கிறுக்கி ஆச்சி, பேச்சை நிறுத்திப் பார்த்ததில்லை. குச்சு வீட்டின் எதிரில் இருக்கிற மண் சுவற்றில் குத்த வைத்து கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் போது கூட, எதையாவது பேசிக்கொண்டிருப்பாள். அப்படி பேசிக்கொண்டே இருப்பதற்கு எப்படி பழகி இருப்பாள்? என்ற கேள்விக்கு, அதற்கென்ன பழக்கம் வேண்டி கிடக்கிறது என்று பதில் சொல்லி முடித்துக்கொள்வேன். ஓயாமல் வேலை செய்துகொண்டிருக்கிற அந்த வாய்க்கு, வலிக்காதா? என்ற கேள்வியை அவளிடம் கேட்க முடியாது. அவளாக இதை சொல்லப் போவதும் இல்லை. தனக்குத் தானே பேசிக்கொண்டிருக்கிற அல்லது அதையே இயல்பாக்கிக் கொண்டிருக்கிற ஆச்சிக்கு, நரைத்திராத கலைந்த தலைமுடியும் கன்னத்தில் விழுந்திருக்கிற வெட்டுத் தழும்பும் காதை இழுக்கும் பாம்படங்களும் அடையாளங்கள். கிறுக்கி ஆச்சி என்பது அவளது மனநலம் சம்பந்தப்பட்ட பெயரல்ல. தோற்றத்துக்காக ஏற்பட்டப் பெயர். அவள் இயற்பெயர் அனச்சி.
அதிகாலை நேரங்களில் தெரு ஓரங்களிலோ, வாய்க்கால் கரைகளிலோ கண்டங்கத்திரி, மணத்தக்காளி, ஊமத்தங்காய், ஆடாதொடை செடி உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டும் மாலையில் அவற்றைப் பக்குவப்படுத்திக் கொண்டும் இருப்பதை தொழிலாகக் கொண்டவள். ஊரில் மண்டை இடி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு கிறுக்கி ஆச்சிதான் மருத்துவச்சி. இந்த மருத்துவத்தை அவள் எங்கு படித்தாளோ தெரியாது. ‘கால்ல என்னய்யா புண்ணு. கெந்தி கெந்தி நடக்கெ?’ என்று தானாகக் கேட்டு, அந்த புண்ணுக்கு செடிகொடிகளை மருந்தாகச் சொல்கிற ஆச்சிகள் இன்னும் இருக்கிறார்கள். நான்கு மகன்கள் மற்றும் இரண்டு பெண்களை பெற்ற கிறுக்கி ஆச்சிக்கு வயது எண்பதுக்கு மேல் இருக்கலாம். ஒல்லியான கருந்தேகத்தோடும் முகச்சுருக்கங்களோடும் இருக்கிற அவளால் இன்னும் உழைத்துக் கொண்டிருக்க முடிகிறது.
‘அவா என்ன சாதாரணவளால. அன்னா இருக்கு பாரு பாண்டிராசா கோயிலு. ஒத்தயிலயே கல்லு மண்ணு சொமந்து கெட்டுனவா அவளாங்கும்’ என்பார் முத்துக்கண் தாத்தா.
பெரும் உழைப்பை கொண்டிருக்கிற அவளது கவரவம், மகன்களின் வீட்டில் உட்கார்ந்து மருமகள்களோடு சண்டையிடவும் மகள்களின் வீட்டுக்குப் போய் வேலைபார்க்கவும் இடம்கொடுக்கவில்லை.
‘பெரியவன் பொண்டாட்டி, என்னைய மாட்டுக்கு தண்ணி வைக்க சொல்லுதாய்யா. சின்னவன் பொண்டாட்டியும் மூணாவது பய பொண்டாட்டியும் கூட்டுக்காரியோ. கெணத்துல தண்ணி இறைக்க சொல்லுவாவோ. ரெண்டாவதுள்ளவன் பொண்டாட்டிக்காரி பரவால்லன்னு நினைச்சா, ‘உன் வீட்டை என் புள்ளைக்கு எழுதி வச்சிரு’ன்னு இப்பமே கேக்கா அவா. நாளைக்கு நான் முடியாம கெடந்தா, இவளுவோ பாப்பாளுவளா? என் வயித்துல பொறந்த பயலுவோ என்னைக்காவது இவளுவளெ கண்டிச்சிருக்கானுவளா? சொல்லு. நான் எதுக்குப் போயி இவனுவ வீட்டுல கஞ்சிக் குடிக்கணும்? ஒடம்புல தெம்பு இருக்கதவரை ஓடட்டும்’’& மகன் வீட்டில் போய் இருக்க வேண்டியதுதானே என்று யாராவது கேட்டால், ஆச்சியின் பதில் இப்படியாக இருக்கும்.
அப்படியே மகன்கள் வீட்டுக்குப் போனாலும் அவளால் சும்மா இருக்க முடியாது. அடுப்படியில் வெந்துகொண்டிருக்கும் குழம்பை கையில் ஊற்றி ருசி பார்ப்பாள். ‘என்ன கறி வச்சிருக்கெ. இப்படி வச்சா, ஆம்பளெ எப்படி திம்பாம்? நீ தூரப்போட்டி’ என்று மருமகளை வெளியில் போகச் சொல்லிவிட்டு சமையல் செய்யத் தொடங்கிவிடுவாள். 'தொழுவுல இன்னுமா சாணி அள்ளலை. இப்படிக் கெடந்தா நாத்தம்லா அடிக்கும். சின்ன புள்ளைலுவோ இருக்குத வீட்டை, இப்படித்தான் வச்சிருப்பேளோ?’ என்றவாறு தூத்து பெருக்கி கூடையில் சாணி அள்ளத் தொடங்குவாள். பின், தூரத்தில் இருக்கிற எருக்கெடங்கிற்கு சாணக் கூடையை தலையில் தூக்கிப் போய் கொட்டுவாள்.
தனது குச்சிலுக்கு வந்து கை, கால் கழுவிவிட்டு, ‘நான் ஏன் இவனுவோ வீட்டுக்குப் போய் வேலை பார்க்கணும்? நான் ஏம் போனேன்? எனக்கு கொஞ்ச கொழுப்பா இருக்கு?’ என்று குத்த வைத்து தன்னையே ஏச ஆரம்பித்துவிடுவாள்.
ஊரில் யாருக்காவது பேர்காலம் என்றால் அவளுக்கு தானாக மகிழ்ச்சி பிறந்துவிடும். கூப்பிடுகிறார்களோ இல்லையோ இவளே போய், ‘புள்ளதாச்சிக்கு அதைக் கொடுத்தியா, இதை கொடுத்தியா?’ என்று குழந்தைப் பிறப்புக்கான முன் யோசனைகளையும் பிள்ளை பெற்றபின், பச்ச உடம்புக்காரிக்கான மருந்து குழம்புகளையும் செய்து கொடுப்பாள். இந்த துறு துறு ஆச்சிக்கு இருக்கிற ஒரே பிரச்னை, பேச்சு. பேசிக்கொண்டிருப்பது அல்லது ஏசிக்கொண்டிருப்பது. புதிதாக அவளை பார்க்கிறவர்களுக்கு, ‘ஏன் எப்பவும் சலம்பிட்டே இருக்கா?’ என்று தோன்றும். பழக்கப்பட்டவர்களுக்கு அவள் பேசாமல் இருந்தால் அதிசயம்.
ஆச்சியின் வசவுகளில் வெறிகொண்ட சாபம் ஏதும் இருக்காது. ‘என்னைய இப்படி சொல்லிட்டாளெ. நான் பொறந்த பொறப்பென்ன? இந்த ஊருக்கு என்னைக்கு வாக்கப்பட்டு வந்தேனோ, அன்னைக்கே போச்சு எல்லாம்’ என்று பொதுவாகப் புலம்பத் தொடங்குவாள். அந்த புலம்பலில் தன்னை பற்றிய கழிவிரக்கமே அதிகமாக இருக்கும். அல்லது மருமகள்கள் பற்றிய குறைகள்.
வசவாகவோ, வாழ்த்தாகவோ வந்து விழுகிற அவளது பேச்சுகள் காற்றில் எப்போதும் பறந்துகொண்டிருக்கிறது. காற்றாகப் போகும் பேச்சுகள் ஆங்காங்கே துண்டு துண்டாக நிற்க நேர்ந்தால், நம் மூதாதையர் காலத்து பேச்சிலிருந்து நம் பேச்சுகள் வரை முட்டி மோதி, பேரூந்து நெரிசல் மாதிரி, பேச்சின் நெரிசல் ஏற்பட்டிருக்கும். அதற்கான வாய்ப்பில்லாமல் போனது துரதிர்ஷ்டம்தான்.
வீட்டில் நேரம் போகாமல் இருந்தால் அல்லது யார் பற்றியாவது பேச வேண்டுமென்றால் மட்டும் கிறுக்கி ஆச்சியை தேடிப்போவாள், பக்கத்து வீட்டு கல்யாணி ஆச்சி. இவளுக்கும் பொசமுட்டிக்கொண்டு வந்தால் அவளைத் தேடிப் போவாள். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, சண்டை நடப்பது போலத்தான் இருக்கும். ‘அப்படியா?’ என்று ஆச்சரியம் காட்டுகிற வார்த்தையை கூட, சண்டைக்கான உச்சரிப்போடுதான் கிறுக்கி ஆச்சி சொல்லுவாள். சில நேரங்களில் இவள் சத்தம் போட்டு பேசத் தொடங்க, அது வெளியில் கேட்கத் தொடங்கும். ரகசியம் பேச வந்த கல்யாணி ஆச்சி, ‘ஒங்கிட்ட போயி சொல்ல வந்தென் பாரு, கோட்டிக்காரிச்சி’ என்று முணங்கிக் கொண்டே வெளியேறிவிடுவாள். ‘போ...தொலெ. யார்ட்ட வந்து கோவத்தெ காட்டுதா?’ என்று முகம் மாறுகிற கிறுக்கி ஆச்சி, பிறகு அடுத்த சில மணி நேரங்களிலேயே அவளிடம் பேசத் தொடங்கி விடுவாள். இருவருக்குமான நட்பு சொல்லிக் கொள்ளும்படியானதுதான். ஒரே ஊரில் இருந்து இருவரும் இந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்தவர்கள் என்பதும் ஒருவகையில் உறவினர்கள் என்பதும் அவர்கள் நட்பின் ஆழத்துக்கு காரணம்.
ஒரு மழை நாளில் பேசிவிட்டு கிளம்பிய கல்யாணி ஆச்சியிடம், ‘மெதுவா போ. மழையில உறைஞ்சிராத’ என்று கிறுச்சி ஆச்சி எடக்குப் பண்ண, ‘வாய பொத்து. நான் பாத்துக்கிடுதென்’ என்று மெதுமெதுவாக நடந்து போனாள். வீட்டு வாசலில் ஏறப்போன கல்யாணி ஆச்சி, படியில் தடுமாறி மூஞ்சிக் குப்புற விழுந்ததில், எந்த அரவமும் இன்றி நொடியில் இறந்து போனாள்.
‘மவராசி இப்படி பொசுக்குன்னு போயிட்டாளெ? என்று பரிதாபப்பட்டார்கள் ஊரில். உறவினர்கள் எல்லாரும் அழுதுகொண்டிருக்க, கிறுக்கி ஆச்சி மட்டும் அழவே இல்லை. அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால், அன்றிலிருந்து அவளிடம் இருந்த பேச்சு திடீரென்று குறைந்துவிட்டது. எப்போதும் தொணதொணக்கிற வாய், மூடிகிடக்கிறது. எதையோ தேடுவதைப் போல அவள் கண்கள் இப்போது அலைபாய்கின்றன. 'கிறுக்கி ஆச்சியை செத்த நேரம் பேசாம இருக்க வையி. நாலு கொடம் தண்ணி எடுத்து தாரேன்’ என்று பந்தயம் கட்டுகிற சமைஞ்ச குமரிகள், இப்போது வாய்பொத்தி பார்க்கிறார்கள் அவளை. கல்யாணி ஆச்சி, இவளது பேச்சை பறித்துப் போய்விட்டதாக, ஊரில் பரவிக்கிடக்கிறது பேச்சு.
ஆச்சிகளின் பேச்சை, ஆச்சிகள் பறிப்பார்களா?

1 comment:
உறைந்து போய் ஊமையானது கிறுக்கி ஆச்சி மட்டுமல்ல கதை படித்து கனத்து போன எங்கள் மனமும்தான்...
Post a Comment