Saturday, September 24, 2011

பஸ்-ஸ்டாண்ட் - சில நினைவுகள்

உறைந்து போன நினைவுகளை ஓரமாய் சேகரித்து வைத்துக்கொண்டே இருக்கிறது அனைத்து பஸ்-ஸ்டாண்டுகளும். பஸ்களுக்கும் ஸ்டாண்டுக்குமான உறவுகளை விட, பயணிகளுக்கும் ஸ்டாண்டுகளுக்குமான உறவு ரத்தமும் சதையுமானது. ஒவ்வொரு முறை பஸ்ஸில் ஏறி இறங்கும் அல்லது பஸ்ஸுக்காக காத்திருக்கிற பாதங்கள் பட்ட மணல்கள், இப்போதும் தேடிக்கொண்டிருக்கலாம் நம் பாதங்களை. ஆசையோடு பஸ்சில் ஏறிச்செல்கிற கால்கள், அதைவிட அதிக ஆசைகள் கொண்டே, சொந்த ஊர் பஸ் ஸ்டாண்ட்களில் இறங்கத் துடிக்கிறது. வாழ்க்கை முழுவதும் உள்ளூரில் கழிக்க முடிகிறவர்களுக்கும் பஸ் ஸ்டாண்ட்களுக்குமான உறவு ஜாஸ்தி. இருப்பத்தாறு வருடங்கள் வரை தினமும் ஏதோ ஒரு காரணத்துக்காக பஸ்-ஸ்டாண்டை மிதித்திருக்கிற என் கால்கள் பேசத் தொடங்கினால், அதற்கொரு nostalgia இருக்குமானால் அது என்னை பேசியிருக்கு்ம் என்பதை அறிய ஆவல்.


சின்ன சூட்கேஸில் உடைகளை அடைத்துக்கொண்டு, ஊர் விட்டு போகிற எல்லாருக்கும் தெரியாது, பஸ்-ஸ்டாண்டின் அழுகை பற்றி. அம்மா, அப்பாவுக்கோ, அண்ணன், தங்கைகளுக்கோ டாடா காட்டி விட்டு பஸ்ஸில் ஏறுகிற யாருக்கும் பஸ்-ஸ்டாண்ட் புழுதியின் ஏக்கம் தெரிவதில்லை. அதனதன் ஏக்கம் அதுவதுக்கானது.

எல்லா ஊர்களையும் போல பள்ளம் -மேடுகளை கொண்டிருந்த பஸ்-ஸ்டாண்ட்தான் கீழாம்பூருக்கும். பஸ்கள், ஆன் தி வேயில் நின்று செல்லும் இடம் என்பதால் பஸ்-ஸ்டாண்ட் என்றழைப்பது இலக்கண பிழையாகலாம். அதனால் பேருந்து நிறுத்தம்.

பேருந்து நிறுத்தங்கள், குறைந்த பட்சம் இரண்டு, மூன்று கடைகளை கண்டிப்பாகக் கொண்டிருக்கிறது. ஒன்று பீடி சிகரெட் மற்றும் டீ கடை. இன்னொன்று பூ, அல்லது லாலா கடை. கொஞ்சம் விரிந்திருக்கிற நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத ஊர்களில் பரோட்டா கடைகளும் உண்டு. கீழாம்பூர் தம்மாத்துண்டு கிராமம் என்பதால், பஸ்களே எப்போதாவதுதான் வரும் என்ற நிலையிலும் பேருந்து நிறுத்தம் மூன்று கடைகளை கொண்டிருந்தது அதிசயம்தான். இந்த கடைகளின் புண்ணியத்தில் சிகரெட் பிடிக்க பழகியிருந்தனர், ஆழ்வார்க்குறிச்சி கல்லூரியில் படிக்கும் உள்ளூர் அண்ணன்கள். அவர்களுக்கு ஈடாக திருட்டு தம்மடிக்கும் பழக்கம் பளஸ் ஒன், டூ படிக்கிறவர்களுக்கும் இருந்தது.

பேரூந்து நிறுததத்தின் கிழக்காக, கோயில் காம்பவுண்ட் சுவரின் வலப்பக்கத்தில் இருந்தது கசமுத்துவின் டீக்கடை. வாழ்க்கையில் கனவு என்பதை தாண்டி, கனவையே வாழ்க்கையாக வாழ்ந்துகொண்டிருக்கும் கசமுத்துவுக்கும் டேப் ரெக்கார்டருக்கும் அப்படியொரு பொருத்தம். காலையில் எழுந்து கடையை திறந்ததுமே, 'ஆயர் பாடி மாளிகையில்...' ஓடும். சாமியிலிருந்து ஆரம்பிக்கிறாராம் கடையையும் பாடலையும். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் கொஞ்ச சொச்ச மாணவ, மாணவிகள் நிறுத்தத்தில் குழுமியதும் க.மு.வுக்கு கைகள் பரபரக்கும். கல்லூரி படிக்கும் அண்ணன்கள், கடையின் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு, 'கச. அந்த பாட்டை போடு, இந்த பாட்டை போடு" என நச்சரிக்க ஆரம்பிப்பார்கள். (சம்பவம் நடக்கும் காலகட்டம் எண்பதுகளின் இறுதி என்பதை கவனத்தில் கொள்க. பாடல்களுக்கும் வருடங்களுக்கும் சம்பந்தமில்லை). 'ராசாவின் மனசுல ராசாத்தி நெனப்புதான்...' முதல் வரி முடிந்ததும் பஸ் நிறுத்தம் நோக்கி ஒரு லுக். நெஞ்சோடு நோட்டு புத்தகங்களை அமுக்கி, அடிக்கடி சிரித்துக் கொண்டிருக்கும் தாவணி பெண்களில் சிலர், வானம் பார்ப்பது மாதிரி, இங்கும் ஒரு பார்வை. அண்ணன்களில் சிலர் இப்போது மெதுவாக பறக்க ஆரம்பிப்பார்கள். பெண்களிடம் பேசுவது மகாகுற்றம் என்று கருதப்பட்ட காலத்தில் இந்த பறத்தல் உயிருக்குள் நனையும் சுகம் கொண்டது. வெறும் பார்வையை வேதமென நினைக்கும் பிராயத்து அறிவுக்கு அது காதலென்றே தெரிந்தது. காதல், கண்ணுக்குள் கத்தி சொருகி இதயத்தை நோண்டும் கருவி என்பது அப்போதும் அறிந்ததுதான்.

பாடல்களின் இடையே பஸ்சுக்கு மட்டும் காசிருக்கும் சட்டைப் பைகளை, கசவின் கடன் புண்ணியத்தில் நான்கைந்து சிகரெட்டுகள் நிரப்பும். இதற்கிடையே கசவும் சிதறி கிடக்கும் தனது தலைமுடியை கையால் மேல் நோக்கி கோதி விடுவார். இந்த கோதி விடலுக்கு ஏதாவது ஒரு பெண் காரணமாகி இருக்கலாம்.
அடுத்தடுத்த பாடல்களுக்குப் பிறகு, இன்னும் 5 நிமிடத்தில் பஸ் வந்துவிடும் என்கிற நிலையில், கச சோகமயமாகிவிடுவார். 'வைதேகி காத்திருந்தாள்" படத்தின் 'ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு..."வைப் போட்டதும் பேரூந்து நிறுத்தம் அமைதியாகிவிடும். மாயா மாளவ கௌளை ராகத்தில் (சரிதான் என நினைக்கிறேன்) அமைந்த இந்தப் பாடலுக்கு சிகரெட் பிடிக்கும் அண்ணன்களும் கசவும் கூடவே பாடிக்கொண்டு கொடுக்கிற expression களைப் பார்த்தால், கஞ்சிக்கு வழியில்லாமல் நாளையே செத்துவிடுவார்கள் போல இருக்கும். அப்படியொரு சோகம் எல்லாருக்குள்ளும். டவுண் பஸ் வந்து அள்ளிக்கொண்டு சென்றதும் மயான அமைதிக்கு ஆட்பட்டுவிடும் கட்சி கொடிகம்பங்கள் சூழ்ந்த பேரூந்து நிறுத்தம்.
பெல்பாட்டம் அணியும் அண்ணன்களை இன்ஸ்பிரேஷனாக கருதும் சிறு பயல்கள், பருவத்து மீசை முளைத்ததும் கசவின் தோழர்களானார்கள். அண்ணன்கள் சீனியர்கள் ஆனதும் ஊரைக் காலி பண்ணுவதில் குறியாக இருந்ததால் அவர்களின் இடத்தை இவர்கள் பிடிக்க வேண்டியதாயிற்று. கசவுடன் நட்பு கொள்வதற்கு வெறும் பாடல்கள் மட்டும் காரணமாக இருக்கவில்லை. கசவின் கடன் கருணை தேவையாக இருந்ததால் நட்பு ஆழமானது. இந்த ஆழத்தில் கசவின் பாடல்கள், வாரம் ஒரு கேசட்டை புதுமையாக்கி வந்தன. இந்த புதுமையில் கச இன்னும் இளமையாகவே தெரிந்தார்.

பரபரப்பான காலை இப்படியாகியிருக்க, கச கடையின் எதிரில், அதாவது கருப்பசாமி கோயில் திண்டு, மாலை நேர மயக்கமாகியிருக்கும். எந்த பஸ் வரும்போது என்ன பாடல் என்பதை அவர் அறிந்திருப்பார். அறியாத பருவம் எங்களுக்கானது. இங்கிருந்துகொண்டு கசவின் முகத்தை இங்கே திரும்ப வைக்க போதுமானதாக இருந்தது விசில். நாக்கை மடக்கி ஆட்காட்டி விரலையும் பெருவிரலையும் இணைத்து அமுக்கி உஷ்...என்கிற ஊதலில் வரும் ஒலியை ஆங்கிலம் விசிலாக்கி இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், டிக்ஸ்னரிகள் இதற்கு சொல்லியிருக்கிற 'சீழ்க்கையொலி' என்பதுதான் புரியாததாக இருக்கிறது. இந்த விசிலுக்கு அர்த்தம் யாரிடமாவது சிகரெட் கொடுத்து விடு என்பதாகவோ, அல்லது எதிர்பார்க்கிற பாடலை போடு என்பதாகவோ, கச அறிந்துகொள்வது யாருடைய விசில் என்பதை பொறுத்தது.

பிழைப்புக்காக கிராமம் ஒவ்வொருவரையும் நகரத்துக்கு அனுப்பி வைக்க, ஆட்களற்று கிடக்கிற கோயில் திண்டுகளில் கடைகள் முளைத்திருப்பது ஆச்சரியம்தான். ஏதோ ஒரு மழை நாளில் தலையில் துண்டை போட்டுக்கொண்டு மீனாட்சி நடுநிலைப்பள்ளி வாசலில் நிற்கிற கசவை பார்த்ததும், அவருக்கு அடையாளம் தெரியவில்லை.

சொல்லி புரியவைத்ததும் ,'ஏய் தம்பி, எப்படிடே இருக்கே...? கடைய இப்ப வீட்டுக்கிட்ட மாத்திட்டேன்... பஸ்-ஸ்டாண்ட்ல நிறைய கடைகள் வந்துட்டுலா." என்றவர் குடும்பம் பற்றி விசாரித்து விட்டு சொன்னார்:

''உங்கூட வருவாம்லா முத்துசாமி, இன்னும் 245ரூவா பாக்கி வச்சிருக்காம்டே..."
சில பாக்கிகள் வசூலிக்கப்படாமலே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்

8 comments:

துபாய் ராஜா said...

பஸ் வந்து நின்னு போகும்போது கிளம்பற புழுதியைப் போல எங்க மனசுலயும் புயல் கிளம்பிடுச்சு அண்ணாச்சி.

//காதல்,கண்ணுக்குள் கத்தி சொருகி இதயத்தை நோண்டும் கருவி என்பது அப்போதும் அறிந்ததுதான்.//

அருமை. அட்டகாசம் அண்ணாச்சி.

ஆடுமாடு said...

நன்றி ராஜா சார்.
'துபாயை' எப்ப மாத்த போறீங்க?

இரசிகை said...

yenga kiramathu busstand-la oru,kannutheriyaathavar paadi pisa vaanguvaar.yeppavum oru mana noyaalip piyanum irunthutte iruppaanga.

yenakkum ithu sambanthamaa yezhuthanumngira aasai vanthuduchu..sir.

vaazhthukal....!

குறையொன்றுமில்லை. said...

பஸ் ஸ் டாண்ட் நினைவுகள் நல்லா பகிர்வு.

ஆடுமாடு said...

ஒவ்வொரு
ஊர் பஸ்ஸ்டாண்ட்லயு்ம்
ஒவ்வொரு அனுபவம்.

ரசிகை நன்றி.

காமராஜ் said...

ஐயய்யோ நான் இப்பதான் இந்த பதிவப்படிக்கிறேன். என்னமோ ரெண்டுபேரும் சொல்லிவச்சு எழுதின மாதிரி இருக்கு. பொழுதுபோகலை மத்தியானம் குளிக்கப்போகணுமின்னு பம்புசெட்டுக்குப்போனால் முன்னதாக அவள் எல்லாவற்ரையும் நனைத்துவிட்டு குளிக்கத் தனித்துருப்பதுப்போல.
ரெண்டுபேரும் ஊர்வாயி உழுந்துருவமே தோழா.

ஆடுமாடு said...

அட, ஆமா. நானும் இப்பதான் உங்க பதிவை படிச்சேன்.
என்னமோ, ஏதோ...இதைதான் like minded partyன்னு சொல்றாங்களோ...
வாழ்த்துகள் தோழர்.

ஆடுமாடு said...

லட்சுமி அம்மா நன்றி.