Saturday, June 23, 2012

தொலையாத முகங்களுடனான வாழ்வு

ஊருக்குச் சென்றால் கால் வலிக்க நடந்த ஆற்று மண்டபத்திலும் பொழுதுகழித்த தெப்பக்குள மற்றும் பஞ்சாயத்து போர்ட் திண்டுகளையும் மிதிக்காமல் வருவதில்லை. மிதிபடும் அந்த நிமிடங்களில் பீடியை பிடித்தபடி, லுங்கியை இழுத்துக்கட்டி, சாமி ஐயரின் வார்த்தையில் ஒரு பொறுக்கியாகி விடுகிறேன். இல்லையென்றால் என்னை அடிக்கடி பார்த்தவாறு தாவணியை சரிசெய்துகொண்டே நார்க்கூடையில் சாணம் பொறுக்கச் செல்பவளின் ரசிகனாகிவிடுகிறேன். அதுவும் இல்லையெனில் எதிர்படும் காற்றில் தலைமுடியை கோதிவிட்டபடி என்னை நானே ஏதோவாக பாவித்துக் கொண்டலைந்தவனாகிவிடுகிறேன். இப்படி எந்தவித அனுபவத்தையும் அந்த திண்டும் ஆற்றுமண்டபமும் தரவில்லை என்றால் அன்று ஊருக்குப் போவதை நிறுத்திவிடவேண்டும். ஆனால், அப்படி ஏதும் இதுவரை நடக்கவில்லை. மாறாக பெரும் ஊற்று பிரவாகமெடுத்து ஓடுகிறது ஒவ்வொரு முறை போகும்போதும். அந்த நதியெங்கும் நீந்தி கழிக்கிறது என் நினைவலைகள். அந்த அலைகளே இன்னும் உயிர் வாழ வைக்கிறது.


பழைய தகரப்பெட்டியில், அடைபட்டுக்கிடக்கிற அப்பாவின் கையெழுத்திட்ட கடிதங்களுடன் ஓரமாய் கிழிந்துகிடந்த அந்தப் பழுப்பு நிற புகைப்படம், இத்தனை நாளாய் எங்கிருந்தது என்று தெரியவில்லை. எனது பள்ளிக்கூட புகைப்படங்களுடன் சேர்ந்திருந்த அந்த புகைப்படம் இன்னும் கொஞ்சம் மூச்சு தந்து போனது. அடுக்களையில் அம்மா வைக்கும் சாம்பார் மணமணத்துக்கொண்டிருக்க, நான் அந்தப் புகைப்படத்துக்குள் முங்கிப் போனேன்.

கோவில் கொடைக்காக திருநெல்வேலியிலிருந்து வந்திருந்த பெரிய மாமாவின் 'பிளஷ'ரில் தெருப்பையன்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது, புதிதாக கேமரா வாங்கியிருந்த மாமாவின் நண்பர், 'ஏலெ எல்லாரும் அப்படியே நின்னுங்க. போட்டா எடுப்போம்" என்றார்.

இடுப்பிலிருந்து அடிக்கடி அவிழுந்து விழும் டவுசரைப் பிடித்துக்கொண்டே நான், செல்வி அக்கா, குட்டி, பிரேமா நின்று கொண்டிருக்க, 'எல்லாரும் சிரிங்கடெ. இப்பம் எடுத்துருவோம்' என்று சொல்லிக்கொண்டே அமுக்கினார். மின்னல் போல வந்துபோன ஒளியில் கண்கள் மூடி திறக்க, இரண்டு வாரங்கள் கழித்து அந்தப் புகைப்படம் வீட்டுக்கு வந்திருந்தது. டவுசரை பிடித்தபடி நெளிந்துகொண்டு நான் பல்லைக் காண்பித்துக்கொண்டிருக்க, அடுத்து நிற்கும் அக்காவுக்கும் எனக்கும் இடையில் ஒர் உருவம். காரின் பின்பக்க கதவிலிருந்து இறங்கும் அவளின் முகம் மறைந்து ஃபப் கை வைத்த சட்டையும் பட்டுப்பாவாடையும் தெரிந்துகொண்டிருந்தது.


'ஏலெ இது யாருன்னு தெரிதா?' என்ற அக்கா, 'பெரிய மாமா மவாலா' என்று அவளே தொடர்ந்து விளக்கம் தந்தாள். கோவில் கொடை மற்றும் ஏதாவது விசேஷ நாட்களுக்கு மட்டும் ஊருக்கு வருபவள் அவள். வந்தாலும் குறைந்தது பத்து நாட்கள். கோடை விடுமுறைக்கு ஒரு மாதம் என அவள் தங்கல் இருக்கும். வீட்டுக்குள்ளும் மாட்டுத் தொழுவம் கடந்த தோட்டத்துக்குள்ளும் எங்கள் விளையாட்டுகள் தொடரும். எங்கள் என்றால், குடும்ப உறுப்பினர்களின் வாண்டுகள் மொத்தம் ஏழெட்டு பேர். ஆனால் எனக்கும் மாமா மகளுக்கும் எப்போதும் ஆகவே ஆகாது. சண்டைக் கோழிகள்.

'ஏய், உன் வீட்டுக்காரிட்ட சண்டைப் போடாதடே' என்று பெரிய அத்தையும், 'ஏட்டி உன் வீட்டுக்காரனெ, அப்டிலாம் பேசலாமா?' என்று கிட்னம்மா சித்தியும் உசுப்பேற்றினாலும், 'நான் இவனெ கெட்டமாட்டெம்லா' என்று முகத்தை கோணலாக்கிச் செல்வாள் அம்மாவிடம்.

'சீதத்தை உங்க மவன், எங்கிட்ட சொரணாவிட்டே இருக்காம். சொல்லி வைங்க. இல்லன்னா, எங்கப்பாட்ட சொல்லி தூண்ல கெட்டி வச்சிருவேன்'

'ஏ முண்டகன்னி. நீ கெட்டி வச்சிருவியோட்டி. இப்பவே இந்த பேச்சு பேசுதியே... என் வீட்டுக்கு வந்தா என்னையலா பாடா படுத்துவ?' என்பாள் அம்மா. வீட்டு வாசலில் எல்லோரும் சிரிபபர்கள்.

இப்போது எல்லாம் சிதைந்துவிட்டது. எப்போதும் கலகலவென்றிருக்கும் வீடு. சித்திகளும் அத்தைகளும் மாமாக்களும் உலா வந்த, தாத்தாவின் வெற்றிலை டப்பாவும் ஆச்சியின் பாம்படமும் படபடத்த அந்த வீடு, காற்றும் மழையும் பெருங்கோபம் கொண்டு வந்த ஓர் நாளில் சிதைந்து போனது. அந்த சிதைவிலேயே மொத்த குடும்பமும் துண்டுகளாகிவிட்டன. நான் யாரோ நீ யாரோ என்றாகிவிட்டது. குடும்ப சண்டையின் பொருட்டு எல்லோருடனும் உறவறந்து போய் தனித்தனி தீவாகி விட்டார்கள். ஆனால் தொலையாத இன்னும் சிரித்துக்கொண்டலைகிற அந்த முகங்களோடு வாழ்க்கைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

கண்களை மீறி வந்த கண்ணீரை துடைக்காமலிருந்ததை பார்த்து, ''ஏம்ல அழுத, என்னாச்சு?' என்று படபடத்த அம்மா, புகைப்படத்தை பார்த்தாள். என்ன நினைத்தாளோ, முந்தானையை வாயில் வைத்துக்கொண்டு அடுக்களைக்குச் சென்றுவிட்டாள். சிறிது நேரத்துக்குப் பிறகு வந்தவள் வாழை இலையை என் முன் விரித்துவிட்டுச் சொன்னாள்.

''போனமாசம் சடச்சாச்சி செத்ததுக்கு வந்திருந்துச்சுலெ இந்தப் புள்ள. கோயமுத்தூர்ல கெட்டிக்கொடுத்திருக்காவுளாம். ஏண்டா பாத்தோம்னு ஆயிப்போச்சு. கண்ணு ரெண்டும் உள்ள போயி, ஒல்லி குச்சி மாதிரி இருந்தது. எத்தைன்னு ஓடியாந்து அழுதுச்சு. மனசு கேக்கலைடா. எப்படி பார்த்த பிள்ளை, இப்படியாயி போச்சேன்னு என்னாலயும் முடியலை. கூட யார் வந்தான்னு தெரியல. வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு. பெறவு எதுத்த வீட்டு யக்ஞம்மாதான் சொன்னா, என்னமோ சீக்காம் அவளுக்கு. எனக்கு தெரியலை. ரெண்டு பொட்டபுள்ளலுவோலாம்..."

'போதும்ழா. சோத்தை வையு" என்றதும் கதையை விட்டுவிட்டு சோற்றை வைத்தாள்.

சில கதைகளை கேட்காமலேயே இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். பல வருடங்களுக்கு முன் நான் பார்த்த அவளது முகம் மட்டும் என் மனதுக்குள் வந்து போனது. ஏதுமறியாத அந்த சின்னப்பிள்ளையின் முகத்தில் நானும் சிறு பிள்ளையாகிறேன். காலம் ரிவர்ஸில் செல்வதாகக் கற்பனை செய்துகொள்கிறேன். சைக்கிளை வேகமாக உருட்டிக்கொண்டே, குதித்து சீட்டில் அமர்கிற விளையாட்டுப் பிள்ளையாகிறேன். அவளது பின்பக்க ஜடையை இழுத்துவிட்டு மன்னிப்புக் கேட்கிற பாசக்காரனாகிறேன். அவள் காலில் முள் தைத்த இடத்தில் எருக்கஞ்செடி பால் ஊற்றி வலியை இலகுவாக்கிறேன். செடியில் பழுத்து தொங்கும் தக்காளி பிடுங்கி அவள் எரிகையில் நெஞ்சை காட்டுகிற வீரனாகிறேன்.

அம்மா பார்த்த முகம் எனக்கு வேண்டாம். என்னை நிலைகுலைய வைக்கிற அந்த முகம் அல்லது கதை எனக்கு தேவையில்லை. அந்த கதைகளை கேட்டு பரிதாபப்படுவதை தவிர என்னால் வேறேதும் செய்ய இயலாது.

6 comments:

ராம்ஜி_யாஹூ said...

அற்புதம்

77 நம்பர் பஸ்ஸில் ஏறி நெல்லை டு பாபநாசம் சென்று வந்த உணர்வு

துபாய் ராஜா said...

ஆமா அண்ணாச்சி.ஊருக்கு போகும் போதெல்லாம் நடந்த கதைகளை கேட்கும் போது மனம் கனக்கத்தான் செய்கிறது.

ஆடுமாடு said...

ராம்ஜி யாஹூ நன்றி.

ராஜா அண்ணாச்சி, அப்படித்தான் இருக்கு. நன்றி

muthukumaran said...

நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்

இரசிகை said...

mm..
nallaayirukku sir.

manjoorraja said...

அருமையான நடையில் பிழிந்தெடுத்துவிட்டீர்கள்