிறகு தென்காசியில் இருந்து வந்த லட்சு மண ஜோசியர், அந்தப் பேயை குடுவைக்குள் அடைத்து காட்டில் விட்டு விட்டு வந்ததாகச் சொன்னார். ஆனால், இரண்டு மூன்று மாதங்களில் அது காட்டில் இருந்து ஊருக்குள் வந்து விட்டதை ஆண்டாள்தான் கண்டுபிடித்தாள்.

மத்தியானம் வாக்கில் சுடுகாடு அருகில் ஆடுகளை மேயவிட்டிருந்த கிட்னன் அன்று இரவே சுணங்கிப் போனான். அம்பாசமுத்திரம் தர்மா ஸ்பத்திரிக்கு அவனை, அவன் அம்மா கூட்டிச்செல்லும்போது பார்த்த ஆண்டாள், அவன் முழியை வைத்தே இது வண்ணாத்தி பேய் வேலை தான் என்று சொன்னாள்.
'ஆஸ்பத்திரிக்குலாம் போனா சரியாவாது. கேட்டேளா? யாரயாவது திரு நாறு போட சொல்லுங்க' என்றாள். அவள் சொன்ன மாதிரியே மேல நாராயணசாமி கோயிலில் திருநாறு போட்ட பிறகுதான் பேய் ஓடியது.

வண்ணாத்தி, பேயான கதை ஊரில் எல்லோரும் அறிந்ததுதான். ஆற் றில் நடு மத்தியானம் துணி துவைத்துக்கொண்டிருந்த இளம் வய துடைய சக்தியை, நான்கைந்து பேர் கெடுத்து, ஆற்றுக்குள் புதைத்து விட்டு போய்விட்டார்கள். அவளைக் காணாமல் ஊரெல்லாம் பேச்சாக கிடக்க, அம்பாசமுத்திரம் போலீசில் புகார் செய்திருந்தார் சக்தியின் அப்பா.

அவள் காணாமல் போன மூன்றாவது நாள் மேலப் பிள்ளையார் கோ யில் தெருவைச் சேர்ந்த முத்தையா செட்டியார் இறந்து போனார். அன்று மாலையில அவரை சுடுகாட்டுக்குத் தூக்கிக்கொண்டு போனார் கள். பிணம் வருவதற்கு முன்பே அதற்கான காரியங்களைச் செய்வத ற்காகச் சென்றிருந்த மேட்டுத் தெரு ஆட்கள், மண் அள்ளுவதற்கு குழித் தோண்டிய போது, பாவாடை ஒன்று முதலில் வெளியே தெரிந்திருக் கிறது. சந்தேகத்தோடு இன்னும் கொஞ்சம் குழியைத் தோண்ட மண்வெட்டியில் ரத்தச்சீழ் பட்டு, கப்பென நாற்றம். மூக்கைப் பிடித்துக் கொண்டு வேலையை போட்டு விட்டார்கள். சுடுகாட்டுக்கு வந்த மொத்த ஜனமும் அதைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டார்கள். காணாமல் போன சக்திதான் அது என்பதை புரிந்து கொண்டார்கள்.

போலீஸ் வந்தது. மண்ணைத் தோண்டி அவளின் உடலை எடுத்தார் கள். கழுத்து தனியாக விழுந்திருந்தது. பாவாடை தாவணி, ஜாக்கெட் எல்லாம் தனியாக அவள் மேல் போர்த்தப்பட்டிருந்திருக்கிறது. கொஞ் சம் அழுகிய நிலையில் இருந்த உடலை எடுத்து ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு போனார்கள்.

அதற்கு முன்பே சந்தேகத்தில் மேஸ்த்ரி முருகனையும் குமாரையும் போலீஸ்காரர்கள் பிடித்துக்கொண்டு போனார்கள். ரத்தம் சிதறி இருந்த துண்டை முருகனும், சட்டையை குமாரும் அணிந்திருக்க, வட மாவட்டத்தில் இருந்து புதிதாக வந்திருந்த அந்த எஸ்.ஐ, அங்கேயே அவர்களைப் பிடித்து ஜீப்பில் கொண்டு போனார். பிறகு மூன்று முறை அந்த ஜீப் ஊருக்குள் வந்தது. சுடுகாட்டின் வட பக்கம் இருக்கிற ஐயர் தோப்பில் தென்னை மரத்தில் தேங்காய் பறித்துக்கொண்டிருந்த கொம்ப னையும், கீழ அம்மன் கோயிலில் தாயம் விளையாடிக் கொண்டிருந்த சுப்புவையும் பிடித்துக் கொண்டு போனார்கள். மறுநாள் நாளிதழில் விலாவாரியாகச் செய்தி வெளியாகி இருந்தது.

'இளம் பெண் கற்பழித்துக்கொலை/ போதையில் இளைஞர்கள் வெறிச் செயல்' நான்கு பேர் கைது/ என்ற தலைப்பின் கீழ்.

ஆண்டாள், சொந்த அத்தை மகன் என்பதால் உள்ளூரிலேயே வாக்கப் பட்டிருந்தாள். யாரோ முகம் தெரியாத ஒருவனுக்குக் கழுத்தை நீட்டு வதை விட, தெரிந்த முகமான கண்ணனைக் கட்டிக்கொள்ள ஆண் டாள், சம்மதித்ததால் எளிமையாகத் திருமணம் நடந்தது. ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத வயற்காடு, வேலை, வீடு என்றிருந்த கண்ண னுக்கு வந்த வயிற்று வலி எமனாகிப் போனது அவனுக்கு. முதல் நாள் வயிற்று வலி என்று படுத்திருந்தபோது, அது சாதாரண வலியாகத் தானிருக்கும் என்று நினைத்திருந்தாள். மறுநாள் சரியாகிவிடும் என பெரிய விஷயமாக அதை எடுக்கவில்லை. ஆனால் மூன்றாவது நாளும் அவன் எழ முடியாமல், படுக்கையிலேயே கழித்ததையடுத்துதான் அவள் உணர்ந்து கொண்டாள், அது அந்தப் பேயின் வேலைதான் என்று.

அவளின் அப்பா சுடலைமுத்து, மாட்டு வண்டியில் தூக்கிப் போட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார் அன்று ராத்திரி. அவரிடம் பேய், பிசாசு என்று சொன்னால் எரிந்துவிழுவார் என்பதால் ஆண்டாள் எது வும் சொல்லவில்லை. ராவோடு ராவாக ஆஸ்பத்திரியில் சேர்த்த இரண்டு நாள் கழித்து, ஒரு சொட்டு தண்ணீர் கூட வாயில் இறங்கா மல் பொட்டென்று போய்விட்டான்.

ஊரே கூப்பாடு போட்டு தூக்கிக்கொண்டு வந்தது அவர் உடலை. முப் பிடாதிக்கு அப்போது மூன்று நான்கு வயதிருக்கும். அப்பன் இறந்து போனது தெரியாமல் அம்மாவிடம் முட்டாயி கேட்டு நச்சரித்துக் கொ ண்டிருந்தான்.
'இப்டி பச்ச புள்ளய விட்டுட்டு போயிட்டானெ?' என்று அவனை கை காட்டி சொந்தபந்தம் அழுதபோது, அவன் துள்ளிக்குதித்து விளை யாடிக்கொண்டிருந்தான்.

தகரக்கொட்டகையில் அவனை எரித்துவிட்டு வந்த பிறகுதான் வாழ்வு எத்தனை சூன்யமானது என்பதைப் புரிந்துகொண்டாள் ஆண்டாள். வாழ்க்கை நேர் கோடல்ல. இங்கிருந்து ஆரம்பித்து அங்கு போய் முடிய. அது வளைந்து நெளியும் ஒற்றையடி பாதை. அதன் போக்கில் போக தன்னைப் பழக்கிக்கொண்டாள். சிறு வயலோடும் ஆடு, மாடுகளோடும் கிடைத்த வேலைக்குச் செல்வதென்றும் வாழ்க்கைத் தொடர்ந்து கொண் டிருக்கிறது.
மேல் வீட்டு முத்துசாமியின் அம்மாவுடன் புல்லறுக்கச் சென்றிருந் தாள் ஆண்டாள். வரப்பில் அமர்ந்து அறுத்துக்கொண்டிருந்தபோது கொஞ்சம் மேல் நோக்கி தூக்கியிருந்த குதிகாலில் திடீரென்று வலி. என்னவென்று திரும்பிப் பார்த்திருக்கிறாள். பாம்பு ஒன்று வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. முத்துசாமியின் அம்மாவிடம், 'பாம்பு கடிச்சிட்டு ஓடுதுத்தா' என்று சொல்லிவிட்டு உட்கார்ந்துவிட்டாள். கடித்த இடத்தில் கொஞ்சமாக ரத்தக் கசிவு.

'என்ன பாம்புன்னு தெரியலயெ' என்ற முத்துசாமியின் அம்மா, சும்மாடு துணியைக் கிழித்து பாம்புக்கடித்த இடத்துக்கு மேலே கட்டிவிட்டு, தூரத்தில் சென்றுகொண்டிருந்த கருப்பசாமியிடம் சத்தம் போட்டு விஷ யத்தைச் சொன்னாள். அவன் ஓடிவந்து அவளைத் தூக்கி நிறுத்தி நடக்க வைக்கலாம் என்று நினைத்தபோது மயங்கி அவன் கையில் விழுந்தாள் ஆண்டாள். முத்துசாமியின் அம்மாவுக்கும் கருப்பசாமிக்கும் ஒரு மாதிரியாகி விட்டது. கொஞ்சம் பயமும்.

உயிர் போய்விட்டது என பயந்து இரண்டு பேரும் ஆண்டாளைத் தூக் கியபடி வந்தார்கள். வாய்க்காலுக்குள் இறங்கி ஏறியதும் கீழ ரைஸ் மில் வாசலில் யாரிடமோ பேசிக்கொண்டு நின்றிருந்த பிரமாட்சித் தேவரிடம் விஷயத்தைச் சொன்னதும், அவர் சைக்கிளின் பின்பக்கம் உட்கார வைத்து, பாய் டாக்டர் வீட்டுக்கு வேகவேகமாகக் கொண்டு போனார்கள். இவர்களைப் பின் தொடர்ந்து 'என்னாச்சு?' என்று கேட்டுக் கொண்டே சிலர் வந்துகொண்டிருந்தார்கள்.

'என்னாச்சுன்னு தெரியலயே'

'பேச்சு மூச்சு இல்லங்காவோ'

'நேரங்கெட்ட நேரத்துல இவளுக்கு பாரேன்...'

-பெண்களில் சிலர் முந்தானையை மூக்கில் வைத்து பேசிக்கொண்டே நடந்து வந்தார்கள்.

இறக்கத்தில் இருந்தது பாய் டாக்டர் வீடு. சாலையில் இருந்து இறக்கி சென்றால் வலப்பக்கம் நான்காவது வீடு. பச்சைக்கலரில் டாக்டர் ரஹ் மான் என்ற பெயர் எழுதப்பட்ட போர்டை வாசலில் கொண்டிருந்த வீடு அது. வாசல்படியை மட்டும் விட்டுவிட்டு இரண்டு பக்கமும் பெரிய அளிகளைக் கொண்ட வராண்டா. இடது பக்க வராண்டாவில் தான் டாக்டர் கிளினிக் வைத்திருந்தார்.

சைக்கிளை நிறுத்தி அப்படியே தூக்கிக்கொண்டு போனார்கள் ஆண் டாளை. உடலில் அசைவு ஏதும் இல்லை. அவளை உள்ளே இருந்த பெட்டில் படுக்க வைக்கச் சொன்னார் டாக்டர். இதே போல பல பாம்புக் கடிகளைப் பார்த்தவர் என்பதால் அவர், மற்றவர்களை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு உள்ளே என்னவோ செய்தார். வாசல் கதவில் இருந்து பார்க்க அதற்குள் கூட்டம் கூடி விட்டது.
அரைமணி நேரம் கழித்துதான் முத்துசாமியிடம் விஷயத்தைச் சொல் லி முப்பிடாதியை அழைத்து வரச் சொன்னாள் அவனின் அம்மா. முப்பி டாதி பதட்டத்தில் வந்தபோது அவள் கண் விழித்திருந்தாள். 'ஒண் ணுமில்ல' என்றவள் அவனைப்பார்த்ததும் அழுது துடித்தாள். பிறகு கண்ணீரைத் துடைத்துவிட்டு, 'என்ன பாம்புன்னு தெரியல' என்று கேட்ட வர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆண்டாள்.

நான்கைந்து மாத்திரைகளை வாங்கிவிட்டு அவருக்கான ரூபாயை பிறகு தருவதாகச் சொல்லிவிட்டு நடந்தாள். காலில் கட்டுப் போடப் பட்டிருந்தது. தரையில் குதிகாலை அழுத்தினால் வலி எடுத்தது. டாக்டர் அந்த இடத்தைச் சுரண்டி மருந்து கட்டியிருப்பார் என நினைத்துக் கொண்டாள். கூடியிருந்த கூட்டம் ஆளாளுக்கு ஏதேதோ பேசிக் கொண் டார்கள்.

முத்துசாமியிடம் சைக்கிளை வாங்கி, அவளைப் பின்பக்கம் உட்கார வைத்து உருட்டிக்கொண்டு சென்றான் முப்பிடாதி. கம்யூனிஸ்ட் கட்சி ஆபிசைத் தாண்டும்போது, ஆபிஸின் கூரைக்குள் படுத்திருந்த மலை யரசு தாத்தா, தலையை தூக்கிப் பார்த்து, 'ஆண்டாளு எப்டியிருக்குல?' என்றார்.
மலையரசு தாத்தாவால் வேகமாக எழுந்து நடக்க முடியாது. கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்துகொண்டே ரோட்டில் போகிற வருகிறவர்களிடம் சத்தமாகப் பேசுவார். ஊரில் எங்கு என்ன பிரச்னை நடந்தாலும் இவரு க்கு முதலில் தெரிந்துவிடும். சுடலைமுத்து தாத்தாவின் நண்பர். விவ சாய சங்கத்துக்காக, சில வழக்குகள் அவர் பெயரில் இருக்கின்றன. ஆக் ரோஷமும் அன்பும் கொண்ட மலையரசு தாத்தாவுக்கு தோல் நோய் வந்தது கட்சி பிரச்னையில் ஏற்பட்ட தகராறில்.

'அப்பம்லாம் இப்பம் மாறியா? காங்கிரஸ் கட்சிக்காரனுவளுக்கும் கம்னீஸ்ட் கட்சிக்காரனுவளுக்கும் ஆவவே ஆவாது. கடானநதி அணை திறக்குத நேரத்துல காமராஜரு இருக்கார்லா, காமராஜரு. அவரு வந்தி ருந்தாரு. இங்க மலையரசுதான் பஞ்சாயத்து தலைவரு. அணையை சுத்தி இவ்வளவு விவசாயம் நடக்கு. இவ்வளவு புஞ்சை, இவ்வளவு நஞ்சை. இவ்வளவு தண்ணி வேணும்னு புள்ளி விவரமா பேசுனத பார்த் து காங்கிரஸ்காரங்களுக்கே புல்லரிச்சு போச்சுன்னா, பாத்துக்க. இவ்ளவு வெவரம் தெரிஞ்சவன் இங்க இருந்தா நமக்கு ஆபத்துலன்னு அம்பாச முத்ரம் காங்ககிரஸ் கட்சிக்காரனுவோ நினைச்சானுவோ. ஒரு நாளு ராத்திரி பிரம்மதேசத்துல கம்னீஸ்ட் கட்சிக் கூட்டம். முடிஞ்சு ராத்திரி பதினோரு மணிவாக்குல சைக்கிள்ல வந்திட்டிருந்தாரு மலையரசு. சைக்கிளை ஓட்டுனது காக்கநல்லூரு வேலன்னு ஒருத்தன். இவரு பின்னாலதான் ஒக்கார்ந்திருந்திருக்காரு. காக்கநால்லூர் வெலக்கு வந்ததும் ஒரு லாரி வந்திருக்கு. இவெங்க ஒதுங்கி நின்னுருக்காங்க. அதுல இருந்து இறங்குனவனுவோ நல்லா அடிச்சு, அரிவாள வச்சு கொத்திப் போட்டுட்டு போயிட்டானுவோ. செத்து போயிருப் பாவோ ன்னு அவனுவளுக்கு நெனப்பு. காலையில போன மொத பஸ்ல இருந் தவங்க ஆளு இப்படி குலை உசுரா கெடக்கதை பார்த்துட்டு  ஊர்ல வந்து சொல்லியிருக்காவோ. பிறகு அப்டியே தூக்கிப் போட்டு அம்பாச முத்திரம் ஆஸ்பத்ரிக்குப் போயிருக்காவோ. மருத்து மாத்ர கொடுத்து சரி பண்ணுனாவோ. ஒரு மாசம்லா ஆஸ்பத்ரியில கெடந்தாரு. கட்சி தான் செலவழிச்சுச்சு. பெறவு உடலு கொணமாயிட்டுனாலும் தோல் நோயி வந்துட்டு பாத்துக்கெ. காங்கிரஸ்காரனுவோ டாக்டரை வழிக்குக் கொண்டு வந்து மருந்தை மாத்திக் கொடுத்துட்டானுவளாங்கும்'- என்று பிரமாட்சித் தேவர், ஒருமுறை சொல்லியிருக்கிறார்.

கை மற்றும் கால் விரல்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புண்ணாகி இப் போது மருந்து மாத்திரைகளால் ஓரளவு கட்டுப்பாடோடு இருக்கிறது. பாதி மொழுக்கட்டையான கைவிரல்களைக் கொண்டே சிவப்பு துண் டை தோளில் அவர் ஏற்றிப் போடுவது லாவகமாக இருக்கும்.

நோய் வந்த பிறகு பொண்டாட்டிப் பிள்ளைகளை விட்டுவிட்டு கட்சி ஆபிஸுக்கு வந்துவிட்டார். அவர் குடும்பத்தில், போகவேண்டாம் என்று மறுத்தும் பிடிவாதமாக நின்றார். கட்சிக் கட்டிடத்தின் மேல் பக்கம் போஸ்டர்கள் மற்றும் அதை ஒட்டுவதற்கான பசை தயாரிக்கும் பணிக் காக இருந்த அறை, மலையரசு தாத்தாவுக்காக மாற்றப்பட்டது. அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு, ஊரில் முதல் முதலாக கக்கூஸ் கட்டப்பட்டதும் அங்குதான். அவருக்கான மருத்துவம் மற்றும் சாப் பாட்டுச் செலவை ஆபிஸே ஏற்றது. கட்சி அபிமானியான பக்கத்தூர் கருப்பையா டாக்டர், வாரம் ஒரு முறை அவருக்காக ஸ்கூட்டரில் இங்கு வருவார். மருத்துவத்துடன் நம்பிக்கை அளித்து விட்டுப் போ வார். கட்சி ஆபிஸ் என்பதால் அங்கு மட்டும்தான் தினமும் நான் கைந்து நாளிதழ்களை வாங்குவார்கள். கல்லூரி படிக்கும் அண்ணன்கள் இங்கு வந்துதான் அதை வாசிப்பார்கள். அவர்களிடம் மலையரசு தாத்தா நிறைய பேசிக் கொண்டிருப்பார்.

யாரையும் ஒரே அதட்டலில் மிரட்டி விடுகிற கம்பீரக் குரல் அவருக்கு. அவருக்கு ஊரில் இருந்து மேல்பக்கம் இருக்கிற கோவிந்தபேரிதான் சொந்த ஊர். கட்சிக்காகவும் விவசாய சங்கத்துக்காகவும் முழுமையாக இறங்கிவிட்டதால் எப்போதும் இங்குதான் இருப்பார். அக்கம் பக்கத்து ஊர்களில் பிரச்னை என்றாலும் இவர்தான் செல்வார். சிலம்பம் மற்றும் வாள் சண்டைகளில் வல்லவரான தாத்தா, நேரம் கிடைக்கும்போது ஆற்றுமணல் பரப்பில் அதைச் சிலருக்குச் சொல்லிக் கொடுத்தும் வந்தார்.

சிலம்பாட்டக்காரர்கள் ஒவ்வொருவரும் அவரது ஆசான்களைப் பின்ப ற்றியே புகழ் போடுவார்கள். புகழ் என்பது ஆசிரிய வணக்கம். குரு மரி யாதை. உள்ளூரில் ஏற்கனவே சிலம்பம் சொல்லிக்கொண்டிருக்கிற கிருஷ்ண தாத்தா போடும் புகழ் வேறு மாதிரியானது. அவர் சொல்லிக் கொடுப்பதும் அப்படியானதுதான். வலதுகையால் கம்பை இரண்டு முறைச் சுற்றி, ஒரு எட்டு முன் துள்ளி பிறகு அக்கம்பை இடது கைக்கு சுற்றியபடியே மாற்றி, இடக்கையால் இரண்டு முறை வளைத்து சுற்றி, தரையில் சாய்வாகக் கம்பை ஊன்றி கழுத்தை உடலோடு இறக்கி குனிவது ஒரு முறை. இதுதான் பெரும்பாலான கம்புச் சுற்ற லின் புகழ் வழக்கம். ஆனால் மலையரசு தாத்தாவின் புகழ் வேறு வித மானது.

முன்காலை மடக்கி நின்றபடி பின்காலை நீட்டி அமர்ந்து வலப்பக்கம் இரண்டு இடபக்கம் இரண்டு சுற்று சுற்றி, அந்தரத்தில் ஒரு டைவ் அடித்து முன் பக்கம் வந்து கம்பை சாய்த்து தரையில் ஊன்றிக் குனி வது. சாரத்தைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு அவர் டைவ் அடிப்ப தை பார்க்கச் சிறுத்தை பாய்வது போல இருக்கும்.

கருநிற தேகம் கொண்ட மலையரசு தாத்தாவுக்கு இலேசாக திருக்கிய மீசைதான் அழகு. எப்போதும் எண்ணெய் தடவப்பட்ட உடலில் மயிர் கள் அற்ற மேனியில், நெஞ்சிலும் வலது கையிலும் வெட்டுத் தழும்பு கள், வழு வழுவென மின்னிக்கிடந்தன.

இப்போது வயதாகிவிட்டது. கட்சிப் போராட்டத்தின்போது போலீஸ் காரர் அடித்த அடியில்தான் அவருக்குத் தோல் நோய் வந்துவிட்டதாக ஊரில் பேசிக்கொண்டார்கள். போகிற வருகிறவர்களிடம் எடக்கும் எக்காளமுமாக வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து கொண் டிருக்கிற மலையரசு தாத்தா, அவருக்கான உணவை அவரே சமைத் துக் கொள்கிறார். எப்போதாவது கட்சிக்காரர்கள் வீட்டில் இருந்து கறி, மீன் சாப்பாடும் வரும்.
அம்மா சைக்கிளை நிறுத்தச் சொல்லி, 'இப்ப பரவாயில்ல சின்னையா' என்றாள்.

'ஊர்ல அவ்ளவு எடம் கெடக்கு புல்லறுக்க. கீழ பத்துல போயா நீ புல் லறுப்ப? சும்மாவே அது மோசமான எடம்னு ஊரெல்லாம் சொல் லுதாவோ' என்று செல்லமாகச் சத்தம் போட்டுவிட்டு, 'நாமதாம் பாத்து இருந்துக்கணும்ல. இனும அங்க போவாத' என்றார். அம்மா தலையா ட்டினாள். சைக்கிளை உருட்டிக்கொண்டு வீட்டுக்கு நடந்தான்.

(தொடரும்)

No comments: