Thursday, March 13, 2014

சினிமா: ஆவணப்படுத்தலின் அவசியம்

மண் சாலைகளில் மரங்களோடு மாட்டு வண்டிகளும் டிராம் வண்டிகளும் போகும் பழங்கால சென்னையை, புகைப்படங்களில் பார்த்திருக்கலாம். ‘இந்த இடமா? அப்ப இப்படியா இருந்திருக்கு?’ என்கிற ஒப்பீடு அதைப் பார்த்ததும் வந்து போகிறது மனதில். ஒரு பழங்கால சினிமா என்றால், அந்த காலகட்ட மனிதர்களின் உடைகள், சிகை அலங்காரங்கள், சாலைகள், கோயில், குளம், பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் காட்டும் பொக்கிஷமாக இருக்கிறது. அந்த சினிமாவில், ‘ஏம்பா அண்ணாசாலையில இருந்து மயிலாப்பூருக்கு 20 பைசா கேட்கிற?’ என்று ஒருவர் ரிக்ஷாக்காரரிடம் பேசினால், அதுதான் கவனிக் கப்பட வேண்டிய, பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணம். அந்த 20 பைசா அப்போதையை பொருளாதாரத்தைப் பேசுகிறது. அது பேசாத விஷயங்கள் நிறைய. இது ஒரு உதாரணத்துக்குத்தான்.

இப்படி நம் சமூகப் பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டிருக்கும் சினிமாக்களை ஆவணப்படுத்தும் அவசியம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. தமிழ்த் திரைப்படங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்று சொல்லி சொல்லியே மறைந்து விட்டார் இயக்குனர் பாலு மகேந்திரா.

‘எனது, ‘வீடு’, ‘சந்தியாராகம்’, ‘மறுபடியும்’ படங்களின் நெகட்டிவ்கள் வீணாகிவிட்டன. இனி அவற்றைப் பார்க்க முடியாது. என் மூன்று பிள் ளைகள் என் கண்முன்னே இறந்துவிட்டது போல ஒரு சோகம் என்னைக் கவ்விக்கொண்டது’ என்ற பாலுமகேந்திராவின் வார்த்தைக்குள் பெரும் வலி இருந்தது என்பதை மறந்துவிட முடியாது.

1987, 1993&ம் வருட படங்களுக்கே இந்த நிலை என்றால் பழங்கால படங்களுக்கான நிலை என்ன? நாம் போற்றிய, நம் முன்னோர்கள் பாராட்டிய திரைப்படங்கள் இப்போது என்ன நிலையில் இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

சினிமாவில் முங்கி, சினிமாவில் எழும் இனம், நம் இனம். அப்படி சினிமாவை நேசிக்கிற, சுவாசிக்கிற இனத்தின் பண்பாட்டை ஆவணப் படுத்து தலின் மூலமே அடுத்தத் தலைமுறைக்கு அதைக் கொண்டு செல்ல முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் சினிமா அடைந்திருக்கும் வளர்ச்சி, உள்ளடக்கம், உருவம் மற்றும் கதை சொல்லும் உத்தி, அதன் மாற்றம் போன்றவற்றை ஆராய்கிற திரைப்பட மாணவர்கள், திரைப்படகாப்பகம் இன்றி அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆய்வு நோக்கத்துக்கு மட்டுமன்றி நம் பழங்கால சினிமாக்களை அறிய நினைக்கிற எதிர்கால சந்ததியினருக்கு காட்சிவழியாக, நம் அடையாளங்களை, பழக்க வழக்கங்களை, கடந்த கால பிரச்னைகளைக் கொடுக்க, ஆவணப்படுத்தி இருந்தால் மட்டுமே முடியும்.

பிலிம்யுகமும் இன்று முடிவுக்கு வந்துவிட்டது. நெகட்டிவ் ஓய்ந்து விட்டது. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்றொரு படத்தை இப்போது திரையிட நினைத்தால் கூட சாத்தியமில்லை. ஏனென்றால் தியேட்டர்கள் டிஜிட் டலுக்கு மாறிவிட்டன. மொத்தமாக டிஜிட்டல் ஆக்கிரமித்துவிட்டது. இந்த காலகட்டத்தில் ஆவணப்படுத்துதல் என்பது எளிதானதுதான். மொத்தமாக படப்பெட்டிகளைப் பாதுகாக்கும் நிலைமை போய், டிஸ்க்கில் பாதுகாக்கும் முறை இப்போது வந்திருக்கிறது.

அதை தனிநபர் செய்வதென்பது முடியும் காரியமல்ல. சினிமா தயாரிக்கும் கார்பரேட் நிறுவனங்கள், தயாரிப்பாளர் சங்கம் போன்ற திரைப்பட அமைப்புகள் அல்லது தமிழக அரசே முன்னெடுத்தால் மட்டுமே அது சாத்தியம்.

தினகரன் தலையங்கம் 03.03.1214

No comments: