Sunday, November 18, 2012

கம்புகள் சுழலும் தெரு

வீட்டின் கதவுக்குப் பின்னால் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற ஒட்டடை குச்சிக்கு முக்கியமான நாட்களில் மட்டுமே வேலை வருகிறது. இருந்தாலும் எப்போதாவது தடுமாறி விழுந்து கண்ணில் படும்போதெல்லாம், ‘முழுசு' ஞாபகத்துக்கு வந்துவிடுவார். குட்டையான குண்டு தேகத்தோடு அவர் நடந்துவருவதும், அந்த உடலை வைத்துக்கொண்டு சிலம்பம் சுற்றுவதும் கண்ணுக்குள் காத்திருக்கும் காட்சி.


எதுவும் அவருக்கு முழுசாக வேண்டும். சாப்பாடு என்றால் ஒரு கும்பா. கோழி என்றால் முழுக்கோழி. முட்டை என்றால் குறைந்தது அஞ்சு. பால் என்றால், கறந்ததும் ஒரு லிட்டர். இப்படி முழுசாக வேண்டும் என்பதால் அவர் இப்பெயரில் அழைக்கப்படுவதாகப் பெயர் காரணம் சொல்வார்கள்.

'அவரு சாப்பிடும்போது வாசல்ல வந்து ஒக்காந்துக்கிடுவா அவரு பொண்டாட்டி. யாரும் பாத்துரக்கூடாதுல்லா? அதனால. வீட்டு வாசல்ல பெரிய சேரு போட்டு, அதுக்கு முன்னால நாற்காலி ஒண்ணெ வச்சிருப்பாவோ. சோறு, கொழம்பு, கறின்னு எல்லாத்தையும் அதுல வரிசையா வச்சிருப்பாவோ. வாழை எலெயில சோத்தை போட்டு அவரு திய்ங்கும்போது சொல்லமாடன் சாமிக்கு படப்பு சோறு போட்ட மாதிரில்லா இருக்கும்’ என்று சாயங்காலங்களில் சடங்கான பிள்ளைகளிடம் ராசம்மா சித்தி சொல்லும்போது எல்லாரும் சிரிப்பார்கள்.

காது பட, ‘முழுசு' என்று சொல்லிவிட்டால் அவரால் தாங்க முடியாது. வேட்டியை தார்பாய்ச்சி கட்டிக்கொண்டு விரட்டி விரட்டி அடிக்க வருவார். இருந்தாலும் ஊரின் மீது அதிக பாசம் வைத்திருக்கிற அவருக்கு பெரிய மனுஷர் பட்டம் கிடைக்க, சிலம்பம் முக்கிய விஷயமாக இருந்தது. கண்ணில் படுகிற எல்லோருக்கும் சிலம்பம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை அவர் ஆசையாக்கி இருந்தார்.

‘இந்த பயலுவோளெ கம்பு சுத்த அனுப்பலாம்லா. பள்ளியூடம் போயிட்டு வந்து சும்மாதானெ இருக்கானுவோ' என்று உரிமையோடு கேட்கிற முழுசுக்கு சிலம்பத்தின் மீது ஆர்வம் வந்ததற்கு அவர் அப்பா காரணம் என்பார்கள்.

‘நம்மூரு சைட்லலாம் அந்த காலத்துல ரெண்டு கட்சிதாம்டெ உண்டு. பக்கத்தூர்க்காரனுவளுக்கும் நம்மூர்காரனுவளுக்கும் வேற வேற கட்சிங்கதால, ஆவவே ஆவாது. ஒரு நாளு ஊர்ல கட்சிக் கூட்டம் நடந்திருக்கு. அந்த கட்சிக்காரனுவளெ உண்டு இல்லைன்னு பேசிருக்காவோ. தகவலு அவனுவளுக்குப் போயி, கோவத்துல இருந்திருக்கானுவோ. வயல்ல தண்ணி பாய்ச்சிட்டு கருக்கல்ல வந்திட்டிருந்தாரு முழுசு அப்பா. சைக்கிள்ல வந்த நாலஞ்சு பேரு, ‘ஏய் நில்லு. எந்தூருக்காரன்’னு கேட்டானுவலாம். இவரு சொல்லிருக்காரு. அந்தானிக்கு, பீச்சுவாவை எடுத்துட்டானுவளாம். இவருட்ட கம்பு மட்டுந்தான் இருந்திருக்கு. வீடு கட்டி அடிச்சு விளாசி பிச்சிருக்காரு... அவனுவோ, விட்டா போதும்னு ஓடியிருக்கானுவோ...' என்கிற வீர வரலாறுகள் கதையாகச் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது. அப்பாவிடம் கற்ற வித்தையை முழுசு ஊருக்குள் பரப்பிக் கொண்டிருந்தார். சிலம்பத்தோடு சுருள், மான்கொம்பு, வாள் சண்டைகளையும் அவர் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். இதுபோன்ற வித்தைகள் தெரிந்தவர் என்பதால் அவர் மீது சுற்றுவட்டாரத்தில் பயமும் இருந்தது.

ஊரில் பலர் அவரிடம் சிலம்பம் கற்றுக் கொண்டிருந்தனர். இதற்காக, அவர் வீட்டுத் தொழுவத்துக்கு அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே கற்றுக்கொண்டிருந்த சீனியர்கள் ஒருபுறம் சுற்றிக்கொண்டிருக்க, வன்னிய நம்பி, ராமசாமி, சாமிநாதன், முத்துசாமி ஆகியோருடன் நானும் புதிதாகச் சேர்ந்திருந்தேன். எங்கள் செட்டில்தான் முழுசுவின் மூத்த மகன் கண்ணனும் சேர்ந்திருந்தான்.

‘புதுசா சேந்தவம்லாம் இந்த பக்கம் வாங்கடெ. மொதல்ல கால் வரிசை போடணும். ஏலெ கண்ணா, நீ போட்டு காமிப் பாப்போம்' என்றார் முழுசு. போட்டான் கண்ணன்.

‘இப்படிலாம் இல்லெ. நல்லா பாருங்கடெ' என்று சொல்லிவிட்டு வரிசை வைத்தார். ஒரு காலை முன்வைத்து மறுகாலை பின்பக்கம் இழுக்கும்போது இருக்கிற நளினம், நடனத்துக்கு ஒப்பானது. நாங்கள் தினமும் மாலையில், நான்கைந்து நாட்களாக இந்த கால்வரிசையைதான் பழகிக் கொண்டிருந்தோம். இங்கு இப்படி நடந்து கொண்டிருக்கும்போது, அடிக்கடி வீட்டுக்குள் போய் வந்து கொண்டிருப்பார்கள், முழுசும் கண்ணனும். அது ஏன் என்பது எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. அப்படிப் போகும் போதெல்லாம் சீனியர்களிடம் பேசிக் கொண்டும் அவர்களின் ஆட்டத்தை பார்த்துக் கொண்டும் இருப்போம். திடீரென ஒரு நாள் பாதியை மென்றுகொண்டும் பாதியை கையில் வைத்தபடியும் வந்த கண்ணனைப் பார்த்ததும் ஆச்சரியம். அது ஆம்லெட். உப்பு, வெங்காயம், பச்சை மிளகாயோடு முட்டை, ஆம்லெட்டாக உருமாறுவதை அதிசயமாக பார்த்த காலத்தில், கண்ணன் எங்கள் நாக்கில் எச்சில் ஊற வைத்தான். அதை தின்று முடித்ததும் ஒரு சொம்பு பசும்பால். தினமும் இப்படித் தின்றும் குடித்தும் வந்தாலும் அந்த ஒல்லி தேகம் மட்டும் ஊதவே இல்லை.

பிறகு, எங்கள் காலில் இருந்து நெற்றிவரை உயரம் அளக்கப்பட்டு அந்த அளவில் மூங்கில் கம்புகள் வெட்டி வரப்பட்டன. ஆரம்ப கட்டம் என்பதால் மூங்கில் கம்புகள். பெரியவர்களுக்கு நாங்கு மரத்தில் இருந்து செதுக்கப்பட்ட கம்புகள். கம்பை வரிசை போட்டவாறு மெதுமெதுவாகச் சுற்ற வேண்டும். சாமிநாதன் எதிலும் வேகமாக இருக்க நினைத்து, முழுசு சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுற்ற ஆரம்பித்தான். தவறுதலாக முழுசுவின் மண்டையில் கம்பு பலமாக தாக்க, தலையை தடவிக்கொண்டே கீழே உட்கார்ந்துவிட்டார். சாமிநாதன் நடுங்கிக்கொண்டிருந்தான். டமாரென அவன் கன்னத்தில் ஒன்றை வைத்துவிட்டு, ‘அதுக்குள்ள என்னெ அவசரம்லெ. ஒருத்தன் சொல்லிட்டிருக்கம்லா... கூறுகெட்ட நாயி?’ என்று திட்டிக்கொண்டே சுற்றிக் காண்பித்தார்.

நான்கு நாட்கள், இப்படியே மெதுவாகச் சுற்றிக் கொண்டிருந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக, ‘புகழ்’ போடக் கற்றுக்கொண்ட நேரத்தில், வன்னியநம்பி எங்கள் கோஷ்டியில் இருந்து கழன்றுகொண்டான். ‘இவரு என்னைக்கு சொல்லிக்கொடுத்து என்னைக்கு இதை படிக்கெ?' என்ற அவன், போகும்போது என்னையும் ராமசாமியையும் அழைத்தான். ‘நம்மயென்ன எம்ஜாராடெ. இதெல்லாம் தெரிஞ்சு சண்டெ போடதுக்கு. வாங்கடெ செல்லாங்குச்சி விளாடுவோம்' என்றதும் சாமி அழைப்பு விழாவில், தெருவுக்குள் சிலம்பு சுற்ற வேண்டும் என்ற என் கனவு கொஞ்சம் கொஞ்சமாக, கரைய தொடங்கியது. ராமசாமி வருவதாக இல்லை.

வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே ஊரில் சிலம்பம் சுற்ற வாய்ப்பு. ஒன்று, இந்த சாமி அழைப்பு விழா. மற்றொன்று கிருஷ்ண பிறப்பு விழா. கிருஷ்ண பிறப்பில் உரியடி முடிந்ததும், ஏரியா முழுசுவின் கைக்கு வந்துவிடும்.

‘ஏலெ சின்ன பயலுவோலாம் தூரப்போங்க. கம்பு சுத்துத ஆளுலாம் வரிசையில நின்னு. மொதல்ல தொரையப்பாவும் முருகனும் ஆடட்டும் என்னா? வாங்கடெ ரெண்டு பேரும்’ என்று சொல்லிவிட்டு தூரத்தில் சேர் போட்டு உட்கார்ந்துகொள்வார். இருவரும் அண்ணன்& தம்பிகள் என்றாலும் கம்பு சுற்றுவதில் கில்லாடிகள். கடும் போட்டியாக இருக்கும். டப் டப் என்று வரும் கம்புகள் மோதும் ஓசையில், ஆக்ரோஷம் தெரியும். முழுசுக்கு அந்த இடத்தில் வரும் பெருமையை வர்ணித்துவிட முடியாது.

சாமி அழைப்பு விழாவின் மாலையில், ஊரின் ஒவ்வொரு தெரு முக்கிலும் நின்று பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் கம்பு சுற்ற வேண்டும். சுற்றி நின்று கூட்டம் வேடிக்கைப் பார்க்கும். முழுசு, புது வேட்டி சட்டை அணிந்து, ‘ம்ம்... போடு, ம்ம்... போடு' என்று நாக்கைத் துறுத்தி சுற்றி சுற்றி வந்து சொல்லிக் கொண்டிருப்பார். தட்டடிகளில் நின்றுகொண்டு தாவணிப் பெண்கள் ஆட்டத்தை ரசித்துக்கொண்டே க்ளுக்கென்று சிரிப்பது அலாதியான தருணம். இதற்காகவே இன்னும் கொஞ்சம் சான்ஸ் கிடைக்காதா என்று ஏங்குவார்கள் கம்பு சுற்றுபவர்கள்.

வன்னிய நம்பி சென்ற சில நாட்களிலேயே, ராமசாமியும் நின்றுவிட்டான். அதற்கு அவன் சொன்ன காரணம், ‘அவரு மவனுக்கு மட்டும் பெசலா சொல்லிக் கொடுக்கார்டே. அவனுக்கு தொணைக்கா நம்ம போயிருக்கோம்? அதான் வந்துட்டேன்’ என்றான். இந்த சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு காரணமேதும் சொல்லாமல் நானும் நின்றுவிட்டேன். ‘இந்த பயலுவோ ஏம்டெ நின்னுட்டானுவோ?' என்று எல்லோரிடமும் முழுசு கேட்டுக்கொண்டிருக்க, நாங்கள் அவர் முகத்தில் முழிப்பதை தவிர்த்து வந்தோம். காரணம், எதிரில் பார்த்தால் என்ன பொய் சொல்லி சமாளிப்பது என்கிற பயம்தான். அவர் மகன் கண்ணன், ‘எங்கப்பாட்ட புடிச்சு கொடுத்துருவம்ல’ என்று மிரட்டிக் கொண்டே, கடலை மிட்டாயை லஞ்சமாக வாங்கிக் கொண்டிருந்தான்.

நாங்கள் அங்கிருந்து நின்ற அடுத்த வருடத்தில் இருந்து கண்ணனும் சாமிநாதனும் முழுதாக கம்பு சுற்றத் தொடங்கினார்கள். சாமி அழைப்பில் ஒவ்வொரு தெருவாக நின்று இருவரும் கம்பு சுற்றிக் கொண்டிருக்க, நாங்கள், ‘ரொம்பதாம் பீத்துதாம்லெ. கண்ண பயலுக்கு கால் வரிசையே சரியா வைக்க தெரியலெ, பாரேன்’ என்று குறை சொல்லி எங்கள் மனதைத் தேற்றிக்கொண்டோம். உள்ளுக்குள், ஒரு கலையை பாதியில் நிறுத்திவிட்டோமே என்கிற வருத்தம் கவலையாக சுரண்டி, ஏக்கமாக உருவெடுத்துக் கொண்டிருந்தது.

முழுசுவின் கண்ணில் படாமல் காலங்கள் ஓடி விட்டது. சாமி அழைப்பும் கிருஷ்ண பிறப்பும் ஒவ்வொரு வருடமும் வருகிறது. பிழைப்புக்கு வெளியூர் போனவர்கள், வாழும் ஊரை, சொந்த ஊராக்கிக் கொண்டபின், சாமி அழைப்பு சம்பிரதாயமாகவே நடக்கிறது. ஊர் கூடி சாமி பார்த்த மக்கள் குறைந்துவிட்டார்கள். முழுசுக்குப் பிறகு கம்பு சுற்றிய அவர் மகன் சாமியாராகிவிட்டதால் சிலம்பு கம்புகள் ஊனிக் கம்புகளாகி விட்டன. நடக்க முடியாமல் தள்ளாடியபடி வரும் முழுசுவை பார்க்கும் போதெல்லாம் என்ன பொய் சொல்லி சமாளிப்பது என்கிற யோசனை மட்டும், ஒவ்வொரு வருடமும் தவறாமல் வந்துவிடுகிறது.

4 comments:

துபாய் ராஜா said...

அருமை அண்ணாச்சி.டி.வி, கிரிக்கெட்டெல்லாம் வந்த பிறகு கம்பு சுத்தறது, கபடி விளையாடுறது எல்லாம் கிராமங்களில் கூட இல்லாம போயிடுச்சுங்கிறது மிகவும் வருத்தமான விஷயம்தான்.

paul vannan said...

DEAR BROTHER ,

WELL , IN MY VILLAGE, THERE WAS A SILAMBU VATHIYAR - LATE MR.BALU THEVAR - NICK NAME MGR BALU ) . YOUR WRITINGS MADE THE SALUTE FOR THIS TYPE OF PEOPLE , BUT ONE THING HE IS NOT A GOOD EATER AS PER MY KNOWLEDGE . AS USUAL ,NARRATING STYLE FOUND SO GOOD . ( THIS TIME WHILE EXPLAINING INCIDENTS , I FEEL YOU ADDED LITTLE EXTRA MASALA WHICH IS GENERALLY NOT GETTING PLACE IN YOUR WRITINGS, APART FROM THIS , OVERALL VERY NICE. எதுவும் அவருக்கு முழுசாக வேண்டும். சாப்பாடு என்றால் ஒரு கும்பா. கோழி என்றால் முழுக்கோழி. முட்டை என்றால் குறைந்தது அஞ்சு. பால் என்றால், கறந்ததும் ஒரு லிட்டர். இப்படி முழுசாக வேண்டும் என்பதால் அவர் இப்பெயரில் அழைக்கப்படுவதாகப் பெயர் காரணம் சொல்வார்கள்.

ஆடுமாடு said...

//டி.வி, கிரிக்கெட்டெல்லாம் வந்த பிறகு கம்பு சுத்தறது, கபடி விளையாடுறது எல்லாம் கிராமங்களில் கூட இல்லாம போயிடுச்சுங்கிறது மிகவும் வருத்தமான விஷயம்தான்//

சொல்லிக்கொடுக்க ஆள் இல்லை அண்ணாச்சோ.

ஆடுமாடு said...

paul vannan sir,
Thanks for your appreciation and comment. Every village had a silampu vathiar, on that days. I already heard about MGR Balu.

For this charactor (muzhusu), I had added the extra masala on purpose to give the right expression to the charactor. For ur info.

Thank you sir.