Monday, January 9, 2012

கி.ரா.உரை

பிரம்மா எழுதுனது யாருக்குப் புரியும். யாருக்கு புரியணும்? அன்னு (அன்று) எழுதுனதெ அழுச்சி எழுத முடியுமா? முடியாதுங்கறதுதாம் தீர்மானமான பதில்.

என்னோட சின்ன வயசில் அந்த தலெ எழுத்தெப் பார்க்கணும்ன்னு ரொம்...ப ஆசைப்பட்டேம். அதுக்காகவே அய்யனுவோட நெருக்கமாப் பழகி அவனுக்குப் பல்லிமுட்டைப் பப்பர்மெண்ட் எல்லாம் வாங்கித்தந்து, 'அய்யனு அய்யனு, அந்தத் தலெ எழுத்தெ நாம் பாக்கணுமெ'ன்னு கெஞ்சினேம்.

'சரி மொதலாளி. பாத்துறலாம், கருக்கல்லேயே நீங்க எந்திரிச்சு வந்துறணும்'ன்னாம். அது கொஞ்சம் சிரமமான பாடுதாம்.

பாட்டியிட்டெ சொல்லி வச்சிருந்தெம்.

'என்னெ சீக்கிரமா எழுப்பி விட்டிரு பாட்டி'.

''என்னத்துக்கு ராசா?'

'படிக்கறதுக்குத்தாம்'

சந்தோசமாயிட்டது பாட்டிக்கு! படிக்கிறதுக்கு ஆசைப்படுதானேன்னுட்டு.

மறா நா.
'எந்திரிச்சதும் எங்கெ ஓடுதெ; படி'

'வெளிக்குப் போக வேண்டாமா?'

'சரி சரி போயிட்டு சிக்கிரமா வந்துரு'

கம்மாக்கறையைப் பாத்துப் பிடிச்செம் ஓட்டம். அந்த கம்மாக் கறையிலயும் ஒரு மயானக் கறை உண்டும்.

ஆனா, எங்க ஊருக்கு கிச்சம்மா ஓடைதாம் முக்கியமான சுடுகாடு. அங்கெ போய்ப் பார்த்தால் அய்யனுவைக் காணோம்.

பிறகுதாம் விவரம் தெரியுது! யாராவது செத்து வந்தாத்தானெ அங்கெ அய்யனு இருப்பாம். இப்படி கொஞ்சநாள் தட்டிப்போய்க் கொண்டிருந்தது. யாரு செத்தாலும் எங்க பள்ளிக் கூடம் வழியாகத்தான் சுடுகாட்டுக்குப் போகணும். எங்க பள்ளிக் கூடத்தையும் வாத்தியார்களையும் தாண்டாமல் ஒரு சுடுகுஞ்சும் போயிற முடியாது.

முதல் சத்தம் சாவுமேளம் கேட்கும். அல்லது, ''கோவிந்தா. கோவிந்தா"சத்தம். கொஞ்சம் பேருக்கு ''ராமாநுஜம், ராமாநுஜம்"

இந்த ராமாநுஜம் மட்டும், வைணவர்களுக்கு. இவர்கள் கோவிந்தா சொல்லுவதில்லை.

வைணவர்களுக்குக் கோவிந்தனும் முக்கியந்தான்; என்றாலும் இவர்களுடைய மதத்தை உண்டாக்கியவர் ராமாநுஜம். அதோடு இவர்களுடைய திருநாட்டுப் பயணத்துக்கு சாவுமேளம் கிடையாது.

பள்ளிக்கூடத்துக்குள் சாவுமேளத்தின் சத்தம் நுழைந்ததும் பிள்ளைகள் ஒருவர் முகத்தை பார்த்துக் கொள்வர்கள். 'ஓடுவமா பார்க்க என்று" அவர்கள் முகம் தெரிந்துவிடும். வாத்தியார்களுக்கும் பார்க்கப் பிரியம்தான். சத்தம் நெருங்க நெருங்க, கட்டுப்பாடு தகர்ந்துவிடும். பிள்ளைகள் எழுந்திருந்ததும் வாத்தியார்களும் எழுந்துவிடுவார்கள், கையில் பிரம்புடன்.

ஆடுமாடு மேய்க்கிறவர்களுக்குக் கம்பு. போலீஸ்காரர்களுக்கு லத்தி. வாத்திமார்களுக்கு பிரம்பு. பிரம்பை கையில் எடுத்ததுமே ஒரு களை முகத்தில் தெரியும்.

சாவுவண்டி அங்கங்கெ-முக்கியமான ஒரு சில இடங்களில் நின்று நகரும். அதில் கடேசி இடம் இது. சாவுவண்டிக்கு முன்னால் சிலம்பாட்டம் நடக்கும். (இதெல்லாம் பாட்டையாக்களின் சாவுக்களில்தான்)

வாத்தியார்களுக்காகவும் பள்ளிப்பிள்ளைகளுக்காக நடக்கும் தனியாட்டம் போல இருக்கும். சிலாவரிசை முறையோடு கம்பை சுழற்றி வீசி பாவலாக்காட்டி முன்னும் பின்னும் போய் வந்து கம்புமேல் கம்பு மோதும்போது சத்தம் தூள் பறக்கும். அந்த கம்புகளுக்கு முன்னால் வாத்தியார்கள் வைத்துக் கொண்டிருக்கும் பிரம்பைப் பார்க்கும்போது அய்யோ பாவம் என்றிருக்கும். அப்போது அவர்கள் தங்கள் பிரம்புகளைப் பின்பக்கம் மறைத்து வைத்துக்கொள்வார்கள்!

பிள்ளைகள் மட்டும் என்றால் பிரம்பால் என்னவீச்சு வீசுவார்கள். எனக்கு அப்போது ஒரு ஆசை இருந்தது;-நிறைவேறாத ஆசை- அதில் ஒரு கம்புக்காரனைக் கூப்பிட்டு, 'எங்க வாத்தியார் பிரம்போடு ஒரு ஆட்டம் போடேம்' என்று சொல்ல.
சிலம்பாட்டம் முடிந்து வண்டி நகரும்போது அந்த வண்டியில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் பாட்டையாவின் நெற்றியில் ஒட்டவைத்துள்ள அரக்கால் ரூபாய் எல்லார் கண்ணிலும் படாமல் போகாது.

மறுநாள், வீட்டில் நானும் என் நெற்றியில் ஒரு அரைக்கால் ரூபாயை ஒட்ட வைத்துக்கொண்டு, பாட்டியின் முன்னால் அப்படியும் இப்படியும் நடந்தேன். பாட்டிக்கு அது கவனமில்லை. என் மூஞ்சியை அவளுக்கு முன்னால் நீட்டினேன்.

''சே சே, என்னய்யா இது; எடுத்துரு எடுத்துரு, இப்படியெல்லாம் செய்யப்பிடாது'' என்று அதை எடுக்க வந்தாள். மற்றவர்கள்தான் அதைப்பார்த்து சிரிக்கிறார்கள். வீட்டிலுள்ளவர்கள் அதை ரசிப்பதில்லை.

'சரிய்யான கோமாளிரங்கன்!" என்றார்கள்.

அய்யனுவிடம் கேட்டேன்; 'ஏம் இப்படி நெத்தியில பணம் வச்சு விடுகிறாங்க?"

போற இடத்திலெ, 'அங்கெ"-மேலே கையைகாட்டி- இப்படிப் போனாத்தாம் மதிப்பு" என்றான்.
விடாப்பிடியாக விடென் தொடேன் என்று அய்யனுவிடம், அந்த 'தலெ எழுத்தெ' ப் பார்க்கக் கிடைத்தது. 'பாலுக்கு" வருகிறவர்கள் அன்றைக்குத் தாமதமாக வந்ததும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

மண்டை ஓட்டின் உச்சியில் பிரம்மா எழுதிய சுருக்கெழுத்து போல இருந்தது அது.

அய்யனு சொன்னான்; 'ஒவ்வொருத்தர் மண்டை ஓட்டிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒருத்தருக்கு இருக்கிற போல இன்னொருத்தருக்கு இராது; கைரேகை வித்தியாசப்படுகிறது மாதிரிதாம் இதும்"

பெரியவங்க சொல்லுவாங்க, ''ஏலே ஒந்தலையில பிரம்மா உலக்கையாலெ எழுதித்தாண்டா. எழுத்தாணி கொண்டு எழுதலைடா பாவிப்பயலே" என்பார்கள் திருத்த முடியாதவனைப் பார்த்து.

முக்கியமாக அந்தக்காலத்து வாத்திமார்கள்தான் இப்படியே சொல்லக் கேட்டிருக்கிறேன் (முக்கியமாக என்னைப் பார்த்தும்).

இந்த பிரம்மன் உலக்கையால் (கழுந்து உலக்கையால்) எழுதினாலும் சரி, எழுத்தாணியால் எழுதினாலும் சரி, எழுதியது எழுதியதுதான்; அழித்து எழுத முடியாது. இது போலத்தான் படைப்பாளி என்கிற பிரம்மா எழுதுகிறதும்.

எழுத்தாளர் ஏக்நாத் இவைகளைக் 'கட்டுரைகள்' என்று ஒரு பேச்சுக்கு சொன்னாலும் , இவைகளுக்கான முகங்கள் கட்டுரைகளுக்கானவை இல்லை; கதைகள்தான் இவை. கட்டுரைகள் (வியாசம்) என்பது பேச்சு நடையில் அமையாது. பொதுத்தமிழ் நடையில் எழுதியவைதான் கட்டுரைகள் என்பேன்.

படைப்புகள் என்றால் முக்கியமாக கதைகளுக்கு அதுக்கான ஒரு மொழிமுகம் இருக்க வேண்டும். இவைகளில் அவை கூடுதலாக-மிகக்கூடுதலாக-இருக்கிறது.
இந்த மாதிரியான மொழி காதுவழியாகக் கேட்கும்போதுதான் இதன் சிறப்பை அனுபவிக்க முடியும்.

ஒரு ராகத்தைக் கேட்கும்போது எப்படி இருக்கும்; அதை அதுக்கான அட்சரங்களில் எழுதி வாசிப்பது எப்படி இருக்கும்!

கேட்கும்போதுதான் மொழியின் அழகு கூடும். புகல் இல்லாமல்தான் எழுதி வாசிக்கிறது. இந்த வகையில் நான் எழுத்தை வெறுக்கிறேன்.

என்றாலும், நமக்கு வாசகர்கள் வேண்டும். இவர்களுக்காக நாம் கொஞ்சம் இறங்கி வரலாம் என்பது எனது யோசனை. இந்நடையை *சற்றே செப்பம் செய்து தந்திருக்கலாம்; நட்டமில்லை, லாபம்தான்.

காரமாக இருக்கவேண்டும்தான்; காரக்குழம்புக்கு லட்சணமும் அதுதான். அதைப் பரிமளிக்கம் பண்ண சற்றே உப்பும் சேர்த்தால்தான் சரி. மணமும் ருசியும் கொண்ட காரக்குழம்பு சோற்றைக் கொண்டா கொண்டா என்கும். ருசி கண்டுவிட்டால் வாசகன் நம்மை விடவே மாட்டான்.
...............

*சற்றே என்றுதான் சொன்னேன்.

என்றும்
கி.ராஜநாராயணன்
........................
எனது 'குச்சூட்டான்' புத்தகத்துக்கு கி.ரா.வின் உரை

6 comments:

manjoorraja said...

ருசி கண்டு ரொம்ப காலம் ஆகுது. அதான் விடமாட்டேங்குது.

ராஜ நடராஜன் said...

மேஞ்சு ரொம்......ப நாளாச்சு!

ஆடுமாடு said...

மஞ்சூர் ராசா நெசமாவா?
நன்றி

Balakumar Vijayaraman said...

வாழ்த்துகள். :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

புத்தகம் வந்தாச்சா??

ஆடுமாடு said...

ராஜநடராஜன், பாலகுமார் நன்றி.

கிருத்திகா, புக் வந்தாச்சு.
தோழமை வெளியீடு