Wednesday, February 10, 2010

காடு-7

விஜயலட்சுமி அக்கா, உ.மகாளியை பார்த்துவிட்டு, யாரோ என்பதுபோல தலையை திருப்பிக்கொண்டாள். லட்சுமி, இவனை பார்த்த மாத்திரத்தில் யாருக்கும் தெரியாமல் இடது கண்ணை சிமிட்டினாள். புல்லரித்துப்போனான் உ.மகாளி. அவனுள் காதல் தீ நரம்புகளினூடாக, பாயத் தொடங்கியது.

இப்படியானதொரு சந்தர்ப்பம் அவனுக்கு ஆச்சர்யமாகவும் அதிசயமானதாகவும் இருந்தது. பெண்களை கண்ணடிக்க, இவன் தயங்கும் வேளையில், ஒரு பெண் அவனை நோக்கி அப்படியானதொரு செய்கையை செய்தால்.?

அடுத்த கட்டமாக என்ன செய்வதென்பதை அவன் அறியாதிருந்தான்.

வெடக்கென கேள்வியை போட்ட பாட்டி, 'ஆளில்லாத ஊருல எலி அம்மணமாலா ஆடுது' என்றொரு சொலவடையை சொல்லிவிட்டு அடுத்த வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தாள்.

லட்சுமி, மச்சி வீட்டின் வெளிப்புறத்துக்கு சென்றுவிட்டாள். அவளின் இன்னொரு பார்வைக்காகவும், இன்னொரு புன்னகைக்காகவும் ஏங்கமடைந்திருந்தான் உ.மகாளி. இதற்கு மேல் அங்கிருந்து நகர அவனால் முடியவில்லை. பார்த்த சில நிமிடங்களிலேயே கூட காதல் வந்துவிடக்கூடிய சாத்தியத்தை அவன் ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது பல காதல் முயற்சிகள் கைகூடாமல் போனதிலிருந்து, 'ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்' கதையாய், அதை ஒரு பொருட்டாக நினைக்க கூடாது என்று முடிவு செய்திருந்தான்.

ஆனால், காதல், மனம் வயப்பட்டது. அது முடிவுகளின் முடிவுக்கு முடிச்சு போடும் ஆற்றல் பெற்றது. இப்படித்தான் வரவேண்டும் என்கிற எல்லை ஏதுமின்றி எப்படியும் வரும் சூத்திரம் கொண்டது அல்லது சூத்திரத்திற்கு அப்பாற்பட்டது.

தன்னிலை மறந்து தனக்குள் அவன் சென்றுகொண்டிருந்தபோது, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பேருலகம் அவனுக்காக காத்திருந்தது. அதில் ஒரு மலராக அவளிருந்தாள். அவனது பாதம் பட்டபோது மலர் தேவதையானது. தேவதைகளுக்கும் மலர்களுக்குமான சம்பந்தம் இப்படியாகவும் இருக்கலாம். அவன், அந்த மலரின் வாசத்தை நேசித்தான். அது அவனது ஆழ்மனத்துள் அழைத்துச்சென்றது. ஏக்கங்களின் கட்டுக்கோப்பாய் அடைந்திருக்கும் அங்கு, வாசம் பெண்ணிருவில் நின்றது.

வளையல்கள் அணிந்திருந்த அவளது கைகளை தொட்டான். அந்த தொடுதலில் வானம் கீழாகவும் பூமி மேலாகவும் இருப்பதை உணர்ந்தான். ஆசைகளாய் உறைந்த மனது அவளை அள்ளி அணைத்தது. கட்டிய பிடிக்குள் பாம்பின் வாய்க்குள் அகப்பட்ட தவளையாகியிருந்தாள் அவள்.

'ஏல இங்க என்ன பண்ணுத?'

சத்தம் வந்ததும் நினைவு கலைந்து நிஜத்துக்கு வந்தான் உ.மகாளி.

பிரமாச்சி நின்றுகொண்டிருந்தான். அவனுடன் மாடு மேய்ப்பவன்.

'சும்மாதான். ராத்திரி ஆட்டம் இருக்குலா'

'ஆமா...இங்க நின்னுட்டிருந்தா... வால, இப்பவே பட்டைய அடிச்சாதான் சரியாருக்கும்'

'இல்ல...நீ போயிட்டிரு...வாரேன்'

'ஏ அர்தலி, அங்க எல்லா பயலும் வந்துட்டானுவ...உன்னதாம்ல தேடுதாவோ'

'நீ போ... பின்னாலயே வாரேன்' என்று சொல்லிவிட்டு மேலே பார்த்தான். மச்சியில் லட்சுமி இல்லை. தாவணி ஒன்று நடுவில் காய்ந்துகொண்டிருந்தது. அதற்கு கீழ், மேல் பக்கங்களில் அவளது முகம் தென்படுமா என்று பார்த்தான். அவள் வரவில்லை. இன்னும் சிறிது நேரம் அவளுக்காக காத்திருந்தது. எட்டிப்பார்த்தாள் லட்சுமி. அவளை விட்டுப்போக மனமில்லை. சைகையில், 'நான் அப்புறம் பார்க்கிறேன்" என்பதுபோல் கையாட்டிவிட்டு போனான். அவளும் குத்துமதிப்பாக மீண்டும் சிரித்து வைத்தாள்.

இப்படியாக நான்கைந்து மணி நேரம்,. நகர்ந்துகொண்டிருந்த இரவில், அவளது ஆட்டத்தை பார்க்க நிதானமான போதையில், நண்பர்களுடன் மணலில் அமர்ந்திருந்தான். கொடைக்காக, அடிக்கப்பட்டிருந்தது இந்த ஆற்றுமணல்கள். ஒன்பது பத்துமணிவாக்கில் ஆட்டம் ஆரம்பமானது.
லட்சுமியானவள், கூட்டத்தில் தன்னை தேடுகிறாளா என்பதை பார்த்துக்கொண்டிருந்தான். முதலில் ஒவ்வொரு பாட்டுக்காய் கரகம் சுமந்து ஆடிக்கொண்டிருந்தவளை கொட்டுக்காரர், வேகவேகமாக ஆட வைத்துக்கொண்டிருந்தார்.

பெரும் தொப்பையில் ஏழெட்டு தங்க சங்கிலிகளை மாட்டிக்கொண்டு நாகஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்தவர், வேகத்தை கூட்டிக்கூட்டி வாசித்தார். அதற்கு தகுந்தாற்போல் கொட்டுக்காரர்களும் வேகவேகமாக அடித்துக்கொண்டிருந்தார்கள். விஜயலட்சுமி அக்காவும் லட்சுமியும் அதற்கு தகுந்தாற்போல கரகத்தை தலையில் வைத்துக்கொண்டு வேகமாக சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

வியர்க்க விறுவிறுக்க நடந்து கொண்டிருந்த ஆட்டம், ஒரு வகையில் சாடிஸ்ட் தனம் கொண்டது. மேளக்காரரும் நாகஸ்வரக்காரர்களும் ஆட்டக்காரிகள் மீதான தங்கள் கோபத்தை, அல்லது தங்களுடைய முட்டாள் ஆண்மையை இதன் மூலம் காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.
5 நிமிடம் சுற்றி சுற்றி ஆடுவதற்குள் மயக்கம் வந்துவிடும் நமக்கு. ஆனால், அவர்களை 10 நிமிடம் வரை ஆட வைப்பதற்கு நாகஸ்வரத்தையும் மேளத்தையும் அடித்துக்கொண்டே இருப்பார்கள். ஆட்டம் முடிந்ததும் ஆடியவர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கும்.
லட்சுமி, ஆட்டம் முடிந்து, ரெண்டு செம்பு தண்ணீரைக்குடித்துவிட்டு, நாகஸ்வரக்காரரிடம் ஏதோ கோபமாக பேசிவிட்டு, பின்னால் பார்த்தாள். அங்குதான், உ.மகாளி உம்மென்று அமர்ந்திருந்தான். போதையில் அவம் முகம் மாறியிருந்தது.

லட்சுமிக்கு சிரிக்க தோன்றினாலும், அந்த நேரத்தில் அது முடியவில்லை அவளுக்கு. உ.மகாளி, அவள் தன்னைப் காதலிப்பதாகவும், ஆட்டத்தின் போதே தன்னைப் பார்த்து அவள் சிரித்துக்கொண்டிருப்பாள் என்றும் நண்பர்களிடம் கொஞ்சம் அதிகப்படியாகவே சொல்லி வைத்திருந்தான்.

ஆனால், செயல்கள் நேர்மாறாக இருந்தது கொஞ்சம் அவனுக்கு ஏமாற்றத்தைக்கொடுத்தன.
இந்நேரத்தில் அங்கு வந்த சடச்சான், மணி வீட்டில் சாராயம் காய்ச்சப்பட்டு விட்டதாகவும், ஒரு கும்பல் குடித்துக்கொண்டிருப்பதாகவும் தகவல் சொன்னான். மதியமே இரண்டு ஆடுகளும் இதற்காக பலியாகியிருந்தன.

இளஞ்சாராயத்தின் ருசி, அவர்களை அங்கு இழுத்தது. காதலை கரகாட்டத்தில் விட்டுவிட்டு வர மறுத்தன மனது. இருந்தாலும் நடந்தான் உ.மகாளி.
போதை ராத்திரியில் புழுதியில் கிடந்து உறங்கிவிட்டு, காலையில் அவன் எழுந்தபோது, லட்சுமி ஊருக்குச் சென்றிருந்தாள்.

மூஞ்சியில் தண்ணீர் விழுந்தபோதுதான் நினைவை கலைத்தான் உ.மகாளி. இப்போது அருகில் லட்சுமியின் சாயலில் இருந்தவளும் அவளோடு வந்திருந்தவர்களும் மாயமாகியிருந்தார்கள்.

'என்னல பகல் கனவா'

தவிட்டான் கேட்டான்.

'இல்ல சும்மா உக்காந்தேன், கண்ணசந்துபோச்சு'

'செரி செரி மாட்டை பத்து.... போவும்"

அசை போட்டுக்கொண்டிருந்த மாடுகள், கிளம்ப ஆயத்தமாயின. சாமானகளின் மூட்டை, இப்போது மீண்டும் உ.மகாளியின் தோளுக்கு வந்தது.

மாட்டுவண்டி செல்வதை போல இருந்த அந்த பாதை, வளைந்து நெளிந்து செல்லக்கூடியது. கொஞ்சம் கொஞ்சமாக மலையின் மேலே ஏறிச்செல்லும் பாதையில் புற்கள் நிரம்பியிருந்தன. இரண்டு பக்கமும் கருவை மரங்களும் சிமக்கருவைகளும் அதிகமாக வளர்ந்திருந்தன. உ.மகாளி அந்தப் பகுதியை அதிசயமாக பார்த்தான். தூரத்தில் சுற்றும் முற்றும் மலைகளும், மரங்களும் அடர்ந்த அந்த பெரும் நிலபரப்பு அவனை காட்டுக்குள் இழுத்தது.

தவிட்டான், பின்னால் வரும் உ.மகாளி உள்ளிட்டவர்களைப் பார்த்து சொன்னான்.

'இங்கருங்கல... அன்னா தெரியுது பாரு... பாறைக்கு பெயிண்ட் அடிச்ச மாதிரி இருக்கா ஒரு இடம்..'

'ஆமா'

'நாம அங்கதான் போவணும். அது என்னன்னு தெரியுதுலா'

உச்சிமகாளி ஆர்வமாகி, 'தெரியும் அது அருவிதான' என்றான்.

'அருவிதாம்... கீழ ஒரு பெரிய கசம் இருக்கு. தண்ணி நெறய வந்தா அங்க இறங்கிர கூடாது. என்னதாம் நீச்சல் தெரிஞ்சாலும் உள்ள கொண்டுபோயிரும்.. ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால, சிவசைலத்துக்காரன் ஒருத்தான் கசத்துல விழுந்து செத்திருக்கான்'

தொடரும்.

8 comments:

துபாய் ராஜா said...

கசத்துல முங்கினவனை கூட முடியைப் பிடிச்சு தூக்கிடலாம். காதல்ல முங்கினவனை எதைப் புடிச்சு தூக்க...

ஆடுமாடு said...

ராஜா சார், அதைதான் யோசிச்சிட்டிருக்கேன்.

அகநாழிகை said...

அருமை. ரசனையான பதிவு, பகிர்தலுக்கு நன்றி.

- பொன்.வாசுதேவன்

ஆடுமாடு said...

பொன். வாசுதேவன் நன்றி.

kalyanasundaram said...

nalla pathivu. konjam neelam enru thonukirathu. thodarungkal . vaalththukal.

ஆடுமாடு said...

நன்றி, கல்யாண சுந்தரம் சார்.

நேசமித்ரன் said...

ஆத்தீ இழுத்துட்டு போறது காதலா நடையா ?
அருமை அருமை

ஆடுமாடு said...

//ஆத்தீ இழுத்துட்டு போறது காதலா நடையா ?
அருமை அருமை//

நன்றி நேசமித்ரன்.