Sunday, January 20, 2013

பறவைகள் சாயும் காலம்

மாலை மற்றும் விடுமுறை நாட்களில், கவட்டை (உண்டி வில்) இல்லாமல் நீல் ஆம்ஸ்ட்ராங்கைப் பார்ப்பது கடினம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிடிப்பு மாதிரி, நீலுக்கு கவட்டைக் கம்பு பிடித்திருந்ததற்கு காரணம் ஏதும் தெரியவில்லை. ஆனால், அவன் வீட்டைச் சுற்றி இருக்கிற மரங்களில் தங்கும் பறவைகளுக்குத் தெரிந்திருக்கலாம். இரவு நேரங்களை விடுத்து பறவைகள் அந்த மரங்களை அண்டாததற்கு அவன் மட்டுமே காரணம் என்பதை அவனும் அறிந்திருந்தான். ‘நீல் என்கிற சாதாரண மனிதனின் கவட்டைக் கம்புக்கெல்லாம் பயங்கொள்கிற ஆள் நானில்லை‘ என்பது மாதிரி சில காகங்கள் அங்கு கூடு கட்டியிருந்தன. மரத்தில் இருக்கிற, பறக்கிற அல்லது மின்கம்பத்தில் அமர்ந்திருக்கிற பறவைகளை மட்டுமே நீல் குறிபார்ப்பதால் கூடுகள் பிழைத்திருந்தன.


நீலுடன் செல்கிற யாருக்கும் அவ்வளவு சரியாகக் குறிபார்த்து அடிக்கத் தெரியாது. அவர்கள் கத்துக் குட்டிகளாகவே இருந்தார்கள். அந்த கத்துக் குட்டிகளில் நானும் ஒருவன். ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்ட கூலாங்கல்லைக் கொண்டு கவட்டையை இழுத்து அவன் விட்டால் கண்டிப்பாக ஏதாவதொரு பறவை உயிரிழந்திருக்கும். பறவைகளைக் கொல்வது அவனது நோக்கமல்ல. உயிர்களைக் கொல்வது பாவம் என்பதும் அவனுக்கு தெரியாததல்ல. ஆனாலும் கொக்கு, கருவாலி, புறா உள்ளிட்டவை அவ்வளவு ருசியாக அமைந்துவிட்டதற்கு அவனையும் குற்றம் சொல்ல முடியாது. ‘கொக்கு டேஸ்ட்டு எப்படியிருக்குங்கெ? நெய்ல போட்டு எடுத்த மாரிலா இருக்கும்’ என்று நீல் வர்ணிக்க ஆரம்பித்துவிட்டால் எச்சில் ஊறுவதை தவிர்க்க முடியாது.

ஊரில் எல்லோரும் ஒரே மாதிரியாக கவட்டைக் கம்பு வைத்திருந்தால் நீலிடம் வித்தியாசமானதாக இருக்கும். எல்லோரும் சைக்கிள் டியூப்பையும் மூன்று இஞ்ச் அளவு மாட்டுத்தோலையும் பயன்படுத்தி, ஆங்கில ‘வி’ வடிவம் போலான கவட்டையை உருவாக்கி இருப்பார்கள். அந்த கம்புகள் கருவை முட்களை வெட்டி எடுத்தவையாகத்தான் இருக்கும். ஆனால், நீல் ஆம்ஸ்ட்ராங்க் மாறுபட்டவன். பேட்டையில் வசிக்கிற நரிக்குறவர் ஒருவரிடம் காசு கொடுத்து, ரயில் டியூப் என்று சொல்லப்படுகிற கட்டி ரப்பரால் கட்டப்பட்ட கவட்டையை வாங்கி இருந்தான். கம்பு கூட மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒன்று. சைக்கிள் டியூப்பில் உருவாக்கப்பட்டவைக்கான ஆயுள் குறைவுதான். ஆனால் கட்டி ரப்பர் கவட்டை ஸ்ட்ராங்கானது. கல்லை வைத்துக்கொண்டு, பலம் கொண்ட மட்டும் இழுத்துவிட்டால் அடிபடுகிற எதுவும் லேசாகப் பட்டால் கூட கண்டிப்பாக விழுந்துவிடும்.

மாலை நேரங்களில் ஆளுக்கொரு கவட்டையை தூக்கிக் கொண்டு நீல் ஆம்ஸ்ட்ராங்கைப் பின்பற்றி கடனாநதி ஆற்றுக்கு நடப்போம். போகும் வழியில் ஆர்வக் கோளாறுகளான நாங்கள், மின் கம்பத்தில் அமர்ந்திருக்கிற பறவைகளில் ஏதாவது ஒன்றை குறிபார்க்க, சம்பந்தமில்லாமல் கல் எங்கோ போய் விழும். ‘போங்கலெ. நீங்கெல்லாம் ஒரு ஆளு‘ என்பது போல அந்த பறவை நெற்றிக்கு நேரே வந்து, கிண்டலாகப் பறந்து போகும். இருந்தாலும் எங்கள் முயற்சியை விடுவதில்லை. ஆனால், நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு இயற்கையாகவே குறிபார்த்து அடிக்கும் வல்லமை இருந்தது. கருக்கல் நேரங்களில் ஆற்றோரப் பொத்தைகளில் இருந்து கருவாலிகள் கூட்டம் கூட்டமாக வரும். கோழி குஞ்சு போல இருக்கிற கருவாலிகள் சிறிது தூரம் மட்டுமே பறக்கும் தன்மை கொண்டவை. ஆனால், வேகமாக ஓடக்கூடியது. இவற்றில் நான்கைந்தை குறி பார்த்து சாய்த்து பண்ணிவிட்டால், நீலுக்கு குஷிதான். அவை அவ்வளவு சீக்கிரத்தில் மாட்டியும்விடாது. கருவாலி ருசி போரடித்துவிட்டால் இருக்கிறது புறாக்கள். சுப்பையா தோப்பில் இருக்கிற பெருங்கிணற்றில் வசிக்கிற புறாக்கள், நீலுக்கு இரையாவதற்கென்றே வாழ்ந்து வருதாகத் தோன்றும். ஒன்றை அடித்தால் மற்றவை பறக்கத் தொடங்கும். பிறகு கும்பலாக பறக்கின்றவை மீது குருட்டாம்போக்கில் அடித்தால் கூட ஏதாவது ஒன்று விழும்.

இவ்வாறு அடிபடும் பறவைகளை கறி வைப்பதற்காக, நீலின் வீட்டுக்குப் பின்பக்கம் தனி அடுப்பு ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. மசாலா உள்ளிட்டவற்றை சுப்ரும் நீலும் பார்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கான உதவிகளை மட்டும் நாங்கள் செய்வோம். சட்டியில் கொதித்துக் கொண்டிருக்கும்போதே சங்கருக்கு எச்சில் ஊறும். கொதித்து இறக்கியதும் உடனிருக்கும் குட்ட கணேசன், ராஜா ஆகியோருக்கு இருப்பு கொள்ள முடியாது. அகப்பையில் இருந்து கொஞ்சமாக கையில் ஊற்றி நக்குவான் சங்கர். ஒரே ஒரு துண்டை மட்டும் எடுத்து வெந்துவிட்டதா என்று பார்ப்பான் சுப்ரு. வாசனை மூக்கை துளைத்து பக்கத்து வீட்டு பிச்சம்மா மைனி, ‘என்னடெ அவிக்கியோ?’ என்று கேட்டுக்கொண்டே வருவாள். அவள் போடும் அவயத்தில் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு இன்னும் கொஞ்சம் சத்தமாகக் கேட்கும். வந்துவிட்டதற்காக, அவளுக்கும் பங்கு. இப்படி பங்கு வாங்குவதன் காரணமாக, சில நேரங்களில் மசாலா அரைத்து கொடுத்து உதவுவதையும் மைனி செய்து வந்தாள். அவளது மசாலாவில் காரம் அதிகமாக இருக்கும் என்பதால் அடிக்கடி அவளை தொந்தரவு செய்வதில்லை.

இப்படி விதவிதமாக சாப்பிடும் பொருட்டு வாரத்துக்கு ஒரு முறை முயல் பிடிக்கச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கான இடமாக ஆற்றுக்கு செல்லும் வழியில் இருக்கிற தோப்பு கண்டறியப்பட்டது. முயல் கறிக்கான போட்டி, தெருவில் அதிகம் இருந்ததால் குறைந்தது இரண்டு மூன்று முயல்களாவது வேண்டும். அந்த தோப்பு அவ்வளவு லேசில் சென்று வரக்கூடியதல்ல. உள்ளேயே இரண்டு மூன்று கி.மீ தூரத்துக்குப் போய்க்கொண்டே இருக்கும். இதில் எங்கு போய் முயலை பிடிப்பது என்கிற பயம் எனக்கு. அதுமட்டுமில்லாமல், மழை, வெள்ள காலத்தில் ஆற்றில் அடித்துவருகிற மலை பாம்புகள் அத்தோப்பில் குடியிருந்து வருவதாகச் சொல்லப்படும் கதைகளால் இன்னும் பயந்திருந்தேன். ‘போலெ பயந்தாங்கொள்ளி. ஹெட் லைட்டு இருக்கு. டார்ச் லைட்டெ எடுத்துக்கிடுவோம். பெறவு எதுக்கு பயப்படுதெ?’ என்பான் குட்ட கணேசன் பெரும் வீரனைப்போல.

சாயங்காலம் கிளம்புவோம். போகும் வழியில் முயலை நினைத்துக்கொண்டே நாங்கள் சென்றுகொண்டிருக்க, நீல் மட்டும் ‘கொஞ்சம் நில்லுங்கலெ’ என்பான். கருவைமுட்களின் அடியில் தெரிகிற பொந்தில் பாம்பின் தலை ஒன்று தெரியும். ‘எங்க கண்ணுக்கு ஒண்ணுமெ தெரியலெ. ஒனக்கு மட்டும் எப்டிடெ தெரிது’ என்று ஆச்சரியப்படுவோம். கவட்டையில் கல் ஏற்றப்படும். அடுத்த நிமிடம், பாம்பின் மூஞ்சில் கல்பட்டு, பொந்து சிதைந்திருக்கும். உள்ளே பாம்பு உருள, கம்பால் அதை வெளியே இழுப்பான். எங்களுக்கு பயம். தூரமாக நின்றுகொள்வோம். பிறகு அப்படியே ரோட்டில் போட்டுவிட்டு நடப்பான். பஸ் உள்ளிட்ட வாகனங்களில் அடிபட்டு நசுங்கி, நான்கைந்து நாட்களில் காய்ந்த முருங்கைக்காய் மாதிரி ரோட்டின் ஓரத்தில் கிடக்கும் அது. அந்த வழியாகச் செல்லும் நாங்கள், ‘நீலு அடிச்சது’ என்று பெருமைப்பட்டுக் கொள்வோம். ‘நீல் கொன்னதா?’ என்று ஆச்சரியமாக கேட்பார்கள் தெருக்காரப் பெண்கள்.

இருட்டத் தொடங்கிவிட்டது. தோப்புக்கு வேலி என்ற ஒன்று இருந்தாலும் குறுக்கு வழிதான் பிடித்தமாக இருந்தது. கள்ளிச்செடியை நீக்கி விட்டு உள்ளே இறங்குவதுதான் வழக்கம். இறங்கி மெதுவாகப் போய்க்கொண்டிருந்தோம். நெற்றியில் ஹெட்லைட் மாட்டிக்கொண்டான் நீல். வழக்கமாக அவன் பார்க்கும் இடத்தில் தேடினான். மாட்டிக்கொண்டது. ஹெட்லைட் ஒளியில் முயல் ஒன்று அப்படியே பார்த்துக் கொண்டிருக்க, டார்ச்சின் மண்டையால், அதன் மண்டையில் கணேசன் போட்டான் ஒரு போடு. டொப்பென சரிந்ததை தூக்கி பையில் போட்டுக்கொண்டான் சுப்ரு. இன்னும் இரண்டு வேண்டுமே. தோப்புக்குள் நடந்தோம். கிடைக்கவே இல்லை. வந்ததற்கு நான்கைந்து மாங்காய்களையும் பறித்துக் கொண்டு திரும்பினோம். ஏற்கனவே அடித்திருந்த கருவாலிகளும் கறிக்கு தயாராக இருந்தன.

வீட்டில் கறி வைத்துக் கொண்டிருக்கும்போது, பின் பக்கம் குடியிருக்கிற மல்லிகா அத்தை, ‘எங்கூட்டு கோழியெ காணலெ. எருக்கெடங்குல கோழி எறவு கெடக்கு. களவாண்டு கறிவச்சு தின்ன பாவியோ உருப்புடுவேளா நீங்கெ?‘ என்று ஆவேசங்கொண்டு ஆடிக்கொண்டிருந்தாள். அவள் ஜாடை மாடையாக பேசுவது எங்களைத்தான் என்பது குத்துமதிப்பாகத் தெரிய வந்தது. அவள் போட்ட அவயத்தில், ‘ஏ மல்லி, என்னட்டி சத்தம் போடுதெ‘ என்று அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் சேர்ந்துவிட்டார்கள். நேராக, நீலின் வீட்டுக்கு வந்தவர்கள், கத்தத் தொடங்கிவிட்டார்கள். அவள் சொன்ன கோழி இறகு, கருவாலியின் இறகு. அதை அவளுக்குப் புரிய வைப்பதற்குள் பெரும் களேபரமாகிவிட்டது.

வெளியூர் சென்றிருந்த நீலின் அப்பா, சரியாக வந்து சேர்ந்தார். கூட்டத்தையும் விஷயத்தையும் கேள்விபட்டு கொதித்து எழுந்து, ‘இந்த பெயலுவோ கூட சேராதென்னு சொல்லிருக்கெம்லா. ஏம்லெ சேர்ந்தெ. ஒன்னால எனக்குதாம் கேவலமா இருக்கு‘ என்று போட்ட அடியில், நாங்கள் ஓடிவிட்டோம். பிறகு அவள் வீட்டுக் கோழி நள்ளிரவில் வந்து சேர்ந்த பின்தான் பிரச்னை முடிந்தது. இல்லையென்றால் வரலாற்றில் வீண்பழியை சுமந்தவர்களாக எங்கள் டீம் ஆகியிருக்கும்.

நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டில் நீளமான ரெட்டைக்குழல் துப்பாக்கி ஒன்று உண்டு. அவர்கள் வீட்டில் அதை தொங்கப்போட்டிருக்கும் அழகே தனி. அதைப் பார்க்கும் போதெல்லாம், கவுண்டமணி ஒரு படத்தில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு, ‘எங்கெ புலி, எங்கெ புலி’ என்று அலைவது ஞாபகத்துக்கு வரும். அந்த துப்பாக்கி, நீலின் அப்பா வேட்டைக்கு செல்வதற்கு. அவர் வேட்டைக்கு செல்லும்போது, நாங்கள் கூட செல்ல முடியாது என்பதால், நீல் சொல்லும் கதைகளை நம்ப வேண்டியதாக இருக்கும்.

‘மிளாவெலாம் லேசுல சுட முடியாது தெரியும்லா. எங்கப்பா சுட்டார்னா, ஒரே சுடுல, நாலஞ்சு மிளா ஒண்ணு போல விழும்‘ என்கிற போது, ‘அதெப்படிடெ’ என்று யாரும் கேள்வி கேட்கக் கூடாது. கேட்டால், ஆட்டைக்கு சேர்த்துக்கொள்ள மாட்டான் என்பதால் ‘அப்டியாடெ’ என்று ஆச்சர்யம் காட்டுவோம். நீலுக்கு அந்த துப்பாக்கியை தூக்கிக்கொண்டு வந்து எங்களோடு முயல் சுட வேண்டும் என்ற ஆசை. துப்பாக்கி ரெடியாக இருந்தாலும் ‘ரவை’யை அவனது அப்பா பீரோவில் பூட்டி, எண்ணிவேறு வைத்திருப்பதால் தொட முடியாது. இருந்தாலும் ஆசை அடங்கக் கூடியதா என்ன? ஒரு நாள், ‘ரவை போட்டுக்கொடுங்கெ. மொயலு சுட போறென்‘ என்று நீல் கேட்க, ‘இதெ ஒழுங்கா புடி பாப்போம்’ என்று துப்பாக்கியை தூக்கி கொடுத்துவிட்டார். அதைத் தூக்கி நெஞ்சிக்கு மேல், தோள் பட்டையில் வைத்து குறிபார்ப்பது எவ்வளவு சிரமம் என்பது தெரிந்தது. அதன் நீளமும் கனமும் பிரச்னையாக இருந்ததால், ‘ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ கதையாய், ‘வேண்டாம்’ என்றான் அப்பாவிடம்.

‘‘இப்பம் துப்பாக்கியெ வச்சு சுடுதெம்னு வையென். தப்பிப் எவென் மேலயும் ரவை பட்டுட்டு வையி, சும்மா விடுவானுவெளா? நமக்கு கவட்டைதாம்டெ சரி?’’ என்று முடிவுக்கு வந்தான். போதாக்குறைக்கு பக்கத்துத் தெரு பெரிசுகள், ‘‘ஒடம்புக்கு செரியில்லடெ. மொயல் கெடச்சா, கொஞ்சம் கறி கொண்டாந்து கொடு’’ என்று பாசமாகக் கேட்டுப் போனதையடுத்து நீல், ‘கவட்டைக்காரன்‘ ஆனான்.

கவட்டையும் கையுமாக எப்போதும் அலைந்த நீல் ஆம்ஸ்ட்ராங்க், இப்போது ஆசிரியர். மலையடிவார கிராமமொன்றில் புத்தகமும் கையுமாக இருக்கிற அவனுக்கு கவட்டையும் கருவாலிகளும் மறந்திருக்கலாம். ஆனால், குருவிகளையும் மைனாக்களையும் கல்லால் குறிபார்த்து அலைகிற அவனது இரண்டாவது மகன், இன்னொரு நீலாகவே தெரிகிறான்.

3 comments:

Unknown said...

kavatai eppodu thaan arinthu konden nandri..

vimal said...

எனது பால்ய சிநேகிதனுடன் நான் கவட்டையுடன் திரிந்த காலத்தை ஞாபகபடுத்திவிட்டீர்கள் கிட்ட தட்ட நீங்கள் எழுதியுள்ளது போலவே கவட்டையால் அடிக்க பட்ட குருவிகளை நண்பனின் பாட்டி வறுவல் செய்து கொடுத்தது கண் முன் நிழலாடுகிறது . நன்றி

ஆடுமாடு said...

Nantri Mary Jose and Vimal.