Sunday, December 23, 2012

சங்கீதம் பூக்கும் சாலை

தங்கம்மன், முத்தாரம்மன், மந்திரமூர்த்தி, நாராயணன், ராமர், பாண்டிராசா ஆகிய கோயில்களின் பெயரில் தெருக்கள் அழைக்கப்படுகிற ஊரில், தன் பெயரில் ஒரு தெரு இல்லாதது பிள்ளையாருக்கு வருத்தமாகக் கூட இருந்திருக்கலாம். அந்த வருத்தத்தை அல்லது கோபத்தை ஏதாவதொரு வழியில் காட்டுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அப்படி ஏதும் நடந்துவிடவில்லை. ஊருக்குப் பொதுவாக பல பிள்ளையார் கோயில்கள் இருந்தாலும் அதில் வசதியானவராக, பாபநாசம் செல்லும் சாலையில் கோயில் கொண்டிருந்த ‘ஆருத்ரா கணபதி' இருந்தார். இவர் பணக்காரர் ஆவதற்கு வியாபாரிகள் சங்கம் காரணமாக இருந்தது. மற்ற பிள்ளையார்கள் சாதாரணமாக விழாக்களை கொண்டாட, இவருக்கு மட்டும் விமரிசையாக எல்லாம் நடக்கும். அதில் ஒன்று மார்கழி பஜனை.


கோபால் பாட்டன்தான் பிள்ளையார் கோவில் பஜனையில் முதன்மைப் பாடகர். பாடகரென்றால் கர்நாடகச் சங்கீதத்தில் கரை கண்டவர் என்று நினைத்துவிட வேண்டாம். சங்கீதம் தெரியாது என்றாலும் இனிமையாகப் பாடுபவர். வயதாகிவிட்டதால் கொஞ்சம் பிசிறும் தடுமாற்றமும் இருக்கிறது என்றாலும் ஆளை மயக்குவதாகவே அவர் குரல் இருக்கும். அதனாலேயே அவர் முதன்மை பாடகர் ஆனதாக நினைத்துக் கொள்ளலாம். அல்லது அவரே, நான்தான் பாடுவேன் என்று அந்த உரிமையை எடுத்துக் கொண்டிருக்கலாம். ஏனென்றால் உள்ளூர் வியாபாரிகள் சங்கத்தில் அவர் மூத்த தலைவர் என்பதாலும் கோயில் காரியங்களில் முன் நிற்பவர் என்பதாலும் அவருக்கு கொஞ்சம் அதிகப்படியான உரிமை கொடுக்கப்பட்டிருந்தது. அந்த உரிமையில் பஜனைக்கான லீடராகவும் கருதப்பட்டார் அவர்.

இந்த பஜனைக்கு, இரண்டு செக்குகள் வைத்திருந்த முத்துசாமி ஆர்மோனியப் பெட்டியுடனும் தச்சு வேலை செய்கிற ஐயாபிள்ளை மிருதங்கத்துடனும் நடுங்கும் குளிரில் அதிகாலை ஐந்து மணிக்கு கோயிலுக்கு வந்துவிட வேண்டும். பிறகு கோபால் பாட்டன் இந்த எழுபத்தைந்து வயதிலும் வேட்டி துண்டுடன் வெற்றுடம்போடு வருவார். இதையடுத்து ஒவ்வொரு வீட்டிலும் அரிசி வாங்க ஓலைப் பெட்டியையும், காசு கொடுத்தால் வாங்குவதற்கு மஞ்சள் துணி சுற்றப்பட்ட சிறு செம்பையும் தூக்கிக்கொண்டு நான்கைந்து சிறுவர்கள். அந்த நான்கைந்தில் நானும் ஒருவனாக இருந்தேன்.

இதில் கலந்துகொண்டால், 'நல்லா படிப்பெ' என்று சொல்லப்பட்டதை அடுத்து, குளிருக்கு இதமாகப் போர்வைக்குள் தூங்குகிற என்னை, நான்கரை மணிக்கே உசுப்பி விடுவாள் அம்மா. நடுங்கிக் கொண்டே பக்கத்து வீட்டு ராஜாவுடன் ஓடிப் போய் வாய்க்காலில் ஒரு முங்கு. விறைக்கிறது என்று கரையில் நின்றால் குளிக்க முடியாது என்பதால் ஓடிப்போய் தண்ணீருக்குள் விழுந்துவிடுவது. பிறகு எழுந்து அப்படியே வீட்டுக்கு வந்து, அதே ஓட்டத்துடன் பிள்ளையார் கோவில். பின், நெற்றி, கைகள் மற்றும் வயிற்றில் திருநீற்றுப் பட்டைப் போட்டுவிட்டு ராஜா, சிங்கியை (ஜால்ரா)யும் நான் செம்பையும் தூக்கிக்கொள்ள வேண்டும்.

கோபால் பாட்டன், ‘எல்லாரும் வந்தாச்சாடெ. சாமானெல்லாம் எடுத்துட்டேளா, பொறப்படுமா?' என்று மூக்குக் கண்ணாடியை சரி செய்துகொண்டு கேட்பார். அவரால் எல்லோரையும் போல வேகமாக நடக்க முடியாது. காலில் ஆணி. பஜனைக்கு செருப்புப் போடக்கூடாது என்பதால் ஆணிக் காலோடு மெது மெதுவாக நடப்பார். சிறு கல், காலில் பட்டால் கூட உதட்டைக் கடித்துக்கொண்டு நின்றுவிடுவார். நாங்களும் நிற்கவேண்டும். பழமையான ஆர்மோனியபெட்டி என்பதால் அதை அடிக்கடிச் சரிபண்ணிக் கொண்டே வருவார் முத்துசாமி. மிருதங்கத்தை ஐயாபிள்ளை லேசாக தட்டத் தொடங்கியதும், டீக்கடை வேலுவுக்கு இவர்கள் வருகிறார்கள் என்பது தெரியும். அதற்குள் காபி கிளாஸ்களை அடுக்கி வைத்திருப்பான். முதலில் பாட்டன் காபியை எடுப்பார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும். குடித்துவிட்டு பாடல் ஆரம்பிக்கும்.

‘நமப் பார்வதி பதியே - ஹரஹர மகாதேவா' என்பதை மட்டும் நாங்கள் கூட்டத்தோடு பாட வேண்டும். இதை, ‘நம்ம பார்வதி பஜையே... அரி அரி மகாதெவா' என்று குத்துமதிப்பாக உளறி வைப்போம். பாட்டனைத் தவிர யாருக்கும் பாடல் தெரியாது. அவர் சொல்வதை கேட்டு அரைகுறையாகத் திரும்ப சொல்லுவோம். யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், பிள்ளையாருக்கு பூஜை செய்கிற கொண்டை ஐயர், ‘ஐயையோ பாட்டை கொல்றேள்' என்று சரியாகப் பாடிக் காண்பிப்பார். ‘சாமி, எங்களுக்கு என்னெ தெரியுதோ அதைதானெ பாட முடியும்? நீங்கெ பிள்ளியாரெ பாருங்கெ' என்று சொல்லிவிட்டு பாடல் தொடரும்.

அதே பாடலோடு மந்திரமூர்த்தி கோயில் வழியாக, பஜனை செல்லும். நாங்கள் பெட்டியையும் செம்பையும் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிற்கவேண்டும். வாசலை பெருக்குகிற அல்லது கோலம் போட்டுக் கொண்டிருக்கிற பெண்கள், சிறு டம்ளரில் அரிசி தருவார்கள். இல்லையென்றால் துட்டு. அதுவும் இல்லையென்றால், ‘நாளெக்கு வாங்கடெ' என்பார்கள். இதில், மூன்று நான்கு தெருக்கள் சந்திக்கிற நடு தெருவில் மட்டும், நின்று நிதானமாகப் பாடவேண்டும். காரணம், நன்றாக விடிந்த பிறகே அதையடுத்து இருக்கிற புளியர மர தெருவை கடக்க வேண்டும் என்பதற்காக. அந்த புளியமரத்தின் கீழே எப்போதோ கன்னிப்பெண் ஒருத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டாளாம். அவள் இப்போதும் பேயாக அலைந்து ஒவ்வொருவரையும் பிடித்துவருவதாகப் பேசப்படுவதால் அந்த பகுதிக்கு விடியும் முன் யாரும் போவதில்லை. அப்படிப் போன பால்கார சுடலை, காய்ச்சல் வந்து ஒன்றரை மாதம் வீட்டுக்குள் முடங்கி கிடந்ததையும் அவனது உறவுக்காரப் பெண் சரஸ்வதி திடீரென இறந்து போனதையும் இப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

போகிற வழியில்தான் கோபால் பாட்டனின் வீடு. அவர் வீட்டு வாசலுக்கு வந்ததும், கோலம் போட்டுக் கொண்டிருக்கிற மருமகள் எழுந்து அரிசி கொண்டு வரப் போவாள். தூக்கக் கலக்கத்தோடு வாசலில் நிற்கிற அவரது பேரன், ‘தாத்தா' என்பான். பாடலை பாதியில் விட்டுவிட்டு, பேரனை கொஞ்ச ஆரம்பித்துவிடுவார். அப்படி அவர் பாடலை விட்டதும் முத்துசாமி யும் ஐயாபிள்ளையும் தொடர்வார்கள். அதாவது ஒரே வரியை திரும்ப திரும்ப பாடிக்கொண்டே வருவார்கள். பிறகு பேரனுக்கு டாட்டா காட்டிவிட்டு, நடப்போம்.

நாங்கள் மேற்கிருந்து கிழக்கில் செல்ல, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி திருச்சங்குக்காரர் வருவார். அவரும் ஒவ்வொரு வீட்டு வாசலில் நின்று அரிசி வாங்குவார். அதற்குப் பதிலாக அவர் திருநீறு தருவார். ராமர் கோயில் வாசல் வந்ததும் அவரோடு நேருக்கு நேர் சந்திப்பு நடக்கும். சந்திப்பின் தொடர்ச்சியாக, திருச்சங்குக்காரர் தங்கப்பூண் போட்ட வெண்சங்கில், ‘பப்பர பப்பர பம்....' என்று இழுத்து ஊதுவார். சுகமாக ஒலிக்கும் அந்த சத்தத்தை கேட்டுக்கொண்டே இருக்கலாம். முடிக்கும் போது, ‘பப பம்' என்று அவர் இழுத்து ஊதுவது இனிமையாக இருக்கும். பிறகு பாட்டன் அவருக்கு வணக்கம் வைப்பார். நாங்களும் சேர்ந்துகொள்வோம். எங்களுக்கும் அவருக்கும் அரிசியோ, காசோ தினமும் கொடுப்பதென்பது சிலருக்கு இயலாத காரியம். அதனால் அவருக்கு ஒரு நாள் கொடுத்தால் அன்று எங்களுக்கு கிடையாது என்கிற பார்முலாவை கையாண்டு வந்தனர்.

காலை ஐந்து மணிக்கு தொடங்குகிற பஜனை, அனைத்து தெருவுக்கும் சென்று சொர்ணம் டீச்சர் வீடு வந்ததும் திரும்பும். டீச்சர் வீட்டுக்கு கீழ்பக்கம் இருக்கும் பச்சையின் டீக்கடையில் இருந்து, உளுந்த வடை வாசம் குப்பென்று காற்றில் மிதந்து வரும். பாட்டன் பாடலை பாடிக்கொண்டே, முத்துசாமியையும் சுப்பையாவையும் திரும்பி பார்த்து, ‘அந்த கடைக்கு போமா?' என்று முகத்தை ஆட்டி ஆக்ஷனில் கேட்பார். சரி என்பார்கள்.

‘நம்ம பார்வதி பஜையே...' என்று கோரசாகப் பாடிவிட்டு கடைக்கு வந்துவிடுவோம். போட்டிருக்கிற பெஞ்சில் உட்கார்ந்துகொள்வார் பாட்டன். சுடச் சுட வடை, பேப்பரில் வைத்து கொடுக்கப்பட்டதும் முன் பற்கள் இல்லாத அவர், வடையை நசுக்கி கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்துப் போடுவார். எங்களுக்கு அதை பிய்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சூடு. அவர்கள் தின்று முடித்து டீ கொடுத்த பிறகுதான், நாங்கள் ஊதி ஊதிப் பிய்ப்போம். முத்துசாமி, ஐயாபிள்ளையை இடித்து, ‘திங்கெத பாரு' என்று கிண்டலடித்துவிட்டு, ஆரம்பிப்பார்.

‘‘நம்ம பாட்டன் மட்டும் மெட்ராஸுல இப்டி பாடிட்டு இருந்தார்னு வையி. இதுக்குள்ளெ சினிமால பாடுததுக்கு கூட்டிட்டு போயிருப்பானுவொ'

‘பெறவு, அவரெப் போலெ கொரலு யாருக்கு உண்டும் சொல்லு?' என்பார் ஐயாபிள்ளை. நாங்கள் பார்த்துக்கொண்டிருப்போம். வடையை முழுங்கிக்கொண்டே, ‘நீங்கெ கண்டேளோடெ அஞ்சாறெ. சினிமாவுக்குலா கூப்புடுவானாம்? சோலி கழுதெய பாருங்கெல' என்று பாட்டன் சொன்னதும் கப்சிப் ஆகும் ஏரியா.

பிறகு அரிசிப் பெட்டியை எட்டிப் பார்ப்பார் பாட்டன். ‘ஒருத்தனுக்கும் கை விளங்கெ மாட்டேங்கு பாரேன். கொஞ்சமாவே போடுதானுவோ. ஒரு காலத்துலயெல்லாம் பெட்டியை தூக்க முடியாத மாரி, அரிசி குவியும்'' என்று தன்னாலயே சொல்வார்.

ஒவ்வொரு வீடாக நாங்கள் வசூலிக்கிற அரிசியில், சர்க்கரைப் பொங்கல் அல்லது தயிர்சாதம் அல்லது சுண்டல் உள்ளிட்டவை பிள்ளையாருக்கு படைக்கப்பட்டு, தினமும் மக்களுக்கு கொடுக்கப்படும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு அரிசி என்பதால் எல்லா அரிசியும் இஷ்டத்துக்கு கலந்திருக்கும். இதில்தான் பிள்ளையாருக்கு படையல். பதினோறு மணி வாக்கில் இதற்காக கோயில் மணி அடித்ததும் அரச இலை அல்லது பூவரசம் இலைகளை பறித்துக் கொண்டு கோயிலுக்கு வருவார்கள் ஊர்க்காரர்கள். மற்ற கோயில்களை விட, இங்கு அதிகமாகவே பிரசாதம் வழங்கப்படும் என்பதாலும் ருசி அருமையாக இருக்குமென்பதாலும் கூட்டம் கொஞ்சம் ஜாஸ்திதான். இதை வாங்குவதற்காகவே காத்திருப்பதும் உண்டு.

வழக்கமாக ஒன்றரை மணி நேரத்துக்குள் முடிந்துவிடுகிற பஜனை, கடைசி நாளான பொங்கலன்று மதியம் வரை தொடரும். அன்று மட்டும் ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் வசூல் நடக்கும். சிலர் பத்து ரூபாய் வரை கொடுப்பார்கள். குறைந்த பட்சம் ஒரு ரூபாய். சிலர் தராமலும் இருப்பார்கள். வசூல் முடிந்து கோயிலுக்கு வருவோம். பாட்டன், எல்லா பணத்தையும் எண்ணுவார். ‘நம்ம எத்தனெ பேருடெ' என்பார். ஐயாபிள்ளை, ‘ஏழு பங்கு வையும்யா' என்பார். ‘எட்டுலா. கோயிலுக்கு ஒரு பங்கு வேன்டாமா?' என்பார் முத்துசாமி. பங்கு வைத்ததும் பிள்ளையாரை வணங்குவார். பிறகு எங்களை அழைத்து, ‘ஏலெ புள்ளியாரை கும்புட்டுட்டு துட்டை வாங்கிக்கிங்கெ. வீட்டுலெ போயி கொடுக்கணும். ஒங்க வீட்டுலெ கேப்பென்' என்று சொல்லிவிட்டு கொடுப்பார். குறைந்தது முப்பது, நாற்பது ரூபாய் இருக்கும். காசை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு ஒரே ஓட்டம்.

கால் ஆணி கடுமையானதன் பொருட்டு அடுத்தடுத்த பஜனைக்கு வருவதை நிறுத்திவிட்டார் பாட்டன். அவரது பாடல் ஏரியாவை முத்துசாமி கவனித்துக்கொண்டார். இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு ஐயா பிள்ளைக்கு ஆஸ்த்துமா பிரச்னை வந்ததை அடுத்து, அவரும் பஜனையை கைவிட்டார். மிருதங்கம் இல்லாத இடத்தில் சிங்கி மற்றும் ஆர்மோனிய சத்தம் அதிகமாகவே இருந்தது. அவ்வப்போது செருப்புக் காலோடு வந்து, ‘ஒழுங்கா போறேலாலெ' என்று கவனிக்கும் பாட்டன், ஒரு மார்கழியில் படுத்த படுக்கையாகிப் போனார். அடுத்து யாரும் வர தயாரில்லாததால் திடீரென கைவிடப்பட்டது தொன்றுதொட்டு வந்த பஜனை.

ஒவ்வொரு வருடமும் தவறாமல் வந்துவிடுகிற மார்கழி, குளிரோடு ஞாபகமூட்டிப் போகிறது, நினைவாகிப் போன பஜனையை. தூக்கம் வராத அதிகாலையில் குளிருக்கு இதமாகப் போர்வையை போர்த்தியபடி ஜன்னலை பார்க்கிறேன். இனிமையாக சத்தமெழுப்பிச் செல்லும் பெருந்திரளான பறவைகளின் ஒலியில், கோபால் பாட்டனின் குரலும் கேட்பதாக இருக்கிறது எனக்கு.

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

தொன்றுதொட்டு வந்த பஜனையும்
"சங்கீதம் பூக்கும் சாலை"யும் மனதை நிறைக்கின்றன் .. பாராட்டுக்கள்.

P.PAUL VANNAN said...

அம்மாவிடம், ‘ஏம்மா சாமி வந்திருக்கு, அரிசி கொடு' என்பேன். ‘ஊர்க்காரவோளுக்கு கொடுக்கணும்னா ரொம்ப ஆர்வம்தான்டே' என்று முணு முணுத்துக்கொண்டே அம்மா, குதிருக்குள் கை விட்டு க்ளாஸில் அள்ளுவாள் அரிசியை. அவளிடம் வாங்கிகொண்டு வாசலுக்கு ஓடினால், அவர் சங்கொலியை முடித்திருப்பார். கொடுத்த அரிசியை ஜோல்னாவுக்குள் போட்டுவிட்டு, என் நெற்றியில் திருநீறை பூசுவார். பிறகு சேண்டி அடித்துவிட்டு கிளம்ப போகும்போது சொல்வேன். BROTHER - MARKALI MANITHER PART 2 VAA ? SUMMA URIMAIYUDAN ORU NAIYANNDI . ENGE OORLAYUM BAJANIKKU POYERUKKEN , IMPUTTUKANNUM RASIKKA THERIYALE ENAKKU , VALKA VALAMUDAN.

Dino LA said...

கலக்கல் தலைவரே

ஆடுமாடு said...

இராஜராஜேஸ்வரி மேடம் நன்றி
...........................

ENGE OORLAYUM BAJANIKKU POYERUKKEN
எல்லாருக்கும் இப்படியொரு அனுபவம் இருந்திருக்கும்.
MARKALI MANITHER PART 2 VAA ?
ஆமா, சார். இன்னும் சில 'பார்ட் 2' வரும். நன்றி
................

மாற்றுப்பார்வை நன்றி.