Monday, December 17, 2012

கனவில் மிதக்கும் கால்கள்

மாசானத்துக்கான கோளாறு அதிகபட்சம் பத்து, பதினைந்து நிமிடத்துக்கு மேல் ஓர் இடத்தில் உட்கார முடியாது என்பதுதான். இப்படிச் சொல்வதால், உட்காரும் இடத்தில் பிரச்னையோ என நினைத்துவிட வேண்டாம். இது உடல் சார்ந்த பிரச்னை அல்ல. மனம் சார்ந்தது. அதாவது ஒரே இடத்தில் அதிக நேரம் அவனால் இருப்புக்கொள்ள முடியாது. இரண்டரை மணிநேரம் அடைந்துகிடக்க வேண்டும் என்பதற்காகவே, திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்ப்பவன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


‘ஒரு இடத்துல ஒழுங்கா நிய்க்க மாட்டியால? அவுத்துவிட்ட கழுதெ மாதிரி, சுத்திட்டே இருக்கெ?' என்று வீட்டில் உள்ளவர்கள் திட்டிப் பார்த்துவிட்டார்கள். ஆரம்பத்தில் சரி, சரி என்று சமாளித்தவனை, பிறகு யாரும் அரற்றுவதில்லை. அப்படியே அரற்றினால் கூட, அவனால் அவன் பேச்சையே கேட்க முடியாத நிலைதான்.

வெளுத்த சட்டை மற்றும் லுங்கி, தேங்காய் எண்ணெய் தேய்க்கப்பட்ட தேகத்தோடு வலது கையை மட்டும் ஆட்டியாட்டி நடக்கிற அவனிடம், ‘என்ன மாசானம், காலெலயே கார்சாண்டுக்கு போற போலுக்கு. எந்தூருக்குடெ?' என்று யாராவது கேட்டால், ‘சும்மாதான்’ என்று வேகவேகமாக நடப்பான்.

கார்சாண்டு என்று அழைக்கப்படுகிற பேரூந்து நிறுத்தம் பயணிகளை விட அதிகப்பட்சமாக கட்சிக்கொடி கம்பங்களைக் கொண்டிருந்தது. இந்தக் கம்பங்களுக்கு பாதுகாவல் மாதிரி, பக்கத்தில் சிறு அம்மன் கோவில். எதிரில் நன்றாக வளர்ந்திருக்கிற புளியமரம். இதன் கீழே, ஊர் பஞ்சாயத்தால் பயணிகளுக்காகப் போடப்பட்ட சிமெண்ட் பெஞ்ச். இதில் பயணிகளை விட, வெண்தோலில் கரும்புள்ளிகளைக் கொண்ட தெரு நாய் ஒன்றுதான் எப்போதும் படுத்திருக்கும். அது படுத்திருக்காத நாட்களில் மாசானம் உட்கார்ந்திருப்பான்.

குறிப்பிட்ட நேரத்துக்கு பேரூந்துகள் இயக்கப்படும் காலமாக அது இருந்ததில்லை. எப்போதாவது வரும் என்ற நிலைதான். அப்படி வரும் பேருந்துகளின் பெரும்பாலான ஓட்டுனர்களை மாசானம் அறிந்து வைத்திருந்தான். ஊரில் பஸ் வந்து நின்றதும் வேகமாக ஓட்டுனர் அருகே போவான். ரோட்டில் நின்றுகொண்டு, வாயெல்லாம் பல்லாக பெரும் வணக்கம் வைப்பான். ஐவிரல் நெற்றி தொட்டு அடிமனம் கிளப்பும் அன்பின் வெளிப்பாடு அது. அந்த வணக்கங்களுக்கு காசு, பணம் தேவையில்லை. ஒரு வணக்கத்தில், ஒரு புன்னகையில், ஒரு கும்பிடில் எதுவும் குறைந்துவிடப் போவதில்லை. அது நட்பின் பிரவாகம். ஒன்றை கொடுத்து ஒன்றை வாங்குவது போல, ஒரு வணக்கம் கொடுத்து ஒன்றை வாங்குவான் மாசானம். பிறகு, போக்குவரத்துக் கழக தென்மண்டல மேலாளர் மாதிரி, ‘இன்னைக்கு லேட்டா? அப்பல இருந்தே பாத்துட்டிருக்கென், வரலயெ, வரலயென்னு. செங்கோட்டெல டூட்டி மாறுவேளோ? யாரு வருவா. சுடலைண்ணனா, மணியண்ணனா?' என்று கதை நடக்கும்.

பிறகு அடுத்த பஸ் வர, இன்னும் சில மணி நேரம் ஆகலாம். அதற்கு மேல் கார்சாண்டில் கால் நிற்காது. பாக்கியநாதன் என்கிற பாக்கி பலசரக்கு கடை நோக்கி நடப்பான். கடைக்குள் சென்று வருவதற்காக, பொருட்கள் வைக்கப்படாமல் இருக்கும் இடது ஓரத்தில் வந்து, லுங்கியை தூக்கிக் கட்டிக்கொண்டு அமர்ந்துகொள்வான்.

‘என்னடெ, பொட்லுதூருக்கு சாமான் வாங்கெ போலெயா?' என்று கேள்வியை போட்டவாறே, ‘ஒரு பீடி எடு' என்பான். எப்போதும் கடையிலேயே இருப்பதால் ஊர்க் கதைகளை மாசானம் மூலமாகவே தெரிந்துகொள்கிற பாக்கியநாதனுக்கு, ஒரு பீடியை தானமாகக் கொடுப்பதில் ஒன்றும் பிரச்னை இல்லை.

பீடியை அவன் இழுத்துக் கொண்டிருக்கும்போது, ‘எய்யா, மாசானம், ஒரே எடத்துல இவ்வளவு நேரம் இருக்கியெடெ. மழெ கிழெ பெஞ்சுரபோது?' என்று சொல்லிவிட்டு மல்லிகா அத்தை சிரிப்பாள். ‘அப்டியாது மழெ வரட்டுமெ' என்பான் பாக்கி.

‘ஒங்களுக்கெல்லாம் எடக்கா இருக்கு?' என்று சொல்லும் மாசானம், பீடியை இழு இழு என்று இழுத்துவிட்டு, ‘மண்டவெல்லம் இருந்தா, ஒரு துண்டு குடு' என்று வாங்கி வாயில் போட்டுக்கொள்வான். கடையில் ஆட்கள் இல்லாத நேரத்தில், ‘தங்கம்மன் கோயிலு தெருவுல நேத்து ஏதோ அடிதடின்னாவோளெ?' என்று ஆரம்பிப்பான் பாக்கி.

'ஆமா, நம்ம ஒழக்கு இருக்கார்லா, அவரு மவனுக்கும் தம்பி மவனுக்கும் சண்டெ. ஒரு பய வெலக்கு தீத்து விடலெ. நான்தான் போயி தீத்தேன். அதுக்குள்ளெ ரெண்டு பேருமே டொப்பு டொப்புன்னு மாறி பொடதில போட்டுட்டானுவோ. எடத் தகராறுதான்' என்று ஆரம்பிக்கிற மாசானம், ‘நாளைக்கு ஒங்கூட்டுலயும் இந்த பிரச்னை வரலாம்டெ. ஒங்கப்பாட்ட இப்பவே கரீட்டா எழுதி வாங்கிருங்கெ, நீயும் உன் அண்ணனும்’ என்று அறிவுரை சொன்னதற்குப் பிறகு அங்கு இருக்க முடியாது. ‘செரி பாக்கி, பஜனெ மடத்துல கல்யாணி பய இருப்பாம். பாத்துட்டு வாரென்னா?' என்று நடையை கட்டுவான்.

இவன் வரவாவிட்டால் பஜனை மடத் தெருவின் இயக்கமே நின்றுவிடுவது மாதிரி, நடப்பான் மாசானம். மாடுகளை மேய்ச்சலுக்கு பத்த தயாராக இருக்கிறவர்கள், மடத்தின் வாசல் திண்டில் குத்த வைத்து உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். ‘இன்னுமா மாடு பத்தலெ?' என்று கேட்டுக்கொண்டே, ‘தள்ளீருங்கடெ' என்றவாறு உட்காருவான் மாசானம்.

‘ஆளெ காணலையேன்னு நெனச்சோம்?' என்கிற கல்யாணியிடம், ‘ஒம்ம வெள்ளாட்டங்குட்டி ஒண்ணு, நேத்து நொண்டிட்டே போச்செ, ஏம்ணெ? எவனும் கல்லெகொண்டி எறிஞ்சுட்டானுவளா?' என்பான்.

‘ச்சே, ச்சே. மச்சான் வீட்டுல புதுசா காளை புடிச்சுட்டு வந்துருக்காவல்லா. அதுல ஒண்ணு, இடம் புதுசா இருக்கேன்னு மெரண்டு ஓடும்போது, இது கால்ல மிதிச்சுட்டு'.

‘அதானெ பாத்தேன்' என்றவாறு பேச்சுத் தொடரும். அந்த வழியாக யாராவது சைக்கிளில் போனால், ‘என்ன சித்தப்பா, சந்ரன் கடை வழியாவா போறியோ? நானும் வாரேன்' என்றதும் சைக்கிள் நிற்கும். ‘மாப்ளெயை பாத்துட்டு வந்துருதென். இல்லன்னா, கோவப்படுவான்' என்று இவர்களிடம் சொல்லிவிட்டு ஏறிக்கொள்வான். கடையில் டீ ஆற்றிக்கொண்டு இருப்பான் சந்திரன். சைக்கிளில் இருந்து ஒரு குதி குதித்துவிட்டு, ‘என்ன மாப்ளெ, பூரிக் கெழங்கு வாசம் பசனெ மடம் வரலாவே தூக்குது' என்று ஒரு போடு. ‘இருக்காதாவே. செஞ்சது ஒம்ம மாப்ளெலா?' என்கிற சந்திரன், ‘தின்னு பாக்கேராவே?' என்பான்.



‘நான் என்னைக்கு கடெயில தின்னு பாத்தீரு? நமக்கு இதுலாம் சரிபடுமா சொல்லும்? என்னத்தெ தின்னாலும் பழைய சோத்தெ மாங்கா வச்சு திங்கலைன்னு வையும், பசி தாங்காதுவே' என்கிற மாசானம் அங்கு கிடக்கிற செய்தித்தாளை மேலோட்டமாக வாசிப்பான். கடையை கடந்து யாராவது செல்வார்கள். ‘என்னெ செல்லியா மாமா, பாக்காத மாறி போறெ?' என்பான்.

‘மருமவனெ கவனிக்கெலயே. வாரும் பஞ்சாத்து போடுக்கு போயிட்டாருவோம்' என்பார் செல்லையா மாமா. அவர் இப்படி கூப்பிடாவிட்டாலும் சிறிது நேரத்தில் மாசானம் அங்கு கிளம்புகிறவன்தான். அங்கு ஏற்கனவே நான்கைந்து பேர் தாயம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். புளியங்கொட்டையின் ஒரு பகுதியை தரையில் தேய்த்து, தாயக்கட்டை ஆக்கி இருப்பார்கள். மாசானம் போனதும் அங்கிருக்கும் குத்தாலம் சொல்வான், ‘எங்க மாசானத்தான் வந்துட்டாம். இனும எனக்கு ராசிதாம்லெ' என்று. அடுத்த நிமிடத்தில் இருந்தே எதிர்மாறாக நடக்கும். ‘யோவ் எந்திரிச்சு தூரப்போரும்யா' என்பான் அதே குத்தாலம்.

சிறுது நேரத்தில் சாப்பாட்டுக்கடை வைத்திருக்கிற மீனாட்சி சுந்தரம், ‘என்ன மாசானம் ஒக்காந்துட்டெ. வா தண்ணிக்கு போயிட்டு வருவோம்' என்பான் மாட்டு வண்டியில் நின்றவாறு. ‘ம்ம்' என்று கிளம்புகிறவன், வண்டியில் ஏறுவான். வேகவேகமாக தண்ணீரை குடத்தில் எடுத்து வண்டியில் நிறைப்பார்கள். ‘மாசானம், இன்னொரு ரவுண்டு வரணும்' என்றதும், ‘செரி' என்பான். அவனது கடைக்கருகில் வந்ததும் இறங்கிக் கொள்வான். ‘என்ன இறங்கிட்டெ. இன்னொரு ரவுண்டு?' என்றால், ‘தெப்ப கொளத்துக்கு போணும். கருசாமியும் பரம்சமும் ஆட்டை உட்டுட்டு நிப்பானுவோ' என்று சொல்லிவிட்டு வேகவேகமாக நடை தொடரும்.

தெப்பக்குளத் திண்டில் துண்டை விரித்து ஒருக்கு சாய்த்துப் படுத்திருப்பார்கள் கருப்பசாமியும் பரமசிவமும். மாசானம் போனதும் அவர்களிடம் ஆடுகள் நேற்று எங்கு மேய்ந்தது என்பது உள்ளிட்ட விஷயங்களை கேட்பான். பிறகு குளத்துக்கு அருகே வளர்ந்திருக்கிற முட்களில் இருந்து கருவை காய்களை பறிப்பான். கொஞ்சம் சேர்ந்ததும், விசில் அடித்து ஆட்டுக்குட்டிகளை அழைப்பான். வழக்கமாக இவன் இப்படி கொடுப்பவன் என்பதால் நான்கைந்து குட்டிகள் கருவை காய் ருசிக்கு ஓடி வரும். ஒவ்வொன்றுக்கும் ஊட்டி விடுவான். கொடுத்து முடித்ததும் அங்கு நிற்க முடியாது. அடுத்து, பத்தூட்டு வளவு.

வளவில் இருக்கும் வீரமணி வீட்டு திண்ணையில் பீடி சுற்றும் பெண்கள் அமர்ந்திருப்பார்கள். போய் உட்கார்ந்து, ‘என்ன எல்லாரும் எப்படியிருக்கியோ?' என்பான்.

‘ஆமா, ஏழு வருஷத்துக்கு முன்னால பாத்த மாதிரியே கேளு. ஒரு நாளைக்கு நாலுதடவெ வந்துட்டு போறெ? இதுல விசாரிப்பை பாரென்?' என்பாள் வசந்தா மைனி. ‘ஒங்களுக்கு இதே எடக்குதான் மைனி' என்று சிரித்துவிட்டு கொறிப்பதற்காக அவர்கள் வைத்திருக்கிற பொறி அரிசியில், கொஞ்சம் அள்ளி வாயில் போடுவான். அவர்கள் சிரிப்பார்கள்.

வயலுக்கு போய்விட்டுவிரும் நல்லக்கண்ணு மாமா, ‘ஏலெ உன்னெ கொளத்துக்கிட்ட பாத்தேன். அதுக்குள்ளெ இங்க வந்து நிய்க்க?’ என்பார். ‘ஒரே இடத்துலெ நிய்க்க முடியுமா? நாலு எடத்துக்கு போவாண்டாம் நான்' என்று பதில் வரும். ‘என்னமோ வெட்டி முறிக்க மாறியே பேசுததெ பாரேன்' என்று அவர் சொல்லும்போதே, ‘செரி வரட்டா. செவங்கோயிலுக்கு போணும். பாநாச தாத்தாவும் பச்சி தாத்தாவும் காத்துட்டு இருப்பாவோ' என்று சொல்லிவிட்டு நடப்பான்.

ஊரில் எல்லோரும் இவனுக்காகவே காத்திருப்பது போல நினைக்கிற மாசானம், குழந்தைக்கு ஒப்பானவன். அவனை சுடு சொல் சொல்லி, யாரும் அழைத்ததில்லை. சாப்பாட்டுக்கும் தூக்கத்துக்கும் மட்டுமே வீட்டுக்கு வருகிற மாசானத்துக்கு கால்கட்டுப் போட்டால் சரியாகும் என்றார்கள் உறவினர்கள். ‘இனும ஒங்காலு ஒரே இடத்துலதான் கெடக்கும் பாரேன்' என்றார்கள் சேக்காளிகள். ஆனால் திருமணத்துக்குப் பிறகும் பறவக்காளியாகப் பறக்கத் தொடங்கினான். மாமனாருக்கு தாங்க முடியவில்லை. மாசானத்தின் வீட்டுக்கருகில் சும்மா கிடந்த இடத்தில் பலசரக்குக்கடை ஒன்றை ஆரம்பித்துக் கொடுத்தார். முதலில் வெறுப்பாக கடையில் உட்காரத் தொடங்கினான். கால் இருப்புக் கொள்ளவில்லை. அது நடக்க நினைத்தது, ஓட நினைத்தது, பறக்க நினைத்தது. இப்போது அடங்கி விட்டது.

பணம் பண்ணும் வித்தையை வாழ்க்கை கற்றுக்கொடுத்தப் பிறகு பழங்கங்கள் கூட பக்குவத்துக்கு வந்துவிடுவதை மாசானம் உணர்த்திக் கொண்டிருந்தான்.

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

பணம் பண்ணும் வித்தையை வாழ்க்கை கற்றுக்கொடுத்தப் பிறகு பழங்கங்கள் கூட பக்குவத்துக்கு வந்துவிடுவதை மாசானம் உணர்த்திக் கொண்டிருந்தான்

முத்தாய்ப்பான முத்து வரிகள்..

மாசானம் கூடவே பயணம் செய்து கிராமத்தை சுற்றவைத்த அருமையான நிகழ்வுகள்..

P.PAUL VANNAN said...

NALLA IRUKKU ANNE ,NALLA IRUKKU ....'ஆமா, நம்ம ஒழக்கு இருக்கார்லா, அவரு மவனுக்கும் தம்பி மவனுக்கும் சண்டெ. ஒரு பய வெலக்கு தீத்து விடலெ. நான்தான் போயி தீத்தேன். அதுக்குள்ளெ ரெண்டு பேருமே டொப்பு டொப்புன்னு மாறி பொடதில போட்டுட்டானுவோ. எடத் தகராறுதான்' என்று ஆரம்பிக்கிற மாசானம், ‘நாளைக்கு ஒங்கூட்டுலயும் இந்த பிரச்னை வரலாம்டெ. ஒங்கப்பாட்ட இப்பவே கரீட்டா எழுதி வாங்கிருங்கெ, நீயும் உன் அண்ணனும்’ , ALL YOUR THOUGHTS ALWAYS ROAMING IN VILLAGE. SUPER.

ஆடுமாடு said...

இராஜராஜேஸ்வரி மேடம் நன்றி.

பால்வண்ணன் சார் நன்றி