Tuesday, March 16, 2010

குறுணை

வாசலில் வெண்மையாகச் சிதறி கிடந்த முருங்கைப் பூக்களின் மீது சருவச்சட்டியிலிருந்து சாணிக்கரைசலை தெளித்தாள் கிட்னம்மா. சாணத் தண்ணி பட்டு அவற்றின் நிறம், பாதி கரும்பச்சையும் பாதி வெள்ளையுமாக காட்சியளித்தன.

விடிந்தும் கூவிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு சேவல், சாவகாசமாக இவள் வீட்டு வாசலில் நடந்தது. நேற்று, முள் கிழித்திருந்த அதன் கொண்டையில் ரத்தம் காய்ந்து போய், முருங்கை பிசின் மாதிரி திட்டித்திட்டாய் இருந்தன.

எதிரில் கோழி கூட்டின் மீதிருந்த நான்கைந்து கட்டவாரியல்களில் தென்னங்கீற்று வாரியலை எடுத்தாள். அதன் கைப்பிடி அருகில் கோழி ஒன்று 'ஆய்' போயிருந்தது. 'சனியன் எங்க வந்திருக்கு போயிருக்கு பாரு' என்று பேசிக்கொண்டே, பக்கத்தில் கிடந்த பழைய துணி மீது அந்தப் பகுதியை வைத்து, வாரியலை அங்கும் இங்கும் இழுத்துத் தேய்த்தாள். அரைகுறையாகத்தான் போயிருந்தது. 'சரி பரவாயில்ல' என்று பெருக்க ஆரம்பித்தாள்.

தரையில் இரண்டு இழுப்பு இழுத்ததும் வயிற்றுக்குள்ளிலிருந்து ர்ர்ரென்று சத்தமெழும்பி, வாய் வழியே காற்றாகப் போனது. ஒரு நிமிடம் இடுப்பைப் பிடித்துக்கொண்டு நிமிர்ந்து நின்றாள். ஆயாசமாக வந்தது அவளுக்கு. கண்கள் லேசாக சொருகின. பசி. இன்னும் செத்த நேரம் தூங்கலாம் போலிருந்தது. ஒரெடியாய் பெருக்கிவிட்டு தூங்கலாம் என்று நினைத்து ஆரம்பித்தாள்.

பறவைகள் கூட்டமாய் கிழக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. இறக்கைகள் அடிக்கும் ஒலி காற்றில் மிதந்து வந்தது.

வாசலை பெருக்கும் சத்தம் கேட்டு, கீழ வீட்டுக்காரி மாரியம்மா, 'என்ன பெரியம்ம, ராத்ரி நேரத்தோட தூங்கிட்டியோ' என்று கேட்டாள்.

அவள் கருப்பநம்பிக்கு திருமணமாகி வந்தவள். இன்னும் கழுத்தில் புது தாலி சரடு மஞ்சள் போகாமல் அப்படியே இருக்கிறது. கூடவே பெரும் எடைகள் கொண்ட நகைகள்.

'நம்ம தங்கிடு மட்டும் ஒழுங்கா இருந்திருந்தால் பெரும் நகைகளோடு திருமணம் செய்து வைத்திருக்கலாம். ம்ம் எல்லாம் எந்தல விதி' என்று நினைத்துக்கொண்டாள் கிட்னம்மா.

'ஏ பெரியம்ம, உன்னதான கேக்கேன்... காதும் அவிஞ்சுபோச்சா ஒனக்கு'

'ஆங்... ஆமாதாயி, பொழுதோடயே நேத்துபடுத்துட்டேன். விடிய விடிய முழிச்சு எந்த கடல்ல முத்தெடுக்கப் போறேன்'

'நேத்து, அவ்வோ தெப்பக்குளத்துல மீன் புடிச்சுட்டு வந்திருந்தாவோ. கொழம்பு நெறய மிச்சமாயிட்டு. கொண்டு வந்து வாசல்ல நின்னு பெரியம்ம, பெரியம்மன்னு கூப்பாடு போடுதேன். பேச்சு மூச்ச காணும். அந்த நேரம் பாத்து நம்ம சலவக்காரி செண்டு வந்தா. எல்லாத்தையும் தூக்கி அவாட்ட கொடுத்தேன்'

'ஏட்டி, அதுயென்ன வம்பாவா போவும்? அடுப்புல சுடவச்சு, சுண்டவச்சுப் போட்டனா, காலைல சாப்புட, அல்வா மாறி இருக்குமட்டி, அவகிட்ட கொடுத்தேங்கியே'

'சர்தாம்... இவ்வோளுக்கு தொண்டையில எறங்கலையே'

'மீனு ஏம்டி ஏறங்கல?'

'ரெண்டு மொளத்தா கூடிப்போச்சு. வாயில வச்சா எரிச்சு கொல்லுது. பின்ன என்ன பண்ண சொல்லுத? கழுதய அவகிட்ட கொடுத்தேன். வீணாத்தான போடணும்'

சுருக்கென்றது கிட்னம்மாவுக்கு.

'தூரப்போடுததை கொண்டு வந்து, கதவை தட்டிருக்காளே... எச்சிக்கலைன்னே நெனச்சிட்டாளா? எடுபட்ட செரிக்கி. அவ வாயில ஈரமண்ணு விழ...'

குபுக்கென்று கண்ணீர் வந்தது. வேறெதுவும் அவளுடன் ஏசவில்லை. அவசர அவசரமாக தூத்து ஒதுக்கிவிட்டு, வீட்டு வாசலில் போய் உட்கார்ந்தாள்.

சேலை முந்தானையை தரையில் விரித்து ஒருக்கு சாய்த்துப் படுத்துக்கொண்டாள்.

'இந்தப் பய ஒழுங்கா இருந்திருந்தான்னா, நான் இந்த நெலமைக்கு ஆளாவணுமா? கண்ட கண்ட பேதில போவாருட்டயெல்லம் இப்படி பேச்சுக் கேக்கணுமா? ஏ தெய்வமே... என்னைய இதுக்குதான் படைச்சியா?'

கண்ணைத் துடைக்க துடைக்க அழுகை பீறிட்டு வந்தது. ஊற்று மாதிரி.

தங்கிடு ஒன்றும் அப்படிப் படிக்கவில்லை. சிறுவயதிலேயே அவன் அப்பா மாதிரி நெடு நெடுவென்று வளர்ந்திருப்பான். ஊர் சுற்றிக்கொண்டிருந்தான். வேலை வெட்டி எதுக்கும் செல்லவில்லை. பாபநாசம் மலைக்கு மேல சேர்வலாறு அணை கட்ட லாரியில் வேலைக்கு ஆள் கூட்டிச்சென்றார்கள். சோத்துச்சட்டியை தூக்கிக்கொண்டு அப்போதுதான் முதன்முதலாக அவன் வேலைக்கு போனது. ஒன்றரை வருட வேலை. மூன்றாவது மாதத்தில் அவன் வாங்கிகொடுத்த சேலையால் பூரித்துப் போனாள் கிட்னம்மா. இந்தப் பூரிப்பு நீண்ட நாள் நீடிக்கவில்லை. அணைக்கட்டு வேலை முடிந்து, அவன் கூப்பிட்ட வேலைக்கு சென்று வந்த நாட்களில், அவன் நடை உடைகளில் மாற்றம் வந்தது. கைகளில் தாராளப் பணப்புழக்கம். என்னதான் மாங்கு மாங்கு என்று வேலை செய்தாலும் முப்பது ரூபாய்க்கு மேல் தேறாது. ஆனால், தங்கிடு கைகளில் நூறுகளாகப் புரண்டது.

'ஏதுல இவ்வளவு ரூவா'

'ஆங்... தெருவுல கெடந்தது'

'தெருவுலயா'

'தெருவுல கெடக்குமோ...போவியா, எப்படி வந்துச்சு... ஏன் வந்துச்சுன்னு'
அதன் பிறகு எதுவும் கேட்கவில்லை அவள். ஒரு நாள் உச்சிவெயிலில் மேலத்தொரு மோர்க்காரி, 'ஏக்கா, உம்மவன போலீஸ்காரன் அடிச்சு தரதரன்னுலா இழுத்துட்டு போனாம் காலைல' என்றதும் அரண்டுவிட்டாள்.

'ஏ நாசமா போறவனுவோ, எம்புள்ளைய ஏம் அடிக்கானுவோ'

தலைய விரித்துப்போட்டு ஒப்பாரி வைத்தாள்.

'உம்மவன் பண்ணுனதுக்கு, அடிக்காம என்ன செய்வான் போலீசுகாரன். ஒத்த தென்னம்புள்ள பக்கத்துல சாராயம் காய்ச்சுனாம்னா விடுவானா?'

கெதக் என்றது அவளுக்கு.

எந்த தொழில் அவன் அப்பனோட போகட்டும் என்று நினைத்தாலோ... அதே தொழில் மகன்.

பிறகு யாராவது வீட்டுக்கு வருவார்கள். 'இப்ப அம்பாசமுத்ரம் ஜெயில்ல இருக்காம். பாத்துட்டு வரசொன்னாம்' என்பார்கள். பிறகு பாளையங்கோட்டை ஜெயில்.

ஒரு முறை தங்கிடுவிடம் கேட்டாள்.

'இந்த நாசமா போற தொழிலு வேணுமால'

'சும்மா தொன தொனங்காத... போலீசுகாரனுவோ துட்டை வாங்கிட்டு சும்மாதான் இருந்தானுவோ. வந்திருக்கவன் புது எஸ்.ஐ. அடங்கமாட்டேங்கான். எங்க போயிருவான்?'

'சாராயத்தை வித்துதான் வயிறு வளக்கணுமா.. ஒங்கூட சேர்ந்தவந்தானல கருப்பநம்பி. இன்னைக்கு கல்யாணம் காச்சின்னு இருக்காம்லா. போலீஸ்காரன் கையில அடிவாங்கிதான் சாவணுங்கியோல'

'இங்கரு... இப்டி பேசிட்டிருந்தனா, எட்டிட்டு மிதிச்சிருவேன்'

'அது ஒண்ணுதாம்ல பாக்கி. ஏற்கனவே ஊர்ல உள்ளவ எல்லாம் காறிட்டு துப்பாத கொறயா பேசுதா...நீ இதையும் செஞ்சுட்டானா போதும்'

'எவளாவது ஏதாது சொன்னானா சொல்லு. தலைய எடுத்துருதன்'
'த்தூ...நாய, உன்னை பெத்ததுக்கு அதோடயாவது விட்டாளுவோன்னு பெருமபடு'
'எந்த எழவுக்குதான் வீட்டுக்கு வரமாட்டேங்கேன். ஒம் எமத்துல நிக்க முடியல'
'நீ எப்ப பரதேசம் போற, எப்ப வீட்டுக்கு வாரன்னு ஒரு மண்ணும் தெரியல. நான் என்ன ஈரமண்ணயால திங்க. இல்ல எனக்குதான் எளமை திரும்புதுன்னு நெனக்கியா"

'இங்கரு இருந்தா தின்னு. இல்லனா ஒரேடியா போய்ச்சேரு'

கிளம்பிவிட்டான். இதற்கு பிறகு தங்கிடு வீட்டுக்கு வருவதில்லை.
 இப்போதெல்லாம் கிட்னம்மாவின் வயிற்றுப்பாட்டுக்கு இரைபோடுவது பம்பாய்க்காரம்மாதான். இவள் மீது இரக்கப்பட்டு, வாரம் ஒரு முறை குறுணையை கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

முதலில் கேவலமாகத்தான் இருந்தது,'கோழிக்கு போடுத குறுணைய கேட்டவா' என்று. பிறகு பழகிவிட்டது.

அவள் கொடுத்த குறுணை நேற்றோடு காலியாகிவிட்டது. பெட்டியோடு பம்பாய்க்காரம்மா வீட்டுக்கு சென்றாள். விருந்தாட்கள் இருந்தார்கள். இவளைப் பார்த்த அந்தம்மா, 'பொறவாசலோடி வாயேன்' என்றாள்.

புறவாசலில் எச்சில் இலைகள் அதிகம் கிடந்தன. இளம்பச்சை நிறத்தில் கிடந்த அந்த இலைகளையும், தெறித்துக் கிடந்த மிச்ச சோற்றுப்பருக்கைகள் மற்றும் கூட்டுப்பொரியல்களைப் பார்த்ததும் எச்சில் ஊறியது.

'கிட்னம்மா... எம் மவனுக்கு அடுத்த வாரம் கல்யாணம் பம்பாயில. கூட வேலை பாக்குதவளை கெட்டபோறான். ராத்திரி ரயிலை புடிக்கணுங்கதுக்காக குறுணை எல்லாத்தையும் கெட்டி, அரங்கூட்டுல வச்சுட்டேன். இப்ப எடுக்க முடியாது. வேணா சோறு தாரேன். கொண்டு போறியா'
கொஞ்ச நஞ்சமாவது கிடைத்து வந்த வயிற்றுப்பாட்டிலும் இடி. வயிற்றுக்குள் கொட கொடத்து வந்தது ஏப்பம் வந்தது. பசி ஏப்பம். இடுப்பில் வைத்திருந்த கொட்டா பெட்டிக்கூட கனமாக தெரிந்தது.
வெளியில், போத்தி கோயில் இருந்தது. திண்டில் அமர்ந்து சாமி கும்பிட்டாள்.

'என்னைய ஏன் இப்படி சோதிக்க சாமி. ராணி மாதிரி வாழ்ந்தேனே. இன்னைக்கு ஒருவேளை கஞ்சிக்கு கையேந்த வச்சிட்டியே சாமி. எனக்கு நல்ல புருஷனையும் கொடுக்கல. நல்ல புள்ளையும் கொடுக்கல். எனக்கு மட்டும் ஏஞ்சாமி இப்படி... நீங்கள்லாம் இருக்கியேளா... இல்லையா"
அழுது புரண்டாள். சாமிக்கு என்ன கேட்டதோ?

அடுத்து யாரிடம் குறுணை கேட்கலாம் என்று நினைத்ததும் சிட்டுக்குருவி ஞாபகத்துக்கு வந்தாள். வசதியானவள். தருவாளா மாட்டாளா? என்று யோசித்துக்கொண்டே பிள்ளையார் கோவில் அருகிலுள்ள அவள் வீட்டுக்குச் சென்றாள். வீட்டு வாசலில் நான்கைந்து ஆம்பளைகள் இருந்தார்கள். இப்போது அவள் வீட்டு வாசல் முன் நின்று கேட்க வெட்கம். திரும்பி போனவளை பார்த்துவிட்டு சிட்டுக்குருவி, 'ஏக்கா என்ன வந்துட்டு போற' என்று கேட்டாள்.

'ஒன்னயதாம் பாக்கலாம்னு வந்தேன்'

'வந்தேன்னுட்டு போறியே'

'ஆமா, ஒண்ணுமில்ல தாயி, கொஞ்சம் குருணை கெடக்குமா?'

சிட்டுக்குருவி சிரித்தாள். அவளின் உடைந்த முன்பக்க பற்கள் தெரியுமாறு சிரித்தாள்.

இந்த சிரிப்பு ஏளனமா? எக்காளமா என்பது கிட்னம்மாவுக்குத் தெரியவில்லை.

'யக்கா, சரியா போச்சு போ. இப்பதான் கோழிப்பண்ணைக்காரன், டக்கு மோட்டார்ல வந்து அரை மூட்டை குருணைய ரூவா குடுத்து வாங்கிட்டு போறான். இப்ப வந்து கேக்கியே. இப்பலாம் முன்ன மாதிரி இல்லக்கா. குருணைக்கும் நல்ல துட்டு கிடைக்கு பாத்துக்கோ'

சொல்லிவிட்டு சிட்டுக்குருவி சிரித்துக்கொண்டிருக்க, கிட்னம்மாவுக்கு ஏப்பம் வந்துகொண்டிருந்தது. பசி ஏப்பம்!

எனது தொகுப்பிலிருந்து...

27 comments:

பத்மா said...

வாழ்ந்து கெட்ட மனசு.சில வாழ்க்கை இப்படியாக பொய் விடுகிறது .அருமையான புனைவு .அந்த சேவலின் கொண்டையில் காய்ந்த ரத்தம் .ஆஹா என்ன ஒரு அப்சர்வேஷன் ?

☼ வெயிலான் said...

அட்டகாசம் அண்ணாச்சி.

துபாய் ராஜா said...

படிச்சதும் மனசு கனத்துப் போச்சு அண்ணாச்சி... கிட்ணம்மையை மாதிரி குறுணைக்கு கூட வழியில்லாத வாழ்ந்து கெட்டவ்வோ நெறைய பேரு இருக்கத்தானே செய்தாவ்வோ....

அ.மு.செய்யது said...

//அந்த சேவலின் கொண்டையில் காய்ந்த ரத்தம் .ஆஹா என்ன ஒரு அப்சர்வேஷன் ?
//

இத தான் நானும் சொல்லணும்னு நினைச்சேன்.இந்த மாதிரி நிறைய சின்ன சின்ன அப்சர்வேஷன்ஸ் உங்க கதையில ரசிக்கிற மாதிரி இருக்கும்.ஏற்கெனவே ஒரு பின்னூட்டத்துல கூட சொல்லியிருந்தேன்.

கதைக்கு உள்ள இருந்து மனுசங்கள பாக்குற மாதிரி ஒரு ஃபீல்..!!! நேச்சுரலா வந்திருக்கு..!!!

தாறுமாறு பண்ரீங்க ஏக்நாத் !!

Thekkikattan|தெகா said...

'தூரப்போடுததை கொண்டு வந்து, கதவை தட்டிருக்காளே... எச்சிக்கலைன்னே நெனச்சிட்டாளா? எடுபட்ட செரிக்கி. அவ வாயில ஈரமண்ணு விழ...'//

ம்ம்ம்... என்ன சொல்ல, ----சிட்டுக்குருவி-- பேரு செமையா இருக்கு, குருணைக்கும் வந்திச்சியா காலம் --நிறைய இருக்கு உங்க வீட்டில படிக்க பாக்கி

க ரா said...

அருமையான கதை.

காமராஜ் said...

தோழா வணக்கம்.
ரெண்டு பேரும் மாறி மாறி அடிக்கிறீங்களே மக்கா.
நீங்களும் பாராவும் தான்.ஒண்ணுசெய்யுங்களேன் இது இந்த தொகுப்பு எங்கே கிடைக்கும்ணு சொல்லுங்க.நான் எனது 19 வயது வரை அந்த வடிக்காத குருணை அரிசிச்சோத்துல தான் வளர்ந்தேன்.
கருவாட்டுத்தண்ணியும் குருணைகாஞ்சியும் அதை விரட்டிய வறுமையும் வந்து வந்து அலையடிக்குது உங்கள் எழுத்தில்.

Raju said...

ச்சே..!

Balakumar Vijayaraman said...

கதை அதன் போக்கிலே தானாக செல்கிறது, நீரோடை போல.

உங்கள எப்படித்தான் கூப்பிட? சார் போடக்கூடாதுங்கிறீங்க, ஆடுமாடு னு சொல்ல மனசு ஒப்பல :)

பித்தனின் வாக்கு said...

நல்ல கதை. உண்மையில் சிலர் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கு. தொடரைப் படிக்க ஆசையாக இருக்கு. எழுதுங்கள். நன்றி.

மாதேவி said...

கிட்ணம்மையின் வறுமை...கொடிது.

ஆடுமாடு said...

பத்மா மேடம், வருகைக்கு நன்றி. தாராளமயமாக்கலின் பொருட்டு வந்த விளைவு இது. அதைதான் பதிவு செய்தேன்.

................

வெயிலான் நன்றி.
...........

குறுணைக்கு கூட வழியில்லாத வாழ்ந்து கெட்டவ்வோ நெறைய பேரு இருக்கத்தானே செய்தாவோ....

ஆமா, துபாய் ராஜா அண்ணாச்சி. நீங்க எப்ப ரிடர்ன் ஆனீங்க?

ஆடுமாடு said...

//கதைக்கு உள்ள இருந்து மனுசங்கள பாக்குற மாதிரி ஒரு ஃபீல்..!!! நேச்சுரலா வந்திருக்கு..!!!//


நன்றி செய்யது. பத்து வருஷத்துக்கு முன்னால எழுதிய கதை.

ஆடுமாடு said...

//சிட்டுக்குருவி-- பேரு செமையா இருக்கு,//


ஊர்ல எல்லாமே பட்டபெயர்தானே.

நன்றி தெகா சார்.

ஆடுமாடு said...

இராமசாமி கண்ணன் நன்றி.
.........

//இது இந்த தொகுப்பு எங்கே கிடைக்கும்ணு சொல்லுங்க//

தோழர் காமராஜ். தொகுப்பு பேர்: 'பூடம்'. காவ்யா வெளியிடு. இப்போ ரீபிரிண்ட் போட்டிருப்பாங்களா தெரியாது. இன்னொரு தொகுப்பு 'குள்ராட்டி'. சந்தியா வெளியீடு. கிடைக்கும்னு நினைக்கிறேன். இன்னொரு தொகுப்பு: 'கெடாத்தொங்கு'. இது இப்போதைக்கு கிடைக்காதுன்னு நினைக்கிறேன்.

//நான் எனது 19 வயது வரை அந்த வடிக்காத குருணை அரிசிச்சோத்துல தான் வளர்ந்தேன்//

கிராமத்தில் இதை சாப்பிடாமல் தாண்டியிருக்க முடியாது என நினைக்கிறேன்.

நன்றி காமராஜ் ஐயா.

ஆடுமாடு said...

ராஜு நன்றி.

பாலகுமார்ஜி, சும்மா ஆடுமாடுன்னே சொல்லுங்க. நன்றி.

ஆடுமாடு said...

பித்தனின் வாக்கு, மாதேவி நன்றி.

Chitra said...

எழுத்து நடையில், அப்படியே நெல்லை மணம் தெரியுது. அருமை.

Thekkikattan|தெகா said...

ஆடுமாடு ;), அது என்ன 'தெகா' சார் எதையோ கண்டு மிரண்டு பொயிட்டீக போல, அதை கட் பண்ணிப் போட்டு சும்மா, தெகா'னே சொல்லுங்க. சரி வந்தது வந்திட்டேன், நீங்க எல்லாம் கடுமையான கதை சொல்லிகள், புதுசா ஒரு கவிஜா போட்டுருந்தேன் உங்க கண்ணுல பட்டுச்சான்னு தெரியல - நானும் முயற்சிட்ட்ட்ட்டேஏஏஏஏ இருக்கேன் :-)

vidivelli said...

சுப்பர் அசத்துங்க.........அசத்துங்க....

ஆடுமாடு said...

//எழுத்து நடையில், அப்படியே நெல்லை மணம் தெரியுது. அருமை.//


Thank you chitrakka. Font probs.
.............

//புதுசா ஒரு கவிஜா போட்டுருந்தேன்//

Thekka, what's the meaning of kavija? I can't understand.
Thank u.
...........

Vidivelli nandri.

தங்ஸ் said...

மனசு கனமாயிடுச்சு.. வாழ்ந்து கெட்டவங்க கதையகேட்டா எனக்கு தாங்காது

ஃபஹீமாஜஹான் said...

கதை மிக அருமையாக உள்ளது.கதையின் காட்சிகள் மனவெளியில் விரிகின்றன.ஆரம்பம் முதல் முடிவு வரைக்கும் ஈர்ப்புமிக்கதான கதையோட்டம்.

வாழ்த்துக்கள்.

ஆடுமாடு said...

//மனசு கனமாயிடுச்சு.. வாழ்ந்து கெட்டவங்க கதையகேட்டா எனக்கு தாங்காது//


அப்படியா தங்ஸ். நன்றி.
............

கதையின் காட்சிகள் மனவெளியில் விரிகின்றன.ஆரம்பம் முதல் முடிவு வரைக்கும் ஈர்ப்புமிக்கதான கதையோட்டம்.

நன்றி ஃபஹிமா மேடம்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"சாணத் தண்ணி பட்டு அவற்றின் நிறம், பாதி கரும்பச்சையும் பாதி வெள்ளையுமாக காட்சியளித்தன."
கண்ணு முன்னாடி வந்துட்டுது பூவும் கிடனம்மாவின் பசியும்...

Thekkikattan|தெகா said...

Thekka, what's the meaning of kavija? I can't understand. //

ஓ! அதுவா, அது ஒண்ணுமில்ல என்னோட படைப்புகள் கவிதைக்கும், கவுஜைக்கும் இடைப்பட்ட ரகங்கிறதாலே நானே செல்லமா என்னோடதுகளுக்கு 'கவிஜா'ன்னு வைச்சிக்கிட்டேன் :)) ...

ஹேமா said...

உங்களின் விடுபட்ட பதிவுகள் அத்தனையும் பொறுமையாக வாசிக்க இன்று நேரம் கிடைத்திருக்கிறது.
அவ்வளவும் அருமை.
உங்களுக்கென்றே ஒரு பாணியில் இயல்பாய் எழுதும் ரசனை.

இந்தக் கதைகூட மனசை நெகிழ வைக்குது."குறுணை" இந்தச் சொல்கூட யார் பாவிக்கிறார்கள் இப்போ