Monday, November 7, 2011

சோடா என்றொரு மாடல்

எப்போதாவது பேஷன் ஷோக்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு நண்பர்களுடன் எனக்கும் கிடைத்திருக்கிறது. சென்னையில் ஏதாவது ஒரு நட்சத்திர ஓட்டல் ஒன்றில், விளக்குகள் குறைவாக எரிகிற இடங்களில் இம்மாதிரியான ஷோக்கள் நடக்கும். விதவிதமான உடைகளில் இளைஞிகளும் இளைஞர்களும் கூடியிருக்க, அவர்களின் மேக்கப் மற்றும் பேச்சுகளைப் பார்த்தால் தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். மனீஷ் மல்கோத்ரா மாதிரியான பெரிய ஆட்களின் ஷோக்களில் நட்சத்திரங்கள் கலந்துகொள்வது ஷோக்களுக்கான பேஷன். அப்படியொரு ஷோவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சில ஷோக்களில், கிழிந்து தொங்கும் உடைகளுடன் நடந்து வரும் பெண்களை, கையில் ஒயின் கிளாஸுடன் ஸ்டைலாக நின்றுகொண்டு பார்த்தால் பாவமாகத்தான் தோன்றும்.


இதை பெரியாச்சி பார்த்தால், ‘ஏட்டி, ஒனக்கென்ன கோட்டியா புடிச்சிருக்கு... இப்படி கிழிச்சுப் போட்டுட்டு அலையுதெ...மானங்கெட்ட செரிக்கி...‘‘ என்று வெற்றிலைச் சாறைத் துப்பிவிட்டு திட்டியிருப்பாள். முதுகில் பெரிதாக இடம் விட்டு ஜாக்கெட் போட்ட பெரிய மாமா பொண்டாட்டிக்கே அர்ச்சனை அதிகமாக விழுந்தது என்றால் இந்த பெண்களுக்கு என்ன மாதிரியான அர்ச்சனை நடக்கும் என்று யோசித்துக் கொள்வேன். ஒயினுக்குப் பிறகு பிராண்டிக்குப் போனதும் இவர்களை பெரியாச்சியிடம் பிடித்துக்கொடுக்க வேண்டும் எனத் தோன்றும்.

இதே போல விதவிதமாக உடைகளை சுமந்துகொண்டு வரும் இளைஞர்களைப் பார்த்தால், ‘சோடா‘ ஞாபகம்தான் வரும். இரண்டு மூன்று கலர்களில் சட்டை, இதில் உள்சட்டை, வெளிசட்டை, முட்டியில் கிழிந்த ஜீன்ஸ், சீவப்படாத தலைமுடி என பேஷன் ஷோக்களில் நடந்து வருபவர்களுக்கு ‘சோடா‘ ஒன்றும் குறைச்சல் இல்லை. இவர்களுக்கு ஈடான அல்லது இவர்களை விட அதிகப்படியான அழகை அவன் கொண்டிருந்தான். ஆனால், அவன் கொஞ்சம் மனநிலைப் பாதிக்கப்பட்டவன்.

அக்ரஹாரத்தில் யார் வீட்டிலோ கொடுத்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சிவப்பு, வெள்ளை, மற்றும் ஊதா நிறத்தில் கோடு போட்ட சட்டைகளை மொத்தமாக அணிந்திருந்தான். தூரத்தில் இருந்து அவன் நடந்து வருவதைப் பார்த்தால் பேஷன் ஷோவில் நடந்து வரும் மாடல்களைப் போன்றே தோன்றும்.
ஊருக்கு மேற்கே இருக்கிற பஞ்சாயத்து போர்டு திண்டுதான், சோடாவின் சொகுசு வீடு. இங்கு பெரும்பாலும் யாரும் வருவதில்லை என்பதும் இரவு நேரங்களில் அதிகப்படியான தொந்தரவு இல்லை என்பதும் சோடா இந்த இடத்தை தேர்வு செய்ததற்கு காரணமாக இருந்திருக்கலாம். எப்போதும் சட்டைப் பையில் பீடி கட்டு இருக்கும். அப்படி இல்லையென்றால் அவன் குடித்துப் போட்ட துண்டுகளை சேகரித்து, பீடி கட்டினுள்ளே சொருகியிருப்பான். அவன் எதற்கும் கவலைப்பட்டதில்லை.

பஞ்சாயத்து போர்டு திண்டின் பின்பக்கம் இருக்கிற பிள்ளையார் கோவில் வாய்க்காலுக்கு காலையில் ஆட்கள் செல்லும் சத்தம் கேட்டதும் எழுந்து சுவரோரமாக குத்த வைத்து உட்கார்ந்துகொள்வான். எதிரில் மஞ்சளாக வெளிச்சம் தரும் செவனனின் டீக்கடை திறந்திருக்கும். பால் கொதிக்கும் சத்தத்துடன் செவனனின் கொட்டாவி சத்தமும் கேட்கும்.

தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு வந்து பெஞ்சில் உட்கார்கிற பேச்சி நம்பியாரும், புனமாலையும் பேச்சை ஆரம்பிப்பார்கள். முதல் போணி பேச்சி நம்பியார்தான். அவர் காசைக்கொடுத்து டீயை குடித்ததும் திண்டிலிருந்து இறங்குவான் சோடா. அவன் நடந்து வர வர, ‘சோடா வாராண்டே‘ என்ற சத்தம் கடையில் கேட்கும். போய் கடை வாசலில் நின்றதும், டீயை நீட்டுவார் செவனன். வாங்கி சூட்டோடு குடித்துவிட்டு கிளாசை கழுவி விட்டு ஓரமாக வைப்பான். வைத்துவிட்டு அவன் போகாமல் நின்றால், பீடி வேண்டும் என்று அர்த்தம். இரண்டு செய்யது பீடிகளை நீட்டுவார். வாங்கிக்கொண்டு அங்கேயே பத்த வைத்துக்கொண்டு நடப்பான்.

‘இதெல்லாம் கரெக்டா பண்ணுதாம்... ஏதாவது கேட்டாதான் பதிலு பேசமாட்டங்காம்‘ என்று முனங்குவார் புனமாலை.

‘அவன் என்ன கொழுத்துபோயா அப்படி செய்யுதாம்? எவனும் செய்வினை வச்சிருப்பானுவோ பாவம்...‘ என்பார் பேச்சி நம்பியார்.

திரும்பவும் திண்டில் வந்து உட்கார்ந்துகொள்வான். வாய்க்காலில் குளிக்கப் போகிற, வருகிறவர்களைப் பார்த்துவிட்டு ஏதோ கற்பனையில் உட்கார்ந்திருப்பான். எட்டு மணிக்கு டாணா, விக்ரமசிங்கபுரம் வழியாக நாங்குநேரி செல்லும் தேவி பஸ் வந்ததும் சோம்பல் முறித்துவிட்டு பஸ்&ஸ்டாண்ட் நோக்கி நடப்பான். எதையோ முணுமுணுத்துக்கொண்டிருக்கும் அவனது உதடு. திடீரென்று சிரித்துக்கொள்வதும் சாலையில் ஓரத்தில் மட்டுமே நடப்பதுமான அவனது விதிகளில் இன்னொன்றும் பிரதானமாக இருந்தது.

அது பாடல்.

யாரிடமும் அதிகம் பேசாத சோடா, ஒரு கட்டு செய்யது பீடிக் கொடுத்தால் பழைய பாடல்களை ஸ்ருதி குறையாமல், அட்சரச் சுத்தமாக பாடுவான். அதில் சீனிவாஸ், ஏஎம் ராஜா பாடல்களே அதிகம் இருக்கும்.

பஸ்-ஸ்டாண்டின் கீழ்ப்பக்கம் இருக்கும் கணேசன்னனின் கடையில் வலது ஓரம் அமர்ந்துகொண்டு, ‘நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ‘ என்ற ‘இதய கமலம்‘ பட பாடலுடன் கச்சேரி ஆரம்பமாகும். சண்முகத் தேவரும் சீனி ஆசாரியும் துண்டை விரித்து தூணில் சாய்ந்துகொண்டு மெய் மறந்து போவார்கள். அவர்கள் காலத்து காதலை நினைத்திருப்பார்களோ என்னவோ?
அடுத்ததாக ஏஎம் ராஜாவின் ‘பாட்டுப பாடவா பாடம் சொல்லவா‘ என்ற பாடல் தொடரும். இதற்குள் நான்கு கட்டுப் பீடிகள் சேர்ந்திருக்கும் சோடாவுக்கு. கண்களை மூடி சோடா, தன்னிலை மறந்து பாடலுக்குள் போய்க்கொண்டிருப்பான். கேட்டுக்கொண்டிருப்பவர்களும் அப்படியே. பாடல்களில் வரும் பெண்குரலையும் ஆணின் குரலிலேயே அவன் பாடினாலும் அப்படியொரு இனிமை. இதில் அதிகமாக, சோகப்பாடல் பாடும்போது, சண்முகத்தேவருக்கு கண்ணீர் வந்துவிடும். கடை கணேசன்னனும் தன் பங்குக்கு ஒரு டீயை கொடுப்பான்.

‘ச்சே... கொன்னு போட்டாம்லே... பய கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்தாலும் என்னமா பாடிட்டாங்க... மனசு கேட்கலைடா‘ என்று சொல்லும் சீனி ஆசாரி, வேட்டியை அவிழ்த்து ‘இந்தாடா...‘ என்று இரண்டு ரூபாயை கொடுப்பார்.

ஸ்கூல், கல்லூரி செல்பவர்கள் பஸ்&ஸ்டாண்டில் கூடியதும் திரும்பவும் மேற்கு நோக்கி நடப்பான். அவனது அதிகப்பட்ச சந்தோஷம் பீடியாகவே இருக்கும். வயிறு பசித்தால் ஏதாவதொரு வீட்டு வாசலில் போய் நிற்பான். வீட்டுக்குள்ளிலிருந்து யாராவது அவர்களாகவே பார்த்தால்தான் உண்டு. இலலையென்றால் பார்க்கும் வரை அப்படியே நிற்பான்.

தற்செயலாக அவனைப் பார்த்துவிட்டு, ‘சோடாவா, ஒரு சத்தம் கொடுத்தா என்னடே‘ என்று எழுந்து வருவார்கள். குறிப்பிட்ட வீடுகளில் அவனுக்கென்று தனி பீங்கான் தட்டு இருக்கும் வாசலிலேயே. அதை எடுத்து சோடாவே கழுவிக்கொள்வான். பிறகு வீட்டிலிருப்பவர்கள் சோறோ, கஞ்சித்தண்ணியோ கொடுப்பார்கள். முதன்முறை எவ்வளவு கொடுக்கிறார்களோ அவ்வளவுதான். பிறகு அவன் கேட்கமாட்டான். சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டு தட்டைக் கழுவி வைத்துவிட்டுப் போவான்.

எல்லோரும் ஆச்சர்யப்படும் படி அவன் எப்போதாவது ஆற்றில் குளித்துவிட்டு வருவான். உச்சிவெயில் மண்டையை பிளக்கிற நண்பகலில் அணிந்திருக்கிற துணிகளை களைந்து குளித்துவிட்டு நனைந்த பேண்ட், சட்டைகளுடன் அப்படியே அவன் வருவதை பார்க்க ஒரு மாதிரியாகத் தோன்றும்.

‘நின்னு காயப்போட்டுட்டு உடுத்திட்டு போனா என்னல... இப்படி நனைஞ்சதை உடுத்திட்டுப் போற?‘ என்று யாராவது சொன்னால், அவன் ஒரு சிரிப்பை மட்டும் பதிலாகத் தருவான்.

அவன் உள்ளூர்க்காரனா இல்லை வெளியூர்க்காரனா? அல்லது இங்கிருப்பவர்களுக்கு சொந்தக்காரனா என்கிற விவரம் எனக்கு தெரியவில்லை. விசாரித்தாலும் அதே பதில்தான். இதற்கிடையே இவனது மனைவி பற்றி ஒரு பலாத்கார கதையும் அதன் காரணமாகவே இவன் மனநிலைப் பாதிக்கப்பட்டான் என்கிற கதையும் ஊரில் எப்படியோ ஆங்காங்கே கொடுமையாக வலம் வந்துகொண்டிருந்தன. கதையை கேட்ட சில நொடிகளிலேயே அப்படி எதுவும் அவனுக்கு நிகழ்ந்திருக்காது என முடிவு செய்துகொண்டேன்.

அநியாயமாக ஊர் பெயர் எதுவும் தெரியாத உள்ளூருக்கு வந்திருக்கிற ஒரு மனநோயாளிக்கு வக்ரப் பின்னணி கொண்ட ஒரு கதையை ஏன் உருவாக்க வேண்டும் எனவும் தோன்றியது. ஊரில் வேலை இல்லாதவர்களுக்கு இப்படி கதைகளை உருவாக்குவதும் ஒரு வேலைதான்.

ஸ்கூல் லீவு நாட்களை கொண்ட சனி, ஞாயிறுகளில் பிள்ளைகள் பஞ்சாயத்து போர்டு திண்டில் கூடிவிடும். எதிரில் இருக்கிற வேப்ப மரத்தில் ஏற்கனவே சேலை துணியால் கட்டியிருக்கிற ஊஞ்சலில் ஆடுவது இவர்களுக்குப் பொழுதுபோக்கு. சோடாவுக்கு இந்த கிழமைகளில் அவனையறியாமல் மகிழ்ச்சி வந்துவிடும். சிறிது நேரம் அவர்களை வேடிக்கைப் பார்த்து சிரித்துக்கொண்டிருப்பான். யாராவது நன்றாக ஆடிக்கொண்டிருந்தால் திடீரென்று அவர்களை நோக்கி கைதட்டுவான்.

‘ஏட்டி, சோடா உன்னைய பாத்து கைதட்டிட்டான் பாரு...‘ என்று எவளாவது சொல்ல, ‘ஆமா, ஒனக்கு புருஷம்லா‘ என்று மற்றொருவள் சொல்ல, சண்டை ஆரம்பிக்கும். தலைமுடியை இழுத்துக்கொண்டு ஆளாளுக்கு ஓடுவார்கள்.

அவர்கள் போன பிறகு சோடாவுக்கு ஆசை வரும். ஓடிப்போய் தொங்கும் சேலையில் உட்கார்ந்து அங்கும் இங்கும் ஆடுவான். இரண்டு மூன்று ஆட்டத்துக்குப் பிறகு ஒன்று சேலை கிழியும் அல்லது சேலை கட்டப்பட்டிருக்கிற மரக்கிளை முறியும். டொப்பென்று பின்பக்கம் தரையில் மோதி விண்ணென்று தெறிக்கும் வலியை பொருட்படுத்தாமல் அப்படியே திண்டில் வந்து உட்காருவான்.

எதிரில் சைக்கிளில் போகிறவர்கள் யாராவது இதைப் பார்த்தால், ‘ஒனக்கும் கெடக்க முடியலை என்னா..? எருமை மாடு மாதிரி இருந்துட்டு எதுல ஏறி ஆடுத...‘ என்று சத்தம் போடுவார்கள். அதை இவன் கண்டுகொண்டால்தானே.

தேர்தல்கள் நடந்து பஞ்சாயத்து போர்டு விரிவாக்கம் செய்யப்பட்டதன் பொருட்டு, சோடா அங்கு தங்குவதில்லை. திண்டின் எதிரில் புதிதாக, ‘ஊஞ்சல்களை கொண்ட சிறுவர் பூங்கா‘ வந்திருக்கிறது. எதிரில் இருந்த செவனன் கடைக்குப் பதிலாக இன்னும் சில மாடர்னான டீக்கடைகள் முளைத்திருக்கிறது. சாலைகளின் இருமருங்கிலும் மரங்கள் வளர்ந்திருக்கின்றன. திண்டின் வலப்பக்கம் திறந்தவெளி ஜிம் உருவாகியிருக்கிறது. காலை, மாலையில் இளைஞர்கள் விளையாடுகிறார்கள்.

ஊருக்குப் போன போது, சோடா எங்கே போயிருப்பான் என்பதாகவே இருந்தது என் தேடல்.

‘‘ஏய், சீதை பெரிம்ம, உம் மவனை பார்த்தியா? ஊர்ல இருந்து வந்த பய, அம்மா எப்படியிருக்கா? அக்கா எப்படியிருக்கானெல்லாம் கேட்கலை... எவனோ சோடாவாம்... அவன் எப்படியிருக்காம்னு கேக்காம்... கேட்டியா பெரிம்ம...‘‘ என்று சிரித்தாள் சித்தி மகள் பிரேமா. கல்லூரி படிக்கும் அவளது மகன் மந்திரம், என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். தெருவில் விசாரித்தால் ஏதும் நினைக்கலாம் என்று உலகநாதன் மளிகைக் கடைக்குப் போனேன்.

‘‘உலகா, சோடா எங்கயிருக்கான்?‘‘

‘‘இன்னா வருவாம் பாரு‘‘ என்றான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு நரைத்த தாடிகளுடன் அதே மாதிரியான உடைகளை உடுத்திக்கொண்டு பீடி புகைத்தவாறே கடைக்கு வந்தான். ஓடிப்போய் ஒரு கட்டு, செய்யது பீடியை வாங்கி அவன் கையில் திணித்தேன்.

என்னைப் பார்த்தவன், ‘‘எய்யோ... எப்படியிருக்கியோ...?‘‘ என்றான்.

ஆமாம். சோடா பேசத்தொடங்கியிருந்தான்.

4 comments:

savitha said...

arumaiyana padhivu nanbare..Idhey mathiri en urilum soda pola oru manithar irunthar..padikum podhu avar than kan mun ninrar..

சித்திரவீதிக்காரன் said...

எங்கள் பகுதியிலும் சோடா போன்ற ஒருவர் இருக்கிறார். டீக்கடையில் டீ கொடுத்தால் வாங்கி குடிப்பார். குடித்து மிச்சம் போட்ட சிகரெட்டு, பீடிகளை சேகரித்து வைத்துக் கொள்வார். ஒரு நாள் பழைய பிளாஸ்டிக்கப்பில் சாக்கடை ஓரம் தேங்கி கிடந்த தண்ணியை அவர் மோந்து குடித்த போது எனக்கு ரொம்ப சங்கடமாக போய்விட்டது. அவர் யாரிடமும் பேசவும் மாட்டார், எதையும் கேட்கவும் மாட்டார். அவரும் சோடா போல என்றாவது பேசினால் மனிதர்கள் மீது அவர் என்ன அபிப்ராயம் வைத்திருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடியும். பகிர்வுக்கு நன்றி.

ஆடுமாடு said...

சவீதா, சித்திரவீதிக்காரன் நன்றி.

ஒவ்வொரு ஊர்லயும் இப்படியொரு கேரக்டர் கண்டிப்பா இருக்கும்.

துபாய் ராஜா said...

// ஆடுமாடு said...

ஒவ்வொரு ஊர்லயும் இப்படியொரு கேரக்டர் கண்டிப்பா இருக்கும்.//

உண்மைதான் அண்ணாச்சி. அம்பையிலும், கல்லிடையிலும், வி.கே.புரத்திலும்,பாபநாசத்திலும் பல வருஷமா சுத்திகிட்டிருக்கிற சோடா மாதிரி ஆள்களை இப்போ ஊருக்கு போயிருக்கும்போது கூட பார்த்தேன். :((