Thursday, March 8, 2012

பூகம்ப பூமியில் மூன்று நாள்

ஹாலிவுட் படம் ஒன்றி்ன் கான்பிரஸுக்காக, டோக்கியோவுக்கு அழைத்திருந்தது சோனி நிறுவனம். டெல்லி, மும்பை, சென்னை என இந்தியாவிலிருந்து மூன்று பேர். சென்னையிலிருந்து நான். அலையோ அலையென அலைந்து ஜப்பான் துணைத் தூதரகம் கேட்ட ஏகப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி, கிளம்ப வேண்டிய தேதிக்கு முந்தைய நாள் தந்தார்கள் வீசாவை. பொதுவாக எந்த நிர்ப்பந்தங்களும் இல்லாத பயணங்கள் சுவாரஸ்யமானவை. காட்டுக்குள் குருவி தேடி அலைகிற ஒரு சிறுவனின் மனநிலைதான் எல்லா பயணங்களிலும் எனக்கு இருக்கிறது. அந்த மனநிலையை இன்னும் சந்தோஷப்படுத்தியது ஜப்பான் பயணம். ஏனென்றால் அடிக்கடி பூகம்பத்தில், சுனாமியில் உயிர்களையும் உடமைகளையும் காவு கொள்ளும் ஒரு பரிதாபகர அல்லது சபிக்கப்பட்ட நாட்டின் காற்றை சுவாசிக்க வேண்டும் என்கிற ஆசைதான். புத்தனாலும் யேசுவாலும் ரட்சிக்கப்படாத அந்த நாட்டின் மண்ணை தொட்டுவிடும் ஆவலில் பத்து மணி நேர விமான பயணத்துக்கு தயாரானேன். சென்னை டூ சிங்கப்பூர். அங்கிருந்து கனெக்டிங் பிளைட் டோக்கியோவுக்கு.


டோக்கியோ நாரிடா விமான நிலையத்தி்ல் இறங்கி நின்று கொட்டாவி விட்டுக்கொண்டே இமிக்கிரேஷனுக்குப் போகும்போது, மணி மாலை 6.00. சென்னையிலிருந்து முந்தைய நாள் இரவு 11 மணிக்கு கிளம்பியிருந்தேன். இமிக்கிரேஷன் முடிந்து சாவகாசமாக வெளியே வந்து நினறதும் குளிர், சதைக்குள் நுழைந்து நரம்பை ஆட்டியது. இருந்தாலும் சமாளிக்கலாம் என்று தெம்பு தந்தது மனசு. வெளியே பார்த்தால் இருட்டு. அந்த ஏரியாவில் நான் மட்டும்தான் வெறும் சட்டை, பேண்டுடன் இருந்தேன். பேக்குக்குள் இருக்கிற குளிருக்கான கோட்டை எடுத்து மாட்ட சோம்பேறித்தனம். ஹோட்டல் ரிட்ஸ் கார்டன், அட்ரஸை கேட்பதற்குள் முதல் பயம் ஆரம்பித்தது. மணி எக்ஸ்சேஞ்சரில் யென் மாற்றிவிட்டு, அட்ரஸ் கேட்டால், எதிரிலிருந்த பெண்களிடம் கை நீட்டினார்கள். அவர்கள், எப்படிப் போகப்போகிறீர்கள், டாக்ஸியா, பஸ்சா, டிரைனா? என்றார்கள். நம்மூர் மாதிரிதான் இருக்கும் என நினைத்து முதலில் டாக்ஸி என்றேன். டாக்ஸிக்கு 25 ஆயிரம் yen ஆகும் என்றார்கள். நான் திரும்பவும் எவ்வளவு என்றேன். 25 ஆயிரம் என்பதை சத்தமாக சொல்லிவிட்டு, சிரித்துக்கொண்டே முகத்தைப் பார்த்தார்கள். 25 ஆயிரம் என்றால் ஓட்டல் என்ன வேறு மாநிலத்திலா இருக்கிறது என்றேன். இல்லை சுமார் ஒன்றரை மணி நேர பயணம் என்றார்கள். அதற்கு 25 ஆயிரமா? ஷாக்தான். காஸ்ட்லி சிட்டி என்று சொல்லியிருந்தார்கள். இவ்வளவு காஸ்ட்லி என்று நினைக்கவில்லை.

'பஸ்?" என்றேன். டிக்கெட் மூவாயிரம் yen என்றும் இப்போது சர்வீஸ் கட்டாகிவிட்டது, இனி காலையில்தான் என்றார்கள். அடுத்த ஆப்ஷன் டிரைன் என்பதை தவிர வேறு ஏதுமில்லாததால், ஸ்டேஷனுக்கு வழி கேட்டேன். அங்கேயே கீழே எக்ஸலேட்டரில் இறங்கி, இன்பர்மேஷன் சென்டரில் தகவல் கேட்டதும், ஒரு பெண் போலீஸ் அதிகாரி, வெளியே வந்தார். மொத்த டோக்கியாவையும் அடக்கிய மெகா சைஸ் மேப்பை டேபிளில் விரித்தார். 'we are here'ல் ஆரம்பித்து ரூப்பொங்கி என்ற இடத்தை கண்டுபிடித்து, ஹோட்டலை காண்பித்துவிட்டு சிரித்தார். ஹோட்டல் ஏர்போர்ட் அருகிலேயே இருக்கிறது என்று முதலில் சொல்லப்பட்டிருந்ததால் திரும்பவும், கேட்டேன். மீண்டும் அதே பதில்தான். முதலில் யூயேனோ என்ற இடத்தில் இறங்கி, வேறொரு ரயில் பிடித்து முக்கால் மணி நேரம் பயணம் செய்தால் ருப்பொங்கி ஸ்டேஷன் என்று மேப்பில் விளக்கம் சொல்லியிருந்தார்கள். அந்த மேப்பையும் எனக்கு இலவசமாக தந்துவிட்டார்கள். புன்னகையோடு கிளம்பினேன். அங்கிருந்து வடக்கு நோக்கி நடந்தால் ஏடியெம் மெஷின் மாதிரி, டிக்கெட் மிஷின். அதில் ஆங்கிலத்தை கிளிக் பண்ணிவிட்டு 300 யென் சில்லரையாக இல்லையே என்று முழித்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்த போலீஸ்காரர் என் மூஞ்சை பார்த்து ஓடி வந்து, என்னிடமிருந்து ஆயிரம் யென்னை அப்படியே வைத்தார். டிக்கெட் கட்டணம் முந்நூறு போக, பாக்கி சில்லரையாகவும் நோட்டாகவும் வந்தது எனக்கு ஆச்சரியம்தான்.

பிறகு அந்த புளோருக்கு அடியில் இறங்கி வேறொரு திசையில் சென்றால், அட்ரஸை யாரிடமும் கேட்கத் தேவையில்லாமல் இருந்தது, சுவரில் எழுதியிருந்த விவரம். எந்த ஸ்டேஷனில் நிற்கிறோம். அடுத்தடுத்து வருகிற ஸ்டேஷன்களின் பெயர்களைப் பார்த்து எத்தனையாவது ஸ்டாப்பில் இறங்க வேண்டும் என்பது வரை தெளிவாக இருந்தது. டிரைனுக்காக அதிக நேரம் காத்திருக்கவில்லை. மிஞ்சிப்போனால் இரண்டு நிமிடம். அதற்குள் வந்துவிட்டது. அந்த ஸ்டேஷனில் அங்கு எப்போதும் உணராத ஒருவித புதிய வாசனையை நுகர்ந்தேன். கேக்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற அறைக்குள் செல்லும்போது வருகிற வாசனை மாதிரி இருந்தது அது. அந்த வாசனை டோக்கியோவிலிருந்து மீண்டும் சென்னை வரும்வரை என்னுடனேயே இருந்தது.

டிரைனுக்குள் யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை. அவரவர்கள் சீட்டில் உட்கார்ந்து மொபைலில் கேம் ஆடிக்கொண்டிருந்தார்கள். நான் சுற்றி சுற்றிப் பார்த்தேன். டிரைன் போகும் சத்தம் தவிர, வேறு சத்தம் ஏதுமில்லை. யூயேனோவில் இறங்கி, வேறு டிரைன் மாறி, ருப்பொங்கி வந்து இறங்கினால், குளிர் இன்னும் வாட்டியது. டிரைனில் ஹீட்டர் போட்டிருந்ததால் குளிர் தெரியவில்லை. இப்போது ஓரமாக நின்று ஓவர் கோட் மாட்டிக்கொண்டு, ஹோட்டலை நோக்கி நடந்தேன். உடல் முழுவதும் துணிகளால் மூடியபடி வெள்ளை நிற இளைஞர்களும் இளைஞிகளும் நெருக்கமாக நடந்துகொண்டிருந்தார்கள். டீ குடிக்கலாம் போலிருந்தது. நம்மூரில் முக்குக்கு முக்கு இருக்கிற கடை மாதிரி அங்கே எங்கு பார்க்க? இருந்தாலும் கேட்கலாம்தான். ஓட்டல் முகவரி கேட்க, கடை வாசலில் கை வைத்ததும் திறந்தது கதவு. வெள்ளை சீருடை அணிந்த பணியாளர்கள் ஓடி வந்தார்கள். அது பார். எனது தோற்றம் அவர்களுக்கு அந்நியமாகத் தெரிந்திருக்க வேண்டும். உள்ளே குடித்துக்கொண்டிருந்த இன்னும் சில முகங்கள் என்னை பார்க்கும் பொருட்டு முகத்தை நீட்டின. 'நான் ஓட்டல் ரிட்ஸ்?' என்று கேட்டதும், சிரித்துக்கொண்டே வெளியே வந்த ஒரு இளைஞன், கை நீட்டினான். அருகிலேயே இருந்தது ஓட்டல். நன்றி சொன்னதும் அவன் சிரித்த பாசமான சிரிப்பு இன்னும் மனதுக்குள் இருக்கிறது.

அந்த பகுதிக்கு டோக்கியோ மி்ட் டவுன் என்றார்கள். அதிகமாக பூத்துக்குலுங்காத மரங்கள் சீரியல் லைட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த பகுதியே புதுமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. நின்று வேடிக்கைப் பார்க்கலாம் என்றால் அனுமதி மறுத்தது குளிர்.

ஹோட்டல், ஃபிரண்ட் டெஸ்க் 43 வது மாடியில் இருந்தது. அவர்கள் விசாரித்து, விளக்கம் சொல்லி 48 வது புளோரில் ரூம் என்றார்கள்.
போய் பேக்கை வைத்துவிட்டு, அப்படியே சாய்ந்தேன் பெட்டில். அறை கண்ணாடியிலிருந்து வெளியே பார்த்தால் கட்டிடங்களாகவே தெரிந்தது. எங்கெங்கு காணி்னும் உயரம் அதிகம் கொண்ட கட்டிடங்கள். வந்து சேர்ந்த தகவலை வீட்டுக்கு சொல்லலாம் என்று செல்போனை எடுத்தால் சிக்னல் இல்லை. கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்பே, ஏர்டெல்லில் இன்டர்நேஷனல் காலுக்கு சொல்லியும் சுகமாக மறந்தார்களோ, இல்லை வேறு ஏதாவது கோளாறோ தெரியவில்லை. பிரண்ட் டெஸ்க்குக்கு பேசினால், போன் பண்ண அனுமதி இல்லை என்றார்கள். ஒரு செகண்டுக்கு ஆயிரத்து சொச்சம் யென் என்பதால், 'தனியா பணம் கொடுத்துதான் பேச வேண்டுமாம். டெலிபோன் பூத் எங்காவது இருக்கும் என்று ஹோட்டலை விட்டு இறங்கி தேடத்தொடங்கினேன். லோக்கப் பூத்தில் இன்டர்நேஷனல் கால் வசதியில்லை. பலமுறை டிரை பண்ணியும் ஏமாற்றம்தான் மிச்சம். ஹோட்டலைத் தவிர வேறு பகுதியில் ஆங்கிலம் பேசுபவர்கள் குறைவு. ஏதாவது கேட்டால், சிரித்துக்கொண்டே முகத்தை திருப்பிக்கொள்கிறார்கள். காலையில் எழுந்து பேசிக்கொள்ளலாம் என்று அறைக்கு வந்துவிட்டேன்.

இந்தியாவிலிருந்து வரவேண்டிய மற்ற நண்பர்களை பிரண்ட் டெஸ்கில் விசாரித்தேன். 'ஓட்டல் சீக்ரஸி. நாங்கள் சொல்ல இயலாது' என்றார்கள். எனக்கு ஆச்சர்யம். 'அவர்களின் பெயர்கள் தெரியுமா? என்றார்கள். உடனடியாக ஞாபகத்துக்கு வரவில்லை. மறுநாள் கான்பரன்ஸ். அமெரிக்காவிலிருந்து, வரவேண்டிய 'மிஸ். ஜெஸி ஜின் வந்திருக்கிறாரா?' என்றேன். 'ஆறு மணிவரை காத்திருந்தார்கள். காலையில் ஒன்பது மணிக்கு சந்திப்பதாகச் சொன்னார்' என்றார் ரிசப்ஷனிஸ்ட். எனக்கு வெறுத்துவிட்டது. குளிரோ, வேறு காரணமோ தெரியவில்லை. உடல் சரியான நிலையில் இல்லாததாகப் பட்டது. தூக்கமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ரிசப்ஷனுக்கு அருகிலேயே இருந்தது பஃபே சிஸ்டம். உள்ளே நுழைந்ததும் வைத்திருக்கிற எல்லா ஐட்டங்களையும் சாப்பிட வேண்டும் போல் இருந்தது. சாண்ட்விச்சையும் ஒரு கேக்கையும் எடுத்துக்கொண்டு டேபிளில் அமர்ந்தேன். வேறு ஏதாவது வேண்டுமா என்றார்கள் அளவுக்கு அதிகமாக அன்புகாட்டும் சர்வர்கள். 'உங்கள் நாட்டு ஸ்பெஷல் டீ' என்றேன். இளம்பச்சை நிறத்தில் ஒரு பெரிய கப்பில் வைத்துவிட்டு, குனிந்து வணக்கம் சொல்லிப் போனார்கள். ஆவி பறக்க வந்த டீ சிறிது நேரத்திலேயே குளிரானது. எதிரில் விளக்குகள் எரிகிற கட்டிடங்களை பார்க்க ரம்மியமாக இருந்தது. தூரத்தில் தெரிந்த டோக்கியோ டவர் இரவில் மின்னியது. டீயை குடித்துவிட்டு நிமிர்ந்து எழுந்தால், 'ஹாய்..' என்ற புன்னகையுடன், எதிரில் இந்திய முகம்! எனக்கு அப்பாடா என்றிருந்தது.

நாளை தொடர்கிறேன்.

7 comments:

Katz said...

your writing is good. whats your profession?

வல்லிசிம்ஹன் said...

நலமா. சிரிப்புக்குப் பெயர் வாங்கின டோக்யோ பற்றி தி.ஜா எழுதின கட்டுரை நினைவுக்கு வந்தது.
அந்த நாளுக்கு இந்த நாள் தேவலை என்றே நினைக்கிறேன்.
வெகு சுவாரஸ்யம், பதிவு.பகிர்வுக்கு மிக நன்றி.

ஆடுமாடு said...

Katz நன்றி,

ஆடுமாடு said...

வள்ளிம்மா நலம்.

தி.ஜாவோட கட்டுரையை படிச்சதில்லை.

வருகைக்கு நன்றி.

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள்.

இரசிகை said...

nallayirukku..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சப்பானுக்கா போனீங்க அட.. நல்ல அனுபவம் ..:)