Wednesday, July 13, 2011

ரயில்கள் தடதடக்கும் சாலை

''எப்படி இருக்கே, நல்லாயிருக்கியாங்கற பார்மல் விசாரிப்புகளைத் தாண்டி நிறைய பேசணும் போல இருக்கு. 'அப்படியென்னெத்த பேசிடுவே' ன்னு உனக்கு தோணும். எங்கிட்ட பதிலில்லை. ஏன்னு தெரியலை. வழக்கமா, பத்து பதினோரு மணிக்கெல்லாம் தூங்கிடுவேன். இப்போ முடியலை. காலையிலதான் தூக்கமே வருது. 'என்னைப் பத்தியே நினைச்சுட்டிருக்கியா'ன்னு நீ கேட்காத. இது, அது இல்லை. கண்ணுக்குள்ள, ஒரு கருப்பு நிலவு உட்கார்ந்துகிட்டு என்னை மேலே மேல அழைக்குது. வேண்டாம், வேண்டாம்னு நினைச்சு இமைகளை மூடிக்கிட்டாலும் முடியலை. ஆனா, திடீர்னு றெக்கை கட்டிட்டு வந்து நிற்கிற வெள்ளை நிற குதிரைகளைப் பார்த்தா, ஏறி உட்கார்ந்திடறேன். அந்த கருப்பு நிலவுக்குதான் அது போகுதுன்னு நினைச்சிட்டிருந்தா, அதையும் தாண்டி, எங்கயோ கொண்டு போகுது. போகும்போது, முகத்தை திருப்பி என்னை பார்த்துக்கிட்டு கொஞ்சமா அழுது. அந்த அழுகை ஏன்ங்கறது எனக்கு புரியலை. புரிஞ்சா மட்டும் என்ன பண்ணிடப்போறேன்?


-பழைய நோட்டுகளை, அல்லது புத்தகங்களை திறந்து பார்க்கும்போது ஏதாவது, இப்படியொரு பக்கத்தை பார்க்க நேர்ந்துவிடுகிறது. பழையவற்றை படிப்பதும் அதன் நினைவுக்குள் முங்கி எழுவதும் சுகமான மரணம். எப்போது எழுதினேன், ஏன் எழுதினேன் என்கிற விஷயங்களும் வந்து விடும்போது, மீண்டும் பிறந்து மீண்டும் இறப்பதான உணர்வு. ஒவ்வொரு நோட்டின் கடைசி சில பக்கங்களில் எழத ஆரம்பித்து, பாதியில் நிறுத்தியிருக்கிற விஷயங்களை மீண்டும் தொடரலாமா என நினைத்து, அப்படியே விட்டுவிடுகிறேன்.

எல்லா ஊரையும் போல, கீழாம்பூர் ரயில்வே ஸ்டேஷனும் ஊரைத்தாண்டிதான் இருக்கிறது. பஸ் ஸ்டாண்டுகளை விட ரயில்வே ஸ்டேஷன்கள் அதிக ஈர்ப்பை தருபவை. அதன் தனிமையும் வளர்ந்து நிழல் விரித்திருக்கிற மரங்களும் கூட, அந்த ஈர்ப்புக்கு காரணமாக இருக்கலாம். அது மட்டுமில்லாமல் எல்லா மரங்களும் ஏதோ ஒரு வரிசையில் வளர்க்கப்பட்டிருப்பதற்கான காரணமும் ஆச்சர்யமானவை. இரண்டு மூன்று முறை மட்டுமே வந்துபோகிற ரயில்களுக்காக, தனிமை காட்டில் காத்திருக்கிற மாஸ்டரும், கேட் கீப்பரும் பரிதாபத்துக்குரியவர்களாகவே தெரிவார்கள். பிழைப்புக்கு இன்னொரு பெயர்தான் பரிதாபம் என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. சின்ன வயதில் ஒரே ஒரு முறை, அம்மா மற்றும் அக்காவுடன், சாத்தூர் மாரியம்மன் கோவிலுக்கு ரயிலில் சென்ற ஞாபகம் இருக்கிறது. அதை விடுத்து ரயில் பயணங்கள் அப்போது எனக்கு வாய்க்கவில்லை. எங்கள் ஊருக்கு வந்த மாஸ்டரின் மகன் என்னுடன் படிக்க நேர்ந்த காரணத்தாலும் அவன் வீட்டில் அடிக்கடி ப்ரூ காபி தருவார்கள் என்பதாலும் பள்ளி விடுமுறை நாட்களில் ரயில்வே ஸ்டேஷன் எனக்கும் போதிமரமானது. 'அவங்க வீட்டுல போயி படிக்கப் போறேன்' என்ற பொய்யில் அம்மாவும் தலையாட்டிவிடுவாள்.

''ஆச்சர்யமா இருக்கு. நனைச்ச புளியங்கொட்டையை தின்னுக்கிட்டு, நீ வருவேங்கறதுக்காக மூணு கிலோமீட்டர் நடந்த கால்களுக்கு, இப்ப பக்கத்துலயே நீ இருக்கேன்னு தெரிஞ்சும் நடக்கவே முடியலை. கொஞ்ச நாளா, வந்து வந்து போகிற உன்நினைவுகளை மொத்தமா மூட்டைக்கட்டி தூக்கி வைப்பேன். இருந்தாலும் அது ஒண்ணும் மூட்டை இல்லையே, வைக்கிற இடத்துல உட்கார்றதுக்கு. கொஞ்சம் கொஞ்சமா கிருமி மாதிரி உடலுக்குள்ள நுழைஞ்சு , எல்லாத்தையும் அரிச்சுட்டு இருக்குது. திடீர்னு உன் நினைவுகள்ல இருந்து சூரிய ஒளி. வட்டமாகவும் இல்லாம, சதுரமாகவும் இல்லாம, வித்தியாசமான உருவத்துல இருந்தது அந்த சூரியன். என் தலையை மட்டும் வலது கையில எடுத்து வச்சுக்கிட்டு, அது கிட்ட போய்கிட்டே இருக்கிறேன். குளிரும் சூரியன். பக்கத்துல போக போக ஈரக்காத்து. நெஞ்சுக்குள்ள இருந்து நெருப்பு புகை வெளியேறி, கொள்ளளவு தாண்டி ஈரம் வந்து அடைஞ்சிடுச்சு...

ஹேண்டில்பரின் வலது பக்கத்தில், உருண்டு தொங்கிக்கொண்டிருக்கும் பெல்லை சரிசெய்துகொண்டே, சைக்கிளை அழுத்தினால் வந்துவிடுகிறது ஸ்டேஷன். செம்மண் தரை நிரம்பிவழியும் நேர்க்கோட்டு பாதையில், யாரும் வந்து அமராத சிமெண்ட் பெஞ்ச்களைப் பார்த்ததும் சினிமா காட்டியிருக்கிற ரயில்வே ஸ்டேஷன்கள் ஞாபகத்துக்கு வந்துவிடும். பெல்பாட்டம் அணிந்த அண்ணன்களும் பட்டு பார்டர் பாவாடை மற்றும் தாவணியில் அடிக்கடி மாராப்பை சரிசெய்கிற அண்ணன்களின் தேவதைகளும் ஓரக்கண்ணால் யாரையாவது பார்த்துக்கொண்டே சிரிக்கிற காட்சிகள் வந்து வந்து போகும். ரயில் வந்து நின்றதும் அவரவர்கள் கலைந்து ஒவ்வொரு பெட்டியில் ஏறிக்கொள்ள, காதலிக்கிற அண்ணனும் தேவதையும் அந்தந்த பெட்டியில் ஏறி நின்று, இவனை அவளும் அவளை இவனும் பார்த்துக்கொண்டே உள்நுழைவது இன்னும் சுவாரஸ்யமானது. இவர்களுக்கு தூது செல்கிற, அல்லது இன்னும் காதலி கிடைக்காத அண்ணன்கள், தலைமுடியை இப்படி அப்படி ஆட்டிக்கொண்டோ, அல்லது வாயில் இருக்கும் சிகரட்டை அவசர அவசரமாக மேலும் இழுத்து வீசிவிட்டோ, ஓடுகிற ரயிலை வேகமாக துரத்தி கம்பார்ட்மெண்ட் கம்பியில் தொங்கி ஏறுகிற ஸ்டைலும் அலாதியானது. இவ்வளவுக்கிடையிலும் ரயிலை தவறவிட்டுவிடுகிற அண்ணன்கள் அல்லது தேவதைகள் மூச்சுவாங்க, போகும் ரயிலின் பின்பக்கத்தை பார்த்துவிட்டு, மீண்டும் பஸ் ஸ்டாண்டுக்கு நடையை கட்டும் கதைகள் இருக்கிறது. இப்படியான எந்த காட்சிகளையும் இந்த ரயில்வே ஸ்டேஷன் தந்ததில்லை. மாறாக, பறவைகளின் சத்தங்கள் கூட இல்லாத தனிமை.

உங்கிட்ட இப்படித்தான். நான் ஏதாவது சொன்னா, நீயா எதையாவது புரிஞ்சுக்கிட்டு பேசாம இருந்துடற. அம்பாசமுத்திரம் கல்யாணி தியேட்டருக்கு தோழிகளோட நீ சினிமாவுக்கு போறதா சொன்னே. வீட்டுல, கசங்கியிருந்த சட்டையையும், பேண்டையும் சம்படத்துல கங்குபோட்டு அயர்ன் பண்ணி -(அப்படியும் சுருக்கம் போகலை), ரெடியானேன். அம்மாகிட்ட ஆயிரத்தெட்டு பொய் சொல்லியும் காசு இல்லைன்னு சொல்லிட்டா. மூப்பனார் கடையில கதை சொல்லி, காசு வாங்கிட்டு தியேட்டருக்கு வந்தா டிக்கெட் இல்லை. படம் முடியறவரை தியேட்டர் வாசல்லயே நின்னேன், உன்னைப் பார்க்கணுங்கறதுக்காக. திடீர்னு கொலுசு ஒலி. என் கால்களைப் பார்த்தேன். சலங்கைகளா மாறியிருந்தது அது. உதறினேன். விதவிதமான ஒலி. காதல் ஒலிகள்னு பக்கத்துல இருந்தவங்க சொன்னாங்க. ஆனா, இடது கால்ல மட்டும் ரத்தம் பொங்கி வர்ற மாதிரி பீலிங். கா(த)ல் ஒலி, வலியா மாறிய ரகசியம் தெரியலை...

ஸ்டேஷனுக்கு உள்நுழையும் முன் அந்த சிறிய வீட்டின் முன்பு இருக்கிற 'குடை' வடிவ மரத்தைக் கண்டதும் ஆச்சரியமும், சிவப்புநிறத்தில் உதிர்ந்து கிடக்கிற அதன் பூக்களின் அழகும் நின்று போகச் சொல்லும். 'இந்த மரத்துக்கு என்ன பேரு' என்று யாரிடமாவது கேட்டால், பதில் சொல்வார்கள் என்றுதான் நினைத்தேன். என்னைப்போலவே அவர்களுக்கும் தெரியாமலிருந்ததில் ஆச்சர்யமில்லை. இந்த மரத்தை அடுத்து சைக்கிள்கள் செல்லும் ஒற்றையடி பாதையில் பெரிதாக வளர்ந்திருக்கிற அரச மரத்திண்டின் முன் தொப்பை கணபதி சிலை. யார் வந்து பூஜை செய்வார்கள் என்பதெல்லாம் தெரியாது. எப்போதாவது அவரின் கழுத்தின் ஒரு மாலையையும், நெற்றியில் குங்கும பொட்டையும் பார்த்திருக்கிறேன். அதன் அருகில் உட்கார்ந்து படித்தால் நன்றாக படிப்பு வரும் என்ற நண்பனின் யோசனையில் இங்கு உட்காரத் தொடங்கினோம். நண்பனும், ப்ரூ காபியும் வராத நாட்களில், கண்களை மூடி, உள்ளே என்னையே பார்த்துக் கொண்டிருப்பேன். காற்றடித்து இலேசாக ஆடி அசைந்து தலையில் விழுகிற ஆட்டின் வடிவ இலைகள், அந்த பாய்ச்சலை தடை செய்தாலும் நினைவுகள் நீந்தி நீந்தி செல்லும். ஆளரவமற்ற அந்த ஸ்டேஷனில் தனியாக அமர்ந்துகொண்டு, படிக்க வந்தவன், எழுத தொடங்குகிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய்...

12 comments:

க ரா said...

classic... :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதெல்லாம் படிக்கக்குடுக்கல போல .. நீங்களே எழுதி வச்சிக்கிட்டீங்களா..நல்லவேளை.. பயந்து போயிருப்பாங்க.

சாந்தி மாரியப்பன் said...

ஓடிய ரயில்பெட்டிகள் நினைவுகளை மட்டும் விட்டுட்டு போனது நல்லதாப்போச்சு.. அருமையாயிருக்கு.

க.பாலாசி said...

எப்பா.. ஒரு எட்டு அப்படியே சுத்திக்காட்டிட்டீங்க.. 7 வயசு இருக்கும்னு நினைக்கிறேன்.. எங்க வீட்டுக்கு பின்னாடியிருந்த ஸ்டேசன மூடி ட்ரெயினையும் நிப்பாட்டிட்டாங்க.. ஆனாலும் அங்கு கிடைத்த அந்த தனிமை அலாதி.. இங்க நான் மீண்டெடுத்த ஒரு நினைவு புளியங்கொட்டைய ஊற வைச்சி திங்கறது... எவ்வளவு நாளாச்சு...

ஆடுமாடு said...

இராமசாமி சார், நன்றி.

//...பயந்து போயிருப்பாங்க...//

முத்துலட்சுமி மேடம் ?

ஆடுமாடு said...

//ஓடிய ரயில்பெட்டிகள் நினைவுகளை மட்டும் விட்டுட்டு போனது நல்லதாப்போச்சு...//

நன்றி அமைதிச்சாரல் மேடம்

ஆடுமாடு said...

//அங்கு கிடைத்த அந்த தனிமை அலாதி.. இங்க நான் மீண்டெடுத்த ஒரு நினைவு புளியங்கொட்டைய ஊற வைச்சி திங்கறது... எவ்வளவு நாளாச்சு...//

இங்க எங்க புளியங்கொட்டை கிடைக்குது பாலாசி? நன்றி.

Thekkikattan|தெகா said...

இன்னிக்குதான் எனக்கு இது படிக்கக் கிடைச்சிச்சு. சைக்கிள் பெல்லை நானும் ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டே கூட அந்த ரயில்வே டேசன் வந்த மாதிரி இருக்குவோய் :)

அப்பப்போ கருப்பு நிலாவிற்கு பொயிட்டு வாங்க... இளமையாவே இருக்கலாமா சொல்லிக்கிறாங்க.

நான் பஸ்லயும் பகிர்ந்துகிட்டேன் இந்த பதிவை படிச்சு உணர்ச்சி வசப்பட்டு :)

காயத்ரி சித்தார்த் said...

ரொம்ப நல்லாயிருக்கு...

ஆடுமாடு said...

//நான் பஸ்லயும் பகிர்ந்துகிட்டேன் இந்த பதிவை படிச்சு உணர்ச்சி வசப்பட்டு :)//

தெகா சார் நன்றி.

..................

//ரொம்ப நல்லாயிருக்கு...//

நன்றி பாலைத்திணை.
ரொம்ப வருஷமாச்சு.

கதிரவன் said...

மிகவும் அருமை...

கதிரவன் said...

மிகவும் அருமை