Tuesday, February 26, 2013

கனவுகள் புதையாத வனம்

எனது பட்டப்பெயர் சொல்லி அவள் இப்படி அழைப்பாள் என்று நினைக்கவில்லை. அந்த வார்த்தையை கேட்டதும் சிறுவயது நினைவுக்குள் சென்று திரும்பியிருந்தேன். நினைவின் அடுக்குகளுக்குள் நொடியில் சென்று வந்ததில் அவளது அந்த இளம் வயது முகம் கண்முன் வந்து நின்று சிரித்தது. வலப்பக்க ஒற்றைக்கல் மூக்குத்திதான் அவளது ஞாபகமாக எப்போதும் எனக்குள் இருக்கும் ஒன்று.

அம்மன் கோவில் வாய்க்காலில் இருந்து ஆற்றுக்குச் செல்லும் பாதையாக இருக்கிற வரப்பில் நின்று, திரும்பி பார்க்கிறேன். என் பின்னால் யாருமில்லை. எதிரில் சீதா லட்சுமி நின்றிருந்தாள். நான் ஒதுங்கி அவளுக்கு வழி விட்டால் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு வரப்பை சுரண்டியிருந்தார்கள். மாட்டு வண்டி சென்ற வரப்பு இன்று, நண்டு போகும் பாதையாக மாறியிருக்கிறது. சுரண்டல் என்பது எல்லா பக்கமும்தான். அவள் ஆற்றோரத்தில் இருக்கிற தோப்புக்குச் சென்று வருகிறாள். வலது கையில், முடிச்சுப்போடப்பட்ட இரண்டு இளநீர்களை வைத்திருக்கிறாள். பின்னால் அத்தோப்பில் வேலைபார்க்கிறவர் வரலாம். மேல் உதட்டில் அழகு தந்துகொண்டிருக்கிற அதே மச்சம் இப்போது இன்னும் பளிச்சென்று இருக்கிறது.  கண்ணாடியின் பவர் அதிகமாகி இருக்கலாம். மற்றபடி அதே, கொஞ்சம் இளமை சிதைந்திருக்கிற சீதா லட்சுமி. என்னை அப்படியே பார்க்கிறாள் புன்னகை மாறாமல்.

''தெண்டலுன்னு சொன்னதுல கோவமா?' என்று கேட்டுவிட்டு என் கண்களைப் பார்க்கிறாள். நரைத்த மீசையை தடவி விட்டபடி இல்லை என தலையாட்டுகிறேன். நரை மறைந்து இளமை வந்து ஒட்டிக்கொள்கிறது. பவர்கிளாஸுக்கு பதிலாக கூலிங் கிளாஸ். பாதையாக இருக்கிற வரப்பை சுற்றிப் பயிர்கள் வளர்ந்து நிற்கின்றன. இளையராஜாவின் பின்னணி இசையோடு ஏதோ ஒரு ராகத்தில் அழைக்கிற குயிலின் குரல் தேடி ஓடுகிறேன். சேலை முந்தானை காற்றில் பறந்தபடி எதிரில் வந்து நிற்கிறாள் அவள். மூச்சிரைத்தபடி நின்றுகொண்டு அவள் கண்களைப் பார்க்கிறேன். தரை நோக்குகிறாள் அவள். காதல் சிதறி வயல்வெளி எங்கும் ஓடுகிறது. அதை அள்ளுவதற்காக மீண்டும் தொடர்கிறது என் ஓட்டம்.

'இன்னும் அப்படியே தான் இருக்கீங்க?' குரல் கேட்டு கலைகிறது நினைவு. 'நீங்களும் அப்படியேதான் இருக்கீங்க' என்ற வார்த்தையை என்னிடமிருந்து எதிர்பார்ப்பதை போல, இதை அவள் சொல்லியிருக்கலாம். இல்லையென்றால் எதையாவது பேச வேண்டுமே என்பதற்காக இருக்கலாம்.

-தெண்டல் (ஓணான்) என்பது எனது பட்டப்பெயர். பள்ளியில், வகுப்புத் தோழர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்த பெயரை அவள் இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறாள் என்பது ஆச்சரியம்தான். வகுப்புகளை புறக்கணித்து விட்டு, ராமருக்கு சிறுநீர் கொடுத்த தெண்டலை சுருக்கு கம்பி போட்டு இழுத்து கொல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். அதை கடவுளுக்கு செய்கிற கடமை என்று அப்போதைய சேக்காளிகள் சொன்னதையடுத்து அதை கொலைவெறியோடு கொன்றுக்கொண்டிருந்தேன். அறியா வயதின் அறியாமை அது. எப்போதும் தெண்டல் பற்றிய பேச்சு சிந்தனையில் இருந்ததால் நண்பர்கள் அதை பட்டப்பெயர் ஆக்கிவிட்டார்கள். பள்ளிக்கூடத்திலும் அப்படியே கூப்பிடலானார்கள். கணக்கு எடுக்கும் காசி சார்வாள், காதை திருகி மண்டையில் கொட்டி, 'தெண்டலை கொல்வியா? கொல்வியா?' என்று கண்ணீர் வர அடித்ததில் இருந்து, தெண்டலை மறந்துவிட்டேன் என்றாலும் பட்டப் பெயர் ஒட்டிக்கொண்டது.

அம்மன் கோவில் வாசலுக்கு வலப்பக்கம் இருக்கிற ஆல மரம், பெரிதாக வளர்ந்திருக்கிறது. சுற்றிலும் கட்டப்பட்டிருக்கிற சிமெண்ட் சுவர்களை பெயர்த்து தள்ளிக்கொண்டு வேர்களும் கிளைகளும் திமிறிக்கொண்டு நிற்கின்றன. சமதளமாக இருந்த ஒரு கல்லில் உட்கார்ந்துகொண்டாள் சீதா லட்சுமி. நான் அவளுக்கு எதிரில் உட்கார்ந்தேன்.

 ''என்னயெ இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களெ?' என்றதும் மீண்டும் சிரிக்கிறாள்.  'அவ்வளவு சீக்கிரம் மறந்துடுத மாதிரியா பண்ணியிருக்கீங்கெ?' என்று சொல்லிவிட்டு புன்னகைத்தாள். அவளிடம் அதிகம் பிடித்தது இந்த சிரிப்புதான்.

'ஒங்க வீட்டுக்கார என்ன பண்றார்? எத்தனை குழந்தைகள், பிள்ளைகள்லாம் என்ன பண்றாங்க?' என்பது உட்பட சம்பிரதாய விசாரிப்புகள் தொடர்ந்துகொண்டிருந்தாலும் உள்ளுக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பது அவளுக்கும் எனக்கும் தெரியும். முகம் நேரே பார்த்துக் கொண்டிருந்தாலும் மனம் எங்கெங்கோ அலைந்துகொண்டிருக்கும் அதிசய வித்தை சுகமானதுதான்.

காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. கோயிலில் அம்மனுக்கு பூஜை பண்ணும் நாராயண கம்பர், உற்றுப் பார்த்துவிட்டு 'எப்ப வந்த சொடலை' என்றவாறே அருகில் வந்தார்.

 'ரிட்டையரு ஆயிட்டியாமே. இப்பவாவது ஊர் யாவம் வந்துச்செ. பிள்ளைலுவோலுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி கொடுத்துட்டன்னு சொன்னாவோ. ஆயிரம் இருந்தாலும் நம்மூர் ஆத்துல குளிச்ச மாதிரியும் இந்த அம்மன் கோயில்ல உக்காந்து காத்து வாங்குன மாதிரியும் வேறெங்கயாவது இருக்குமா சொல்லு. இன்னைக்கும் ஐயமாருவோ தெருவுல, வெளியூர்ல போய் வேலை பாத்தாலும் வருஷா வருஷம் லீவுக்கு வந்துருதாவோல்லா' -பேசிக்கொண்டே இருந்தார் கம்பர்.  பிறகு பூஜைக்காக யாரோ சில பெண்கள் வநததும், 'பேசிட்டிருங்கோ, வாரேன்' என்று கோயிலுக்குள் போனார்.

'ஊருக்கு வந்தா அதிக நாள் இருக்கிறதில்லை. மேக்சிமம் ரெண்டு நாள்தான். ஒரு முறை நீ வந்திருக்கிறதா கேள்விபட்டு எப்படியாவது பார்க்கலாம்னு நினைச்சேன். நீ என்ன நினைப்பியோன்னு நானே வேண்டாம்னு விட்டுட்டேன்' என்று சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தேன்.

'நான் என்ன நினைக்கப் போறேன். அப்போ உன் மேல கோபம் இருந்தது, உண்மைதான். பிறகு எல்லாத்துக்கும் நடக்கிறதுதானேன்னு கோபத்தை விட்டுட்டேன்'

சீதா லட்சுமி இப்படி சொல்லிவிட்டாலும் அது நினைத்து ரசிக்கிற விஷயமாகவே இருக்கிறது. ப்ளஸ் ஒன் ஆண்டு இறுதி தேர்வு நடந்துகொண்டிருந்தது.  வெயில் கொளுத்திக்கொண்டிருந்த ஒரு மதியத்தில் யாருமற்ற தெருவில் எனக்கு முன் அவள் சென்றுகொண்டிருந்தாள். உள்ளுக்குள் பயம் இருந்தாலும் அவளிடம் பேசிவிடுவது என்று முடிவு செய்தேன். பேசிவிடுவது என்பது காதலை சொல்லிவிடுவது என்பது. அவள் என்னை கவனிக்கவில்லை. நடையை வேகவேகமாகப் போட்டேன். சரியாக அவள் அருகில் சென்றதும் கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. உடலில் பதட்டம். என்ன பேச என்றும் தெரியவில்லை. ஒத்திகை பார்த்த விஷயங்கள் உதட்டுக்குள்ளேயே அமுங்கி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாகத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டேன்.

'எப்படியிருக்கெ?'

எல்லா காதலர்களுக்குமான பயம் கலந்த முதல் வசனம் விசாரிப்பாகத்தான் இருந்திருக்கும் என் நினைக்கிறேன். இப்படியொரு கேள்வியை அவள் எப்படி எடுத்துக்கொண்டாளோ தெரியவில்லை. தலையை குனிந்துகொண்டு சிரித்தாள். எனக்கு அது போதுமானதாக இருந்தது. ஆனால் அவள், 'ஒடம்பு சரியில்லெ. என்ன பண்ணலாம்னு இருக்கெ?' என்று கேட்டதும்தான் நிலைகுலைந்து போனேன். நான் பேசியதை அவள் விரும்பவில்லை என்று புரிந்துகொண்டேன். இதை ஆசிரியர்களிடம் அவள் சொல்லிவிட்டால்,  அம்மா, அப்பாவை வரவழைக்கச் சொல்வார்கள். அடுத்து டிசியை கொடுத்துவிடுவார்கள். அவள் உறவினரிடம் சொன்னால், திட்டலாம் என மனம் கோணலாகச் சிந்தித்துக்கொண்டிருந்தது.

அதற்குள் எனக்குப் பின்னால் இருந்து சீதா லட்சுமியின் தோழி சுபா வந்திருந்தாள்.  'என்னடி, என்ன சொன்னான்?' என்று சிரிப்பு சத்தத்துக்கு இடையே சுபா அவளிடம் கேட்பது எனக்கு கேட்டது. பிறகு என்ன பேசிக்கொண்டார்களோ தெரியாது. நான் ஒரு மாதம் வரை அவள் முகத்தை பார்ப்பதையும் அவள் கண்ணில்படுவதையும் தவிர்த்துவந்தேன். இருந்தாலும் இதை தொடர முடியவில்லை. மனதுக்குள் அடிக்கடி வந்து இம்சை செய்துகொண்டிருந்தாள். பிறகு அவள் போகும் பஸ்சில் செல்வது, அவள் ஆற்றுக்கு வரும் வரை காத்திருப்பது, வந்துவிட்டால் அவள் குளித்து முடித்து கிளம்பும்வரை நானும் குளிப்பது உள்ளிட்ட விஷயங்களை, அதாவது அவள் பின் அலையோ அலையென முன்பை விட அதிகமாக அலையத் தொடங்கி இருந்தேன்.

ஒரு தலையாக அவளைக் காதலிக்கத் தொடங்கினேன். இது அவளுக்குத் தெரியுமா, தெரியாதா என்ற சந்தேகம் எனக்குள் வலுத்துக்கொண்டே சென்றது. எனது வீட்டுக்கு அருகே இருக்கிற அவளது தோழி, டீச்சர் மகள் பூர்ணாவிடம், ''சீதா லட்சுமி ஏன் கொஞ்ச நாளா டல்லா வாரா?" என்று கேட்டுத் தொலைக்க, அவள் போய் என்ன சொன்னாளோ தெரியாது, என்னை எரித்துவிடுவது போல பார்க்கத் தொடங்கி இருந்தாள் சீ.லட்சுமி.

இப்படியாகத் தொடர்ந்த என் காதல் பள்ளி முடிந்து கல்லூரிக்கு சென்ற பின்னும் தொடர்ந்தது. அவள் குற்றாலத்திலும் நான் பாபநாசத்திலும் படிக்க நேர்ந்த பிறகு அலைவதற்கு பொருளாதார பிரச்னை நெருக்கடி கொடுக்க, மனதை கல்லாக்கிக் கொண்டு காதலை நடுரோட்டில் விட்டுவிட்டு வந்தேன்.

பிறகு காலம் சிதைத்து சின்னாபின்னமாக்கி திருமணம், குழந்தை, குட்டி என்றான பிறகு எப்பொழுதாவது ரோட்டில் அழகானப் பெண்கள் தென்படும்போதோ, பீச்சில் தோள்மேல் கைபோட்டுக்கொண்டு யாருடனோ ஒருத்தி பேசிக்கொண்டிருக்கும்போதோ, நெஞ்சை உருக்கும் பாடல் காட்சிகளில் ஹீரோவின் நெஞ்சில் ஹீரோயின் சாய்ந்துகொண்டிருக்கும்போதோ கண்ணுக்குள் கை காட்டி நிற்பாள் சீதா லட்சுமி. மற்றபடி ஒரு தலைக்காதல் ஒரு ஓரமாக மனதுள் மங்கிப்போய் கிடந்திருந்தது. இதோ முப்பத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு என் பழைய காதலியுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். என் காதலை, நான் அவள் பின்னால் அலைந்த விஷயம் உள்ளிட்ட எல்லாவற்றையும் அவள் தெரிந்து வைத்திருக்கிறாள்.

 'படிக்கும்போது இப்படி உட்காரவோ, பேசவோ ஒரு நாள் கூட சந்தர்ப்பம் கொடுக்கலை. இப்ப நிறைய பேசணும்போல இருக்கு' என்றேன், அவள் கண்களை பார்த்தபடி.

'அப்ப பேசினேன்னு தெரிஞ்சிருந்தா, எங்கப்பா படிப்பை நிறுத்தியிருப்பாரு'.

'அந்தளவுக்கு என்ன பண்ணினேன்?'

'நீ பாட்டுக்கு ஊர் பூரா, உன்னை நான் காதலிக்கிறதா வதந்தி பரப்பியிருந்தே...'

'...'

' உங்கிட்ட மட்டும்தான் நான் பேசுவேனாம். உன் மேல பைத்தியமா அலைஞ்சுட்டு இருந்தேனாம். இப்படி நீ கண்ட கண்ட இடத்துல கதைவிட்டிருக்கே. சுபா ஒரு நாள், 'உன் லவ்வர் போறான்'னு உன்னை காண்பிச்சா.  என்னடி உளர்றன்னு திட்டினேன். அப்புறம்தான் விஷயத்தை சொன்னா. அவளோட தண்டோராவுல வேற, என் பெயர் டேமேஜ் ஆனதுதான் மிச்சம்'

'இது எல்லாமே உனக்கு தெரிஞ்சிருக்கே?'

'தெரியும்'

'நிஜமாவே என்னை நீ லவ் பண்ணலையா?'

'உன்னை முதன்முதலா பார்த்தப்ப என்னமோ மாதிரி இருந்தது. அன்னைக்கு பூரா உன்னை பத்தியே சுத்திட்டிருந்தது மனசு. அதற்கடுத்த நாட்கள்ல, 'இது சரிபட்டு வராது'ன்னு மாத்திட்டேன்'

'அதெப்படி, உங்களால மட்டும் இது முடியுது?'

'எது?'

'ஈசியா எல்லாத்தையும் மாத்திக்கிறது?'

'நீ மாத்திக்கலையா?'

'என் நிலைமை வேற?'

'அதுதான் எனக்கும்'

இவ்வளவு வருஷத்துக்குப் பிறகு இந்த விஷயங்கள் தேவையா? என்று மனதுள் கேட்டுக்கொண்டேன். இதற்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இது காதல் தொடர்பானது. வயதை கடந்தது. அதுமட்டுமின்றி மனதுக்குப் பிடித்த ஒருத்தியுடன் இவ்வளவு வருடங்களுக்கு பிறகு பேச வாய்ப்பு கிடைத்ததே சுவாரஸ்யம்தான் என்று மனதை திடப்படுத்திக் கொண்டேன். இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு பேச, வேற விஷயங்களே கிடைக்கவில்லையா? என்று மனைவி கேட்பது போல் இருந்தது. மனைவியிடம் இந்த விஷயத்தை சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வாள். 'ஒங்களை பத்தி நிறைய சொல்லியிருக்கார்' என்று அவள் சம்பிரதாயமாகச் சொல்லலாம். 'அப்படி என்ன சொன்னார்' என்று சீதாலட்சுமி கேட்டால் என்ன பதில் சொல்வாள் என்று மனதுக்குள் ஒரு விவாதம் நடந்துகொண்டிருந்தது.

கோயிலை இரண்டு மூன்று முறை யாரோ சுற்றிக்கொண்டிருந்தது தெரிந்தது. மூக்குக் கண்ணாடியை சரி செய்துவிட்டு பார்க்கிறேன். வாய்க்காலில் சில பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  என மனதுக்குள் பூ பூத்தது. ஈரக்காற்றின் மீதேறி மெதுவாகப் பறக்கிறது நினைவுகள். சீதா லட்சுமி கண்களை தரையில் அலையவிட்டபடி சின்னதாகப் புன்னகைக்கிறாள். அந்த புன்னகையில் உயிர் அசைந்து எழுகிறது. இதே புன்னகையைத் தேடித் தேடி எத்தனை முறை சிதைந்திருக்கிறேன்.

'இவ்வளவு வருஷத்துக்குப் பிறகு நாம சந்திப்போம்னு நினைச்சியா?'

'நீ?'

'நினைச்சேன். இப்படி சந்திப்பேன்னு நினைக்கலை' என்று சொன்னதும் சிரித்தாள். நானும் சிரித்தேன். எங்கள் சிரிப்பை கேட்டுவிட்டு தாவணி அணிந்த பெண் ஒருத்தி அதிசயமாகப் பார்த்துப்போனாள். ஒரே இடத்தில் இருந்திருந்ததால் கால் பிடித்துக்கொண்டது. எழுந்து நின்று கைகளை விரித்தேன். காற்று உடலுக்குள் சென்று தழுவிவிட்டுப் போனது. அவளும் எழுந்து வேறு கல்லில் உட்கார்ந்துகொண்டாள். தூரத்தில் யாரோ காளை மாடுகளை குளிப்பாட்ட வருவது தெரிகிறது. மனதில் ஓரத்தில் இருந்து அவளிடம் சொல்ல, பேச ஒவ்வொரு விஷயமாக வெளிவந்துகொண்டே இருந்தது. ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் பேசி தீர்த்துவிட முடியவில்லை.பேசினாலும் தீர்ந்துவிடக்கூடிய விஷயமும் இல்லை.

'சாயங்காலமா நாலு மணிக்கு வீட்டுக்கு வாயேன். பேரக்குழந்தைகளோட வீட்டுக்காரரும் வந்திருப்பார். இன்னும் பேசலாம்' என்றபடியே எழுகிறாள். சரி என்று சொல்லிவிட்டு அவள் பின் தொடர்கிறேன். இருவரும் பெருமாள் கோவில் அருகில் பிரிகிறோம். புன்னகைத்தபடியே சொல்கிறாள். அவளை பிரிய முடியாமல் காதல் மனம் நடக்கிறது. மனதுக்குள்ளிருந்து உற்சாகக் குரல் ஒன்று கேட்டுக்கொண்டிருந்தது. வீட்டுக்கு நடக்கும்போது நினைத்தேன், முதலில் தலைக்கும் மீசைக்கும் டை அடிக்க வேண்டும் என்று.

3 comments:

தமிழ்விடுதி சத்யபிரபு said...

ராஜ் சார் ரொம்ப அருமையா எழுதி இருக்கிங்க எனக்கு ரொம்ப பிடிச்சிறுக்கு என்னக்குள்ள ஏதோ நினைவுகள் வந்துட்டு போன மாறி இருக்கு சார்.
னானும் ஒரு கதை எழுதி இருக்கிறேன் நேங்க படிச்சி பாத்துட்டு சொல்லுங்க சார்

haipuppy said...

thalaippukku thakuntha maathiri irukku.kadantha kaala ninaivukalai asaipoda vaiththathu.nandri

P.PAUL VANNAN said...

..........................
.........................
..........................
...........................
......
...........................

ENNA VENUMO ELUTHI EDUTHU KOLLAVUM.

FILL IN THE BLANKS , ROMBA KASTAM FILL PANDRADHU , HOPE TILL UR LAST BREATH ...... RASITHEN KURUKURUPPUDAN.


P.PAUL VANNAN