Sunday, December 2, 2012

சத்தங்களின் சத்தம்

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிறது கொம்பையா என்கிற வெடிகாரரின் வீடு. தென்னைமரங்கள் சூழ்ந்திருக்கிற சிறு தோப்புக்குள் சுவரெழுப்பி, ஓலைகள் வேயப்பட்ட விசாலமான குடிசைதான் வீடென சொல்லப்பட்டு வந்தது. அதன் சாணம் மெழுகிய மண்தரை முற்றத்தின் இடது பக்கத்தில், கோழி கூடு. அதை அடுத்து தனியாக, அதே சைஸுக்கு பூட்டப்பட்ட ஓர் அறை. அதில்தான் வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருக்கிறது.


கோயில் கொடை, கல்யாணம், காதுகுத்து, திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வெடிபோட அழைக்கப்படும் கொம்பையா, இந்த விசேஷங்கள் இல்லாத நாட்களில் குளத்தில் அல்லது ஆற்றில் மீன் பிடிப்பதை செய்துவருவார்.

கொம்பையா தயாரிக்கும் வெடிகள் வித்தியாசமானவை. ஒரு முழ நீளத்துக்கு சிறு மூங்கில் பட்டை. அதன் ஒரு பாகத்தில் மூன்று இஞ்ச் நீள டப்பாவுக்குள் கரிமருந்து திரி வைத்து பட்டையோடு டைட்டாகக் கட்டப்படும். திரியில் தீயை வைத்ததும், புஸ் என்று தீச்சிதறல்கள் வெளியேற, மூங்கில் பட்டையை வலது கையால் பிடித்து, கீழே கொண்டு சென்று மேல் நோக்கி வேகமாக ஒரு வீசு. உயரத்தில் சென்று, பெரும் சத்தத்துடன் வெடிக்கும் அது. முதலில் இதைத்தான் வெடித்து வந்தார் கொம்பையா. கொடை காலங்களில் சாமி சப்பரம் எங்கு நிற்கிறது என்பதை இந்த வெடி சத்தங்கள்தான் சொல்லிவந்தன. இந்த சத்தத்தை வைத்தே சாமிகளை வரவேற்கத் தொடங்குவார்கள் மக்கள். ‘வேட்டு சத்தம் எவ்வளவு தூரத்துலெ கேக்கு. சாமி வர இன்னும் நேரமாவுமடெ’ என்றவாறு வேலைகள் நடக்கும்.

சிவசைலத்தில் இருந்து பரமகல்யாணி அம்மன் ஊருக்கு வந்த இரண்டாவது நாளில், சப்பரம் புறப்படுவதற்கு முன்பு கலர் கலர் வெடி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது கோயில் நிர்வாகம். இதில்தான் கொம்பையாவுக்கு மரியாதை வந்தது. இந்த வெடி விழாவுக்காக, பஸ்&ஸ்டாண்டுக்கு வடக்கே இருக்கிற புளியமர பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் அருகே மெகா சைஸ் ஜன்னல் மாதிரி, கம்புகள் கட்டப்பட்டிருந்தன. அதில் ஒவ்வொரு அடுக்காக விதவிதமான குண்டு வடிவ வெடிகள் கயிறு கட்டித் தொங்க விடப்பட்டிருந்தன. சரியாக இரவு ஒன்பது மணிக்கு வானவேடிக்கை.

‘சின்னப் புள்ளைலுவோலாம் தூரப்போங்கல. பக்கத்துல யாரும் நிய்க்கப்பிடாது’ என்ற அறிவிப்புக்குப் பிறகு கொஞ்சம் தூரமாக, வட்ட வடிவில் ஊர்க்காரர்கள் நின்றிருப்பார்கள். முதலில் வானவெடி. கொம்பையாவின் உறவுக்காரன் ஒருவன் ஒவ்வொரு வெடியிலும் தீப்பற்ற வைத்துக்கொடுக்க, இரண்டு கைகளிலும் அதை வாங்கி, வேகவேகமாக வீசுவார். வழக்கமாக ஒரு கையால் வீசுவதுதான் வழக்கம். கூட்டத்தைப் பார்த்துவிட்டால் யாருக்குத்தான் மகிழ்ச்சிப் பிறக்காது? அந்த மகிழ்வின் வெளிப்பாடாக இரண்டு வெடிகளை ஒரே நேரத்தில் வீசுவார். அதை பார்க்கவே அழகாக இருக்கும். பிறகு குண்டு வெடிகள். இந்த வெடிகள் வரிசையாகக் கட்டப்பட்டிருக்கும். இதில் கொம்பையா சாகசம் செய்வார். அதாவது முதல் வெடிக்கு தீ வைத்துவிட்டு அதிலிருந்து மற்ற வெடிகளுக்கும் தொட்டு தொட்டு தீ வைத்துப் போவார் கொம்பையா. பார்க்கிறவர்களுக்கு, பயமாக இருக்கும். சிலர், ‘சீக்கிரம் வச்சுட்டு தூரப்போ... பக்கத்துலயே தீக் கங்கெ வச்சுக்கிட்டே போற, கூறுகெட்டாலெ?’ என்று செல்ல திட்டு திட்டுவார்கள். ஆனால், மற்றவர்களுக்கு அவரவர் துறையிலான சாகசம் மாதிரி இது கொம்பையாவின் சாகசம். பயத்துக்கு பயங்காட்டுகிற தெனாவட்டு ஸ்டைல். அவர் கடைசி வெடியில் தீ வைக்கும்போது, முதல் குண்டு வெடிக்கும். கொம்பையா தூரப்போயிருப்பார். அப்பாடா என்றிருக்கும். பிறகு தொடர்ந்து டப் டமாரென எழும் சத்தங்களோடு வண்ணங்கள் வருவதும் தெரிந்தது. அது ஓர் அதிசயம். கரும்பழுப்பு நிற புகையை மட்டுமே கக்குகிற வெடிகளில் இருந்து, கலர்கலர் சிதறல்கள் எப்படி ஏற்படுகிறது என்கிற அதிசயம் எல்லார் முகங்களிலும் இருக்கும். ஆச்சரியங்களுக்கிடையே பத்து இருபது நிமிடம் நடக்கும் வானவேடிக்கையில் சத்தங்களின் சத்தமே கூப்பாடாக இருக்கும்.

மறுநாள் காலையில் சைலு டீக்கடைக்கு வரும் கொம்பையாவிடம், ‘எப்படிடெ வெடில கலரா வந்துது?’, ‘அது உள்ளெ எப்படிடெ இதை வச்சானுவோ?’ என்கிற அப்பாவிக் கேள்விகள் தொடர்ந்து வரும். கேரளாவில் அணைகட்டு வேலைக்குச் சென்றுவிட்டு வந்திருந்த சுப்பையா மேஸ்திரி, ‘இதெல்லாம் என்ன வெடிங்க?’ என்று கேவலமாக கொம்பையாவைப் பார்ப்பார். அவருக்கு வேசடையாக இருக்கும்.

கேரளா என்பது வேறு ஏதா ஒரு கண்டத்தில் இருப்பது போலவும் அங்கிருந்து பல விஷயங்களை அறிந்துகொண்டு வந்தவன், நான் மட்டுமே என்பது மாதிரிதான் சுப்பையா மேஸ்திரியின் பேச்சு இருக்கும். ரைஸ் மில்லில் மூட்டை சுமக்கிற கந்தன்தான் மேஸ்திரிக்கு கூட்டாளி. சொல்வதற்கெல்லாம் ஆச்சரியம் காட்டுகிற, அல்லது, ‘அப்படியா?’ என்று வாயடைத்து நிற்கிற ஒரே ஆள், கந்தன் மட்டுமே என்பதால் மேஸ்திரிக்கு வேறு யாரையும் பிடிக்காது.

‘ஏலெ கந்தா, இதெல்லாம் என்னல வெடி? கேரளாவுல போடுவாம் பாரு. இங்கெயிருந்து நேரா மேல போவும் வெடி. செத்த நேரம் அப்டியே நிய்க்கும் அங்கெ. திடீர்னு கீழ வரும். நம்ம தலெ ஒசரத்துக்கு வந்ததும் வெடிக்கும் பாரு டொப்புன்னு. எப்படியிருக்குங்கெ?’

மேஸ்திரி இப்படி சொன்னதும் டீக்கடை சைலு, 'ஆரம்பிச்சுட்டானுவோ. தலெ ஒசரத்துல நின்னு வெடிச்சா, மூஞ்சி பேந்துராதா? இன்னும் என்ன கதையெல்லாம் சொல்ல போறாம்னு தெரியலயெ?’ என்று முணங்கிக்கொண்டு கொம்பையாவை பார்ப்பான். சுள்ளென்று கோபம் வரும் அவருக்கு. அடக்கிக்கொண்டு சொல்வார்.

‘ஆமா. நீ வான்னா வாரதுக்கும் போன்னா போறதுக்கும் அதென்ன ஒம்ம வீட்டு வெள்ளாடுன்னு நெனச்சேரோ? வெடியாங்கும். கொஞ்சம் லேவு தப்பிட்டுன்னா, லங்கோடு பிஞ்சுபோவும். கதை சொல்லுததெ பாரேன், களிமண்ணுக்கும் கருங்கல்லுக்கும் கல்யாணம்னு’ என்று புலம்பிக் கொண்டே வேகமாக இடத்தை காலி பண்ணுவார்.

வெடியின் வண்ணங்கள் பற்றி பேச ஆரம்பித்தவர்கள், ‘யோவ் மேஸ்திரி, நீரு வாயை பொத்திட்டு இருந்தீர்னா, அவென், வெடிக்குள்ள கலரை வச்சதெ சொல்லிருப்பான். இப்படி பண்ணி உட்டுட்டேரே?’ என்பார்கள்.

‘ஓங்களுக்கு நாலு வெஷயத்தை வௌங்க வைக்கலாம்னா, வெடிகாரனுக்கு சப்போட்டா? ஒங்களெ திருத்த முடியாதுவே. ஏலெ கந்தா, எடத்தெ காலி பண்ணு, போவும். இப்படி ஒண்ணுந் தெரியாமலேயே போயி சேர்ந்துருவானுவோ போலருக்கெ’ என்று கிளம்புவார்கள். இப்படியான ஆட்களும் இல்லையென்றால் ஊர் என்கிற அடையாளம் முழுமை பெறாது.

விழாக்களுக்கு மட்டுமே வெடிபோட்டு வந்த கொம்பையாவை, தாத்தாக்களின் இறப்புக்கும் வெடி போட அழைத்தார்கள். முதலில் யோசித்த அவர், பிறகு அரை மனதுடன் வேட்டுப் போட கிளம்பினார். இப்போது வழக்கமாகி விட்டது. வசதியாக வாழ்ந்த தாத்தாக்களின் இறுதிச்சடங்கை, பேரன்கள் கொண்டாடத் தொடங்குவதால் அதற்கும் வெடி, தவிர்க்க முடியாததாகிவிட்டது.

விறகு கடை தாத்தா தொண்ணூற்றி எட்டு வயதில் இறந்து, குடும்பத்தை சந்தோஷப்படுத்திய நாளில், பேரன்கள் வெடிகாரரை அழைக்கப் போனார்கள். இப்படியொரு திடீர் இறப்பு நடக்கும் என்று அவர் கண்டாரா என்ன? கோவன்குளத்தில் வடிக்கப்பட்ட சாராயத்தின் டேஸ்ட் பார்க்க போனவர், அதிகமாக டேஸ்ட் பார்த்துவிட, தள்ளாடி தடுமாறியது கால். வீட்டில் படுத்திருந்தவரை உசுப்பி வெடிபோட அழைத்து வந்தார்கள். முதல் இரண்டு வெடிகளை சரியாகப் போட்ட கொம்பையா, மூன்றாவது வெடியை மேலே வீசுவதற்குப் பதிலாக, கை தடுமாறி வீட்டுக்குள் வீசி விட்டு தரையில் மல்லாந்துவிட்டார். வானத்தில் வெடிக்க வேண்டிய வெடி, கட்டிலில் வைக்கப்பட்டிருந்த தாத்தாவின் வயிற்றில் வெடித்து அருகில் அழுதுகொண்டிருந்த ஐந்தாறு பெண்களுக்கு காயத்தை ஏற்படுத்தியிருந்தது.

பேரன்கள் கொதித்து வெடிகாரரை ‘தூக்கிப் போட்டு மிதிக்க’ வர, அவர் போதையில் ரோட்டில் கிடந்தார். காயம்பட்டவர்களுக்கு பாய் டாக்டரும், கொம்பையாவுக்கு சுவர்முட்டிக் கடைகாரரும் சிகிச்சை அளித்தார்கள். போதை தெளிந்ததும் கொம்பையா எடுத்த முடிவு, ‘நாளை முதல் குடிக்கக் கூடாது’. அந்த முடிவில் கடைசி வரை உறுதியாக இருந்தார் என்பது வேறு விஷயம். ஆனால், அவர் குடிக்கவில்லையென்றாலும் குடிகார சாபம் சும்மா விடாது போலிருக்கிறது. கொம்பையாவின் தூரத்து சொந்தமான மச்சான் உறவுக்காரன், பக்கத்தூரில் இருந்து விருந்துக்கு வந்தான் புது மனைவியோடு. குடிசைக்குள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்க, வெறும் ஊறுகாயோடு வாங்கி வந்திருந்த ஒரு பாட்டில் சாராயத்தை திறந்தான் வாசலில் வைத்து.

‘சீக்கிரம் குடிடெ. நமக்கு அந்த நாத்தமே சரிபட்டு வராது’ என்று அவனுடன் உட்கார்ந்திருந்த கொம்பையா, ஊறுகாயை மட்டும் தொட்டு நக்கிக்கொண்டே இருந்தார். பாட்டிலில் பாதியை குடித்ததும் போதை ஓவரான மச்சானை ஓரமாக படுக்கச் சொல்லிவிட்டு வெடிகள் பாதுகாக்கப்பட்டிருக்கும் இடத்துக்கருகில் தூங்கினார் கொம்பையா. திடீர் திடீர் என்று எழுந்து பீடியை பற்ற வைத்த மச்சான், அதை அணைத்து வீசாமல் அப்படியே வீசித் தொலைக்க, பாதுகாக்கப்பட்ட வெடி பற்றிக்கொண்டது. மொத்த வெடியும் வெடித்து, கொம்பையாவுக்கு இடது கையில் படுகாயம். காலில் எலும்பு முறிவு.

ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு போனார்கள். கட்டுப் போட்ட சில மாதங்களுக்குப் பிறகு மெதுமெதுவாக நடக்க ஆரம்பித்தார் கொம்பையா. ஆனால், பழைய நடை இல்லை. கொஞ்சம் இழுத்து வளைந்து நடக்க வேண்டியதாகி இருந்தது. இந்த இடைபட்ட காலத்தில் ஊருக்குள் வேட்டு சத்தம் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தி. பிறகு வெடிவேலையை ஓரங்கட்டி வைத்துவிட்டு, மச்சான் புண்ணியத்தில் அவன் ஊரில் பெட்டிக்கடை வைத்துவிட்டார்.

இப்போது வெடிகாரர் இல்லை. திருமணம், காதுகுத்து விழாக்களுக்கு பட்டாசு கடைகள், பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கின்றன வெடிகளை. பேன்ஸி வகையான வெடிகளில் இருந்து இன்னும் பிரமாண்டமான வண்ணங்கள் வான்வெளியில் ஆட்டம் காட்டிப் போகின்றன. கோயில் விழாக்களுக்கு மட்டும் வெளியூரிலிருந்து வந்துபோகிறார்கள் வெடிகாரர்கள். ஆனாலும் கொம்பையாவின் சாகசத்தை அதில் காண முடியாததாகவே இருக்கிறது.

1 comment:

துபாய் ராஜா said...

அண்ணாச்சி,இப்படி நீங்க எழுதறதை படிச்சுதான்,ஊர்க்காத்து குடிச்சு வாழுறோம்.சொந்த ஊரை துறந்த சோகங்களை மறந்திறாத மனசுக்கு மருதாணி வச்ச குளிர்ச்சி. தாமிரபரணி தண்ணில முங்கி எழுந்தாப்புல ஒரு புத்துணர்ச்சி. நன்றி அண்ணாச்சி.நம்ம ஊரைப் பத்தி நெறைய எழுதுங்க அண்ணாச்சி.