Thursday, November 17, 2011

பிரியங்களின் பால் அலையும் மனம்

குரங்குகள் பற்றிய பயம் ஊருக்குள் வந்த பிறகுதான், அந்தக் குட்டிக்குரங்குடன் அலையத் தொடங்கினான் செபாஸ்டியான். வண்ண வண்ண உடைகளணிந்த அந்தக் குட்டி, தலையை குனிந்து இரண்டு கைகளையும் குவித்து எல்லோருக்கும் வணக்கம் சொல்லியது. சின்னப் பிள்¬ளைகளின் சிரிப்பு விளையாட்டுக்கு குட்டிக் கரணமும் அடித்தது. முகப்பகுதி மட்டும் வெள்ளை வெளேர் என இருக்கிற அந்தக் குட்டிக்கு செபாஸ்டியான் வைத்த பெயர், ‘செல்லம்'. ஊர்க்காரர்கள் வைத்த பெயர் ‘வால்'. இந்த வாலுக்கு, ‘சரியான சேட்டை புடிச்ச குரங்குல்லா' என்பதாகப் பொருள்.

பாபநாசத்தில் குரங்குகள் தொல்லை அதிகப்படியாகவே இருந்தன. படித்துறையில் பழக்கூடையை வைத்துக்கொண்டு நீங்கள் பராக்கு பார்த்துக்கொண்டிருந்தால் கூடை போவது தெரியாது. ‘ஓடு... எங்க வந்து எதை புடுங்குத' என்கிற சின்ன அதட்டலுக்கு லேசாகப் பயந்துக்கொண்டிருந்த குரங்குகள், இப்போது அதையெல்லாம் தாண்டி விட்டது. நேரடியாக முன்னால் வந்து பழக்கூடையை மடியிலிருந்து இழுக்கிற அளவுக்கு அதன் தைரியம் அதிகரித்திருந்தது. இதனால் தேங்காய், பழம், பொறி விற்கிற கடைகாரர்கள், கடையின் இரண்டு பக்கமும் குரங்கு விரட்ட என்றே இருவரை வைத்திருந்தனர்.

கோயில் வாசலில் ஆரம்பித்து, உள்பிரகாரம் வரையும் வெளியே படித்துறையிலிருந்து நிற்கிற பஸ்களின் சீட்கள் வரையிலும் எங்கெங்கும் வியாபித்திருந்தது குரங்குகள். இதை விரட்டுவதற்காகச் செய்யப்பட்ட எல்லா ஏற்பாடுகளும் தோல்வியில் முடிவடைந்திருந்தன.

இங்கிருந்து எல்லை தாண்டி, அருகிலிருக்கிற எல்லா கிராமங்களுக்கும் குரங்குகள் படையெடுக்கத் துவங்கிவிட்டன. பாபநாசத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற கீழாம்பூருக்கு குரங்குகள் வந்த கதை இப்படித்தான்.

முதலில் அக்ரஹாரத்தில்தான் ஆரம்பமானது இதன் சேட்டைகள். தெருவைப் போல விரிந்து கிடக்கிற வீடுகளின் பின்பக்க மரங்களில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த குரங்கள், பிறகு உரிமையோடு வீட்டுக்குள் விருந்தாளியாகி இருந்தது. பெரும் பண்ணை ராசா ஐயர் மீது குரங்கு தாவியதில், அவர் பதறி கொள்ளையில் விழுந்ததிலிருந்து ஊரில் பெரும் பிரச்னையாகப் பார்க்கப்பட்டது இது.

‘ச்சூ...ச்சூ' விரட்டலோ, கல்லால் எறிவதோ வேலைக்காகாது எனத் தெரிந்த பிறகு ஊர் தலையாரி மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு, தென்காசியிலிருந்து வேனில் வந்தவர்கள் சிலவற்றைப் பிடித்தும் சிலவற்றை விட்டும் போயிருந்தார்கள். இதையடுத்து குரங்குகளின் பிடியிலிருந்து கட்டுக்குள் வந்திருந்தது ஊர்.

‘யப்பா இனும கவலை இல்ல' என்று ஊர் பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தப் போது செபாஸ்டியான் இப்படியொரு குரங்கோடு அலைவது வேடிக்கையாக இருந்தது. அநேகமாக இதையும் பாபநாசத்திலிருந்தே பெரிய குரங்குகளுக்கு தெரியாமல் தூக்கி வந்திருக்க வேண்டும். ஆனால் குட்டிகளுக்கு குரங்குகள் கொடுப்பதை விட, பால், மோரீஸ், கதலி, ஆரஞ்சு, திராட்சைப் பழங்கள், இது தவிர மத்தியானம் சோறு, இரவு தோசை உள்ளிட்டவற்றை உணவாக கொடுத்து வளர்த்தான் செபாஸ்டியான்.
இந்த ‘செல்லத்'துக்காக அவனது சைக்கிளின் முன்பகுதியில் ஒரு சிறப்பு பெட்டிப் பொருத்தப்பட்டிருந்தது. அவன் சைக்கிளை அழுத்தினால், யாராவது அவனுக்கு வணக்கம் வைத்தால், இது முந்திக்கொண்டு, ‘வணக்கம்' என கையை தூக்கி கும்பிட்டு, பற்களை காட்டும். இப்படியான பழக்க வழக்கங்கள் குட்டிக்கு இன்னும் வளர்ந்திருந்தன. யாராவது சைக்கிளில் கை வைத்தால், குர்குர் என கத்தி முறைப்பது, சைக்கிளுக்கு ஏதாவது பிரச்னையாகி சைக்கிள்கடைக்காரன் அதை சரி செய்தால், அவனது கையை தட்டிவிடுவது உள்ளிட்ட செயல்களை செவ்வனே செய்து வந்தது குட்டி.
‘இது இப்பவே இப்படி இருக்கடே... வளர்ந்தா குதறிரும் போலிருக்கே?' என்கிற பேச்சுக்கள் வரத்தொடங்கின. ஆனால், ‘செல்ல'த்துக்கு ரசிகர்களும் பெருக ஆரம்பித்தனர்.

தனது குடிசைக்கு வெளியே வளர்த்திருக்கிற வாதமடக்கி மரத்தின் கீழே, சிறு குடிசை ஏற்பாடாகியிருந்தது செல்லத்துக்கு. உள்ளே சாக்குகள் விரிக்கப்பட்டு அதன் மீது செபாஸ்டியான் மனைவியின் கிழிந்த சேலை விரிப்பாக்கப்பட்டு பெட் உருவாக்கப்பட்டிருந்தது. சின்னதாக கேட் வேறு. சில நாட்களில் அதை செல்லமே சரியாக இழுத்து வைத்துவிட்டு தூங்கப் பழகிவிட்டது. இரவு எட்டு மணிக்கெல்லாம் உறங்கிவிடுகிற ஊரில் செல்லத்துக்கும் என்ன வேலை? ‘போல, போய் தூங்கு' என்றதும் வலது கையை தூக்கி வணக்கம் வைத்துவிட்டு செபாஸ்டியனின் நெற்றியில் முத்தமிட்டு தூங்கப் போகும்.

சைக்கிள் இல்லாமல் ஊரின் நடுவில் இருக்கிற தேவாலயத்துக்கு செபாஸ்டியன் நடந்து சென்றால், அவன் தலையில் குத்தவைத்துக் கொண்டு செல்லமும் சென்றது. தேவாலயத்துக்குள் வழிபாட்டில் இருந்தவர்களுக்கு இது பழக்கம் என்றாலும் புதிதாகச் செட்டிக்குளத்திலிருந்து வந்திருந்த பாதிரியாருக்கு இது வியப்பாக இருந்தது. ‘பர மணடலத்திலிருக்கும் எங்கள் பிதாவே' என்று வாசிக்கப்படுகிற போதும் ‘ஆமென்' என்று முடிக்கிற போதும், மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அதை செல்லமும் செய்தது. உள்ளே குரங்கை அனுமதிக்கலாமா வேண்டாமா என குழப்பத்திலிருந்த பாதிரியார், ஓரக்கண்ணால் இதை பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டுப் போனார். ‘இது அடிக்கடி வந்துபோறதுதான்' என பிறகு அவருக்கு சொல்லப்பட்டது.

செபாஸ்டியானுக்கு இடது கால் கொஞ்சம் சூம்பிப் போயிருக்கும். நடக்கும்போது காலை இழுத்து இழுத்துதான் நடப்பான். குரங்கு குட்டிக்கு முன், அவனது பொழுது போக்கு, வேட்டையாக இருந்தது. இது காட்டு வேட்டையல்ல. ரயில்வே கேட்டுக்கு மேற்பக்கம் இருக்கிற சோமுதேவர் விளை, கீழ்ப்பக்கம் இருக்கிற குச்சித் தாத்தா விளைகளில் கருவாலி, தப்பித்தவறி நள்ளிரவில் அலைகிற முயல்கள், பறையாங்குளத்திலும் கோவன்குளத்திலும் கொக்குகள், ஐயர் வீட்டு ரைஸ் மில்லில் புறாக்கள் என அவனது வேட்டை வகைப்பட்டிருந்தது. இதற்காக கார் டயரில் செய்யப்பட்ட தடிமனான ரப்பரைக் கொண்ட, கவிட்டையை அவன் வைத்திருந்தான். நரிக்குறவர் ஒருவரிடமிருந்து காசுக்கு வாங்கிய கவிட்டை.

கருவாலிகள் கோழிக்குஞ்சு மாதிரிதான். அதன் ருசியும் அப்படியே. கொக்குள் கொழுப்புகளால் ஆனதாகச் சொல்லுவான் செபாஸ்டியான். முயல், புறாக்களின் ருசியையும் சொல்லி மாளாது என்பான். கோயில்கொடை காலங்களில் இதில் சிலவற்றை விற்றும் வந்தான். ஒரு நாள் செல்லத்துடன் சென்ற செபாஸ்டியான், கவிட்டையால் கொக்கு ஒன்றை குறிபார்த்து, போட்டான். பொத்தென்று விழுந்த கொக்கைத் தேடி ஓடியது செல்லம். அதை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு ரத்தம் வந்த இடத்தை கை வைத்து துடைத்து, ‘உஸ் உஸ்' என்று ஊதியது. பிறகு என்ன நினைத்ததோ தெரியவில்லை. செபாஸ்டியனைப் பார்த்து கர்புர்ரென கத்திவிட்டு அவனருகில் ஓடி வந்தது. பிறகு விழுந்த கொக்கின் அருகில் ஓடியது. சிறிது நேரம் உற்றுப்பார்த்துவிட்டு, அதன் அருகிலேயே குத்த வைத்தது செல்லம்.

செபாஸ்டியானுக்கு ஒரு மாதிரி ஆகிப்போனது. கொக்கு இறந்திருந்தது. அதை எடுக்காமல், ‘வா போவோம்' என்றான் செபாஸ்டியான். திரும்பவும் கர்புர்ரென கத்திவிட்டு, வழக்கமாக, அவன் தோளில், தலையில் ஏறிக்கொள்ளும் ‘செல்லம்' இப்போது அப்படி ஏறவில்லை. அவன் பின்னால் சோகத்துடன் வாயை இழுத்து இழுத்துக் காட்டிவிட்டு நடந்து வந்தது. அவ்வப்போது விழுந்து கிடந்த கொக்கை நின்று பார்த்துக் கொண்டே வந்தது. அதன் நடையில் கோபம் தெரிந்தது. அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அமைதியாக சென்ற குட்டி, அவனுடன் இரண்டு நாட்கள் பேசவில்லை. எப்போதாவது கவிட்டையை எடுத்தால் அது கண்ணைப் பொத்திக்கொண்டு, தூரத்தில் ஓட ஆரம்பித்தது. ‘இதானே உன் பிரச்னை' என்று கவிட்டையை கூரைக்குள் சொருகிய செபாஸ்டியான், இன்றுவரை எடுக்கவே இல்லை.

செவ்வாய், வெள்ளிகளில் என்றாவது அக்ரஹாரம் தாண்டி, கிளப் கடைக்கு வரும்போது, எதிரில் வாய்க்காலில் குளித்துவிட்டு வரும் மாமிகள், செல்லத்தைப் பார்த்து, ‘ராமா ராமா' என்று கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள். அப்படி யாராவது செய்தால் ‘செல்லமு'ம் அவர்கள் மாதிரியே கன்னத்தில் போட்டுக்கொள்ளும். ‘கிண்டலைப் பாரேன் இதுக்கு?' என்பார்கள் மாமிகள். கடையில் அவன் சாப்பிட உட்கார்ந்தால், ‘இட்லியா தோசையா' என்று கேட்பான். வடையை, கை காண்பிக்கும் அது.

‘இது உன்னைய விட ஏழு மடங்கு பெரிசா வரும்டே...' என்பான் கடை சைலு. அவனுக்கு இடது கையால் வணக்கம் வைக்கும், ‘செல்லம்'.

‘ரெண்டு பிள்ளைல வச்சுட்டு என்னாலயே இருக்க முடியலையே... இதை வச்சுட்டு எப்படிடே இருக்க வீட்டுல... வேசடையா இல்லையா?' என்கிற பத்திர எழுத்தர் பரவசிவம் பிள்ளையின் கேள்விக்கு, செபாஸ்டியனின் பதில் சிரிப்பாகத்தான் இருக்கும்.

‘பரம்சம் கழுத்துல பாம்பு இருக்கது, யாருக்கு பெருமை? அவருக்கா, பாம்புக்கா?'

‘எதுக்கும் எதுக்கும் முடிச்சுப்போடுத...'

‘எல்லாம் ஒண்ணுதாம்யா... வேசடைன்னா வேசடைதான்... இல்லைன்னா இல்லை... என்ன சொல்லுதியோ செட்டியாரே...' என்கிற செபாஸ்டியான், யாரின் பதிலையும் எதிர்பாக்க மாட்டான்.

தொலைதூரப் பிழைப்பில் கிராமத்தைத் தொலைத்துவிட்டு ஊர்ப்பாசத்தில் திரும்பிய பிரிதொரு வருடத்தில், செபாஸ்டியனைப் பார்த்தபோது, ஆளே மாறியிருந்தான். தலையில் முடிகள் இல்லை. பிரியங்களால் ஆன இரண்டு கிளிகள் அவரது தோள்களில் இருந்தன. குட்டிக்குரங்கு வளர்ந்து வழி தேடி, இனம் தேடி போயிருக்கலாம். குழி விழுந்த கன்னத்துடன் வயதான நிலையிலிருக்கும் செபாஸ்டியானிடம் கேட்கலாம் என்றால், இப்போது அவனுக்கு காது கேட்காது என்றார்கள்.

ஒருவேளை கிளிப்பேச்சு கேட்குமோ என்னவோ?

4 comments:

துபாய் ராஜா said...

// பிரியங்களின் பால் அலையும் மனம் // தலைப்பே ஆயிரம் கதை சொல்லுது அண்ணாச்சி.

பாபநாசம் முதல் கீழாம்பூரின் அக்ரஹாரம், ஐயர் வீட்டு ரைஸ் மில்,தேவாலயம்,ரயில்வே கேட்டுக்கு மேற்பக்கம் இருக்கிற சோமுதேவர் விளை, கீழ்ப்பக்கம் இருக்கிற குச்சித் தாத்தா விளை, பறையாங்குளம், கோவன்குளம், கிளப் கடை என எல்லா இடத்திற்கும் செல்லத்தோடும்,செபாஸ்டியனோடும் எங்களையும் இழுத்துச் சென்றது உங்கள் எழுத்து.

அண்ணாச்சி, எதை விட்டாலும் இப்படி எழுதறதை மட்டும் விட்டுறாதீங்க...

ஆடுமாடு said...

ராஜா அண்ணாச்சி.
நமக்கு அதைவிட்டா வேற ஏதும் தெரியாதே.

நன்றி.

Rajagopal.S.M said...

ரெம்ப நாளா ப்ளாக் பக்கம் வரவே இல்லை. நல்லா இருக்கு அண்ணாச்சி. அண்ணன் துபாய் ராசாவை வழிமொழிகிறேன்

Rajagopal.S.M said...

கண்டிப்பாக கிளி பேச்சு கேக்குமுள்ளா.