Sunday, April 1, 2012

பூகம்ப பூமியில் மூன்று நாள் - 3

சஞ்சய் பாண்டே மும்பைக்காரர். பத்து வருடங்களுக்கு முன்பு ஜப்பான் வந்ததாகச் சொன்னார். ஹோட்டலில் இருந்து இறங்கி மிட்டவுண் தாண்டி, ரூப்பொங்கி ஸ்டேஷனுக்கு போனோம். ரயில் பாதைகளை ஒவ்வொரு லைனாக பிரித்து வைத்திருக்கிறார்கள். ஜே ஆர் லைன், ஹிபியா லைன், மிடா லைன் என்று ஏகப்பட்ட லைன்கள். எல்லாமே ஒவ்வொரு புளோர் மாதிரி தரைக்கு அடியில் சுரங்கத்தில் இருந்தது. நாங்கள் போக வேண்டியது ஜே.ஆர்.லைன். சஞ்சய்யிடம், 'எங்க போறோம்' என்றேன். இந்தியன் ஓட்டலுக்கு என்றார். பழையச்சோறும் ஊறுகாயும் ஞாபகத்துக்கு வர வேண்டிய எனக்கு, ரொட்டியும் naanனும் மனதுக்குள் வந்துவிட்டுப் போனது.


ரயிலுக்குள் ஏறி அமர்ந்ததும், அடுத்த ஸ்டேஷனில் ஏகப்பட்ட கூட்டம். சஞ்சய், எங்களை பார்த்தார். டிரைனில் நிற்பவர்கள் யாரும் யாருடனும் பேசவில்லை. அவரவர்கள் செல்போனில் கேம்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள். இல்லையென்றால் கண்களை மூடி தூக்கத்தை தேடிக்கொண்டிருந்தார்கள். ஒருவருக்கொருவர் சின்னதாகப் புன்னகை கூட செய்துகொள்ளவில்லை. ஏன் இப்படி என்றோம் சஞ்சயிடம். 'ஜப்பானியர்கள் யாரையும் அவ்வளவு ஈசியாக நம்புவதில்லை. எல்லாரும் அவர்கள் வேலையில் மட்டும் கவனமாக இருப்பார்கள்' என்றார். 'அவர்கள் நம்மை கவனிக்காத மாதிரி தெரிந்தாலும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்' என்ற சஞ்சய்.

ஷிபுயா (shibuya) ஸ்டேஷனில் இறங்கி பரபரத்துக்கொண்டிருந்த சாலையில் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே நடந்தோம். அதுல் ரோட்டில் நடந்து போகிற அழகான வெள்ளை நிற பெண்களைப் பார்த்ததும், அவர்களுடன் நின்று போட்டோ எடுப்பதை தொழிலாகவே செய்து வந்தார். சாலைகளின் ஓரங்கள் அவ்வளவு அழகாக இருந்தது. ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன் கண்களை இறுக மூடி வயலின் வாசித்துக்கொண்டிருந்தான். சிலர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுலும், அஜய்யும் கேமராவை என்னிடம் கொடுத்து அவனருகில் போட்டோ எடுக்கச் சொன்னார்கள். வாசிப்பதை நிறுத்திவிட்டு இருவரது தோள்களிலும் கை போட்டபடி சிரித்தான் அந்த சிறுவன். சிறிது தூரம் சென்றதும் டைட்டாக ஜீன்ஸ் அணிந்த பெண்களும் பசங்களும் குருப்பாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். 'இவங்கள்லாம் ஜப்பானியர்கள் இல்ல. சைனீஸ்' என்றார் சஞ்சய். 'ரெண்டு நாட்டுக்காரங்களுக்கும் அப்படி என்ன வித்தியாசம் தெரியுது உங்களுக்கு. எனக்கு தெரியலை" என்றேன். 'கூர்ந்து கவனித்தால்தான் தெரியும்' என்றார் அவர். அதுல் எல்லாவற்றையும் புகைப்படமெடுப்பதில் ஆர்வமாக இருந்தார். 'இன்னுமொரு முறை இங்க வர்ற வாய்ப்பு கிடைக்குமோ, கிடைக்காதோ... அதான்' என்று அதற்கு காரணம் வேறு சொன்னார்.

''போட்டோகிராபியை ரசிக்கிற நாடு இது' என்றார் சஞ்சய். எதிரில் பெட்டிக்கடை சைஸில் தெரிந்த போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்தால் சிரிப்பாக இருந்தது. இவ்வளவுதானா ஸ்டேஷன்? என்று சுற்றி சுற்றிப் பார்த்தேன். அவ்வளவுதான். நான்கைந்து போலீஸ்காரர்களும் மூன்று கம்ப்யூட்டர்களுமே அங்கு இருந்ததன. எங்களைப் பார்த்ததும் வெளியில் வந்த போலீஸ்காரர் ஒருவர், ஏதாவது உதவி வேணுமா? என்றார். இல்லையென்று தலையாட்டிவிட்டு, 'இந்தியாவிலிருந்து வந்திருக்கிறோம். உங்களுடன் ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறோம்' என்று அதுல் கேட்டதும் அவசரமாக மறுத்தார். அதற்கு அனுமதி இல்லை என்று சிரித்துக்கொண்டே சொன்ன அவரது தோரணைப் பிடித்திருந்தது.



'இது ஜீரோ பிரசண்ட் கிரைம் உள்ள நாடு. அப்படியே ஏதாவது எங்கயாவது குற்றம் நடந்தா, அதை செய்தது வெளிநாட்டுல இருந்து வந்தவங்களாத்தான் இருக்கும்" என்றார் சஞ்சய். குற்றமே நடக்காத ஒரு நகரத்தை பார்ப்பதில் பூரிப்பாக இருந்தது. இப்படியொரு நகரம் சாத்தியமா? என்று எனக்குள் கேட்டுக்கொண்டே நடந்தேன்.

'இங்க மொத்தம் ஐயாயிரம் இண்டியன்ஸ் இருக்கோம். நாங்களும் அசோஷியேசன் வச்சிருக்கோம்' என்ற சஞ்சய், நடந்துப் போய்க்கொண்டிருந்த தெருவில் இருந்த சந்து போன்றதொரு கடைக்குள் நுழைந்தார். வெளியில் நின்றுகொண்டே ஏதோ பேசிவிட்டு, சேரில் உட்கார்ந்து ஷூவை கழற்றத் தொடங்கினார். நாங்களும் கழற்றினோம். அந்த ஷூக்களை வைக்க மரத்திலான அறைகள் இருந்தன. அவற்றில் வைத்து பூட்டி, சாவியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அப்படியே செய்தோம். பிறகு உள்ளே பார்த்தால் தெரு மாதிரி இருந்தது அந்த ஏரியா. அதில் இடது பக்கம் முழுவதும் அறை அறையாக இருக்கிறது. அது புதுமையான பார். ஒரு அறையில் நான்கு பேர் காலை தொங்கப்போட்டு அமரலாம். அதற்கேற்றபடி அந்த அறையை வடிவமைத்திருந்தார்கள். சஞ்சய், இங்கு மீன் ஸ்பெஷல் என்றார். வைக்கப்பட்டிருந்த மெனுகார்டில் இருந்த புகைபப்டங்கள் எச்சில் ஊற வைத்தன. சரி என்று எல்லோருக்கும் அதை ஆர்டர் செய்துவிட்டு இருக்கும்போது, இளம் பெண் ஒருவர் சிரித்துக்கொண்டே ஹாட் வொயின் வைத்துவிட்டு போனார். நீலநிற குடுவைக்குள்ளிருந்து எல்லாருக்கும் ஊற்றினார் சஞ்சய். குடித்துக்கொண்டே அவரிடம் கேட்டேன், 'இங்க உள்ள இண்டியன்ஸ் பற்றி சொன்னீங்களே?' என்று ஞாபகப்படுத்தினேன்.

''ஆமா. இங்க ஐயாயிரம் இண்டியன்ஸ் இருக்கோம். அதுல நாலாயிரம் உங்க தமிழ்க்காரங்க' என்றதும் எனக்கு சந்தோஷம். உடனே ஒருவருக்கு போனை போட்டு, 'ரெண்டு மூணு நாளா தமிழ்லயே பேசியிருக்க மாட்டேங்களே.. இந்தா, இவர்ட்ட பேசுங்க' என்று கொடுத்தார். 'வணக்கம்' என்றதும் மறுமுனையில் ஷாக். 'தமிழா, நீங்க யாரு?' என்று தொடர்ந்தது பேச்சு. அவர் பெயர் ரவி. சொந்த ஊர் கம்பம் பக்கம். இங்கு சயண்டிஸ்டாக இருக்கிறார். பிறகு, 'ஊர் சுற்றிக் காண்பிக்க சஞ்சய் பக்காவான ஆளு. ஜப்பான்ல எல்லா விஷயத்துக்கும் பேரம்பேசற ஒரே ஆளு அவர்தான். வேணா, அவரோட மசாஜ் போயிட்டு வாங்களேன்' என்றார். ஏற்கனவே மலேசியாவில் மசாஜ் செண்டரில் செல் போனை தொலைத்ததில் இருந்து மசாஜ் ஞாபகம் சுத்தமாக மறந்து போய் விட்டது. பிறகு, சென்னை வரும்போது சந்திப்பதாகச் சொன்னார் ரவி.

சஞ்சய், 'இப்ப குஷியாகி இருப்பீங்களே?' என்று சொல்லிவிட்டு அவர்களுடன் இந்தியில் பேச ஆரம்பித்தார். உண்மைதான். பல ஆயிரம் மைல்களுக்குப் பிறகு பல கடல்தாண்டி தாய் மொழி கேட்பது மகிழ்ச்சியான உணர்வுதான். மீன்கள் வந்தன. ஒவ்வொன்றாக தின்றுவிட்டு இன்னொரு ஹாட் ஒயினுக்கு ஆர்டர் செய்தாய் சஞ்சய். எங்கள் கதவை கடந்த இளம் பெண்களும் நீளமாக தலைமுடி கொண்ட பையன்களும் கட்டிப்பிடித்தபடி சிரித்துக்கொண்டே போனார்கள்.

'இண்டியன் ஓட்டலுக்கு போவதாகச் சொன்னீர்களே?" என்று கேட்டேன். அதற்கு முன் குளிருக்கு இந்த ஹாட் ஒயின். பிறகு அங்கு போகலாம் என்றார். அங்கிருந்து முடித்துவிட்டு வெளியே வந்து சிறிது தூரம் நடந்தோம். அந்தப் பகுதிக்கு shinjuku என்றார்கள். அதாவது இதுதான் பலான ஏரியாவாம். தெருவில் சில பையன்கள், கையில் போர்டுகளை வைத்துக்கொண்டிருந்தார்கள். அதெல்லாம் மாடர்ன் பார் ஏரியா என்றார்கள். அந்த போர்டில் எழுதப்பட்டிருந்த வாசகம்தான் மீண்டும் சில முறை திரும்பி பார்க்க வைத்தது. அந்த வாசகம், ' these girls will go extreme'.

அதுலும் அஜய்யும் அங்கு நின்று மாறி மாறி புகைப்படம் எடுத்தார்கள். சிலர் உடலிலேயே போர்ட் மாட்டிக்கொண்டு நின்றிருந்தனர். அதில் எழுதப்பட்டிருந்த வாசகம் புரியவில்லை என்றாலும் ஏதோ விலை எழுதப்பட்டிருந்ததாகப் பட்டது. அதற்கு மேல் அங்கு நிற்க பணம் பிரதானம் என்பதால் சஞ்சய்யை நகர்த்தினோம். இதுவரை பார்க்காத மக்கள் கூட்டம் இங்கு அரக்கப்பரக்க அலைந்துக்கொண்டிருந்தது. அங்காங்கே ஓரமாக நின்று சிலர் கதைத்துக்கொண்டிருந்தனர். எல்லோரையும் குளிர் அடித்து புரட்டிப் போட்டாலும் எனக்கு மட்டுமே அது உக்கிரமாகத் தெரிந்தது.



அடுத்து போக வேண்டிய ஏரியா எவ்வளவு தூரம் என்றேன். பக்கம்தான் என்று நடந்தார். அவர் பின்னாலேயே சென்றோம். கொஞ்சம் தூரம் போனதும் சந்துக்குள் திரும்பினார். அந்தப் பகுதிக்கு yotsuya என்று பெயர். எங்களை 'லிட்டில் இண்டியா' என்ற ஒரு போர்ட் வரவேற்றது. இறங்கி கீழே போனோம். வந்து வரவேற்றார் சுதீர் பதக். டெல்லிக்காரர். இந்திய சினிமாவை இவர்தான் ஜப்பானில் விநியோகிப்பவர் என்றார்கள்.

தொடர்கிறேன்.

No comments: